Saturday, September 27, 2014

இன்றுதான் தீர்ப்பு நாள்!


றிவார்ந்த நண்பர்களே,

’சத்தியத்தின் குரலை எந்தச் சக்தியாலும் அடக்கி, அழித்து விட முடியாது’ என்பதற்குநீதியின் தீர்ப்பு நாளாய், இந்த நாள் மலர்ந்திருக்கிறது.

எப்பேர்ப்பட்ட  தகிடுதத்த வாய்தாக்கள்?  எப்படிப்பட்ட அதிகாரத் துஷ் பிரயோகங்கள்?  எப்படிப்பட்ட இழிநிலை அரசியல் நிர்வாக குத்தாட்டங்கள்? பாவம், ’பிள்ளை இல்லாக் குறையை நீக்க வந்த பெருங்கருணைப் பிள்ள இஃது’ எனப் பிரகடனப் படுத்திக் கொண்டு, அதைத் தத்தெடுத்து,  உடனேயே அதற்குத் தமிழகமே தலை கிறுகிறுத்து போகும் அளவுக்குப் பலகோடிகளில் செலவு செய்து, பிரமாண்டத் திருமணமாய்  நடத்திப் பிரலாபித்துக் கொண்டவர் நமது மேடம் ஜெ.அவர்கள். ‘

இந்த பாமரத் தமிழகத்தில் தன்னைத் தட்டிக் கேட்க ஆளில்லை’ என்ற அதிகாரத் தோரணை மிஞ்ச நடந்து கொண்டவராய் வலம் வந்தவர் அல்லவா?

’அவரது அக்கிரமமான, ஆணவ அரசியல் முறைகேடுகளுக்கெல்லாம்
பின்புலமாக இருந்தவர்களை மிஞ்சி, அம்மையாருக்கு எதுவும் போகாது;என்ன செய்தாலும் பருப்பு வேகாதுஎன்ற நிலையை அம்மையார் அவர்களே அரண்போல் உருவாக்கிக் கொண்டு ஆட்சிக் கட்டிலில் பரிபாலனம் செய்தார்.

இவரது ஒழுங்கீனமிக்க நிர்வாக ஊழல்களுக்கு எதிராக, சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடுத்தார். அவர் தொடுத்த வழக்கு 18 ஆண்டுக் காலம் பல்வேறு வாய்தாக்களில் வழுக்கிக் கொண்டே இருந்தது

அதன் பின்னணியில்தான் எப்பேர்ப்பட்ட  தகிடுதத்த வாய்தாக்கள்? எப்படிப்பட்ட அதிகாரத் துஷ் பிரயோகங்கள்? எப்படிப்பட்ட இழிநிலை அரசியல் நிர்வாகக் குத்தாட்டங்கள்

நீதியைக் காக்க வேண்டியவர்களே அது நிலை குலைந்து போகும் அளவுக்கு அதிகாரத்தைப் பயன் படுத்தி அதன் முதுகில் குத்திய காயங்களை எல்லாம் பொறுமையோடு சகித்துக் கொண்டு வந்தாள், நீதி தேவதை.

’இனி, ’இந்தியாவில் நேர்மையான வழியில் நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாதோ?' என்று ஏங்கியவர்களை எல்லாம்  நிமிர வைத்து,
நீதிதேவதை சிலிர்த்துக் கொண்டு  வெளிப்பட்டிருக்கின்றாள், இன்று..

தாமதம் ஆயினும் தட்டாத  நீதி!

இந்தத் தீர்ப்பினால் மேடம் ஜெ. அவர்கள் தண்டிக்கப்பட்டு ஒழிந்து போக வேண்டும்’ என்தல்ல, என்னைப் போன்றோரின் நோக்கம்..

