Wednesday, November 27, 2013

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு ஓர் திறந்த மடல்!

நிறையப் பேர்களின் வணக்கத்துக்கும் வருத்தத்துக்கும் உரிய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு,

சம்பிரதாய வணக்கங்கள்.

வேதநெறிகளை விளைவித்து வந்த காஞ்சி சங்கர மடம் தங்களின் ஆளுமையில் அவற்றை  வெகுவாகக் கொச்சைப் படுத்தி வந்தது.

அதன் உச்சக்கட்டமாக  அரசியல் சதிகளும் கொலைத் திட்டங்களும் உருவாக்கப்படும் அதர்மச் செயல்கள் நிலைகொண்ட ஆடுகளமாக அவதானித்து விட்டது.

சங்கரராமன் கொலை மூலம்தான் இந்த அவதானம்  அனைவருக்கும் அறிவிக்கப்பட்டதாகி விட்டது.

ஆக, எப்படியோ ஒருவகையில் அதைக் கறைபடியச் செய்து விட்ட 'பெருமை' உங்களால் ஏற்பட்டு விட்டது.

சனாதனதர்மங்களுக்காக ஸ்தாபிக்கப்பட்ட  இந்தப் புராதனச் சொத்தை'சொத்தைஆக்கிச் சூறையாட எவர்க்கும் தர்மம் இடம் கொடுக்காது.

ஆனால், வெளியே சொல்லமுடியாத காஞ்சிமடத்தின் விவகாரங்களின் விளைவாக, பட்டப் பகலில், மிகப் புராதானமும் மேன்மையும் தெய்வச் சந்நதமும்  பரவி நிற்கும் வரதராஜப் பெருமாளின் திருக்கோவில் வளாகத்தில்  துடிக்கத் துடிக்கச் சங்கர ராமன் வெட்டிச் சாய்க்கப்பட்டது, உலகமே கண்டு அதிர்ந்து போன கொடூர நிகழ்வு.

நீங்களும் உங்களை அடுத்த சந்நிதானமும், நிதானமற்று ஆடிய ஆட்டத்தின் விளைவு  இஃதென்று இந்த நாட்டின் சாதாரணக் குடிமகன்கூட, குலை நடுங்கிச் சொல்லும் கொலைச் சம்பவம் இது.

நீங்களோ, விஜேந்திரரோ வேலும் வாளும்  எடுத்தோ தண்டத்தைத் தூக்கிக் கொண்டோ சென்று சங்கரராமனைக் கொல்லவில்லை என்பது சத்தியம்.

ஆனால், கடந்த காலச் செய்திகளும் ஆரம்பத்தில் சங்கர ராமன் மனைவி அளித்திருந்த சாட்சியங்களும் பிற செய்திகளும் உங்களுடைய  திரை மறைவுச் சிந்தாந்தாங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, ஆன்மீக நெறியாளர்களைத் தலை குனியச் செய்தது; ஏன் நீங்களேகூட நீதிபதியிடம் உங்கள் விடுதலைக்காகப் பேரம் பேசிய தொலைப் பேசி உரையாடல் கேட்டு மீடிய உலகமே சிரித்ததே.

உங்கள் கடந்த காலச் செயல்பாடுகள்  பார்ப்பன எதிர்ப்பு மற்றும் கடவுள் மறுப்புச் சித்தாந்தவாதிகளைத் தலை நிமிரச் செய்ததுஎன்பதை நீங்கள் மறுக்க முடியுமா?

காவியை அணிந்து கொண்டு எந்தத் தர்ம சாஸ்திரங்களை மேடை தோறும் ஊருக்கு உபதேசிக்கின்றீர்களோ, அதே சாஸ்திர அறிவைத் தங்களுடைய  அந்தரங்கத் தவறுகளுக்குக் கவசம் ஆக்கிக் கொண்டுஆஷாடபூதியாய் அவதானித்துக் கொண்டு வந்திருக்கின்றீரகள்என்பது வெட்ட வெளிச்சமான நிலையில் உங்களுடைய  குற்றங்கள்நீதி மன்றத்தால் அங்கீரிக்கப்பட்டு,  புனிதர் எனப் புதிதாகஞானஸ்தானம்கொடுக்கப்பட்டிருக்கிறது. சாட்சியக் குளறுபடிகளால் சங்கரராமன் கொல்லப்படவில்லை என்பது நீதியின் கண்களுக்கு மட்டும் தெரிந்து விட்ட உண்மையாகி விட்டது.

