Friday, August 31, 2012

உணர்வோர் உணர்க!

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

‘பொய்ப்பொருள் காண்பதறிவு’

என்ற தலைப்பில் நேற்று முன் தினம் இவ்வலைத்தளத்திலும்  முகநூலிலும் 
திருக்குறளின்  பெருமையைச் சிறுமைப் படுத்தும் பெரியாரின் கருத்து ஒன்றைப் பற்றி  எழுதியிருந்தேன்.

டாக்டர் கே.கணேசன் என்ற நண்பர்  எனக்கு இப்பதிவு குறித்து மேலும் சில தகவல்களுடன்  மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அவருடைய மின்னஞ்சலை உள்ளது உள்ளவாறே கீழே  பதிவு செய்துள்ளேன்.

உண்மையாகவே தமிழை நேசிப்போரும் வாசிப்போரும் யோசிக்க வேண்டிய செய்தி அது. அதை நீங்கள் இங்கே கடைசியை படித்துப் புரிந்து கொள்ளலாம்.

டாக்டர் கணேசலிங்கம் அவர்களுக்கு நான் எழுதிய  பதில் இது; உங்கள் சிந்தனைக்கும் விவாதத்துக்கும் அது வர வேண்டும் என்பது என் அவா.

இப்பொழுதும் சொல்கின்றேன்:

“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்;அப்பொருள்
பொய்ப்பொருள் காண்ப தறிவு”

நன்றி.

தங்கள் அன்புள்ள,
கிருஷ்ணன்பாலா


டாக்டர் கே.கணேசலிங்கம் அவர்களுடைய மின்னஞ்சலுக்கு
----------------------------------------------------------------------------------------------------
எனது பதில் கருத்து:
----------------------------------


அய்யா டாக்டர் கணேசலிங்கம் அவர்களுக்கு,

வணக்கம்.

இன்றைய உலகில் நமக்கு,முன்னோர் சொன்னதன் வழியே பின்னேர்ப் பிடித்துச் செல்லும் பெருந்தகைமையும் பேராண்மையும் மிக மிகக் குறைவு.

உலகின் எல்லாச் சித்தாந்தங்களையும் விஞ்சி நிற்பது நமது வேத நெறியும் அதற்கிணையான தமிழர் நெறியும்தான்.

திருவள்ளுவரின் காலம் நிச்சயம் யாராலும் உறுதிப் படுத்த முடியவில்லை.
தன்னலம் கருதாது உலக நலம் கருதிப் படைக்கப்பட்ட 'உலகப் பொதுமறை -  திருக்குறள்’ என்ற சிறப்பை தமிழனாய்ப் பிறந்து, தமிழைக் கற்றுணர்ந்த எவரும் மறுக்க முடியாது.

அறிஞர் தெய்வ நாயகம், தாம் பெற்ற ஊதியத்துக்காக உண்மையாக உழைத்திருக்கின்றார்;நன்றி மறவாதவர் என்பதை அவருக்குப் பின் புலமாக இருந்த கிறிஸ்துவ நிதியம் கட்டாயம் ஏற்றுப் புளகாங்கிதம் கொண்டிருக்கும்.

உண்மையிலே கிறிஸ்துவப் பிரசாரம் செய்ய வந்த ஜி.யு,போப் மற்றும் கால்டு வெல் போன்ற மத குருமார்கள் திருக்குறளின் தொன்மை அதன் ஆழம் குறித்து வியந்து உருகி,உண்மைத் தமிழ்ப் பற்றாளர்களாக மாறிப் போய் இருக்கின்றார்களே தவிர, ‘திருக்குறளைத் தங்கள் கர்த்தரின் வழி நூல்’ என்று கிஞ்சித்தும் எண்ணிக் கிறங்கிப் போய் விடவில்லை.

அறிஞர் தெய்வ நாயத்தின் இத்தகைய மதவாதப் பற்றுக்கும் பணத்துக்கும்  அவருக்குப் பட்டம் வழங்கிய பல்கலைக் கழகத்தின் பின் புலம் பற்றிய புலன் ஆய்வுக்கும்  இன்றைய ‘இந்திய அறிவு சார் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுக்கவும் வழங்கிய பட்டத்தைப் பிடுங்கவும் தமிழருக்கு உரிமை உண்டு.

இதே புகழ் பெற்ற பல்கலைக் கழகம்தானே,பெரியாரைத்  ‘தந்தை’ என ஏற்றுத் தங்கள் ‘இனிஷியலையே’  மாற்றிக் கொண்ட பிள்ளைகளைக் குளிர்விக்கவும் மகிழ்விக்கவும் முனைவர் பட்டங்களை வாரித் தந்து பெருமைபட்டுக் கொண்டது?

உலகப் பொதுமறையை தங்கள் வேத நூல் கருத்துக்களின் சாரத்தில் எழுதப் பட்ட  'முதல் தமிழ் வேதம் ' என்று பின்னாளில் சாதிப்பதற்காக பணமும் பதவிகளும் பேரமும் இதன் பின்னணியில் நாறிக் கொண்டிருப்பதை நல்லறிவுடையோர் உணர்வர்; ஆனால்,பாமரர்களோ. ‘ஓ...அப்படியும் இருக்குமோ?” என்று வியப்பர்.

அதன்பின்  அத்தகைய ஆடுகளைத் ‘தங்கள் ஆடுகள்’  எனச் சந்தையில் எண்ணிக்கை காட்டி சில மேய்ப்பர்கள் உலகை ஏய்ப்பர். All for number games

இதுதான் உண்மை.
இவர்களுக்குத் தமிழை உண்மையாக ஆய்வதோ, மேய்வதோ நோக்கமல்ல:

பெரியார் போன்ற சீர்திருத்தக் கொள்கை பேசியோர்,தங்கள் எல்லைகளில் இருந்து வரம்பு மீறி, நமது தமிழின் மேன்மையைச் சிதைப்பதன் மூலம் அதன் நுட்பம் மிகும் அற நெறிகளையும் சமூகத்துக்கு அது விதித்துள்ள உயர் கட்டுக் கோப்புக்களையும் சிதைப்பதில் சிறிது வெட்கமின்றிச் செய்திருப்பதானது இத்தகைய சதி வலையில் சிக்கிய சிறுமைத் தனமே அன்றி வேறில்லை.

அவ்வாறு சிதைப்பதன் மூலமே தங்கள் வியாபாரத்தை எளிதாக்க முடியும் என்பது அவர்களின் கணக்கு.

திராவிடம் என்ற பெயரில்,அரசியல்,மத சித்தாந்தாந்தங்களில் ஆட்பட்ட,ஆட்டுவிக்கப் பட்டு அறிஞர் என்று தம்மை அடையாளப் படுத்த முயன்ற சில ‘கோடாரிக் காம்புகள்தாம், தமிழின் தொன்மையையும் அதன் உண்மையையும்  பிறிதொரு சித்தாந்தாந்தச் சிறுமையை முன்னிலைப் படுத்தும் உயர் சதியின் காரணமாக அடகு வைக்கப் பார்க்கின்றனர்.

நான் கிறித்துவத்தைக் குறை சொல்ல மாட்டேன்;ஆனால் அதைப் பரவ வைக்கும் முயற்சிகளுக்குள் புதைந்துள்ள பித்தலாட்டக்காரர்களின் அயோக்கியத்தனத்தை எதிர்த்து,தேவையான சந்தர்ப்பங்களில் அச்சமின்றி எழுதுகின்றேன்.

உணர்வோர் உணர்க!

நன்றி.

தங்களன்புள்ள,
கிருஷ்ணன்பாலா
31.8.2012

டாக்டர் கே.கணேசலிங்கம் அவர்களின் கருத்தூட்டம்:
-------------------------------------------------------------------------------------------

---------- Forwarded message ----------
From: Dr.K.Ganesalingam 
Date: 2012/8/31
Subject: Re: Fwd: பொய்ப்பொருள் காண்பதறிவு!
To: KrishnanBalaa


அன்புள்ள கிருஷ்ணன் பாலா,
தங்கள் உண்மை மிகுந்த தமிழ் எழுத்துக்கும் பணிக்கும் நன்றிகள்.

//இயேசுக்  கிறித்துவிடமிருந்து உபதேசம் பெற்று விவிலிய 
நூலிலுள்ள கருத்துக்களை எடுத்து திருவள்ளுவர் திருக்குறளை 
ஆக்கினார்

திருக்குறள்    கருத்துக்களை வைத்து சைவ சித்தாந்த 
நூற்கள் தமிழில் எழுதப்பட்டனஇந்த உண்மைகளை 
ஆராய்ந்து அறிந்து தெய்வநாயகம் என்ற பேரறிஞர் 
 "விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் - ஒரு ஒப்பீட்டாய்வு"  
என்ற ஆய்வு நூலை எழுதினர்.
இந்தத் தலைசிறந்த ஆய்வு நூலுக்காக தமிழகத்தின் 
புகழ் மிக்க பல்கலைக் கழகம்  அவருக்கு டாக்டர் பட்டம் 
கொடுத்துக் கௌரவித்தது.// 

தமிழரைத் தலைகுனிய வைக்கும்இதுபோன்ற 
இழி செயலைக் கண்டு தமிழ்   உணர்வாளர்களும்   
திராவிட இயக்கத்தினரும் கொதித்தெழவில்லை
டாக்டர் பட்டம் கொடுத்த பேராசிரியரும் பல்கலைக் 
கழகமும் கண்டிக்கப்படவோ தண்டிக்கப்படவோ
இல்லை

சுயமரியாதை பேசுபவர்கள் எந்த இழிநிலையையும் 
சுயமரியாதை என்ற பெயரில் ஏற்கவும் பொறுக்கவும் 
முன்னிற்கிறார்கள் .இது தமிழகத்தின் இன்றைய 
சாபக்கேடாக உள்ளது
  
தங்களைப் போன்றவர்கள் பலர் தோன்றினாலே 
இந்நிலை நீங்க முடியும்.

-ககணேசலிங்கம் 
Wednesday, August 29, 2012

பொய்ப் பொருள் காண்பதறிவு.

அறிவார்ந்த நண்பர்களே,

//சாந்தோமில் கிறித்துவப்பணி ஆற்றிவந்த புனித தோமசிடம் நெருங்கிப் பழகியும், ஞான உபதேசம் பெற்றும் இயேசு பெருமானின் கொள்கைகளை நன்கு உணர்ந்திருந்ததாலுமே வள்ளுவர் இத்தகைய சிறப்புமிக்க அற நூலை இயற்ற முடிந்தது //. 

என்று முகநூல் நண்பர் ஸ்ரீகந்தராஜா கங்கைமகன் அவர்கள் ஒரு   நிலைத் தகவலை இன்று (29.8.2012) தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

நான் இதை முற்றாக எதிர்க்கின்றேன். இதை என்றால்,பெரியார் சொல்லி இருக்கும் கருத்தை.

தமிழ் மரபுகளுக்கே உரிய சிந்தனைகளோடு, நமது, முன்னோர்  எவ்விதத்திலும் சாதி.மதம்,இன நோக்கம் இல்லாமல் உலக மாந்தர்கள் அனைவருக்கும் சொன்ன நீதிகள் யாவும்தங்கள் மதத்தின் தத்துவங்களைப் பின்பற்றியே சொல்லப் பட்ட கருத்துக்கள்என்று சொல்வதற்காக, மதப் பற்றோடுஅரிப்பெடுத்துத் திரியும் அரைகுறைகளுக்கு வேண்டுமானால் இது தீனியாகலாம்; ஆனால்,தமிழில் தோய்ந்து, ஆய்ந்த அறிஞர்களுக்கு தீக்குரலாய் ஒலிக்கக் கூடியது.

உண்மைக்கும் நமது முன்னோரின் அறிவுசார் சொத்துரிமைகளுக்கும் எதிரான இக்கருத்தைச் சொன்னதன் மூலம் நமது மெய்ஞ்ஞானச் செறிவை- பண்பாட்டை அந்நியர்க்கு அடமானம் வைத்து, மூடர்களின் உச்சுக் கொட்டலை வெகுமானமாகப் பெறும் விவஸ்தை கெட்ட சிந்தனையாக  இது வெளிப்பட்டிருக்கிறது.

தீக்குறளை ஓதோம்என்று ஆண்டாள் பாடியது இத்தகைய தீய கருத்துக்கள் கொண்ட செய்திகளை ஓத மாட்டோம்என்ற ஞானத்தை நம்மிடையே நடுவதற்குத்தான்.

ஆனால்திருக்குறளையே தீய குறள் என்பதாகத் திரிபு  வாதம் கொண்டு அந்தத் தீக்குறளை ஓத மாட்டோம்என்று ஆண்டாள் சொன்னதாக ஒரு அடியாள் தெருக்கூட்டம் சொதப்பித் திரியவில்லையா? அதுபோல்தான் இதுவும்.

பெரியார் சொன்னதே வேதம்என்று மூடத்தனமாக நம்பும் கூட்டத்துக்கும் மத வெறி உணர்வுகொண்டு கதைக்கும் கூட்டத்துக்கும் நான் வேறுபாடு காண்பதில்லை.

வள்ளுவன் காலத்துக்கும் புனிதர் தோமையரின் காலத்துக்கும் முடிச்சுப் போட்டுப் பெரியார் சொன்ன கருத்து முற்றிலும் ஆதாரமற்றது. அதை, அவரது மொழியிலேயே சொல்வதானால்வெங்காயம்’.

உரித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. கண்ணீர்தான் வரும்: இந்த மொக்கை வாதத்தை உரித்துப் பார்த்த மூடத் தனத்துக்காக

வள்ளுவனின் வான் புகழை வரைமுறைக்குள்ளாக்கும் வக்கிரப் புத்தி கொண்ட இக்கருத்து ஒரு செல்லாக் காசு.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்;அப்பொருள்
பொய்ப்பொருள் காண்ப தறிவு” 

என்பேன் நான்.

பெரியாரின் அறியாமையை இங்கே நினைவு படுத்திய நண்பருக்கு நன்றி.

இவண்-
கிருஷ்ணன்பாலா
29.8.2012

Sunday, August 26, 2012

பெரியோரே,வாழ்த்துங்கள்!


அருமை நண்பர்களே,
வணக்கம்.

தேனியில் இன்று  (26.8.2012) காலை 11 மணி அளவில் எனது நண்பரும் போடித் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு V.பன்னீர் செல்வம் அவர்களின் பேத்தியும் அவரது மகன் V.P.மணிமாறன்- மேனகா தம்பதியின் புதல்வியுமான செள.நகுல்யாவுக்கு காதணி விழா நடைபெறுகிறது.

தென் மாவட்டங்களில் இம்மாதிரியான குடும்ப விழாக்களுக்கு குடும்ப உறவுகளும் பிற சமுதாயத்து நண்பர்களும் கலந்து கொண்டு வாழ்த்துவதும்
 உறவின் அடையாளமாகவும் நட்பின் நாட்டமாகவும் விருந்தில் கலந்து கொண்டு கம்பீரமாக போட்டி போட்டுக் கொண்டு   ‘செய்முறை’ என்னும் மொய்வைத்துத் தங்கள் உறவின் தகுதியை காட்டிக் கொள்வதும் வித்தியாசமான நடைமுறை.

பேனரில் உள்ள கவிதையைப்
படிக்கும் விருந்தினர்கள்
இம்மாதிரியான குடும்ப விழாக்கள், மன வருத்தத்தில் விலகி இருக்கும் உறவுகளைக் கூட,ஒன்று கூட வைத்து விடும் சிறப்பை மதுரை ,தேனி மாவட்டங்களில் காண முடிகிறது.

எனது அருமை நண்பரின் பேத்தியை வாழ்த்தி நான் எழுதி இருந்த கவிதையை மிகப் பெரிய ஃப்ளக்ஸ் போர்டாகவைத்து அமர்க்களப்படுத்தி விட்டார் குழந்தையின் தந்தையும் எனது அன்பிற்குரியவருமான திரு மணிமாறன்.

செள. நகுல்யாவுக்கு உங்களின் வாழ்த்தும் ஆசிகளும் எனது கவிதையோடு கலக்கட்டும் என்பதென் விழைவு.

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
26.8.2012


Saturday, August 25, 2012

யார்,தமிழினத்தின் எதிரிகள்?

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

ஈழத் தமிழர்களின் ‘ஈழக் கனவுக்கு’நாங்கள்தான் ஒட்டுமொத்தக் குத்தகைதாரர்கள். இந்த உரிமையை வேலுப் பிள்ளை  பிரபாகரன் உயிர் விடுவதற்கு முன் எங்களுக்கு அளித்துச் சென்றுள்ளார்’ என்பதாகக் கதைத்துக் கொண்டு, இன்று தமிழகத்தில் பலர் காகிதப் புலிகளாக உருவெடுத்திருப்பதுடன், ஒருவரை ஒருவர் சினம் காட்டி உறுமிக் கொண்டு திரிகின்றனர்.

‘அவன்  யார் ஈழ உரிமை பற்றிப் பேச?’ என்று இவனும், ‘இவன் யார்;இவனுக்கு என்ன தகுதி, எனது தகுதியை எடைபோட்டுப் பேச?’ என்று அவனும் ஊடக யுத்தம் நடத்திக் கொண்டு தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

’தமிழன்’ -’ தமிழினம்’- ‘தமிழ்ப் பண்பாடு’- ‘தமிழ்த் தேசியம்’ என்றெல்லாம் தமிழின் பெயராலும் தமிழர்களின் பெயராலும் சிலர் தனித் தனி இயக்கங்களை  நடத்திக்கொண்டு,தங்களுக்குத் தாங்களே  ’மாவீரன்’ என்றும் ‘தமிழீழத்தின் விடிவெள்ளி என்றும் தாங்களே பிரபாகரனின் நெஞ்சில் இடம் பெற்ற ’தனி ஈழப் பிரதிநிதிகள்’ என்றும் ‘தம்’பட்டங்களப் பறக்க விட்டுக் கொண்டு மார்தட்டி வருகிறார்கள்.

’தமிழ் உணர்வாளர்கள்’ என்றொரு புதிய சாதியைத் தங்கள் சாதியெனச் சாதித்துக் கொண்டு முழங்கி.இங்கே சில்லறை வியாபாரம் செய்து வருகிறார்கள்.


சொல்லப் போனால் இந்தக் காகிதப் புலிகள் அந்த ஆயுதப் புலிகளை அடித்துத் தின்று வருகின்றன.

     
இவர்களுக்கு , ‘பார்ப்பனீய எதிர்ப்பு’  என்ற மாய்மாலச் சிந்தனை ஒன்றில் மட்டும்தான் ஒற்றுமை. மற்றதில் எல்லாம் ஒருவருக்கொருவர் பகைமையும் தாழ்மையும்  படுத்திக்கொண்டு செயல்படும் விவேகமற்ற  போக்குத்தான் சந்தி சிரித்துக் கொண்டு இருக்கிறது. 

தமிழைச் செம்மையாக எழுதத் தெரியாதவர்கள்கூட தமிழ் இயக்கம் என்ற பெயரில் தறுதலைக் கூட்டத்தை வளர்க்கும் வஞ்சக அரசியலே தவிர வேறில்லை இது.

தமிழுக்கு எத்தனை எழுத்துக்கள்? அதில்,உயிர், மெய்,உயிர்மெய்,ஆயுத எழுத்துக்கள் எவை?  அவற்றில் வல்லினம்,மெல்லினம், இடையினம்,குறில்-நெடில் என்றால் என்ன? என்று கேட்டால் விழி பிதுங்கும் வெட்டிப் பயல்கள் எல்லாம் தமிழியக்கம் என்று பேசும் அவலத்தை இங்குதான் காண முடிகிறது.

இவர்களின் புத்தியில்-பார்வையில் இங்குள்ள ‘அந்தணர்கள் எல்லாம் பார்ப்பனீயர்கள்;தமிழனுக்கு எதிரிகள்’ என்பது இந்த்த் தரம் கெட்டவர்களின் பிரச்சாரம்.

உண்மையான அந்தணன் எவரும் தமிழையோ,தமிழனையோ,தமிழ் இனத்தையோ கிஞ்சித்தும் கேலி செய்ததில்லை;கீறிக் காயப் படுத்தியதில்லை.

மாறாக,தமிழுக்கும் தமிழினத்துக்கும் தரமான சிந்தனைகளை அந்தணர்கள் அளித்துள்ளனர்.

காலம் காலமாக இம்மண்ணில் வாழ்ந்து,பிறருக்கு அறநெறியும் ஆன்மீக  நெறிகளையும் சொல்லி வரும் இனம் அந்தணர்கள்.

வேதம் படித்து அதன் வழி வாழும் அந்தணர்களை நிந்திப்பதும் அவர்களைத் தமிழினத்தின் விரோதிகள் என்று  சிந்திப்பதும் நமது தமிழ்ச் சமுதாயத்தில் விஷ விதைகளைத் தூவி, தமிழினத்தையே வேரறுக்கும் மூடர்களின் செயலாகும்.

தமிழ்ப் பண்பாட்டின் உயர் நிலையையும்  உன்னத நெறிகளையும்  பாரம்பரியமாகக் கட்டிக் காத்து வருவதில் அந்தணர்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது.

நம் மூதாதையர் அந்தணர்களை சமூகத்தின் உயர் மதிப்பில் வைத்து பன்னெடுங் காலமாக பணிவும் கனிவும் காட்டிப் போற்றி மதித்து வந்தனர்.

நம் அப்பனும் பாட்டனும் காட்டிய  இந்தப் பண்புக்கு எதிராக தமிழ்ச் சமூகத்தில் இனத் துவேஷத்தை எழுப்பி வரும் கேடர்கள் அறிவிலிகளே.

’இந்த அறிவிலிகளின் கூட்டத்துக்கு தலைவனாக எவன் வேண்டுமானாலும் இருக்கட்டும்; நாம் அவர்களுக்கு எதிர்த் திசையில்  இருப்போம்’என்கிறவனே உண்மைத் தமிழன்.

“யாதும் ஊரே;யாவரும் கேளிர்”

என்று கணியன் பூங்குன்றனார்  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
சொன்ன இணையற்ற சமூக உறவுப் பண்பு மொழியைப் பாழ்படுத்தும்
தமிழினத்துரோகிகளாகச் செயல்படுபவர்கள்தான் நம்மிடையே பிரிவினையை வளர்க்கும் பித்தலாட்டத்லைவர்களாய் பலர் முளைத்து, சாதீயை வளர்த்துக் கொண்டு அதில் குளிர்காயத் தலைப்பட்டுள்ளனர்.

சாதி இல்லை என்று சாதிப்பதும்
சாதியாலேயே சாதித்துக் கொள்வதும்
இந்தத் தலைவர்களின் சாதிதான்.

இவர்களுக்கு தமிழின் மாண்பும் புரியாது;மானுடத்தின் நோன்பும் தெரியாது.

‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந் நாடே;அவர்
சிந்தையில் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந் நாடே’

என்று பாரதி பாடிய  பரம்பரைப் பண்பை எதிர்வரும் சந்ததியினரும் உணரும் வண்ணம் தமிழ்ச் சாதிகளிடையே  நல்லிணக்கமும் நட்பும் பேணி வருவோம்.

இனத் துவேஷம் காட்டிப் பேசி எவரேனும்  இந்தப் பதிவுக்கு எதிராக இங்கே எழுத்தின் மாண்போடு எதிர் வரட்டும்;நாம் நமது எழுத்ததிகாரத்தின்  ஆட்சியை நிலை நாட்டுவோம்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
25.8.2012

Friday, August 24, 2012

Bush'y Cat...Bush'y Cat

வன்கொடுமைச் சிறுவனும் வரிப் புலிப் பூனையும்அருமை நண்பர்களே,

வணக்கம்.
டெல்லியிலிருந்து என் நண்பர்,வழக்கறிஞர் திரு இராம் சங்கர் அவர்கள் காணொளி ஒன்றை "Gussa sabhi ko aata hai" ( All are capable of anger)” என்று தலைப்பிட்டு எனது மின்னஞ்சலுக்கு அனுப்பியிருந்தார்.

சில வினாடிகளே ஓடும் அந்தப் படம் பல மணி நேரச் சிந்தனையை நம்முள் பதித்தி விடுகிறது.

ஆம்!

பூனைதான்,அது .

வன்மமாகத் தாக்கப் படும்போது பூனைகூட புலியாக மாறி.சீறி,தன்னைத் தாக்கும் எஜமானச் சிறுவனையும்  தள்ளி வீழ்த்தும் என்பதை நிரூபிக்கும் அரிய காணொளி அது.

’வலியவன்;எஜமானன்’என்று ஒருவன் தன்னைக் கருதிக்கொண்டு, எளியவனை, ‘அவன் தன் வீட்டு அடிமைதானே’ என்று சீண்டி,சீண்டித் தாக்கி விளையாடி இன்புற்றால், அந்த எளியவன் என்ன செய்வான்?

இதோ இந்தப் பூனைபோல்,புலியாக மறி விடுவான்.

இதன் எதிரொலியாய்-

இன்றைய நமது சமூக நிலையையும் எண்ணிப் பார்க்கும் கட்டாயம் இந்தக் காணொளியால் கருத்தில் பதிந்தது.

“ குனியக் குனியக்குட்டினால் கோழைகளும் கொதித்தெழுவர் குவலயத்தில், இந்தக் கூறுகெட்ட தமிழனைத் தவிர” என்பதே அது.

ஏனெனில் -
இங்கே புலிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள்எல்லாம்  எலிகளாகி விடுகின்றார்கள், முக்கியமான காலகட்டத்தில்!

அதேசமயம் எலிகள் எல்லாம் புலிகள் போல் பொய்க்குரலை எழுப்புகின்றன அரசியல் மேடைகளில்..

காணுங்கள் இந்தக் காணொளியை.

கருத்திலும் கண்ணிலும் உறுத்தும் காட்சி அது.

குறிப்பு:
செல்லப் பிராணி என்பதால் உங்கள் குழந்தைகள் அவற்றைச் சீண்டவோ,அவற்றின் கோபத்தைத் தூண்டவோ செய்து விடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
24.8.2012

Sunday, August 19, 2012

கண்டேன், மலேஷியா!-1


மலேஷியப் பயணத் தொடர்:1
-----------------------------------------------------------
நண்பர்களே,

வணக்கம்.

மகரிஷி சிவராஜயோகி ஆதிமூலனார்
ஏற்கெனவே இங்கு எழுதியபடி,நான் மலேஷியாப் பயணம் மேற்கொள்ள, நண்பர் திரு சிவ சண்முகம் ரெட்டி என்ற சிவா ரெட்டி பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

அதன்படி 16.7.2012 திங்களன்று மாலை 4:15 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோலாலம்பூர் புறப்பட்டு, இரவு  (கோலாலம்பூர் நேரப்படி)10:30க்கு கோலாலம்பூர்  விமான நிலையம் சேர்ந்தேன்.

நண்பர் சிவா என்னை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தார்.

அவருடன் அவர் வசிக்கும் அம்பாங் நகரை  மலேஷிய நேரப்படி இரவு 11:50க்குச் சென்றடைந்தோம்.

அம்பாங்கில் WATER FRONT பகுதியில் இருக்கும் கிரீன் ஓட்டலில் தங்கினேன்.

மறுநாள் 17.7.2012 முதல் நான் சென்னைக்குத் திரும்பிய 30.7.2012 வரை
இரு வாரங்கள் மலேஷியாவில் நேரம் போனதே தெரியவில்லை.

ஒவ்வொரு நாட்களும் செய்த பயணம்,சந்தித்த நண்பர்களின் உபசரிப்பு,கலந்துரையாடல்  என்று ஒவ்வொரு மணித்துளியும் எனக்கு எங்கே இருக்கிறோம் என்ற உணர்வைக் கூடத் தரவில்லை.

இரண்டு வாரங்கள் மிரண்டு ஓடி விட்டன.

சென்னை திரும்பிய பிறகும் ஓய்வு என்னைத் திரும்பிப் பார்க்க மறந்து விட்டது.

கிடைத்த நேரத்தில்,இப்போது எனது மலேஷியப் பயணத்தின் அனுபவங்களை,  அவற்றின் எதிரொலியை எண்ணித் திரும்புகின்றேன்.....

மலேஷியாவுக்குப் பலமுறை சென்று வந்திருக்கின்றேன்.

