Thursday, September 23, 2010

இலக்கியத் தடங்கள்-2 (கம்பன் எனும் கொம்பன்)

நண்பர்களே,


"நீரெலாஞ் சேற்று நாற்றம்;நிலமெலாங் கல்லு முள்ளும்;
ஊரெல்லாம் பட்டி தொட்டி;உண்பதோ கம்பஞ் சோறு;
பேரெல்லாம் பொம்மன் திம்மன்;பெண்களோ னாயும் பேயும்
காருலாங்கொங்கு நாட்டைக் கனவிலுங் கருதொணாதே!"


-இது கம்பன் பாடியதாக தனிப்பாடல் திரட்டுச் செய்தி ஒன்று கூறுகிறது.


இந்தபாடலை மேலோட்டமாகப் படித்தால்,கொங்கு நாட்டையும் அதன் மக்களையும் பற்றி மோசமாகச் சித்தரிப்பதாகத்தான் தெரிய வரும்.


நீரெலாஞ் சேற்று நாற்றம்
எங்கு பார்த்தாலும் குமட்டும் நாற்றம் வீசும் மண்ணும் சகதியும்;அதாவது மூக்கைத் துளைக்கும் நாற்றம் நிறைந்த சேற்று மண் எங்கு பார்த்தாலும் இந்த நாட்டில்.


நிலமெலாங் கல்லு முள்ளும்
கால் வைத்த இடமெல்லாம் காலை வெட்டும் கற்களும் பாதங்களைக் குத்தும் முட்களும் நிறைந்த பாதைகள்


ஊரெல்லாம் பட்டி தொட்டி:
எந்த ஊரின் பெயரைப் பார்த்தாலும் பட்டி என்றே அதிகம் முடியும் பெயர்கள் தான்.நயமான பெயர்களாக இல்லை; ஆடு மாடுகளை மேய்த்து அவற்றை மாலை நேரங்களுக்குப் பிறகு பட்டிகளில் அடைத்துக் காத்து, விடிந்ததும் மீண்டும் காடுகளுக்கு ஆநிரை மேய்க்கச் செல்லுவதையே தொழிலாகக் கொண்ட மக்கள் வாழ்கின்ற ஊர்களின் பெயர்களில் பெரும்பாலும் பட்டி என்றே முடிவதை இன்றும் காணலாம்.’பட்டி’என்றால் நாய்’என்று இன்னொரு அர்த்தமும் உண்டு.


இப் பகுதி மக்கள் வானம் பார்த்த பூமியின் சொந்தக்காரர்கள்.அடிக்கடி மழை குன்றி, பட்டினியைச் சந்திப்பவர்கள். அந்தக் காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட அரசர்கள், மக்கள் பட்டினியால் மாண்டுவிடக் கூடாது என்பதற்காகக் கஞ்சித் தொட்டிகளை ஊர் தோறும் வைத்து, தினமும் மக்கள் தஙகள் பசியைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு அத் தொட்டிகளில் கஞ்சியைக் காய்ச்சி ஊற்றி வைப்பது வழக்கம்.


இத்தகு செயல்கள் மூலம் மக்களின் பசிப் பிணியை போக்கி வருவதை அக் கால மன்னர்கள் தங்கள் அன்றாடக் கடமையாகக் கருதிச் செயல்பட்டு வந்தனர். இதன் அடையாளமாக இன்றும் பல ஊர்களில் கல்தொட்டிகள் இருப்பதைக் காணலாம்.


இந் நிலைமை, குறிப்பாகக் கொங்கு நாட்டுப் பகுதிகளில் நிலவி வந்திருந்தது. காரணம், இப் பகுதி பெரும்பாலும் காடும் மலையும் சார்ந்த பகுதிகளாகவே இருந்தது.


எனவே, எங்கு பார்த்தாலும் பட்டி என்ற பெயர்களைக் கொண்ட ஊர்களையும் அந்த ஊர்களில் கஞ்சித் தொட்டிகள் வைக்கப் பட்டதாகவும் தென்படும் நாடு,இந்தக் கொங்கு நாடு’எனக் கேலி செய்வது போல் இந்த வரிகள்.


இப் பாடலைக்ழ் கம்பன்தான் எழுதினானா அல்லது‘பாடலின் பொருளைப் பெருமைபட இவ்வுலகம் நினைவில் கொள்ள வேண்டும்’ என்பதற்காக எந்தப் பிற்காலப் புலவராவது கம்பன் பெயருக்கு இதைத் தத்தம் செய்து விட்டாரா? என்பதை இலக்கிய ஆய்வாளர்களால்கூட அறுதியிட்டு கூற முடியவில்லை.


உண்பதோ கம்பஞ்சோறு:
இந்தப் புகுதி மக்கள் வெறும் கம்பஞ் சோற்றையே உண்கிறவர்கள்’என்று வறுமையை சித்தரிக்கும் வரிகள். ஆம். இங்குதான் நெல் விளைவதில்லையே.வானம் பார்த்த பூமி விவசாயம்தானே. இம் மண்ணின் விளைபொருட்களான கம்பு,ராகி,சோளம்,வரகு இவைதானே முக்கிய உணவுப் பொருட்கள்.


உதாரணத்துக்கு-
எங்கள் தாராபுரம் பகுதியில் 1967 வரையில் கிராம மக்களின் பெரும் பகுதி உணவே ராகிக் களி,சோளத் தோசை,சோளக் கூழ்,கம்பஞ்சோறு,வரகுச் சாதம்... இவைதான். சிறுவயதில் நான் பெரும் பாலும் ராகிக் களி,கம்பஞ் சோறு மற்றும் அம்புலி எனப்படும் சோளக் கூழ் சாப்பிட்டு வளர்ந்தவன்தான். அரிசிச் சோறு சமைக்கப்படுவது என்பது வருடத்தில் வரும் முக்கியப் பண்டிகை நாட்களில் மட்டுமே.


எனவே,’கம்பஞ் சோறு;களி தின்கின்ற மக்கள்’ என்று இங்கே,அவர்களின் வறுமையைக் குறிப்பிடும் வார்த்தைகள் வெளிப்பட்டன.


பேரெல்லாம் பொம்மன் திம்மன்:
மக்களின் பெயர்கள் கூட நாகரீகமாக இல்லாமல் ‘பொம்மன்;திம்மன்’ என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெயர் ஒற்றுக்கள் பெரும்பாலும் தர்மபுரி மாவட்டக் கிராமங்களில் இன்று கூட சிலருக்கு இருப்பதைக் காண்கின்றோம்.


பெண்களோ னாயும் பேயும்
இப்பகுதிவாழ் பெண்கள் அழகற்றவர்களாக,பேய்களைப் போல் தலைவிரி கோலமாகத் திரிகிறவர்கள்.


காருலாங் கொங்கு நாட்டைக் கனவிலும் கருதொணாதே!


'இருட்டுக் கட்டிய (கார்= இருட்டு) கொங்கு நாட்டைக் கனவிலும் கூட கருதிப் பார்க்கக் கூடாது’ என்று இப் பகுதிக்கு வந்து,தான் பார்த்த,பட்ட அனுபவங்களை ஒரு பாடல் வாயிலாக வெளிப் படுத்தியதாக அந்தத்‘தனிப் பாடல் திரட்டு’நூலில் விவரிக்கப் பட்டுள்ளது.


நண்பர்களே,
குறிப்பாகக் கொங்கு மண்ணைச் சார்ந்த நண்பர்களே,இப்பாடலின் மெய்ப் பொருள் விளக்கத்தை உணர்வீர்களாயின்,மிக்க பெருமை கொள்வீர்கள்.


“ஓ..நான் இத்தைகைய மண்ணில் பிறந்து இங்கு வந்திருக்கிறேன்” என்று நீங்கள் செல்லும் ஊர்களின் நண்பர்களிடம் எல்லாம் சொல்லிப் பெருமைப் படும் வகையில் இதன் மெய்ப் பொருள் விளக்கம் இருக்கிறது.


இதோ இப் பாடலின் மெய்ப் பொருள் விளக்கம்:
ஏதோ ஒரு காரணத்துக்காக வழிப் பயணமாக கொங்கு நாட்டின் பகுதிக்கு வந்து சேர்கிறான் கம்பன்.அவன்,சோழ நாட்டில் அரசனுக்கு இணையான புகழ்,மரியாதை எல்லாம் பெற்றுத் திகழ்பவன்.ஏன்,அரசனே ஒடுங்கி மரியாதை செலுத்தும் அளவுக்கு அவனுடைய தமிழ்ப் புலமையும் சிந்தனைகளும் அந்த ராஜ சபையில் பேசப் பட்டு வந்திருந்தன.


அக் காலத்தில்,புலவர்கள் என்றாலே,ஊர் ஊராகப் பயணம் செய்து வருவதும்,அவர்கள் எங்கு சென்றாலும் அவ்வூர்ப் பெரியவர்கள் மூலம்‘புலவர் நம் ஊருக்கு வந்திருக்கிறார்’ என்ற செய்தி, ஊர்ச் செய்தியாக அறிவிக்கப்பட்டு,ஊர் மக்கள் எல்லோரும் கூடி அப் புலவர் பெருமானை வரவேற்பதும்,அந்த ஊரில் வாழும் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவு பரிசுப் பொருட்களை வழங்கி,அப் புலவர் பெருமானிடம் வாழ்த்துப் பெற்று மகிழ்ந்து பெருமைகொள்வதும் ஓர் மரபாகப் பின்பற்றப் பட்டு வந்தது.


புலவர் சென்று வரும் ஊர்களின் எண்ணிக்கை கூடக்கூடப் புலவரின் மதிப்பும் கூடி நிற்கும்.‘பொது அறிவும் உலக ஞானமும் பொருந்தியிருப்பவர் புலவர்’ என்பது இதனால் அன்றோ மெய்ப்பிக்கபடும்?


அவ்வாறு,இத்தகைய வழக்கத்தின் மாண்பாக, கொங்கு நாட்டுக்கு வந்த கம்பனுக்கு,இப்பகுதி மக்கள்,இவர் பெருமைகளைத் தெரிந்து கொண்டு உரிய வரவேற்போ,மரியாதையோ செலுத்தவில்லை.


பயணக் களைப்பும் பசியுமாக இருந்த கம்பன் பார்த்தான்,"ச்சே,என்ன நாடு இது..மரியாதை தெரியாத மக்கள்..இவர்கள் ஊரும் பேரும்...” என்ற எரிச்சலோடு ஒரு சத்திரத்தில் அமர்ந்தபடி தன் சிந்தனையை ஓட விட்டான்.


அச் சமயம், அங்கே வந்த அந்தப் பகுதி மன்னனின் பிரதிநிதிகள் புலவர் போல் தோற்றமளிக்கும் இவரிடம் பேச்சுக் கொடுத்தனர்.(அப்பொதெல்லாம் ஒரு ஊருக்கு யாராவது புதியவர்கள் வந்தால்,அவர்கள் யார்,எந்த நோக்கத்துக்காக அங்கு வந்திருக்கிறார்கள் என்பதை அவர்களிடம் நயமாகப் பேச்சுக் கொடுத்து உண்மையைக் கரந்து கொள்ளும் திறன் உடையோர் மன்னரின் பிரதி நிதிகளாக
இருப்பது,அவர்கள் நாட்டு நடப்புக்களை உடனுக்குடன் அரசருக்குத் தெரிவிக்கக் கடமைப் பட்டவர்கள் ஆதலால்,அதன்பொருட்டு ஊர் சுற்றிக் கொண்டிருப்பது வழக்கம். இவர்கள் விசுவாசம் மிகுந்த ஒற்றர்களாக அரசனால் நியமிக்கப்பட்டிருப்பது அக்காலத்திய நடைமுறை)


கம்பனின் எரிச்சல்,பாட்டாக வெளிப் பட்டது.அவர்களிடமே இந்தப் பாட்டைச் சொன்னான்.


வந்தவர்களுக்கு நிலைமை புரிந்து விட்டது!


“இவர் மிகப் பெரும் புலவர். இப்பேர்ப் பட்டவரிடம் நம் நாடு சாபம் அல்லவா பெற்று விட்டது? இவருடைய மன நிலையை மாற்றி மன்னரிடம் சொல்லி,அவர் வாயாலேயே பாராட்டுப் பத்திரம் வாங்கினால் ஒழிய அந்தச் சாபம், விமோசனம் அடையாதே;மன்னரிடம் சென்று,தெரிவித்து,இதற்கொரு தீர்வு கண்போம்” என்று தீர்மானித்து, இவர் கம்பர்தான் என்பதையும் தெரிந்து கொண்டு,அவரிடம் மிகப் பணிவோடு உரையாடி அவருக்கு உணவளித்துக் களைப்புத் தீரச் செய்து, பின் பெரிய புலவர் என்பதால் அன்று மாலையே தங்கள் மன்னரின் சபைக்கு வருமாறு அழைப்பும் விடுத்தனர்.


கம்பரும் வேண்டா வெறுப்பாக,’சரி’எனச் சம்மதம் தெரிவித்தார்.


திரும்பிச் சென்ற அரசப் பிரதிநிதிகள் மன்னரிடம் சென்று எல்லா விவரங்களையும் தெரிவித்தனர்.


விவரத்தைப் புரிந்து கொண்ட மன்னரும் முறைப்படி புலவரைப் பல்லக்குடன் எதிர் கொண்டு வணங்கி நேரில் சபைக்கு அழைத்தார். கம்பரும் சென்றார். சபை கூடிற்று.


ஆச்சர்யம்!
அன்று கம்பனின் ராமாயணம் பற்றிய விவாதம் புலவர் பெருமக்களால்
அமர்க்களமாக நடத்தப் பட்டது. கம்பனின் ராமகாதையை கம்பனை விடவும் மேலான பக்தி சிரத்தையோடு அந்தச் சபையில் பேசினர், அரசவைப் புலவர் பலரும்.


முடிவாக வாழ்த்துரை.விருந்தினாராக வந்திருந்த கம்பனே வாழ்த்தினான்.


எப்படி?


தான் அன்று பாடிய அதே பாடலைப் பதம் பிரித்துப் பாடி வாழ்த்தினான்.
மன்னரும் மற்ற புலவர்களும் நெஞ்சம் நெகிழ்ந்து பாடலின் பொருள் உணர்ந்து மகிழ்ந்து கர கோஷம் செய்தனர்:


”கம்ப நாட்டழ்வார் போற்றி; மாமன்னர் போற்றி;கொங்கு நாடு போற்றி, போற்றி!”என்ற கோஷம் சபையை அதிர வைத்தது!


சபித்து எழுதிய பாடல்,பதம் பிரித்தால்,வாழ்த்துப் பொருளாக மாறுகிறது பாருங்கள்:

நீரெலாஞ் சேற்று நாற்றம்

இந்த நாட்டில் உள்ள நிலம் எங்கும் பயிர்கள் நடப்பட்டு அவற்றைத் தழுவி வாசம் வீசும் காற்றினால் மண்ணின் வளம் மணமாக நம்மைச் சூழ்ந்து,‘ஆகா, இதுவல்லவோ பசுமையான விவசாய வளம் பெற்ற நாடு?’என்று மகிழும்படியான மண்வளம் மிகுந்த நாடு,கொங்கு நாடு.


நிலமெலாம் கல்லும் முள்ளும்
கல்லும் முள்ளும் என்பதைக் ’கல்லும் உள்ளும்’ என்று பதம் பிரித்தால் கல்லும் மின்னும் என்று பொருள் தரும்.‘உள்ளும்’ என்றால் மின்னும் எனப் பொருள்.


இந்தக்‘கொங்கு நாட்டின் நிலங்களில், பாறைகள்கூட ரத்தினங்களாக மின்னுகின்ற கற்களைக் கொண்டிருக்கின்றன;எங்கும் கற்கள் நிறைந்துள்ள பகுதிகள்’.


ஆம், நண்பர்களே,


தமிழ் நாட்டிலேயே இன்றுகூட, அதிக அளவில் க்ரானைட்ஸ் கற்கள் எனும் பாறைகள் அதிகம் வெட்டி எடுக்கப் பட்டு வருவதும்; அவை தொழிற் சாலைகளில் பாலீஷ் செய்யப்பட்டு, பல வண்ணங்கள் கொண்ட பளிங்கு கற்களாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுவதும் இந்த கொங்கு நாட்டிலிருந்துதான். கோயம்புத்தூர்,சேலம்,தருமபுரி மாவட்டங்கள்தாம் ‘கொங்கு நாடு’ என வழங்கப்படுகின்றது. இப்போது உள் நாட்டிலும் பெரிய கட்டிடங்களுக்கு அந்தப் பளிங்குக் கற்கள் பெரிய அளவில் பயன் படுத்தப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.


