Monday, April 30, 2012

ஆண்டவன் சொல்கின்றான்;அர்ஜுன் சம்பத் செய்கின்றார் -


நண்பர்களே,
வணக்கம்
மதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்என்று 293 ஆவது
ஆதீனமாக பிடாதி  ’யோக வியாபாரிநித்தியை
292 ஆவது ஆதீனமானவர் நியமித்தது பற்றி,
நமது கடுமையான விமர்சனத்தை இங்கே எழுதியிருந்தோம்.

திரு.அர்ஜுன் சம்பத் தலைமையிலான
இந்து மக்கள்  கட்சியினர்  நமது பாரம்பரியம் மிக்க மதுரை ஆதீனத்தின் மரியாதையை  மீட்கும்
பொருட்டும் தெய்வீகத் தன்மையோடு கடந்த
பலநூற்றாண்டுகளாகத் தமிழும் சைவம் காத்து வந்த மதுரை
ஆதீனத்தை, ஒரு அயோக்கியக் களவாணியின் கைக்குள் சென்று விடாது காக்கும் பொருட்டும்  மரபு,வழியில் போராட்டத்தைத்
தொடங்கி உள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக மதுரை ஆதீனத்தில் நடந்து வரும்
எதிர்ப்புக்கள், போராட்ட நடவடிக்கைகள் அதற்குப் பத்திரிகைகளில்
வந்த செய்திகள் இவற்றைத் தொகுத்து,இந்து மக்கள் கட்சியின்
தலைர் திரு அர்ஜுன் சம்பத் அவர்கள் மின்னஞ்சலில் நமக்குச்
செய்தி அனுப்பி உள்ளார்.

அந்தச் செய்தியின் சாரம்சத்தைப் பார்த்தால்292 ஆவது மதுரை
ஆதீன கர்த்தரானவர் ஏதோ ஒரு வகையில் சுய நினைவின்றி,
தன்புத்தியில் நில்லாது 293 ஆவது ஆதீனமாக பிடாதியில் இருக்கும் நித்தியானந்தாவை நியமித்து இருக்கிறார் என்பதுதான் உண்மை
என உணர முடிகிறது.

நித்தியானந்தா வெட்கமும் விவஸ்தையும் கெட்டவர் என்பது
நாடறிந்த உண்மை.வழக்கு மன்றத்தில் இவர் மீதான குற்றங்கள்
சுமத்தப் பட்டு வழக்கு  நிலுவையில் உள்ளது. துறவின் மேன்மைமிக்க அனைத்து லட்சணங்களையும் துறந்து விட்டுத் தலைமறைவாகத்
திரிந்த ஒரு கிரிமினல்தானே?.

அந்த நபரை அவருக்குச் சற்றும் தொடர்பே இல்லாத இந்த மதுரை
ஆதீனம் தேடிச் சென்று அவருடைய பிடாதி ஆசிரமத்தில் சில நாட்கள்
தங்கியிருந்து அங்கேயே மதி மயங்கிக் கிடந்து அந்த மயக்கம் தீர்வதற்குள்ளாக அவசரம் அவசரமாகப் பிடாதியிலே நித்திக்குப் பட்டாபிஷேகம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது?

நித்தியானந்தா மிகவும் நல்லவர்;வல்லவர்எனச் சான்றிதழ் அளித்து
இந்தக் கிழட்டு ஆதீனம் பேசவேண்டிய பெருமை யாது?

தமிழகத்திலும் தென்னகத்திலும் ஏராளமான சைவ மடங்களும் மடாதிபதிகளும் பிற துறவி மடங்களூம் இருக்க,அவர்களையெல்லாம்
கலந்து ஆலோசித்து விழாவை முடிவு செய்து எல்லோருடைய
வருகையிலும் வாழ்த்திலும் நடை பெற வேண்டிய ஒரு தெய்வீக
விழாவை ஒரே ஒரு தெருப் பொறுக்கியோடு சம்பந்தம் கொண்டு
திடீர் சாம்பார்,’ ‘திடீர்  ரசம்’ போல்திடீர் பட்டாபிஷேக’த்தைத்
தீர்மானிக்க வேண்டிய அவலம் ஏன்?

