Saturday, June 27, 2015

’சாதி’ப்போம்!

றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

எந்த ஜாதியில் பிறந்திருக்கின்றோமோ?  அந்த  ஜாதியைப் பெருமைப் படுத்தும் வகையில் வாழ்கின்றவர்கள்தான் சமுதாயத்தின் முன்னோடிகள்

தனது ஜாதீய குணங்களை இந்தச் சமூகம் கண்டு வியக்கும்படி வாழக் கற்றுக் கொள்வதை நான் ஆதரிக்கின்றவன்.

இ்ந்தச் சமூகம் அருவெறுக்கவும் அஞ்சவுமான  ஜாதிகளை  இங்கே ஊக்கப்படுத்தி  மக்களை மிருகங்களாக்கும் வகையில் சங்கம் அமைப்பதும் அதை அரசியலாக்கி ஓட்டு வங்கிகளாக மாற்றி, ரவுடிகளும்   நய வஞ்சகர்களும்  ஒழுக்கம் கெட்டவர்களும் நீதி, நேர்மையைப்  புதைகுழியில்  தள்ளியவர்களும்  இங்கே தலைவர்களாக உலாவருவதை  அனுமதிக்கும் நமது ஜனநாயக அமைப்பு கறைபடிந்து போனதாகி விட்டது.

‘சாதி இல்லைஎன்பதும் சாதியை  மறுப்போம்என்பதும் இன்றளவிலும் சாதிக்காத கோஷங்கள்.

மாறாக, ‘சாதி இல்லை’ என்பதும்  சாதியாலேயே சாதித்துக் கொள்வதுமான தலைவர்களின்  சாதி இங்கே பெருகி விட்டது.

இன்று அரசியலைக் கற்றுக் கொண்டவன் தனது ஜாதியைக் காப்பாற்றுவதாகக் கூறி கட்சியை ஏற்படுத்தி,அரசியல் நடத்துகின்றான். தனது ஜாதியையே ஏமாற்றி,அதை அடமானம் வைத்து தன்னை வளர்த்து வளமாக்கிக் கொள்கிறான். வளமானபின் தனது ஜாதிக்காரனையே அடிமைபோல் எண்ணுகின்றான்;நடத்துகின்றான்.

எல்லா ஜாதிக் கட்சிகளின் நிலை இதுதான்.
மக்களுக்கு எது நல்லது ? எது சமூக அமைதியைக் குலைப்பது?என்ற ஞானத்தைப் போதிக்கின்ற அரசியல்வாதி என்று எவரும் இங்கே இல்லை. 

எந்த ஒரு இயக்கத்தின் தலைவரும்  பொது நீதிக்காகவும் தேசத்தின் வளர்ச்சிக்காகவும்  சிந்திப்பவராக தனது இயக்கத் தொண்டர்களைத் தூண்டுவதில்லை; அவர்கள் தொண்டர்களைக் கூட்டி இயக்கப் பலத்தைக் காட்டி தனிப்பட்ட முறையில் அரசியல் பேரங்களைப் பேசி. அரசியலிலும் பொருளாதாரத்திலும் தேவைக்கு மேலும் தகுதிக்கு மேலும் சம்பாதித்துக் கொள்கின்றவர்களாகவே இருப்பதைக் காண்கின்றோம்.

இன்று எந்த சாதியிலும் ஒழுக்கமும் உண்மையும் கொண்ட தலைவர்கள் என்று  எவரும்  அரசியல் நடத்துவதில்லை.

நுண்ணறிவற்ற கூட்டம் எல்லா அரசியல்கட்சிகளிலும் பெரும்பான்மை கொண்டிருக்கிறது.  அந்தப் பெரும்பான்மையை மீறி, அறிவார்ந்த சிந்தனையாளர்  எவரும் கட்சித் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்க முடியாது.

இதன் எதிரொலியாகத்தான், தேர்தல் வரும் காலத்தில் பேரங்கள் விரிக்கப்பட்டு தவறான சுய நலவாதிகள் வேட்பாளர்களாக வாய்ப்புப் பெறுகிறார்கள்.

இப்படியாக இந்த தேசத்தின்  நிலைமை  நாளுக்கு நாள் சிதிலமடைந்து, ஜன சமூகத்துக்குள் கட்டுப்பாடும் கண்ணியமும் கறை படிந்து போய்அதிகாரம் உள்ளவன் எதை வேண்டுமானலும் சாதித்துக் கொள்ளவும் அதிகாரமற்றவனான பாமரன் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளவுமான அவல நிலையில்தான்  நம் தேசம் சென்று கொண்டிருக்கிறது.

எல்லா ஜாதிகளும் சேர்ந்ததே நாடு.
’இந்த  ஜாதியில்தான் பிறப்பேன்என்று பிடிவாதம் கொண்டு எவனும் பிறப்பதில்லை.

அதுபோலவே, என் ஜாதிதான் உயர்ந்தது என்று  சான்றிதழ் வழங்கிக் கொள்ள எந்த ஜாதிக்கும் அருகதை இல்லை.

’நல்லவர்கள் இருக்கும் ஜாதியே உயர்ந்தது என்று  தகுதி பெறுமே அல்லாது ஒரு ஜாதிக்குத் தலைவன் ஆகி விட்டால அவன் நல்லவன் என்று அர்த்தம் ஆகாது.

இன்று ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கி,  நாட்டை இருண்ட கால நிலைக்குப் பின்னோக்கிச் செலுத்திக் கொண்டிருக்கிற காட்டு மிராண்டிகளாகவே ஜாதியத் தலைவர்கள் தங்கள் ஜாதி  அமைப்புக்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நல்ல மனிதன் தனது ஜாதியைப் பெருமைப்படுத்தும் வகையில் நடப்பானே தவிர, தனது  ஜாதீயத் தலைவர்களை ஒருபோதும்  கண்ணெடுத்துப் பார்க்க மாட்டான்

அந்த நல்லவனாக நாமிருப்போம்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
27.6.2015
.