Saturday, December 31, 2011

மேடம் ஜெ அவர்கள் புரிந்து கொள்வாரா?


நண்பர்களே,
இன்று (30.12.2011) நடந்த அ.தி.மு.க. பொதுக் குழுவில் அதன் பொதுச் செயலாளரும்,தமிழக முதல்வருமான மேடம் ஜெ. அவர்களின் பேச்சுத்தான் இன்றைய (31.12.2011) செய்திகளின் தலைப்பு.

மிகவும் மாறுபட்ட தெம்பும் தெளிவோடும்  மேடம் ஜெ. சற்றும் குழப்பம் இன்றி ஆற்றிய உரை முன் எப்போதும் இல்லாத  உறுதியுடன் வெளிப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

அண்மையில் கட்சியில் அவர் எடுத்த களை எடுப்பில் அவர் காட்டி நிற்கும் வேகமும் அதன் காரணங்களின்மீது கொண்டிருக்கும் கோபமும் மாறாதது;அது நிலையானது;நிஜமானது என்பதை பகிரங்கப் படுத்தியிருக்கிறார்.பாராட்டுவோம்.

"கட்சியிலிருந்து நீக்கப் பட்டவர்கள், வேறு கட்சிகளுக்குச் சென்று அரசியலைத் தொடர்வதில் தவறில்லை;அது ஏற்றுக் கொள்ளப் படக் கூடியதுதான்.ஆனால் நீக்கப் பட்டவர்கள் அதே கட்சிக்காரர்களிடம்,’தாங்கள் மீண்டும் கட்சிக்குள் வந்து கட்சியைக் கைப்பற்றி இப்போது தங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளாதவர்களைப் பழிவாங்குவோம் என்று பிரச்சாரம் செய்து வருவதை மன்னிக்கவே முடியாது என்றும் ”அவர்களுக்கும் அவர்கள் பேச்சைக் கேட்கும் கட்சிக்காரர்களையும் மன்னிக்கவே முடியாது என்றும் மேடம் ஜெ.அவர்கள் மிகக் கடுமையான குரலில் பேசியிருப்பதன் மூலம் கட்சியை விட்டும் போயஸ் தோட்டத்தில் இருந்தும் களை எடுக்கப் பட்டவர்களின் கபட நாடகங்களுக்கும் சதி ஆடல்களுக்கும் சாவு மணி அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அவரது பேச்சும் கருத்துக்களின் கோர்வையும் கடுமையான விமர்சகர்களும் குறைகாண முடியாதவாறும் பாராட்டக் கூடிய வகையிலும் அமைந்திருக்கிறது என்பது உண்மை. இது மேடம்  ஜெ.அவர்களுக்கு நல்ல ஆட்சியைத் தருவதற்கேற்ற ஆலோசனைகளை வழங்கும் மதிப்புக்குரிய ஆலோசகர்கள் இப்போது பின்புலத்தில் வந்திருப்பது தெரிகிறது.

இது இனி தமிழ் நாட்டின் ஆட்சி நிர்வாகத்துக்கும் ஆரோக்கியமான அரசியல் அணுகுமுறைகளுக்கும் நல்ல திருப்பத்தைத் தரும் என்று நாம் எதிர்பார்க்கும் அதே தருணத்தில்,கடந்த கால ஊழல், அதற்குக் காரணமானவர்கள்,சட்டத்தை ஏமாற்றி நடத்திய அத்தனை குற்றங்களும் வெளிக் கொணரப் பட வேண்டும்; அவர்களை வெளியேற்றி விட்டதுடன் நின்று விடாமல், ஏமாற்றப் பட்டவர்களின் நிலை,இழப்பு, கொள்ளையடித்த சொத்துக்கள்,இவற்றை ஈடு கட்டும் செயல்முறை,உடந்தையாக இருந்த அதிகாரிகள், அவர்கள் மீதான நடவடிக்கை மற்றும் அதற்கான சட்டப்படியான தண்டனை யாவும் உரிய முறையில் இருக்க வேண்டும்.

தவறு யார் செய்திருந்தாலும் அதைத் தீவிரமாக சட்டத்தின் முன்பு விசாரித்து,நேர்மையான அரசு நிர்வாகம் அமைய சம்பந்தப் பட்டவர்கள் முன் வரவேண்டும்.

குற்றம் செய்தவர்களின் பின்பலம் கருதி அவர்கள் தப்பிவிடுவதோ, தப்ப விடுவதோ கூடாது. அப்படி விட்டு விட்டால் இப்போதைய நடவடிக்கைகள் எல்லாம் எதையோ காப்பாற்றிக் கொள்ள எதற்கோ ஆடிய நாடகமாய் முடிந்து இன்னொரு அரசியல் கேலிக் கூத்தின் ராஜ ரகசியத்தைக் காப்பாற்றும் சதியாகவே ஆகிவிடும்.

இது இன்றைய அறிவார்ந்த ஆலோசகர்களுக்குப் புரியாததல்ல:
மேடம் ஜெ.அவர்கள் புரிந்து கொள்வாரா?

உண்மையுடன்,
கிருஷ்ணன்பாலா
31.12.2011

Thursday, December 29, 2011

மூன்று வகை மாணவர்கள்




நண்பர்களே,
ஆசிரியர் பாடங்களைப் போதிக்கும்போது அதைப் புரிந்து கொள்ளும் 
மாணாக்கரில் மூன்று வகைப் பிரிவினர் இருக்கிறார்கள்.
அவர்கள்:
1. பசுமரம்:

ஆணியை அடித்தால் எவ்வளவு ஆழமாக அதை உள்வாங்கிக் கொள்கிறதோ  அதுபோல விஷயங்களைக் கிரகித்துக் கொள்கிறவர்கள் இவர்கள்நல்லதையும் கெட்டதையும்கூட இவர்கள் ஒன்றாகவே பதித்துக் கொள்கிறவர்கள்..

2.பன்னாடை:
கசடுகளைப் பிடித்துக் கொண்டு தெளிந்தவற்றை வெளியில் விட்டு விடும் இயல்புடையவர்கள்.(அதாவது நல்லதைக் கைவிட்டு தீயதை மட்டுமே தேக்கி வைத்துக் கொள்கிறவர்கள்.)

3.அன்னம்:
பாலையும் நீரையும் கலந்து வைத்தாலும் பாலை மட்டும் உறிஞ்சிக் கொண்டு நீரைத் தெளிவாக விட்டு விடும் இயல்புள்ளோர்.(நல்லதை மட்டுமே ஏற்றுக் கொண்டு தீயத்ஹைக் கழித்து விடுகிறவர்கள்.)

குறிப்பு:
------------

’பாலூண் அன்னம் தெளிந்து’ என்று இலக்கிய உவமையாகச் சொல்லப்படும் இதற்கு அன்னப் பறவை பாலை மட்டுமெ உறிஞ்சி விட்டு நீரைத் தவிர்த்து விடுவதாய்ப் பொருள் கூறுவது சரியல்ல. ஏனெனில் அன்னப் பறவையை நாம் கண்டதில்லை. அதன் இயல்பையும் நாம் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.

உண்மையில், நாம் சாதத்தைப் பாலுடன் கலந்து வைத்து விட்டால்,அந்தச் சாதமானது சிறிது நேரத்தில் பாலை மட்டுமே தன்னோடு ஊறச் செய்து, நீரை விட்டு விடுவதைக் காணலாம். அதாவது, பால் சாதத்தை நீண்ட நேரம் கழித்துப் பார்த்தால்,சாதம் பாலில் ஊறிப்போய் விட்டிருக்கும்; நீர்மட்டும் நீர்த்து அது,சாதத்தில் கலவாமல் இருப்பதைக் காணலாம்.

எனவேதான் ‘பால் ஊண் அன்னம் திரிந்து’ என்று பொருள் சொல்லியிருப்பதானது, காலப் போக்கில் ‘பாலூண் அன்னம் தெளிந்து’ என்று அன்னப் பறவையைச் சொல்லி உவமையைக் கையாளும்’ திரிபு’ ஏற்பட்டு விட்டது.

நண்பர்களே,
எத்தனை முறை நல்ல பண்புகளை இங்கே வலியுறுத்திச் சொன்னாலும் சொல்லும் பொருளை விட்டு விட்டு,நாம் எடுத்துச் சொல்வதை மட்டும் குறைசொல்லும் பன்னாடைகளை நாம் இங்கே,இந்த முகநூலில் நிறையப் பார்க்கலாம்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
29.12.2011

Monday, December 26, 2011

இது எந்தச் சங்கு?

