Sunday, September 29, 2013

தமிழ்க் கடல் ஓசை








































அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.
’தமிழ்க் கடல்’ அய்யா திரு.நெல்லைக் கண்ணன் அவர்கள் நான், நேற்று (28.9.2013) எழுதியிருந்த ‘காங்கிரஸின் கபட நாடகம்’ கட்டுரையில் “செத்துப்போன பாட்டன் நேருவே....” என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி இருந்ததில் சற்று வருத்தமுற்று, எனக்கு மடல் ஒன்று எழுதி இருந்தார்.

உண்மையில் அது ‘தமிழ்க் கடலின்’ ஆசை; மன்னிக்கவும் ஓசை.

நமது பாரம்பரியப் பண்பாட்டையும் தமிழின் இணையற்ற செழுமையையும் வழுவாது பின்பற்றி வாழும் தமிழ்க் கடல் அவர்கள், எனது சிந்தனைக்கும்; சிறுமை கண்டு பொங்கும் சீற்றத்துக்கும் முன்னோடி என்பதில் பெருமையோடு சொல்லிக் கொள்வேன்.

நான் அவருடைய சொற்பொழிவுகள் பலவற்றை ஒலி நாடாக்களில் கேட்டும் நேரில் பார்த்துப் பழகியும் அவருடைய பண்பாட்டுச் சிந்தனையில் இறும்பூதெய்துகின்றவன்.

எனினும் என்னுடைய பதிவில் ‘பண்டித நேருவைச் செத்துப்பான பாட்டன்’ என்று நான் சொல்லி விட்டதால் அவருக்கு ஏற்பட்டுள்ள வருத்தம் நேர்மையானது; நியாயமானது’ என்பதை உணர்கின்றேன்.

ஆயினும், நான் பண்டித நேருவைப் பழிக்கும் எண்ணமின்றி, 
சோனியா-ராகுல் ஆகியோரின் சொரணை கெட்ட சுயநல அரசியலைச் சாடுவதற்காக அப்படியொரு சொல்லாடலைக் கையாளும் சினம் எனக்குள் தோன்றிவிட்டதைச் சொல்லத்தான் வேண்டும்.

பண்டித நேரு மீது பாரத தேசத்து மக்கள் கொண்டிருந்த பக்தியையும் பாசத்தையும் அவருடைய பேரன் ராஜிவ் காந்தியின் இத்தாலிய மனைவியும் அவருடை பிள்ளையும் பிணையம் வைத்து அரசியல் பண்ணி, கேவலப் படுத்தி விட்டார்களே!

அதனால்தான் சொன்னேன்:
ராகுலுக்கு ’பண்டித நேரு ஒரு செத்துப்போன பாட்டன்’போல் ஆகி விட்டார்’ என்பதை இடித்துச் சொல்ல.

பாரதநாட்டுப் பாரம்பரியத்திலும் தமிழ்ப் பண்பாட்டிலும் மாறாத பாசமும் நேசமும் கொண்ட’தமிழ்க் கடல்; அய்யா,திரு நெல்லைக் கண்ணன் அவர்களின் மடலை, என் கட்டுரைக்கு அளித்த கருத்தூட்டமாகவும்
இனியும் நான் எழுதவுள்ள எண்ணப் பதிவுகளில் எச்சரிக்கை கொள்ள வேண்டிய விஷயமாகவும் மதிக்கின்றேன்.

உலகெங்கும் பரவி, ஏறத்தாழ 65 நாடுகளில் இருந்து என் எழுத்துக்களைப் படிக்கின்ற எனது மதிப்பிற்குரிய வாசகப் பெருமக்களுக்கு இதைத் தெரிவிப்பது என் கடமை.

இனி ’தமிழ்க் கடல்’ அய்யா அவர்களின் மடலும் எனது பதில் மடலும் கீழே:

அன்புள்ள கிருஷ்ணன் பாலா,

// செத்துப் போன பாட்டன் நேருவே// என்று எழுதியுள்ளீர்களே.அது சரிதானா? மோடியை ஆதரிப்பது தங்களின் விருப்பம். ஆனால்நேருவை செத்துப் போனவர்’ என்பது அநாகரீகத்தின் உச்சம்.  தங்கள் அளவு அரசியல் அறிவு எனக்குக் கிடையாது என்றாலும் பலர் மனத்தைக் காயப் படுத்தும் வரிகளை ஏன்  நீங்கள் எழுதினீர்கள்புரியவில்லை.
தங்களின் மீது அன்பு கொண்டுள்ளவன் நான்.
நெல்லைகண்ணன் 


எனது பதில் மடல்:
---------------------------------
அய்யா,
வணக்கம்.

தங்களைப் போன்ற புனிதமான தேசபக்தர்களின் மனம் புண்படும் வகையில் நான் எழுதி இருப்பின் என்னை மன்னியுங்கள்.

நான் பண்டித ஜவஹர்லால் நேருவை நேசிப்பவன்.

ஆனாலும், இந்தக் கத்துக்குட்டி ராகுலின் அரைவேக்காட்டுத் தனமும் சோனியாவின் சுயநலச் சுரண்டலும் அந்தப்பாரம்பரியம் மிக்க குடும்பத்தின் பாட்டன் பெயரையே கெடுத்து விட்டதுஎன்ற கோபத்தின் எதிரொலியே எனது சாடல்.

உண்மையில் அப்படிக் குறிப்பிடும்போது உங்களைப் போன்றவர்களின் மனநிலையையும் சோதிக்க வேண்டும்என்ற உள்ளுணர்வு எனக்கிருந்தது.

உங்கள் மீது நான் எப்போதும் மாறாச் சொந்தம் கொண்டவன், அய்யா.

இவண்-
கிருஷ்ணன்பாலா
29.9.2013

அரசியல் சதுரங்கம்:1

மன்மோகன் விலகுவாரா?
------------------------------------

ரும் நாடாளுமன்றத் தேர்தலைத் ‘தான் பிரதமராக  இருக்கும் நிலையில்’ 
சந்திக்கவோ சிந்திக்கவோ மன்மோகன் சிங் தயாராக இல்லை’ என்பது 
புலனாகிறது

இதை சோனியா ஒப்புக்கொள்வதை விட வேறு வழியும் இல்லை.

அதனால், இதை நடைமுறைப்படுத்தவும் ஓரளவு ’இமேஜ்’ உள்ள ஒரு 
போலியை இடைக்காலப் பிரதமராக்கித்  தேர்தலைச் சந்திக்கவும் 
காங்கிரஸுக்கு நிர்ப்பந்தம் தோன்றி இருக்கிறது.

இதன் ஓரங்க நாடகத்தின் ஒத்திகைதான் ராகுலின் சுத்த சுயம்பிரகாச வேஷம்; மன்மோகன் அரசைக் கண்டிக்கும் கபட நாடகம்.
 'எப்படியோ ஆளை  விடுங்கடா சாமி;  நான் இதை
அமெரிக்கக் குடியரசுத் தலைவரிடமே போன வாரம் அனுமதி வாங்கிக் கொண்டுவிட்டேன்’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார், புனிதர் மன்மோகன்.

காங்கிரஸைப் பொறுத்தவரை, வரும் நாடாளு மன்றத் தேர்தல் என்பது ஃபக்ரீத் போல.
அதில் கொழுத்த செம்மறி ஆட்டைப் பலியிட்டுத்தான் ஆக வேண்டும்; அதாவது
’பிரதமர்’ என்ற ஆட்டை

அந்த செம்மறியாக யாரை வைத்துக் கொள்வது என்பதில் 
குழப்பம் ஏற்பட்டுள்ளது:

அது. .கே அந்தோணியா? ராகுலா? .சிதம்பரமா? அல்லது யார்?

இவண்-
கிருஷ்ணன்பாலா

29.9.2013

Saturday, September 28, 2013

போலி முகவரியாளர்களுக்கு ஒரு சாட்டை!

ண்பர்களே,

//காதலனுடன் முகத்தை மூடி
பைக்கில் செல்லும் பெண்கள
முகத்தை மூடுவது பெற்றோர்க்கு
மட்டும் பயந்து அல்ல:
அது-
அவர்களுடைய முன்னாள் காதலனுக்கும்,
எதிர்கால கணவனுக்குமாகக்கூட இருக்கலாம்..//

இப்போதெல்லாம் பைக்கில் காதலுடன் பின்னால் அமர்ந்து முகத்தை முக்காடு போட்டு முழுமையாக மூடிக் கொண்டு செல்லும் பெண்களின் சர்வ சாதாரண இயல்பு பெருகிக் கொண்டிருக்கிறது.

இதைத்தான் முகநூலில்  Kongu Thangam Vicky  அவர்கள் சாடி எழுதியிருக்கிறார்,தனதுபாராட்டுக்கள்.

இதுபற்றி  எனக்கும் நீண்ட நாட்களாகச் சிந்தனை உண்டு

முகத்தை மூடிக் கொண்டு  ‘இன்னார் என யாரும் தன்னை அடையாளம் கண்டு விடக்கூடாதுஎன்று எண்ணுகிற பெண்களை, பண்பட்ட சமூகம் ஓர் இழிநிலையுள்ளவராகத்தான் அடையாளம் காணும்;காறி உமிழும்.

தமிழ்க் கலாசாரத்தைக் கடும் விஷம் கொண்டு கலக்குகிற இம்மாதிரியான பெண்கள் முகநூலிலும் பெருகி இருக்கிறார்கள்.

இதை, இங்கு போலி முகவரிகளில் உலாவும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொருத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.

போலி முகவரிகளில் பெண்கள் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன?

முகநூலுக்கு வந்த பின்னர் அவர்களுக்கு முக்காடு எதற்கு?

கேட்டால் ஆண்களால் தொல்லைகள் அதிகம் வருகின்றன’  என்று நொண்டிச் சாக்குச் சொல்கிறார்கள்.

பிறகுஅவர்கள் எதைச் சிந்தித்து எழுதுகிறார்கள்?’ என்று பார்த்தாலும் அவர்களுடைய பதிவுகளில் உள்ள படங்களைப் பார்த்தாலும் காம குரோத விரகத்தை வெளிப்படுத்தும் பதிவுகளை இட்டும் அதை ஊக்குவிக்கும் கருத்தூட்டங்களை அனுமதித்தும் பிற ஆண்கள் கொச்சையாகவும் பச்சையாகவும் இச்சையாகவும் தங்களை வர்ணிப்பதை அனுமதித்தும் முகநூலில் உலாவிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

இவர்கள் கண்ட கண்ட பயல்கள் தங்களை உச்சுக் கொட்டும் பாராட்டுக்களையும் கருத்தூட்டங்களையும் அனுமதிக்கின்றார்கள்; ரசிக்கின்றார்கள்.

தங்களின் முகப் படத்தில் ஆண்களைக் கவர்வதற்காகவே எவளாவது நடிகை அல்லது மாடல் அழகியின் படத்தைப் போட்டும் கவர்ச்சியான பெயரை .டி.யாகப் போட்டும் தங்களை மறைத்துக் கொண்டு, வலைத்தளங்களில் போலி முகவரிகளில் கவர்ச்சி வலையை வீசுக் கொண்டு,  பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் எதற்கு?
கல்யாணமான பெண்கள் அயல்மகரந்தச் சேர்க்கையில் பெரு விருப்பம் கொண்டு மேற்கொள்ளும்களவியல் ஒழுக்கம்தங்கள் கணவன்மார்களுக்குத் தெரியாது இருக்கவும் கல்யாணமாகாத பெண்கள், சந்தையிலும் சந்தியிலும் திரியும் காளை மாடுகளோடு நட்புக் கொண்டு மகிழவும் நாளை வரப் போகும் கணவனுக்குத் தங்கள்களவியல் ஒழுக்கம்தெரியாமல் போகவும்தான் இம்மாதிரியான முக்காட்டு முகவரிகளுடன் உலாவருகிறார்களே தவிர சமூக விழிப்புணர்வைத் தூண்டவோ அதில் பங்கு கொள்ளவோ அல்ல.

ஆண்களோ அதற்குச் சளைத்தவர்கள் அல்லர்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்  மணமுண்டுஎன்று கூசாமல் சித்தாந்தம் பேசும் கோமாளிக் காமுகர்கள்.

தங்கள் குடும்பத்துக்கும் குறிப்பாகத் தன் மனைவி,மகள்களுக்குத் தெரியாமல் இருக்கவும் திருட்டுத் தனமாக பிற பெண்களுடன் சல்லாப வார்த்தைகள் பேசி இன்புறுவதிலும்  தனி அறிவு கொண்டு போலி முகவரிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற்வர்கள்.

நாட்டுக் கவலைகளைப் பகிர்ந்து கொள்ளவும் இலக்கிய அறிவில் திளைக்கவும் ஆன்மீக நெறி ஒழுக்கங்களில் உயரவும் இவர்களுக்கெல்லாம் சிறிதும் எண்ணமில்லை.

இந்தப் போலி முகவரியாளர்கள் பிறன் மனை விழையும் பித்தர்களே அன்றி தமிழ் உணர்வாளர்கள் அல்லர்

இதில் வேடிக்கை என்னவென்றால்,இந்தப் போலி .டிக் கள் மூலம் போலி முகவரியுள்ள ஆண் முகவரியாளனின் வீட்டுக்காரி,அவரைப்போலவே தானும் போலி முகவரியை முடிந்து வைக்கின்றாள்.

அவள் தன் உள்ளார்ந்த விருப்பத்துக்கேற்ப,  வேறொரு போலி ஆண் முகவரியாளனுடன் சல்லாப வார்த்தை ஆடத்தான் போலி முகவரி பூணுகிறாள்.அதேபோல்தான்  அவளுடைய கண்வனும் போலி முகவரியை ஏற்படுத்திக் கொள்கிறான்.

இப்படி இவர்கள் பரஸ்பரம் போலிகளுடன் உரையாடி,உறவாடிக் கொண்டுக் கேவலத்தில் வலம் வருவதன்றி வேறு எந்தச் சுகமும் விளையப்போவதில்லை.

ஆனால்-
என்றைக்காவது ஒருநாள் போலி முகவரி பெண்ணும் போலி முகவரி ஆணும் ஒருவருக்கொருவர் நப்பாசையோடு பேசிநட்புக்கொண்டு, பிறகு Dating வைத்துச் சந்திக்க நேரும்போதுதான் தங்களுக்குத் தாங்களே செருப்பில் அடித்துக் கொள்ளும் நிலை வரக் காண்பார்கள்.

ஏனெனில் அவர்கள் இருவரும்  ஏற்கெனவே நிஜ வாழ்வில் கணவன் மனைவிகள்:போலி முகவரிகளிலோ புரட்சிக் காதலர்கள்.

உண்மையாக, இல்லற வாழ்வில் ஒருவருக்கொருவர் இன்முகம் கொண்டு இனிய வார்த்தைகள் பேசிக் கொள்ளாது பரஸ்பரம் சிடு மூஞ்சிகளாக வாழும் அதே ஜோடிகள் போலி முகவரியில் ஒருவருக்கொருவர் தங்களை மறைத்துக் கொண்டு அளாவளாவும்போது, ’அடடா என்னமாதிரியான கவிதைப் பாராட்டுகள்;கருத்துப் போதைகள், காதலின்ப விளையாட்டு வார்த்தைகள்......’

அவன் வர்ணிக்க வர்ணிக்க அவள் தன்னை முழுதுமாக அவனுக்குத் தாரை வார்க்கத் துடிக்கும் அளவுக்கு  அவர்களுடைய முகநூல் நட்பும் அன்பும் இரண்டறக் கலந்து விடுகிறது.

நிஜ வாழக்கையில் பரஸ்பரம் கசந்து கொண்டிருந்தவர்கள், இந்தப் போலி முகவரிகள் மூலம் ஒருவருக்கொருவர் ஏமாற்றிக் கொண்டுகாமத்தின் கசுமால நட்பினால் சந்திக்க நேரும்போதுதான்  வெட்கம் என்றால் என்ன? என்பதை அறிகிறார்கள்.

அதைவிட இன்னொரு கேவலமான விஷயம்:

ஒரு பெண்ணின் முகவரியைப் போலியா நிஜமா? என்று சிந்திக்கத் தெரியாத ஒருவன் பெண் என்று ஒரு முகவரியைப் பார்த்து அவளுடன் நட்புக் கரம் நீட்டுகிறான். அவளும் தேபோல் அவனிடம் அடிக்கடி பேசத் தலைப்படுகிறாள். அவர்களின் நட்பு மெல்ல மெல்ல சல்லாப வார்த்தைகளால் ஒருவருவருக்கொருவர் உரசத் தொடங்கி, ஒருநாள் அந்த உரசல் எல்லை மீறி பரஸ்பரம் சந்திப்பது என்று தீர்மானமாகிறது.

அப்படி அவர்கள் மதி கெட்டு, மனம் கெட்டுப் பரஸ்பரம் சந்தித்த போதுதான் அவர்களுக்கே தெரிகிறது:தாங்கள் அப்பனும் மகளும் ’ என்பது.

எப்படி இருக்கும்? அந்தப் புத்தி கெட்ட மகளுக்கும் போக வெறி கொண்ட அப்பனுக்கும்..

ஊரெல்லாம் கூடிச் செருப்பால் அடிக்க வேண்டாம்;தங்களுக்குத்தாங்களே செருப்புப் பிய்ந்து போகும் அளவுக்கு அடித்துக் கொள்வார்கள்,அல்லவோ?

முகநூலில் உலாவரும் போலி முகவரியாளர்களே

இம்மாதிரியான கேவலம் உங்களுக்கு ஒருநாள் நிச்சயம் ஏதாவது ஒருவகையில் ஒருநாள் நேரும்.

அப்போதுஅய்யோ கடவுளேஎன்று நீங்கள் அலறாமல் இருந்தால் சரி.

இதைவிட இந்தப் போலிகளின் முகத்தில் சாட்டையை எப்படிச் சுழற்றுவது?


இவண் -
கிருஷ்ணன்பாலா
25.9.2013

காங்கிரஸின் கடப நாடகம்!


றிவார்ந்த நண்பர்களே,

//கிரிமினல் குற்றங்களுக்கு ஆளான அரசியல்வாதிகளின் அதிகாரத்தை பறிக்கும் சட்டத்தில் திருத்தம் செய்து அவர்களக் காப்பாற்றும் பொருட்டு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தைத் தூக்கி குப்பையில் போட வேண்டும்.

இது சோனியாவில் மகன் ராகுல் சொன்னதாகச் செய்தி.

நண்பர்களே,
இதில் உள்குத்து இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்களிடம் சென்று,ஓட்டுக் கேட்கும் அருகதையையாவது தோற்றுவித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, இப்போதுள்ள மன்மோகனின் ஆட்சிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல் ஒரு பித்தலாட்டக் காட்சியை அரங்கேற்றவும் சோனியாவின் பிள்ளை ஒரு சொக்கத் தங்கம் போலக் காட்டிக் கொள்ளவுமே இந்தக் கபடநாடகம்.

‘நீ இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டு வருவது போல் கொண்டு வா; நான் எதிர்ப்பதுபோல் எதிர்த்து நல்ல பேரை வாங்கிக் கொள்கிறேன்’ என்ற திட்டமிட்ட சதியின் சாட்சியே இது.//

என்று நான் எழுதியதன் அர்த்தம் இப்போது உண்மையாகிச் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

‘இதோ பாருங்கள் காங்கிரசின் தவறுகளையும் மன்மோகன்  ஆட்சியின் பிழைகளையும் பிசகில்லாமல் பேசும் உத்தமத் தலைவன் ராகுல்’என்பது இந்த எதிர்ப்பின் மூலம் மக்கள் உணர்ந்து விட்டார்கள்’ என்று காங்கிரஸ்
திண்ணைப்பேச்சாளர்கள் இப்போது  ஊடகங்களில் உளறத் தொடங்கி இருக்கிறார்கள்.

நண்பர்களே,
ராணுவ ஆயுத பேர ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், இரும்புத்தாது லைசென்ஸ் ஊழல் என்று மிகப்பெரும் ஊழல்கள் அப்பட்டமாக நாட்டுக்குத் தெரிந்து உச்சநீதி மன்றத்தால் கடுமையாகச் சாடப்பட்டும்கூட, சற்றும் தன் முயற்சியில் தளாராத  வேதாளமாய் விசனமற்று  வேப்ப மரம் ஏறும் காங்கிரஸ், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதைச் சொல்லி,எதை முன்னிறுத்தி,‘யாரை முன்னிலைப் படுத்தி ஓட்டுக் கேட்பது?  என்றுக் குழம்பிப் போய்க் கிடந்தது.

கழுவ முடியாத கறைபட்டு,மக்களாலும் ஊடகங்களாலும் கைவிடப்பட்ட காங்கிரஸுக்கு வழியே இல்லாத ஒரே வழி: இந்த ‘சைத்தான் கி பச்சா’ ராகுல்தான்.

’நீதிமன்றங்களில்  சுட்டிக் காட்டப்பட்டு, ‘கிரிமினல்கள் என்று வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள்’ நாளுமன்றத்திலோ. சட்டமன்றத்திலோ பதவியில் இருக்கக் கூடாது’ என்ற  உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்  தீர்ப்பால் அதிர்ந்து போன காங்கிரஸ் அந்தத் தர்மத்தின் தீர்ப்பைத் திருத்திக் கிரிமினல்களைப் பதவியில் நீடிக்கவும் ஜோடிக்கவும் வழி செய்யும் வகையில் அவசரச் சட்டம் ஒன்றை மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய ஆளும் அரசு மூலம் கொண்டு வந்தது.

இதன் மூலம்,கிரிமினல்களின் நேரடித் துணையினாலும் மறைமுக ஆதரவினாலும் வன்முறைகளைத் தூண்டி அதனால்  தேர்தல் வெற்றிகளைப் பெறும் அயோக்கியத்தனம் எந்தக் கட்சிக்குச் சொந்தமானது என்பதைப் புத்தி உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இனக் கலவரங்களையும் மதத் துவேஷங்களையும் மக்களிடையே தூண்டுகிறவர்கள் கிரிமினல்கள்;அந்தக் கிரிமினல்களைக் காப்பாற்ற  வெளிப்படையாகவே எத்தனிக்கின்ற கட்சி: காங்கிரஸ்தான்.

இதற்குப் பின்னரும் கான்கிரஸை  நரேந்திர மோதிக்கு அஞ்சி ஆதரிக்கிறவர்கள் அந்தக் கிரிமினல்களின்  கிறுக்குப் பிடித்த தோழமைகள்தான்.

