Tuesday, September 11, 2012

ஜன நாயகமா? பிண நாயகமா?

நண்பர்களே,

வெகு சாதாரணமாக முடித்து வைக்கப்பட்டிருக்க வேண்டிய ‘கூடன் குளம் அணுமின்நிலைய  உற்பத்தி’எதிர்ப்புப் போராட்டமானது,அசாதராண நிலையில் உயிர்ப்பலியோடு உற்’சவம்’ பெற்றிருக்கின்றது..

மக்களின் அறியாமையால் அரசியல் சொக்கட்டான் ஆடி, அதில் ஆதாயம் அடையும் அயோக்கிய சமூகப் போராளிகளாக, உதயகுமாரும் அவருடைய கூட்டாளிகளும் உருவெடுக்கத் தொடங்கி விட்டனர்.

வரப் போகும் பாராளுமன்றத் தேர்தலில், இப்பகுதி தொடர்புடைய பாராளுமன்றத் தொகுதியின் ஓட்டுத் தரகர்களாக இவர்களை,எல்லா அரசியல்கட்சிகளும் அணுகிக் கொண்டாடப் போவதை நாம்,இனிப்  பார்க்கப் போகின்றோம்.

‘கூடன்குளம் அணு மின் நிலயம் ஆபத்தானது;அதை மூட வேண்டும்’ என்பது  மூடத்தனத்தின் ஒட்டுமொத்தக் கோரிக்கை’  என்பதை நாம் இங்கு ஏற்கெனவே அலசி, அடிக்கோடிட்டு அறிவித்திருந்தோம்.

’அணு உலை வெடித்தால் நீங்களும் உங்கள் பிள்ளை குட்டிகளும் பிறக்கப் போகும் பேரன் பேத்திகளும்  செத்துப் போவீர்கள்’ என்றுதான் இந்த அணு உலை எதிர்ப்பாளர்கள் பாமர மக்களிடையே உயிர்ப் பயம் பரப்பி,தங்கள் கடை வியாபாரத்தைப் பரப்பினார்கள்.

இது, நிச்சயமாக, வதந்தியைப் பரப்பி,சமூகம் மற்றும் தேச விரோதச் செயல்பாடுகளை, விஷயம் தெரியாத மக்களிடையே பரப்பி, அதன் மூலம் தங்கள் பிடியின் கீழ் இப்பகுதியின் பாமர மக்களைப் பம்பரமாகச் சுழற்றும் பயங்கரவாதம்தான்.

சொல்லப்போனால்,  தேசத்தின் வளர்ச்சிக்குரிய தேவைகளை முடக்க,‘ஜனநாயக  உரிமை’என்ற கவசத்துக்குள் புகுந்து கொண்டு,போர்ப் பரணி பாடி, ‘பிண நாயகம்’ தேடும்  பித்தலாட்டம்தான் இது..

இதோ:
இந்தப் பித்தலாட்டக்காரர்கள் பாமர மக்களைத் தூண்டிவிட்டு .எங்கோ ஒளிந்து கொண்டு ஓர் உயிரைக் காவு கொடுத்து விட்டார்கள்;

‘செத்த பிணத்தருகே, இனிச் சா(கு)ம் பிணங்கள்
கத்தும்,கணக்கென்ன? காண்’

என்ற  பட்டினத்தார் பாடல் ஏனோ நம் நினைவில் நிழலாடுகிறது,இங்கு.

‘சமூகப் போராட்டம்’ என்று சொல்லிக் கொண்டு சமூகத்தையே அழிக்கும் சாத்தான்களை, ‘சமூக தாதாக்களாக’  நமது  மத்திய -மாநில அரசுகள் வளர்த்துக் கொண்டிருப்பது, அவமானகரமான  அவலம்..

மத்திய அரசாகட்டும். அன்று ஆட்சியிலிருந்த தி.மு.க  அரசு ஆகட்டும். அடுத்து ஆட்சிக்கு வரத் துடித்த மேடம் ஜெ.ஆகட்டும் ,இப்பகுதியில் நடமாடி வரும்  ’சாத்தான்களான ,இந்தப் போலி சமூகப் போராளிககு அஞ்சித்தான் இருந்தனர். காரணம் அப்போதைய மாநில சட்டமன்றத்துக்கான தேர்தல்.

அவர்களின் அச்சத்தின் அடிப்படையில் அமைந்த கால தாமதத்தினால்தான்,
இந்தச் சாத்தான்கள்,தங்கள் சாமார்த்தியத்தைக் காட்டி, ஏமாளித்தனமான மக்களின் திடீர்க் உயிர்க் காவலர்களாகவும்,தங்கள் கோரிக்கைகளில் எள்ளளவும் உண்மையில்லை ’  எனத் தெரிந்தும் கூலிக்கு மாரடிப்பதில் மகத்தான முனைப்புக் காட்டும் முகவர்களாகவும் திரு (அ)சுப. உதய குமார் &கோவினர் ஓர் ’எதிர்மறை  ஹீரோக்கள்’ ஆக்கப்பட்டு விட்டனர்.

நாம் இங்கு  உதய குமார் &கோ’வின் உள் நோக்கம் பற்றியும் அது எந்த அளவுக்கு தேச விரோதம் கொண்ட திட்டம் என்பதையும்  முன்பே எழுதியுள்ளோம்.

நமது கருத்துக்கு எதிராக  உதயகுமாரின் ஒருசில  கைத்தடிகள்  ஈனக் குரலில் ஒலித்தபோதும் நாம் எழுதிய கருத்துக்கு  அவர்கள் ஊமையாகிப் போனதையும் கண்டோம்.

அறிவியலின் வளர்ச்சியை அணு அளவும் பிசகாது ஏற்றுக் கொண்டு வளர்ந்து வரும் உலக சமுதாயத்தில்  ‘பத்தாம் பசலித் தனமான பிரச்சாரத்தைச் செய்து,தாதாக்களாக வளர்ந்து  வரும்  இவர்கள், எவர் பேச்சையும் கேட்பதும் இல்லை;ஏற்பதும் இல்லை என்ற வெறியோடு திரிகின்றார்கள்;மக்களிடையே அதே வெறித்தனத்தைத் தீயாக எரிய விடவும்  திரியிடுகின்றார்கள்.


‘விஞ்ஞானமும் அதன் தேவைகளும் விரிவடைந்துள்ள நிலையில்,நமது மாநிலத்தின் தொழில் துறை வளர்ச்சிக்கும் மக்களின் அன்றாட வாழ்வியலுக்கும் அணு மின் உலைகளின் உற்பத்தியும் அதன் கட்டமைப்பும் எந்த அளவுக்கு இன்றியமையாதது தெரியாதவர்கள் அல்ல இந்தத் திரிபுவாதிகள்.

‘நாடும் நாட்டின் வளர்ச்சியும் இவர்களுக்கு வேம்பு’.என்ற பேதத்தைப் பெரிதாக்கி,’அணு உலை இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களை ஒட்டுமொத்தமாக கருகச் செய்து விடும்’ என்ற பயங்கரமான வதந்தி மூலம் வாழ்வதிலும் வளர்வதையும்  மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கு ஏற்படுத்தப் பட்டுள்ள அணு உலையால் ‘மக்களின் வாழ்வாதாரத்துக்கு எவ்வகையிலும்  கேடில்லை’ என்பது, உதய குமார் &கோ  சட்டப்பூர்வமாகத்  தொடுத்த வழக்கில் உயர்நீதி மன்றமே உறுதி செய்து தீர்ப்பு எழுதி விட்டது.

இது தங்களுக்கு ஏற்புடையதல்ல’ என்று இந்த ‘போலி’ ஜனநாயக ஜன்மங்கள்’ கருதுமாயின் என்ன செய்திருக்க வேண்டும்?

மேல் முறையீடாக உச்ச நீதி மன்றத்தை அல்லவா,அணுகி இருக்க வேண்டும்?

ஆனால் அங்கும் தன்கள் திரிபு வாதம் எடுபடாது என்பது தெரிந்ததனால்தான்
ஜனநாயக உரிமையை நிலை நாட்டுவதற்காக ‘அமைதி வழியில் அறப் போராட்டம் நடத்துகிறார்களாம்.

அந்தோ: ‘நரி நாட்டாமை’ பேசுகிறது.

‘உதயகுமார் &கோ’வினர் முதலில் மத்திய அரசின் அணுமுறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்கள்; பின்,‘மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப் படுவோம்’ என்றனர்; அதன்படி மேடம்  ஜெ. அவர்களைக் கோட்டைக்கு அழைத்துப் பேசி முடிவுரைத்தபோது.அதை நேரிடையாக எதிர்க்காமல், ‘எங்களுக்கு நீதி மன்றம் வழங்கும் நியாயம்தான் தேவை;நாங்கள் எந்த அரசுகளையும் நம்ப மாட்டோம்’ என்று சொல்லி உயர் நீதி மன்றம் சென்றார்கள்.

உயர் நீதி மன்றமும் இதில் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து ‘அணுமின்நிலைய கட்டுமானத்தாலும் பயன்பாட்டாலும் எவ்விதத்திலும் மக்களின் உயிருக்கோ,வாழ்வாதாரத்துக்கோ பாதிப்பு இல்லை’ என்று தீர்ப்புத் தந்து விட்டது.

இதன் பிறகேனும் உதய குமாரும் அவரது கூட்டாளிகளும் மைதிம்காத்து மக்களிடையே விளக்கம் சொல்லி அமைதியோடு போராட்டத்தை ‘வாபஸ்’வாங்கி இருக்க வேண்டும் அல்லவா?.

மாறாக, அதன் பின்னரும் நியாயத்தையும் உண்மைகளையும் மறைத்து விட்டு, மக்கள் போராட்டம்’ என்ற மாயையைத் தூண்டி வருகிறார்கள்.இவர்களின் நோக்கம் மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதல்ல;இந்தியாவின் வளர்சீக்கு எதிராகத் திட்டமிடும் அந்நிய சக்திகளின் நலனைக் காப்பதுதான்.

எந்த வகையிலேனும் கூடன்குளம் மின் உற்பத்திம் தோல்வி அடைய வேண்டும்;அதன் மூலம் ரஷியாவின் அறிவியல் கூட்டானது இந்தியாவில் நிலை பெறக் கூடாது’என்று’இந்தியா-ரஷியா நட்புறவைக் குலைத்து தங்கள் வியாபாரத்தைஇங்கே வளர்ப்பதுதான் அந்த அந்நிய சக்திகளின் அஜண்டா.

அந்த தேச விரோத சக்திகளின் முகவராக இந்த உதய குமார் &;கோ’வினர் கடந்த இரண்டு நாட்களாக அப்பாவி மக்களின்  வாழ்வாதாரத்தை  நாசமாக்கவும் அதன் மூலம் தேசிய ஹீரோக்கள் ஆகவும் முடிவெடுத்து விட்டனர்.

உண்மையைச் சொல்வதானால், ‘நாயர் பிடித்த புலிவாலாய்’ இந்தப் போராட்டத்தைக் கையில் அவர்கள் பிடித்துக் கொண்டு விட்டார்கள்.

சட்டம் படித்த,தெளிவான அரசியல்வாதியான வைகோ அவர்களும் எங்கெல்லாம் கூட்டம் இருக்குமோ அங்கெல்லாம் கடை விரித்து அரசியல் வியாபாரம் செய்யும் மருத்துவர் அய்யா,மற்றும் அவருடைய அரசியல் தத்துப் பிள்ளை திருமாவளவன் முதலானோரும் ‘இருண்ட தமிழகம்’ வேண்டி, இவர்களுக்காக வக்காலத்து வாங்குவதுடன் உதயகுமார்&கோ’வை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக ஏற்றுக் கொள்ளவும் முன் வந்துள்ளனர்.

எப்படியோ செப்படி வித்தை செய்யும் இந்தச் சில்லறைஅரசியல் தலைவர்களின் சிலிர்க்க வைக்கும் ஆதரவினால்,கூடங்குளம் சுற்றிலும் வாழ்கின்ற பாமர மக்களைத் தூண்டி, கூடன்குளம் அணு உலையை முற்றுகையிடத் தூண்டி விட்டு,தலை மறைவுப் போராட்டம் நடத்தும்
உதய குமார் மற்றும் அவருடைய கூட்டாளிகளின்  சதியால் இன்று ஒரு உயிர் பலிகடா ஆக்கப் பட்டுள்ளது.

இப்போது, ஜனநாயக அரசியலில் பிணநாயக அரசியல் கூத்துக்கள் அரங்கேறும் ஆபத்து சூழ்ந்து விட்டது.

அப்பாவி மக்களின் அறியாத்தனத்துக்குள் ‘உயிர் பற்றிய அச்சத்தை மூட்டி விட்டு  ஆதாயம் தேடும்  இந்த அரசியல் நய வஞ்சக நரிகளை முன்பே கைது செய்து, பாமர மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்லும் வாய்ப்பும் தகுதியும் மத்திய - மாநில அரசுகளுக்கு இருந்தும்  இவர்கள் வெற்றுப் பேட்டிகளையும் மொக்கை வாதங்களையும்  வீசிவிட்டு  ஒதுங்கிக் கொண்டார்களே தவிர உருப்படியாக, சட்ட ரீதியிலான எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.


மத்திய அரசின் மக்குத் தனமான மழுப்பல் பேச்சாளரான மாண்புகெட்ட மந்திரி நாராயணசாமியார் இந்த உதயகுமார் &;கோ’வுக்கும் அவர்களுடைய  போராட்டத்துக்கும் வெளிநாட்டிலிருந்து  பணம் வந்திருக்கிறது’  என்பதை அரசு கண்டு பிடித்து விட்டது’ என்று வெகு சாதாரணமாக ‘ஒரு அசாதாரணமான செய்தியைச் சொல்லி விட்டு தன் வீரத்தைச் சுருட்டிக் கொண்டதை அவர் மறந்தாலும் நாம் மறக்கமுடியாது.

இப்போது மத்திய உள்துறை அமைச்சராக உலாவரும் சுஷில் குமார் ஷிண்டே அதே பல்லவியைத்தான் உளறிக் கொண்டிருக்கிறார்.

வெளிநாட்டிலிருந்து வந்த பணத்தால் இப்படிப்பட்ட தேச விரோதச் செயலில்
 உதயகுமார்& கோ ஈடுபடுகிறார்கள் எனத் தெரிந்தும் அவர்களை ஏன் அரசு கைது செய்யவில்லை?  என்ற சிந்தனையை விரிப்போமானால் அதில் சிக்கியிருக்கும் பயங்கரச் சதியாளர்கள் வெளிப்படுவார்கள்.;அவர்களை அடையாளம் காட்டுவது  மத்திய-மாநில அரசுகளின் கடமை அல்லவா?

மாறாக,நமது முதல்வர் மேடம்ஜெ.அவர்கள் கூட சொல்லுகிறார்:
’உதயகுமார்&;கோ’வினர் இப்பகுதிப் பாமர மக்களுக்கு விரித்திருப்பது மாய வலையாம்’ அதில் மக்கள் யாரும்வீழ்ந்து விடக் கூடாதாம்’

மாய வலை விரித்து மக்களை வீழ்த்தும் கொடியவர்களை தனக்கு எதிராக இன்னொரு,’இணை அரசு’  (Parallel  Government)  நடத்துவதை நம் முதல்வரே ஒப்புக்கொண்டுள்ளார் என்பதுதானே இதன் பொருள்?

தேசப்  பொருளாதாரத்தையும் மக்களின் இன்றியமையாத தேவைகளின்
கட்டமைப்பையும் நாசப் படுத்த வெளிப்படையாகச் செயல் படும் உதயகுமார்& கோ’ வினரை மிக எளிதாகக் கட்டுப்படுத்தி, அவர்களை முன் கூட்டியே கைது செய்யாமல், இன்று அவர்கள் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காமல்  ‘சுய தீர்ப்பு’  எழுதிக் கொண்டு,சட்டத்தையும் உண்மையையும்  தாண்டி, தேசத்தின் தேவையையும் அறிவியல் முன்னேற்றதையும் உணராத மக்களைத் தூண்டி, தேசத் துரோகச் செயலில் கொஞ்சமும்  பயமின்றி கொட்டம் அடிப்பதை மத்திய-மாநில அரசுகள்  வேடிக்கை பார்த்துக் கொண்டு வருவது அப்பட்டமான கையாலாகாத் தனம்.

இதன் மூலம், என்றோ கருகிப் போயிருக்கவேண்டிய ‘அணு மின் உற்பத்தி நிலைய எதிர்ப்பானது தேவையற்ற உயிர்ப் பலிகள் மூலம்  வலுவடைந்து, அதனால் பாமர மக்களின் வாழ்வியல் ஆதாரங்களை அழிக்கும் இந்தப் போலிப் போராட்டக் குழுவினருக்கு, பாமர மக்களிடையே எதிர் மறை விளம்பரம் பெற்று,  வெறும் வாயை மெள்ளுகின்ற ஊடகங்களுக்கு அவல் கிடைத்ததாக ஆகி விடும்.

எனவே-

சட்டத்துக்கு விரோதமாகவும்,சத்தியத்துக்கு எதிராகவும் பாமர மக்களின் பகுத்துணரா அறிவினால் அவர்களை அச்சத்தின் பிடியில் சிக்க வைத்து விட்ட சதிகாரர்களையும், திரை மறைவில் இருந்து அதனை ஊக்குவிக்கும் கள்ளப் பண முதலைகளையும் மத்திய -மாநில அரசுகள்  இப்போதேனும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

இவர்களின் போராட்டமும்  அதன் பின்னணியும்  பொது நலனுக்கும் தேசத்துக்கும் எதிரானது என்று அறிவிக்க வேண்டும்

அதன் மூலம் போராட்டம் தடுக்கப் பட்டு கூடங்குளம் பகுதியில் அமைதியை ஏற்படுத்த வேண்டும்.

அதனால்,கூடன்குளம் அணுமின் உற்பத்தி உடனே தொடங்கப்பட்டு, ‘இருண்டு போயிருக்கும் தமிழகத்தை  மீட்டு வெளிச்சத்துக்கு வரச் செய்ய வேண்டும்
.
நமது மாநிலத்தின் தொழில் துறை புதிய உத்வேகம் பெற வேண்டும்.

புழுக்கத்திலிருக்கும்  மக்கள்  புத்துணர்வு பெற வேண்டும்.


மகா கவிபாரதியின் நினைவு நாளான இன்று,
   
     ‘ஒளிபடைத்த கண்ணினாய் வா,.வா,வா!
      உறுதி கொண்ட நெஞ்சினாய் வா,வா,வா’

என்றுதான் எண்ணிப் பெருமூச்சு விடுகிறோம்.

இருட்டில் தத்தளிக்கும் தமிழகம் ஒளிபடைத்த மாநிலமாய் மாற வேண்டும்;
அதனைச் செயல்படுத்துவதில் உறுதி கொண்ட அரசாக மேடம் ஜெ. அரசு
மாற வேண்டும்.

ஆம்!
இருட்டில் இருந்து கொண்டே விட்டத்தைத் தடவக் கூடாது.


இவண்,
கிருஷ்ணன்பாலா
11.9.2012

No comments: