Saturday, June 27, 2015

’சாதி’ப்போம்!

றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

எந்த ஜாதியில் பிறந்திருக்கின்றோமோ?  அந்த  ஜாதியைப் பெருமைப் படுத்தும் வகையில் வாழ்கின்றவர்கள்தான் சமுதாயத்தின் முன்னோடிகள்

தனது ஜாதீய குணங்களை இந்தச் சமூகம் கண்டு வியக்கும்படி வாழக் கற்றுக் கொள்வதை நான் ஆதரிக்கின்றவன்.

இ்ந்தச் சமூகம் அருவெறுக்கவும் அஞ்சவுமான  ஜாதிகளை  இங்கே ஊக்கப்படுத்தி  மக்களை மிருகங்களாக்கும் வகையில் சங்கம் அமைப்பதும் அதை அரசியலாக்கி ஓட்டு வங்கிகளாக மாற்றி, ரவுடிகளும்   நய வஞ்சகர்களும்  ஒழுக்கம் கெட்டவர்களும் நீதி, நேர்மையைப்  புதைகுழியில்  தள்ளியவர்களும்  இங்கே தலைவர்களாக உலாவருவதை  அனுமதிக்கும் நமது ஜனநாயக அமைப்பு கறைபடிந்து போனதாகி விட்டது.

‘சாதி இல்லைஎன்பதும் சாதியை  மறுப்போம்என்பதும் இன்றளவிலும் சாதிக்காத கோஷங்கள்.

மாறாக, ‘சாதி இல்லை’ என்பதும்  சாதியாலேயே சாதித்துக் கொள்வதுமான தலைவர்களின்  சாதி இங்கே பெருகி விட்டது.

இன்று அரசியலைக் கற்றுக் கொண்டவன் தனது ஜாதியைக் காப்பாற்றுவதாகக் கூறி கட்சியை ஏற்படுத்தி,அரசியல் நடத்துகின்றான். தனது ஜாதியையே ஏமாற்றி,அதை அடமானம் வைத்து தன்னை வளர்த்து வளமாக்கிக் கொள்கிறான். வளமானபின் தனது ஜாதிக்காரனையே அடிமைபோல் எண்ணுகின்றான்;நடத்துகின்றான்.

எல்லா ஜாதிக் கட்சிகளின் நிலை இதுதான்.
மக்களுக்கு எது நல்லது ? எது சமூக அமைதியைக் குலைப்பது?என்ற ஞானத்தைப் போதிக்கின்ற அரசியல்வாதி என்று எவரும் இங்கே இல்லை. 

எந்த ஒரு இயக்கத்தின் தலைவரும்  பொது நீதிக்காகவும் தேசத்தின் வளர்ச்சிக்காகவும்  சிந்திப்பவராக தனது இயக்கத் தொண்டர்களைத் தூண்டுவதில்லை; அவர்கள் தொண்டர்களைக் கூட்டி இயக்கப் பலத்தைக் காட்டி தனிப்பட்ட முறையில் அரசியல் பேரங்களைப் பேசி. அரசியலிலும் பொருளாதாரத்திலும் தேவைக்கு மேலும் தகுதிக்கு மேலும் சம்பாதித்துக் கொள்கின்றவர்களாகவே இருப்பதைக் காண்கின்றோம்.

இன்று எந்த சாதியிலும் ஒழுக்கமும் உண்மையும் கொண்ட தலைவர்கள் என்று  எவரும்  அரசியல் நடத்துவதில்லை.

நுண்ணறிவற்ற கூட்டம் எல்லா அரசியல்கட்சிகளிலும் பெரும்பான்மை கொண்டிருக்கிறது.  அந்தப் பெரும்பான்மையை மீறி, அறிவார்ந்த சிந்தனையாளர்  எவரும் கட்சித் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்க முடியாது.

இதன் எதிரொலியாகத்தான், தேர்தல் வரும் காலத்தில் பேரங்கள் விரிக்கப்பட்டு தவறான சுய நலவாதிகள் வேட்பாளர்களாக வாய்ப்புப் பெறுகிறார்கள்.

இப்படியாக இந்த தேசத்தின்  நிலைமை  நாளுக்கு நாள் சிதிலமடைந்து, ஜன சமூகத்துக்குள் கட்டுப்பாடும் கண்ணியமும் கறை படிந்து போய்அதிகாரம் உள்ளவன் எதை வேண்டுமானலும் சாதித்துக் கொள்ளவும் அதிகாரமற்றவனான பாமரன் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளவுமான அவல நிலையில்தான்  நம் தேசம் சென்று கொண்டிருக்கிறது.

எல்லா ஜாதிகளும் சேர்ந்ததே நாடு.
’இந்த  ஜாதியில்தான் பிறப்பேன்என்று பிடிவாதம் கொண்டு எவனும் பிறப்பதில்லை.

அதுபோலவே, என் ஜாதிதான் உயர்ந்தது என்று  சான்றிதழ் வழங்கிக் கொள்ள எந்த ஜாதிக்கும் அருகதை இல்லை.

’நல்லவர்கள் இருக்கும் ஜாதியே உயர்ந்தது என்று  தகுதி பெறுமே அல்லாது ஒரு ஜாதிக்குத் தலைவன் ஆகி விட்டால அவன் நல்லவன் என்று அர்த்தம் ஆகாது.