இப்போதெல்லாம் எல்லக் கட்சிகளின் சார்பிலும் நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் கிரிமினல்கள் எம்.பிக் களாகவும் எம்.எல்.ஏக்களாகவும் இருப்பதால் எல்லாக் கட்சிகளும் இந்த அவசர சட்டத்தை எதிர்க்காமல் வாய் மூடிக் கொண்டிருக்கும் என்று கணக்குப் போட்டுத்தான் சட்ட மேதைகள் (?)(ப.சி.,கபில் சிபல் முதலானவர்கள்) நிரம்பிய மன்மோகன் சிங்கின் அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

‘UPA என்ற ஆளும் முன்னணியின் தலைவர் சோனியாவின் சம்மதமோ தூண்டுதலோ இன்றி இந்தச் சட்டத்தை முன்னிறுத்த மன்மோகனால் முடியாது’ என்பது நாட்டில் விரல் சூப்பிக் கொண்டிருக்கிற விடலைகளுக்குக் கூடத் தெரியும்.

சோனியாவால் தூண்டப்படும் எந்த விஷயமும் அவரது ’பச்சா’வான ராகுலுக்குத் தெரியாமல் இருக்க முடியாது.

இப்படி இருந்தும் இந்த அவசரச் சட்டம் கொண்டு வந்த மத்திய அரசைப் பகிரங்கமாக ராகுல் சாடுகிறார்.

உச்ச நீதிமன்றம் வரை காறித் துப்பபட்ட  2ஜி ஊழல் நிலக்கரி ஊழல் முதலான மிகப் பெரும் ஊழல்களுக்கு எதிராக வீறு கொண்டு எழாத ராகுல், இந்த ‘கிரிமினல்களைக் காப்பாற்றுவதற்காக கொஞ்சமும் லஜ்ஜை இன்றி கேடுகெட்ட சட்டத்தைக் கொண்டுவரும்வரை அமைதியாக,ஒண்ணும் தெரியாத பாப்பாவாக இருந்த ராகுல் ‘அந்தச் சட்டத்தைச் தூக்கிக் குப்பையில் எறிய வேண்டும்’ என்றும் ‘இந்தச் சட்டம் முட்டாள்தனமானது’ என்றும் புரட்சி வசனம் பேசுகிறார்,இப்போது..

இது மிகப் பெரிய சூழ்ச்சியோடு உருவாக்கப்பட்ட நரித் தந்திர நாடகமே அன்றி வேறென்ன?

ராகுலை ஒரு புனிதமானவராகவும் மனித நேயமானவராகவும் சித்தரிக்கவும் நாடெங்கிலும் உள்ள மீடியாக்களில் வெறும் வாயை மென்று கொண்டிருந்த காங்கிரஸ்காரர்கள், இனி அவலையாவது போட்டு மெல்லட்டும் என்பதற்காகவும் அதன் மூலம் ராகுலுக்குப் பெரிய விளம்பரத்தை உருவாக்கி மக்களிடம் செல்வாக்குப் பெற்று வாக்குக் கேட்கலாம் என்ற நப்பாசையின் விளைவாகவும்தான் இந்தச் சந்தி சிரிக்கும் சண்டாள  நாடகம்.

தூய்மையான அரசியல், துணிச்சலான சிந்தனை இவற்றுக்கும் ராகுலுக்கும் என்ன சம்பந்தம்?

நாடு கேடு கெட்டுப் போனதுக்கே இவரும் இவர் அம்மாவும் மச்சானும்தானே முழுமுதற் காரணம்?

கடந்த ஐந்து ஆண்டுகளாக அனைத்து நிர்வாகச் சீர்கேடுகளுக்கும் நாட்டின் மிகப் பெரிய ஊழல்களுக்கும் பொருளாதரப் பின்னடைவுகளுக்கும் தொழில்கள் முடக்கத்துக்கும் சிறு வருத்தம் கூடச் சிந்தாத இந்த ’சோட்டா’
இப்போது உச்ச நீதி மன்றமும் நாட்டு மக்களும் விரும்புகின்ற ‘கிரிமினல் அரசியல் வாதிகளின் பதவிப் பறிப்பை, ஏதோ ஒரு புனிதமான அரசியல் சக்திபோல் அதுவும் சொந்தக் கட்சிக்குளேயே,குறிப்பாக சட்டத்தைக் கொண்டுவரும் கட்சியின் சர்வ அதிகாரமும் கொண்ட துணைத்தலைவராக இருந்து கொண்டே  இவர் மட்டுமே ஆதரிக்கின்றவர்போல் பேசுவதும் அதை மீடியாக்களில் விவாதப் பொருள் ஆக்கப்படுவதும்  விந்தையும் வேடிக்கையும் விஷமத்தனமும் கொண்ட துர்ராஜ தந்திரமாய் வெளுத்துக் கொண்டிருக்கிறது.

அதைவிட மகத்தான கேவலம் ஒன்றும் இதில் புதைந்துள்ளதை நாம்-குறிப்பாக நமது ஊடகங்கள் கவனிக்க வேண்டும்:

‘இந்தச் சட்டம் முட்டாள்தனமானது’ என்று இன்று ராகுல் வர்ணிப்பது, இந்தக் கொழுப்பெடுத்த கோமாளி அரசின் உள்ளரங்கில் கோமாளிகளுக்குள் ஏதோ ஒருவகையிலான உள்குத்து வேலைகள் நடக்கின்றன’ என்றுதானே அர்த்தம்?

‘பிரதமர் மன்மோகன் சிங்கை முட்டாள்’என்றும் அவருடைய அரசின் செயல்பாடுகளை முட்டாள்தனமானது என்றும்தானே இப்போது விமர்சிக்கத் தலைப்படுகிறார்.இந்த ராகுல்?

இதை மீடியாக்கள் கவனிக்க வேண்டாமா?

ராகுல் என்ன சாதாரண  ஆளா அல்லது முகவரியற்ற விமர்சகரா?

ஆளும் கூட்டணியின் முதல் அங்கமான காங்கிரஸின் துணைத்தலைவர்;நாடாளுமன்ற உறுப்பினர். சோனியாவின்  சகல உரிமையுமுள்ள அரசியல் வாரிசு;அடுத்த பிரதமர் என்று காங்கிரஸால் தயாரிக்கப்பட்டு சரக்கு.

கடந்த சில நாட்களுக்குமுன்புதான் மன்மோகன் ‘பிரதமர் பதவிக்கு முழுத் தகுதியுமுள்ளவர் ராகுல்’ என்றும் அவருடைய தலைமையின் கீழ் சேவை செய்யத் தயாராக இருக்கிறேன்’என்றும் மீடியாக்களில் சொன்னார்.

அதைத் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்குள் காங்கிரஸ் செய்தி வெளியிட்டது:

’ராகுலைப் பிரதமர் என்று சொல்லி காங்கிரஸ்  மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்காது; அது கட்சியின் நடைமுறையும் அல்ல’ என்பதுதான் அச் செய்தி.

ஆக, நரேந்திர மோதி அவர்களுக்கு மக்களிடையே பெருகி வரும் ஆதரவினால் கிடு கிடுத்துப்போய்,பிரதமர் ஒன்று சொல்வதும் அதை காங்கிரஸ் மறுப்பதும் ராகுல் ஒன்று சொல்வதும் அது காங்கிரசையே விமர்சிப்பதுபோல் இருப்பதுமான கேலிக் கூத்துக்கள் காங்கிரசுக்குள் முளைத்திருப்பது அதன் பித்துப்பிடித்த நிலையைத்தான் நிச்சயம் உணர்த்துகின்றன.

போகப்போக காங்கிரஸுக்குள் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தி  அதன் கூடாரம் சிதறுண்டு போகவும் காரணங்கள் தென்படுகின்றன.

நான்  இதை அப்போதே விமர்சித்து எழுதினேன்.

‘தன்னை ஒரு காசுக்கும்பிரயோசனப்படாத பிரதமர் பதவியில் இருக்கச் செய்து, அரசைப் பயன் படுத்தி எல்லா ஊழல்களையும் இந்த பெயரால் பெயரால் செய்து லட்சக் கணக்கான கோடிகளைச் சுருட்டிக் கொண்டு, தீராப் பழியைதன்னைச் சுமக்கச் செய்து,தனக்குக் கொஞ்ச நஞ்சம் இருந்த பெயரையும் பாழாக்கி,படுபாதாளத்தில் தள்ளிய  சோனியாவின் குடும்பத்தைப் பழி வாங்கவும்; தன்னால் காங்கிரஸ் வரும் தேர்தலில் மெஜாரிட்டியான இடங்களில் டெபாஸிட் போன அவமானம் வராமல் அது ராகுலால் வரட்டுமே என்ற  நோக்கத்தாலும்தான் அப்படியொரு திருவாய் மலர்ந்தார்,மன்மோகன்.

இது ஒன்றுமட்டுமேதான் அவர் சோனியாவைக் கலந்து பேசாமல் வெளியிட்ட அறிக்கை..

அவரது கருத்தை காங்கிரஸே மறுத்ததற்கும்  ‘கா’ரணம்’ இருக்கிறது:

ஆரம்பத்தில் ’நரேந்திர மோதி எப்படியும் பிரதமர் வேட்பாளர் என்ற தகுதிக்கு வர மாட்டார்’ என்று நம்பியது; பிறகு ‘வரக் கூடாது’ என்பதற்காகப் பல்வேறு சதுரங்கக் காய்களை உருட்டியது.

NDA வின் கூட்டாளியான பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் எதிர்ப்பு, அத்வானியின் ஆ’வேசம்’ இஸ்லாம் கட்சிகளின் கூக்குரல்கள்; மோதியின் அமைச்சரவைச் சகா ஒருவருக்கு எதிரான தீர்ப்பு; குஜராத் உயர் போலீஸ் அதிகாரியின் மோதிக்கு எதிரான கடித வெளியீடு; மோதி ஒரு இந்துமத வாதி என்ற பிரச்சாரம் என்று பல காய்கள்.

அத்தனையும் நரேந்திர மோதிக்கு ஆதரவான மக்கள் ஆரவாரத்தினல் அடங்கிப் போனபின்பு,  ‘ராகுல் என்ன,  செத்துப்போன பாட்டன் நேருவே வந்தாலும் காங்கிரசை மக்கள் கைகழுவி விடுவார்கள்’ என்பதை புரிந்து கொண்டுதான் மன்மோகனின் கருத்தைக் காங்கிரஸ் மறுத்திருக்கிறது.
                                                                                                                                                           
எத்தனை முறை இழிநிலைப் பட்டு,மக்களாலும் மீடியாக்களாலும் காறி உமிழப்பட்டாலும்  இன்று பிறந்தவர்கள்போல் ஏமாற்று நாடகம் ஆடும் காங்கிரஸையும் காங்கிரஸ்காரர்களையும் ஓட்டுக் கேட்கக் கூட மக்கள் அனுமதிக்க மாட்டாத  வெட்கக் கேடான சூழ்நிலைகளைக் காண்ப்போகும் அவலத்தில் இருக்கும்  காங்கிரஸ் பித்தம் பிடித்துப் போய் தப்புத்தப்பாகத் தாளம் போட்டுக் கொண்டிருக்கிறது.

நாடே சிரிக்கின்றது.


நான் நண்பர் ஒருவரிடம் வினயமாகவே சொன்னேன்:

‘நரேந்திர மோதி அவர்களின் ஜாதகத்தில் தற்போது நடக்கும் ஏழரைச் சனி பற்றி நான் மிகவும் கவலைப் படுகிறேன்.

ஆனால் காங்கிரஸுக்கோ எட்டரைச் சனி பிடித்து ஆட்டிக் கொண்டிருப்பதை விநோதமாகப் பார்க்கின்றேன்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
28.9.2013

Friday, September 27, 2013

யார் அடுத்த பிரதமர்?

அறிவார்ந்த நண்பர்களே,

ராகுலைக் கொச்சைப்படுத்தி, நிந்தித்து மகிழ்வதல்ல நமது நோக்கம்.

அவர் இன்னும் சராசரி இந்திய அரசியல் தலைவர்களின் பக்குவ நிலைக்கே
வராதவர்.  40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் விளையாட்டுப் பிள்ளையாகவே வலம் வருகிறவர்.

அவர் மிகப் பெரும் தியாக சீலர் அல்ல;‘மக்கள் நலம் ஒன்றே தனது வாழ்நாளின் லட்சியம்’ என்றெல்லாம் சிந்தித்துச் செயல்படும் அரசியல் பண்பாடும் கொண்டவர் அல்ல. ஆனாலும் இந்திராவின் பேரன்;ராஜிவின் புதல்வன்,சோனியாவின்  வாரிசு என்பதன் அடிப்படியில்தான்  எம்.பி ஆனர்; காங்கிரஸின் செயல் தலைவர்காவும் ஆனார்.

தலைமுறை தலைமுறையாக நேருவின் பரம்பரைக்கே இந்தியாவை அடிமை சாசனம் எழுதி வைத்து விட்டிருப்பதுபோல் இந்திரா காந்தியின் இறப்புக்குப் பின்னால் காங்கிரஸின் அடிமைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அரசியலில் எந்த அனுபவமுமே இல்லாத ராஜிவ் காந்தியைத் திடீர் சாம்பார்;திடீர் ரஸம் போல் திடீர்ப் பிரதமராக்கினார்கள்.

ராஜீவின் மரணத்துக்குப் பின்பும் அவருடைய இத்தாலிய மனைவியை , ராஜீவின் மனைவி என்ற ஒரே அந்தஸ்தை வைத்து அதே அடிமைகள் கூடித் தொழுது கட்சித் தலைவி ஆக்கினார்கள்.(சீதாராம் கேஸரி கொஞ்ச காலம் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது சோனியாவை மதிக்க மறுத்து விட்ட கதை ஒரு பக்கம்)

அப்போது ராகுல்  விடலைப் பையனாக இருந்த காரணத்தாலும் காங்கிரஸுக்கு முழுமையான மெஜாரிட்டி இல்லாத காரணத்தாலும் மைனாரிட்டி அரசை நடத்த  நரசிம்ம ராவைக் காலத்தின் கட்டாயத்தால் பிரதமராக்கினார்கள்.

நரஸிம்மராவ் பதவிக் காலம் முழுதும் சிரிக்காமலேயே இருந்து சோனியாவைக் கலங்கடித்து விட்ட வரலாறு நாடறியும்.

கேஸரி,நரசிம்மராவ் இவர்களுக்கு முதன்மைப் பொறுப்புக் கொடுத்து கட்சியும் ஆட்சி அதிகாரப் பிடியும் தன் கையை விட்டு நழுவுவதுபோல் இருந்த சூழ்நிலையை அனுபவித்து விட்ட காரணத்தால் கட்சியிலும் ஆட்சியுலும் தன் பிடி எப்போதும் இறுக்கமாக இருக்கும் வகையில் முழுக்க முழுக்க ஜால்ரா அடிமைகளையே கட்சியின் உயர் மட்டக் கமிட்டிகளிலும் ஆட்சியில் பிரதமர் பதவி உள்ளிட்ட கேபினட் மற்றும் துணை மந்திரிகள் அத்த்னை பேரையும் வாரத்துக்கு ஒருமுறையாவது வந்து தன் வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்து தவறாமல் முறைவாசல் செய்யக் கூடியவர்களாகவே வைத்துக் கொள்ளத் துணிந்து விட்டவர் சோனியா.

தங்களுக்குச் சொரணையும்  வெட்கமும் வீரமும் வீவேகமும் இருப்பதாக மந்திரிகளில் ஒருவர்கூட இதுநாள் வரையிலும் நிரூபிக்க முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள் என்பதை நாடு பார்த்துத் தலைகுனிந்து கொண்டிருக்கிறது.

இந்த லட்சணத்தில் தனது மகன் ராகுலை எப்படியும் பிரதமராக்கத் துடித்துக் கொண்டிருக்கிற சோனியாவுக்குக் கொஞ்சம் கூட நாடு, அதன் பாரம்பரியம்,தேசத்தின் கௌரவம் என்பதில் எல்லாம் அக்கறை இல்லை.

‘கட்சியின் சார்பில் பிரதமராக இருப்பவர் அந்தப் பதவிக்கேற்ற கம்பீரத்துடனும் மனசாட்சியோடும் ஆட்சி புரிய வேண்டும்’ என்ற அடிப்படை ஞானம்கூட இந்திராவின் இத்தாலிய மருமகளுக்கு இல்லை.

இந்திரா காந்தியின் ஆளுமை அவர் ஒரு பிரதமராக இருந்து உலகை வியக்க வைத்தது போல் அதற்கு நேர் எதிர் கோணத்தில் மன் மோகன் சிங்கின் கையாலாகாத் தனம் உலகெங்கும் உணர்த்தப்பட்டு இந்தியாவின் அவமானம் வெளிச்சப்பட்டிருக்கிறது.

‘இந்த நாடு எப்படிப் போனால் என்ன? தனது கஜானா நிரம்பிக் கொண்டிருக்க வேண்டும்;தன் குடும்பம் நிரந்தரமாக இந்தியாவை அடிமைக் கொண்டிருக்க வேண்டும்’ என்ற சுயநல வெறி ஒன்றைத் தவிர சோனியாவுக்கு வேறு நல் எண்ணம்  இல்லை.

அதற்குரிய வாரிசாக ராகுலைப் பிரதமர் ஆக்க எந்த வழியையும் பின்பற்றத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இதை இங்கிருக்கிற கழிசடை அரசியல் தலைவர்களும் உணரவில்லை

இந்தியாவின் தொழில் வளம், நேர்மையான நிர்வாகம்,திறமை மிக்க ஆட்சி, ராணுவ பலம்,மக்களின் நல வாழ்வு இவற்றில் அக்கறை கொண்ட தலைவர்கள் இல்லாது போனது துரதிர்ஷ்டம் இந்தக் காங்கிரசாலும் சோனியாவின் தலைமையினாலும்தான் உண்டாகி இருக்கிறது.

பிரமிக்க வைக்கக் கூடிய சட்ட நிபுணர்கள், நெஞ்சம் நிமிர்ந்து நீதியைத் தீர்ப்பெழுதுகின்ற நீதி அரசர்கள், உயிருக்கு அஞ்சாத ராணுவம், மேலை நாடுகளையும் மிரள வைக்கின்ற அறிவியலாளர்கள்,அறிவுக் கூர்மை மிக்க பத்திரிகையாளர்கள், நடு நிலைமை தவறாத எழுத்தாளர்கள், கடின உழைப்பால் தொழில் துறையில் அந்நிய நாடுகளை அதிர வைக்கும் தொழில் சிந்தனையாளர்கள்,அரசு நிர்வாகத்தை அறநெறி தவறாமல் நடத்திச் செல்லும் உயர் IAS,IPS.IFS,IRS அதிகாரிகள்,மனசாட்சி மிகுந்த அரசியல் தலைவர்கள் இப்படி எல்லாவகியிலும் தலை சிறந்து நிற்கும் இந்தப் பாரதம் கேவலம் இந்தத் தேசத்தின் சத்து இன்னதென அறிகிலாத ஒரு இத்தாலியப் பெண்ணுக்கு அதுவும் கல்வி அறிவும் ஞானமும் அற்ற வெகு சாதாரண வெளிநாட்டுப் பிரஜைக்கு  அடிமையாகிப் போனதே? என்ற கவலையும் வருத்தமும் கொஞ்சம் கொஞ்சமாகச் சினமாகவும் சீற்றமாகவும் மாறி.இந்த நாட்டில் பிறந்ததே ஒரு மகாப் பெரிய பாவமோ? என்று நினைந்து நினைந்து செத்த பிணம்போல் ஆகிக் கொண்டிருக்கிறோம்.

‘இனியாவது நாடு திருந்தாதா? நாட்டின் கேடுகள் ஒழிய நல்லாட்சி  மலராதா? திறமையும் தெளிவும் வீரமும் விவேகமும் கொண்ட தலைவன் இதன் பிரதமராக வர மாட்டானா?’  என்று நாடு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நீர்பூத்த நெருப்பாய் மக்கள் நெஞ்சங்களில் அனலைப் பரப்பிக் கொண்டிருந்தது.

அதற்கு ஏற்றாற்போல் நரேந்திர மோதி நமக்குக் கிடைத்துள்ளார்.

நல்ல சமயம் இதை நழுவ விடுவோமா?

நாட்டை எண்ணி நரேந்திர மோதியை விரும்புங்கள் நண்பர்களே,

நமக்குள் இருக்கும் நச்சு எண்ணங்களை,மதம்,இனம்,அரசியல் மாச்சர்யங்களைப் புதைத்து விட்டு நாடு சிறக்க எண்ணுங்கள்.

நாடு நலமாகவும் பலமாகவும் ஊழல் அற்ற ஆட்சியின் கீழ் இருந்தால்தான் நமது சந்ததிகள் தலை நிமிர்ந்து வாழ முடியும்.

இந்தியன் என்று எந்த வெளிநாட்டில் போய்ச் சொன்னாலும் அந்நியர்கள் மரியாதையோடு  இந்தியாவை நினைக்கும்படிச் சிந்தித்து நில்லுங்கள்;செயல்படுங்கள்.

எனவே,
கழிசடை அரசியல்வாதிகளின் பின்னே சென்று ஏமாந்து போகாதீர்கள்: நீங்கள் ஏமாறத் தயாரானால்,இதோ இந்தப் படத்தில் உள்ள விளையாட்டுப் பிள்ளைதான் உங்களை அடுத்து ஆளப் போகும் பிரதம மந்திரி.

மானங்கெடப் போவது இவர் அல்ல; நீங்கள்தான்.


பின் குறிப்பு:
ராகுலின் புகைப்படங்கள் கூகுளில் இருக்கின்றன. அவற்றில் சிவற்றை நீங்கள் இங்கே பாருங்கள்.  ‘பொறுப்புள்ள பாராளும்ன்ற உறுப்பினர்;மத்தியில் ஆளும் காங்கிரஸின் துணைத்தலைவர்; நாளை பாரதப் பிரதமர்’ என்ற கனவில் நிலை நிறுத்தப்படுபவர், எப்படிப் பொது இடங்களில் நடந்து கொள்கிறார் என்பதையும் சிந்தியுங்கள்.






இவண்-
கிருஷ்ணன்பாலா
27.9.2013