Tuesday, September 7, 2010

மானம் கெட்ட ஞானம்!

இது-
திட்டும் தலைப்பன்று;தீட்டும் தலைப்பு.
எதிர் மறையானதொரு ஞானானுபவ ஞானத்தைக் கேள்வியாக வைக்கும் கவிதை இது! ஞான நிலையைக் கேலி செய்வதாய் யாரேனும் நினைத்தால் அவர்களுக்கு என் அனுதாபம்.


“மானம் கெட்டுப் போன பின்பு;
மவுன நிலை ஆனபின்பு
ஞானம் வந்து சேரும் எனில்,பாவம்-இந்த
ஞாலத்துக்கு,எந்த வகை,லாபம்?”


-இந்த உலகத்தோரின் அஞ்ஞான நிலை தொடர்ந்திருக்க,
“ஞானம் எய்தியோர்,இந்த உலகத்தை அனாதையாகவே விட்டுச் சென்று விடுகிறார்கள்,பாவம்,இந்தப் பரந்த உலகம்!” என்று பரிதாபம் காட்டுகின்ற மறை பொருளை இடித்து காட்டுகின்றது மனம்.மதியுடையோர் மகிழவும் நெகிழவும் ஆன கவிதை இது:படியுங்கள்:

மானம் கெட்ட ஞானம்!

‘சட்’டென்று காரியத்தைச்
சந்தியிலே விட்டெறிந்து
‘பட்’டென்று போக உயிர் விழையும்;அந்தப்
பக்குவத்தில் ஞானம் ஒன்று விளையும்!


கட்டளையை இட்டு,எனைக்
கட்டிவிடும் ஆசைகளில்
கெட்டமனம் பாடம் ஒன்று தேடும்-அதைக்
கிண்டிவிட்டு ஞானம் வந்து சேரும்!


பெண்மயக்கம் என்பதொரு
புண்மயக்கம் என்றபின்னும்
கண்மயக்கம் கொண்டதிந்த நெஞ்சு-ஞானம்
கண்டபின்னர் அத்தனையும் நஞ்சு!


’பாவம் அறியா தவர்கள்;
பாரில் இல்லை’ என்றறிந்தும்
’தேவன்’ என்று மானிடனைப் பாடி-மனம்
தேடியது ஞானம் ஒரு கோடி!


’குற்றமிகும் மானிடந்தான்
கூட்டு’எனக் கண்டு கொண்டு
மற்றும் ஒரு தூயவனைத் தேடும்-அந்த
மாயைஒரு ஞான வடிவாகும்!


ஞானகுரு நாதன் அவன்
நல்லவற்றைச் சொன்னபின்னும்
போனதிந்தப் புத்தி கெட்டு, மானம்-அதில்
பொத்துக் கொண்டு வந்ததொரு ஞானம்!


ஞான நிலை என்பதெல்லாம்
நல்லபடி சேர்ந்ததென்று
நானறிந்த தில்லை;இங்கு பாரீர்-இதை
நம்ப மறுக்கின்ற வர்கள்,வாரீர்!


மானம் கெட்டுப் போன பின்பு;
மவுன நிலை ஆனபின்பு
ஞானம் வந்து சேரும் எனில்,பாவம்-இந்த
ஞாலத்துக்கு,எந்த வகை,லாபம்?


-கிருஷ்ணன் பாலா–


1988-ல் சென்னை,திருவல்லிக்கேணி கார்டியன் மேன்சனில் வாழ்ந்த போது எழுதிய கவிதை.

3 comments:

V.Rajalakshmi said...

1988 லே //பெண்மயக்கம் என்பதொரு
புண்மயக்கம் என்றபின்னும்
கண்மயக்கம் கொண்டதிந்த நெஞ்சு-ஞானம்
கண்டபின்னர் அத்தனையும் நஞ்சு!//ஹ்ஹ்ம்ம்

V.Rajalakshmi said...

“மானம் கெட்டுப் போன பின்பு;
மவுன நிலை ஆனபின்பு
ஞானம் வந்து சேரும் எனில்,பாவம்-இந்த
ஞாலத்துக்கு,எந்த வகை,லாபம்?”


ஞானம் பிறப்பிலே வருவதில்லை
அடிபட்ட வலிகள் அவர் அவர்தான் அறிவார்!
வலிகள் தரும் வலியை விட
வடுக்களில் வரும் வலி நிரந்தர ஞானமாகிறது!

Sivakumar N, New Delhi said...

சத்தியமான வரிகள் ஐயா...