இன்று ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கி,  நாட்டை இருண்ட கால நிலைக்குப் பின்னோக்கிச் செலுத்திக் கொண்டிருக்கிற காட்டு மிராண்டிகளாகவே ஜாதியத் தலைவர்கள் தங்கள் ஜாதி  அமைப்புக்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நல்ல மனிதன் தனது ஜாதியைப் பெருமைப்படுத்தும் வகையில் நடப்பானே தவிர, தனது  ஜாதீயத் தலைவர்களை ஒருபோதும்  கண்ணெடுத்துப் பார்க்க மாட்டான்

அந்த நல்லவனாக நாமிருப்போம்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
27.6.2015
.


Saturday, April 11, 2015

’ஓல்டு’ மாணவன்;ஆனாலும் ‘கோல்டு’!

பழைய பள்ளிக் கூட நினைவுகளிலிருந்து.....
--------------------------------------------------
1969-70 ஆம் ஆண்டு பள்ளி இறுதி படித்தவன் நான்.

1964களில்,ஆறாம் வகுப்பில் சேர்ந்தபோது இது போர்டு ஹைஸ்கூலாகவும் சில ஆண்டுகளில் 1970க்குப் (வருடம் சரியா?) பிறகு அரசினர் உயர்நிலைப் பள்ளி என்றும் ஆனது.

ஆறாம் வகுப்பில் சேர்ந்த போது இருந்த தலைமை ஆசிரியர் கொளிஞ்சிவாடி வெங்கட்ராம அய்யர். பள்ளியை விட்டு வெளியேறியபோது இருந்த தலைமை ஆசிரியர் திரு நாராயணன்.

அப்போதெல்லாம் எனதியற் பெயர் கி.பாலதண்டபாணி. அதாவது கிருஷ்ணசாமிக் கவுண்டர் பாலதண்டபாணி.

அதன் பிறகு 1972களில்,கல்கி,கோகுலம். இதழ்களிலும் சுதேசமித்திரன்,மக்கள் குரல்-அலிபாபா இதழ்களிலும் , சக்தி சுகர்ஸ் செய்திமடலிலும் பணியாற்றிய காலம் 1983 வரை நிலைத்திருந்த எனது இயற்பெயர்,1984க்குப் பிறகு கிருஷ்ணசாமி பாலதண்டபாணி என்பதன் சுருக்கமாகவும் தந்தையின் பெயரே முதலிடம் பெறும் காரணமாகவும் மாறி,’கிருஷ்ணன்பாலாவாகிப் போனேன்.
அன்றைய பள்ளித் தோழர்களையும் தோழியர்களையும் நினைத்துப் பார்க்கின்றேன்.

விரல் விட்டு எண்ணக்கூடியவர்களை மட்டுமே இன்றுவரை சந்திக்க முடிந்திருக்கிறது.

பெரும்பாலோர் எங்கெங்கு இருக்கின்றீர்களோ?
உங்களில் யாரையும் நான் மறக்கவில்லை.

குறிப்பாக, பள்ளிக் கட்டடத்துக்கு வெளியே, தின் பண்டங்கள் விற்று கடன்தந்து, ரொம்பவும் விட்டுக் கொடுத்துக் கெடுபிடியில்லாமல் கடனைப் பொறுமையாக வசூலித்த ஜப்பானையும் ஜப்பாத்தியையும் மறக்கவே இல்லை!

ஜப்பான் ,ஜப்பாத்தியிடம் ஐவ்வு மிட்டாய் மற்றும் எலந்தை வடைகளை வாங்கி அதை நண்பர்களுக்கு இலவசமாகக் கொடுத்து இன்புற்றதும் கடனை அடைக்க முடியாமல் பள்ளியின் வடபுறக் கேட்டின் வழியாக நுழைந்து வருவதுமாய்க் கழிந்த காலங்களை வெட்கத்தோடு எண்ணிப் பார்க்கின்றேன்.

கடன் அதிகபட்சமாக ஐந்து ரூபாய் ஆறு ரூபாய் என்று ஆகிப் போய் கடனுக்குப் பயந்து கொணடு பள்ளிக்கே செல்லாமல்கட்அடித்த நாட்களையும் மறக்கமல் எண்ணிப் பார்க்கின்றேன்.

நேர்மை,ஒழுக்கம்,பணிவு இவற்றை எனக்கு நானே கற்பித்துக் கொண்டும் கனவு கண்டும் வளர்ந்த அந்தப் பாலதண்டபாணிக்கு உற்சாகமூட்டவும் வழிகாட்டவும் துணை என்றும் அப்போது யாரும் இல்லை.

ஆனாலும் எனக்கு நானே தவறுகளைச் செய்வதும் அதை நானே உணர்ந்து செப்பனிட்டுக் கொள்வதுமான அந்த நாட்கள் இன்று எனக்குள் கர்வத்தையும் கம்பீரத்தையும் ஏற்படுத்துகின்றன.

பழைய தாராபுரம் போர்டு ஹை ஸ்கூலின் நான் ஓல்டு மாணவன் என்றாலும் அதன் கோல்டு மாணவன் ஆக இருக்கிறேன் என்பதில் எனது முன்னாள் ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்க்கின்றேன்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
10.4.2015


Thursday, April 9, 2015

ஜெய ஜெய காந்தன்!