மதுரை ஆதீனம் மட்டுமல்ல;எந்த ஒரு ஆதீனமும் புதிய
வாரிசை நியமிக்கும் போது கடை பிடிக்க வேண்டிய எந்த ஒரு
மரபையும் பின்பற்றாமல் மரபு மீறியவராக ,நாக்கிலும் நடத்தையிலும் நரம்பின்றிச் செயல்பட்டிருக்கிறார்  இந்த292 ஆவதுசிட்டிங்’ (Sitting))
ஆதீனம் ; இவர் நியத்திருப்பது ஒருசீட்டிங்’  (Cheating)ஆதீனம்.

இந்து மக்கள் கட்சி தலைவர்
திரு அர்ஜுன் சம்பத்
‘இதில் புதைந்துள்ள பேரங்களும் 
அவலங்களும் அம்பலத்துக்கு 
வந்தாக வேண்டும்’ என்பதை ஆண்டவன் தீர்மானித்து விட்டான்;அதை இந்த 
அர்ஜுன் சம்பத் செய்கிறார் 
என நம்புகிறோம்.

இந்த விஷயத்திலும் விஷமத்திலும் பல கோடிகள் பல கைமாறி இருப்பதாக  மக்கள் 
சந்தேகம் கொள்கிறார்கள்; கோடிகளில் கொடி
பிடிக்கும் கேடிதான் நித்தியானந்தா என்பதை கடந்த காலம்
காட்டிக் கொடுத்திருக்கிறது.

ஆனல் நமக்குத் தெரிந்ததெல்லாம் இந்த மதுரை ஆதீனகர்த்தர்
பாரம்பரியம் மிக்க திருஞான சம்பந்தரின் திரு மடத்தின் பெருமைக்கு
அந்தக் கேடி,நித்தியை நியமித்ததன் மூலம்கோடிபோர்த்தி விட்டார் என்பதுதான்.

இந்த இருவரின் உறவுகளுக்குச் சட்ட ரீயாக நாம் கருமாதி
நடத்த வேண்டாமா?

எந்த மதத்திலும் செய்கின்ற பாவங்களுக்குப் பாவ மன்னிப்புக் கிடைக்கலாம்;பணமும் செல்வாக்கும் அங்கே அவற்றைச் சரி செய்து
விடலாம்.

ஆனால் இந்து மதம் அதை ஆமோதிப்பதில்லை நண்பர்களே.

பாவம் செய்கின்றவர் யாராக இருந்தாலும் அவர் எத்தகைய உயர் செல்வாக்கில் இருந்தாலும் செய்த பாவத்துக்கு உரிய தண்டனை நிச்சயம் உண்டு. 

பாரதி சொன்னானே “படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ‘அய்யோ’என்று போவான்”

இவர்கள் போவதை நாம் பார்க்கத்தானே போகிறோம்!

இவண்,
கிருஷ்ணன்பாலா
30.4.2012

இந்து மக்கள் கட்சித் தலைவர் திரு அர்ஜுன் சம்பத் அவர்களின் மின்னஞ்சல் செய்தி உள்ளது உள்ளவாறு,கீழே:

--------- Forwarded message ----------
From: Arjun Sampath 
>Date: 2012/4/30
Subject: இந்து அமைப்பின போராட்டம்

மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்ததை  எதிர்த்தும், ஆதீனத்தை மீட்பதற்காகவும், தமிழகத்திலுள்ள மற்ற மடாதிபதிகளை திரட்டி, போராட்டம் நடத்த இந்து அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை தேர்வு செய்தது தொடர்பாக ஆதீனத்திடம் நேரில் இந்த பிரசனை தொடர்பாக விளக்கம் கேட்க இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மதுரை ஆதீன மடத்திற்கு வந்தனர். இவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

பேரூர் திருப்பானந்தாள் மடாதிபதியின் தூதுவராக சுரேஷ்பாபு மட்டும் ஆதீனத்தை பார்க்க சென்றார். வெளியே வந்த சுரேஷ்பாபு, இந்துஅமைப்புகளை சேர்ந்தவர்களை வெளியே அழைத்து வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்: மதுரை ஆதீனம் சூழ்நிலை கைதியாக உள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள மடாதிபதிகளை ஆலோசனை செய்து ஆதீனத்தை மீட்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மதுரை ஆதீனத்தின் ஈனச் செயலுக்கு எதிராக இந்து மக்கள் கட்சியினரின் அறப்போர்
இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில்,‘ நித்யானந்தா நியமனத்தை பிற மடாதிபதிகள் ஏற்கவில்லை. மடாதிபதிகள் அனைவரையும் ஒன்று திரட்டி நித்யானந்தாவை நீக்கும் வரை போராடுவோம்என்றார். சீடர்கள் , போலீசார் மோதல்: ஆதீன மடத்தில் இந்து அமைப்பினர் உள்ளே இருந்த போது சீடர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரண்டு தரப்பினரும் கோஷம் போட்டனர்

