Thursday, January 26, 2012

வாழ்க, இந்தியக் குடியரசு!


நண்பர்களே.
இந்தச் சிறுவன் இப்படிச் சொல்கிறான்:

இந்திய தேசியத்தை
விற்றுப் பிழைக்கும்
சீமான்கள் பட்டியல்
உலகத் தர வரிசையில்
முதலிடம் பெற்று வருதுன்னு
சொல்றாங்க...

இதெல்லாம் எனக்குத் தெரியாது...

அதுல...
நீங்கள் எல்லாம்
ரொம்ப ஆர்வத்தோட
சிந்தனை செஞ்சு வர்றது
மட்டும் தெரியும்

ஆனா...
நாங்க இந்த நாளில்தான்
நம்ம தேசியக் கொடியை
விற்றுப் பிழைக்கிறோம்!

எங்க பக்கம்
கடைக் கண் பார்வையைக்
காட்டறவங்க
எத்தனை பேர்?

இன்னிக்குப் பார்க்கப் போறேன்!”
26.1.2012

Tuesday, January 17, 2012

மறப்போமா?


எம்.ஜி.ஆர்.  யார்?இந்த மூன்று
எழுத்துக்கள்
தமிழனின்
தலை எழுத்தாக இருந்தது
என்னவோ உண்மைதான்!

ஆனால்-

அதுதான்
அவனுடைய
தலையாய எழுத்து’

என்பதை
ஏற்க மறுக்கின்றேன்.

  

லட்சக் கணக்கான
ரசிகர்களின்
லட்சிய புருஷனாய்
வாழ்ந்து மறைந்த-

இந்த
லட்சணம் மிகுந்த
மனிதரிடம்

லயித்த விஷயங்கள்
ஆயிரம் இருந்தன

மறுக்கவில்லை;

இவர்,
உயிர் பிழைக்க வேண்டி,

அன்று

உருகிக் கவி எழுதிய
மனம்-

இன்று
உணர்ந்து எழுதும்
உணர்வையும்
மறைக்கவில்லை!

’எம்.ஜி.ஆர்.’
என்ற
மூன்று எழுத்தினால்-

தமிழனின்
தலை எழுத்தே மாறிப்போனது’

என்பதைச்
சரித்திரம் காட்டுகின்றது.

அதை
எப்படி மறுக்க முடியும்?

இந்த-

மூன்று எழுத்துக்களின் மகிமையால்

தமிழன்
’அறிவுஎன்ற
மூன்று எழுத்தை இழந்தான்;

’கடமை’ என்ற
மூன்று  மறந்தான்;

’பண்புஎன்ற
மூன்று எழுத்தைத்துறந்தான்;

’வறுமை’ என்ற
மூன்று எழுத்தில்  உழன்றான்;

’சினிமா என்ற
மூன்று எழுத்திலேயே சரிந்தான்!

எம்.ஜி.ஆர்.என்ற மூன்று எழுத்து
முடிவெடுத்திருந்தால்

தமிழனின் -
குடி’யைக்கெடுத்த ’குடி’யை

அன்று-

தடுத்திருக்க முடியும்;
அவனுக்கு
உழைப்பின் உயர்வைக்
கொடுத்திருக்கமுடியும்!

அந்தோ-

குடியைப் புழக்கத்தில் விட்டு
அதைத்
தமிழனுக்கு வழக்கப் படுத்திய

இவர் வல்லமையை
இந்தத் தமிழன்

இன்றும்

பார்களில் நின்று கொண்டு
பார் புகழப் பேசுகிறானே!

இவரைப் புகழ்வதற்கு
ஆயிரம் காரணங்கள்….

மறக்காமல் இருப்பதற்கு
லட்சக் கணக்கில் ரசிகர்கள்

ஆனால்-

ஒரு பானைச் சோற்றில்
ஒரு துளி விஷம் இட்ட

இவரை
எப்படி மறப்பது?

மறைக்கவே முடியவில்லை.

ஆம்!

எம் தமிழருக்கு

’மீளாக்குடி’யுரிமை
பெற்றுத் தந்த

இவரை,

இன்றும்
மறைக்க முடியவில்லை!


இவண்-
குடி கண்டு கொதிப்படைந்த தமிழன்
17.1.2012


Monday, January 16, 2012

நவில்தொறும் நூல் நயம் போலும்….நண்பர்களே,
வணக்கம்.
இந்த முகநூலை நட்புக்குரிய வலைத்தளம் என்று புரிந்து கொண்டு எழுதி வரும் யாவரும்நட்புஎனில் யாது? என்பதை அடிப்படையில் புரிந்து கொண்டிருக்க வேண்டியது அவசியம்.

தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் நீங்கள் முதலிடம் கொடுப்பவர் என்றால் இந்தக் குறிக்கோளில் இம்மி அளவும் பிசாகதிருப்பவராய் உறுதி செய்து கொள்வது மிக மிக அவசியம்.

நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு

என வள்ளுவப் பெருந்தகை எடுத்துச் சொன்னபொருட்பாலின்’ ‘நட்புஎனும் அதிகாரத்தில் உள்ள குறள் நெறியின் இலக்கணப் பண்புடையாளாராக நீங்கள் இருக்கும்பொழுது, உங்களுடைய தொடர்பானது நயம் மிகுந்த நல்ல நூல்களைப் படித்து ஒருவன் பெறுகின்ற அறிவுப் பயன் போல், உங்களுடன் பழகுகின்ற நண்பர்களுக்குப் பண்பும் பயனும் விளையத் தக்க வகையிலும் இந்தத் தமிழ் சமுதாயத்துக்கு உரமூட்டும் வகையிலும் உங்கள் எண்ணங்களும் அவற்றின் வெளிப்பாடுகளாக  எழுத்துக்களும் இயல்பாகவே அமையும் என்பது திண்ணம்.

இன்று விதைப்பதுதான் நாளை முளைக்கும்;நாளை முளைப்பதுதான் உங்கள் எதிர்காலச் சந்ததிக்கு நீங்கள் தரப் போகும் சொத்து
இங்கேநீங்கள் எழுதுவது வெறும் பொழுது போக்குக்குத்தான்என்றில்லாமல் பண்பு சார்ந்த படைப்புக்களைத் தருவதற்கு விரும்புங்கள்.

சிலர் இங்கே எழுதிவருவதைப் பார்க்கும் பொழுது இந்த எண்ணத்தை இந்த முகநூல் வலைத்தள நண்பர்களிடையே பரப்புவது தேவை ஆகிறது.

இணையதளத்தைப் பயன் படுத்தத் தெரிந்தவர்களில் சிலர்  இதனைப் பெரிய அளவில் மாசுபடுத்தி வருகிறார்கள். கருத்துச் சுதந்திரம்;எழுத்துச் சுதந்திரம் என்கிற உரிமையில் ஆபாசத்தையும் அசிங்கத்தையும்  கொஞ்சமும் கூச்சமின்றியும் வெட்கமின்றியும் இங்கே எழுத்துக்களாகக் கடை விரிக்கின்றார்கள். அதிலும் சிலர்பெண்என்ற போர்வையில் காட்டும் கடைகெட்ட கழிசடை எழுத்துக்கள்,காணவும்  எண்ணிப் பார்த்தால் நாணவுமான -  சகிக்க முடியா வக்கிரங்களை வடித்துக் காட்டுகின்றன.

இவர்களின் ஆபாச எழுத்துக்கள் இங்கே மலிந்து வருவதையும் அதை ரசித்து ஒரு கூட்டம் மெலிந்து உருகுவதையும் காணும்போது.’நாம் தமிழர்களா? நமது தமிழை இப்படியெல்லாம் கீழ்த்தரமான எண்ணங்களைக் கவிதை என்றும் கட்டுரை என்றும் எழுதும் துணிவும் தூண்டலும் எங்கிருந்து இவர்களுக்கு வந்தது?’ என்று சினம் கொள்ளத் தூண்டுகின்றது.

குறிப்பாக, சில பெண்கள் வெட்கமும் விவேகமும் இன்றி விபச்சாரத்தனமாக  எழுதுகின்றனர். இவர்கள் உண்மையிலேயே பெண்கள்தானா?  இவர்களுக்குப் பெற்றவர்களும் கற்றவர்களும் உற்றவர்களாய் இல்லையா?  இவர்களின் உடன் பிறந்தாரும் இவர்களின்  பிள்ளைகளும் இந்த எழுத்துக்களைப் படித்து ரசிக்கின்றவர்களா?  என்றெல்லாம்கூட நமக்கு எண்ணம் தோன்றி நம்மைத் தலை குனியவும் வைக்கின்றது.

