Tuesday, November 27, 2012

நான் யார்?ஒரு நிஜமான கற்பனையின் நிழல்கள்
§ 

நான் யார்?

கற்பனையின் நிழலா?
நிழலின் கற்பனையா?
கனவுகளின் நிஜமா?
நிஜமான கனவா?

கற்பனையை
நிஜமென்று சொல்லும்
கனவுகளில்
எப்போதும் சஞ்சரிக்கின்ற

நான் யார்?

தூங்கிக் கொண்டிருக்கும்
ஒருவனா?
விழித்துக் கொண்டிருக்கும்
ஒருவனா?

இந்த உலகம்;
இதன் வாழ்க்கை....
என்பதெல்லாம்,
கனவுகளா? நனவுகளா?

கனவுகள் என்றால்,
கனவுகளில்
விழித்துக் கொண்டிருக்கும்
நான் யார்?

நனவுகள் என்றால்
நனவுகளில்
கனவு கண்டு கொண்டிருக்கும்
நான் யார்?

நீண்ட பெரும் கனவின்
ஓர் அங்கம்தான்
எனது விழிப்பா?

அந்த விழிப்பின்
அத்தியாயங்கள்
இரவும் பகலுமா?

இதில்
நான் தூங்கி எழுந்தேனா?
எழுந்தபின் தூங்குகிறேனா?

கனவுகள் மூலம்
இந்த உலகத்தைக் காண்கிறேனா?
இந்த உலகத்தின் மூலம்
கனவுகள் காண்கிறேனா?

நான் தூங்கினால்-
என்னோடு
இந்த உலகமும் தூங்கி விடுகிறது;

நான் எழுந்தால்-
என்னோடு
இந்த உலகமும் எழுகிறது!

இதோ:
என் முன்-
ஜீவராசிகள் எனும் பிம்பங்கள்.....

அவற்றின் இடையே-
நிறபேதங்கள்; இனபேதங்கள்;
அசைவன;அசையாதிருப்பன;
தெரிவன;தெரியாதிருப்பன…….

இவை எல்லாம்
எதனுடைய அங்கங்கள்?

என்னுள்ளிருந்தே
இவையனைத்தும் தோன்றுகின்றன!

எனது விழிகளால்
பார்க்கிறேன்;
எனது செவிகளால்
கேட்கிறேன்;
நானே தேடுகிறேன்;
நானே உண்கிறேன்!

அழுவதும் சிரிப்பதும்
ஆனந்திப்பதும் துயர்ப்படுவதும்
எண்ணுவதும் எண்ணாதிருப்பதும்
எல்லாம் நானே….

நான்எங்கிருந்து வந்தேன்?’
என்பது
எனக்குத் தெரியாது…….

தாயின் கருவறை
என்று சொன்னால்….
அந்தத் தாயின் கருவறை
எங்கிருந்து வந்தது?

கண்ணுக்குத் தெரிந்திராத
காற்றை
ரப்பர்ப் பை ஒன்றில்
ஊதி அடைத்ததைப் போல்
உருவமாய் வந்த
நான்எனும் மூலம் எது?

நான்
என்பதன் நோக்கம் என்ன?

நான்விரும்பாமல்
வந்த-
இந்த வாழ்க்கை…..

இப்போது-
ஏன்
என்னை விலகுகிறது?
அல்லது விலக்குகிறது?

என்னைச் சுற்றியே
இந்த உலகம் இயங்குகிறது

நான்……
அதன் இயக்கத்தின் அச்சு:

காலச்சக்கரத்தின்
சுழற்சியில்
அதன் அச்சு முறிந்தபின்னும்
சுழற்சி நிற்பதில்லை……

ஆரம்பம் எது?
என்பது தெரியாமல்
முடிவும் அறிவிக்கப்படாமல்
முடிந்து விடுகிற
எனது இயக்கத்தில்
கதா பாத்திரமாகிற
நான்யார்?

ஒருநாள்-
இந்த உலகத்தை நானும்
இந்த உலகம் என்னையும்
கை விட்டு விடுவதற்காக….

இன்று-
இந்த உலகமும் நானும்
கை கோர்த்துக் கொண்டு
கையொப்பம் இடுகிற
காட்சியின்
சாட்சிகளாய் நீங்கள்!....

இந்த அரங்கேற்றத்தின்
கதாநாயகனான
நான்யார்?

ஆம்!
புறப்பட்ட இடம்
புரியாமல் புறப்பட்டும்.....

போகும் இடம்
தெரியாமல்
போய்க் கொண்டும் இருக்கின்ற,
ஓர்-
வழிப் போக்கன்;


பிறருக்கு-
வழி காட்டிக் கொண்டே
வழி தெரியாமல்
நின்று தவிக்கும் வழிகாட்டி;

குழப்பங்களை
ஒழிப்பதற்காகவே,
குழம்பிக் கொண்டிருக்கின்ற
கொள்கைவாதி;

ஓய்வு பெறுவதற்காக,
ஓய்வின்றி
உழைத்துக் கொண்டிருக்கின்ற
உழைப்பாளி;

குனிந்திருந்தவர்களை
நிமிரச் செய்து
தலை குனிந்து போன
உபதேசி;

ஆசைகளை
ஒழிக்க ஆசைப்படும் ஞானி;

அரண்மனை இல்லாத அரசன்;


பாமரமாய்-
பட்டொளி வீசிக்கொண்டிருக்கும்  ‘பாமரம்’;

நிரந்தரமற்ற நிறந்தரம்;
பேசத் தெரிந்த ஊமை;
விலாசமுள்ள அநாதை;
பொய்யான மெய்யன்;
புழுங்கிக் கொண்டிருக்கின்ற விசிறி;

இருந்தும்,
இல்லைஎன்று பொருளுரைக்கும்
அருஞ்சொல் பதம்;

இருட்டைக் கவசமாக்கி
எரிந்து கொண்டிருக்கும்
அகல் விளக்கு!

இரவின் விடியலுக்கும்;
விடியலின் முடிவுக்கும்
விளக்கம் தரும்
முற்றுப் புள்ளி.

-கிருஷ்ணன் பாலா 

Saturday, November 24, 2012

ஞானமென்னும் கரையினிலே!.....
ஏகம் என்ற சமுத்திரத்தில்
எழுந்து டும் அலைஎலாம்
வேகமாகக்  கரையை மோதி
விழுந்தெழுந்து திரும் பிடும்!

அலைத்துளிகள் கோடிகோடி
அங்கும் இங்குமாய்,அவை
அலைதுளிர்த்த கிளைகள்போல
ஆர்ப்பரித்து  மறைந் திடும்!

கவலையின்றி மீண்டும் அலை
கரையைத் தொட்டுமோத;நீர்த்
திவலைகளின் ஜனன மரணம்
தினமுமங்கு நிகழ்ந் திடும்!

ஓய்வில்லாத கடல் அலைகள்
உணர்த்து கின்ற தத்துவம்
ஆய்ந் துணர்ந்தால்;தெரிகிறது:
அண்ட பேரண் டமாய்!

பிரம்மம் அது;கடலைப்போல
பேருருவாய்த் தெரிய;அதில்
கரும பூமி அலையைப் போல
கருத்தில் வந்து படிந்திடும்!

ஜீவரெல்லாம் நீர்த் துளிகள்;
ஜீவிப்பது இல்லை;அவர்
பாவபுண் ணியங்கள் யாவும்
படியும் கரை ஈரத்தில்!

பரப்பிரும்மக் கடலில் தோன்றி
பரவி எழும் அலைகள்;நாம்
வரவு செலவு காட்டுதற்கு
வந்து போகும் துளிகளே!

ஞானமென்னும் கரை ஒதுங்கி
நானும் நின்று பார்க்கிறேன்;
ஊனமில்லா உண்மை யைத்தான்
உவமையாகச் சொல் கிறேன்!

பார்வையிலே தெரியும் இந்தப்
பரப்ரும்மக் கடலை;நாம்
கூர்மை யாகப் பார்க்கும்போது
குறைகள் ஏதும் இல்லையே!