இந்த பிரச்னை நடந்து கொண்டிருக்கும் போது மடத்தின் பின்வாசல் வழியாக நித்யானந்தா காரில் புறப்பட்டு சென்றார். பின்னணி என்ன: சைவ சமயத்தை பரப்பும் நோக்குடன் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் மதுரை ஆதீனத்தை தமிழ் திருஞானசம்பந்தர் தோற்றுவித்தார். இதன் 292,வது ஆதீனமாக அருணகிரிநாதசுவாமி இருந்தார். இளைய ஆதீனமாக பல ஆண்டுகள் பணியாற்றி, 291,வது ஆதீனம் மறைந்த பிறகு 1980,ல் ஆதீனம் பொறுப்பை ஏற்றார். சம்பிரதாயப்படி ஆதீனம் ஓலைச்சுவடி பார்த்து இளைய ஆதீனம் தேர்வு செய்யும் பழக்கம் உள்ளது. அதன்படி தான், தானும் தேர்வு செய்யப்பட்டதாக கூறி வந்தார்.

இந்நிலையில், 2004,ல் சுவாமிநாதன் என்ற 15 வயது சிறுவனை துறவறம் பூணச் செய்து இளைய ஆதீனமாக பட்டம் சூட்டினார். சிறிது காலத்தில் அவரை நீக்கி மடத்தை விட்டு வெளியேற்றினார். இதன் பிறகு 8 ஆண்டுகளாக தனக்கு வாரிசாக யாரையும் அவர் நியமிக்கவில்லை. ஒரு வாரம் முன்பு: இந்த நிலையில் பெங்களூரிலுள்ள நித்தியானந்தா ஒரு வாரத்திற்கு முன் மதுரை ஆதீனத்திற்கு வந்து சென்றார். இதன் பிறகு சில நாட்களில் மதுரை ஆதீனம் பெங்களூர் ஆசிரமத்திற்கு சென்று தங்கினார். திடீரென்று மதுரை 293,வது ஆதீனமாக நித்தியானந்தாவை தேர்வு செய்துள்ளதாக அறிவித்தார்.

நேற்று காலையில் மதுரை ஆதீனம், நித்தியானந்தாவுக்கு பட்டம் சூட்டினார். அப்போது நித்தியானந்தாவை புகழும் பாடல்கள் ஒலிபரப்பபட்டன. விழாவில் மரபுபடி தமிழகத்திலுள்ள வேறு எந்த ஆதீனங்களும் அழைக்கப்படவில்லை.

அன்புடன்,
அர்ஜுன் சம்பத் 
(இந்து மக்கள் கட்சி).

Sunday, April 29, 2012

மெய்ப் பொருள் தேடி....


அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

எனது அறிவுடையோர் அறிக’ என்ற
தொடர் ‘உலகத் தமிழர் மையம்’ 
வலைத்தளத்தில் இதுவரை இரண்டு
பகுதிகள் பதிவாகியுள்ளன.

முதல்
 பகுதி 3.10.2010 அன்றும் இரண்டாம் பகுதி 5.12.2010 அன்றும் பதிவாகி இருக்கின்றன்.


தலைப்பில் சொல்லப்பட்டது போலவே இது, அறிவார்ந்த சிந்தனையுள்ள அனைவருக்கும் மானுடவியல சார்ந்த
விஷயங்களை விருந்தாகப் படைக்கும் நோக்கம் கொண்டவை
எனது எழுத்துக்கள்..

எழுதப் பட்ட சரித்திரங்களில் உள்ள இடைவெளித் தடுமாற்றங்களை   எண்ணிப் பார்க்காது இருக்கின்றவர்கள் நாம்.

உலக நாகரீகத்தின் இமயச் சிகரம் இந்தியாதான். இது 
கால வரலாறுகளை எல்லாம் கடந்து நிற்கும் மெய்யறிவு.

ஆனால்,உலக சரித்தரமானது இந்த உண்மையை உரக்கச்
சொல்லாது, உறங்கிக் கொண்டுதான் சொல்கிறது.அதிலும் பல உளறல்களைத்தான் கேட்க முடிகின்றதே தவிர உண்மையான செய்திகளை உறுதிபடக் கேட்க முடியவில்லை.

இதற்கு காரணம் நாம் வரலாற்று ஞானத்தை வாடகைக்குகூட
வாங்கும் திறனற்றவர்களாக இருப்பதுதான்.

சொல்லப் பட்ட சரித்திரங்களைப் படித்தபோது அதில் சொல்லப்படாத  உண்மைகளைத் தேடும் தாகம் எனக்கு அதிகம் ஏற்பட்டது. அந்தச் சரித்திரத் தாகமானது அதன் போக்கில் இயல்பாகவே, ஜோதிட அறிவியல் தடாகத்தைக் கண்டது. அதன் இனிய நீரைச் சற்றுப் பருகிய பிறகே அந்த இளைப்பாறுதலின் சுகானுபவத்தைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

எனவே, அறிவுடையோர் அறிக’ எனும் இந்தத் தொடரை  ஜோதிட அறிவியலும் மானுடவியலும் கலந்த சரித்திரக் கலவையுடன்
எழுத முற்பட்டுள்ளேன்.

இதில் எனது,நோக்கம் –
இந்திய வேத சாத்திரங்களின் தொன்மையை, அவற்றின்
தொடமுடியாத தத்துவச் சிறப்பைத் தமிழர்களும் உணரவேண்டும்
என்பதும்,’உலகிற்கே
 தலையாயதான அதன் பெருமையை 
மறைக்கப்
பகுத்தறிவு என்ற பெயரால் முயலும் இருட்டு வாதங்களின் 
குருட்டுத்தன்மையையும், தமிழனைக் குனிய வைத்து, அவன்மீது
குதிரைச்சவாரி செய்து வரும் திராவிடப் பொய்களையும்
தோலுரிக்கச் செய்வதும்தான்.,

ஜோதிடஅறிவியலானது தொன்றுதொட்டு நமது தேசத்தின் தொடர்புக்கும் தூய்மைக்கும் ஞான இழையாக இருந்து, இந்த ஞாலத்தில் பாரதத்தின் சிறப்பைச் சிகரத்தில் வைத்துக் காத்துவரும் ஆற்றல் கொண்டது.

அது இந்திய வேத சாத்திரங்களின் ’ஒளி’ (Jyothish) என,
’கண்’(Vision) என
 ஓம்பப்படும் உறுபொருள்.

விதியையும் மதியையும் வித்தெனக் கொண்ட கருப்பொருள்.

நமது இந்திய வேத சாத்திரங்கள் மீது சாமான்ய மக்களிடையே
ஓர் தெய்வீக மதிப்பையும் பார்வையையும் தருவதே அதுதான்.

இது விஞ்ஞானங்களுக்கும் வெளிப்பாடாத மெய்ஞ்ஞானம்.

‘விண்வெளி அறிவியலையும் கடந்து நிற்கும் ஓர் தெய்வீக
அறிவியல் இது’ என்பதால் நம்மவர் அநேகம் பேருக்கு இதைப்
புரிந்து கொள்ளும் ஞானம் இல்லாது போயிற்று. அதனால்தான் அவர்கள்,‘அறிவு ஜீவிகள்’ என்று சொல்லிக்கொள்கின்ற
’பகுத்தறிவுப் பாமரர்’களின் வாதங்களில் மதிமயங்கிப் போய்,
நமது வேத சாத்திரங்களைப் பற்றிய அறிவையும் தெளிவையும் அடைவதில் திறன் குன்றிப் போய்விட்டார்கள்.எனவேதான், ஜோதிடஅறிவியல் பற்றிய ஞானத்தோடு எவராவது எழுத முனையும்போதும் பேசும் போதும் மவுனமாகி விடுகிறார்கள்.

நம்மிடையே இருக்கின்ற ’தமிழ் உணர்வாளர்கள்’ என்று சொல்லிக் கொள்கின்ற பலருக்கும் கூட இதே நிலைதான் என்பதை நான் அறிவேன்.

அது மட்டுமல்ல,இந்தத் தமிழ் உணர்வாளர்கள்கூட‘அந்தணர்களை ஆதரிப்பதும் பகுத்தறிவாளர்களைச் சாடுவதும் ‘ஏதோ,ஒரு தமிழ்க்
குற்றம்’ என்பதாகக் கற்பனை செய்து கொண்டு இந்த மெய்ஞ்ஞானம் பற்றிய நுண்ணறிவைத் தெளிந்து கொள்ளத் தயங்குகிறார்கள்.

நண்பர்களே,
நமது பண்டைய ரிஷிகளின் பரிணாமப் பிறவியாக அவதரித்தவர் 
சுவாமி விவேகாநந்தர்.

பல்லாயிரம் ஆண்டுகளாக நமது இந்தியப் பண்டிதர்களின்
பஜனை அறைகளில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த வேதஞானப் பொக்கிஷங்களை முதன்முதலாக சிகாகோ சென்று உலகப் பண்டிதர்களுக்கெல்லாம் உரைசெய்து பகிர்ந்தளித்தவர் அவர்தான்..

சுவாமி விவேகாநந்தரால்தான் ’உலகின் எல்லாச் சித்தாந்தங்களுக்குமான மூலப் பொருள் இந்தியாவிலிருந்துதான் இறக்குமதி ஆகி இருக்கின்றது’ என்ற உண்மையை உலக ஞானியரும் அறிஞர்களும் உணர்ந்தனர்.

விவேகாநந்தரின் ஞான விருந்துண்ட ஜெர்மன் செல்வந்தரான மாக்ஸ்முல்லர் தனது அளப்பரிய செல்வம் அனைத்தையும் இந்திய
வேத ஞானத் தேடலுக்கென்றே விதைத்தார்.

விளைவு:
இந்திய ஞான அறிவை உலகெங்கும் பரப்பும் அறிவுப் பெட்டகங்களாய் ’மாக்ஸ்முல்லர் பவன்’கள் உற்பத்தியாயின.

நமது வேத சாத்திரங்களின் வியத்தகு ஆற்றலை உணர்ந்து அதை
விருத்தி செய்து கொண்டவர்கள் நாமல்ல: யூத அறிஞர்களும் ஆங்கிலேயர்களும்தான்.

பருத்தி நம்முடையது. அதன் பகட்டான ஆடை அணிகலன்களை நாம் ஆங்கிலேயர்களிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கி அணிந்து பூரித்துக் கொள்கிறோம் இல்லையா?

இன்னும் சொல்லப் போனால், செல்லரித்துப் போயிருந்த நம் 
அறிவுச் செல்வ நூல்களை எல்லாம் மாக்ஸ்முல்லர் ஜெர்மனிக்கு எடுத்துச் சென்று மொழிபெயர்த்த பின்னர்தான் உலக அறிஞர்கள்
அனைவரும் நமது வேத சாத்திரங்களின் மெய்ப்பொருளை உணர்ந்தனர்.

நாமோ பகுத்தறிவுக்கு ஒவ்வாததென நம் மெய்ப் பொருளின் மேன்மைத் தரம் அறியாது கைப் பொருள் இழந்தவர்களாய் அறியாமைக் குழியில் வீழ்ந்துவிட்டு அந்நியன் வளர்த்துக் கொண்ட அறிவை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம்.

நான், கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு அந்த மெய்ப்பொருள் .இன்பத்தில் துய்த்தெழுந்த பின்னர் ‘யான் பெற்ற இன்பம்;பெறுக இவ்வையம்’ என்று ஓர் அசரீரி சொல்ல, இங்கு எழுதத் தலைப் பட்டுள்ளேன்.

உண்மையிலேயே, இது ’தமிழர்களுக்கு உண்மையானஅறிவுத் 
தேடலை நாடச் செய்யும் அறிவுப் பூர்வமான தொடர்’ என்பதை
மட்டும் இங்கே குறிப்பிட  விழைகின்றேன்.

பலர், இந்து மதம் தொடர்பாக சிறு சிறுவிளக்கங்களைச் 
செய்திகளைக் கூறும்படி எனக்கு எழுதுகின்றார்கள்.

நான் ஒரு மதப் பிரச்சாரகன் அல்லன்; நமது வேத,ஞானச் சித்தாந்தங்களின் தொன்மை குறித்தும் அதன் தொடர்புகுறித்தும்-சரித்திரங்களின் கூற்றில் உள்ள குறைபாடுகள்குறித்தும் எழுதி
முடிந்தவரை சமூகப் பண்பாட்டு அறிவியல் விழிப்புணர்வை
விதைத்திடவே விரும்புகின்றவன்..

சிலர் நினைப்பதுபோல் நான் ஒரு பார்ப்பனனோ;ஆரிய வருடியோ
அல்லன். சுத்தத் தமிழன்;அதிலும் ’கொங்கு’த் தமிழன். எனினும்,
அந்தணரை ஆதரிப்பவன்;‘குறள்மறை’ கூறும் ‘அறவோ’ராகிய‘ அந்த’ணரை..

இங்கே,மிகப் பெரும் சித்தாந்த மாயைக்கும் நடைமுறைக்கும்
எதிராக என்னுடைய எழுத்துக்கள் இருக்கும் என்பதால் அது கட்டாயம் அறிவு சார்ந்த வாசகர்களின் / படைப்பாளர்களின் கருத்தையும் நாடுகிறது.

எனவே,இதொடரை நான் தொடர்ந்து எழுதுவதற்கு இதைப்
படிக்கின்ற நீங்கள்,உங்கள் எண்ணங்கள்,கருத்தூட்டங்கள், எதிர்மறை விமர்சனங்கள், எடுத்துக்காட்டுகள் என்று எதை வேண்டுமானாலும்
எனக்கு எழுதலாம்;எழுத வேண்டும்.

அப்போதுதான் எனது விரல்கள் எழுத்து என்கிற வில்லை விவேகத்தோடு தொடுக்கும்; எண்ணங்களை வீறு கொண்ட அம்புகளாய் விடுக்கும்.

இத்தொடர் நமது தொன்மை வரலாற்றின் தொடர்புத் திறவு 
கோலாய்-ஒரு நூலாய் வடிவெடுக்கும்போது,அதில் உங்களுடைய சிறந்த விமர்சனங்களையும் பதிவு செய்து ஆவணமாக்க விரும்புகின்றேன்.

தரமான சிந்தனையுடையோரின் கருத்தூட்டங்களும் எதிர்மறை வாதங்களும்தான் சத்தான எழுத்தின் நோக்கத்தைச் சரியான இடத்தில் சேர்க்கும்.

எனவே,நண்பர்களே,
‘அறிவுடையோர் அறிக’ என் இத்தொடரை  உலகத் தமிழர் மையம்’வலைத் தளத்தில் (அதன் நுழைவுத் தடம்: http://ulagathamizharmaiyam.blogspot.com) படித்துகருத்துக் கூற விழைவோர்
அதிலேயே விமர்சனமாகப் பதிவு செய்திட வேண்டுகின்றேன்

நன்றி.

அன்புடன்,
கிருஷ்ணன் பாலா
29.4.2012
-------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு:
இப்பதிவு 14.12.2010 .ல் ‘உண்மையைத் தூண்டும் உலகத் தமிழர் மையம்’ என்னும் தலைப்பில் பதித்த கட்டுரையின் விரிவாக்கம்.

Saturday, April 28, 2012

நீதி நிச்சயம் வெல்லும்

அறிவார்ந்த நண்பர்களே, 
வணக்கம்.

முன் எப்போதும் இல்லாதவகையில் உலகத் தமிழர் மையத்தில் நாம் பதிவு செய்த ‘மதுரை ஆதீனத்தின் ஈனச்செயல்’என்ற கட்டுரையை ஒரே நாளில் ஆயிரக் கணக்கான தமிழ் உணர்வாளர்கள் உலகம் முழுவதிலும் இருந்து படித்துள்ளார்கள்.

இதிலிருந்தே மதுரை ஆதீனத்தின் அயோக்கியத் தனத்தின் மீது நம் தமிழர்களுக்குள்ள வெஞ்சினம் விளங்குகின்றது.

படித்த அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்.

நண்பர்களே,

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்;
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்;
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே!”

என்று
எப்போதோ திருமூலர் சொன்ன திருமந்திரத்தை மெய்ப்பிக்க வந்த
குருடர்கள்தாம் இந்த 292 ஆவது மதுரை ஆதீன கர்த்தரும் 293 ஆவது ’மதுரை ஆதீனம்’ என பட்டம் சூட்டப்பட்டுள்ள பிடாதிப் பெருச்சாளியும்.

கூட்டிக் கழித்தால் இந்த இருவருமே 420க்கள்தாம். 
இந்தக் குருடர்கள்  எந்தக்குழியில் விழுந்தால் என்ன?

ஆனால்-

1500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட நமது  தெய்வீகத் திருமடத்தை, தேவாரம் பாடி அருளிய  திருஞானசம்பந்தாரால் தோற்றுவிக்கப்பட்ட திருஞான பீடத்தைக் களங்கப் படுத்த இவர்களுக்கு எவ்வித யோக்கியதையும் இல்லை.

இது விஷயமாக மடத்தோடு தொடர்பும் அதற்கான மரபு வழி உரிமையும் உள்ள சான்றோர் எவரேனும் வழக்கு மன்றம் சென்றால் நிச்சயம் நீதி பேசும்.

எனினும்
‘பணம் பாதாளம் வரை பாயும் என்பது பொய்; அது வேதாளம் வரையும் பாயும்’ என்று  நிரூபித்துள்ள இந்தக் கோடங்கிக் குரங்குகளின் கூட்டில், மாட்டிக் கொள்ளாத ’மாண்புடை மனிதர் யாரேனும் இதற்கு,  முன்வர வேண்டும்’ என்பதே நம் எதிர்பார்ப்பு.

நிச்சயம் வருவார்கள்: நீதி தன் மேன்மையை நிச்சயம் நிலை நிறுத்தும்.

குருட்டுக்கு வெளிச்சம் புரியாது;ஆனாலும்
இருட்டுக்கு நீதி விலகாது நண்பர்களே!

அரசு அன்றே கொல்லும்;
தெய்வம் நின்று கொல்லும்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
28.4.2012

Friday, April 27, 2012

மதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்!


அறிவார்ந்த நண்பர்களே,

தமிழ்நாட்டின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று மதுரை ஆதீனம். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டு சைவமும் தமிழும் தழைத்தோங்கி நிற்க ஆலென வளர்ந்து அருகென வேரூன்றி தமிழரின் பண்பாட்டுச் சின்னமாய்த் திகழ்ந்து வந்த இந்த ஆதீனத்தின் பாரம்பரியச் சிறப்பைப் பாழ்படுத்தி, அதைத் தன் இஷ்டம்போல் அரசியல் கூத்து நடத்தும் அரங்கமாய் மாற்றியிருக்கிறார், இப்போதுள்ள ஆதீன கர்த்தர்.

இவர் ஆதீனமாய்ப் பொறுப்பேற்ற நாள் முதல் கத்தியும் துப்பாக்கியுமாய் அலைந்த துர்ப்பாக்கியவானாகாத்தான் தெரிந்தாரே தவிர, தேவாரம் காத்த ஆதீனமாய் அவதானம் செய்யவே இல்லை.

மதுரை ஆதீனத்துக்கும் பிடாதிப் பீடைத் தானத்துக்கும் என்ன தொடர்பு?

தமிழ்த் தொண்டும் தெய்வத்தொண்டும் புரிந்து காலம் காலமாகப் பாரம்பரியம் காத்து வந்த மதுரை ஆதீனம் எங்கே?

அரைகுறை ஆடைகளுடன் - சில சமயம் அதுவுமே இல்லாமல் அரம்பையர், ஊர்வசிகள் தொண்டு புரிய காமக் களிநடம் புரிந்த பிடாதிப் பித்தாலாட்ட பீடம் எங்கே?

கோவணம் கட்டிய காவிக்கும் கோவணமே கட்டாத பாவிக்கும் கூறு போட்டுப் பொருள் சொல்லத் தெரிந்தவர்கள் நாம் என்பது பிடாதி நித்திக்கும் மதுரை நெத்திக்கும் புரிய வேண்டும்.

உமையவளிடம் ஞானப்பால் அருந்தி தெய்வத் திருப் பாக்களை நாம் அருந்தி உருகப் பொழிந்த திருஞான சம்பந்தர் எங்கே? அவர் பாதம் பட்ட இடத்தில் தலையால் நடக்க வேண்டிய இந்த அஞ்ஞான சம்பந்தர் எங்கே?

இவர் ஆதீன கர்த்தராக வந்த பாதை யாதென இவரது மனச் சான்றுக்குத் தெரிய வேண்டும்?

மனச் சான்றே இல்லாத பலவீன கர்த்தராக இந்த 292 ஆவது 
ஆதீனம்; எல்லாப் பலவீனங்களின் மொத்த உருவமாக உலாவந்து கொண்டிருக்கும் ஒருவனை, அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டு,சிறைக் கம்பிகளை எண்ணி விட்டு கொஞ்சம் கூட வெட்கமின்றி, தனக்கிருக்கின்ற பற்களை எல்லாம் வெளியே தெரியக் காட்டிக் கொண்டு அதற்குப் ’பரம்ஹம்ச நிலை’ என்று விளக்கம் வேறு சொல்லிக் கொண்டு ஜாமீனில் திரியும் கபடச் சாமியாரைத் தனது அடுத்த வாரிசென- மதுரை ஆதீனத்தின் 293 ஆவது பட்டம் என அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

நமது இந்து தர்மத்தை வேறு எந்த மதத்தவரும் அழிக்க வேண்டியதில்லை. கோடாரிக் காம்பாய்க் கொலுவீற்றிருக்கும் இத்தகைய ஆதி-ஈனர்களே போதும். அடுத்தவர் கேலி பேசவும் அந்நியர் கூலி பேசவும் நாம் தலை குனிந்து தரம் இழந்து போக வேண்டியதுதான்.

நித்தியானந்தாவுக்கு துறவி எனச் சொல்லிக் கொள்ளக் கடுகளவும் யோக்கியதை இல்லை. யோகத்தை விற்றுக் காசு பண்ணி போகத்தை அனுபவிக்கும் விவஸ்தை கெட்ட காவி வியாபாரி; கபடச் சந்நியாசி நித்தியானந்தா,

அந்த நபருக்கு 293 ஆவது மதுரை ஆதீனம் எனும் பட்டம்; இப்போதைய 292 ஆவது மதுரை ஆதீனம் அறிவித்துள்ளது.

யாரும் எதிர்பாராத மதுரை ஆதீனத்தின் இந்த ஈனச் செயல் கண்டு உலகத் தமிழர்கள் எல்லோரும் தலை கவிழ்ந்து போய் விட்டார்கள்.

மானமுள்ள தமிழரும் மரபு போற்றும் யாவரும் இந்த
ஈனம்கெட்ட நடத்தையை எதிர்க்க வேண்டும் அல்லவா?

இந்த அக்கிரமத்தை அனைவரும் ஒரே குரலில் கண்டிக்க வேண்டும்;
சான்றோரும் ஆன்றோரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்; 
தமிழ் நாட்டின் பிற ஆதீன கர்த்தர்களும் மடாதிபதிகளும் வெளிப்படையாக கண்டித்து மதுரை ஆதீனத்தைப் புறக்கணிக்க வேண்டும்.அவர்கள் ஒருமித்துக் கூடிக் கலந்து, தகுதி மிக்க தமிழ்ச் சான்றோன் ஒருவரை மதுரை ஆதீனகர்த்தராக அறிவிக்க வேண்டும்.
அதற்கேற்ப தமிழக அரசும் சட்டத்தையும் மரபையும் காக்க நடவடிக்கை எடுத்து நீதி மன்றத்தின் வழிகாட்டுதலைப் பெற்று, மதுரை ஆதீனத்தைத் தகுதி நீக்கம் செய்யவும் இந்து அறநிலையத் துறை மூலம் உரிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் தயங்கக்கூடாது.

இந்து அறநிலைத் துறை என்பது இந்து தர்மத்தைக் காக்கவும்
நிலை நிறுத்தவும்தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.

இப்படியொரு அக்கிரமம்-அநியாயம் நடக்க அரசு அனுமதித்தால்,
இனி இங்கே இந்து தர்மம் நிலைக்காது நண்பர்களே.

இந்து தர்மம் இல்லையேல் இங்கே நாடு நிலைக்காது; நம் நாட்டின் சமத்துவ நெறியும் நிலைக்காது.

பேய்கள் அரசாளும்;பிணம் தின்னும் சாத்திரங்கள்.

காறி உமிழ்வீர் மதுரை ஆதீனத்தின் மயான நடத்தைகளை.
சீறி எழுவீர்; அதன் முந்தைய சிறப்புக்களை மீட்க!

இவண்,
கிருஷ்ணன்பாலா 
28.4.2012