Saturday, June 2, 2012

எல்லோரும் இன்புற்றிருக்க…..



நண்பர்களே,
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல், வேறொன்றறியேன் பராபரமே
என்றார் தாயுமானவர்.

இதன் பொருள்: தன் நலம் மறந்து பிறர் நலம் பேணும் பெருந்தகைப் பண்புதான்.

நாம் நம் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்க விரும்பிச் செயல்படுகிறோம்; தாய் தந்தையர் நம்மைப் பற்றி பெருமைபடப் பேசவேண்டும்;கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அன்பும் நெருக்கமும் கொண்டிருக்க வேண்டும். குழந்தைகள் நம் எண்ணப்படியும் நாம் நம் குழந்தைகளின் எண்ணப் படியும் தடையில்லா நல் வாழ்வு கண்டிருக்க வேண்டும்;நண்பர்கள்நம்மைமகிழ்ச்சியுடன் சந்திக்க, எங்கும் நல்ல செய்திகளே நம்மைச் சேர்ந்திருக்க வேண்டும் என்று விழைவதுதானே நம் எண்ண ஓட்டங்கள்?

நாம் மட்டுமே,நம் குடும்பம் மட்டுமே மகிழ்ந்திருந்து,பக்கத்து வீட்டிலோ நமது நெருங்கிய உறவினர்/நண்பர்கள் துக்கமும் துயரமுமான சூழ்நிலை இருந்தால் நம்மிடம் எவ்வளவு மகிழ்ச்சி இருந்தாலும் அது நம்மை ஏதாவது ஒருவகையில் பாதிக்கத்தானே செய்யும்?

ஆக,நம்மைச் சேர்ந்தவர்கள் அனைவரும் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால்தான் நமது வாழ்வு பூரணமாகும் அல்லவா?.

எனவே, நாம் நமது பூரணமான மகிழ்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் நம்மைச் சூழ்ந்துள்ளவர்களும் நமது சுற்றுச் சூழலும் நலமாகவும் வளமாகவும் இருந்தால்தான் நாம் மகிழ்வுடன் வாழ்வதில் அர்த்தமாகும்.

இதுதானே மறுக்க. முடியாத உண்மை?

இந்த உலகம் மகிழ்ச்சி நிறைந்ததாயின் அதில் நாம் மகிழ்ந்திருப்போம்;துக்கம் நிறைந்ததாயின் நாம் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தபோதும் அதை நாம் அனுபவிப்பதில் குரை ஏற்படும்;அப்போது நாம் துயரம் கொள்ளாதிருக்க முடியாது.

அதனால்தான் அருளாளர் ஸ்ரீதாயுமானவர் தயையுடன் நினைந்தார்
இப்படி:

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல், வேறொன்றறியேன் பராபரமே

ஆம்.
பிறர் நலமாய் இருக்க விழையுங்கள்;உங்களுடைய நலம் அருளப்படும்

இவண்,
கிருஷ்ணன்பாலா
29.5.2012