Monday, November 29, 2010

தமிழன் தொலைந்து கொண்டிருக்கின்றான்! (எழுதுகிறேன்-தொடர்-3)அருமை நண்பர்களேஅறிவுசால்தமிழர்களே,

இன்று எந்த ஒரு செய்தியையும் எளிதில் மக்களிடையே  கொண்டு செல்லும்  சாதனங்களில் ’தொலைக் காட்சி  ஊடகம் ’மிக முக்கியமானது.

இந்தத் தொலைக் காட்சி ஊடகங்கள் பிற மொழிகளைக் காட்டிலும் தமிழில் 
அதிக அளவில் இருப்பதைக் காண்கிறோம்.

இது நமது அறிவார்ந்தரசனைகளின் வடிகாலாஅல்லது
அறிவு கெட்ட தனத்தின் அலங்கோலமாஎன்பதைச் சற்றுச்  சிந்திப்பதுடன்,நமது பண்பாட்டின் பழுத்த ஈடுபாடு இப்போதெல்லாம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது  என்பதையும்
சிந்திக்க வேண்டும்.

ஒரு காலத்தில் பட்டிமன்றங்கள் என்றால் அதில் தமிழ் இலக்கியச்
சிந்தனைகள் புதிய புதிய  கோணங்களில்  சிறகடித்துப்  பறக்கும்
கலந்து கொள்வோருக்கெல்லாம்  ஒரு புதிய உலகத்தில் புகுந்து 
திரும்பியது போன்ற புத்துணர்வு பிறக்கும்.

நூல்கள் பல ஆய்ந்து;நுண்மான் நுழைபுலச் செறிவோடு சிந்தித்துப்
பேசக்கூடியசெந்தமிழ் வாணர்களே  பட்டி மன்றத்தின் 
பங்குதாரர்களாக இருப்பதும்;பண்புதனை நாடிமொழி அறிவை முனந்து தேடுகின்றவர்களே பார்வையாளர்களாய்  அங்கே  கலந்து கொண்டு பரவசம் அடைவதும்  பழைய நாள் நினைவுகள்….

ஆனால்இன்று?

விஞ்ஞானம்  வளர,வளர  மெய்ஞ்ஞானம் தேய்கின்ற 
விஷமத்தனமான கால கட்டத்தை எட்டியுள்ளோம்தொலைக் காட்சிகள்  பெருகி, தமிழரின் மானத்தையும்  பண்பையும் கூறு போட்டு விற்கும் ‘தெரு வியாபாரத்தைத்‘ தெளிவோடு’  நடத்தத் தொடங்கி விட்டன.

திருவிழாக்கள் தெரு விழாக்களாகிதமிழன் அதில் தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றான்.’அவன் திருவிழாவில் தொலைந்து போனான்’ என்பதை விடவும் திருவிழாவையே  தொலைத்து விட்டான் என்று சொல்வதே பொருந்தும்.

இன்று  நமது  தமிழ் மொழியில் நடத்தப் படும்  “தொலைக் காட்சிச் சேவைகளில் (?) மேலோங்கி இருப்பது,  கருமமா? தருமமா?” என்று தலைப்பிடுவதற்குக்  கூட, தருமம்  அதில் இல்லாது  போயிற்று.

கண்ணறாவிக் கருமங்களேகாட்சிகளாகப் போட்டி போட்டு
ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் இன்றைய தமிழ் இளைய  நெஞ்சங்களில்  நஞ்சையே விருந்தாகப் படைத்துக் கொண்டிருக்கின்றன.

எவராவதுநல்ல சிந்தனை ஒழுக்கம் உள்ள பேச்சாளரை
கவிஞரை, பேராசிரியரை, தமிழறிஞர்என்று சொல்லிக் கொள்கின்றவர்களை, எழுத்தாளரைப் பார்த்து  “இதைஎல்லாம்  நீங்கள் விமர்சிக்கக் கூடாதாஎனக் கேட்கலாம் என்று  எண்ணி  அவர்கள் வீட்டுக்குப் போனால்அவரோ, உங்கள் உள்ளங்களில்
ஓங்கி இடம் பிடித்து, தமிழர்கள்  வாழும் இல்லங்களில் எல்லாம்  ஓயாது  ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் உற்சாக டான்ஸ் தொடரின் அடுத்த வார  ’புரோகிராமுக்கு’  ஒத்திகைக்குப்  போகும்' அவசரத்தில் இருக்கின்றார்.

எங்கே சென்று தலையை எதில் முட்டிக் கொள்ள?
தமிழனின்  ரசனை தலை கீழாகவே மாறிப் போய் விட்டது!

இன்று, ஏதாவது ஒரு பிரபலமான தொலைக் காட்சியில்குத்தாட்டம்
போடும் குமரிகளுக்கு நடுவே, நடுவராகத் தான் தோன்றி, ’தான்தோன்றித் தனமாக  நாலு வார்த்தைகள் பேசவில்லைஎன்றால்,‘’தன் பெண்ணாட்டி தன்னை மதிக்க மாட்டாளே” என்ற பயம் அநேகமாக இன்று எல்லாத் தமிழ் அறிஞர்களையும் அப்பிக் கொண்டுவிட்டது; கவிஞர்களை எல்லாம் கவ்விக் கொண்டு விட்டது!

 ”நீ எல்லாம் என்ன தமிழ் அறிஞன்? பெரிய பிரபலம்?;’ என்று கேட்டு விடுவாளோ?” என்ற பயம்,

ரெண்டுங்கெட்டான்’ அர்த்தத்தில் இரட்டுற மொழியும் சினிமாப் பாட்டுக் கூத்தரங்கம்கண்டவனோடு காமம் கொண்டு கழுத்தறுப்பு வேலைகளை லீலைகளாய்ச் செய்யும் மகளிர்’ பற்றிய தொடர்கள்:விதம் விதமாய்  விநாசகாலத்தின்  விபரீத எண்ணங்களையே விதைக்கும் தொடர்கள்; ‘நகைச்சுவை’  என்ற பெயரில் ’நகைப்புக்குரிய நாலாந்தரக் காட்சிகள்…” என்று   மாற்றி 
மாற்றி சினிமாப் பாணியில் அல்லது சினிமாக் காட்சிகள் ஒளிபரப்பப் படுவதே, அல்லாது  தமிழுக்கும் தமிழர் உயர்வுக்கும் ஆன விஷயங்களை எந்தத் தொலைக் காட்சியில் காண முடிகிறது?
சொல்லுங்கள்  நண்பர்களே?

எழுதுகின்றவனாகட்டும்;எண்ணங்களில் எழும்புகின்றவனாகட்டும்;
படைக்கின்றவனும் பார்க்கின்றவனும் இந்தத் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் இடம்  பெறுவது ’ஏதோ வாழ்வின் பேரின்ப நிலையான 
வீடுபேற்றை’ அடைகின்ற பாக்கியம் போல் அல்லவா, பாவித்துப் பரவசம் கொள்கின்றான்?

நன்மை பயப்பது  எது?; நம்மைப் பாதாளத்தில் வீழ்த்தும் தீமை எது?’ 
என்கிற பகுமானம் அற்றவனாய்அவமானம் உற்றவனாய்த் தமிழன் 
தரம் கெட்டுப் போய்க் கொண்டிருக்கின்றான்

அவன் தரம் கெட்டுப் போவதற்கே தளம்போடும் தொலைக் காட்சிகளின்
கேடு பற்றி எந்தத் தமிழ் அறிஞாராவது பேசினால்எழுதினால் அவரை
என்  வழிபாட்டுக்குரிய தெய்வமெனத் தொழுவேன்.

மாறாகஎங்கும் தமிழ்எதிலும் தமிழ்என்று பேசி இறுமாப்புக் கொள்கிற அரசியல்வாதிகளும் அவர்களின் பின்னே சென்று ‘லாலி’  பாடுகின்ற தமிழ்ச் சிந்தனையாளர்களும்  இன்றுள்ள  நிலையில் தமிழுக்குக் குழிதோண்டிக் கொண்டிருக்கின்ற கொடுமை கண்டு உள்ளம் பதறுகிறதே!

இன்று வெளி நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் எல்லாம் நமது தமிழ்த்
தொலைக் காட்சிகள் மூலம் நமது கலாச்சாரம் என்று நாம் எதனைக்
கற்றுக் கொள்ள முடியும்அவர்களின் பிள்ளைகள்  எப்படி நமது 
பண்பாட்டைக் கற்று  அதன் வழி நடப்பார்கள்?

அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு சின்னஞ் சிறிசுகள் போடுகின்ற குத்தாட்டக் காட்சிகள் தான் நமது கலாச்சாரம்என்று
மனதில் பதித்துக் கொண்டு  அவர்களும் அதை மேலும் நவீன முறையில் வெளிப் படுத்தும் யுக்திகளைத்தானே சிந்திப்பார்கள்?

மேலைநாட்டுக் காலாசாரத்தையே காணமல் போகச் செய்யும் அளவுக்கு,இன்றைய தமிழ் இளைஞர்களும் இளம் பெண்களும் தங்களை உருவும் மாற்றிக் கொண்டுள்ளனர்;கருவும் தீட்டிக் கொண்டுள்ளனர்.

இன்னும் ஒரு 10,15 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்க் கலாச்சாரம் பற்றிப் புத்தகங்களில் கூடப் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுப் போனாலும்
போய் விடும்நமது தமிழ் இனத்தின் தனித் தன்மை முற்றாக அழிக்கப் பட்டு அதன்  முனை மழுங்கிப் போய் விடும். மீண்டும் கரடு முரடான கற்கால வாழ்வை நோக்கித்தான்  நமது பாதை செல்லும்.

இதை என்னும்போது, இதற்கு வழி அமைத்தவர்களில் தலையாயவர் ’கலைஞர் கருணாநிதி’ என்கிற கோபம் நமக்கெல்லாம் இயல்பாகவே
ஏற்படுகிறது.

நண்பர்களே,
தமிழைதமிழ் இனத்தை வாழ வைக்கும் ஒரே தலைவர்’ என்று புகழாரம் சூட்டிக் கொண்டு, தமிழின் பேரால் அரசியல் நடத்தி, ஆட்சியைப் பிடித்தவரின் அளப்பரிய சாதனைகளைத்தான் இன்று கண்கூடாகத்தான் கண்டு வருகிறோமே!

தமிழும் தமிழர் பண்பாடும் எதிர்காலத்தில் என்ன ஆவது என்ற சிந்தனை இவருக்கும் இங்குள்ள ஒருவருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

சென்ற முறை ஆளும் கட்சியாக இருந்து,அடித்த கொள்ளைகளிலும் கூத்துக்களிலும் தமிழ்ப் பண்பாடும் கலாசாரமும் நாசாமாக்கப் பட்டது.
அவர்கள்  குடும்பத்தார்  நடத்தும் தொலைக் காட்சிகள் ஒன்றுக்கொன்று  தங்கள் தயாரிப்புக்களை  வெளிச்சம் போட்டுக் காட்டி, ‘யார் அதிகம் தமிழர்களைக் கெடுக்க முடியும்?’  என்பதில் அல்லவா போட்டிபோட்டன: இன்னும் அதிகமாகப் போட்டும் வருகின்றன?

இந்தத் தொலைக் காட்சிகள் இன்று தமிழின் பெயராலும் தமிழர்களுக்காகவும் அதிக விளம்பரங்கள் பெற்று நடத்தப்.படுகின்றன. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சினிமாக் கூத்தாகவே இருக்க 'தமிழுக்கும் தமிழருக்கும்  அறிவுப்பூர்வமான  நிகழ்ச்சிகளையும் அவர்களின் பெருமை பற்றிய செய்திகளையும்  உலகெங்கும் பரப்பி விடக் கூடாதுஎன்பதில் உறுதியாக இருக்கின்றன.

வெளி நாடுகளில்,குறிப்பாக,பெரும்பாலும்  மலேஷியா, சிங்கப்பூர்  நாடுகளில் இம்மாதிரியான சினிமாக் கலைக் கூத்துக்கள் நடத்தப்படுவதும், அவற்றைப் படமாக்கி  மறு ஒளிபரப்புச் செய்து, உலகம் எங்கிலும் வாழுகின்ற தமிழர்களுக்கு அதைக் காட்டி, அதிகம் விளம்பரங்களைப் பெற்றுக் கோடிகளைக் குவித்து வருவதும்தான் நம் கண் முன்னே காணுகின்ற காட்சிகள் ஆயிற்றே!

ஆன்மிகம் மற்றும் பக்தி இலக்கியங்களில் அதிக ஈடுபாடுள்ளவர்கள்  மலேஷியா,சிங்கப்பூர் மற்றும் ஸ்ரீலங்காவைச்  சேர்ந்த தமிழர்கள்.
எனினும் சினிமா நடிகர்,நடிகைகளின் மீது அவர்கள் காட்டிவரும் மோகம் அதையும் மிஞ்சுகிறது.

நமது தொலைக்காட்சிகளின் பெரும் கலைச் சேவை(?) காரணமாகவே
உலகெங்கும் உள்ள  நமது தமிழ் இளைஞர்,இளைஞிகளிடையே
சினிமா நடிகர், நடிகைகளின் மீது அளப்பரிய  மோகமும் தாகமும் தலைக்கேறி, அது பற்றிய சிந்தனையும் மிதமிஞ்சி விட்டது.

எதிர் காலத்தில் தமிழனின் காலாச்சாரச் சீரழிவுக்கு இதை விடக் 
கேடானதோ அல்லது இதற்கு ஈடானதோ வேறு எதுவும்
இருக்க முடியாது.

தொலைக் காட்சிகளை மத்திய அரசும் நடத்துகின்ற போதும் அவற்றைப் பார்க்கின்றவர்களை மற்றவர்கள் ‘ஒருமாதிரியாகப் பார்க்கின்ற நிலைதான் இருக்கிறதுஅந்த அளவுக்கு இன்று தனியார் நடத்தும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளுக்கு ’அடிக்ட்’ (அடிமைஆகிவிட்டனர் நம் இளைஞர்,இளைஞிகள்...ஏன், நமது இல்லத்தரசிகளும்தான்.

இந்தியா மிகப் பெரும் கலாசாரப் பண்புள்ள நாடுஇதன் இதிகாசமும்
புராணங்களும் எந்தக் காலத்து மக்களுக்கும் மனித வாழ்வின் மகத்தான கடமைகளை எடுத்துச் சொல்பவை.

அதன் வழியே சென்று ஆயிரக்கணக்கான கதைகளையும் நீதிகளையும் 
நம்முன்னோர் சொல்லி வந்தனர்நீதிபோதனை வகுப்புக்கள் (Moral Classes) என்றுகூட தனிப் பாடத் திட்டம் தீட்டப் பட்டுவகுப்புக்களை நடத்தும் வழக்கம் 40 ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது.இதில் தனிக் கவனம் செலுத்திப் பள்ளிகள் நடத்தப் பட்டன.அப்போது 
தமிழ் ஆசிரியர்களுக்கு என்று தனி மரியாதை மாணவர்கள் மத்தியிலும் பிற ஆசிரியர்கள் மத்தியிலும் இருந்து வந்தது.

இன்று மாணவன் யார்ஆசிரியர் யார் என்று  (அறிவிலும் தோற்றத்திலும் அனுபவத்திலும்உணர முடியாத அளவுக்கு போதிக்கின்றவர்களின் தகுதிகள் இருக்கின்றன.

மாணவர்கள் ரசிக்கிறார்கள் என்பதற்காக நேற்று ஒளிபரப்பான சினிமாக் குத்தாட்ட நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான விஷயங்களையே
இந்த ஆசிரியர்கள் இன்றைய வகுப்புக்களிலும் எடுத்துச் சொல்லி,
அதில் தனது அறிவுத் திறனை மேலும் மெருகூட்டிக் காட்டி,கரவொலி
வாங்கும் நிலை.

தொலைக் காட்சிகளின் தாக்கம் காரணமாக இளைஞர்ளுக்கும்
இளஞிகளுக்கும் மேடை ஏறி, சினிமாத் தனமான விஷயங்களையே
ஸீன்காட்டும் சித்தாந்தம் இன்று வகுக்கப் பட்டு விட்டது.

பள்ளிக் கலைநிகழ்ச்சிகளில் கூட இவை ஊக்குவிக்கப் படுகின்றன
இத்தகைய பள்ளிகளில் தம் குழந்தைகளைச் சேர்க்கத் துடிக்கும்
தரவரிசையில் அல்லவோ தமிழன் நிற்கின்றான்?.

