Sunday, September 5, 2010

கொத்தான முத்துக்கள்

1984-களில் ‘வாழும் தமிழ் உலகம்’ என்ற திங்கள் இதழின் பொறுப்பாசிரியனாக நான் இருந்தபோது எழுதி,அந்த இதழில் கோர்த்த முத்துக்களில் பல இதிலுள்ளவை. இந்த இதழ் அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக ’முனைவர் பழனி ஜி.பெரியசாமி’ அவர்களால் நடத்தப் பட்டு,பின்னர் நின்று விட்டது.மீதி முத்துக்கள் 1988-ல் வெளியான ‘எனது இராஜ பாட்டையில்,,,,’ என்ற நூலில் இடம் பெற்றவை.


முதிர்ச்சி
அனுபவங்களுக்காகக்
காத்திருந்தது அறிவு;
பிறகுதான் தெரிந்தது:
’காத்திருப்பதே,
நல்ல அனுபவம்’
என்பது.

அடையாளம் 
“யாரது...
‘தொழிலாளர் நலனுக்காக
உயிரைக் கொடுப்பேன்’
என்று
லட்சியக் குரல் கொடுப்பது,
யார் அது?”


வந்தது பதில்:
‘வருங் கால முதலாளி’

மீன் குஞ்சு
“தொழில் முன்னேற்றத்துக்காக
சிறு தொழில் செய்யாமல்
பெருந்தொழில் செய்வேன்’
என்று-
உன் கல்லூரி
இலக்கிய விழாவில் பேசி
கலக்கி விட்டாயாமே?
மகனே,
என்ன செய்யப் போகிறாய்?”


பீடித் தொழில் நடத்தும்
பெரிய அரசியல்வாதி,
தன் பிள்ளையை
இப்படித் தயவாய்க் கேட்டார்.


பாச மைந்தன்
’பளிச்’செனச சொன்னான்:
‘சுருட்டுத் தொழில்!’

நாணம்!
ஆச்சர்யம்!
நேர்க் கோடு.
கேள்விக் குறியானது!


ஓ…!
பதினாறு வயதுப்
பாவை!


கவிஞன்
ஒரு
பெண்ணைப் பார்த்துக்
கற்பனை செய்யும்
காமுகர்களுக்கு


நடுவே-


கற்பனையில்
பெண்ணைப் படைப்பவன்!

அழைப்பிதழ்கள்
பெண்ணின்
தோளை விட்டு
விலகியிருக்கும் முந்தானை;


உண்மையை
மறைக்கத் தெரியாத உதடு;


தாழிடப் படாத கதவு;


பையை விட்டு
நீட்டிக் கொண்டிருக்கும் ‘பர்ஸ்’


இவை-
குற்றவாளிகளை
அழைக்கும் அழைப்பிதழ்கள்!

•லாபம்
வாழ்க்கைக் குளத்தில்
செல்வக் கற்களை
எறிந்ததில்
அனுபவ வளையங்கள்..
எத்தனை மகிழ்ச்சி?


ஓ….
நஷ்டம் என்பது.
அனுபவத்தின் லாபம்!


•ஞானம்
என்னைத்
தெரிந்து கொள்வதற்காகச்
சிந்தித்தேன்…


விளைவு,
அதில்-
நான் மறைந்து போனேன்.


பிறகுதான் தெரிந்தது:
சிந்தித்ததே
என்னைத் தெரிந்ததால்தான்!


•அர்த்தம்
ஆர்ப்பாட்ட வாழ்க்கையை
அமைதியாகச்
சிந்தித்து மனம்.
மெளனம் சப்தித்தது.


ஓ…..
நான் பேசுவதற்காக
வரவில்லை;
பேசப் படுவதற்காக!


•பேனா
ச்சே!
ஐந்து விரல்களால்
என்ன பயன்?
தின்னத்தானே முடிகிறது.


இதோ-
இந்த ஒரு விரலே போதும்;
உலகம் தின்ன!


•’புள்ளி’ விவரம்!
உண்மையில்-
சிறு புள்ளி;
ஊருக்குப் பெரும்புள்ளி;


உரசிப் பார்த்தால்-
‘கரும்புள்ளி’


•எடை
ஏந்திக் கிடந்ததை
எடுத்து வைத்தேன்;


இருந்த பொருளும்
எங்கோ தொலைந்தது;
இருப்பதை எடுத்து
அன்புடன் ஈந்தேன்;
இரட்டிப்பாகத்
திரும்பி வந்தது!


ஓ…
செல்வம் என்பது-
சேர்வதில் அல்ல;
அது,
எப்படிச் செலவிடப்படுகிறது
என்பதில்!


•ஒரு முன் குறிப்பு
நீங்கள்
உண்மையை
அறிய வேண்டுமாயின்
இதோ-
என்னைப் பற்றிச் சொல்கிறேன்;


என்னை
அறிய வேண்டுமா?


அப்படியானால்
உங்களைப் பற்றியே
சொல்கிறேன்!


•எழுத்து
நண்பனே!
நான்
எழுதுவது-
என்னை அறிமுகம்
செய்வதற்கு அல்ல;
உன்னை
நான் அறிவதற்கே!

(இன்னும் ஜொலிக்கும் ஏராளம்;
எடுத்துக் கொள்வீர் தாராளம்)
கிருஷ்ணன் பாலா

Post a Comment