Friday, September 17, 2010

கனவென்னும் நிஜம்!

வாழ்க்கை அதன் வசதிகள் அனைத்தையும் பெற்றிருந்தால்,தனது வலிமையை இழந்து நோஞ்சான் பிள்ளை போலாகிவிடும். எந்த வைத்தியத்தாலும் அதைச் சரிப்படுத்தி விட முடியாது.

பற்றாக்குறையான வாழ்வில் மட்டுமே வாழ்க்கையின் நீரோட்டம் தெளிவாக அமையும். அதில்தான்,மனிதன் தன் முயற்சியாலும்,சிந்தனை திறனாலும் அங்கும் இங்கும் மனதை அலைய விட்டு,அந்த அனுபவங்களின் வழியாக பரமாத்மாவை நோக்கிச் செல்லும் பக்குவத்தை,அதற்கான பாதை இதுவென்பதை அறிகிறான்.

அந்தப் பக்குவத்தைப் பெறும்வரை,‘தான் எல்லாம் தெரிந்து கொண்டவன்’ போல் தன்வயப்பட்டு, பிறருக்கும் அதையே போதிக்கிறான்; தன்னைச் சுற்றி ஒரு வட்டம் எழுந்ததும்,தானே எல்லாம்’ என்பதாய் ஓர் எண்ணம் அவனுள் தோன்றி, அவன் ஒரு ‘தான்தோன்றியாய்’ மாறி விடுகிறான்.

அப்படிபட்ட நிலையில் ‘அவன், தன்னை ஒரு பெரிய அறிவாளி’ எனக் கற்பனை கொண்டு தன் ப்ரலாபங்களை வெளியில் சொல்லத் தலைப் படுகிறான். அவனுடைய அரைவேக்காட்டுச் சிந்தனைகளையே தங்களுக்கு வழிகாட்டும் ஒளியெனப் போற்றி, மாந்தர் பலரும் அணி திரண்டு, அவனது சீடர்களாய்,சிந்தை நிறைந்த பித்துக் கொண்டு அவன் பின்னால் திரிகிறார்கள்.

திடீரெனெ ஒருநாள்,எல்லோருக்கும் வரும் ஓலை, அவனுக்கும் வந்து, அவன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாது கண்ணை மூடி விடுகிறான்.

பின் அவன் விதைத்த தப்புத் தாளங்கள், அவனுக்கு அடுத்த சீட கோடி ஒருவனால் தொடர்ந்து வாசிக்கப் படுகின்றது. அதே பஜனைக் கூட்டம்;அதே பாடுகள்.

இப்போது எண்ணுங்கள்:பக்குவம் என்பது என்ன?

அது மரணத்தின் முத்திரை யல்லாது வேறு என்னவாக இருக்க முடியும்?

உயிருள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும்,மரணம் ஒன்றுதான் நிலையானது; பொதுவானது.இதில் மனிதனால் மட்டுமே தன் விருப்பு,வெறுப்புக்களை வெளியிடவும் அதை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது.

பக்குவம் குறித்த சிந்தனைகளில் அபக்குவமற்ற நிலையில் சிந்தித்த மனது,பரந்தாமன் கண்ணனுக்கு எழுதுகிறது இப்படி:

கனவென்னும் நிஜம்!

பரம் பொருள் கண்ணன்;பரந்தாமன்;என்
பரம நினைவில் எழும் தந்தை;
கரம் தொழுகின்றேன் அவன் முன்னே;
கண்கள் பணித்தன கேள்விகளில்!

‘எந்தை உன்முன் எழுதுதல் என்பது
இன்பத்துள் இன்பம் பேரின்பம்;
சிந்தையுள் சிதறும் கேள்வி எலாம்
சிறகடித்திடுவது,இதில் தானே?

கேட்கின்றேன்,என் பரந்தாமா;நீ
கீதையைக் காட்டிச் சிரிக்காதே!
வாட்டம் நீக்குவ தல்லாது;
வஞ்சனை நாடகம் நடத்தாதே!

எண்ணம் யாவும் உனதடி வைத்து
எழுத்தில் உனையே அணிகின்றேன்;
‘பண்ணும் செயலில் புண்ணியம் சேரப்
பண்ணும்’என்றே பணிகின்றேன்!