இதன் எதிரொலியாக, இன்று, ஒவ்வொரு மாணவனும் மாணவியும் சினிமாவில் வரும் கதாநாயகன்,கதாநாயகிகளாக மாறி மேடைகளில்
ஆடுவதும் பாடுவதும் கனவுகளில் மிதப்பதுமே இன்றைய பள்ளி
விழாக்களில் பளிச்சிடும் உண்மைகளாகிவிட்டன.

நம் குழந்தைகளின் எதிர்காலம் தொலைக் காட்சிகள் என்ற நரகத்தின்
மூலம் நிச்சயிக்கப் படுகின்றது. அந்த நரகத்தின் வாசலில் நத்தி
நின்று கொண்டு, நம்மவர்கள் தம் பிஞ்சுக் குழந்தைகளை நுழைப்பதற்குப் போட்டியிடுகிறார்கள்.

இல்லத்தரசிகளின் ஏகோபித்த சீரியல் எதுஎன்பதே இன்றைய மாதர் சங்கங்களின் மகத்தான பட்டிமன்றங்கள்.

எங்கும் ’சீரியல்’ என்பதே பேச்சு;இதில்
எல்லோரும் சமம் என்பதுண்மை ஆச்சு;
பங்கு கொண்டே திறமை காட்டுவோமே;அதில்
பரிசுகள் வெல்வதையே நாட்டுவோமே…”

என்று ஒரு புதிய பாரதி தோன்றிகவி எழுதினாலும் எழுதுவான்.

சரி.

இந்தத் தொலைக்காட்சி ஊடகங்களை அசுர பலத்தில் நடத்துவது; ஒன்று.பணம் படைத்த பெரும் நிறுவனங்கள்;அல்லது ’அரசியல் பலம்’ 
பெற்ற ஆளும் கட்சிக் குடும்பத்தினர்பெரும் பணம் படைத்த 
நிறுவனங்களின் தொலை காட்சி நிறுவனங்களை அரசியல் சக்தி படைத்த அரசியல்வாதிகளின் குடும்பத்தினர் காலப் போக்கில்,பங்கு வியாபாரச் சூதாட்டத்தின் மூலம் கபளீகரம் செய்யவோ, அதிக உரிமைகளை பெற்றுக் கொள்ளவோ வாய்ப்புக்கள் பெருகி விட்டன.

இன்றைய தொலைக்காட்சி நடத்தும் தொழிலானது, மிகப் பெரும்கேசினோக்கள்எனப்படும் சூதாட்ட விடுதிகளை விடவும் அதிக
அளவில் சுகத்தையும்பணத்தையும் சுருட்டுகின்ற தொழிலாக மாறி 
இருப்பதற்குக் காரணமே அரசியல் சக்திகளின் கைகளுக்குள்
இது, காப்பிட்டுக் கொண்டிருப்பதுதான்.

இந்த அரசியல் சக்திகளின் ஆதிக்கத்தினால் இந்த தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் அவர்களைப் போலவே ஒழுக்கமும் பண்பும்
சமூக அக்கறையும் இல்லாத தரங் கெட்ட நிகழ்ச்சிகளாகவே இருக்கின்றன. சமூகக் குற்றங்களை வளர்க்கின்ற காட்சிகளும்அவற்றைத் தூண்டுகின்ற  நிகழ்ச்சிகளுமே அதிகம் ஒளிபரப்பாகி காசுகள் அள்ளப்படுகின்றன.

நாய் விற்ற காசு குரைக்குமாஎன்ன?

நண்பர்களே,

ஒரு காலத்தில் – 1970-1975 வரை திருவிழாக்களில் மேடை போட்டு 
நடத்தப்படும் ‘ரெக்கார்டு டான்ஸ்களுக்குகாவல் துறையின் கட்டுப் பாடும் கண்காணிப்பும் இருந்ததுஆபாசமாக ஆடியதற்காக பெண் கலைஞர்கள் அவ்வப்போது கைது ஆகி வழக்குகள் பதிவு செய்யப் பட்டன..  (பாவம்,வயிற்றுப் பிழைப்புக்காகவேறு வழியில்லாமல் அந்தப் பெண் கலைஞர்கள் மேடைகளில்ரெக்கார்டு டான்ஸ்என்னும் பெயரில் உடல் ஆபாசத்தைக் காட்ட,அதில்ஜொள்ளு ’ விடும்  இளைஞர்களிடமும் பெரிசுகளிடமும் பேரம் பேசாமல்எக்ஸ்ட்ராவாகப் பணம் பெறும் யுக்தியைக் கையாண்டு வந்தனர்.)

அன்றுஎதை ஆபாச நடனம் என்று அரசாங்கம் அப்போது தடை செய்து
வந்ததோஅதையே இப்போது கோடிக்கணக்கான உள்ளங்களும்
இல்லங்களும் மகிழ தொலைக் காட்சிகள்,’நானாட...நீயாட...”என்று போட்டி போட்டுக் கொண்டு அதே ’ரெக்கார்டு டான்ஸ்களை வாரம் தவறாமல் நடத்திக் கோடிகளைச்சுருட்டிக்கொள்ள அனுமதிக்கிறது.
’அனுமதிக்கிறது’ என்றால், சட்டத்தை அந்தத் தொலைக் காட்சிகளை  நடத்துகின்றவர்கள் வசமே இன்றைய அரசியல்நிலை தந்து விட்டது என்பதுதான் விளக்கம்!

அந்தக் குத்தாட்டங்களுக்கு ‘மயில்’ என்றும்,’குயில்என்றும் 
இலக்கியப் பேர்’ சூட்டி அதில் எண்னற்ற இளைஞர்களையும் இளம் சிட்டுக்களையும் குத்தாட்டம் போட வைத்துக் குதூகலித்துக் கொண்டிருக்கிறவர் அல்லவா,  நம் செம்மொழிச் செம்மல்;
தமிழர்களின்(?) தனித் தலைவர்.

தமிழ்ப் பண்பாடு காக்கவும் மொழி இனம் போற்றவும் நாவையும் பேனாவையும்  ‘வாள்எனச் சுழற்ற வேண்டிய நமது கவிராஜர்களும்
தமிழ்அறிஞர்களும் அந்தச் செம்மொழித் தலைவருக்கு ஆலாபணை
பாடவும்; ஆரத்தி போடவும்வாலைச் சுருட்டிகொண்டல்லவோ  குலைகிறார்கள்;வளைகிறார்கள்.?

இவருடைய நெஞ்சிலும் அவரது குடும்பத்தினர் நடத்தும் தொலைக்
காட்சிகளிலும் இடம் பிடிக்கப் போட்டி போட்டுக்  கொண்டு
தம் பேனாவையும்நாவையும் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்,
நமது தீந்தமிழ்வாணர்கள்.

இதில் யார் முதலில் நிற்பது என்பதில் அவர்களுக்குள் கடும் போட்டி;
அடிதடி என்றும் கேள்வி.

இந்தக் கூத்தைத் தட்டிக் கேட்கும் தமிழ் ஆர்வலர்களின் ’லிஸ்ட்டை
இதில் தேடித் தேடிப் பார்கின்றேன்; ம்ம்கூம்அநேகர் முக நூலில் இருந்தே விலகிக் கொள்ளக் கூடத் தயராக  இருக்கிறோம்; ஆளை விடுங்கள்’  என்கிறார்கள், இந்த அறிவு ஜீவிகள்..

அந்தோ,தமிழர்களே...

நமக்கு இந்தமாதிரியான பேர்வழிகள்தானே தமிழ் பற்றிப் பேசக் கிடைத்திருக்கின்றார்களே!

“என்று தணியும் இந்த ‘சீரியல்’ மோகம்?
என்று விடியும் எங்கள் அறிவியல் வேகம்?
என்றமதிழிவுகள் அழிந்திங்கு போகும்?
என்றெமதெண்ணங்கள் உயர்வழி ஆகும்?”

-என்றுதான் பாரதி மொழியில் கேட்கத் தோன்றுகிறது.

புத்தியுள்ளவன் கேட்கக் கடவன்.

இவண்-
கிருஷ்ணன் பாலா

(கலைஞர் ஆட்சியில் இருந்தபோது 29.11.2010 அன்று பதித்த பதிவு இது. அப்போதும் இப்போதும் பொருந்தி நிற்கும் சிந்தனைகள்தாம்)