மேடுபள்ளம் யாவுமில்லை
மேவி நிற்கும் பூமி; நேர்க்
கோடுபோல சமநிலையில்
குறைகளின்றித் தோன் றிடும்!

வானத்திலே பறந்து செல்லும்
பறவை போலப் பார்த்திடும்
ஞானத்திலேதான் அதனை
நானும் பார்த்துக் கொள்கிறேன்!

ஞானமென்னும் கரையின் ஓரம்
நான் இருக்கும்பொழு தெலாம்
ஊனமில்லை;என்றன் நெஞ்சில்
உலகம் மறைந்து போவதால்.

பாசம்;பகை;உறவு,நட்பு
பாரமாக இருப்பது;அலை
நேசத்திலே நிலைத்து நிற்கும்
நேர அளவு மட்டும்தான்!

உலக வாழ்வு அலையைப் போன்று;
உறவு,பிரிவு யாவும்;நாம்
பலரும் வாழ்ந்து பிரிவதுபோல்
பார்த்துப் பார்த்து உணர்கிறேன்!

நொடிப்பொழுதில் தோன்றியிங்கு
நொடியில் மறைகிறோம்;விதி
படைத்தவாறு  பிரம்மத்தோடு
பரவி,அதில்  நிறைகிறோம்!

நீயும் நானும் நீர்த்துளிகள்
நேச உறவுகாள்நாம்
போயும்போயும் மறைவதிலா
புழுங்கிக் கொண்டு சாவது?


இவண்-
கிருஷ்ணன்பாலா
24.11.2012 / 9.00 am

Friday, November 23, 2012

செக்குமாடுகள்


ண்பர்களே,
முகநூலில் கருத்துப் பதிவு இடுகின்றவர்களும் அந்தக் கருத்துக்களுக்குப்
பதிலூட்டம் இடுபவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது; தெரிந்து கொண்டால்மட்டும் போதாது கடைப்பிடிக்க வேண்டியதும் கூட.

இது முகநூலுக்கு மட்டுமின்றி முகநூலுக்கு வெளியிலும் 
பதிப்பிக்கப்படுகின்ற நூல்களுக்கும் பொருந்தும்.

நீங்கள் எழுதுவதும் பதிவிடுவதும் உங்கள் சொந்தக் கருத்து எனில் 
அதை எவ்வித மேற்கோள் குறியீடுகளும் இன்றிப் பதிக்கலாம்.

ஆனால்-
பிறர் சொன்ன கருத்துக்களை அப்படியே ‘காப்பி’ செய்து  தங்கள் பக்கங்களில் போட்டுத் தங்கள் அறிவுச் சிந்தனைபோல் பலரும் போட அதைஆகாஓகோஎன்று ஒரு பெரிய கூட்டம் துதிபாடிப் போற்றுவதும் புகழ்வதும் அதிகம் காண்கிறேன்.

உண்மையில் அந்தக் கருத்தைச் சொன்னவரின் பதிவில் ஒருசிலரே Likeம் commentsகளும் கொடுத்திருப்பதைப் பார்க்கும்போது  நம் சினம் பன்மடங்கு 
பரவ, அவர்களைக் காறித் துப்புகிறது மனம்.

கருத்துச் சொன்னவனை விட அதைத் திருடி, தனது கருத்துப்போல் காட்டிக் கொள்பவனுக்கு வரவேற்பும் மரியாதையும் அதிகம்.

பிறர் கருத்தை வெட்கமில்லாமல் கையாள்வதில்தான் தான் ஒரு பெரிய 
இலக்கியவாதி ஆக முடியும் என்ற துணிச்சல் நமது எழுத்தாளர்கள் 
பலருக்கும் வந்து, அது வளர்ந்து கொண்டிருக்கிறதுசுயஅறிவுக்குப் பதிலாக
.
இன்னும் சொல்லப்போனால்,
இங்கு கருத்துத் திருடர்களின் கூட்டத்தை விட, அதை ஆதரித்து ஆரவாரம் செய்யும்  அரைகுறைச் சில்லுவண்டுகளின் கூட்டம் மிகுதிதான்.

அரைக்கால்ட்ரவுஸர்பையன்களின் அரைவட்டத்துக்குள்ளேயே முக்கால் வட்டம் அடித்துக் கொண்டு தங்களின் மெய்சிலிர்ப்பைத் தாங்களே சொறிந்து கொள்ளும் இந்த அரைவேக்காட்டு எழுத்தாளர்களின் திருட்டுக் குணத்தை நாம் திருத்த முடியாது.

ஏனெனில்,
அவர்கள் பிச்சையிட வருபவனிடம்  கையேந்தாத ‘மானஸ்தர்களாகக் 
காட்டிக் கொண்டு ‘திருடித் தின்பதையே’ வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள்.

திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ‘என்று பட்டுக்கோட்டையார் பாடிய பாட்டின் பொருள் இதுதான்.

அடுத்து-
பிறர் பதிவிட்டுள்ள கருத்துக்களில் உள்ள நல்ல விஷயத்தைப் பாராட்டவோ அதை எடுத்து ஆளவோ விரும்பும்  அறிவுக் கூர்மையுடையோர்.

பிறர் கூறிய அந்த நல்ல விஷயங்களைச் சுட்டிக் காட்டி அதைத் தங்கள் கருத்துடன் இணைத்து எழுதும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு.

அப்படி,பிறர் கருத்துக்களைத்  தங்கள் கருத்துக்களோடு  இணைக்கும்போது
குறைந்த பட்சம் பிறர் சொன்ன கருத்து  அது’ என்பதை எவ்வகையிலேனும் 
சுட்டி எழுதுவதே எழுதுபவனையும் பெருமைப் படுத்தும்ஒரிஜினலாக எழுதியவனையும் பெருமைப் படுத்தும்ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

இதுதான்  பண்பட்ட எழுத்தாளர்களின்/சிந்தனையாளர்களின் 
உயர் தகுதி;இலக்கிய மரபு.

அவ்வாறு செய்யாமல் எவ்வித  மேற்கோள் குறிப்பும் இன்றித் தங்கள்
பதிப்புக்களில்  தாங்கள் எழுதும் சொந்தக் கருத்துக்கள்போல் காட்டிக்
கொள்வார்களனால், அது குற்றம்; அதாவது அது, ‘இலக்கியத்திருட்டு’ என்ற பழிக்கும் கேவலத்துக்கும் ஆளாகும் குற்றம்.

பிறர் கருத்தைக் கோடிட்டுக் காட்டினால் தங்கள் சிந்தனைக்கு மதிப்புக் குறைந்து விடும்எனக் கருதி, பிறர் சொன்ன அர்த்தமுள்ள கருத்துக்களை தங்கள் கருத்தோடு கலந்து தங்களுடைய ஒரிஜினல் கருத்துப்போல் சொல்லி கரவொலி வாங்குவது படிப்பவனை முட்டாளாகவே வைக்க விரும்புகிறவர்கள் அவர்கள் என்பதும், அவர்கள், ‘இலக்கியத் திருட்டுஎன்னும் கயமையோடு கள்ள உறவு கொண்டிருப்பவர்கள் என்பதும் உண்மையாகிறது.
இலக்கியத் திருட்டுபடிக்கத் தெரிந்தவர்கள் செய்யக் கூடாத பாதகம். அதைச் செய்வார்களானால் அது:

பக்கத்து வீட்டுக்காரன் பத்து பிள்ளைகள் பெற்று வாழ்கிறான்; ‘தனக்கென்று ஒரு பிள்ளை கூட இல்லையே’ என்று ஏங்குகிறவன் 
தன் பெண்டாட்டியைப் பக்கத்து வீட்டுக்காரனிடம் படுக்கவைத்துப்
பிள்ளைத் தாச்சி ஆக்கிப் பிள்ளை பெற்றுப் பெருமை கொள்கின்ற 
ஈனத்தனத்துக்கும் பிறர் எழுத்தைத் திருடி ‘இலக்கியப் பிள்ளைபெற்றுக் கொள்கின்ற ‘ஞானத் தனத்துக்கும்நேர். அவற்றில் வித்தியாசம் இருப்பதாக நான் கருதவில்லை.
  

சில சமயம்-
தங்கள் அனுபவத்தின் நாட்டத்தாலும் அறிவுத் தீட்டத்தாலும்  சிலர் எழுதும் கருத்துக்கள் ஏற்கெனவே யாரோ அல்லது மேதைகள் சொன்ன கருத்தின் அடிப்படையிலோ/அதையோ பிரதிபலிப்பதாகவோ  இருக்கலாம்;அது அவருடைய தவறாகாது.

'Great men think alike'  என்ற சொல்லுக்குப் பொருளான கருத்தாய் அது இருப்பது இயற்கையான விதிவிலக்கு.

பொதுவாக-
எல்லாப் படைப்புகளுமே நாம் கற்றுக் கொண்டிருக்கும் பாடங்களின் பிரதிபலிப்புத்தான்.

எந்த எழுத்தாளரும் சிந்தனையாளரும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்லர்.எந்த எழுத்துக்களும் முன்பு எங்கும் எவராலும் சொல்லப் படாத புத்தம் புதியவையும் அல்ல.

அவை யாவும் எங்கோ,எப்பொழுதோ நம் முன்னோடிகளும் முன் இலக்கியங்களும் மொழிந்திருக்கும் கருத்துக்களின் சாரமாகவேதான் இருக்க முடியும்.

அவைஇலக்கியத் திருட்டுஎன்பதாகாது;அவற்றைஇலக்கிய விருந்துஎன்றே ஏற்க வேண்டும்.

சர்க்கரை ஒன்றுதான்;அதைக் கொண்டு விதம் விதமான பதார்த்தங்களைப் பலரும் பலவிதத்தில் செய்வதில்லையா?


இலக்கிய விருந்துகளைச் சுவைத்து மகிழ்வதில் நாம் எப்பொதும்
பந்திக்கு முந்த வேண்டும். அது அறிவுத்தேடலின் அடையாளம்;தமிழனின்
தனிச் செறுக்கு.

அதேபோல் ஒருவருடைய கருத்துக்களுக்கோ.படைப்புக்களுக்கோ
நீங்கள் உங்கள் சொந்தக் கருத்தையே சொல்லும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் சிந்தனையும் சொல் வளமும் பலமாக விருத்தி அடையும்.


ஒருவர் கருத்துச் சொல்லும்போது அதற்குப் பதிலூட்டம் இடுகிறவர்,தனது
பார்வையை அல்லது தனது கருத்தைச் சொல்லும்பொருட்டு, முதலில் கருத்துச் சொன்னவரின் பதிப்பிலிருந்து சில பகுதிகளையோ அல்லது முழுமையாகவோ காப்பிசெய்து,வேறு எந்த இடுகுறிகளும் இல்லாமல் மொட்டையாக எடுத்துப் போடக் கூடாது. அதற்கென்றிருக்கிற  இடு குறிகளை உரியவாறு  இட்டு மேற்கோள்  காட்டுவதில்தான்  ‘சொன்னவனின் கருத்தோடு ஒத்துப் போகிற கருத்தூட்டம்’ அது என்று படிப்பவர் சிந்திப்பர்.

இல்லை எனில் ஒரிஜினலாகச் சொன்னவனின் கருத்துக்குக் கிடைக்கும் Likeகளை விட அதையே எடுத்துப்போடும் பதிவூட்டத்துக்கு அதிகப்படியான Likeகளை நம் முகநூல் அறிஞர்கள் போட்டு விடுவார்கள்.

அவர்களுக்குத்தான் ஒரிஜினல் பதிவுகளைப் பார்க்கும் வழக்கம் இல்லையே?

செக்கு எதுசிவலிங்கம் எது?’ என்பதெல்லாம் நக்குகிற மாடுகளுக்குத் தெரியாது,நண்பர்களே.

இவண்-
கிருஷ்ணன்பாலா
23.11.2012