மாறாக, மேடம் ஜெ,போன்ற அரசியல்வாதிகள் யாராயினும் ஊழல் மற்றும் நிர்வாகக் குற்றங்கள்ஆட்சி அதிகாரத் துஷ் பிரயோகங்கள் புரியும் எவரும் சட்டத்தின் முன்பு  ஒருநாள் தலைகுனிந்தே ஆக வேண்டும்’ என்ற நீதியின் ஆட்சிக்கு அஞ்சிநாட்டையும் மக்களையும் ஆளும் உண்மை ஜனநாயகம் காக்கின்றவர்களாக மாற, இந்தத் தண்டனை ஒரு வரலாற்றுப் பாடமாக இருக்க வேண்டும்’ என்பதே விருப்பம்.

பொறுப்பேற்ற  நாள் முதலே  தகிடுதத்த வாய்தாக்கார வக்கீல்களுக்கெல்லாம்  சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து, நீதியின் நெறிமுறைகள் குன்றாது வழக்கை நடத்தி, குறுகிய நாட்களில் 18 ஆண்டுக்கால இழுவையை
நிலைநிறுத்தி,  இந்தியாவில் நீதி தேவதையின் வாரிசுகள் இன்னமும் இருக்கின்றார்கள்’ என்பதைக் காட்டிய மைக்கேல் டி குன்ஹா, இந்திய நீதித்துறையின் இணையற்ற நீதிமானாய் நிலை பெற்று விட்டார்.


நீதிபதி
மைக்கேல்டி குன்ஹா
ஊழலில் திளைத்து ஆட்சி அதிகாரத்தைத் தங்கள் இஷ்டம்போல் வளைத்து அளவற்ற செல்வ வளத்தைப் பெருக்கிக் கொண்டு, அரசியல் செய்யும் அத்தனை பேருக்கும் நீதிபதி குன்ஹாவைப்போல் தண்டனை வழங்கும் நீதிமான்களாக தேசமெங்கும் நிமிர்ந்து  நிற்க வேண்டும்’ என்று,  தேசத்தை நேசிக்கும் அத்தனை பேரின் ஆசையும் எண்ணமும் விரிந்து நிற்கின்றது இந்த நாளில். 

இதோ, அவரது திசை நோக்கி நேர்மை மிக்க உள்ளங்கள் எல்லாம் வணங்குகின்றன.

*
மேடம்  ஜெ. அவர்கள் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை

அவரை விடவும் மோசமான ஆட்சியை நடத்தி, அவரை விடவும் பெரும் ஊழல்கள் புரிந்து, இன்று அவருக்குக் கிடைத்திருக்கும் தண்டனையில் தாங்கள் சாதனை படைத்து விட்டதாக மார்தட்டிக் கொள்கிறவர்களின் மகிழ்ச்சியோடு எனது மகிழ்ச்சியையும் சேர்த்துக் கொள்வதில் எனக்குச் சம்மதமில்லை.

*
இன்றைய தீர்ப்பை ஒட்டி,ஏற்பட்டுவரும் வன்முறையில் ஈடுபடுவோர் எப்படிப்பட்ட அறிவிலிகள் என்பதை நிரூபித்துக் கொண்டு வருகிறார்கள்.  ‘தங்களின்  வன்முறை நீதியின் தீர்ப்புக்கு எதிரானது’  என்பதை அறியா மூடர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

காட்டுமிராண்டிகள் போல் கட்டுப்பாடின்றி வன்முறையில் இறங்கி அரசுப்பேருந்துகளையும் கடைகளையும் அடித்து நொறுக்கி வரும் மிருகங்களான இவர்களின் ஓட்டில் அல்லவோ?,ஆட்சியை நடத்தி வந்திருக்கிறார்கள்? என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம்.
*

என்ன செய்கிறது, மத்திய அரசு?
--------------------------------------------------
‘தமிழ்நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற முக்கிய நாள் இது’ வென சாதாரணக் குடிமகனுக்கே தெரியும்.

தீர்ப்பு, முதல்வருக்கு எதிராக அமையும் தருணத்தில் ஆடு மாடுகள்போல் அடிமைப் பட்டுப் பழகிப்போயிருக்கும் அதிமுக வினர் எப்படிச் செயல்படுவார்கள்?’ என்பது ஒரு சாதாரண கான்ஸ்டபுளுக்கே தெரியும்.