நண்பர்களே,


நமது மத்திய அமைச்சர்களில் இப்போது திஹார் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் 2ஜி  ஊழல் ராஜாவின் TeleCom துறையின்  மந்திரி  பொறுப்பில் இருந்து கொண்டு இந்தியாவின் மாபெரும் ஊழலுக்கு வாக்காலத்துப் பேசிய வக்கீல் கபில் சிபல், அண்மையில் கலந்து கொண்ட சர்வதேசக் கவனத்தை  ஈர்க்கும் முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் நடந்து கொண்ட   ‘தேசீய’அவமானமிக்க நடத்தை’ சாட்சிதான் இந்தப் புகைப்படம்.


இதில், கபில் சிபல் இன்னொரு நாட்டின் அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதும், அவர் கண் முன்னே நமது இந்திய தேசியக் கொடி தலைகீழாகப் பறந்து கொண்டிருப்பதும் புகைப் படமாகப் பறைசாற்றுகிறது.


இத்தகைய தேசிய அவமானத்தைச் செய்த இந் நிகழ்ச்சி பற்றியோ, அக் குற்றத்துக்குக் காரணமான மத்திய அமைச்சரை ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை என்பது பற்றியோ நமது இந்தியப் பிரதமரோ செய்தி ஊடகங்களோ இதுவரை ஏன் கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளவில்லை   என்பது நமக்கு விளங்கவில்லை

.

இந்தப் புகைப்படம் எனது கண்ணில் பதிவான இன்று (25.12.2011) காலையில்,எனது முகநூல் பக்கத்தில்து குறித்து “இப்பொழுது புரிகிறதா?   ‘முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களில் எதை வேண்டுமானாலும் எழுதும் எழுத்துக்களுக்குக் கட்டுப்பாடு கொண்டுவரவேண்டும்’ என்று இந்த ஆள் ஏன் திருவாய் மலர்ந்தார் என்பது? இந்த அவமானமிக்க செயலைச் செய்தவனுக்குத்தான் இன்னும் மத்திய மந்திரி பதவியில் நீட்டிக்கச் செய்யும் காங்கிரஸின் தேசிய லட்சணம் தொடர்கிறது.  ‘இந்திய தேசிய மரியாதையைக் காப்பாற்றுவது காங்கிரஸ்தான்’ என்று குரைத்துக் கொண்டிருப்பவர்கள் இதற்கு ஏன் வாய் திறக்கவில்லை? ஒருவேளை அவர்கள் இத்தாலியக் கொடியை இப்படித் தலை கீழாக மாட்டியிருந்தால்தான் இந்த மந்திரியை மாற்றுவார்களோ?” என்று கேட்டிருந்தேன்.


இவ்வாறு நான் எழுதிய கடுமையான கருத்துக்கு, முக நூல் நண்பர் திரு.Mani Manivannan அவர்கள் ‘அது வேண்டுமென்றே தொழில் நுட்ப ரீதியில் ’மார்பிங்;. செய்து வெளியிடப் பட்ட படம்’ என்பதாக் கூட இருக்கும் என்று எழுதி,அப்படித் தவறான படத்தைச் சித்தரித்து வெளியிடுபவர்களுக்கு சட்டப்படித் தண்டனை வழங்கவும் சட்டத்தில் இடம் உண்டு என எழுதியிருந்தார். அவர் எழுதியதாவது: // This looks like a photo shopped fake. No other news media seem to have picked it up. It is ok as a satire but if this was created for fake news, the person that created it is liable for defamation and all the people propagating this without verifying this should apologize and post that apology as their public status, no?//


நான் கேட்கிறேன்:


அந்தப் படம் வேண்டுமென்றே தொழில் நுட்ப ரீதியில் மாற்றி  ‘நமது தேசியக் கொடியை கபில் சிபல் அவமானப் படுத்தி விட்டார்’ என்பதாக அவருடைய அரசியல் எதிர்கள் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும்கூட, அது பற்றிய  உண்மைகளைக் கண்டாய்ந்து  “அவ்வாறு நமது தேசீயக் கொடிக்கு  எவ்விதமான  அவமானமும் ஏற்படுத்தப் படவில்லை;அதில் மத்திய அமைச்சர் கபில் சிபலுக்கு எவ்விதத்திலும் பங்கு இல்லை” என்று சொல்லும் அதிகாரமும் பொறுப்பும்  யாருக்கு இருக்கிறது?

அது மட்டுல்லாது அவ்வாறு செய்யப் பட்டிருந்தால் அதுவும்கூட ஒரு மாபெரும் தேசியச் சதியாகவும் கிரிமினல் குற்றமாகவும் அறியப் பட வேண்டுமா?,கூடாதா? அப்படிச் செய்தவர்கள்மீது மான நட்ட வழக்குத் தொடுக்கும் உரிமை கபில சிபலுக்கு இருப்பது சட்ட நிபுணரான அவருக்குத் தெரியாததா?


இந்தப் படம் நிஜமாக இருந்தால்,முதலில் பதவி நீக்க்கம் செய்யப் பட வேண்டியவர் கபில் சிபல்தான். இன்னும் சொல்லப் போனால், உண்மை தெரிந்ததும் தானாகவே அவர் பதவி விலகியிருக்க வேண்டும். அல்லது இந்தப் படமே பொய் என்று அறிக்கை விட்ட கையோடு அது பற்றிய விசாரணைக்கு ஆணையிட்டிருக்க வேண்டும்.


இதை மிகக் கடுமையான நடவடிக்கைகுரிய விஷயமாகக் கவனத்தில் கொள்ளாது மெத்தனமாக இருக்கும் கபில் சிபல் பற்றியோ,நமது உள்துறை அமைச்சகம் பற்றியோ அதற்கு மேலான நமது பிரதமரின் கவனமின்மை பற்றியோ நாம் எப்படி எடுத்துக் கொள்வது?


இதற்கெல்லாம் விளக்கம்  சொல்ல வேண்டியது அவரும் அவர் சாந்த மத்திய அரசும்தான் என்பதுடன் இந்தப் படத்தை வேண்டுமன்றே தவறாகச் சித்தரித்துப் பிரசுரித்தவர்கள் மீதும் சம்பந்தப் பட்ட ஊடகத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?

நமது உள்துறையும் அதன் உளவுத் துறையும் என்ன செய்து கொண்டிருக்கின்றன?


ஏன் செய்யவில்லை?


நண்பர்களே,


இப்போதெல்லாம் இம்மாதிரியான கவனக்குறைவான நிகழ்வுகள் சகஜம்போல் ஆகி விட்டதாலும்; அதிகாரவர்க்கம் இது போலியான - இட்டுக்கட்டிய புகைப்படச் செய்தியாக இருப்பினும்கூட அதுபற்றியெல்லாம் எண்ணாது ஊழல் குறித்து எழும் விமர்சனங்கள் மக்களிடையே பெரிய அளவில் எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்பதில் மட்டுமே விழிப்புக் கொண்டிருப்பதாலும்தான் சர்வதேசக் கவனத்துக்குரியதும் தேசிய அவமானச் செயலுக்குரியதுமான இந்திய தேசியக் கொடியைத் தலை கீழாகப் பறக்க விட்டுக் கொண்டு பவிசு காட்டிய மத்திய மந்திரி பற்றி எவ்விதமான கண்டனக் குரலும் எழவில்லை என்கிறேன்.


தேசியக் கொடி பற்றிய தெளிவான சட்டப் பிரிவுகள் இருக்கும்போது சட்டத்தை அமல்படுத்தவேண்டிய அரசே இதில் மவுனம் சாதிப்பதும்,இது பற்றிய கவன ஈர்ப்பை நமது எதிர்க் கட்சிகள் காட்டாதிருப்பதும் நமது இந்தியச் செய்தி ஊடகங்கள் இதில் மழுங்கிப் போய் இருப்பதும் ஏன்?


இந்தக் கேள்வி,செவிடன் காதில் ஊதிய சங்கா?இல்லை நமது தேசீய விழிப்புணர்வுக்கு ஊதப் பட்ட சங்கா?


ஊதிக் கொண்டிருக்கும்-
கிருஷ்ணனன்பாலா

25.12.2011

Sunday, December 25, 2011

புனிதனைப் போற்றுமின்!























மனிதநேயம் யாதெனக் காட்டவும்
மாக்களையெல்லாம் மக்கள் ஆக்கவும்
கனிவும் அன்பும் கருணையும் கொண்டு
கடமையை உணர்த்தி, நமை உய்விக்கவும்
தனிஒரு பிறவி எடுத்தே மண்ணில்
தானோர் மகவாய்ப் பிறந்தான்;உண்மை!
புனிதன் ஏசு அவன் தான் கண்டீர்!
போற்றி வணங்குதல் மானுடர் கடமை!

வணக்கத்துடன்,
கிருஷ்ணன்பாலா
25.12.2011

Thursday, December 22, 2011

'சோ’க விநாச காரணம்

நண்பர்களே,
 ‘துக்ளக்’ ஆசிரியரும் அரசியல் விமர்சகருமான திரு.’சோ’ S. ராமஸ்வாமி அவர்கள்  அண்மையில் அதிமுகவிலும் போயஸ் தோட்டத்திலும் எடுக்கப்பட்டுள்ள ‘களை எடுப்புப் பற்றி, சிந்திக்கத்தக்க பேட்டி ஒன்றை நேற்று அளித்துள்ளார். அப் பேட்டி 21.12.2011 தேதிய தின மலர் நாளிதழில் பிரசுரமாகியிருக்கிறது.

இந்தக் களையெடுப்பு வெறும் கண் துடைப்பு என்பதாகக் கூட கிசு கிசுக்கள் பரப்பி விடப் பட்டன. அவற்றை உற்று நோக்கினால், நிழல் அதிகார வர்க்கத்தின் வழக்கமான சித்து வேலைகளின் எச்சமாகத்தான்  நமக்குப் புலப்படும்.

அதே சமயம், பல்வேறு ஊகங்களுக்கு இடம் அளித்து வந்த செய்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்து ஒரே ஒரு ஊகத்துக்கு மட்டும் இடம் தந்திருக்கிறது திரு சோ அவர்களின் சாதுர்யமான பேட்டி.
அது-
இந்த அரசியல் சதுரங்கத்தில் திரு சோ அவர்களின் தீரமிக்க துணிவும் அனுபவமும்  ‘தமிழ் நாட்டு அரசியலை ஆரோக்கியமான ஜனநாயகத் தரத்தில் வைக்க வேண்டும்’ என்ற இலக்கில் எழுதி வந்த அவரது நோக்கமும் அதிமுக மே(லி)டத்துடன் வலுவான நிலையில் செல்லுபடியாகுமா? என்பதுதான்.

செல்லுபடியாகுமானல்,தமிழ் நாட்டின் அரசியலில் பண்பட்ட நிலை நிச்சயம் மறு உருவெடுக்கும் என நம்பலாம்.
இது வரை அவர்மீது நடு நிலையாளர் பலருக்கும்கூட ஒரு சந்தேகப் பார்வை இருந்து வந்தது.  ‘அவர் அரசியலைக் கேலிமட்டும் செய்து வரும் ஒரு கோமளியோ? என்று.

அந்தச் சந்தேக எண்ணத்தை இப்போது கேலிக் கூத்தாக்கி,ஒரு சீரியஸான காட்சிகளை அரங்கேற்றி, சிறந்த வசனங்களை எழுதியிருக்கிறார்’என்பது இப்பேட்டியின் மூலம் உணர முடிகிறது;இதில் எனது சந்தேகமும் கூட அடிபட்டுப் போயிருக்கிறது என்பது உண்மை. இந்தப் பேட்டியின் மூலம் இன்னொரு ராஜாஜியாய் அவதாரம் எடுத்துள்ளார்

சிலருக்கு அவர் அஷ்டமத்துச் சனியாய்த் தோன்றினாலும் நாட்டுக்கு நன்மை செய்கிற துலாபாரத்துச் சனியாய்த்தான் எனக்குத் தோன்றுகிறார்.

உண்மையுடன்,
கிருஷ்ணன்பாலா



21.12.2011 தேதிய தினமலரில் பிரசுரமான திரு.சோ அவர்களின்
பேட்டி பின் வருமாறு:
--------------------------------------------------------------------------------------------------------------------


போயஸ் தோட்டத்தில் ஒரு புயல் வீசியிருக்கிறது. அதன் சூத்திரதாரியாக சுட்டிக்காட்டப்படுபவர், பத்திரிகையாளர் "சோ'. எல்லாம் செய்தும், எதுவும் தெரியாதவர் போல் அமைதியாக இருக்கிறார், மனிதர். அதிகார மையம் இடம் மாறிவிட்டதன் அடையாளமாக, அவரது அலுவலக வாசலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது; தரிசனத்துக்காக, வி..பி.,க்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். ஓயாத போன் அழைப்புகளுக்கு மத்தியில், அவர், "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:

கேள்வி:
ஒரு சனிப் பெயர்ச்சியால் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?

சோ:
சனிப் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தான் கொடுக்கும் என, நீங்கள் தான் பத்திரிகையில் போட்டுள்ளீர்கள். அப்படியென்றால், நீங்கள் முன்கூட்டியே கணித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
கேள்வி
போயஸ் தோட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இடமாற்றம், என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கருதுகிறீர்கள்? 

சோ:
அரசியல் விமர்சகர் என்ற ரீதியில் நான் பேசுகிறேன். ஒரு, எக்ஸ்ட்ரா கான்ஸ்டிட்யூஷனல் அத்தாரிட்டியாக (சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையம்) யாராவது செயல்பட்டால், அது அரசு நிர்வாகத்துக்கு நல்லதல்ல. அதுவும், அந்த மாதிரி செயல்படுபவர்கள், தாங்களாகவே அந்த நிலையை ஏற்படுத்திக் கொண்டவர்களாக இருந்தால், அது நிர்வாகத்துக்கு இன்னமும் கெடுதல். அந்த மாதிரியான நிலை, நீக்கப்பட்டு இருக்கிறது. இது, ஆளுங்கட்சிக்கும், அரசு நிர்வாகத்துக்கும் ரொம்பவே நல்லது. நேர்மையான, தெளிவான பாதை வகுத்து நிர்வாகம் செல்வதற்கு இது உதவும். யாருடைய குறுக்கீடும் இல்லாமல், கட்சியும், ஆட்சியும் செயல்பட இது வழிவகுக்கும்.
கேள்வி
சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையமாக சசிகலா குடும்பத்தினர் செயல்படுகின்றனர் என்பது, முதல் முறை எழுந்திருக்கும் புகார் அல்ல. 1991ல் இருந்தே இருந்து வரும் புகார் தான். இப்போது, திடீரென அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணம் என்ன? 

சோ:
எந்த நடவடிக்கையுமே திடீரென எடுக்கப்படுவதல்ல. நீண்ட யோசனைக்குப் பிறகு தான், பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நேற்று ஏதோ நடந்து, இன்று நடவடிக்கை என்பதாக நினைக்கக் கூடாது. நான் அப்படி நினைப்பதில்லை. நீண்ட காலமாக தொடர்ந்து நடந்து வருகிற நிகழ்ச்சிகளைக் கவனித்து, அது தொடர்பான தெளிவான முடிவுக்கு வருவதற்கு, கொஞ்சம் நேரம் பிடித்திருக்கலாம். அதில் தவறில்லை. முடிவு எடுக்கிற போது தெளிவு இருக்க வேண்டும். அது இருந்திருக்கிறது. தற்போது நடந்திருக்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே, தொடர் நிகழ்வுகளின் எதிரொலியாகத் தான் இருக்கும் என நான் நினைக்கிறேன்
கேள்வி
ப்படியென்றால், முந்தைய காலங்களில் அவர்கள் செய்தவை எல்லாம், முதல்வரின் கவனத்துக்கு வரவே இல்லையா?

சோ:
அது பற்றி எனக்குத் தெரியாது. அவங்களுக்குத் தெரிந்திருக்கலாம்; தெரியாமலும் இருந்திருக்கலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்திருக்கலாம். ஏற்கனவே சொன்னது போல், நான் இப்போது சொல்லிக் கொண்டிருப்பது எல்லாமே, ஓர் அரசியல் விமர்சகர் என்ற அடிப்படையில் மட்டும் தான்.
கேள்வி
இவ்வாறு சட்டத்துக்கு அப்பாற்பட்ட சக்திகளாக செயல்பட்டவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமல்லவா?

சோ:
 நான் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்றால், எனக்கு திருப்தியான அளவு ஆதாரம் கிட்டுவது, ஒரு வகை. சட்ட ரீதியாக நிரூபிக்க வேண்டிய அளவு ஆதாரம் கிட்டுவது, வேறொரு வகை. சட்ட ரீதியான நடவடிக்கை என்றால், சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட நிரூபணமும் மட்டுமல்லாமல், சாட்சிகளும் தேவைப்படும். மூன்றாவது மனிதரும் திருப்தியடைய வேண்டும். இது அப்படியல்ல. நான் திருப்தியடைந்தாலே போதுமானது. இதையும், அதையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.
கேள்வி :
வர்கள் சட்ட விரோதமாக எதுவும் செய்யவில்லை என எடுத்துக் கொள்ளலாமா?

சோ:
எனக்குத் தெரியாது.


கேள்வி

 போயஸ் தோட்டத்தில் உள்ள சமையல்காரர் முதல் செயலர்கள் வரை, அனைவருமே சசிகலா குடும்பத்தாரின் நியமனம் தான் என்றொரு கருத்து நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில், முதல்வர் தொடர்ந்து தயக்கமின்றி இயங்குவதில் ஏதேனும் சிரமங்கள் இருக்குமா? 


சோ:
இதுபோன்ற விஷயங்கள், நம் யாரையும் விட அவருக்குத் தான் இன்னும் நன்றாகத் தெரியும். அதெல்லாம் தெரியாமலா அவர் ஒரு முடிவெடுத்திருப்பார்

கேள்வி
ரி, இந்த இடமாற்றத்தில் உங்களுடைய, "ரோல்' (பங்களிப்பு) என்ன? 


சோ:
என்னைப் போட்டு பலர், "ரோல்' பண்ணுகின்றனர். அது தான் என், "ரோல்.' மண்டையை உருட்டுவது என்பரே. உருட்டுவதற்கு என் தலை மிகவும் வாக்கானது. உங்கள் தலையெல்லாம் முடியிருப்பதால் சிக்கிக் கொள்ளும். எனக்கு அந்தப் பிரச்னை எல்லாம் இல்லை; நன்றாக உருளும். அதனால் உருட்டுகின்றனர். என் பங்களிப்பு இருந்திருந்து, அது நல்லதென்றால் பாராட்டுங்கள். கெடுதல் என்றால் திட்டிக் கொள்ளுங்கள்.

கேள்வி :
இதன் மூலம், உங்களுடைய பங்களிப்பு இருந்ததை ஒப்புக் கொள்கிறீர்களா? 

சோ:
உருட்டுவதே நீங்கள் தானே. அதனால் தான், நல்லதாக இருந்தால் பாராட்டுங்கள்; கெடுதலாக இருந்தால் திட்டுங்கள் என்றேன்
கேள்வி

டந்த வாரத்தில் மட்டும், இரண்டு முறை நீங்கள், முதல்வரைச் சந்தித்ததாகவும், சசிகலா வெளியேற்றப்பட்ட சமயத்திலேயே, நீங்கள் தோட்டத்தில் தான் இருந்ததாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றனவே


சோ:
இரண்டு முறை தான் என்று, உங்களுக்கு எப்படி தெரியும்? 20 முறை கூட இருக்கலாம். அல்லது, ஒரு முறை கூட இல்லாமல் இருந்திருக்கலாம். யாராவது அப்படி சொன்னால், அதற்கு நான் என்ன பண்ண முடியும்? நான் மிகவும் பலவீனமானவன். இப்படிச் சொல்பவர்களுடன் சண்டையா போட முடியும்? சரி என, கேட்டுக்கொள்ள வேண்டியது தான். நான் ஒரு காந்தியவாதி. யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வேன். ஏசு சொன்னது போல, இந்தக் கன்னத்தில் அறைந்தால், அந்தக் கன்னத்தைக் காட்டுவேன்.

