Thursday, December 29, 2011

மூன்று வகை மாணவர்கள்




நண்பர்களே,
ஆசிரியர் பாடங்களைப் போதிக்கும்போது அதைப் புரிந்து கொள்ளும் 
மாணாக்கரில் மூன்று வகைப் பிரிவினர் இருக்கிறார்கள்.
அவர்கள்:
1. பசுமரம்:

ஆணியை அடித்தால் எவ்வளவு ஆழமாக அதை உள்வாங்கிக் கொள்கிறதோ  அதுபோல விஷயங்களைக் கிரகித்துக் கொள்கிறவர்கள் இவர்கள்நல்லதையும் கெட்டதையும்கூட இவர்கள் ஒன்றாகவே பதித்துக் கொள்கிறவர்கள்..

2.பன்னாடை:
கசடுகளைப் பிடித்துக் கொண்டு தெளிந்தவற்றை வெளியில் விட்டு விடும் இயல்புடையவர்கள்.(அதாவது நல்லதைக் கைவிட்டு தீயதை மட்டுமே தேக்கி வைத்துக் கொள்கிறவர்கள்.)

3.அன்னம்:
பாலையும் நீரையும் கலந்து வைத்தாலும் பாலை மட்டும் உறிஞ்சிக் கொண்டு நீரைத் தெளிவாக விட்டு விடும் இயல்புள்ளோர்.(நல்லதை மட்டுமே ஏற்றுக் கொண்டு தீயத்ஹைக் கழித்து விடுகிறவர்கள்.)

குறிப்பு:
------------

’பாலூண் அன்னம் தெளிந்து’ என்று இலக்கிய உவமையாகச் சொல்லப்படும் இதற்கு அன்னப் பறவை பாலை மட்டுமெ உறிஞ்சி விட்டு நீரைத் தவிர்த்து விடுவதாய்ப் பொருள் கூறுவது சரியல்ல. ஏனெனில் அன்னப் பறவையை நாம் கண்டதில்லை. அதன் இயல்பையும் நாம் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.

உண்மையில், நாம் சாதத்தைப் பாலுடன் கலந்து வைத்து விட்டால்,அந்தச் சாதமானது சிறிது நேரத்தில் பாலை மட்டுமே தன்னோடு ஊறச் செய்து, நீரை விட்டு விடுவதைக் காணலாம். அதாவது, பால் சாதத்தை நீண்ட நேரம் கழித்துப் பார்த்தால்,சாதம் பாலில் ஊறிப்போய் விட்டிருக்கும்; நீர்மட்டும் நீர்த்து அது,சாதத்தில் கலவாமல் இருப்பதைக் காணலாம்.

எனவேதான் ‘பால் ஊண் அன்னம் திரிந்து’ என்று பொருள் சொல்லியிருப்பதானது, காலப் போக்கில் ‘பாலூண் அன்னம் தெளிந்து’ என்று அன்னப் பறவையைச் சொல்லி உவமையைக் கையாளும்’ திரிபு’ ஏற்பட்டு விட்டது.

நண்பர்களே,
எத்தனை முறை நல்ல பண்புகளை இங்கே வலியுறுத்திச் சொன்னாலும் சொல்லும் பொருளை விட்டு விட்டு,நாம் எடுத்துச் சொல்வதை மட்டும் குறைசொல்லும் பன்னாடைகளை நாம் இங்கே,இந்த முகநூலில் நிறையப் பார்க்கலாம்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
29.12.2011

No comments: