Saturday, September 18, 2010

இலக்கியத் தடங்கள்-1 (யார் பெரியர்?)

நண்பர்களே,


"வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாம்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது”.


நம் பழம் இலக்கியப் பெட்டகத்தில் இருந்து எடுத்து
நெஞ்சில் பதித்து வைத்துக் கொண்ட பாடல் இது.


வான் குருவிக்கூடு,அரக்கு எனப் படும் வலிமையான
இயற்கைப் பசை;வெறும் மண்ணினால் கறையான்கள் கட்டும்
மண்புற்று;தேனீக்கள் சேமித்துதரும் தேன்;சிந்தனைச் சிக்கலை
நம்முள்உருவாக்கிவிடும் சிலந்தி வலை இவற்றை மேலோட்டமாகப்
பார்த்தால் அற்ப விஷயங்களாகத்தான் தோன்றும்.ஆனால்,இந்த
விஞ்ஞான யுகத்தில்,எந்த மேதையாலும் இவற்றை உருவாக்க இயலுமா?


ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பு இருக்கிறது;சாதாரண ஜீவனான
வான் குருவி கட்டுகின்ற (தூக்கனாங் குருவிக்) கூட்டை
இந்தக் கணினி யுகத்தில் வேறு எவராலும் கட்டித் தொங்கவிட்டு
அதில் அக் குருவிகளைக் குடி வைக்க முடியுமா?


முடியவே முடியாது.


அதாவது “‘இந்த உலகத்தில் மனிதர்களால் சில சின்ன
விஷயங்களைச் செய்ய முடியாத நிலைகூட இருக்கிறது’
என்பதை இடித்துக் காட்டி,வாழ்வில் பிற மனிதர்களிடத்தும்,
பிற உயிர்களிடத்தும் நாம் சமத்துவ உணர்வு கொண்டிருக்க
வேண்டும்” என்பதை எடுத்துக் காட்டுவதே இப்பாடலின் நோக்கம்.


‘யாம் பெரிய வல்லாளன்’ என்பதாய் எண்ணம் கொண்டு பிறரைத்
தாழ்மையாக நினைத்து விடக் கூடாது’என்ற எச்சரிக்கையை
மிக அறிவார்ந்த உதாரணங்களுடன் சொல்கிறது இப்பாடல்.


உங்கள் மனம் இதைச் சிந்தித்து ஏற்கும் என நம்புகின்றேன்.


நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
18.09.2010 / நண்பகல் 12:09


குறிப்பு:


இப்போது முதல் ‘இலக்கியத் தடங்கள்’ தொடங்குகிறது.
இது, அவ்வப்போது பல்வேறு எளிய பழம் பாடல்களைக் கொண்ட பாதையாகத் தொடரும்.


கலாச்சாரச் சீரழிவுகளை விதைக்கும் சினிமா போன்ற கேடு கெட்ட பொழுது போக்குகளில்ஈடுபடவேண்டிய அவல நிலை இம்மாதிரிய்யான இலக்கிய நயங்களில் தவிர்க்கப் படும்.


குறிப்பாக, வெளி நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களின் ரசனைக்கும் சிந்தனைக்கும் நல் விருந்தாகும் பகுதியாக இது திகழும்.எனக் கூற முடியும்.


நண்பர்களே,
உங்கள் குழந்தைகளுக்கு இதில் இடம் பெறும் இலக்கிய உவமைகளைப் படம் பிடித்துக் (உங்களால் இயன்ற அளவு விளக்கிக்)காட்டுவீர்களானால்,அவர்கள் மனதிலே அறிவும் தமிழ்ப் பண்பாட்டுணர்வுகளும் தானாக ஊற்றெடுக்கும் பாருங்கள்.
-கிருஷ்ணன் பாலாநார்வேயில் வாழும் தமிழர்,நண்பர் திரு.உதயன் சத்தியானந்தன் இந்த ‘தமிழ் இலக்கியம் காட்டும் தடம்’பற்றி எழுதுகிறார் இப்படி;


#
ஞாயிறு வெளிவர நாணும் பார் மின்மினிகள்.
நாளும் பொழுதும்
நல்ல தண்ணீர் ஊற்றுக் கிணறு
தேடி வரும் உயிர்களெல்லாம் விரைந்து.
‘இலக்கியம் காட்டும் தடம்:நடமாடும் பள்ளி என்றே அறை!


#
நன்றி,நண்பரே,திரு.உதயன்.
எனது அன்பான பதிலை ஏற்பீர் இங்கே:“ஒளி மிகுந்த படைப்புக்கள்;உலகு போற்றும்
ஒப்பற்ற ஞானமொழி;மெய்ம்மையான
களவற்ற இலக்கியங்கள்;காணுந்தோறும்
கள்ளூறும் கவிதை பல ஆயிரமாய்
அளவற்ற படைப்புக்களிருக்க,நாம் ஏன்
அடுத்தமொழி இலக்கியத்தை நாட வேண்டும்?
உளம் நினைத்த படிஇங்கு எழுதுதற்கு
உட்கார்ந்தேன்;வாழ்த்துகிறீர்;வாழ்க நீரே!
-கிருஷ்ணன் பாலா
19.8.2010 / பிற்பகல் 2:10


பொருத்தம் மிகும் திருத்தம்
----------------------------------------


நண்பர்களே,


மேலே எடுத்தாளப்பட்ட பழம் பாடல் இன்று காலையில்தான் பதிப்பிக்கப்பட்டது.இப்போது அதன் வரிகளில் சிறு திருத்தம் பதித்தாயிற்று. சொல்லப்பட்ட பொருளில் எவ்வித மாற்றமும் இல்லை.


முதலில் அதனைக் கீழே உள்ளவாறுதான் பதிப்பித்திருந்தேன்.அது வருமாறு:


"வான் குருவிக்கூடு;வல்லரக்கு;தொல்கறையான்;
தேன்சிலம்பி யாவருக்கும் செய்யரிதால்-யான்பெரிதும்
வல்லோமே’எனத் திரிய வேண்டாம்;உலகில்
எல்லார்க்கும் ஒவ்வொன் றரிது."


எனது முக நூல் நண்பரும் மொழி இலக்கணத்தின் முதல் நிலைத் தூதுவரும் புதுவை அரசில் பதவி வகிப்பவரும் பயன் கருதாத் தமிழ்த் தொண்டாளருமான
தோழர் இராஜ.தியகராஜன் அவர்கள் மேற்குறித்த பாடலில் உள்ள பாட பேதத்தைச் சுட்டிக் காட்டியதுடன்,‘இப் பாடலை அவ்வைப் பெருமாட்டி,கம்பன் மீது சோழ மன்னன் கொண்டிருந்த அளவு மீறிய மதிப்பபீட்டைத் தவறு என்று சுட்டிக் காட்டுவதற்காகப் பாடியதாகச் கருதப்படும்’ நிகழ்வு ஒன்றையும் குறிப்பிட்டிருந்தார்.


முதலில்,இப்பாடல் அவ்வைதான் எழுதியுள்ளார் என்பதற்கும் அவ்வை-கம்பன் வாழ்ந்த கால கட்டங்கள் ஒன்றுதானா என்பதற்கும் சரியான ஆதாரங்கள் இல்லை என்பதால் இது பற்றி நான் விரிவாக எழுதுவதைத் தவிர்த்தேன்.


ஆனால்,கம்பனுக்கும்-அவ்வைக்கும் நடந்த கருத்துப் போர்கள் நமக்குச் சுவையான கருத்தாழம் நிறைந்த இலக்கியப் பேழையாய் படைக்கப் பட்டிருக்கின்றன.


இது போன்ற இலக்கியப் பேழைகளைத் திறந்து அதன் நுண்மான் நுழைபுலத்து நொய்யல்களைத் திரட்டித் தருகின்ற ‘என் நோக்கில் ஆதாரப் பூர்வமான சான்றுகளைக் கூறுதற்கு வாய்ப்பில்லை’ என்பதை வருத்தத்தோடு வழி மொழிகிறேன்.


ஆனால்,அவற்றின் சுவைமிகு திரட்டுப் பாலில் தீஞ் சுவைக்கும் தேன் சுவைக்கும் பஞ்சமிராது என்பது மட்டும் உறுதி.


இந்தத் தடத்தில்,முதல் தோரணமாகத் தோழர் இராஜ.தியாகராஜன் அவர்களின்
துணை அமைந்துள்ளதற்கு நாம் அனைவரும் நன்றிக் கடன் பட்டுள்ளோம்.
சரியான இலக்கியப் பார்வையும்,பிழையற்ற தமிழைக் காப்பதில் கொண்ட கூர்மையும்,கொள்கையில் நேர்மையும் கொண்ட தோழரின் சுட்டிக்காட்டலில் எவ்வளவு பெரிய உழைப்பு பொதிந்துள்ளது! நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.அவர் சுட்டிக் காட்டியதும் நான் அதைக் கட்டிக் காத்ததும் இதோ:


இராஜ. தியாகராஜன்
வணக்கம் கவிஞரே. நீங்கள் பதிப்பித்த பாடல் வெண்பா வகையிலானது, ஆதலால் நிறைய இடங்களில் தளைதட்டுதலை உணர்ந்தேன். பாட பேதங்கள் இருக்கக் கூடுமென்று முதலில் அனைத்து நூல்களிலும் விவரங்கள் தேடிய போதில் எதுவுமே சிக்கவில்லை. சோர்ந்தேன். பின்னர் எனதருமை இலக்கிய வித்தகர் திரு ஹரிகிருஷ்ணன் தயவால், விவரங்கள் கிடைத்தது.


ஒரு சமயம் சோழன், கம்பனைப் புகழந்து, கம்பனைப் போலக் காப்பியம் படைக்க எவருமில்லை என்று புகழும் போதில், ஔவை எழுந்து வெட்டிப் பேசியதான தனிப்பாடல் வெண்பா இது.


திரு ஹரிகிருஷ்ணன் அனுப்பித் தந்த வரிகளின் படி, நீங்கள் பதிப்பித்த சிலவரிகளில் தவறுகளைத் திருத்தி கீழே:


வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாம்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.


முதல் எதுகை விகற்பத்தான் இதிலும் யாம்பெரிதும் என்ற சீருக்கு பதிலாக யான்பெரிதும் என்றே வரலாமென்று தோன்றுகிறது. எல்லொரிடமும் கலந்து உசாவிக் கொண்டிருக்கிறேன்.


ஆனால் பாடலின் பொருளென்னவோ மிகவும் அருமையானது.
“தூக்கணாங்குருவியின் கூடும், வலிமையான அரக்கும், கரையான்பூச்சி கட்டுகின்ற புற்றும், தேனீயின் கூடும், சிலந்தி பின்னும் வலையும், எல்லோருக்கும் எளிமையான செயல்கள் அல்ல. ஆதலால், யாம் மிகவும் திறமையானவர் என்று எவரும் தம் பெருமை பேசுதல் கூடாது. ஒவ்வொருவருக்கும் தம்தம் திறமையால் ஒவ்வொருவகைச் செயலைச் செய்தல் எளிதாம்.”


தோழருக்கு எனது பதில்:
----------------------------------------


தங்கள் கூற்று முற்றிலும் சரியே.சில தனிப் பாடல் தொகுப்புக்களில் இவ்வாறு பாட பேதங்கள் இருப்பதைக் காண்கின்றேன். ஒரே பாடலை பலரும் பலவிதமாய்ப் பதிப்பித்து உள்ளதானது,என் போன்ற அவசரக்காரர்களுக்கு வசதியாகப் போய் விட்டது.


தங்களைப் போன்ற இலக்கண மேலோர்இருப்பது,என் போன்ற காட்டாறுகளை வழிப்படுத்தத் தானே?


எளிய மொழியில் வெளி நாடுவாழ் தமிழ் அன்பர்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காக மிகச் சரியான இலக்கணச் சொல்லாடலைத் தவிர்க்க வேண்டும் என்கிற ஒர் எண்ணமும் இம் மாதிரியான பிழைகளுக்கு பின்புலமாகவும் தூண்டுகின்றன.


உங்கள் குட்டுதலும்கூட ஒர் பாடமாகவும் படமாகவும் இருக்கட்டும் என்பதற்காக,உங்கள் கருத்துக்களை எவ்வித மாறுதலும் இன்றி எனது தளத்தில் பதித்துள்ளேன்.


தொடர்ந்து துணை நின்று உதவ வேண்டுகின்றேன். நன்றி.
நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
18.09.2010 / நேரம் 11:48 இரவு
Post a Comment