ஊரெல்லாம் பட்டி தொட்டி:
பட்டி என்றால் மிகப்பெரும் ஞானவானாகத் திகழ்ந்த ’பட்டி விக்கிரமாதித்தன்’ என்ற மன்னனையும் அவனுக்கு உயிர்த் துணையாகத் திகழ்ந்த அவனுடைய மந்திரியான தொட்டியையும் பொருள் படுத்தியது.


உண்பதோ கம்பஞ் சோறு:
இந்த ஊர் மக்கள் அனைவருக்கும் கம்பனுடைய தமிழ்தான் உணவு. அந்த அளவுக்கு ஞானம் பெற்ற இலக்கிய ரசனை மிகுந்த மக்கள்.அவர்கள் ராமகாதையை இவ்வளவு விரிவாகத் தெரிந்து வைத்துள்ளார்களே!


பேரெல்லாம் பொம்மன் திம்மன்:
இங்குள்ள ஆண்களின் பெயர்களில் பொன் மனமும் திண் மனமும் சேர்ந்து மிளிர்கின்றது. திண் என்றால் திண்மை,உறுதிப்பாடு.


பெண்களோ னாயும் பேயும்;
’பெண்களோன்’ என்று புராணங்கள் வருணிக்கும் மன்மதனே ஆய்ந்து மயங்கும் அழகுத் தேவதைகளாய்க் கொங்கு நாட்டுப் பெண்கள்.


இனி,‘பேயும்’என்பதை அடுத்து வரும் வார்த்தையான கார் உலாவும், என்பதனோடு இணைத்துப் படியுங்கள்:


‘பேயும் கார் உலாவும் கொங்கு நாடு’ என்று வரும்.


அதாவது மழையாகப் பொழியக்கூடிய கரு மேகஙகள் எப்பொழுதும் சூழ்ந்து மழையைத் தவறாமல் கொட்டுவதால்,நீர் வளம் குன்றாத நாடாய்,இந்தக் கொங்கு நாடு திகழ்கிறது.


’கொங்கு’ என்பதற்குத் தேன் என்றும் பொருள்.


கனவிலுங் கருதொணாதே:
‘கனவிலும் கருது; ஒணாதே’ என்பது கனவிலும் நினைவுகளாய்த் கூட மறக்க முடியாதது இந் நாடுபற்றிய சிந்தனை’ என்று பொருள் ஆகிறது.


அதாவது,


கனவில் கூட மறக்க முடியாத நாடு என்று வாழ்த்துப் பொருளாக முடிகிறது இவ்வரிகள்.


நண்பர்களே,
ஒரே பாடல்.இரண்டு முரண்பட்ட அர்த்தங்களைத் தரும் பொருள் பொதிந்த வார்த்தைகள்.கம்பனா? கொம்பனா?


பொதுவாக ‘கம்பனை ஒரு வம்பன்’ எனச் சொல்வாரும் உண்டு.ஆனால் தான் பாடிய அனல் வீசும் கோப வரிகளை அப்படியே புனல் சூழும் குளிர் வரிகளாய், வாழ்த்துப் பாடலாகப் பதம் பிரியச் செய்யும் வகையில்,பாட்டெழுதிய அவன்,’கலைமகளின்’தலை மகன் அல்லவோ?


தமிழுக்கு மட்டுமே உள்ள தனிப் பெருஞ்சிறப்புக்கு மகுடம் சூடியவை,அவனது பாடல்கள் என்பது பொய்யன்று.


என்ன நண்பர்களே?
உங்கள் மனம் அந்தக் கால நினைவுகளுக்குள் சென்று விட்டதா?
நமது பாட்டன்களான கம்பனைப் போன்றோரின் கவிதைப் படைப்புகளை மேலும் காணத் துடிக்கிறதா?....


காத்திருங்கள்;இந்தத் தடம் அதை உங்களுக்கு நிறையக் காட்டும்....
நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
23.9.2010/ 3:00 அதிகாலை

நன்றி:
நண்பர்:திரு.உதயன் சத்தியானந்தன்,நார்வே.
(இப்பாடலின் முழுமையான வரிகளை அளித்தமைக்கு)
Post a Comment