‘நன்றாய் என்னை ஆக்கிடத்தானே,
நன்மையும் தீமையும் வகுக்கின்றாய்?’
என்றே எண்ணி இயங்கும் என்னுள்
எத்தனை மாற்றம் கொடுக்கின்றாய்?

உன்முன் எழுத்தில் பணியும் என்றன்
உளமே புகுந்து நிறைவோனே;
என்முன் தோன்றும் காட்சிகள் தோறும்
இருந்தே விரிந்து மறைவோனே!

”ஜனனம் என்பது உயிரின் நுகர்வு;
ஜனித்த பின்னால்தான் காணும் உறவு:
மரணம் வரையினில் தொடரும் உலகு;
மரித்த பின்னாலோ அனைத்தும் கனவு!

எண்ணிப் பார்த்தேன்,இறைவா ”என்னுள்
எத்தனை ஜனனம்;எத்தனை மரணம்?”
மண்ணில்,‘நான்’,‘நீ’, ‘எனதுன’தென்னும்
மாயை எதற்கு? விடை சொல்வாயா?

மாயை இதுவென அறியும் மனதுள்
மயங்கும் மதியைப் படைத்தவன் நீயே;
சேயைப் போல்நான்,தேம்பிடும்பொழுது
சேய் போல் சிரித்து மழுப்புகின்றாயே?

என் விருப்பத்தில் நான்வர வில்லை;
இங்கென் விருப்பம் நீதடுக் கின்றாய்;
உன் விருப்பத்தில் பிறந்தவன் தன்னை
உலகியல்தனில் ஏன்புதைக் கின்றாய்?

பொருள்வழி உலகில் பிறந்தேன்;இங்கே
பொருளை,அருள்வழி இறைக் கின்றேன்;
அருள் வழி பொருளா? பொருள் வழி அருளா?
அதை நான் புரிந்திடத் துடிக்கின்றேன்!

பொருள்வழி மட்டும் வாழ்வென்றிருந்தோர்
போன பாதையைப் பார்க்கின்றேன்;
அருள் வழி நின்றோர் அருளிய பொருள்வழி
அடைந்திடும் பொருளைச் சேர்க்கின்றேன்!

உயிர்வழிப் பயணம் உணர்ந்திடும் அறிவில்
உண்மையும் ஒளியும் தடுமாற்றம்;
பயன் தரும் பயணம் எனப் புகுந்தால்
பாதையில் எத்தனை ஏமாற்றம்?

பொய்யை மெய்யாய்ப் பேசியவாறே
பொழுதைக் கழிக்கும் புல்லருடன்;
வையம் வாழ்ந்திட வருந்துகின்றேன்;
வருந்திடத்தானா வாழ்வ ளித்தாய்?

பொய்யைச் சுடுமோர் பொல்லாச் சினமும்
புல்லரின் உறவைஅறுத்திடும் மனமும்
மெய்காண்பதற்குத் துடித்திடும் குணமும்
மேன்மை இலையேல்,ஏன்இவ் வாழ்க்கை?

தர்மா,தர்மம் குனிந் திருக்க;
தத்துவப் பொய்கள் தலை நிமிர;
‘கர்மா’என்றே இதைச் சொல்லிக்
கைதொழுதற்கா எனைப் படைத்தாய்?

குறிப்பு: 1996 களில் அனுபவத்தால் இச் சிந்தனை எழுந்து கவிதை எனத்
திரண்டது.இப்போது இங்கே பதிவில் (17.9.2010-வியாழக் கிழமை)

1 comment:

ulagathamizharmaiyam said...

தமிழாகரன் சிவம் அவர்கள் மலேஷியாவில் வாழும் தமிழர். அவர் இந்த வலைத் தளப் படைப்புக்கள் பற்றி எனது முகநூலுக்கு அனுப்பியுள்ள செய்தி இது:

தமிழாகரன் சிவம் wrote:
உங்கள் அழகிய தமிழால் வார்த்தைகளில் அமுதத்தையும் தேனையும் வாரி வாரி தருகிறீர்கள்!!எத்தனை எத்தனையோ எதனை படிப்பது எதனை விடுவது? நேரம் தான் போதவில்லை இருப்பினும் விட்டு விடப் போவதில்லை! அத்தனையும் அனுபவப் பாடங்கள்!உங்கள் வலைப் பக்கத்தில் இன்னும் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறேன்!

-தமிழாகரன் சிவம்