பொது உடமைப் பூங்காவில் புகுந்த புயல்;
பூந்தென்றல் போலிங்கு பொலிந்ததுண்டு;
புதுமைமிகும் எழுத்தாளும் புதுமைப்பித்தன்
போலவொரு வடிவத்தைக் கண்டதுண்டு;

பாரதியின் நேர்முகமாய் நின்றதுண்டு
பலகாலும் புகைபிடித்துக் கொண்டதுண்டு;
நேர்மைமிகும் நிஜமான சிந்தனையில்
நிலைத்திருந்த வடிவத்தைச் சொல்லுகின்றேன்!

நேர் இருந்து இவரோடு கலந்து பேசி
நிறைவான நட்பை நான் உணர்ந்ததுண்டு;
யார் இவர்க்கு ஒப்பாக முடியும்? என்று
எண்ணியெண்ணிப் பெருமையுடன் நிமிர்ந்ததுண்டு!

கூர்மைதிகழ் எழுத்துக்கள் உருவாகும்
கொஞ்சுதமிழ்ப் பட்டறையின் கொள்கைக்காரன்;
சீர்படுத்தும் சமுதாயக் கதைகள் எல்லாம்
செம்மாந்த நடை மிடுக்கில் சொக்க வைத்தான்!

இவருக்கு நிகராக எவரும் இங்கு
இதுவரையில் பிறக்கவில்லை;பிறந்தால்கூட
இவர்போல எழுதுகின்ற அறிவு கொண்டு
இருப்பாரோ,அறியோம்; நாம் உண்மைதானே?

வரிப் புலிக்கு நிகராக வரித்துக் கொண்டு
வாய் திறக்கும் பூனையெலாம் புலிகள் ஆமோ?
கரிக்குதவாக் கட்டைஎலாம் காய்ந்து காய்ந்து
கடை விரித்த போதும் அவை விலை போகாதே?

எழுத்தாளன் என்கின்ற இலக்கணத்தின்
எழுத்தாளர் யார்? என்று தேடுகின்றேன்:
கொழுப்பெடுத்துப் பலரிங்கு எழுதுகின்றார்;
குறைமதியை நிறைமதிபோல் காட்டுகின்றார்!

எவருக்கென் ஜே.கே.வின் கர்வம் உண்டு?
எவர்இந்த உரைநடைக்கு உயர்வு தந்தார்?
எவருக்கு ஜெயகாந்தன் தோற்றம் உண்டு?
எவர் இவர்போல் துணிவோடு நின்றதுண்டு?

ஜெயகாந்தன் எழுத்துக்கள் இலக்கியத்தின்
செறிவான உரைநடைக்குச் சிகரம் என்றும் ;
நயம்மிக்க தமிழ் படைப்பின் மகுடம் என்றும்
நவிலாத வாசகர்கள் உலகில் உண்டோ?  

வறுமைக்கு எழுதாமல் வாழ்க்கையதன்
வளமார்ந்த சிந்தனைக்கு எழுத்தை ஈந்து;
மறுமைக்கும் இம்மைக்கும் அழியாப் புகழை
மலைபோலக் குவித்திங்கு வாழ்ந்து சென்றான்!

எப்போதும் சிந்தனையில் செழித்த முகம்
சிங்கம் போல் ஏறுநடை பயிலும் நேர்த்தி;
தப்பாமல் மானுடத்தை வெல்லும் நோக்கம்;
தவறாத கர்வத்தில் தழைத்த தோற்றம்!

இப்போது நினைத்தாலும் ஜே.கே என்று
இறுமாப்பு விளைவிக்கும் எழுத்து வேந்தன்;
எப்போதும் இலக்கியத்தின் உச்சம் நின்று
இணையற்ற ஜெயகாந்தன் வாழுகின்றார்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
9.4.2015

கண்மூடிக் கொண்ட இலக்கியச் சிங்கம்

வர் பொருட்டும் தன் கருத்தை மாற்றிக் கொண்டதில்லை:
எதன் பொருட்டும் தன்னை அடிமைப் படுத்திக் கொண்டதில்லை..

எப்பொழுதும் தன்னைப் பிறர் வென்றுவிட இடம் கொடுத்ததில்லை.

எவரிடமும் தனக்காக யாசித்ததும் இல்லை.

தமிழ்ப் படைப்புலகின் பெருமைகளுக்குப் பெருமை சேர்த்த ஜே.கே. எனும் இலக்கியச் சிங்கம் தன் கர்ஜனையை நிறுத்திக் கொண்டது இன்று.

எனது மதிப்பிற்குரிய இலக்கிய ஞானியும் என்னை நேரில் நட்புக் கொண்டிருந்த சரஸ்வதியின் புதல்வருமான ஜெய காந்தன் இவ்வுலகின் அவல வாழ்விலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் என்பதில்  மகிழ்கின்றேன்.

என்னைப்போல் ஒருவன்;
வாழ்க ஜெ.கே.வின் புகழ்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
8.4.2015
கிருஷ்ணன்பாலா
8.4.2015

Wednesday, April 8, 2015

இந்தச் சிவப்பு விளக்குச் சிங்காரிகளை....

அறிவார்ந்த நண்பர்களே,

பலர் தங்கள் காதல் ரசனையைக் காட்டிக் கொள்வதற்காக காதல் ஏக்கம் அதன் வர்ணனைகள் பற்றிய சினிமாப் பாட்டுக்களை  எடுத்து கூறி, சுகித்தும் அதன் சுவையில் மனம் தகித்தும் காம ரசத்தைக் கொட்டிக்  காதலை வளர்க்கின்ற கடை கெட்ட வேலையை சமூக வலைத்தளங்கள் வழங்கி இருக்கும் கட்டற்ற  கெட்டசுதந்திரத்தைப்  பதிவிட்டு மகிழ்கின்றார்கள்.

மகிழட்டும்.

ஆனால்,அதன் எதிர் விளைவை அதாவது படிக்கின்றவர்களின் எண்ணப்பிரதிபலிப்பாக எதை,என்ன மனோநிலையில் பார்க்க விரும்புகின்றார்கள்? என்பதை அவர்களாக ஆழ்ந்து சிந்தித்து விளக்கம் கூறட்டும்,இங்கே.

இப்படிப்பட்ட  பதிவுகளை  45.50 வயதுகளைக் கடந்து நிற்கும்   சீமான்களும் சீமாட்டிகளும் இடுகிறார்கள் என்பதுதான் கவலைப்படத்தக்க விஷயமாக இருக்கிறது.

‘அய்யாமாரே அம்மாமாரே’  என்றழைக்கத் தக்க இவர்கள் இன்னமும் தங்கள் மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டு,தங்கள் வாரிசுகள் எதைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதைத் தெரிவிக்கின்ற மன வளம் இல்லாமல் கெட்டுப் போய், எதை யெல்லாம் அவர்கள் தெரிந்து கொண்டு கெட்டுப் போகக் கூடாதோ அதையெல்லாம் வெட்கப்படாமல் பொதுவில் எழுதி ஆனந்தம் நடனம் ஆடிக் களிகூர்கின்றார்கள்.

குறிப்பாகப் பெண்கள் பலரும் இப்படி எழுதி,விதம்விதமாகக் காதல் ரசனையையும் காம ரசத்தையும் கதைக்க  விடலைகள் பலர் அதற்கு ‘உச்சுக்’கொட்டக் கொட்ட உற்காசம்  கொண்டு விடுகிறார்கள்.

‘ஆகா, நாம் எழுதும் விஷயங்களுக்கு இவ்வளவு உற்சாகமான பதிலூட்டங்களா? ‘என்று தன்னைத்தானேஅர்கின்றார்கள்.,முகம் பார்த்துக் கொண்டு  ‘செல்ஃபி’ போல் தங்கள் குணாதிசயத்தைக் காட்டும் குணக்கேடு தரும் பதிவுகளைத் தொடர்கின்றார்கள்.

நண்பர்களே,

காதல் உணர்வுகளும் அதன் வித்தாகிய காமமும் ஒவ்வொரு மனிர்தர்க்கும் பிறப்பின் ஊடே இரத்தத்தில் ஊறி விளைந்து வருவதுதான். உரிய பருவத்தில் அது பிற உணர்ச்சிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு, வாலிப வயதினரை  அதிகம் ஈர்த்து வழி கடத்தும் வல்லமை கொண்டது.

காரணம்,இளமை என்பது கட்டுக் கடங்காக் குதிரைபோல் ஆகி அது அங்கும் இங்கும்  தாவிக் குதிக்கத் தயாராகி விடுவதுதான்.

அந்த நிலையில் அதற்குச் சரியான கடிவாளம் போட்டு ,கட்டுப்பாடற்ற அந்தக் குதிரையைப் பிடித்து அடக்கமுடியாமல் போகும்போதுதான் அதன் வசீகரத்தில் பலர் வீழ்ந்து படுகாயமுற்று நேரிய வாழ்க்கையின் நிஜத்தை இழந்து போகிறார்கள்.

காதலின் உணர்வுகளும் காமத்தின் விளைவுகளும் கொஞ்சம் ஏமாந்தால் என்ன நிலைக்குக் கொண்டு போகும் என்பதை, அதில்  வீழ்ந்து,விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் 45,50  வயதுகளைக் கடந்தவர்களுக்குத்தானே தெரியும்?

பெற்றோர் என்ற தகுதியில் இருக்கும் அவர்கள்,தங்கள் பிள்ளைகளான, அல்லது தங்கள் பிள்ளைகளைப் போன்ற ‘டீன்’ ஏஜ்’ (இளம் வயதுக்) கன்னியருக்கும் காளையருக்கும் கட்டுப்பாடற்ற காதலின் பின் விளைவுகளை இடித்துச் சொல்லும்  தகுதியும் இவர்களுக்குத் தானே இருக்கிறது?

மாறாக, இளமையின் துள்ளலையும் காதலின் ஈர்ப்பையும் அதன் உள்ளார்ந்த மதனச் சுவையையும் இந்த டீன் ஏஜ்களுக்கு இலவசமாக  வாரி வழங்கும் பிரதாபத்தில் இந்த நாலு கழுதை வயசை எட்டி விட்ட முதிர்வயது அம்மாக்களும்  அப்பாக்களும் துடிப்பதும் அந்தத் துடிப்பின் விளைவாக தங்கள் எழுத்தின் மேன்மையை  நிரூபிக்க இங்கே வரிசையில் வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதும் நமக்குக் கடும் சினத்தைக் கூட்டி வருகிறது.

