Thursday, November 11, 2010

அவ்வை-யார்? (இலக்கியத் தடங்கள்-3)

நண்பர்களே,

தமிழ் அமுதச் சுவையை,அருளோடும் பொருளோடும் அள்ளித் தந்து விட்டுச் சென்ற அருளாளர்களில் அவ்வை நமக்குத் தலையாயவள்.

ஆத்திச்சூடி,கொன்றை வேந்தன்,வாக்குண்டாம் என்கிற மூதுரை, நல்வழி, ஞானக்குறள் (அவ்வைக் குறள் என்றும் வழங்கப்படும்) என்று ஒப்பற்ற ஞான இலக்கியங்களை, அருளியிருக்கின்றார் இவர். இவை தவிர  ‘அவ்வையார் பாடல்கள்’ என்று தனிப் பாடல்கள் பலவும் தமிழ் வழக்கில் உள்ளன.படிப்பதற்கும்,பொருள் உணர்வதற்கும் நெஞ்சில் பதிப்பதற்கும் மிக எளிமையான சொற்களில் இவை அனைத்தும் படைக்கப் பட்டிருப்பதும் அவை என்றென்றும் எக்காலத்தும் புதுமை இலக்கியங்களாகவே திகழ்வதும் பெருமையோடு கூறத்தக்கதாகும்.

ஆத்திச் சூடியும் கொன்றைவேந்தனும் குழந்தைகளுக்குச் சொல்லப் பட்டவைபோல் எளிய சொற்களாலும்,குறுகிய சொற் தொடராலும் அமைந்திருந்தபோதிலும், மிகப் பெரும் ஆய்வுக்கு உரிய பொருளை வழங்கும் படைப்புக்களாய்த் திகழ்பவை.


உலக மாந்தருக்கு உன்னதமான வாழ்வியல் சித்தாந்தத்தை உரைக்கின்ற பழம் இலக்கிய நீதி நூல்களான இவை, அவ்வையின் பெயரால் தமிழ் இலக்கியப் பெட்டகத்தின் பெருமை கூறும் படைப்புக்களாகத் திகழ்ந்து,பிற மொழிகளுக்கு முன், நம் மொழியை நிமிர வைக்கின்றன. ‘அவ்வை’ என்னும்  ‘ஞானப் புலவர்’ குறித்த வரலாறு முழுமையாகவும் உறுதியானதாகவும் இல்லை.

சங்க காலம் தொட்டு,14ஆம் நூற்றாண்டு வரையிலான புலவர்களுடன் இலக்கியத் தொடர்படுத்தி அவ்வை என்ற பெண்பாற்புலவரைப் பற்றிப் பலவாறு கதைகள் புனையப் பட்டு, அவ்வையாரைப் பற்றிய ஆய்வுகளும்  செய்திகளும் சுவையானதாகவும்,தெய்வீகமானதாகவும் சொல்லப் பட்டிருப்பதன் மூலம்,பண்டைய புலவர்களும் மன்னர்களும்   ‘அவ்வை’ என்ற பெயருக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் முக்கியத்துவமும் அளித்து வந்துள்ளனர் என்ற உண்மை உணர்த்தப் பட்டுள்ளது

காலத்தால் அழியாது, அவரது பாடல்கள் புலவர்களின் சுவையிலும் மன்னர்களின் அவையிலும் தொடர்ந்து போற்றப்பட்டு வந்து,இன்று நம் கருத்திலும் எழுத்திலும் நிலைத்திருக்கின்றன.


சங்க காலத்தில் வாழ்ந்த மாமன்னனான அதியமானுடனும்,  கடையேழு வள்ளல்களில் ஒருவனான பாரி வேந்தனுடனும் அவ்வைக்கு இருந்த நட்பும் உறவும் சங்க காலக் காட்சிகளை நம் முன் எடுத்துரைக்கும். பாரி வேந்தன் மறைவுக்குப் பின் அவருடைய இரு பெண்களையும் திருமணம் செய்து வைக்க அவ்வை எடுத்துக் கொண்ட முயற்சி,அவரது தாய்மையின் கருணைக்கும் அப்பெருமாட்டியின் தெய்வீகக் கடமைக்கும் சான்று கூறுபவை.

வள்ளுவனின் குறள் மறை அரங்கேற்றம் பெற்றபோது குறளின் பெருமையைப் போற்றி-


“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்’’


என்று-


வாழ்த்துக் குறள் பாடிய அவ்வையின் பிரபஞ்ச-விஞ்ஞான அறிவும் ராமகாதை பாடிய கம்ப நாட்டாழ்வாரோடு,இலக்கிய வம்புகள் செய்து சிற்சில சமயம் கம்பனைக் கோண வைத்த சமயோசிதப் புலமையும், சுந்தரரும் சேரமான் பெருமானும் கயிலாயத்துக்குச் செல்லும்போது மூதாட்டியான அவ்வை,முழுமுதற்பொருளான விநாயகரைத் தொழ’ சீதக்களபச் செந்தாமரைப் பூண்’என்ற அகவலைப் பாடி,அதன் பயனாக, அவர்கள் இருவரும் கயிலாயம் சேருவதற்கு முன்பாகவே விநாயகப் பெருமானின் அருளால் அவ்வை  கயிலாயம் சேர்ந்த ஞானச் செறிவும் நமக்கு நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் தருபவை.


இவ்வாறாக, பல்வேறு கால கட்டங்களில் அவ்வை என்னும் ஞானப் புலவரின் வாழ்க்கையும் ஆதிக்கமும் நமது இலக்கியங்களில் கூறப் பட்டு,இன்று அவருடைய காலத்தைப் பற்றிய தெளிவின்மையை நமக்குத் தந்துள்ளபோதும்,அவ்வையின் இலக்கியப் படைப்புக்களில் தெளிவான ஈடுபாட்டைத் தந்துள்ளன.


சொல்லப் போனால் அவ்வையின் பாடல்களில் உள்ள பொருள் நயத்தின் எளிமையும் வலிமையும் வேறு எந்தப் பழம் பாடல்களிலும் காண்பதரிது.


அவ்வையின் வாழ்வு,புகழ்,புலமை,எளிமை,பயணம், கருணை,ஞானம், படைப்புக்கள் இவை பற்றி மிகப் பெரும்நூலே எழுதலாம்.அவற்றை அவ்வப்போது இங்கு எழுதுவோம்.


இவர் படைப்புக்களில் ஆத்திச் சூடிபோல் எளிமைமிக்க இலக்கியம் வேறு எதுவும் இருக்க முடியாது;அதேபோல் இவர் எழுதிய ‘ஞானக்குறள்’ போல் வலிய பொருள் பொதிந்த தன்மை இவருடைய வேறு எந்த படைப்புக்கும் இல்லை.

எனினும் அவ்வை மிகப் பெரும் விஷயங்களையும் மிக எளிதில் அற்புதமான வரிகளில் சொல்லிவிடுவார்:


அறம் செய விரும்பு;
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்;
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி’
ஐயம் இட்டு் உண்;
ஒப்புரவு ஒழுகு;
ஓதுவது ஒழியேல்;
ஒளவியம் பேசேல்
அஃகம் சுருக்கேல்


-இது அவ்வையின்  ஆத்திச் சூடி!


ஆகா...
தன்னம்பிக்கையையும்  மனோதிடத்தையும்   மிக எளிமையான வரிகளில்  சின்னஞ் சிறார்களுக்கு சொன்ன முதல்   தமிழ்ப் பெருமாட்டி அவ்வைதான்;பெண் குலத்தின் கலங்கரை விளக்கு.


“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்;                      
ஆலயம் தொழுவது சாலவும் நன்று;
இல்லறம் அல்லது நல்லறம் இல்லை;
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்;
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு;
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்;
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
ஏவா மக்கள் மூவா மருந்து;
ஐயம் புகினும் செய்வன செய்;
ஒருவனைப்பற்றி ஓரகத்திரு;
ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
அஃகமும் காசும் சிக்கெனத் தேடு;
........................
…………………….
தந்தை சொல்மிக்க மந்திரமில்ல;
தாயிற் சிறந்த கோவிலுமில்லை..... "


இவ்வாறு கொன்றை வேந்தனில் குறையில்லா வாழ்வுக்கு வழி காட்டுகிறார்.


வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையை,அறவழியில் மேற்கொள்ள வழிகாட்டும் அவ்வை, அறம்.பொருள்,இன்பம் இம்மூன்றையும் கடந்த  ‘வீடு பேறு’ நிலை பற்றி மிக அற்புதமான பாடலில் சுருக்கமாகச் சொல்லும் அழகே தனி. அப்பாடல், கற்றார் நெஞ்சை எல்லாம்,முற்றும் பற்றும் தன்மையுடையது.


அறம் பொருள்,இன்பம் என்ற மூன்று நிலைகளை வள்ளுவப் பெருந்தகை 1330 குறட் பாக்களில் பாடியிருப்பதை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும்.


அறம்,பொருள்,இன்பம் என்ற மூன்று நிலைகளைச் சரிவர மனிதன் பின் பற்றினால் நான்காவது இறுதி நிலையான ‘வீடுபேறு’ என்கிற முக்தி நிலை தானாக அவனை வந்தடையும் என்பதால் வள்ளுவன்  ‘பேரின்பம்’ என்ற வீடு பேற்றை விளக்கி, குறட்பாக்கள் எதையும் எழுதவில்லை.


அறம்,பொருள்,இன்பம் மூன்றும் முறையாகப் பின்பற்றப் படும்போது நான்காவதான ‘வீடுபேறு’ இயல்பாகவே அமைந்து விடும் என்பதை வள்ளுவப் பெருந்தகை சொல்லாமற் சொல்லிச் சென்றார்.


அவ்வையோ இந்த நான்கையும் ஒரே பாட்டில் மிக அழகாகப் புரியும்படி, படிப்போரின் கருத்தில் எளிமையாகப் பதியும்படி அருளியிருக்கின்றார்;


அறம்,பொருள்,இன்பம் என்பது என்ன?  ‘வீடு பேறு’ எப்படி கிடைக்கும் என்கிற விஷயத்தை நான்கே வரிகளில், சுவை மிக்க சித்தாந்தக் கருத்தினை உள்ளடக்கி,அவ்வை சொல்லும் பாடலைக் கேளுங்கள்: இது, அவ்வை சொன்னதாக’அவ்வையார் தனிப்பாடல்கள் தொகுப்பில் உள்ள பாடல்களில் ஒன்று:


ஈதலறம்;தீவினை விட்டு ஈட்டல் பொருள்;எஞ்ஞான்றும்
காதலிருவர் கருத்தொருமித்து-ஆதரவு
பட்டதே இன்பம்;பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.


மற்றவர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், எடுத்துக் கொடுத்தலே ’ஈதல்’என்று சொல்லத்தக்க அறமாகும்;  நாம் ஈட்டுகின்ற பொருளில் எவ்விதக் குற்றங்களும் இருக்க கூடாது;அதாவது நல்வழியில் மட்டுமே பொருளைச் சம்பாதிக்க வேண்டும்;கணவனும் மனைவியும் கருத்து ஒற்றுமையோடு ஒருவருக்கொருவர் அன்பு காட்டி வாழ்தலே இல்லறமாகிய இன்பம்
.
இம்மூன்று நிலைகளிலும் சரிவர வாழ்ந்தபின், ‘போதும்’ என்ற எண்ணம் நிறைந்து  இந்த மூன்றின் பற்றுக்களையும் அறுத்து விட்டு, இறைவனை மட்டுமே நாடுகின்ற நிலைதான் பேரின்பமாகிய ‘வீடு’என்கிறார் அவ்வை.


ஆக-


அறம் செய்து,நல்வழியில் பொருள் ஈட்டி,கணவன்,மனைவி கருத்துப் பேதமில்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து, பின் இம்மூன்று நாட்டங்களையும் இறைவனை எண்ணித் துறந்து விடுகின்ற நிலைதான் பேரின்பமாகிய ’வீடு பேறு’ நிலை என்று ரத்தினச் சுருக்கமாக அவ்வை சொல்லிய மொழி நம் கருத்தில் பசுமரத்தாணிபோல் பதிகின்றதல்லவா?

அன்றைய தமிழர்களுக்கு நீதியையும் நேர்மையையும் வாழ்வில் நிலை நிறுத்தி,சென்ற இடமெல்லாம் இது போன்ற கருத்துக்களைப் பிரசாரம் செய்து, ஞானத்தையும் ஒழுக்கத்தையும் பரப்பி, மிகச் சிறந்த  ஆன்மீக வழிகாட்டியாகவும்,சமூகத் தொண்டராகவும் தெய்வீகப் புலவராகவும் வாழ்ந்த அவ்வைப் பெருமாட்டி, நம் தமிழுக்குப் பாட்டி.

நம் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழும் அப்பெருமாட்டிக்கு, தமிழர்களாகிய நாம்,அவர் மொழி காத்து,அவர் சொல்லிச் சென்ற நீதி முறை காத்து வாழ்தலே அவருக்குச் செய்யும் தமிழ் நேர்த்திக் கடன்;உயர் மரியாதை.

-கிருஷ்ணன் பாலா
11.11.2010  / 02:26 am

1 comment:

'முன்றில்' said...

அன்பின் ஐயா,
அவ்வையார் பற்றிய தேடலும் இலக்கியத் தடமும் செழுமையாக இருந்தது. வருகின்ற கல்வியாண்டில் என் மாணவர்களுக்கு வழங்கவுள்ளேன் ஐயா.
நன்றியன்
ச.உதயன்.