Tuesday, January 14, 2014

பொங்கலின் பெருமை




பொங்கலின் பெருமையை உணர்ந்திங்கு
போற்றிக் கருதிக் கொண் டாடி
எங்கும் தமிழர்கள் நிமிர் நடையில்
இவ்வுல காண்டிட வாழ்த்து கின்றேன்!.

ஏருக்குப் பின்னே தான்உலகு;
ஏரில்லை என்றால் ஏதுணவு?
பாருக்கு இதனைப் பளிச்சென்று
பகன்றவன் வள்ளுவப் பெருந்தகையோன்!

பொங்கல் என்பது ஏர்உழவின்
பொய்யா நிலைக்கு அருளுகின்ற
செங்கதிர் தன்னை, நன்றியுடன்
செந்தமிழ் மக்கள் வணங்கும் விழா.

நன்றிக்கு வித்து நல்லொழுக்கம்;
நானிலத்தில் அது, நம்வழக்கம்;
என்றும் எதிலும் இம்மண்ணில்
இன்னுயிர் மேலாய்ப் போற்றுகின்றோம்!

அதனால் தமிழனின் .அடையாளம்
அகிலம் முழுதும் நிலைத்திருக்க
உதவும் காரணி பொங்கல் என
உலகம் முழுவதும் போற்றுகின்றோம்!

உழவில் லாமல் உலகில்லை;
உலகின் முதல் தொழில் விவசாயம்;
உழவன் உலகின் எஜமானன்;
உண்மை: உழவன் தமிழ்க் குடிதான்!

அறுவடை முடிவில் நோன்பெடுத்து
ஆதவன் கருணையை உலகறிய
இறை நினைவோடு வணங்குவது
என்றும் தமிழர் பண்பாடு!

தைத் திருநாளை நம்முன்னோர்
தமிழரின் சிறந்த நோன்பாக
வைத்தனர்;அதுதான் தைப்பொங்கல்;
வாழ்த்திடுவோம் இதை நெஞ்சார!

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.1.2014

Friday, January 3, 2014

பரிதாபத்துக்குரிய மன்மோகன் சிங்


றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.
 
‘செத்தவன் கையில் வெத்திலையைக் கொடுத்தது போல்’என்ற ஒரு சொலவடை நம் நாட்டில் உண்டு.

‘அது எப்படி இருக்கும்?’ என்பதை இன்று (3.1.2014) பிரதமர் மன் மோகன்சிங்,
புது டில்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியைத் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் பார்த்தவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள்.

அபத்தமும் அருவெறுப்பும்  உண்மை என்பது கடுகளவேனும் இல்லாததுமான  பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின்  இந்தப் பேட்டி,  தலைக் குனிவுமிக்க காங்கிரஸ் பிரதமரின் பரிதாப நிலையையும் அவமானத்துக்குச் சற்றும் வெட்கப்படாத  சோனியா அவர்களின் தலையிலான காங்கிரஸின் சொரூபத்தையும்  உலகம் முழுவதும் இன்று ஒளி பரப்பி இருக்கின்றது.

நிருபர்கள் முன்னிலையில் பிரதமர் மன் மோகன் சிங் அவர்கள் பேட்டி என்ற பெயரில் திருவாய்மலர்ந்த  அபத்தங்களின் சாராம்சம் வருமாறு:

1.ராகுல் பிரதமராக இருப்பதற்கு முழுத் தகுதி
   படைத்திருக்கிறார்.

2. தான் மூன்றாவது முறையாக இருக்க விரும்பவில்லை.

3.எனது ஆட்சியில் சிறப்பான முடிவுகள் எடுக்கப் பட்டன;
  சோனியா தனது தலைமையில் சிறப்பான நிர்வாகம்
  நடப்பதற்கு திறமையான  ஆலோசனைகளை வழங்கினார்.

4.பிரதமர் பதவியில் முழு நிறைவோடு
  செயல்பட்டிருக்கிறேன்: யாரும் தனக்கு எந்த
  வகையிலும் நிர்ப்பந்தம் தரவில்லை.

5.பிரதமர் பதவிலிருந்து ராஜினாமா செய்யும்படி தன்னை
  யாரும் வற்புறுத்தவில்லை.

6.வரும்நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ஐக்கிய
  முன்னணியின் சார்பிலேயே பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

7.மோதி பிரதமர் ஆக முடியாது. ஒருவேளை மோதி
   பிரதமராகி  விட்டால் நாடு மிகப்பெரும் பேரழிவைச்
   சந்திக்கும்.

இந்த அபத்தங்களில் ஒன்று கூட யாதார்த்த நிலைக்குப்
பொருந்துவதாக  இல்லை, ராகுலை ஐக்கிய முன்னணியின்பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப் போகும்  அவலமொன்றைத்தவிர.

ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவும் ராகுலைப் புகழ்ந்து அவரை இப்போதே பிரதமராக அறிவிக்கச் செய்யும் தந்திரத்தையே முன் வைப்பதாகவும் தான் அவரது இந்தப்பேட்டி இருக்கிறது.

‘கடந்த ஆட்சி காலத் தோல்விகளுக்கும் ஊழல்களுக்கும் ஊழல் குற்றச் சாட்டுகளுக்கும் ராகுலுக்கும் எந்த விதத்திலும் தொடர்பே இல்லை’   என்பதைக் காட்டுவதற்காகவும் வரும் நாடாளுமன்றத்தேர்தலில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் மக்கள் முன் வாக்குக் கேட்கவும்; ராகுலை மக்கள் நலச் சிந்தனையாளர்போல் காட்டிக் கொள்ளவுமான உத்தியில் தன்னைப் பலி கடாவாக முன் நிறுத்திக் கொண்டுள்ளார்.

‘முழு நிறைவோடு பிரதமராக இருந்தவர், பிறகு ஏன் மூன்றாவது முறையாகப் பிரதமராக இருக்க விரும்பவில்லை?

நாடு இன்று எல்லாவகையிலும் பின்னோக்கிச் சென்று விட்டதும் ஊழல் மலிந்து போய், நாடே நாறி போய்க் கிடந்ததும்தான் சிறப்பான நிர்வாகமென்று கொஞ்சமும்வெட்கமின்றித் தனக்குத்தானே சான்றிதழ் கொடுத்துக் கொள்கிற  அவலத்தில் முகம் சுருண்டு போய்க் காட்சி அளிக்கின்றார்.

‘தனது ஆட்சியின் அவலங்களுக்கும் கேவலமான ஆட்சி நிர்வாகத்துக்கும் சோனியாவோ ராகுலோ காரணமில்லை’ என்று மக்கள் நம்ப வேண்டுமென்பதற்காக  ஆட்டுவிக்கப்படும் கூத்தாட்டுப்பொம்மைபோல் இப்போதோ தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்ளும்  கேவலத்தில், தான் அடைந்த பதவி சுகத்துக்கு விசுவாசம் காட்டிக் கொள்பவராகத்தான்  தயாராகிக் கொண்டிருக்கிறார்’என்பதை அவரதுபேட்டின் பின்புலம் நமக்கு உணர்த்துகின்றது..

உண்மையிலேயே செத்தவன் கையில் வெத்திலையைக் கொடுத்த நிலையாகத்தான்  அவரது பேட்டியும் அவரது முக பாவமும்  இருந்தது.

‘புன்னகைத்துக்கூடப்  பேட்டி அளிக்கும் நிலையில் அவர் இல்லை’     என்பதற்கும்   ‘முகம் இறுக்கமாக, மனச்சாட்சியே இல்லாமல்தான் பேட்டிகொடுக்கிறோம்’ என்ற  உணர்வு அவரைக் கொன்று சிதைத்துக் கொண்டிருக்கிறது’ என்பதற்கும் நாடே கவனித்துக்  கொண்டிருந்த அவரது அவரது  பரிதாபத்துக்குரிய பேட்டி  சாட்சி  கூறியது உண்மை; உண்மையைத் தவிர வேறில்லை.

பாவம்.
‘கஷ்டப்பட்டு பத்தாண்டுகளாகப் பாரம் சுமந்தவர், இனி,  தான் பாரம் சுமக்கப் போவதில்லை’ என்பதை இப்படியா, காட்டிக் கொள்ள வேண்டும்?


இவண்-
கிருஷ்ணன்பாலா
3.1.2014