இவர்கள்,மிக மிகக் கீழ்த்தரமாக எழுதுவதை ஆராதிக்கவும் ரசிக்கவும் சிலாகித்துப் புகழவும் என்று ஒரு சிறு மதியாளர் கூட்டமும் இங்கே உருவாகிக் கொண்டிருக்கிறது. இத்தகைய போக்கினை நாம் கண்டும் காணாதவர்களாய் இருப்பது நமது எதிர் காலச் சந்ததியினரை ஆரோக்கியமற்ற விஷயங்களின் அடிமைகளாக ஆக்கவே ஊக்கப்படுத்துவதாகி விடும். உங்களைவிட உங்கள் பிள்ளைகள் இந்த கணினிகளின் கைப்பிள்ளைகளாகி,உங்களை அனாதைகளாக விட்டு விடுகின்ற அவலம் ஏற்பட்டு விடும்.

தமிழினத்தின் மாண்பை எல்லாம் வெட்டி சாய்த்து, விறகாக்கி,எரிக்கத் துடிக்கும் இந்தக் கோடரிக் காம்புகள், தங்கள் தரங்கெட்ட எழுத்துக்களுக்குக் கவிதை என்றுவேறு தம்பட்டம் அடித்துக் கொண்டுஅந்தக் கண்ணராவி எழுத்துக்களை, பிற படைப்பாளர்களுக்கும் இணைப்புக்களாக அனுப்பி வருகிறார்கள். எனக்கு வந்த அந்த அசிங்கத்தை இங்கு எடுத்துக் காட்டாது, எச்சரித்து எழுத வேண்டியது எனது கடமை.

இப்படியெல்லாம் எழுதுவதில் தவறென்ன?’ என்று எனது நண்பர்கள் சிலர்கூட என்னிடம் வாதித்ததுண்டு.

உள்ளத்தில் உள்ளதை- அது கொச்சைத் தனமான விஷயங்கள் என்றாலும்கூட அதை அப்படியே எடுத்துச் சொல்வதுதான் எழுத்துச் சுதந்திரம்என்ற எண்ணம்,வலைத்தள வசதிகளால் புது எழுத்தாளர்களாகிக் கொண்டிருக்கும் சில புதுப் பணக்காரர்களுக்கும் வந்திருக்கிறது’ என்பது இதன் மூலம் உறுதியாகி இருக்கிறது.

எதையும் எழுதலாம்;எண்ணப்படி வாழலாம்’  என்பதும் எதிரெதில் பழகிக் கொள்ளாமலேயே இணையதளத்தின் மூலம் இணையற்ற நண்பர்களைப் பெற்றுள்ளோம் என்பதும் இன்றைய பிஞ்சுகளுக்கு மட்டுமல்ல, வேலை இன்றி வெட்டிப்பொழுது கழிக்கும் வயது மூத்தவர்களுக்கும்கூட பெரும் கனவாகி விட்டதால் இவர்கள் வீண் கற்பனை வலையில் வீழ்ந்து வெந்து கொண்டிருக்கிறார்களோ? என்ற ஐயம் நமக்கு எழுந்துள்ளது.

கணவனிடமோ மனைவியிடமோ அன்பும் நட்பும் காட்டாது,பெற்ற பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தாது, வயதான பெற்றொர்களின் வாட்டத்தில் நாட்டம் செலுத்தாது.நாம் எங்கே பயணப் பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதில் கவனம் செலுத்தாது கணினியின் நட்பில் கவனம் செலுத்தி  புத்தியும் செயலும் கறை பிடித்து போய் விடுகின்றவாறு அவர்களை வசீகரப்படுத்தி வஞ்சிக்கக்கூடிய SLOW POISION என்னும் ஆபாசமான அசிங்கங்கள் இங்கே இலவசமாகவே அரங்கேற்றப் படுவதை எச்சரிப்பது, பண்புடையாளரின் தொடர்பினால்தான் இயலும்.

நண்பர்களே,
நாம் நமது பண்புகளில் மாறாதிருப்பதும் பண்பற்றவர்களின் நட்பை நாடாதிருப்பதும் அறிவுடையோருக்கு அழகு. அதைவிட நமது பண்புகளுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை,பதிவுகளை,அது  ‘எண்ணச் சுதந்திரம் என்ற உரிமையில் எழுதப் பட்டாலும் கண்டிப்பதும்,காறி உமிழத் துணிவதும்தான்  நாம் தமிழுக்குக் காட்டும் மரியாதை.

இதை உணர்ந்து,பிறருக்கு உணர்த்தி எழுதுங்கள்.

உங்களின் இன்றைய எழுத்துக்கள்தான் நாளை, உங்களுக்கு அணிவிக்கப்படும் மாலையில் கோர்க்கப்படும் மலர்ச் சரங்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

எனவே,உங்கள் எண்ணம் என்னும் தோட்டத்தின் மண்ணை வளம் உள்ளதாக்கி, அதில், சத்தான வித்துக்களையே விதையுங்கள், நண்பர்களே.

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
16.1.2012

Sunday, January 15, 2012

பொங்குக பொங்கல்!
‘எல்லோரும் எல்லாமும் பெறுதல்’ என்ற
இலக்கணத்தை எடுத்துரைத்து;இந்த மண்ணில்
எல்லார்க்கும் உயிர்வாழ இறைவன் தந்த
ஈகைக்கு நன்றி சொலும் திருநாள் என்று
முன்னோர்கள் கொண்டாடி மகிழ்ந்த நாளாய்
முன்னேர்ப் பிடித்து,இந்தத் தரணி தன்னில்
தன்னேர் இல்லாத தமிழர் பண்பின்
தலைசிறந்த பண்டிகையாய்க் கண்டோம் நாமே!


மஞ்சளொடு வாழை,நெல்,கரும்பு என்று
மண்பானைப் பொங்கலிட்டு,உழவைப் போற்றி,
வஞ்சியரின் நெஞ்சத்தில் மஞ்சம் கொள்ள
வளைய வரும் வாலிபர்தம்வீரம் காட்ட
காளைகளை அடக்குகின்ற காளைகளாய்க்
காணுமொரு பொங்கலெனப் போற்றி,இந்த
நாளைநம் தலைமுறைகள்தோறும் கண்டு
நலமார்ந்த பண்டிகையாய்க் கொண்டோ மன்றோ?

எப்பெரிய பண்டிகையும் பொங்கல் முன்பு
எதிர் நிற்க முடியாது;உலகில் மூத்த
எப்பெரிய இனத்தாரும் தமிழர்க் கீடு
இல்லை;அதை உணர்வீர்,என் சுற்றத்தீரே!
எங்கிருந்த போதும்;இதை மறவாதீர்கள்;
எல்லோர்க்கும் எடுத்திதையே ஓதி நின்று
சங்கம்வளர்த்த தமிழ்ப் பண்பை உங்கள்
சந்ததியர் அறிந்துணரப் பொங்குவீரே!

வாழ்த்துக்களுடன்,
கிருஷ்ணன்பாலா
15.1.2012

Saturday, January 14, 2012

கவி‘தை’ வாழ்த்து!

புதியதை,இனியதைத் தருவ ‘தை’
பூமியில் யாவரும் பெறுவதை
எதிர்வரும் நாள்முதல் காண்பதை
இறையதைவணங்கியே வாழ்த்திதை
‘தைஇதன் வருகையில்வரைகிறேன்;
தமிழரின் தனிப் பெரும் நாளிதை
தரணியில் போற்றுவோம் நண்பரே,
அமிழ்தினும் இனியநம் நட்பிலே
அனைவரும் மகிழ்வ ‘தை’ விரும்புவோம்!

நட்புடன்
கிருஷ்ணன்பாலா
14.1.2011

Wednesday, January 4, 2012

எது சொர்க்க வாசல்?அறிவார்ந்த நண்பர்களே!

கூரை ஏறி,கோழி பிடிக்க முடியாதவன்
வானம் ஏறி வைகுந்தம் போனானாம்
என்ற சொலவடை ஒன்று தமிழில் சொல்லப் படும்.

இது எதற்காக?

