Friday, November 14, 2014

தேசமே தேடுகின்றோம்!


இன்று சுதந்திர இந்தியாவின் முதல்    பிரதமாராக சுமார் 14 ஆண்டுகள் கோலோச்சி  மறைந்த பண்டித  நேருவின்  பிறந்த தினம். நேருவின் பெருமையை இன்றைய தலைமுறை உணர்ந்து கொள்ளவே  இக் கவிதை.
-----------------------------------------------------------------
பாரதம் என்னும் எந்தன்
பழம்பெரும் நாடே,உன்னைக்
கூரிய அறிவும்;நல்ல
கொள்கையும் கொண்டு நாளும் 
சீரிய முறையில் ஆண்டு
செகத்திலே தனிப்பேர் பெற்ற 
நேருவின் பெருமை தன்னை
நினைத்து நீ,பார்க்கின்றாயா? 
                                                                            
மோதிலால் செல்வக் கடலில்
முகிழ்த்தவன்;எனினும் வாழ்வைப்
பாதிநாள் சிறையில் ஏற்று
பாரத உரிமைக் காக
மோதினான், வெள்ளை யரோடு;
முடிவிலே வெற்றி சங்கை 
ஊதினான்;உனது வாழ்வின் 
உரிமைக்கே வேலி யானன்!

மண்ணிலே வெற்றுக் கோஷம்
மறுத்தவன்;வறுமை தன்னை
திண்மையோ டெதிர்த்து; நல்ல
திட்டங்கள் தீட்டி நித்தம்
உண்மையாய் உழைத்த சீலன்;
உள்ளத்தே அவன் பேர் தன்னை
எண்ணினால் அதுவே;உந்தன்
இந்தியப் பெருமை யாகும்!

அண்ணலாம் காந்தி நெஞ்சின்
அன்பினுக் குரிய சீடன்;
தொண்டருள் தொண்டர்; தேசத்
தொண்டிலே தலைமை சேரக்
கண்டவர்;கற்று நாளும்
கல்வியில் உயர்ந்து நின்ற
பண்டிதர்; பரம ரசிகர்;
பாலர்தம் இதய ரோஜா!

அன்னவன் ஆட்சி நாளில்
அரசியல் ஊழல் இல்லை;
தன்னலப் பேய்கள்;அன்று
தலையை நீட்டியதும் இல்லை
மன்னவன் மறைந்த பின்னே
மாண்புகள்;வீண்புகழ் ஆக
உன்னரும் மண்ணில்;எங்கும்
உளுத்தரே ஆள்கின் றாரே!

தவறெலாம் தத்துவ மாக்கும்
தலைவர்கள் தோன்றி;இன்று
சவக்குழி வெட்டி;அதிலுன்
ஜன நாயகத்தை மூடும்
அவநில கண்டு நாங்கள்
அழுகிறோம்; தாயே, எமக்கு
ஜவஹரை மீண்டும் மண்ணில்
ஜனிக்க வைப்பாயா,சொல்லு?

நாசமும் நலிவும் நீக்க
நாடுகள் தோறும் சென்று
பாசமும்நட்பும் கூட்டி
பஞ்ச சீலத்தைத் தந்து
ஆசிய ஜோதி என்று
ஆனஉன் மைந்தன் போலே
தேசமே, இன்னோர் மனித
தேவனைத் தேடு கின்றோம்!

-------கிருஷ்ணன் பாலா---------