Sunday, June 17, 2012

நீதி கெட்ட அரசும் நெறிகெட்ட ஆதீனமும்


நண்பர்களே,

மதுரை ஆதீன நிகழ்வுகள் நீதி கெட்ட அரசையும் நெறிகெட்ட ஆதீனகர்த்தரையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

மதுரை ஆதீனம் இப்போதுள்ள 292 அருணகிரியின் அப்பன் வீட்டுச் சொத்தல்ல; இந்த அருணகிரியும் நம் அப்பனின் ஒரிஜினல் பரம்பரையில்
பிறந்திருக்கவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்.

முறையற்ற வழியில் 291 ஆவது ஆதீனத்தைக் கவர்ந்து,பதவி பெற்று நெறிகெட்ட முறையில் ஆட்டங்கள் போட்டவர்; அரசியல்வாதிகளுக்கு வாய்க்கரிசி போட்டு வம்புகள் அளந்தவர்;அரசியல்வாதிகளை விடவும்  அதிகம் வளர்ந்தவர் இவர்.

இப்போது வாய் மூடி, வாடித் தலை குனிந்து போய் நோய் கொண்டு உழலும் நிலைக்கு,நிலை மீறிப் போய் விட்டார்.

தெய்வத்திரு ஞானசம்பந்தரின் பெயரால் இவர் செய்த ஆன்மீக அத்துமீறல்களின் பாவங்கள்தான் இவரை நித்தியின்பால் சேர்த்தன என்பேன்.

’பாம்பறியும் பாம்பின் கால்’ ’பாவத்தை பாவம்தான் தண்டிக்கும்;’
முள்ளை முள்ளால் எடுப்பதுதான் தெய்வ நீதி.’

“அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும்;அஃதறிவீர்;
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும்;நாமடியோம்;
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்”
                   (தேவாரப் பண்:1249; பதிகம்:திருநீலகண்டம்)

என்றொரு பதிகத்தைப் பாடிய திருஞான சம்பந்தப் பெருமான்,’உய்யும் வினையை நாடாதிருப்பது வாழும் நெறிகளுக்கு ஊனம்’ என்று
எச்சரித்து,கரம் கூப்பிப் பணிந்து இறைவன் பாதமலர் போற்றி வாழும் செய்வினை ஒன்றே அந்த ஊனம் நம்மைத் தீண்டாதிருக்கச் செய்யும் நல்வினையாகும்’ என்று நமக்கு உணர்த்துகிறார்.

தேவாரத்தில் தெளிந்த அறிவோடும் தீவிரப் பற்றோடும் இருக்க வேண்டிய 292 அருணகிரிக்கு இது தெரியவில்லை.தெரிந்திருந்தால் இத்தகைய கேடுகள் சூழ்ந்திருக்காது.

புலன்களை ஒடுக்கித் தவநெறி நின்று தேவாரப் பண்ணிசையை முழக்க வேண்டிய பதவியைப் பெற்றவர்;’நித்தியின் ஆட்டமும் பாட்டும் அருமை’ என்கிறார்;அதில்தான் இறையின்பம் பிறக்கிறது’ என்று தள்ளாடுகிறார்.

வெட்கக் கேடு.

இதை எதிர்க்கவும் காறித் துப்பவும் வெகுண்டெழுந்து அவரை விரட்டவும் போராடவும் இங்குள்ளோருக்கு இன்னும் ஞானம் பிறக்கவில்லை.

ஆனால் கர்நாடகச் சைவர்களுக்கு பிறந்து விட்டது. அவர்கள்தான் 
வீர சைவர்கள்.

வைகறைப் பொழுதுக்கு முன் கண் விழித்து,’சிவாய நம;’ எனச் சிந்தித்துக் கங்கை நீராடி, திருநீறும் ருத்ராட்சமும் தூய காவியும் உடுத்தி, தேவாரப் பண்ணிசை பரவ, தெய்வ நிலை கொண்டிருக்க வேண்டியவர்,வைகறைப் பொழுதுவரை, பழுது வளர்க்கும் சிந்தனைகளில் மூழ்கித் திளைத்து, ‘நம்மைக் கேட்பாரும் இல்லை; மீட்பாரும் இல்லை’ என்ற நிலையில் கிடந்து, தன்னை ஒரு ’உலகக் குரு’ என்று பிதற்றிப் பறைசாற்றிக் கொண்டு,அரசியல் சாக்கடையில் எந்நேரமும் உழன்ற ஒரு அற்ப மனிதர்தானே இந்த 292 மதுரை ஆதீனம்?