ஆனால், ‘தமிழகத்தை சட்டம் ஒழுங்கில் முதன்மை மாநிலமாக வைத்திருக்கிறேன்என்று சட்ட மன்றத்தில் முழங்கிய முதல்வர் ஜெ. அவர்கள்தன் பின்னால் கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் மந்திரிகளையும் பெங்களூருக்கு அழைத்துச் சென்றதன் மூலம், ’மாநிலத்தில் சட்டம் ஒழுக்கு எக்கேடு கேட்டேனும் போகட்டும்என்பதுபோல் நடந்து கொண்டதும் ’தான் பதவி இழந்து பல மணி நேரம் சென்றும்கூட சட்டம் ஒழுங்கின் அடிப்படையில் அமைதியான சூழ்நிலையை உருவாக்காமல் இங்கே சாலைகளில் வன்முறைகள் தலை எடுக்க விட்டதும்  அதை இந்த கவர்னர் அமைதியாக இன்னமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும்
ஏன் என்பதுதான் கேள்வி.

எல்லாவற்றையும் விட நாட்டின் அமைதிக்கும் நாட்டு மக்களின் உடைமைக்கும் முழு உத்தரவாதம் தருவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டிய நரேந்திர மோதியின் மத்திய அரசு மவுனம் காப்பதும் ஏன் என்பது விளங்கவில்லை.

மோதிதான் அமெரிக்கா சென்று விட்டார்; உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எங்கே? உல்லாசப் பயணம் சென்று விட்டாரோ?

அதிமுக என்பது அம்மா இல்லாவிட்டால் எல்லாமே முட்டைகள்தானென்பது உலகறிந்த ஒன்றுதான்;அம்மா இல்லாமல் பிள்ளைகள் அனாதைகள் போல் அழுதுகொண்டிருக்கின்றனதான்.

ஆனால்,

மோதியின் நிர்வாகம் முழித்துக் கொள்ள வேண்டாமா?

இவண்-
கிருஷ்ணன்பாலா
27.09.2014

Friday, September 12, 2014

யாவரும் அறிய.....


நண்பர்களே,

முகநூலில் அறிமுகம் ஆகி என்பால் அன்பும் நட்பும் செலுத்தும் நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் யாவரும் அறிய,இது:

என்னைக் கவிஞர் என்றும் பாவலர் என்றும் சந்தக் கவி என்றும் மதிப்பீடு செய்து,அவ்வண்ணமே என்னைச் சிறப்பு மொழிகளில் விளிப்பதை அன்பு கூர்ந்து தவிர்க்க வேண்டுகின்றேன்.

நான் தமிழ் இலக்கணத்தை முழுமையாகக் கல்லாதவன். கவிதைகள் என்று என் எழுத்துக்களுக்குத்  தகுதிச் சான்றிதழ் எதையும் வழங்கிக் கொள்ளாதவன்;இலக்கண வரம்புகளைத்தேடிப்பிடித்துக் கவிதைகள் என்று எழுதாதவன்.

இச் சமூகத்தின் இழிநிலையைக் கண்டு சினமுறும்போதோ தேசத்தின் சத்தான விஷயங்களில்  சஞ்சரிக்கும்போதோ அன்பிலும் அழகிலும் இயற்கைப் பொலிவிலும் மனம்  ஈர்க்கப்பட்டு அதன் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்வதில் எனக்குள் ஓர் ஆத்மத் திருப்தி உருவாகிக் கொள்கிறது.

அதன் வசீகரத்தை நீங்கள் கவிதை என்று புகழ்ந்தாலும் புரியாமல் போனாலும் என்னைக் கவிஞன் என்றோ, பாவலன் என்றோ கதைத்தும் பாராட்டியும் விளிப்பதில் என் மனம் தன் தெளிவை இழக்கின்றது.

பொய்மையும் புரட்டு எண்ணங்களும்பெருகி,நேர்மையும் நிஜமும் அற்ற  தகுதிகளில் மலிந்து போன இலக்கியத் திருடர்கள் அவ்வாறு தங்களைச்  சுய புகழ் தீட்டிக் கொள்ளட்டும்; எனக்கு அவ்வாறான மதிப்பீடுகள் கட்டாயம் தேவை இல்லை. அவ்வாறு புகழப்படுவதற்காக  நான் எதையும் எழுதுவதில்லை.

உண்மையில் என்னைக் கவிஞன் என்று அழைத்துக் கொள்வதிலோ அப்படி அழைக்க வேண்டும் என்பதிலோ அருவெறுப்புக் கொள்கின்றவன் நான். பட்டங்கள் மற்றும் சிறப்புத் தகுதிச் சான்றுகள் எதிலும் என்னைப் புதைத்துக் கொள்ள விரும்பாதவன்.

என்னையும் என் எழுத்துக்களையும் நேசிப்போர் மற்றும் ,நட்பை விழைவோர் எல்லாம் என்னை என் பெயரைச் சொல்லி அழைப்பதிலும் விளிப்பதிலும்தான் மகிழ்ச்சி கொள்கிறேன்.

உங்கள் அன்புக்கு நன்றி.

இவண்-
கிருஷ்ணன்பாலா
12.9.2014

Thursday, September 11, 2014

இது ஒரு சூட்டுக் கோல்!
பாரதியைப் ’பார்ப்பான்’ என்று பறை’கின்றவர்க்கெல்லாம் இது ஒரு சூட்டுக் கோல்!

தமிழா,தமிழா!
----------------------------

தமிழா,
உனக்கு ஹிந்தி,மராத்தி முதலான வடநாட்டுப் பாஷைகள் தெரிந்திருந்து. ’அந்தப் பாஷையிலே பத்திரிகைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன?’ என்பதை நேரிடத் தெரிந்து கொள்ள முடியுமானால்,தமிழ் நாட்டிற்கு எத்தனை எத்தனை நன்மை உண்டாகும்?

’தமிழ்.தமிழ்,தமிழ்’  என்று எப்போதும் தமிழை வளர்ப்பதைக் கடமையாகக் கொள்.

ஆனால்,புதிய புதிய செய்தி,புதிய புதிய யோசனை,புதிய புதிய உண்மை,புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக் கொண்டே இருக்க வேண்டும்.

தம்பீ,
நான் ஏது செய்வேனடா?
தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தம் உண்டாகிறது.

தமிழனைவிட மற்றொரு ஜாதிக்காரன் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்குச் சம்மதமில்லைதமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது

-மகாகவி பாரதி
1915 ஜூலை 19.1915ல் எழுதிய கடிதங்களிலிருந்து

(நன்றி: இளந்தமிழன் மாத இதழ் நவம்பர்-2009 –மலர்-8/இதழ் 3)

#பாரதியை நான் நேசிக்கவும் வாசிக்கவும் சுவாசிக்கவுமான தூண்டல் சிந்தனைகளில் ஒன்று இது.#


இவண்-
கிருஷ்ணன்பாலா

11.9.2014

Saturday, September 6, 2014

குருவே அனைத்தும்!நண்பர்களே,

மாதா,பிதா,குரு,தெய்வம் என்று வரிசைப் படுத்தி இவர்களை நாம் பயபக்தியோடு வணக்கம் செய்து வரவேண்டும் என்று பண்பட்ட வாழ்க்கை முறைமைக்கு முதல் சுழி போடுகிறது நமது அறநெறிச் சித்தாந்தம்.

உண்மையில் குரு என்று வணங்கப்படும் ஆசிரியனே அனைத்திலும் முன் நிற்கின்றான்.

எப்படி?

அன்னை,தந்தை,தெய்வம் என்ற முப்பொருளையும் தெரிந்திருக்கும் தேர்ந்த சிந்தனையை நம்முள் விதைக்கும் வித்தைக்குரியவரே குருதான்.

அந்தக் குரு அன்றி தாய்,தந்தையர் பெருமையை, தெய்வத்தின்பால் தெளிந்த நம்பிக்கையை நம்முள் உணர்த்துபவர் யாருமில்லை.

அவர் போதித்த அறிவைக் கொண்டுதான் உலகியல் வாழ்க்கையில் அனைத்தையும் மனிதன் உணர்கின்றான்.

பண்பட்ட அறிவுடையோர் எந்த நிலையிலும் குருவை வணங்குவதே வாழ்வென்றிருப்பர்.

’அந்த வாழ்வே வாழ்வாங்கு வாழும் முறை’ என நாம் தெளிந்திருக்க,இந்த ஆசிரியர் தினம் நினைவு படுத்துகிறது.

குரு என்ற அந்த உறுபொருளை நான்,

‘குருவே தாணு மால் அயன் ஆகும்;
குருவேதான் என்பெற்றவர் ஆகும்;
குருவேதான் என் குரவனும் ஆகும்;
குருவேதான் நான் நினைப்பதும் ஆமே!

என்று -
நித்தம் வணங்கும் வாய்ப்பை குருநாதர் வழங்கி இருக்கிறார் என்பதில் நெகிழ்கிறேன்;மகிழ்கிறேன்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
5.9.2014

Wednesday, September 3, 2014

சிந்தனை விதைகள்!முகநூல் மூலம் அறிமுகம் கொண்டு
முகம் அறியாமல் நட்பினைப் பூத்து
தகவுடன் கருத்துப் பரிமாற்றத்தில்
தழைக்கும் நண்பர்கள் அனைவரும் அறிக:

அறநெறித் தமிழை ஆழ்மனம் பற்றிட
அதன்வழி நின்றே சிந்தனைப் பரவலை
நெறிமுறையோடு சபையில் உரைக்கும்
நேர்மையை என்றன் நிழலாய்க் கொண்டவன்!

எதுஎன் உணர்வாய் இதயம் உள்ளதோ?
அதுஎன் எழுத்தாய் உமிழக் காண்கிறேன்;
எதுநம் பண்பை அழிக்க வல்லதோ?
அதுமாய்ந் திடவே எழுத்தில் வைக்கிறேன்!

அவையில் வைக்கும் கருத்து யாவையும்
அணிந்துரை செய்ய முன் வாராமல்
கவைக் குதவாத புகைப்படம் இட்டும்
கலகலப்பில்லா  வெற்றுரை செய்தும்

தொடர்பில்லாத தொகுப்பரை பதித்தும்
தொடர்ந்து நாளை வீணே கழித்து
இடரும்பேர்கள் அதிகம் இருப்பினும்
இவர்என் நட்பைக் கவருவதில்லை!

இளமையின் வேகம் கண்களை மறைத்து
எதையும் நகைத்து இனிக்கும் இப்போது;
வளமை மாறி முதுமை மலர்ந்தபின்
வாழ்க்கையின் தவறுகள் கனக்கும் அப்போது!

முறைகேடான சிந்தனைத் தூண்டல்.
மூர்க்கத் தனமாய் வார்த்தைகள்; விரசம்;
மறைபொருளாக மதனக் கிளர்ச்சி;
மானமும் மதிப்பும் இல்லாப் பதிவுகள்!

தாயும் தந்தையும் தமக்கையர் தம்பியர்
தாங்கிய உறவுகள் அனைவரும் படித்துத்
தோயும் வகையில் தொடர்புகள் பெருக்கி
தோளை உயர்த்தும் தோழமை யன்றி

நாளும் பொழுதும் நக்கல் உரையும்
நல்லோர் வருந்தும் கக்கல் மொழியும்
ஆளுமை என்று எழுதிடு வோரும்
அதையே நக்கி இன்புறு வோரும்

என்னை விட்டு விலகி இருக்கவே
எழுத்தில் கருத்தில் இறுக்கம் கொள்கிறேன்;
பொன்னை உரசிப்பார்க்கும் உரைகல்
போன்றது தானே, உண்மை நட்பு?

அறிவுடன் அணுகி ஆய்ந்து நுணுகி
அறநெறியோடு பேசியும் நடந்தும்
செறிப்பவை மட்டும் சிறந்த வாழ்வைச்
சேமிக்க உதவும் சிந்தனை விதைகள்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
3.9.2014