சரி...
இந்தத் தீர்ப்பு வருவதற்காக என்ன மாதிரியான தவங்களையெல்லாம் செய்தீர்களோ?, உங்களுடைய  தவத்தை மெச்சி எந்த வடிவில் தெய்வம் வரம் கொடுத்ததோ? யாவும்  உங்களுடைய  மனச் சாட்சிக்குத்தான் தெரிந்திருக்க முடியும்.

என்றாலும், அந்த மனச்சாட்சியின்  பிரதிநிதித்துவம் பெற்ற  ஆலோசனைகளையும் தூண்டுதல்களையும் தர்மத்துக்கு அஞ்சுகின்ற எவரும் உங்களுக்கு எடுத்துச் சொன்னால் நீங்கள் சிந்திப்பீர்கள்என்று  இன்னமும் செத்துப் போகாத தர்மத்தின் வாயிலில் நின்று நம்புகிறேன்.

அதனால் உங்களிடம் எனக்கு ஒரு விண்ணப்பம் இருக்கிறது.

’இது என்னுடைய தனிப்பட்ட விண்ணப்பம் அல்லஎன்பதையும்தர்மத்தையும் ஒப்பற்ற இறை ஞானத்தைத் தேடும் தாகமும் கொண்டவர்களின் சார்பாக விடுக்கப்படும் விண்ணப்பம்என்பதையும்  தாங்கள் பரிசீலிக்க வேண்டும்; பரிசீலித்துப் புனிதக் காஞ்சி மடத்தைப் புனருத்தாரணம் செய்ய  நீங்கள் வகை செய்ய வேண்டும்.

அதற்கு,உலகம் போற்றி மதித்து வணங்கும் மகாப் பெரியவர் வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேறுவதுடன், இனி எந்த வகையிலும் சங்கர மடத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று கடும் துறவு பூணுங்கள்.

வேதமும் அதன் வித்துக்களையும்  சொத்துக்களாகக் கொண்டு தூய நெறிகளுடன் வாழ்கின்ற அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை காஞ்சி சங்கர மடத்தின்  அதிபதியாக வர வழி அமையுங்கள்.

அவ்வாறு இல்லாமல் ‘நான் புனிதமானவன்என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் உங்களுக்கு இல்லை;இல்லவே இல்லை.

இந்த வழக்கில் எவ்விதத்திலும் தொடர்பில்லாத 'அப்பாவி நீங்கள் என்றால் நிச்சயம் நீங்கள் புனிதமானவராக இருக்க முடியாது; புனிதமானவர் என்றால் அப்பாவியாக இருக்க முடியாது.

புனிதரும் இல்லாமல்,அப்பாவியாகவும்  இல்லாத தாங்கள், ஒரு வேளை காஞ்சி மடத்தைத் துறப்பீர்கள் என்றால் அப்போது வேண்டுமானல் உங்களை உண்மையான  துறவி என்று உலகம் சொல்லும்.

நீங்கள் அவ்வாறு துறவியாகி  உபதேசிக்கும் நாளை என்னைப் போன்றோர் வரவேற்கவும்  வாழ்த்தவும் வணங்கவும் தயாராக இருக்கின்றோம்.

நகரேஷு காஞ்சி என்பது  வரலாறு போற்றும் உண்மை.

காஞ்சி போற்றுதும்;காஞ்சி போற்றுதும்

என்னைப்போன்றோர் அந்தக் காஞ்சியைப் போற்றுகின்றோம்.
எங்களையெல்லாம் விட அதிகம் போற்ற வேண்டியவர் நீங்கள் அன்றோ?

உங்களை நீதி மன்றம் இப்போது விடுதலை செய்திருப்பது, இதையெல்லாம் செய்வதற்குத்தானோ?’ என்று என் மனம் சிந்திக்கின்றது.

தங்கள் உண்மையுள்ள,
கிருஷ்ணன்பாலா
27.11.2013

Post a Comment