இதை இப்போதேனும் தமிழர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நண்பர்களே,

நித்தியைத் தன் வாரிசென இவர் தன்னிச்சையாக 293 ஆவது ஆதீனம் என்று பட்டம் சூட்டி அவனை,’போற்றியோ போற்றி’ என்று புகழ்ந்தார்.

நாடே அதிர்ந்தது; நாமெல்லாம் அவமானத்தால் குனிந்தோம்.
‘மதுரை ஆதீனத்தின் ஈனச் செயல் இது’ என நாம் அப்போதே வெகுண்டெழுந்து எழுதினோம்.

‘அருணகிரியின் ஈனச் செயல்’ என்று எழுதியதை, சமய நெறி போற்றும் நல்உள்ளங்கள் சில ரசிக்கவில்லை;

‘அய்யோ.என்ன இருந்தாலும் ஞான சம்பந்தப் பெருமான் பீடத்தில் காவியும் அவரது பாத ரட்சையும் உத்திராட்சமும் அணிந்துகொண்டு இருக்கும் சமய குரு வேடம் தரித்த ஆதீனம் அல்லவா? அவரை ஒருமையில் விளித்துச் சாடலாமா? அய்யா.உங்கள் கோபம் விளங்குகிறது.கொஞ்சம் பொறுங்கள்; நாங்கள் அவரை மீட்டு நித்தியைத் துரத்துவோம்; அய்யா,கடும் வார்த்தைகள் அவரைச் சுடும்;அதன் வடுக்களை அவர் தாங்க மாட்டார்” என்று 292 அருணகிரியார் மீது அளப்பரிய பக்தி கொண்ட கோவை நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டுக் கொண்டார்.

அந்த நண்பர்,மதுரை ஆதீனம் அருணகிரி மீது கொண்டிருக்கும் பகுத்தறிவில்லாப் பக்தி கண்டு வியந்தாலும் எனது மனம் மேலும் கொதிப்புற்றதே தவிர, குளிரவில்லை.

காரணம்:

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
 
கொள்வர் பழிநாணு வார்.

என்பதைக் கடைப்பிடிக்கின்றவன் நான்.

மதுரை ஆதீனத்தின் இன்றைய நிகழ்வுகளிலோ பனைத்துணை அளவுக்குக் குற்றங்கள் மிகுந்துள்ளபோது எப்படி மென்மை காக்க முடியும்?

எனவேதான்,

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என்ற குறளுக்கேற்ப, மதுரை ஆதீனத்தின் குற்றத்தின் மூலம் எங்கே என்பதைத் தெரிந்து கொண்டு அதை அறவே நீக்கும் வழி யாதென அலசி ஆய்ந்து எனது எழுத்தாயுத்தை ஏவுகின்றேன்.

நண்பர்களே,

எனது சொந்த ஊர்:தாராபுரம். அங்கே கொளிஞ்சிவாடி என்று ஒரு பழம் பெரும் அக்ரஹாரம் இருக்கின்றது. அமராவதி ஆற்றுக்குக் கிழக்கே அமைந்துள்ள அருமையான அக்ரஹாரம் அது.

”அங்கே, ஒரு பெரிய வீட்டை விலைக்கு வாங்கி, அதை ஒரு ’கார்பொரேட் விருந்தினர் மாளிகைபோல் மாற்றி’ குளிர்சாதன அறைகளைக் கட்டி,அங்கே வந்து அடிக்கடி தங்குகிற கார்பொரேட் ஆதீனம்தானே இந்த ஆள்?” என்றும் ”அங்கே இவர் பெண்களுடன் அடிக்கும் கூத்தெல்லாம் இங்குள்ள பலருக்கும் தெரியும் அவரோடு ஒரு அரசியல் வட்டாரத்தில் அதிகம் பேசப்படும் ஒருவரும் வந்து தங்கிச் செல்வது வழக்கம்தானே? இப்படிப்பட்ட ஆளைப் பற்றி.இதே ஊரைச் சேர்ந்த நீங்கள் முழு விவரம் தெரியாமல் எழுதி வருகிறீர்கள்” என்றும் என் தாராபுரத்து நண்பர்கள் சொல்லி அதிர வைக்கின்றார்கள்.

நான் தாராபுரத்துக்கு ஆண்டுக்கு இரண்டுமுறை ஓரிரு நாட்கள் சென்று திரும்புவது வழக்கம். அதனால் தாராபுரத்து உறவுமுறையினருடன்  நேரத்தைப் போக்கி விட்டு வேறு வெளி விவகாரங்களைப் பற்றிப் பேச நேரமில்லாது திரும்பி விடுவது வழக்கம்

ஆகையால் மதுரை ஆதீனத்தின் தாராபுரம் தொடர்பு பற்றி எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இப்போது சில விஷயங்கள் தெரியத் தெரிய தலை சுற்றும் அளவுக்கு அவை விரசமாக இருக்கின்றன.