இளமையை பருவக் கோளாற்றில் ஆழ்த்தி, கேடு கெட்ட நடத்தைகளில் நீந்துபவன் துன்பம் எனும் கரையைத்தான் அடைய முடியும்.

மனிதப் பிறவியே மற்றெந்த படைப்புக்களையும்விட மேலானது;உயர்ந்ததுஎன்பதை உணர்ந்து,வளர்கின்றவனே பிறவிப் பயன் என்னும் கரையை அடைகின்றான்.

நமக்குக் கிடைத்துள்ள உயர் தகுதியான நிலையேநாம் மனிதர்களாகப் படைக்கப் பட்டுள்ளோம்என்பதுதான். மிருகங்களுக்கோ,பறவை முதலான பிற உயிரினங்களுக்கோ.” நல்லது எது?கெட்டது  எது? ”என்று சிந்தித்துச் செயல் படுகின்ற அறிவை இறைவன் தரவில்லை; எனவே அவை அனைத்தின் செயல்பாடுகளுக்கும் வினைப் பயனுக்கும் இறைவனேதான் பொறுப்பேற்றுக் கொள்கிறான்.இறைவன் வகுத்த வினைப்படி செயல்பட்டு முடிவில் அவை முக்தி பெறுகின்றன.

மனிதனுக்கு மட்டும் அவனவன் செயல்களுக்கு அவனவன் அறிவையே காரணமாக்கி வைத்துள்ளான். அந்த அறிவினால் அவன் தன்வினையையும் வினையின் முடிவான வினைப் பயனையும் யாதெனத் தெரிந்து கொள்ளும் வல்லமை இருந்தும் அதைப் பயன் படுத்தித் தன்னை நெறி படுத்திக் கொள்ளாது வளர்ந்து,வாழ்ந்து பின் எவ்விதம் வாழ்வின் அந்திமத்தில் நிம்மதி தேட முடியும்? வாழ்வின் நிம்மதியே சொர்க்கம்.

இதை மானுடனுக்கு உணர்த்தவே இந்தவைகுந்த வாசல் திறப்புஎன்கிற இறை நோன்பை நமக்கு நம் முன்னோர் உருவாக்கி,உணர்த்திச் சென்றுள்ளனர்.

மான சரோவர்என்ற கயிலை யாத்திரைக்குச் செல்லும் நோக்கமும்,’புனித வெள்ளிகொண்டாடலும், ’ஹஜ்பயணமும், ‘வைகுந்த வாசல்திறப்பும் இந்த மானுடத்துக்கு, சொர்க்கத்தின் கதவுகளைத் திறக்ககூடியதிறவுகோல்இருக்கும் இடத்தை அடைவதற்கான பாதையைச் சொல்லும் நீதியே தவிர வேறு உண்மையல்ல.

மானுடனே…..

உலகின் எல்லா மதங்களும் மார்க்கங்களும்சொர்க்கம்என்ற சொல்லைப் புறக்கணிப்பதே இல்லை;கவனித்தாயா?

நீ வாழும்போது,உனது அறிவையும்  அகச் சான்றையும் முன் நிறுத்தி உனது செயல்களை வகுத்துக் கொள்வதன் மூலம்உனக்கு சொர்க்கம் சமீபத்தில் இருக்கிறது’ என்பதை உறுதி செய்து கொள்;

மானுட நேர்மையையும், மனித தர்மத்தையும் பின் பற்றாமல் போய்,பாதை தவறிய பயணம் செய்து விட்டுப் பின் உபாதை கொண்டு அழுவதாலும் ஆண்டவன் அடிபற்றித் தொழுவதாலும் என்ன பயன், நரகத்தை அனுபவிப்பதே உனது வினைப் பயன் என்பதைத் தவிர?

எனவேதான்,” “கூரை ஏறி,கோழி பிடிக்க முடியாதவன்;வானம் ஏறி வைகுந்தம் போனானாம்என்கிற சொலவடை.

சொலவடையா இது?
அறிவார்ந்த அனுபவங்களின் ஆழமான வைகுந்த வார்த்தை.

இந்த வைகுந்த வார்த்தையின் கதவுகளைத் திறவுங்கள், நண்பர்களே!

அன்புடன்
கிருஷ்ணன்பாலா
4.12.2012