Monday, December 30, 2013

அரசியல் அரங்கம்:8

டித்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள் கல்லூரி மாணவ மாணவியர்,இணையத்தில் உலா வரும் எண்ணிக்கை மிகுந்த சமூக அக்கறையாளர்கள்  இவர்களுக்கெல்லாம் ஜாதி, மதம்,இன உணர்வுகளுக்கு அப்பால் ’இந்தியாவின்  எதிர்காலம் வளமாகவும் வலிமையாகவும்  இருக்க  வேண்டும்’ என்ற எண்ணமே மிகுந்துள்ளது.

அதை உருவாக்கித் தரக்கூடிய திறமைமிக்க பிரதமராக நரேந்திர மோதியே வர வேண்டும்’ என்ற  தீர்மானம் அவர்களின் மனதில் படிந்து விட்டது.

எனவே, மோதியின் தலைமை இந்தியாவுக்கு அமைய வேண்டுமென்ற உறுதியைக் கொண்ட கட்சிகளை மட்டுமே மோதியின் உள்ளரங்கு அறிஞர் குழு கூட்டணி வைக்க ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதில், கூட்டணி பற்றிய கொள்கை முடிவுகளுக்குக் கட்சியின் நிர்ப்பந்தமோ கட்சித் தலைவர்களின் அபிலாஷைகளோ எடுபட முடியாது போகலாம்.

காரணம்,ஆம் ஆத்மி பார்ட்டி எப்படி படித்தவர்களையும் நடுத்தர வர்க்கத்தையும் ஈர்த்து, ஓட்டு வங்கியைக் குவித்ததோ அப்படி  இம்முறை நரேந்திர மோதியின் தலைமை இந்தியாவின் இளைஞர்களையும் படித்தவர்களையும் ஈர்க்கும்  வகையில் இந்த நாடாளுமன்றத்தேர்தல் அமைய உள்ளதால் நரேந்திர மோதியின் ThinkTank எனப்படும்  அறிவார்ந்த வட்டம் அதற்கேற்ப தமிழகத்தில் கூட்டணியை உருவாக்கும்   வியூகத்தை வகுக்கப்போகிறது.

இதில் பெரியண்ணன் வேலைகளெல்லாம் எடுபடப்போவதில்லை.

அதேபோல் தான் பெரிய ஓட்டு வங்கியை வைத்திருப்பதால் எனக்கு இவ்வளவு சீட் கொடுத்தால்தான் உங்களோடு கூட்டணி என்று தலைக்கனம் காட்டும் கட்சிகள் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும்.

நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து மோதி கூட்டணிக்கு ஒப்புக் கொண்டால்  ‘வாஜ்பேயி பட்ட அவமானத்தைத்தான் படநேரிடும்’ என்பது மோதியின் Think Tank க்குத் தெரிந்தே இருக்கிறது.

-கிருஷ்ணன்பாலா
30.12.2013

Sunday, December 29, 2013

அரசியல் சதுரங்கம்-7

டில்லி மாநில சட்ட மன்றத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்திருக்கும் பிரதிநிதித்துவம்  என்பது, இதுவரை மக்களை வெறுப்பும் கோபமும் விரக்தியும் கொள்ள வைத்த காங்கிரஸின் ஊழல் ஆட்சிக்கு எதிரான  வாக்குக்களே அன்றி ‘ஆம் ஆத்மி கட்சிக்கு ஆட்சி அமைக்கக் கிடைத்த வாக்குகள் அல்ல. எனினும் ஜனநாயத்தின் நிர்பந்ததம் அதை ஆட்சிக் கட்டில் ஏற வைத்திருக்கிறது.

அதே சமயம் பாரதீய ஜனதா கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனது  அக்கட்சி மீதும்  டில்லி வாக்காளர்கள் முழு நம்பிக்கை கொள்ளவில்லை என்பதன்  எதிரொலி என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

’பா.ஜ.க. என்பது புனிமான கட்சி  அல்ல’ என்ற  உண்மையானது, கடந்த காலங்களில் நாட்டில் உணர்த்தப்பட்டுள்ளதுதான்.

ஆனால்,மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும்  தேசநலனையும் முக்கியமாகக் கொண்டு கடந்த 10 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தை நாட்டின் தலைசிறந்த மாநிலமாக நிர்வகித்துக் காட்டிய  நரேந்திர மோதியின் திறமையில், தெளிந்த லட்சியத்தில் இந்திய மக்களில் பெரும்பான்மையோர்     ‘அவரே பாரதப் பிரதமராகும் தகுதி படைத்தவர்’ என்று  அணிதிரளத் தொடங்கியிருக்கின்றார்கள்.

எடியூரப்பா  போன்ற இரக்கமற்ற பதவிப் பித்தர்களின்  ஊழல் நடத்தைகளையும் பொறுத்துக் கொண்டு நரேந்திர மோதியின் பின்னால் அணி வகுத்துள்ளார்களென்றால் அது நரேந்திர மோதியின் தனிப்பட்ட  அரசியல் ஒழுக்கமும் அரசியல் வெற்றியைக் கொண்டு பதவி மூலம் துணிவோடு மக்கள் பணி செய்கின்ற பண்பும்தான் காரணம்.

குஜராத் முதல்வராக இருந்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய சாதனைகள் நிரூபணமாகி,  நரேந்திர மோதி அவர்களின் தலைமையின்கீழ், இந்தியா ஊழல் அற்ற நிர்வாகத்தையும் இந்தியாவின் கௌரவத்தையும் அதன் இறையாண்மையின் பாதுகாப்பையும்,  தொழில் முன்னேற்றத்தையும் நாடு காணும்’என்ற ஆழமான நம்பிக்கை இன்று மக்கள் மனதில் வேரூன்றி இருக்கிறது.

எனினும் ‘மோதி அலை’ தேசமெங்கும்  வீசிக் கொண்டிருந்த நிலையில் தலை நகர் டில்லியில் மட்டும் சற்று சிவப்புக் கோடு போடப்பட்டிருக்கிறது.

இதுவும்கூட நன்மைக்கே.

இதன் மூலம் இரண்டு உண்மைகளை நாம் உணர வேண்டும்.

ஒன்று:
கவர்ச்சியான வாக்குறுதிகளும்; மாய்மால அறிக்கைகளும்
மேடை வசனங்களுமாக, இதுவரை ‘தேர்தல்  பிரகடனம்’ என்ற பெயரில் உதார் விட்டுக்கொண்டிருந்த  தேசியக் கட்சிகளுக்கும்  மாநிலக் கட்சிகளுக்கும்  படித்தவர்களும்  விஷயம் தெரிந்தவர்களுமாக
அதிகம் வாழும் டில்லி மக்கள் சூட்டுக்கோலை எடுத்து சரியான சூடு போட்டிருக்கிறார்கள்.

பித்தலாட்டமான அரசியலுக்கும் ஆர்ப்பாட்டமான விளம்பரங்களுக்கும் டில்லி மக்கள்  ஓட்டுப் போடவில்லை;வேட்டுப் போட்டிருக்கின்றார்கள்.


இதன் எதிரொலி, இனி நாடெங்கும் எதிரொலிக்கத் தொடங்குமென்பதில் ஐயமில்லை.

இரண்டு:
மோதி அலை நாடெங்கும் பேரலையாக வீசிக் கொண்டிருக்கும் இத்தருணத்திலும் போதிய மெஜாரிட்டியை, டில்லியில்  பா.ஜ,க. பெறத்தவறியதால், தனக்குக் கிடைத்திருக்கும் அதிக இடங்களைக் கணக்கில் கொள்ளாது, எதிர்க் கட்சியிலிருக்கும் எம்.எல்.ஏக்களைக் குதிரைப் பேரத்தில் இறங்காது ஜனநாயகத்தின் மேலான கண்ணியத்தைக் காக்கும் விதத்தில்
‘தேவையான மெஜாரிட்டி இல்லாத காரணத்தால் தான் ஆட்சி அமைக்க இயலாது’ என  அது அறிவித்திருப்பது.

இதன் மூலம்,நரேந்திர மோதியின் நம்பிக்கைமிக்க நல்லாட்சிக்கு அட்சாரமாக, டில்லியில் குறுக்கு வழியில் சென்று ஆட்சி அமைக்க முன் வராதது  இங்கு கவனிக்கத்தக்கது.

இதுபோன்ற  ஜன நாயக உயர்பண்புகளைக் கட்டிக்காத்து நரேந்திர மோதி தலைமையில் அமையப் போகும் நாளைய மத்திய ஆட்சி நீண்ட பாரம்பரியத்தை  கட்டிக்காக்கும் என்பதற்கு உத்தரவாதமாக, கட்டுப்பாடும் ஒழுக்கமும் பண்பட்ட ஜன நாயகப் பெருமையும்  நிறைந்த  நிலைப்பாட்டைக் கையகப்படுத்திக் காட்டும்  துணிவை அது வெளிப்படுத்தியிருக்கிறது.

அரசியல் அதிகாரம், பதவி  மோகம் இந்த இரண்டும்தான் ஊழலின் ஊற்றுக் கண்.

அதிகாரத்துக்காகவும் பதவிக்காகவும்  எந்தப் பித்தலாட்டத்தையும் செய்யத் துணிந்த அரசியல் நாடகங்களைத்தான் இதுவரை நாடு கண்டு வந்தது.

இப்போதுதான் ’முதன் முறையாக,போதிய மெஜாரிட்டி இன்றி,டில்லியில் ஆட்சி அமைக்க நாங்கள் தயாராக இல்லை’ என்ற குரல் இந்தியத் தலை நகரில் ஒலித்திருக்கிறது. அதுவும் பா.ஜ.க.விடமிருந்து.

ஆரோக்கியமான அவசியமான,அதிசயமான மாற்றம்.

இப் பண்பு வளர்ந்தால், அரசியல் கட்சிகளிடம் தொடர்ந்தால் ஊழல் ஒழிப்பின் பாதிக் கட்டத்தை நாடு கடந்து விட்டதாகிவிடும்.

-கிருஷ்ணன்பாலா
29.12.2013

Saturday, December 28, 2013

அரவிந்த் கெஜ்ரிவால் லட்சியம் வெல்க!



ண்மையிலேயே மைனாரிட்டிதான்.

ஊழலை ஒழிக்கக் குரல்கொடுப்பதில்; நேர்மையான ஆட்சியைத் தரவேண்டும் என்பதை மக்கள் முன்னிலையில் ஓங்கி ஒலிப்பதில். எளிமையாக இருந்து மக்கள் சேவை செய்வோம் என்று சபதம் செய்வதில்.

உண்மையிலேயே மைனாரிட்டிதான்.
அரவிந்த் கெஜ்ரிவாலும் அவரது ஆம் ஆத்மி பார்ட்டி சகாக்களும்.
 

‘கேஜ்ரிவாலின் சபதத்தைத் தோற்கடிப்போம்’ என்று இன்று காங்கிரஸும் சொல்லமுடியாது;பி.ஜே.பி.யும் சொல்ல முடியாது. நாட்டுக்கு இன்று தேவைப்படும் செயல்திட்டங்களைத்தான்  அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இது கவர்ச்சியான வாக்குறுதிகளா? உண்மையிலேயே இந்திய அரசியலரங்கை வியப்பிலாழ்த்தும் வாக்குறுதிகளா?

அரவிந்த் கேஜ்ரிவால் டில்லியின் புதிய முதல்வரகாப் பதவி ஏற்றுக் கொண்டு நிகழ்த்திய உறுதிமொழிகள் நிறைவேற்றப் படுவதைப் பொறுத்து, வரும்நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றிபெறப்போகும் கட்சியின் வாக்குறுதிகளின் எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே இருக்கும்.

போதிய மெஜாரிட்டி இல்லாமலேயே,அதுவும்தன்னை வலிய வந்து ஆதரிக்கும ’காங்கிரஸின் ஊழலை விசாரிப்போம்’ என்று அறிவித்து விட்டு, மன உறுதியுடன் டில்லியின் முதல்வராகாப் பொறுப்பேற்றிருக்கும் அரவிந்த கேஜ்ரிவாலை வாழ்த்துவோம்:

எடுத்துக் கொண்ட லட்சியத்தில் அவர் வெல்லட்டும்!

Wednesday, December 25, 2013

மோதியின் முன் நிற்கும் பிரச்சினை!




றிவார்ந்த நண்பர்களே,

ஆம் ஆத்மி கட்சியின் அறிவிப்புக்களும் அதிகாரப்பற்றும்  ‘அரசியலரங்கில் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும்’ என்பதை விட ‘இருக்கின்ற கட்சிகளை ஒழிக்க வேண்டுமென்பதாகவே இருக்கிறது.

நடைமுறையில்இப்போதைய சூழ்நிலையில் நிறைவேற்ற முடியாத அறிவிப்புக்களை அக்கட்சி ஆட்சி அமைப்பதற்கு முன் வெளியிடுவது ஒரு அதிரடி விளம்பரமாகவும் தன்னை எப்படியும் மக்கள் மனதில்  உயரத்தில் வைக்கின்ற உத்தியாகவுமிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசியல் முன்வரைவுகள் வரவேற்கப்படக் கூடியவை என்றாலும் அவற்றை நிறைவேற்றத் தேவையான சூழ்நிலைகளையும் அவர் உணர்ந்து கொண்டு  சிந்திப்பதாகத்  தெரியவில்லை.

இதுவரை, இந்தியாவை ஆண்ட காங்கிரஸாகட்டும் சரி; சிறிது காலம் ஆண்ட பி.ஜே.பியாகட்டும் ஊழலை ஒழித்து நேர்மையான நிர்வாகத்தைத் தர முடியவில்லை.

அரசியலே மாசுபட்டுக்கிடக்கும் இன்றைய சூழ்நிலையில், ஒரு வாஜ்பேய் அல்லது ஒரு அரவிந்த கெஜ்ரிவால் நினைத்தாலும் ஊழலற்ற நிர்வாகத்தைத் தர முடியாது.

மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்தலில் நிற்பவர்களும் வெல்பவர்களும் ஊழலுக்கு எதிரானவர்களாக இருந்தாலொழிய ஆட்சியில், நிர்வாகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவது இயலாது.

ஆகவே, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோதிக்கு இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் ஆதரவு இருப்பதால் அவர், தனது வேட்பாளர்களாக நிற்பவர்களை ஒழுக்கமும் உயர் நோக்கங்களும் உள்ளவர்களாகவும்  நிஜமாகவே மாற்றத்தைக் கொண்டு வருவதில்  லட்சியமுள்ளவர்களாகவும்இருப்பவர்களையே தேர்தலில் நிற்க வைக்க உறுதி கொள்ள வேண்டும்.

பதவி சுகத்தை அனுபவிப்பதில் தங்கள் உரிமையை நிலைநாட்ட முனைவோரை ஒதுக்கி வைக்கும் துணிவை அவர் கையாள வேண்டும்.

தேசத்தைப் புனர் அமைப்பதில் ஆர்வமும் வேட்கையுமுள்ளோரை  கட்சித் தகுதிகளைப் பார்க்காமல் தனிப்பட்ட யோக்கியதாம்சங்களின் அடிப்படையில் தனது வேட்பாளராக நியமிப்பாரானால்,மிகப்பெரும்வெற்றியைத் தர மக்கள் தயாராக  இருக்கின்றார்கள்.

இதுதான் மோதியின் முன் நிற்கும் இன்றைய முக்கியப் பிரச்சினை.

இதில் மாற்றுக் கருத்துள்ளோர் உண்மையில் மோதியின் ஆதரவாளராக இருக்க முடியாது.

இவண்-
கிருஷ்ணன்பாலா
25.12.2013

அரசியல் சதுரங்கம்:6

ஆம் ஆத்மி கட்சியை ஆட்சி அமைக்க விடாமல்  காங்கிரஸ் பின் வாங்குவதாக இன்றிரவுச் செய்திகள் பரபரப்புக் காட்டுகின்றன.

பாவம், அரவிந்த கெஜ்ரிவால்.

தலையும் புரியவில்லை;வாலும்புரியவில்லை.

‘அரசியலில் கோஷமிடுவது வேறு; வேஷமிடுவது வேறு’ என்ற அரசியல்
பால பாடத்தைக் காங்கிரசிடமிருந்து கற்றுக் கொண்டு, கர்ஜிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறார்.

இதன் மூலம் அரசியல் லாபம் பி.ஜே,பி.க்குத்தான் என்பது போகப் போகப்புரியும்:காங்கிரசுக்கு

காங்கிரஸைக் கை கழுவத் துடிக்கும் பல முன்னணித் தலைவர்களுக்கும் காங்கிரஸின் கயமைத் தனமான  அரசியல் கணக்கைக் கண்டித்துக் காறி உமிழ்ந்து வெளியேற வலிய முன்வந்து பாதை அமைக்கின்றது போலும்?

-கிருஷ்ணன்பாலா
25.12.2013

Tuesday, December 24, 2013

நடுத்தர மக்களின் மனச் சாட்சி!




ம் ஆத்மி கட்சி என்பது ஒரு விபத்தன்று; அது படித்த நடுத்தர வர்க்கத்தின் மனச்சாட்சி; நியாயத்தின் நடுகல்.

வீரமும் தீரமும் மிக்க இளைஞர்களை விழித்து நோக்கிய சுவாமி விவேகாந்தரின் வேட்கைக் கனவு.

இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ்-பிஜே.பி.என்று இரு பிளவுகளில்தான்  இந்திய வாக்காளர்கள் பற்று வைத்துள்ளனர்.

ஆனால், உண்மையான தேசப்பற்றும் 'மக்களுக்கு உண்மையாகவே அரசியல்பணி புரிய வேண்டும்' என்ற லட்சியமும் அதிகார அரசியலுக்கு அஞ்சாமல் துணிந்து எதிர்த்து நிற்கும் உறுதியும் கொண்ட ஒருவர் முன் வருவாரானால்  அவர்பின்னே அணிதிரள நடுத்தர வர்க்கம் தயாராக இருக்கிறது' என்பதற்கு ஆம் ஆத்மி கட்சியும் அதன் நிறுவனர் அரவிந்த் கேஜ்ரிவாலும் ஓர் எடுத்துக் க்காட்டு.

‘அரவிந்த கேஜ்ரிவால் எப்படி ஆட்சி செய்வார் பார்ப்போம்?’ என்று கண்ணில் விளக்கெண்ணெயை விட்டுக் கொண்டு, தூங்காமல் இருப்பதை விட,  அவர் எப்படியும் தனது லட்சியங்களையும் உறுதி மொழிகளையும் நிறைவேற்றும் வகையில் ஆட்சி புரிய ஒத்துழைப்பது காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. கட்சிகளின் அரசியல்கடமை.

அரவிந்த் கெஜ்ரிவால் தோற்றுப் போவாரானால், அது அவருடைய தோல்வியாக இருக்க முடியாது; நமது நாட்டின் ஊழல் அரசியல்வாதிகளின் வெற்றியாகவே அது பார்க்கப்படும்.

அத்தகைய தோல்வியில் பி.ஜே.பி. யோ காங்கிரஸோ குளிர்காய முற்பட்டால் இந்த நாட்டுக்கு விமோசனம் என்பது இந்த நூற்றாண்டில் இல்லை என்றாகி விடும்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
24.12.2013


Thursday, December 19, 2013

ரகசியங்களின் ராஜ்யம்!

தேவ்யானி கோப்ராகடே கைது விவகாரத்தில் வெளியே தெரிந்த விஷயங்களும் விவாதங்களும் மிக மிகச் சொற்பம்.

வெளியே தெரியாத விஷயங்களும் அலசி ஆராயத் தக்க விஷயங்களும் அதிர்ச்சியூட்டும் வகையில் இணையதளங்களிலும் மிக அதிகம்; அவை பல்வேறு வகையில் உலா வருகின்றன.

உண்மைகள் உண்மையாகவே  வெளிவருமானால் தேவ்யானியின் பின்புலம்  காங்கிரஸ் பெரும்புள்ளிகளின் கரும்புள்ளியாகவே வெளிப்படும் என்பது மட்டும் உணரப்படுகிறது.

இவரைப் பற்றிய எனது கட்டுரையைப் படித்த வாசகர் ஒருவர் ’தேவ்யானி கைதுக்குக் காரணமான சங்கீதா அமெரிக்க உளவுத்துறையின் கைப்பாவை என்று கருத இடமிருக்கிறது’ என்று கூறி அது பற்றிய Link ஒன்றை எனக்கு அனுப்பி இருந்தார்.

அப்படியானால் இரண்டு கேள்விகள் நம்முன் எழுகின்றன.:

1. சங்கீதா அமெரிக்க உளவுத்துறையின் கைப்பாவை என்றால் அவரை அமெரிக்காவுக்கு அழைத்தச் சென்ற தேவ்யானி கோபரகடே IFS யார்?அவரும் மறைமுகமாக  குருவிபோல் செயல்பட்டிருப்பவர்தானே?

2,சங்கீதாவைத் தங்கள் உளவாளியாகப் பயன் படுத்திய அமெரிக்க அரசு  சங்கீதாவை அமெரிக்காவுக்குக் கொண்டு வந்த தேவ்யானியைக் கைது செய்து நிலைமையை மோசம் அடையச் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இதற்கிடையில்-
புதிதாகக் தகவல் ஒன்றை எனது நீண்டகால நண்பரும் முது பெரும்பத்திரிகையாளருமான ஒருவர்  என்னிடம்சொன்னார். அது:

கோபர்கடே என்று மகாராஷ்ட்ராவில் சுமார் 25,30  ஆண்டுகளுக்கு முன் குடியரசுக் கட்சியின் எம்.பி யாக இருந்தார். அவர் ஒரு தலித்.

அவரிடம் அளவுக்கு மிஞ்சிய  சொத்துக்கள் சேர்ந்து விட்டன. அவை, பணமாகவும் அசையாச் சொத்துக்களாகவும்  இருந்தன..

தனது மரணத்தின்போது அத்தனை சொத்துக்களையும் கோப்ராகடேயின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் படிக்கவும்  உயர் பதவிகளை அடையவும் ஒரு Trustஐ ஏற்படுத்தி, அதன் உதவியை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ள வகை செய்திருக்கிறார்.

அந்த Trustன்  முழு உதவியால் படித்து ஒரு IFS அதிகாரியாக ஆனவர்தான் தேவ்யானி கோபராகடே, மறைந்த குடியரசுக்கட்சி எம்.பி,கோபர்கடேயின் குடும்ப உறவினர்.

இப்போதுள்ள உள்துறை மத்திய  அமைச்சரும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சருமான திரு சுஷில்குமார் ஷிண்டே தலித் என்பதுடன் மறைந்த முன்னாள் முன்னாள் எம்.பி கோபர்கடேயின் நெருங்கிய சகா;முன்னாள்குடியரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்து காங்கிரஸுக்கு வந்தவர்.;வந்தவர் 30 ஆண்டுகளுக்குள் சோனியாவின் முன்னணி மூத்த தலைவராக முன்னேற்றம்கண்டு விட்டவர்.

தேவ்யானியின் தந்தை அண்மையில் ஓய்வு பெற்ற  ஒரு IAS அதிகாரி. மறைந்த குடியரசுக் கட்சி எம்.பி கோபர்கடேயின் உறவினர்.இப்போது,காங்கிரஸ் சார்பில் ராஜ்ய சபா எம்.பி ஆவது என்ற லட்சியத்துடன்  காய்களை நகர்த்தி வருபவர்;
சுஷில்குமார் ஷிண்டேவின் பூரண மதிப்பு பெற்றவர்.

இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர்: இந்திய அரசியல் சட்ட அமைப்புக்  குழுவின் தூண் டாக்டர் அம்பேத்காரின் பெயரனும் அரசியல் காரணங்களுக்காகக் காங்கிரஸின் செல்லப் பிள்ளையுமான  பிரகாஷ் அம்பேத்கார்.

இப்போது சுற்றி வளைத்துக் கணக்குப் போட்டுப் பாருங்கள்:

தேவ்யானி கோபராகடேவுக்காக சகலவிதமான  ஆயுதங்களையும் எடுத்துக் கையாளத் துடிக்கும் காங்கிரசின் உள் நோக்கம் விளங்கும்.

அதுசரி, ரகசியங்களின் ராஜ்யமான பலநூறு கோடி கோபர்கடேயின் Trust இப்போது எவருடைய கைகளுக்குள் இருக்கிறதோ?

இவண்-
கிருஷ்ணன்பாலா
19.12.2013

தேவ்யானி: காங்கிரஸின் கயமை அரசியல்


மெரிக்காவுக்கான  இந்தியத் தூதரகத்தின்  துணைத் தூதர் திருமதிதேவ்யானி கோப்ராகடேயை  கோப்ரகடே’ என்று சிலர் உச்சரிக்கின்றார்கள்;  
நான்தேவ்யானி கோப்’ரா’கடேஎன்று  விளித்திருந்தேன்.

இப்பொழுது இவரைச் சுற்றி எழுந்துள்ள விமர்சனங்களும் நடந்துள்ள  விஷயங்களும்  விஷத்தன்மைமிக்ககோப்ராவின் கொத்தலாகவே இருப்பதால், இவரைகோப்ராகடே என்று நான் விளித்தது சரியாகத்தான் இருக்கிறது..

’தேவ்யானி கோப்ராகடே’  செய்த குற்றங்களின் அடிப்படையில் அவரை அமெரிக்கக் காவல்துறையினர், நடு ரோட்டில் கைது செய்து கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றது, இந்தியாவுக்கு அமெரிக்கா இழைத்த, தாங்கிக் கொள்ள முடியாத அவமான’மென  இங்குள்ள தேசபக்தர்கள் பலரும் பலவிதத்தில் பலவிதத்தில் பாசாங்குக் கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் மூலம்தேவ்யானி செய்த மாபெரும்  குற்றங்கள் பின் தள்ளப்பட்டு, அவரது பதவியின் முக்கியத்துவம்  மட்டுமே பேசப்படும் அவலம் இங்கே அரங்கேற்றப்பட்டிருக்கிறதுஎன்பதை முன்பே எழுதி இருந்தேன்.

’தேவ்யானி, தனது பணிப் பெண்னை அமெரிக்காவுக்கு அழைத்துச்  
சென்றதில் அமெரிக்காவுக்கானவிசாவிதிகளை  மீறி இருக்கிறார்’  என்பதும்  ‘அவர் அக்’கறை’யோடு அழைத்துச் சென்ற பணிப்பெண்ணை  உரிய சம்பளம் தராமல் அரட்டி, மிரட்டி வேலை வாங்கி இருக்கிறார்’ என்பதும் அமெரிக்கக் காவல் துறையினரிடம் அளிக்கப்பட்டிருக்கும் புகார்.

அதனால்தான், அப்பணிப்பெண் அங்கு திடீரென்று காணாமல்போய், காவல் துறையிடம் புகார் செய்திருக்கிறார் என்பது இப்போது தெரிய வருகிறது.

‘குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் அவர் தண்டிக்கப்பட வேண்டும்’ என்பதுதான் தர்மத்தின் தீர்ப்பாக இருக்க முடியும்.

ஆனால், ’இங்கு தர்மமும் நியாயமும் தட்டி வைக்கப்பட்டு, ஒரு இந்தியத் தூதரக அதிகாரியை நடு ரோட்டில் வைத்துக் கைது செய்ததன்மூலம்  இந்தியாவின் கௌரவத்தையும் தன்மானத்தையும்  கேவலம் செய்து விட்டது அமெரிக்கா; அதற்கு அது மன்னிப்புக் கோர வேண்டும்; அந்த அதிகாரிமீதுள்ள குற்றப் புகாரை வாபஸ் செய்து குற்றங்களிலிருந்து  விடுதலை செய்ய வேண்டும்என்கிறது சோனியாவின் காங்கிரஸ் அரசு.

‘தேவ்யானிக்கு எதிரான சதிச்செயல்களுக்கு அமெரிக்கா துணைபோயிருக்கிறதுஎன்ற பயங்கரமான குற்றச்சாட்டை இபொழுது இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் விவகாரமாக்கி இருக்கிறார்.

இக்குற்றச் சாட்டைக் கடைசிவரை நின்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு தனக்குள்ளது என்பதை உணர்ந்துதான் இப்படிப் பேசி இருப்பார் என்று நம்பலாமா?
 
அமெரிக்கா,என்ன மாதிரியான  குற்றங்களை, ‘அமெரிக்கா-இந்திய தூதரகச் சட்டவிதிகளை மீறிச் செய்திருக்கிறது?  ஒரு IFS  அதிகாரியாக இருந்து கொண்டு தேவ்யானி கோபராகடே என்ன மாதிரியான  விசா’ மோசடிகளைச் செய்திருக்கிறார்?

என்ற -

இந்த இரண்டு தரப்பு விஷயங்களையும் ஆராயாதுதேவ்யானியை நடுரோட்டில் விலங்கிட்டு அழைத்துச் சென்றதும் அவரது ஆடைகளைக் களைந்து சோதனை இட்டதும் இந்தியாவுக்குப் பெருத்த அவமானம்; இதைச் செய்த அமெரிக்கா மன்னிப்புக் கோர வேண்டும்  என்று பார்லிமெண்ட்வரை  பலரையும் பேசவைத்து, இந்தியாவின் மானத்தைக் காப்பதில் அமெரிக்காவை மிகப்பயங்கரமான எதிரிபோல் காட்டத் துணிந்திருக்கிறது , சோனியாவின் சுட்டு விரலுக்குச் சுழலும் மன்மோகன் அரசு.

இது ஒரு அரசியல்மோசடிக்கான நாடகமே அன்றி, நிஜமான இந்தியக் கௌரவத்துக்கான எழுச்சி அல்ல.

‘தேவ்யானிக்கு நடு ரோட்டில் கைவிலங்கிடவில்லைஎன்பதையும் 
அவர் உரிய முறையில் கௌரவமாகத்தான் நடத்தப்பட்டிருக்கின்றார்’ என்பதையும்  அமெரிக்க வெளியுறவுத் துறை உயர் அதிகாரி இப்பொழுது கூறி இருக்கிறார்.

எனவே,

அமெரிக்காவில்நடந்தது என்ன? என்பதை முழுமையாக, முறையாக விசாரிக்காமல், உயர் அதிகாரத்தில் இருக்கும் ஒற்றை அதிகாரி செய்த தவறு இன்னதென விளங்கிக் கொள்ளாமல்;அல்லது விளக்கப்படாமல் அவருக்காக இந்திய அரசே அவசரப் பட்டு,ஆர்ப்பரித்து எழும் இந்த விநோதமான விபரீதமானது , வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குகான  வெட்கம் கெட்ட விளம்பரமே அன்றி விஷயமுள்ள விவகாரம்  என்பதை புத்தியுள்ளோர் புரிந்து கொண்டிருக்கின்றார்கள்.

இல்லை என்றால் அமெரிக்கக் காவல்துறையால் ’குற்றவாளி’  என்று கருத்தப்பட்டு கைதாகி, இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ள தேவ்யானிக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கிஅவரைக் குற்றம்சாட்டப்படமுடியாத உயர்நிலை அதிகாரியாகப்  பதவி உயர்வு அளித்து, ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத்தாழ்ப்பாள்போட்டதுபோல்  குற்றத்தை ஆய்வு செய்வதற்குப் பதில் 'மகளே உன் சமர்த்து’  என்பதாகக் காட்டிக் கொண்டிருக்குமா, இந்தக் கயமைத்தனமான  காங்கிரஸ் அரசு?

தலித் மக்கள் ஆதரவு,பெண்கள் மத்தியில் ஆதரவு, கிரிமினல் குற்றவாளிகளின் பின்பலம் இவை மூன்றையும் ஒரே கல்லில் வீழ்த்த  வெட்கப்படாமல்  தேவ்யானிக்கு பதவிப் புரமோஷன்  தந்து நீதியைத் தலை குனிய வைக்கும் அதிகாரச் செயல் இது.

இதனிடையே-

அமெரிக்காவுக்கான  இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரியான தேவ்யானி கோப்ராகடே IFS காட்டிய ஆசை வார்த்தைகளை நம்பி, பிழைப்புக்காகவும் தனது எதிரகாலம் சிறப்பாக அமையுமென்ற கனவை நனவாக்கவும் அவர் சொல்படி, அவர்பின் கைகட்டிச் சென்ற  சங்கீதாவுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து விசனப்படும் சமூக நோக்கர்களும் பெண்ணியவாதிகளும் பார்லிமெண்ட்  எம்.பிக்களும்  மத்திய அரசும் நமது நாட்டின் செய்தி ஊடகங்களும் ஏன் முன் வரவில்லை? என்பதே எனது கேள்வி.

பணிப்பெண்சங்கீதாவின் பின்னணியும் விரிவாக நமக்குத் தெரிந்தாக வேண்டுமல்லவா?

அதிகாரத்தில் உள்ளவனுக்கும் அதிகப் பணம் வைத்திருப்பவனுக்கும்   
அதிகம் சலுகைகளை வழங்கத் துடிக்கும்  நமது இந்திய அரசியவாதிகளின் அவமானத்துக்குரிய இந்த எழுச்சியைக் கண்டு நேர்மைமிக்க இந்தியக் குடிமகன்கள்  வெட்கமும் ரோஷமும் கொள்கிறார்கள்.

அடிப்படைத் தவறுகளைச் செய்து அதிகாரத்தின் நிழலில் விளம்பரம் பெற்று தவறுகளிலிருந்து  தேவ்யானியை விடுவிக்கக் கோரும் மத்திய அரசு, இனி தேவ்யானியை முறைப்படி விசாரித்துத் தண்டிக்க  எப்படி முன் வரும், அவருக்காக இத்தனை ஆரவாரங்களை எழுப்பிய பின்?

அதேபோல், உண்மை நிலை இன்னதென உணராமல்-

'தேவ்யானி ஒரு பெண் என்பதால்தான் இத்தனை கொடுமை நிகழ்த்தப்பட்டிருக்கிறதுஎன்கின்றார்கள் இங்குள்ள  பெண்ணியவாதிகள்.

அவர் ஒருதலித்’ என்பதால்தான் இப்படியெல்லாம் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறார்என்கின்றனர் வழக்கம்போல்  தலித்தீயவாதிகள்.

அமெரிக்காவில் அறியப்படாத அவமானம் மிக்க சாதி மற்றும் பெண்ணீய உரிமைக் கோஷங்களை, இங்குள்ள கேடு கெட்ட அரசியலைப் போலவே, ’விசா’ப் பெறாமலேயே  அங்கு குடியேற்றும் முயற்சியை, நமது அரசியல்வாதிகள், முடுக்கி விட்டுள்ளார்கள் போலும்?

வேண்டுமானாலும் பாருங்கள்:

இந்தியாவின் தன்மானத்தை மீட்ட காங்கிரஸ் அரசுஎன்றும்
அமெரிக்காவை எதிர்த்து வென்ற  வீராங்கனை அன்னை சோனியா  என்றும்  வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  கோஷங்களைத் தாங்கும் பதாதைகள் பவனி வரப்போவதை.

இவண்-
கிருஷ்ணன்பாலா
19.12.2013

Tuesday, December 17, 2013

மத்திய அரசே, பதில் சொல்!

Devyani Khobragade


மெரிக்காவுக்கான இந்தியத் தூதரக அதிகாரி ‘தேவ்யானி கோப்ராகடே’  செய்த குற்றத்துக்காக  அமெரிக்காவில் நடு ரோட்டில் கைது செய்யப்பட்டு விலங்கிடப்பட்டது இந்தியாவுக்கு அமெரிக்கா இழைத்த, தாங்கிக் கொள்ள முடியாத அவமானமென இங்கு பலரும் பலவகையில்  கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தேவ்யானி செய்த மாபெரும் குற்றங்கள் பின் தள்ளப்பட்டு, அவரது  பதவியின் முக்கியத்துவம் மட்டுமே பேசப்படுகிற அவலம் இதன் மூலம் அரங்கேற்றப்படுகிறது.

‘தேவ்யானி இந்தியாவின் மானத்தையும்  இந்திய உயர் அதிகாரிகளின் யோக்யதாம்சங்களையும் அமெரிக்க வீதிகளில் கொட்டிக் கேவலப்படுத்தி இருக்கிறார் என்பதுதான் உண்மை; அதனால் அவர் தண்டிக்கப்பட வேண்டியவர்’ என்கின்றேன்,நான்.

இன்று இந்தியா முழுவதும் தலைப்புச் செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கின்ற அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரியான இந்தத் தேவ்யானி   (தமிழில் தேவ யானை அல்லது தெய்வானை). ஒரு வட இந்தியர்.

அவர் தனது வீட்டுக்காகப் பணிப் பெண்ணாய் இருக்க ஒருபெண்ணை   இந்தியாவிலிருந்து போலியான விசா விதி முறைகளைக் கையாண்டு அழைத்துச் சென்றிருர்க்கிறார்; இதற்குத் அதிகாரத்தையும் செல்வக்கையும் சுயநலத்துக்காகத் தவறாகப் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்.

பிறகு அந்தப் பணிப் பெண்ணை மனித நேயமற்ற வகையில் அமெரிக்காவில் கொடுமைப்படுத்தி வேலை வாங்கியிருக்கிறார்.

இந்த வகையில் இப்பெண்மணி ‘த்தூ’தரக அதிகாரி என்பதைக் காட்டிக் கொண்டு விட்டார்.

ஒரு இளம்வயது ஏழைப் பெண்ணை அவளது வறுமையையும்  அதன் தேவையையும் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்காவில் இருக்கும் தன் வீட்டுக்கு வேலைக்காரியாய் ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றிருக்கிறார்.

அமெரிக்காவின் சட்டத்தை ஏமாற்றியதுடன்  ஒரு உயர் அதிகாரியின் கடமையையும் தவறி ,அந்தப்பெண்ணுக்குத் தன்னுடைய செல்வாக்கைப் பயன் படுத்திப் பித்தலாட்டம் செய்து ‘விசா’ எடுத்துள்ள விஷயத்தை விட, அந்த வேலைக்காரப் பெண்ணை  இரக்கமற்ற வகையில் கொடுமை செய்திருப்பது அமெரிக்காவில் மிகக் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படும்   ‘மனித உரிமை அத்துமீறல்’குற்றம் என்றாகி, அமெரிக்கச் சட்டப்படி, அங்குள்ள போலீசார்  தேவ்யானியை விரட்டிச் சென்று நடு ரோட்டில் நிறுத்திக் கைது செய்து விலங்கு மாட்டியிருக்கிறார்கள்.

இப்படிக் கைது செய்த விஷயமானது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி, இன்றுள்ள மத்திய அரசை ஆளுகின்ற காங்கிரஸ்காரர்களுக்கு முன் எப்போதும் இல்லாத ரோஷத்தையும் போலி வேஷத்தையும் தந்துள்ளது.

இந்தியத் தூதரக அதிகாரியை நடு ரோட்டில் வைத்துக் கைது செய்ததும் கையில் விலங்கிட்டதும் இந்திய இறையாண்மைக்கும் தூதரக விதி முறைகளுக்கும் எதிராக  அமெரிக்க அரசு அவமானம் இழைத்து விட்டதாக  அறிக்கைகள் விட்டு,நமது மத்திய அரசு, இப்போது இந்தியாவில் இருக்கின்ற அனைத்து அமெரிக்கத் தூதரகங்களுக்கும் வழங்கப்பட்டு வந்திருந்த சட்டச் சலுகைகளை ரத்து செய்து இருக்கிறது.

இதன்படி, இந்தியாவில் பணி புரிகின்ற அமெரிக்கர்கள் அனைவரும் தாங்கள் பணியில் அமர்த்தி இருக்கின்ற பணியாளர்களின் விவரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் மற்றும்  இந்தியாவுக்குள் வந்திறங்கும் தூதரக  அமெரிக்கர்கள் இதுவரை எவ்வித சோதனையும் இன்றி வெளிவந்ததற்கு மாறாக இனி, அனைவரும் சோதனைக்குட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர்கள் தங்கள் இஷ்டம் போல் சுங்கத் தடையின்றி பொருட்களைக்  கொண்டு வந்து இந்தியாவில்  இறக்குமதி செய்து மகிழ்ந்த உரிமைகள் பறிக்கப்பட்டு,இனி  எந்தப் பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அதிரடியான அறிவிப்புக்களை விடுத்துள்ளது.

இதன் மூலம் நமக்கு இதுவரை மறைக்கப்பட்டு வந்த பல விஷயங்களும் அதிர்ச்சிச் சிந்தனைகளும்   அரங்கத்துக்கு வந்துள்ளன.

1. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் காலணி, கோவணம் வரை அமெரிக்க விமான நிலையத்தில் அமெரிக்கச் சுங்கம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்த போது வராத இந்த ரோஷம் இப்போது வந்ததேன்?

2.நேர்மையும் எளிமையும் தூய்மையும் மிக்க மேதகு அப்துல் கலாம் அவர்களைவிட, இந்தியச்  சட்டத்தையும் அமெரிக்கச் சட்டத்தையும் ஏமாற்றி மனித நேயத்துக்கு எதிரான இரக்கமற்ற சிந்தையும் பித்தலாட்டக் குணமும் கொண்ட ஒரு தூதரக அதிகாரியை மேலானவராக மத்திய அரசு கௌரவிக்கின்றதா?

3.இதுவரை அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கென்று எவ்வித சுங்கச் சோதனை முறையும் செய்யாமல் அவர்களைச் சிவப்புக் கம்பள முறையில் அடிபணிந்து இந்தியாவுக்குள் அனுமதித்து வந்த  அடிமைப் புத்தியை இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வந்ததேன்?

4.அதன் மூலம் அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு எதிரனான ஆயுதங்கள், ரகசிய டாக்குமெண்ட்கள், பின்னாளில் இந்தியாவை மிரட்டிப் பணிய வைக்கின்ற உயர் தொழி நுட்ப ஆயுதங்கள்,கருவிகள் போன்றவற்றைக் கொண்டு வந்து இங்கே பதுக்கி வைக்கவும் தங்களுக்குச்  சாதகமானவர்களோடும்  இந்தியாவுக்குப் பாதகமானவர்களோடும் பகிர்ந்து வைக்கவும் வாய்ப்பில்லை என்பதை மறுக்க முடியுமா?

5.‘ஒரு நாட்டின் சட்ட திட்டங்களை அந்நாட்டுக்குள் வசிக்கும் எவரும் பின்பற்றவும் அடிபணியவும் வேண்டும்’ என்றால் அது தேவ்யானிக்கும் பொருந்தும்; அதேபோல் இந்தியாவில்  தூதரகங்களில் பணியாற்றுகிற எந்த அமெரிக்கருக்கும் பொருந்தும். இந்த யாதார்த்த நிலைக்கு முரணாக தூதரக விதிமுறைகளில் இரண்டு நாடுகளுக்கிடையே பரஸ்பரம் சமன்பாடில்லாத சலுகைகளை அமுல்படுத்தி வந்த விதிமுறைகளை இந்தியா எப்படி இதுவரை ஏற்றுக் கொண்டிருந்தது?

இப்படி ஏராளமான கேள்விகள் இப்போது நம் முன் நிற்கின்றன.
 

இந்திய இறையாண்மை என்பது வேண்டியவர்களுக்கு ஒரு சட்டம்; வேண்டாதவர்களுக்கு ஒரு  சட்டம் என்பதாகவோ வேண்டியவர்கள் சட்டத்தை வளைத்து உயர் பதவியில் இருக்கலாம் என்று அனுமதிப்பதாகவோ இருக்க முடியாது.

அது இந்தியாவின் நேர்மையையும் நீதியைப் போற்றும் கூர்மையையும் உலக நாடுகளின் முன் எடுத்துக் காட்டுவதாகத்தான் இருக்க முடியும்.

அவ்வாறில்லாமல்,குடும்ப உறுப்பினர்களைக் கூடச் சொந்தம் கொண்டாட அனுமதி மறுத்து அவர்களைச் சாதாரண பிரஜைகளாய்க் கருதி நடத்திய மேதகு குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானத்தைப் பொறுத்துக் கொண்ட மத்திய அரசு,  இப்போது இந்தத் தேவ்யானிக்காக வரிந்து கட்டிக் கொண்டு அமெரிக்காவை வசை பாடுவது, ஏதோ ஒரு அரசியல்   உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கிறது; அதனால்தான்,இந்தத் தேவ்யானிக்கு யாரோ மிகப் பெரும் அரசியல் புள்ளியின் பின்பலம்  இருந்து இவ்வளவு நாள் இல்லாத ரோஷம் தேவ்யானிக்காக, சோனியாவின் சொற்படி ஆடும் மன்மோகன் அரசுக்கு வந்து விட்டதா? என்று இந்தியப் பாமரன் எண்ணும்  அளவுக்கு  நிலைமை மாறி விட்டது, இந்தக் கேடு கெட்ட காங்கிரஸ் ஆட்சியில்?

சினம் கூட்டும் இந்தச் சிந்தனைகளுக்கு நடுவே, இந்தியச் சட்டத்தை ஏமாற்றி  இன்னொரு இந்தியப் பெண்ணைத் தன் வீட்டு அடிமையாக நடத்திய இந்தியத் தூதரகப் பெண் அதிகாரி தேவ்யானியை உடனே சஸ்பெண்ட (பதவி நீக்கம் ) செய்வதுடன், இப்படியொரு குற்றவாளியை அறியச் செய்த அமெரிக்கக் காவல்துறைக்கு இந்தியா நன்றி சொல்ல வேண்டும்’ என்ற எண்ணத்தை இந்தியர்களாகிய நாம் அரசுக்கு முன் வைக்க வேண்டும்.

வெட்கமும் ரோஷமுமாக-
கிருஷ்ணன்பாலா
17.12.2013

இன்ஷா அல்லாஹ்! (அரசியல் சதுரங்கம்:5)

'இந்தியா சுதந்திரம் வாங்கியதுடன் இந்திய தேசியக் காங்கிரசைக் கலைத்து விட வேண்டும்' என்பது காந்தி அடிகளின் விருப்பம்.

ஆனால், பண்டித நேரு அதற்கு உடன்படவில்லை.

பதவி, அதிகாரம் இவற்றில் ‘ பாவசுகம்’ கண்ட அந்தப் பண்டிதர் பக்கம் பலமான கூட்டம் இருந்ததால் கிட்டத் தட்ட இந்தியாவின் மூன்று தலைமுறைகளைப் பையப் பைய  சீரழித்து விட்டது  காங்கிரஸ்.

பதவிப் பித்தர்களின் பகிரங்க மேடையாகத் திகழ்ந்த இக்கட்சி,   தனது கடந்த பத்தாண்டுக் கால ஆட்சியில்  ’இனி எவருமே இப்படிப்பட்ட ஊழல்களைச் செய்ய முடியாது’ என்பதை ஊர்ஜிதப் படுத்தி, மத்தியிலும் மாநில அளவில் தனது கூட்டாளிக் கட்சிகளை   வைத்துக் கொண்டு நாட்டின் கஜானாவையே  சுரண்டி விட்டது.

இதன் விளைவே, நமது நாட்டின் இன்றைய பொருளாதாரச் சரிவு, விலைவாசி உயர்வு, பெட்ரோலியப் பொருட்களின் எவரெஸ்ட் உயர விலைகள், நிர்வாகச் சீர்கேடுகள்,ஒழுக்கமற்ற அரசியல் மற்றும் ஜனநாயகக் கேலிக் கூத்துக்கள்.

இதன் காரணமாக-

மக்கள் சினத்தின் மாபெரும் சுனாமிப் பேரலையை உருவாக்கி, இன்னும் நாலைந்து மாதங்களில்  காங்கிரஸைக் காணாமல் போகச் செய்யும் பெருமையைத் தேடிக் கொண்டிருப்பது, அதே பண்டித நேருவின் பேரனின் மனையாட்டியான சோனியாவும் அவரது தவ மைந்தன் ராகுலும்தான்.

நண்பர்களே,

வரும் நாடாளு மன்றத் தேர்தலோடு  இந்திய தேசியக் காங்கிரஸ் என்ற கட்சி மாநிலக் கட்சிகளுக்கும் கீழாக மகா மட்டமாகி, தேசிய அளவில் காணாமல் சிதறுண்டு போய் விடப் போகிறது.

அது, ’இந்தத் தேர்தலோடு கலகலத்துப் போய் விடும்’ என்பது திண்ணம்.

துருப்பிடித்துக் கவிழ்ந்து போன இந்தக் காங்கிரஸ்  கப்பல், இனி  ஒருபோதும் கரை சேராது.

’கரந்த பால் முலை புகாது;  குடம் கவிழ்ந்த நீர், மீண்டும் குடத்துள் சேராது’ அல்லவா?.

அரசியல் சதுரங்கத்தில் முழுமையாக வெட்டப்படும் காயாக,  அரசியல் ஃபக்ரீத்துக்கு அறுக்கப்படும் ஆடாக  காங்கிரஸ் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு விட்டது.

காயலாங்கடை வியாபாரிகள் போன்ற  ‘ஒரு சில காங்கிரஸார் வேண்டுமானால்  துருப்பிடித்துக் கவிழ்ந்து போன இந்தக் கப்பலை எடுத்து, உடைத்து அதன் உதிரி பாகங்களை வைத்துக் கொண்டு அரசியல் ஏலம் விடுவார்கள்’ என்பதை நம்பலாம்.

என்னைப் பொறுத்தவரை காங்கிரஸ் இனி Gone-Crush தான்.

காந்தி அடிகளின் உள்ளார்ந்த ஆசையைப் பூர்த்தி செய்ய வந்த சோனியா அவர்களுக்கு ‘காந்தி’ என்ற அடைமொழி இருப்பது ஒருவகையில் சரிதான், நான் அதை ஏற்கவில்லை என்ற போதும்.

இன்ஷா அல்லாஹ்!

-கிருஷ்ணன்பாலா
17.12.2013

Tuesday, December 3, 2013

ஆனந்த அருவி கொட்டும் அட்சய பாத்திரங்கள்!

றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

பாவம் எது? புண்ணியம் எது? என்ற அடிப்படைச் சிந்தனையை வளர்க்கும் பண்பு முற்காலத்தில் நமது சமூகக் கட்டமைப்பில் இருந்தது. ஒவ்வொரு குடும்பமும் தாங்கள் பெற்றெடுத்து வளர்த்த குழந்தைகளுக்கு மாதா,பிதா, குரு,தெய்வம் என்ற சித்தாந்தத் தத்துவத்தையே முதன்மைக் கல்வியாக ஊட்டித் தங்கள் குழந்தைகளை வளர்த்தனர்.

அந்தச் சமூகமே உலகின் மூத்த,பண்பட்ட குடிகளாகத் திகழ்ந்தது; உலக சமூகத்தால் வியந்து போற்றப்பட்டது. இந்த நாட்டுக்குச் சிறிதும் தொடர்பற்ற முகம்மதியர்களால் இந்த நாட்டின்  சமஸ்தானங்களும்,சிற்றரசுகளும், பிரதேசங்களும் கொள்ளையிடப்பட்டும் கொடூரம் நிகழ்த்தப் பட்டும்  மூர்க்கத்தனமாக அடக்கப்பட்டும்  அடிமையாக்கப்பட்ட நிலையிலிருந்து சிறுகச் சிறுக இதன் கொள்கைககளும்  கோட்பாடுகளும்  ஒடுங்கிப் போகத் தொடங்கி, ஆங்கிலேயர் ஆட்சியில் முற்றாக மாறுபடத் தொடங்கியது.

‘ஆங்கில ஆட்சியாளர்களை அண்டியும் நத்தியும் வாழ்ந்தால் ஒழிய நாமும் நமது சந்ததியினரும் வாழ முடியாது’  என்பதை நமது சமூகத்தின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள்  முடிவு செய்து கொண்டு. ‘இதன் மாண்பும் மகத்துவமும் எக்கேடு கெட்டேனும் போகட்டும்’ என்று கைவிட்டு விட்டு, வெள்ளைக்காரனின் கால்களைப் பிடித்துக் கொண்டதன் காரணமாக, அவர்கள் தங்கள் வருங்காலச் சந்ததியினரின்  தார்மீக உணர்வுகளை மழுங்கடிக்கும் மாபெரும் பிழைகளைச் செய்து விட்டார்கள்.

‘வீரத்தைவிட விவேகமே வாழ்வுதரும்’ என்ற சோரம் போன சித்தாந்தத்தையே சிந்தித்துச் செயல்பட்ட  அந்தக் களைகளுக்கு நடுவே, ஆங்காங்கு  ஆன்மீகமும் ஆண்மையும் அறிவும் ஞானமும் கொண்ட சத்தான வித்துக்களாயத் தோன்றிய  மாமனிதர்களால்தான் நமது பண்பாடும் பாரம்பரியமும் கரை ஏற்றப்பட்டு, காக்கப்பட்டது.

எப்படி ஒரு ஊழிக் காலத்தில், எல்லோரும் எல்லாமும் அழைந்து போகின்ற நிலையில், ஒவ்வொரு உயிரினத்திலிருந்தும் உண்மையும் உயிர்ப்புமான சத்தான ஜீவன்களையெல்லாம் மோஸஸ் காப்பாற்றிக் கரை சேர்த்தாரோ,அப்படியேதான் நமது சமூகத்தின் பேரழிவிலிருந்து நல்ல மரபுகளையும் மாண்புடைய வாழ்வியல் சித்தாந்தங்களையும் விடாது கரை ஏற்றிய நூற்றுக் கணக்கான மோஸஸ்களைப் பெற்றிருந்தாள், நமது தமிழன்னை.

அதனால்தான் நமது பண்டைய இலக்கியங்களில் குறிப்பிட்ட படைப்புக்களைக் காத்து, பின் சமூகம் பயன் பெறுவதற்கான பார்வை கொண்ட அரசர்களையும் ஆண்டிகளையும் அறிவு ஜீவிகளையும் அற்புதக் கவிகளையும் ஆராயும் மனிதர்களையும் அவ்வப்போது ஜனித்துத் தந்து வருகிறாள்,அந்ததாய்.

அவள் ஈன்ற பெருமைமிக்க பிள்ளைகள், தங்கள் வாழ்க்கையில் தமிழையும் தமிழின் உயர் சொத்துக்களையும் பல்வேறு ‘கரையான்’களிடமிருந்து காப்பாற்றி, அக்கரையோடு படிமங்கள் எடுத்துப் பாதுகாத்து வந்ததெல்லாம் இந்த மண் பயனுற வாழ்வதற்கே’; அந்த நோக்கம் உலகம் வாழும் வரைக்கும்  தமிழன் உயிர் காக்கும் உணவாக அல்லவோ, அவளுடைய  நீதி இலக்கியங்களும் பக்தி இலக்கியங்களும் ஆக இருக்கின்றன?

வேதங்களின் விளக்க உரைகளாகவும் உப நிஷதங்களின் உண்மைச் சத்துக்களாகவும் திகழும் நமது பண்டைய  தமிழ்ப் படைப்புக்களில் பார்வையைச் செலுத்துவது ஒன்றே, ‘மேன்மை மிகு தவநெறி’யென மேலோரும் நூலோரும்  சொல்வர். எனினும்- நமது சமூகத்தின் பெரும்பான்மையோரின்  நாட்டமும் தேட்டமும் மேலை நாட்டு நாகரீகத்தின் மினுமினுப்பிலேயே அதிகம் தோய்ந்து போய் நமது மரபு வழித் தத்துவ சித்தாந்தங்களின் பெருமை மறைந்து விட்டது.

ஆக, நேர்மையும்,உயர் ஒழுக்கமும் தெய்வ நீதி பற்றிய  தெளிவும், அறப்பண்புகளும் மிக மிகச் சிறுபான்மையினரின் சிந்தைகளில் மட்டுமே சிறுத்து போன காரணத்தாலும் மிகப் பெரும்பன்மையோருக்கு ‘அத்தகைய சித்தாந்தங்கள் வேற்றுக் கிரகவாசிகளின் விளையாட்டுப் பொருள்’ என்ற மதிப்பீடு மலிந்து விட்டதாலும் இங்கே ‘ஒழுக்கமும் உண்மையும்   உயர் பண்பு நெறிகளும்  ஏதோ உதவாக்கரை விஷயங்கள்’ என்றே ஆகி விட்டது.

ஒப்பற்ற தன்னம்பிக்கைகளையும் தெய்வீகச் சிந்தனைகளையும் தெளிவான அனுபூதி ஞானத்தையும் நமக்குள் ஆனந்த அருவியாய்க்கொட்டும் வல்லமையுள்ள, அட்சயப் பாத்திரங்கள்தான் நமது பண்டைத் தமிழ்  இலக்கியங்கள்.

அவற்றை ஏந்தாமல், பிற தேசத்துப் பித்துக்குளிகளின் பிறன் மொழித் தத்துவ சித்தாந்தங்களை ஏந்தித் திரியும்  மாந்தர்களை என்னென்பது? நமது நீதி இலக்கியங்களை நீங்கள் உணராமல், அவற்றைப் படித்துப் படித்துத் தோயாமல் போனால் எந்த மறைநூலும் உங்களை மனிதர்களாக வாழ உதவாது.

நம் தமிழர்கள் எவருமே பண்பட்ட மனிதர்கள் என்று வாழப் பேராசை கொள்கின்றேன்.

குறைந்த பட்சம் நமது பதினெட்டுக் கீழ்க் கணக்கு நூல்களிலாவது தேர்ச்சி பெறுங்கள், நண்பர்களே. நமது நாட்டின் ஒப்பில்லாத நீதி,நெறி,ஞானச் சித்தாந்தங்க்ளின் சுவையின் பெருமை குறித்தே திருமூலர் இப்படிச் சொல்லி இருக்கிறார்:

“யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்;
ஊன்பற்றி  நின்ற உணர்வுறு மந்திரம்;
வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடில்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே!”

சுமார் 40 ஆண்டுகள் வரைகூட நமது கல்விச் சாலைகளில் Moral Classes என்ற நீதி நெறி வகுப்புக்கள் வாரம் ஒன்று என்ற அளவிலாவது இருந்து வந்தது.  எனது மற்ற வகுப்புக்களை எல்லாம் விட அந்த ஒரு வகுப்புக்காக நான் வாரம் முழுவதும் தவம் கிடப்பேன்;அந்த நேரத்தில் எனது வகுப்புத் தோழர்களில் பாதிப்பேர் காணாமல் போய்  பள்ளிக்கு அருகே இருக்கும் சினிமாத் திரை அரங்குகளில் இப்போது முகநூலில் கூட்டம் போட்டுக் கும்மாளம் போடுகிறார்களே, அதுபோல் அங்கே கும்மாளமிட்டுக் கொண்டிருப்பார்கள்.

நான் அவர்களின் கூட்டத்தில் இருந்து விதியால் விலக்கப்பட்டிருந்தேன்.

“ பின்னை நின்றென்னே பிறவி பெறுவது?
முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்;
என்னை  நன்றாக இறைவன் படைத்தனன்;
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே!”

என்ற திருமூலரின் வாக்கை எனது விதி எப்படியோ அப்போதே தெரிந்து கொண்டு,என்னை இப்படியெல்லாம் எழுத வைக்கத் தீர்மானித்தது போலும்?

-இவண்
கிருஷ்ணன்பாலா
3.12.2013

Saturday, November 30, 2013

எனது ஆத்திச் சூடி!

 

ஆத்திச் சூடி அவ்வை சொன்னாள்;
அவளென் பாட்டி; அவள் மொழி கொண்டு
யாத்திடும் இதுவும்  அஃதே என்று
ஏற்போர் என்றன் தமிழ்க் கேளிரே!
-------------------------------------------------

அறத்தமிழ், நாடு;
ஆரியம் பேசேல்;
இறைநெறி உணர்;
ஈனரை விலக்கு;
உலகததில் ஓங்கு;
ஊருடன் வாழ்;
எதிரியை வீழ்த்து;
ஏய்த்து உண்ணேல்;
ஐயம் கொள்ளேல்;
ஒன்றே இறை;
ஓடி ஒளியேல்:
ஒளவை சொல் கேள்;
அஃதே வாழ்க்கை!

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.11.2013

தாயுமானவனே!



எந்தை,’ தாயுமானவன்’ அமரர் கிருஷ்ணசாமிக் கவுண்டர்   
(1905 1990)

அன்னைக் கருவ றையில் என்னைச் சுமக்கும் முன்
அன்னை அவள் சுமந்த உன்னில் எனைச் சுமந்தாய்;

தந்தை என்றெ னக்குச் சிந்தை உரைத் தவளை
முந்தி இருந்த உயிர்ச் சொந்தம் உனை மறவேன்!

வயிற்றில் சுமந் தாளை வாழ்வில் சுமந் தாய்நீ;
கயிற்றில் வாழ்ந் தாளின் கருத்தில் வாழ்ந்தாய் நீ!

பத்து மாதம் எனைப் பதித்து வளர்த் தாளைச்
சொத்துச் சுகம் போலச்சுமந்த உயிர் நீதான்!

உதிரப்பால் ஊட்டி உயிரை வளர்த் தாளின்
எதிரில் இணை வைக்க இல்லை ஒரு தெய்வம்!

எனினும் அவள் மேனி இளைத் துவிடா திருக்க
உனது உதி ரத்தை உழைப்பில் சிந்தி யவன்;

எனது தந்தை யென எண்ணி நெகிழ்கின்றேன்!
மனதில் வைத் துன்றன் மாண்பில் மகிழ்கின்றேன்;

தந்தை என்று மட்டும்தனித்து இல்லா மல்,
எந்தை நீ எனக்குஎல்லா முமாய் இருந்தாய்;

அறிவு புகட்டி எனை ஆளாக்கி இம் மண்ணில்
உறவை உயிர் உணர்வாய் ஓங்க வளர்த் தவனே!

தோயும் உணர்வுகளில் தோய்ந்து தோய்ந்து உனைத்
தாயு மான வனாய்த் தனித்து வணங்கு கிறேன்.

இவண்-

கிருஷ்ணன்பாலா
30.11.2013