’சிவன் சொத்துக்களைத் தன் சொத்துக்களாய் எண்ணி, தெருவுக்கு ஒரு தேவடியாளை வைத்திருக்கிறவர் என்ற விமர்சனத்தை இப்போது விவரம் தெரிந்தவர்கள் கூறி,காறி உமிழ்கின்றார்கள்:கடுஞ்சொல் பொழிகின்றார்கள்.

‘நித்தியால்தானே இந்த ஆதீன கர்த்தரின்.களவு மெய்ப்பட்டிருகிறது?’ என்று கேட்டு விட்டு,’இது மற்ற ஆதீனங்களின் செயல் பாட்டுக்கும் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது’ என்று சிரிக்கின்றார் எனது நெருங்கிய நண்பர் ஒருவர்.;அவர் ஆடிட்டர்;அறிவு நுட்பம் மிகுந்த மனிதர்.

மதுரை ஆதீனமான மதிகெட்ட அருணகிரிதனக்குத்தானே குழி வெட்டிக் கொண்டிருக்கிறார். துறவிக்கே உரிய ஒழுக்கத்தையும் அடக்கத்தையும் அத்து மீறி ஆணவத்துக்கும் ஆசைக்கும் அடிமையாகிப் போனவர், இன்று மூச்சுத் திணறுகிறாராம். பத்திரிகைகள் இப்போது இவரைப் பரிகாசம் செய்கின்றன.

இவருக்கு நேரும் கதிதான் நாளை நம் அரசுக்கும் நேரும்.

நம் தமிழர்களுக்கே உரிய சகிப்புத்தன்மை காரணமாக, ‘நரி இடம் போனால் என்ன?வலம் போனால் என்ன? நம்மை அது கடிக்காமல் போனால் சரி’ என்கிற மனப்பான்மை மிகுந்து விட்ட காரணத்தால்
இந்த 292ன் ஆரம்பம் எது? செயல்பாடுகள் எந்த அளவுக்கு ஒரு ஆதீனகர்த்தர் என்பவரின் அந்தஸ்தை மீறி இருக்கின்றன?
இவரது செயலால் நமது மரபுவழிச் சொத்தும் சமய நெறிக் கட்டுப் பாடும் எந்த அளவுக்குச் சீரழிக்கப்பட்டுள்ளன? மேடை கிடைத்துவிட்டால் அதில் அரசியல்வாதிகளுடனும் சமய நெறிகளைத் தாக்கும் சண்டாளர்களுடனும் இந்த அருணகிரரி கைகோர்த்து கொண்டு குத்தாட்டம் போட்டு வருவது எல்லாம் ஆதீனகர்த்தரின் செயல்பாடுகளா? என்பதைக் கண்கொண்டு பார்த்து இவரைத் தட்டி வைக்க வேண்டிய அரசு, இவரது ஆட்டத்தை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

தமிழர்கள் தாங்கிக் கொண்டிருந்தனர்.

இதன் எதிர்விளைவாய், இந்த உளறுவாயர், ’நம்மைத் தட்டிக் கேட்க எவரும் இல்லை.தன்னை ‘சுவாமீ’ என்றும் ’ஆதீனம்’ என்றும் சிரம் தாழ்ந்து வணங்கும் கூட்டம் ஞானசம்பந்தர் பெருமானைத்தான் எண்ணி வணங்குகின்றதே தவிர தன்னை அல்ல’ என்ற தெளிவு இல்லாமல், ”தானே உலகக் குரு;தனக்கு நிகர் எவரும் இல்லை” என்கிற திமிர் முளைத்துப் போய், ஆடிய தப்பாட்டங்களின் பலன் இப்போது இவரது தலையைக் காவு கொள்ளப் போகிறது.

இவர் செய்த மன்னிக்க முடியாத செயல்கள்,”சிவன் சொத்தை எவன் சொத்து? என்று கேட்டுக் கொண்டு ”நாம் யார்க்கும் பதில் சொல்லும் நிலையில் இல்லை; ஈசனே என் கனவில் வந்து நித்தியைக் காட்டினார்; நான் அவருக்கு மகுடத்தை பூட்டினேன்’ என்று வெட்கமின்றி விளம்புகிறார் இந்த வீணர்.

நித்தி எனும் பரம சண்டாளனின் பாச வலைக்குள் இந்த 292ஐ விழ வைத்தது இவரது கிழட்டுப் பருவத்தின் கேடு கெட்ட ஆசைகளும் இச்சைகளும்தாம்.

‘காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.”.

என்ற வள்ளுவனின் வார்த்தைகளுக்கு உதாரணபுருஷனாய் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்.

தன்நெறி கெட்ட செயல்களால். இப்போது இவரது நாமம் கெட்டுவிட்டதா,இல்லையா?

இந்த 292ஐ அந்த 293, ‘குரு’ என்ற ஸ்தானத்தில் வைத்துக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை. இதை ’இல்லை’ என்று எவரேனும் விளக்கம் சொல்ல முடியுமா?

நித்தம் நித்தம் பேட்டிகள்;சவால்கள்;சந்தி சிரிக்கும் பேச்சுக்கள்...

ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் இரண்டுங் கெட்டான்களுக்கு எப்படி வெட்கம் என்ற பதமே இருக்காதோ,அப்படி, அதை உறுதிப்படுத்தி, நிரூபித்துக் காட்டிக் கொண்ட பித்தனாகக் கொக்கரித்தவனை கர்நாடகம் காவு கொண்டு விட்டது பார்த்தீர்களா?.

இன்று நித்தியின் திரைமறைவுக் கிரிமினல் நடத்தைகள் ஆர்த்தி என்ற அமெரிக்கப் பெண்ணால் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் நவீன இளைஞனாக வேடம் தரித்துக் கொண்டு அங்குள்ள மதுபானக் கூடங்களில் கூத்து நடத்தியிருப்பதை அமெரிக்கவாழ் இவரது நிர்வாகி ஒருவரே இப்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

ஆழ நீரில் மூழ்கிக் கொண்டு காற்று விட்டவனை, அது பொட்லியாக நீரின் மேல் தோன்றி வெடித்துக் காட்டிக் கொடுக்காமல் இருக்காதே?

எத்தனையோ இளைஞர்களும் இளம்பெண்களும்,கணவன்மார்களிடம் கசப்புக் கொண்டவர்களும் இந்த நித்தி தரும் தீர்த்தத்தால் தெளிவு(?) பெற்று இவனுக்குச் சேவகர்களாகி விட்டார்கள்.

பாவம், அதே தீர்த்தம் இந்த அருணகிரியையும் பாடாய்ப் படுத்தி நித்தியின் புகழைப் பாட வைத்துக் கொண்டிருக்கிறது.

’நித்தியின் நிழல்களுக்குக்கே நிஜமான சக்தி இருப்பதாக அரற்றிக் கொண்டு அவர்களுடைய பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறார்  அருணகிரி’ என்பது எல்லோருக்கும் தெரிந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த அரசுக்கு மட்டும் தெரியவில்லை.

ஒருவேளை இவனது தீர்த்தம் அரசையும் அடிமைப் படுத்தி விட்டது போலும்.

இல்லையென்றால் கர்நாடக அரசால் நித்தியின் நடத்தைகள் கிமினல் குற்றங்களாகப் பதிவு செய்யப்பட்டு அவன் மீது வழக்குத் தொடுத்த பின்னரும் நம் மாநில அரசு - நமது தமிழ்ப் பண்பாட்டையும் சமய நெறி மரபுகளையும் காக்க வேண்டிய இந்த அரசு, மவுனம் காக்குமா?

நண்பர்களே

நித்தி, நமது சமயத்துக்கு மட்டுமல்ல;அத்தனை சமயங்களுக்கும்
சைத்தான்;கடுகளவும் கருணையற்றவன்; காமப் பேய் பிடித்துக் காவி கட்டிக் கொண்டு இளிச்சவாயர்களையும் ஏமாந்த பணக்காரர்களையும்
தன் பாதங்களில் விழ வைத்து பல்லிளித்துக் கொண்டிருக்கும் மாய்மாலக்காரன்;மாபாவி.

பாவத்தில் முளைத்த பணத்தாலும் கேடு கெட்ட குணத்தாலும் அரசியல் அதிகாரம் கொண்டவர்களை உறவாக்கிக் கொண்டு,உல்லாசம் காணும் உளுத்தன்.
.
’இந்தக் கேடு கெட்டகிரிமினலைச் சரண் அடைந்து எனது வாரிசே நீதான்’ என்று வணங்கியவர் நம் வணக்கத்துக்குரியவரா?

கூடா நட்பு கேடாய் முடியும்;இது 292மற்றும் 293 ஆகிய 420களுக்கு மட்டுமல்ல அரசுக்கும்தான்.

அவனை, ஆட்சியாளர்களும், ஏன் நீதி மன்றங்களும்கூட கண்டு கொள்ளாமல் இருக்கலாம்;ஆனால். திருஞானசம்பந்தரின் திருவுளம் விடாது.

ஞானசம்பந்தரின் பெயரால் பெற்ற அந்தஸ்தை அற்பத் தேவைகளில் செலுத்தி ஆசைகளில் உழன்ற பாவச் செயல்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனை, பிடதிப் பித்தன் நித்தியால் நேர்ந்துள்ளது’ என்பதே எனக்குள் உணர்த்தப்படும் செய்திகள்.

இந்த அருணகிரியையும் அந்தச் சண்டாளன் நித்தியையும் இரக்கமின்றித் தண்டிக்கும்; இவர்களுக்குத் துணை நிற்கும் எவரையும் நரகத்தில் இடர்படுத்தும்; எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

இதோ-
நம் மக்களுக்கு இருக்க வேண்டிய வீரமும் விவேகமும் கர்நாடக மக்களுக்குத் தோன்றி, நித்தியைத் துரத்தத் தொடங்கி விட்டது.

நம் தமிழர்களுக்கு இனி மேலும் வீரம் பிறந்து விழித்தெழுந்து கொள்ளாமல் போனாலும் இறைவன் சபையில் கடும் தண்டனைத் தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது.

திருஞான சம்பந்தர் பெருமானின் அற்புத வாழ்வை அறியாத அற்ப மானிடர்க்கு இப்போது இது புரியாது.

’மதுரை ஆதீனத்தின் கோவில் சொத்துக்களை எல்லாம் கூத்துக்
கெட்ட குமரிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருக்கிறார்’ என்ற குற்றச் சாட்டை இந்த அரசு
ஏன் கடுமையாகக் கண் கொண்டு பார்க்கவில்லை?

அரசின் புலனாய்வுத் துறை தூங்கிக் கொண்டிருக்கிறதா? அல்லது அதன் கைகள் கட்டப்பட்டுள்ளதா?

இந்து அறநிலைத்துறை என்பது இந்து சமயத்தின் நெறிகளைக் குழி தோண்டிப் புதைக்கும் ஆதீனச் செயல்களுக்கு ஆலாபனை பாடும் நிலையில் வைக்கப் பட்டிருக்கின்றதா?

ஒரு கிரிமினலைக் காப்பாற்றி தமிழர்களின் சமய நெறிகளைச் சாகடிக்கும் இந்த அரசை மக்கள் விரைவில் கைவிட்டு விடும் சூழ்நிலை தெய்வக் கட்டளையால் நிச்சயம் ஏற்படும்..

கர்நாடகத்தில் கிரிமினல் என்று அறியப் பட்ட ஒருவன் இங்கு சிவில் குற்றவாளியாகக் கூட இந்த அரசுக்குத் தெரியாமல் இருக்கின்றதே!; கர்நாடக மக்களுக்கு உள்ள சமய நோக்கமும் வீரமும் இந்தத் தமிழர்களுக்கு இல்லாது இருக்கிறதே?.

இந்த நிலை கண்டு எனதுள்ளம் கொதிக்கின்றது.

நண்பர்களே,

நான் ஆரம்பம் முதலே மதுரை ஆதீனச் செயல்பாட்டில் உறுதி கொண்டு எதிர்க்கின்றேன்,

சூடாக இருப்பினும் என் எழுத்துக்கள் எப்போதும் அநீதியைத்தான் சுட்டும்; அறம் சார்ந்துதான் முட்டும்..

எதன் பொருட்டும் தடுமாறாது.

‘நாமார்க்கும் பகை அல்லோம்;பயமும் கொள்ளோம்;
நல்லோர்க்குத் துணை செல்வோம்;நியாயம் வெல்வோம்:
ஏமாற்றோம்;ஏமாறோம்; துணிந்து நிற்போம்;
எதுவரினும் அறம் மாறிச் செல்லோம் நாமே”

என்பதே எனது எழுத்துக்களின் தார்மீகப் பலம்;கொள்கை.

எனவேதான், இந்தக் கபடக் காவியின் கைங்கரியத்தை எல்லாம் கடுமையாகச் சாடும் கடமை எனது எழுத்துக்களுக்கு இயல்பாகிப் போனது.

ஆனால்,தமிழும் சமய நெறிகளும் தவழ்ந்து வளர்ந்த மதுரை ஆதீனத்தில் நடக்கும் இழிசெயல்களின் எதிர் விளைவுகளைத் தமிழன் உணராது இருக்கின்றானே?

தமிழை நினைத்தால் தலை நிமிர்கின்றேன்;தமிழனை நினைத்தால் தலை குனிகின்றேன்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
17.06.2012

No comments: