Friday, August 31, 2012

உணர்வோர் உணர்க!

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

‘பொய்ப்பொருள் காண்பதறிவு’

என்ற தலைப்பில் நேற்று முன் தினம் இவ்வலைத்தளத்திலும்  முகநூலிலும் 
திருக்குறளின்  பெருமையைச் சிறுமைப் படுத்தும் பெரியாரின் கருத்து ஒன்றைப் பற்றி  எழுதியிருந்தேன்.

டாக்டர் கே.கணேசன் என்ற நண்பர்  எனக்கு இப்பதிவு குறித்து மேலும் சில தகவல்களுடன்  மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அவருடைய மின்னஞ்சலை உள்ளது உள்ளவாறே கீழே  பதிவு செய்துள்ளேன்.

உண்மையாகவே தமிழை நேசிப்போரும் வாசிப்போரும் யோசிக்க வேண்டிய செய்தி அது. அதை நீங்கள் இங்கே கடைசியை படித்துப் புரிந்து கொள்ளலாம்.

டாக்டர் கணேசலிங்கம் அவர்களுக்கு நான் எழுதிய  பதில் இது; உங்கள் சிந்தனைக்கும் விவாதத்துக்கும் அது வர வேண்டும் என்பது என் அவா.

இப்பொழுதும் சொல்கின்றேன்:

“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்;அப்பொருள்
பொய்ப்பொருள் காண்ப தறிவு”

நன்றி.

தங்கள் அன்புள்ள,
கிருஷ்ணன்பாலா


டாக்டர் கே.கணேசலிங்கம் அவர்களுடைய மின்னஞ்சலுக்கு
----------------------------------------------------------------------------------------------------
எனது பதில் கருத்து:
----------------------------------


அய்யா டாக்டர் கணேசலிங்கம் அவர்களுக்கு,

வணக்கம்.

இன்றைய உலகில் நமக்கு,முன்னோர் சொன்னதன் வழியே பின்னேர்ப் பிடித்துச் செல்லும் பெருந்தகைமையும் பேராண்மையும் மிக மிகக் குறைவு.

உலகின் எல்லாச் சித்தாந்தங்களையும் விஞ்சி நிற்பது நமது வேத நெறியும் அதற்கிணையான தமிழர் நெறியும்தான்.

திருவள்ளுவரின் காலம் நிச்சயம் யாராலும் உறுதிப் படுத்த முடியவில்லை.
தன்னலம் கருதாது உலக நலம் கருதிப் படைக்கப்பட்ட 'உலகப் பொதுமறை -  திருக்குறள்’ என்ற சிறப்பை தமிழனாய்ப் பிறந்து, தமிழைக் கற்றுணர்ந்த எவரும் மறுக்க முடியாது.

அறிஞர் தெய்வ நாயகம், தாம் பெற்ற ஊதியத்துக்காக உண்மையாக உழைத்திருக்கின்றார்;நன்றி மறவாதவர் என்பதை அவருக்குப் பின் புலமாக இருந்த கிறிஸ்துவ நிதியம் கட்டாயம் ஏற்றுப் புளகாங்கிதம் கொண்டிருக்கும்.

உண்மையிலே கிறிஸ்துவப் பிரசாரம் செய்ய வந்த ஜி.யு,போப் மற்றும் கால்டு வெல் போன்ற மத குருமார்கள் திருக்குறளின் தொன்மை அதன் ஆழம் குறித்து வியந்து உருகி,உண்மைத் தமிழ்ப் பற்றாளர்களாக மாறிப் போய் இருக்கின்றார்களே தவிர, ‘திருக்குறளைத் தங்கள் கர்த்தரின் வழி நூல்’ என்று கிஞ்சித்தும் எண்ணிக் கிறங்கிப் போய் விடவில்லை.

அறிஞர் தெய்வ நாயத்தின் இத்தகைய மதவாதப் பற்றுக்கும் பணத்துக்கும்  அவருக்குப் பட்டம் வழங்கிய பல்கலைக் கழகத்தின் பின் புலம் பற்றிய புலன் ஆய்வுக்கும்  இன்றைய ‘இந்திய அறிவு சார் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுக்கவும் வழங்கிய பட்டத்தைப் பிடுங்கவும் தமிழருக்கு உரிமை உண்டு.

இதே புகழ் பெற்ற பல்கலைக் கழகம்தானே,பெரியாரைத்  ‘தந்தை’ என ஏற்றுத் தங்கள் ‘இனிஷியலையே’  மாற்றிக் கொண்ட பிள்ளைகளைக் குளிர்விக்கவும் மகிழ்விக்கவும் முனைவர் பட்டங்களை வாரித் தந்து பெருமைபட்டுக் கொண்டது?

உலகப் பொதுமறையை தங்கள் வேத நூல் கருத்துக்களின் சாரத்தில் எழுதப் பட்ட  'முதல் தமிழ் வேதம் ' என்று பின்னாளில் சாதிப்பதற்காக பணமும் பதவிகளும் பேரமும் இதன் பின்னணியில் நாறிக் கொண்டிருப்பதை நல்லறிவுடையோர் உணர்வர்; ஆனால்,பாமரர்களோ. ‘ஓ...அப்படியும் இருக்குமோ?” என்று வியப்பர்.

அதன்பின்  அத்தகைய ஆடுகளைத் ‘தங்கள் ஆடுகள்’  எனச் சந்தையில் எண்ணிக்கை காட்டி சில மேய்ப்பர்கள் உலகை ஏய்ப்பர். All for number games

இதுதான் உண்மை.
இவர்களுக்குத் தமிழை உண்மையாக ஆய்வதோ, மேய்வதோ நோக்கமல்ல:

பெரியார் போன்ற சீர்திருத்தக் கொள்கை பேசியோர்,தங்கள் எல்லைகளில் இருந்து வரம்பு மீறி, நமது தமிழின் மேன்மையைச் சிதைப்பதன் மூலம் அதன் நுட்பம் மிகும் அற நெறிகளையும் சமூகத்துக்கு அது விதித்துள்ள உயர் கட்டுக் கோப்புக்களையும் சிதைப்பதில் சிறிது வெட்கமின்றிச் செய்திருப்பதானது இத்தகைய சதி வலையில் சிக்கிய சிறுமைத் தனமே அன்றி வேறில்லை.

அவ்வாறு சிதைப்பதன் மூலமே தங்கள் வியாபாரத்தை எளிதாக்க முடியும் என்பது அவர்களின் கணக்கு.

திராவிடம் என்ற பெயரில்,அரசியல்,மத சித்தாந்தாந்தங்களில் ஆட்பட்ட,ஆட்டுவிக்கப் பட்டு அறிஞர் என்று தம்மை அடையாளப் படுத்த முயன்ற சில ‘கோடாரிக் காம்புகள்தாம், தமிழின் தொன்மையையும் அதன் உண்மையையும்  பிறிதொரு சித்தாந்தாந்தச் சிறுமையை முன்னிலைப் படுத்தும் உயர் சதியின் காரணமாக அடகு வைக்கப் பார்க்கின்றனர்.

நான் கிறித்துவத்தைக் குறை சொல்ல மாட்டேன்;ஆனால் அதைப் பரவ வைக்கும் முயற்சிகளுக்குள் புதைந்துள்ள பித்தலாட்டக்காரர்களின் அயோக்கியத்தனத்தை எதிர்த்து,தேவையான சந்தர்ப்பங்களில் அச்சமின்றி எழுதுகின்றேன்.

உணர்வோர் உணர்க!

நன்றி.

தங்களன்புள்ள,
கிருஷ்ணன்பாலா
31.8.2012

டாக்டர் கே.கணேசலிங்கம் அவர்களின் கருத்தூட்டம்:
-------------------------------------------------------------------------------------------

---------- Forwarded message ----------
From: Dr.K.Ganesalingam 
Date: 2012/8/31
Subject: Re: Fwd: பொய்ப்பொருள் காண்பதறிவு!
To: KrishnanBalaa


அன்புள்ள கிருஷ்ணன் பாலா,
தங்கள் உண்மை மிகுந்த தமிழ் எழுத்துக்கும் பணிக்கும் நன்றிகள்.

//இயேசுக்  கிறித்துவிடமிருந்து உபதேசம் பெற்று விவிலிய 
நூலிலுள்ள கருத்துக்களை எடுத்து திருவள்ளுவர் திருக்குறளை 
ஆக்கினார்

திருக்குறள்    கருத்துக்களை வைத்து சைவ சித்தாந்த 
நூற்கள் தமிழில் எழுதப்பட்டனஇந்த உண்மைகளை 
ஆராய்ந்து அறிந்து தெய்வநாயகம் என்ற பேரறிஞர் 
 "விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் - ஒரு ஒப்பீட்டாய்வு"  
என்ற ஆய்வு நூலை எழுதினர்.
இந்தத் தலைசிறந்த ஆய்வு நூலுக்காக தமிழகத்தின் 
புகழ் மிக்க பல்கலைக் கழகம்  அவருக்கு டாக்டர் பட்டம் 
கொடுத்துக் கௌரவித்தது.// 

தமிழரைத் தலைகுனிய வைக்கும்இதுபோன்ற 
இழி செயலைக் கண்டு தமிழ்   உணர்வாளர்களும்   
திராவிட இயக்கத்தினரும் கொதித்தெழவில்லை
டாக்டர் பட்டம் கொடுத்த பேராசிரியரும் பல்கலைக் 
கழகமும் கண்டிக்கப்படவோ தண்டிக்கப்படவோ
இல்லை

சுயமரியாதை பேசுபவர்கள் எந்த இழிநிலையையும் 
சுயமரியாதை என்ற பெயரில் ஏற்கவும் பொறுக்கவும் 
முன்னிற்கிறார்கள் .இது தமிழகத்தின் இன்றைய 
சாபக்கேடாக உள்ளது
  
தங்களைப் போன்றவர்கள் பலர் தோன்றினாலே 
இந்நிலை நீங்க முடியும்.

-ககணேசலிங்கம் 
Post a Comment