மலேஷியத் தமிழர்களின் விருந்தோம்பல், கலை ஆர்வம், ஆன்மீக நாட்டம் இவற்றை நேரில் உணர்ந்து வியந்திருக்கின்றேன்.

இவர்களின் இயல்பினைத் தெரிந்து கொண்டு,அவர்களின் நம்பிக்கைகளை மூல தனமாக்கி ஜோதிடம்,மாந்திரீகம் என்றும்  சினிமாக் கலை நிகழ்ச்சிகள் என்றும்  மலேஷியத் தமிழர்களின் வருமானத்தைச் சுரண்டி தங்கள் பையை நிரப்பிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுத் தரம் கெட்டவர்களின் நடத்தை கண்டு வருந்தியுமிருக்கின்றேன்.

எனக்கு ஜோதிட அறிவியல் பற்றிய தெளிவும் அதன் மூலம் பலருக்கு ஆலோசனை வழங்கி அவர்களுக்குச் சரியான வாழ்வைக் காட்ட வேண்டும் என்ற ஆர்வமும் அக்கறையும் இருந்தபோதும் இந்தப் போலிகளின் பித்தலாட்ட நடத்தைகளால் அதில் யோசிக்க வேண்டிய விஷயங்களும் வேரூன்றியிருக்கிறது. இதனால், நான் அந்த மலேஷிய நண்பர்களின் நம்பிக்கையையும் நட்பையும் நாணயத்தோடும் நியாயத்தோடும்  காக்க  வேண்டும் என்ற கருத்தும்,எச்சரிக்கையும்  இந்தக் கயவர்களின் போக்குவரத்துப் புழக்கத்தால் புரிய வைத்திருக்கிறது.

மலேஷியாவில் இருக்கும் ஆலயங்களும் அதன் வழிபாட்டு முறைகளும் இங்கிருந்து  சென்று குடியேறியவர்களால் சுமார் 100,150 ஆண்டுகளுக்கு முன்பு  உருவாக்கப்பட்டவை.

அதற்கு முன்னரே தமிழர்கள் அங்கு பல நூறாண்டுக் காலமாய் வாழ்ந்து வந்திருந்த போதிலும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் - கடந்த சுமார் 100-150 ஆண்டுகளுக்குள் தமிழ் நாட்டிலிருந்து அதிக அளவில் தொழிலாளர்களாகவும் அவர்களைக் கண்காணிக்கும் மேலாளர்களகாவும் வேலையில் பல்லாயிரக் கணக்கில் தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்லபட்டு மலேஷியாவில் குடி அமர்ந்தப் பட்டார்கள்.

நாட்டுக் கோட்டை செட்டி மக்களில் பலர் அங்கு ரப்பர் தோட்டங்களை வாங்கி ரப்பரும் பாமாயில் பனைகளையும்  வளர்க்கும் தொழிலை மேற்கொண்டார்கள்.

குறிப்பாக நாட்டுக் கோட்டைத் தனவந்தர்களால் அங்கு ஆலயங்கள் கட்டப் பட்டு,தமிழ்ப் பண்பாட்டின் ஆன்மீக நெ.றி நிலை நிறுத்திப் பேணப்பட்டு வருகிறது.

தமிழ் மொழியின்  தலைசிறந்த பண்புகளும் சமய சித்தாந்தந்தங்கங்களும்  மூன்று நான்கு தலைமுறைகளுக்கு  முன்னர்தான் அங்கு விதைக்கப்பட்டது என்று சொன்னால் அதை மறுத்துப் பேசுவதற்கு ஆதாரம் இல்லை.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது  ராஜேந்திர சோழன்  கடாரம்வரை படை எடுத்துச் சென்று வென்றதும்  மலை நாடென்னும் மலேஷியாவில்  இன்று உள்ள கெடா  மாநிலமே அந்தக் கடாரம் என்பதும் வரலற்று உண்மை.

இதன் தொடர்பாக, போர் வீர்களாகச் சென்ற நமது மூதாதையர் அன்றிருந்த அரசியல்-பொருளாதாரக் காரணங்களுக்காக அங்கேயே நிலை கொண்டு வாழத் தலைப்பட்டதும் பின் வந்த கால கட்டத்தில் அவர்களின் தலை முறைத் தொடர்பு தாயகமாம் தமிழகத்துக்கும் அவர்கள் வாழும் மலையகத்துக்கும் அற்றுப் போய் விட்டதும் காலம் எழுதிய கணக்கு..

அவ்வாறு தலை முறை மறந்து போன மூதாதைத் தமிழர்கள் ஆயிரக் கணக்கான குடும்பங்கள்.

ஆனால் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வேலைக்காக மலையக நாட்டில் குடியேற்றம் பெற்ற தமிழ்க் குடும்பங்கள் பல்லாயிரம் எண்ணிக்கை.

இன்று அவர்களின் வாரிசுகளாக வாழும் மலேஷியத் தமிழர்களின் எண்ணிக்கை பல லட்சம்.

மலேஷியாவின் மக்கள் தொகை எண்ணிக்கையில் நூற்றுக்கு 25 சதம் சுத்தத் தமிழர்கள் என்பதே இன்றைய கணக்கு.

இதில், தமிழகத்தில் இன்னமும் தங்கள் தாயாதிகளின் ஊரையும் பேரையும் மறந்து போய்த் தவிப்பவர்கள்தான் அதிகம்;அவர்கள் 80 சதம் என்பதில் வியப்பான வருத்தம் நமக்கு.

இன்றுள்ள மலேஷியத் தமிழர்களின் நல் வாழ்வுக்கு உரம் இட்டு அவர்களின் தார்மீக உறுதிக்கும் தமிழ்ப் பண்பாட்டுத்  தத்துவ-சித்தாந்த நெறிகளுக்கும் அரசியல்ரீதியான பாதுகாப்புக்கும் காவலர்களாகப் பலர் வாழ்ந்து வருகிறார்கள் என்பதைக் காணும்போது, நவீன  மலேஷியாவின் மகத்தான வளர்ச்சிக்கு அடித்தளமாகத் திகழும் தமிழர்களின் வாழ்வு மேலும் வளப்படும் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது.

இன்றைய நவீன மலேயாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலா மேம்பாடும் தொழில் வளர்ச்சியும் பெரும்பாலும்  தமிழர்களால் அடித்தளம் இடப் பட்டிருக்கிறது. தமிழர்களின் தொன்மைப் பண்பாடான இறைநெறிச் சித்தாந்தமும்  தமிழ் பண்பாடும் கூட  தமிழ்நெறிப் புலமையாளர்களாலும் தருமம் மிகு ஆன்மீகச் சிந்தனையாளர்களாலும் தொடர்ந்து காக்கப் பட்டு வருகின்றது.

இதை மெய்ப்பிக்கும் ஆலயங்களும் அவற்றைப் பராமரிக்கும் ஆன்மீக அறிஞர்களும் இந்த உண்மைக்குக் கட்டியம் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

இதுதான் இம்முறை மேற்கொண்ட மலேஷியச் சுற்றுப் பயணத்தில்  நான் கண்டுணர்ந்த உண்மை.

அந்த உண்மைக்கு சிகரம் வைத்தாற்போல் திகழ்கின்ற மகரிஷி ஒருவர் எனது நினைவுகளில் முன் நின்று மோனச் சிரிப்போடு முறுவலிக்கின்றார்.

எனது பயண அனுபவத்தில் அவரைப் பற்றி மலேஷியத்தமிழர்கள் மட்டுமல்ல; தாயகத் தமிழர்களும் உணர்வது  மேன்மை தரும் விஷயம்.

கோலாலம்பூரிலிருந்து சுமார் ஒரு மணி நேரம் ரயில் பயண தூரத்தில் இருக்கும் செலாங்கூர் மாநிலத்தில் கிளாங் நகரின் அருகில் கேஜி ஜாவா என்னும் இடத்தில் ’சிவராஜயோகி ஆதிமூலனார் யோகாலயம்’ என்ற மேன்மை மிக்க சிவாலயம் அமைத்து,  நூற்றுக் கணக்கான இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் யோகாசனத்தின் உயர் பிடிமானம் யாதென உணர்த்தி அவர்களை உடலியல் கட்டுக் கோப்பும் வாழ்வியல் காப்பும் கொண்டு வளர்த்துக் கொண்டிருக்கும் ‘மகரிஷி சிவராஜ யோகி ஆதி மூலனார்’ அவர்கள் ஓர் அப்பழுக்கற்ற யோகக் கலை ஆசான்.

மலேஷியத் தமிழர்கள் எட்டிப் பிடிக்க முடியாத ஆன்மிக உயர் நெறிக் கலை யோக நெறி. உடலையும் மனதையும் தூய்மைப் படுத்தி உறுதியோடும்  அறிவுக் கூர்மையோடும் ஆளுமைத் திறனோடும் வாழ வைக்கக் கூடிய மெய்ஞான யோகக் கலையை மிக எளிதான அணுகுமுறையோடு மலேஷியா வாழ் தமிழர்களுக்கு  தெய்வீகக் கருணையோடு, உணரத் தந்து உவப்பவர் இம் மகரிஷி.

இவருடைய யோகக் கலையின் வித்து, திருமந்திரம் கூறும் ‘சித்தாந்த ஞானக் கலையின் சொத்து’ என்பதுதான் இங்கே நம்மை முழுமையாக ஆச்சரியப் பட வைக்கிறது.

அந்த ஆச்சரியம் பற்றி.......?

 (தொடரும்)

-கிருஷ்ணன்பாலா
19.8.2012