கேள்வி:
லவீனமானவர் என்று சொல்கிறீர்கள். போலீஸ் பாதுகாப்பு மற்றுமுள்ள நடவடிக்கைகளை எல்லாம் பார்த்தால், மேலும் மேலும் வலுவாகி வருகிறீர்கள் போலத் தோன்றுகிறதே?.

சோ:
நான், என்றும் ஒரே மாதிரி தான் இருக்கிறேன். அன்று முதல் இன்று வரை ஒரே, "வெயிட்' தான்.
கேள்வி
போயஸ் தோட்ட நிர்வாகம் மற்றும் ஜெயலலிதாவின் சொந்த அலுவல்களை, சசிகலா மற்றும் குடும்பத்தினர் தான் பார்த்துக்கொண்டு இருந்தனர். இனி, அவற்றை யார் நிர்வகிப்பர்?

சோ:
யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். எனக்குத் தெரியாது. நீங்கள் விண்ணப்பிக்கிறீர்களா?

 கேள்வி
இதன் தொடர்ச்சியாக, அமைச்சரவையிலோ, கட்சியிலோ ஏதேனும் மாற்றம் இருக்குமா?

சோ:
எனக்குத் தெரியாது. தொண்டர்கள் அனைவரும் ஜெயலலிதா பின்னால் தான் அணிவகுத்து இருக்கின்றனர் என்பதால், இது, கட்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று தான் கருதுகிறேன். தொண்டர்கள் விருப்பப்படி தான், எம்.எல்..,க்களும் செயல்படுவர்.

கேள்வி
 இவர்கள் இருவருக்கும் இடையில், பிரிவும், கருத்து வேறுபாடும் ஏற்படுவது, இது இரண்டாவது முறை. இப்போது ஏற்பட்டுள்ள விரிசல், மீண்டும் சரியாகி, ஜெயலலிதாவும், சசிகலாவும் திரும்பவும் இணைந்து விடுவர் என்ற எண்ணம், கட்சியினர் மத்தியிலேயே கூட காணப்படுகிறதே?

சோ: :
நான் பார்த்தவரையில், ஆளும் கட்சியினருக்கு அந்த மாதிரி எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், .தி.மு..,வினர் எல்லாரும் மிகவும் கொண்டாடுகின்றனர். தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் தான். எடுக்கப்பட்ட முடிவில், ஒரு தெளிவு இருப்பதால் தான் கொண்டாடுகின்றனர். என்னைப் பொறுத்தவரை, மாநில நிர்வாகத்துக்காகவும், நேர்மையான ஆட்சியைத் தருவதற்காகவும், கட்சியை ஜனநாயக ரீதியில் ஒழுங்காக செயல்பட வைப்பதற்காகவும், ஒரு துணிச்சலான முடிவை எடுத்திருக்கிற முதல்வரை, மிகவும் பாராட்டுகிறேன். அவர், யோசிக்காமல் எதையும் செய்வதில்லை என்பது, எனக்குத் தெரியும். அவர் ஒரு முடிவு எடுக்கிறபோது, அதில் ஒரு பெரிய தெளிவு இருக்கும் என்பதை, இந்த நிகழ்ச்சி மீண்டும் நிரூபித்திருக்கிறது.


கேள்வி
வேறு சில கட்சிகளிலும் கூட, இதுபோன்ற அதிகார மையங்கள் இருக்கின்றனவே?



சோ:
ஒரு கட்சியைப் பற்றி, மக்களுக்கு ஏதாவது குறை இருக்கிறபோது, அல்லது ஓர் ஆட்சியில் சிலர் குறுக்கீடுகள் பற்றி புகார்கள் இருக்கிற போது, தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுத்து, கட்சியின் நம்பகத்தன்மையை உருவாக்கி, ஆட்சியின் நேர்மையை உறுதி செய்து, நடவடிக்கை எடுப்பது கட்சித் தலைவரின் கடமை; ஆட்சி முதல்வரின் கடமை என்பதை, ஜெயலலிதா தனது செயல் மூலம், வெகு நன்றாக நிரூபித்திருக்கிறார். இதே மாதிரியான, இதை விட பெரிய புகார்கள், வேறு சில கட்சிகளிலும் இருக்கின்றன. அவற்றின் தலைவர்களுக்கும், இதே போன்ற நேர்மைத் துணிவு வந்தால், அது அரசியலுக்கு நல்லது.

v