Sunday, April 29, 2012

மெய்ப் பொருள் தேடி....


அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

எனது அறிவுடையோர் அறிக’ என்ற
தொடர் ‘உலகத் தமிழர் மையம்’ 
வலைத்தளத்தில் இதுவரை இரண்டு
பகுதிகள் பதிவாகியுள்ளன.

முதல்
 பகுதி 3.10.2010 அன்றும் இரண்டாம் பகுதி 5.12.2010 அன்றும் பதிவாகி இருக்கின்றன்.


தலைப்பில் சொல்லப்பட்டது போலவே இது, அறிவார்ந்த சிந்தனையுள்ள அனைவருக்கும் மானுடவியல சார்ந்த
விஷயங்களை விருந்தாகப் படைக்கும் நோக்கம் கொண்டவை
எனது எழுத்துக்கள்..

எழுதப் பட்ட சரித்திரங்களில் உள்ள இடைவெளித் தடுமாற்றங்களை   எண்ணிப் பார்க்காது இருக்கின்றவர்கள் நாம்.

உலக நாகரீகத்தின் இமயச் சிகரம் இந்தியாதான். இது 
கால வரலாறுகளை எல்லாம் கடந்து நிற்கும் மெய்யறிவு.

ஆனால்,உலக சரித்தரமானது இந்த உண்மையை உரக்கச்
சொல்லாது, உறங்கிக் கொண்டுதான் சொல்கிறது.அதிலும் பல உளறல்களைத்தான் கேட்க முடிகின்றதே தவிர உண்மையான செய்திகளை உறுதிபடக் கேட்க முடியவில்லை.

இதற்கு காரணம் நாம் வரலாற்று ஞானத்தை வாடகைக்குகூட
வாங்கும் திறனற்றவர்களாக இருப்பதுதான்.

சொல்லப் பட்ட சரித்திரங்களைப் படித்தபோது அதில் சொல்லப்படாத  உண்மைகளைத் தேடும் தாகம் எனக்கு அதிகம் ஏற்பட்டது. அந்தச் சரித்திரத் தாகமானது அதன் போக்கில் இயல்பாகவே, ஜோதிட அறிவியல் தடாகத்தைக் கண்டது. அதன் இனிய நீரைச் சற்றுப் பருகிய பிறகே அந்த இளைப்பாறுதலின் சுகானுபவத்தைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

எனவே, அறிவுடையோர் அறிக’ எனும் இந்தத் தொடரை  ஜோதிட அறிவியலும் மானுடவியலும் கலந்த சரித்திரக் கலவையுடன்
எழுத முற்பட்டுள்ளேன்.

இதில் எனது,நோக்கம் –
இந்திய வேத சாத்திரங்களின் தொன்மையை, அவற்றின்
தொடமுடியாத தத்துவச் சிறப்பைத் தமிழர்களும் உணரவேண்டும்
என்பதும்,’உலகிற்கே
 தலையாயதான அதன் பெருமையை 
மறைக்கப்
பகுத்தறிவு என்ற பெயரால் முயலும் இருட்டு வாதங்களின் 
குருட்டுத்தன்மையையும், தமிழனைக் குனிய வைத்து, அவன்மீது
குதிரைச்சவாரி செய்து வரும் திராவிடப் பொய்களையும்
தோலுரிக்கச் செய்வதும்தான்.,

ஜோதிடஅறிவியலானது தொன்றுதொட்டு நமது தேசத்தின் தொடர்புக்கும் தூய்மைக்கும் ஞான இழையாக இருந்து, இந்த ஞாலத்தில் பாரதத்தின் சிறப்பைச் சிகரத்தில் வைத்துக் காத்துவரும் ஆற்றல் கொண்டது.

அது இந்திய வேத சாத்திரங்களின் ’ஒளி’ (Jyothish) என,
’கண்’(Vision) என
 ஓம்பப்படும் உறுபொருள்.

விதியையும் மதியையும் வித்தெனக் கொண்ட கருப்பொருள்.

நமது இந்திய வேத சாத்திரங்கள் மீது சாமான்ய மக்களிடையே
ஓர் தெய்வீக மதிப்பையும் பார்வையையும் தருவதே அதுதான்.

இது விஞ்ஞானங்களுக்கும் வெளிப்பாடாத மெய்ஞ்ஞானம்.

‘விண்வெளி அறிவியலையும் கடந்து நிற்கும் ஓர் தெய்வீக
அறிவியல் இது’ என்பதால் நம்மவர் அநேகம் பேருக்கு இதைப்
புரிந்து கொள்ளும் ஞானம் இல்லாது போயிற்று. அதனால்தான் அவர்கள்,‘அறிவு ஜீவிகள்’ என்று சொல்லிக்கொள்கின்ற
’பகுத்தறிவுப் பாமரர்’களின் வாதங்களில் மதிமயங்கிப் போய்,
நமது வேத சாத்திரங்களைப் பற்றிய அறிவையும் தெளிவையும் அடைவதில் திறன் குன்றிப் போய்விட்டார்கள்.எனவேதான், ஜோதிடஅறிவியல் பற்றிய ஞானத்தோடு எவராவது எழுத முனையும்போதும் பேசும் போதும் மவுனமாகி விடுகிறார்கள்.

நம்மிடையே இருக்கின்ற ’தமிழ் உணர்வாளர்கள்’ என்று சொல்லிக் கொள்கின்ற பலருக்கும் கூட இதே நிலைதான் என்பதை நான் அறிவேன்.

அது மட்டுமல்ல,இந்தத் தமிழ் உணர்வாளர்கள்கூட‘அந்தணர்களை ஆதரிப்பதும் பகுத்தறிவாளர்களைச் சாடுவதும் ‘ஏதோ,ஒரு தமிழ்க்
குற்றம்’ என்பதாகக் கற்பனை செய்து கொண்டு இந்த மெய்ஞ்ஞானம் பற்றிய நுண்ணறிவைத் தெளிந்து கொள்ளத் தயங்குகிறார்கள்.

நண்பர்களே,
நமது பண்டைய ரிஷிகளின் பரிணாமப் பிறவியாக அவதரித்தவர் 
சுவாமி விவேகாநந்தர்.

பல்லாயிரம் ஆண்டுகளாக நமது இந்தியப் பண்டிதர்களின்
பஜனை அறைகளில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த வேதஞானப் பொக்கிஷங்களை முதன்முதலாக சிகாகோ சென்று உலகப் பண்டிதர்களுக்கெல்லாம் உரைசெய்து பகிர்ந்தளித்தவர் அவர்தான்..

சுவாமி விவேகாநந்தரால்தான் ’உலகின் எல்லாச் சித்தாந்தங்களுக்குமான மூலப் பொருள் இந்தியாவிலிருந்துதான் இறக்குமதி ஆகி இருக்கின்றது’ என்ற உண்மையை உலக ஞானியரும் அறிஞர்களும் உணர்ந்தனர்.

விவேகாநந்தரின் ஞான விருந்துண்ட ஜெர்மன் செல்வந்தரான மாக்ஸ்முல்லர் தனது அளப்பரிய செல்வம் அனைத்தையும் இந்திய
வேத ஞானத் தேடலுக்கென்றே விதைத்தார்.

விளைவு:
இந்திய ஞான அறிவை உலகெங்கும் பரப்பும் அறிவுப் பெட்டகங்களாய் ’மாக்ஸ்முல்லர் பவன்’கள் உற்பத்தியாயின.

நமது வேத சாத்திரங்களின் வியத்தகு ஆற்றலை உணர்ந்து அதை
விருத்தி செய்து கொண்டவர்கள் நாமல்ல: யூத அறிஞர்களும் ஆங்கிலேயர்களும்தான்.

பருத்தி நம்முடையது. அதன் பகட்டான ஆடை அணிகலன்களை நாம் ஆங்கிலேயர்களிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கி அணிந்து பூரித்துக் கொள்கிறோம் இல்லையா?

இன்னும் சொல்லப் போனால், செல்லரித்துப் போயிருந்த நம் 
அறிவுச் செல்வ நூல்களை எல்லாம் மாக்ஸ்முல்லர் ஜெர்மனிக்கு எடுத்துச் சென்று மொழிபெயர்த்த பின்னர்தான் உலக அறிஞர்கள்
அனைவரும் நமது வேத சாத்திரங்களின் மெய்ப்பொருளை உணர்ந்தனர்.

நாமோ பகுத்தறிவுக்கு ஒவ்வாததென நம் மெய்ப் பொருளின் மேன்மைத் தரம் அறியாது கைப் பொருள் இழந்தவர்களாய் அறியாமைக் குழியில் வீழ்ந்துவிட்டு அந்நியன் வளர்த்துக் கொண்ட அறிவை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம்.

நான், கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு அந்த மெய்ப்பொருள் .இன்பத்தில் துய்த்தெழுந்த பின்னர் ‘யான் பெற்ற இன்பம்;பெறுக இவ்வையம்’ என்று ஓர் அசரீரி சொல்ல, இங்கு எழுதத் தலைப் பட்டுள்ளேன்.

உண்மையிலேயே, இது ’தமிழர்களுக்கு உண்மையானஅறிவுத் 
தேடலை நாடச் செய்யும் அறிவுப் பூர்வமான தொடர்’ என்பதை
மட்டும் இங்கே குறிப்பிட  விழைகின்றேன்.

பலர், இந்து மதம் தொடர்பாக சிறு சிறுவிளக்கங்களைச் 
செய்திகளைக் கூறும்படி எனக்கு எழுதுகின்றார்கள்.

நான் ஒரு மதப் பிரச்சாரகன் அல்லன்; நமது வேத,ஞானச் சித்தாந்தங்களின் தொன்மை குறித்தும் அதன் தொடர்புகுறித்தும்-சரித்திரங்களின் கூற்றில் உள்ள குறைபாடுகள்குறித்தும் எழுதி
முடிந்தவரை சமூகப் பண்பாட்டு அறிவியல் விழிப்புணர்வை
விதைத்திடவே விரும்புகின்றவன்..

சிலர் நினைப்பதுபோல் நான் ஒரு பார்ப்பனனோ;ஆரிய வருடியோ
அல்லன். சுத்தத் தமிழன்;அதிலும் ’கொங்கு’த் தமிழன். எனினும்,
அந்தணரை ஆதரிப்பவன்;‘குறள்மறை’ கூறும் ‘அறவோ’ராகிய‘ அந்த’ணரை..

இங்கே,மிகப் பெரும் சித்தாந்த மாயைக்கும் நடைமுறைக்கும்
எதிராக என்னுடைய எழுத்துக்கள் இருக்கும் என்பதால் அது கட்டாயம் அறிவு சார்ந்த வாசகர்களின் / படைப்பாளர்களின் கருத்தையும் நாடுகிறது.

எனவே,இதொடரை நான் தொடர்ந்து எழுதுவதற்கு இதைப்
படிக்கின்ற நீங்கள்,உங்கள் எண்ணங்கள்,கருத்தூட்டங்கள், எதிர்மறை விமர்சனங்கள், எடுத்துக்காட்டுகள் என்று எதை வேண்டுமானாலும்
எனக்கு எழுதலாம்;எழுத வேண்டும்.

அப்போதுதான் எனது விரல்கள் எழுத்து என்கிற வில்லை விவேகத்தோடு தொடுக்கும்; எண்ணங்களை வீறு கொண்ட அம்புகளாய் விடுக்கும்.

இத்தொடர் நமது தொன்மை வரலாற்றின் தொடர்புத் திறவு 
கோலாய்-ஒரு நூலாய் வடிவெடுக்கும்போது,அதில் உங்களுடைய சிறந்த விமர்சனங்களையும் பதிவு செய்து ஆவணமாக்க விரும்புகின்றேன்.

தரமான சிந்தனையுடையோரின் கருத்தூட்டங்களும் எதிர்மறை வாதங்களும்தான் சத்தான எழுத்தின் நோக்கத்தைச் சரியான இடத்தில் சேர்க்கும்.

எனவே,நண்பர்களே,
‘அறிவுடையோர் அறிக’ என் இத்தொடரை  உலகத் தமிழர் மையம்’வலைத் தளத்தில் (அதன் நுழைவுத் தடம்: http://ulagathamizharmaiyam.blogspot.com) படித்துகருத்துக் கூற விழைவோர்
அதிலேயே விமர்சனமாகப் பதிவு செய்திட வேண்டுகின்றேன்

நன்றி.

அன்புடன்,
கிருஷ்ணன் பாலா
29.4.2012
-------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு:
இப்பதிவு 14.12.2010 .ல் ‘உண்மையைத் தூண்டும் உலகத் தமிழர் மையம்’ என்னும் தலைப்பில் பதித்த கட்டுரையின் விரிவாக்கம்.
Post a Comment