சொல்லப்போனால், தன்பிள்ளைகள் தங்களின் குடும்பத்துக்குக் கட்டுப்பட்டு தங்களை மதித்து குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்திக்  கொள்ள வேண்டும் என்பதைத்தான் 98 சதவீதப்பெற்றோர் விரும்புவார்கள்; அதற்காகவே பண்பாட்டையும் உயர் மரபுகளையும் பேணுகின்ற சிந்தனைகளில் கவனம் செலுத்துவார்கள்.அதுதானே சராசரி இந்தியக் குடும்பங்களில் நியாயமான போக்கு?

ஆனால் இதற்கு விதி விலக்காக அத்தகைய பெற்றோர் நிலையிலிருக்கும் பெண்களும் ஆடவரும்  பக்கத்து வீட்டுப் பிள்ளைகளின் காம வேட்கைக்குச் சிட்டுக் குருவி லேகியம் விற்பவர்களாக இங்கே முகநூலில் கடை விரிக்கின்றார்கள்.

காதலையும் காமத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் புத்தி பேதலித்துப் போய் அரைவேக்காட்டுத்தனத்தில் பிதற்றுகின்ற இவர்களின் பதிவுகள் சினிமாத்தனமான சில்லறைக் காதலுக்கே படிப்பவர்களைக் கனவு  காண வைக்கும் சமூகக் கேட்டின் சாட்சியாகத்  திகழ்கின்றது.

காதலை யாருக்கும் யாரும் கற்றுத் தரத் தேவை இல்லை;
படிப்பறிவு இல்லா மிருகங்கள் கூட ஆண்-பெண்  இனச் சேர்க்கையில் வாழும்போதும் போது இந்தப் படித்த மிருகங்கள் இங்கே காதலை வளர்க்கப் பாடம் நடத்தும் அவல நிலையை நாம் கண்டிக்காமல்  இருக்க முடியாது.

ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான  ஜீவன்கள் எல்லாம் காமத்தின் ஈர்ப்பிலும் வரைமுறைக்குட்பட்ட வாழ்க்கையையே காண்கின்றன.

ஆறறிவிருந்தும் ஓரறிவில் கூட உருப்படியாக  உயராமல், வீணாய்ப் போன காமத்தில் உழன்றும் அதிலேயே பொழுது போக்கிக் கொள்ளும்  தேரா மானுடத்துக்கு வழிப் படுத்தும் வக்கிரப்புத்தியாளர்களாக இந்த முக நூலில்  உலாவரும்  பெண்களும் ஆண்களும்   சமூகக் கேடர்கள் என்பதை புத்தியுள்ளோர் புரிந்து கொள்ளட்டும்.

இவர்களின் எழுத்துக்கள் இவர்கள் வாழும் கேடு கெட்ட வாழ்க்கையின் முகவரிகள்கள் என்பதை அடையாளம் கொண்டு அவர்களின் சுவரில் காறி உமிழ வேண்டாமா?.

எழுதுவதற்கும் எடுத்துச் சொல்வதற்கும் இனிய தமிழ் மொழியின் இணையற்ற படைப்பிலக்கியங்கள் எண்ணற்றுக் கிடைக்கின்றன. அறமும் நீதியும் சமூகத்தின் மாண்பும் வினைப்பயனும் வியப்பான  சிந்தித்து அதன் விரிவுரைகளை  எழுதும் திறன் இன்றி, சமூக ஒழுக்கத்தின் ஆதாரத்தையே   சீர்குலைய  வைக்கும் சிறுமதியாளர்கள்,கனியிருப்பக் காய் கவர்ந்து கசக்கும் கசடர்கள்.

அதிலும் புதுமைப்பெண்,புரட்சிப் பெண் என்றெல்லாம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக கண்டதை எழுதிக் காமச் சுவையில் தாங்கள் திளைப்பதைக் காட்டிக் கொள்வதானது, சிவப்பு விளக்குப் பகுதிகளில் வசித்துக் கொண்டு அவ்வழியே வருவோர் போவோரையெல்லாம் வசீகரிக்க எப்படியெல்லாம் தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்களோ அப்படித்  தங்கள் எழுத்தின் மூலம் தங்களைக் காட்டிக் கொள்ளும் விபச்சாரப் பதிவர்கள் என்றுதான் பார்க்க  முடிகிறது.

முகநூல் முதலான சமூக வலைத்தளங்களில்  கண்ணியத்தையும் களங்கமற்ற மரபு வழிப் பண்பாட்டையும் அரசியல் விழிப்புணர்ச்சிகளைத் தூண்டும் எழுத்துக்களைப் பரப்பாமல்,  வேறு எதையோ பரப்பபிக் காட்டும் வேசைத்தனத்துக்கு எதிராக முகநூல் நண்பர்கள் எழாமல் போனால் அவர்களுடைய சந்ததியினர்  இந்த உலக சமூகத்தின் முன்பு, எழ முடியாத சவலைகளாகவே ஆகிப் போவார்கள்.

இப்போது சொல்லுங்கள்:

இந்த  இந்தச் சிங்காரச் சிறுக்கிகளுக்கும் சில்லறைத்தனமான சினிமாத்தனப் பதிவர்களுக்கும் நீங்கள்  சீட்டி அடிக்கின்றவர்களா?அல்லது செருப்பைக் காட்டுகின்றவர்களா?

உங்கள்
அகநூலைப் படிக்க விரும்பும்-
கிருஷ்ணன்பாலா
8.4.2015

Friday, April 3, 2015

உண்மையின் உரைகல் (நினைவுக் குறிப்புகள் -5)

அறிவார்ந்த நண்பர்களே,

உண்மையை மறைப்பது என்பதே பொய்யைப் போற்றுகின்ற புன்மைத் தனம்.

எது அறத்துக்கும் நீதிக்கும் எதிரானதோ அது பாவத்துக்குப் பாதை அமைக்கின்ற பரிதாபத்தைத் தான் வளர்க்கிறது

சமூகத்துக்குத் தேவையான ஒழுக்கப் பண்புகளை, நீதியை, நியாயமான செய்திகளை எழுதுகின்றவர்கள் அதே ஒழுக்கத்தையும் நீதியையும் நியாயத்தையும் கடைப்பிடிக்கின்றவர்களாக இருக்கின்றார்களா என்று ஆராய்ந்து  பார்த்தால் அப்படி இருப்பவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்பதையும் அப்படி இருக்கின்றவர்களை இச்சமூகம் மதித்துப் பார்ப்பதில்லை என்பதும் வெட்கப்படவேண்டிய உண்மை.

வெற்றுக் கருத்துக்களையும்  வீணான கற்பனைகளையும் விற்றுக் காசு பண்ணும் விபச்சார எழுத்தாளர்கள் பெருகி விட்ட காலம் இது.

உண்மையை  நாம் உண்மையான தேடலுடன் புரிந்து கொள்ளத் தவறினால் அது பாவகரமான பாதைக்குத்தான் நம்மை வழி நடத்தப் பார்க்கும்.

உண்மையான எழுத்தாளர் ஒருவரை உண்மையாகப் புரிந்து கொள்ளாமல் போன பாவத் தடத்திலிருந்து நான்  மாறிவிட்ட உண்மையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும்..

உலகம் புகழ்ந்த சுயசரிதைசரிதை நூல்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது ‘My Story என்று மலையாளப் பெண் எழுத்தாளரான கமலாதாஸ் அவர்கள் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும்  எழுதிய சுய சரிதை நூல்.

அப்பட்டமான உண்மைகளாலும் வெட்கப்படாத  தைரியத்தாலும் நிரப்பட்ட எழுத்துக்களின் வடிவம் இவரது சுயசரிதை.1976களில் இந்நூல் வெளிவந்தபோதுசுதேசமித்திரன்நாளிதழில் உதவி ஆசிரியனாகப் பணியில் இருந்தேன்.

தனது உடல் உறவு பற்றிய செய்திகளை ஒளிவு மறைவு இல்லாமல் வலிமை மிக்க வார்த்தைகளால் நிரப்பி, அதை உலகோர் முன் எடுத்துரைத்த இப்பெண் எழுத்தாளரின் துணிவு 1976களில் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்தது.

Kamala Das
தனது அழகில் வசீகரிக்கப்பட்டு, தன்பால் காம இச்சைகொண்டு உறவாடியவர்கள்; தன் வாழ்க்கையில் தன்னை இன்பம் துய்த்தவர்கள்: தனது காதல் உணர்வுகளைப் பங்கிட்டுக் கொண்டவர்கள்: காமம் எப்படிப் பட்டது?. அதில் தனக்குள்ள ஈடுபாடு எத்தகையது? என்பதைப் பற்றிய ஒளிவு மறைவற்ற கருத்துக்களுடன் போலித்தனமான மனிதர்கள் எப்படியெல்லாம் தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டனர்? உடல் சுகத்தில் வெட்கமின்றி தன்னைப் பகிர்ந்து கொண்ட பெரும் புள்ளிகளின் மிருக மனம் எப்படியெப்படி அவர்களை நடக்க வைக்கின்றது?’  என்று திகைக்க வைக்கும் ரகசியங்களைக்  கொஞ்சமும் கூச்சமின்றி கடுகளவும்  மறைக்காமல் இந்தச் சுயசரிதை  நூலில் எழுதியிருக்கிறார்.

ஒரு  இந்தியப் பெண் எப்படிப் பட்ட துணிச்சலில் எழுதி இருக்கிறார்?’ இக்கப்பட்டவைஎன்று பலரும் வாய்புதைத்து வியந்து விமரிசனங்களைக் குவித்துக் கொண்டிருந்த நேரம் அது.

'என்டே கதாஎன்று மலையாளத்திலும்  My Story என்று ஆங்கிலத்திலும் வெளியான  அவருடைய  எழுத்துக்கள் பல பதிப்புக்களாகப்  பரபரப்பாக விற்றுத் தீர்ந்த போதும்அதை வாங்கிப் படிக்க வேண்டும்என்ற ஆர்வம் - உந்துதல் அப்போது என்னுள் எழவில்லை.

செருக்கும், செம்மாந்த மொழி ஆளுமையும் கொண்டிருந்த  கமலாதாஸ் அவர்கள், மலையாள  இலக்கியத்துக்கும் நிறையக் கவிதைகள் படைத்து, அவற்றுக்கு மேன்மையான  கம்பீரம் அளித்திருக்கிறவர்தான். இவரது தனிமனித விமரிசனக் கவிதைகள் உலகம் முழுவதும் பல்வேறு ஆங்கில இதழ்களில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.

எனினும், “பலரோடும் பல காலமாகத் தொடர்ந்து தான் பகிர்ந்து கொண்டு வரும் தன் படுக்கை அறை விஷயங்களைக் கொஞ்சம் கூடக் கூச்சமின்றி ஒரு இந்தியப் பெண் எழுதி இருப்பதன் மூலம் தனது காம விளையாட்டுக்கு மிகப் பெரும் விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார்என்று நான் சினம் கொண்டிருந்ததால்  எனது மனம். அந்நூலைப் புறக்கணித்திருந்தது.

எனது நெருங்கிய நண்பர் ஒருவருடன்  நேற்று (2.4.2015)  பேசிக் கொண்டிருந்தபோது கமலாதாஸ் அவர்களைப்பற்றிய விவாதம் எழுந்தது, அந்த நண்பர் கமலாதாஸ்  அவர்களை நன்கு அறிந்து அவரிடம் நேரிலும் உரையாடிய வாய்ப்பைப் பெற்றிருந்தவர் என்பதுடன் அப்பட்டமான  ஒரு அறிவு ஜீவியாக வாழ்பவர். கமலாதாஸும் அவரைத் தன் புதல்வர்களுக்கு இணையான  அன்பிலும் மதிப்பிலும் வைத்திருந்தார்.

கமலாதாஸ்மீது நான் கொண்டிருந்த கசப்புணர்வை  அந்த நண்பரிடம் நான் சொன்னேன். அதற்கு அவர் சொன்ன செய்திகளும் தகவல்களும்தான் கமலாதாஸ் பற்றிய எனது மதிப்பீடும் பார்வையும் தவறு என்ற உண்மை வெளிப்பட்டது. கமலாதாஸ் அவர்கள் மீது பல ஆண்டுகளாக நான் கொண்டிருந்தகசப்பு’, எனது அறியாமையின் வடிவம்என்பது அப்போது எனக்குள் நறுக்கென்று  பட்டது..

MY STORY வெளியான பின், உலகம் முழுவதும் அது பேசப்பட்டு,கடும் விமரிசனத்துக்கும் ஆளாகியிருந்த கமலாதாஸ் அவர்களிடம்  எனது நண்பர் விவாதித்திருக்கிறார்.

அப்போது, அந்த நண்பரிடம் கமலாதாஸ் அவர்கள் சொன்ன விளக்கம், நிமிர்ந்த நெஞ்சத்தின்  நேர்மைக் கருத்துக்களாய் மின்னலென என்னுள் பாய்ச்சியது.  ’கேவலமான பெண் எழுத்தாளர்என்று அவரை அதுவரை சித்தரித்திருந்த எனது தவறான மதிப்பீடு குறித்து என் மனம் குனிந்து போனது.

எனது பிழையான மதிப்பீட்டைத் திருத்திக் கொள்ளச் செய்த  கமலாதாஸ் அவர்களின்  கருத்து விளக்கம் இதுதான்:

//நான் உண்மைகளை, உண்மையான தைரியத்தோடு எழுதுகிறவள். என் எழுத்துக்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது.எனது அழகைப்போலவே என் கவிதைகளும் அழகானவைஎன்று புகழ்கிறார்கள்; அது உண்மைதான். ஆனால் என் அழகான தோற்றத்தைப் போலவும் என் அழகான எழுத்துக்களைப் போலவும் நான் அழகான வாழ்க்கையில் சிறப்பாக வாழ்கின்றவள் என்று இந்தச் சமூகம்  பொய்யாகப் புரிந்து கொண்டு நம்புவதை நான் ஏற்க முடியாது. எனது தனிப்பட்ட வாழ்க்கை என்பது இருட்டறைகளிலும் மூடிக் கிடக்கும் அறைகளுக்குள்ளும் உடல் புணர்ச்சிகளால் பலரோடும் பலவகையிலும் மாறாத தொடர்புடையது..

போலிப் பத்தினித்தனத்தைக் காட்டி,என் கணவரிடமிருந்தும் என் பிள்ளகளிடமிருந்தும்  போலித்தனமான அன்பையும் பாசத்தையும் பெற நான் விரும்புவதில்லை;அது  அவர்களை ஏமாற்றிக் கொண்டு என் வாழ்க்கையைப் போலியாக்கிக் கொள்ள நான் ஒருபோதும் சம்மதிப்பதில்லை..

எல்லா வகையிலும் சுதந்திரத்தோடும் உண்மையோடும் வாழும் குணம் என்னுடையது; மறைக்கப்படாத நிஜமான உணர்வுகளுக்கும் துணிவுக்கும் இந்தச் சமூகம் மதிப்பளிக்க. வேண்டுமே தவிர போலித்தனத்துக்கும் போலிகளுக்கும்  அல்ல.

உங்கள் தவறுகளையும் பொய்யையும்  சொல்லவோ ஒப்புக் கொள்ளவோ நீங்கள் வெட்கப் படலாம்; அதற்காக, பொய்க்கு மேல் பொய்யாகவே உங்கள் வாழ்க்கையை வளர்த்துக் கொள்ளத்தான் நேரிடும். ஆனால் அது என் வாழ்க்கையில் நிகழவே வாய்ப்பில்லை.

மறைக்கப்படாத  உண்மைகளில் கசப்புக் கொண்டு பொய்களின் தோற்றத்தில் மயங்கும் மக்களால் இச் சமூகம் ஒருபோதும் தலை நிமிர்ந்து நிற்பதில்லை.

உண்மைகளை  மறைக்காது உரைத்து நிமிர்ந்து நிற்கின்ற கர்வம் எனது எழுத்துக்களுக்கு இருக்க வேண்டும்;அதில் இவள் திமிர் பிடித்தவள் என்று இந்த சமூகம் சொன்னால் அதுபற்றி  நான் வருந்தப்போவதில்லை.
’உண்மையைச் சொல்லும் தைரியம்தன் ஒவ்வொரு மனிதருக்கும் வேண்டும்’ என்பதை  இச்சமூகத்துக்குக் கற்பிக்க விரும்புகின்றேன்//  

சுய விமரிசனம் செய்து கொண்டு   உண்மையை உச்சத்துக்கு உயர்த்துவதில் நிகரற்ற துணிவு  காட்டிய இப்பெண்மணியின் நேர்மை நிகரற்றது.

நமது வாழ்க்கையில் ஆணாகட்டும் பெண்ணாகட்டும் ஒழுக்கம் தவறி நடந்து கொண்டு, அதை மறைத்துக் கொண்டு வாழ்பவர்கள் பலரும் இங்கிருக்கிறார்கள்; பத்திரிகைகளில் அன்றாடம் பல் வேறு செய்திகளில் இவர்கள் பவனி வருகின்றார்கள்.

நிஜமான வாழ்க்கையில் பலர் இப்படித்தான் ஒழுக்கம் கெட்ட வாழ்வில் உள்ளத்தில் அழுக்கும்  உடலில் கொழுப்பும் நிறைத்து பாவத்தைப் பெருக்கி கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சமூகத்தின் புழுக்களாக நெளிகின்றவர்கள்

கமலாதாஸ் அவர்களைப்பற்றிச் சிந்திக்கின்றபோது இங்குள்ள எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லத்தான் வேண்டும்.

இன்றைய எழுத்தாளர்கள் பொய்களைப் புனைந்துரைப்பதில் வெட்கப்படுவதில்லை;உண்மைகளை மறைப்பதிலோ அஞ்சுவதில்லை.

பணம், பவிசு,வெற்றுப் புகழ்,வெட்கம் கெட்ட தனிப்பட்ட வாழ்க்கை,தனக்கு ஒரு நியாயம்;ஊருக்கு ஒரு நியாயம் என்று வகுத்துக் கொண்டு வாழும் போலித்தனம்,  ஒழுக்கம் கெட்ட நடத்தை இவற்றில் வாழ்வை அமைத்துக் கொண்டு ’சமூக நோக்கர்கள்’  என்று இவ்வுலகம் புகழ வேண்டும்’ எனப் பெரிதும் விரும்புகின்றார்கள்.

சமூகத்தின் கேடுகளைப்பற்றி எல்லாம் விதம் விதமாக எழுதத் தெரிந்த இவர்கள் சமூகத்தின் அத்தனை கேடுகளையும் கொண்டவர்களாகப் போலி வாழ்க்கை வாழ்கிறவர்கள்.

உண்மைகளை மறைத்துக் கொள்வதில் தைரியமும் பொய்யைப் 
புனைந்துரைத்துப் போலி மரியாதைத் தேடிக் கொள்வதில் வெட்கமற்றும்
எழுதுலகில் பவனி  வரும்  இவர்களை  இந்தச் சமூகம் ஆராய்வதில்லை. மாறாக அவர்களுடைய  எழுத்துக்களைப் புகழ்ந்து போற்றிக் கரவொலி செய்கின்றது.
.
கமலாதாஸ் அவர்கள் இத்தகையவர்களின் முகத்திரையைக் கிழித்து எறிந்தவராக, உண்மைகளை மறைக்காது ஊருக்குத் தன்னைப் போலி எழுத்தாளராகக் காட்டிக் கொண்டு புகழ் தேடாது, எப்பொழுதும்
தன் எழுத்துக்களில்  அறிவார்ந்த உண்மைகளையே அற்புதமாக எழுதி வந்திருக்கின்றார்.

கமலாதாஸ் நேர்த்தியான அழகு படைத்தவர்;அவரை விட அவர் எழுத்துக்கள் அழகானவை.

அவரது அழகுக்கு அடிமையானவர்களின் கதையையும் தன் சதையையும் வெகு அழகாக வெட்கப்படாமல் சொல்லி இருக்கிறார்.

அதனால் லட்சக் கணக்கானோர் அறிஞர்களும் கலைஞர்களும் இளைஞர்களும்  அவரது கதையை-சுய சரிதையைப் படித்து வியந்தனர்.

பெண்மையின் வடிவமாக அவரைக் காண்பதைவிட உண்மையின் உரைகல்என்றே என்றே அவரைக் கண்டு மதித்தனர்..

Kamala Surayya
உலகம் எல்லாம் வியந்து பேசப்பட்ட எழுத்துக்களில் 75 வயது வரை வாழ்ந்து எவருடைய நிழலிலும் நில்லாமல், எதை நினைக்கின்றாரோ அதை செயல்படுத்தும் துணிச்சல் கொண்ட பெண்மணி என்பதற்குச் சான்று:கடைசிக் காலத்தில் தன் பெயரைக்கமலா சுரையா’ என்று மாற்றிக்  கொண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவிக் கொண்டது

நீங்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறி விட்டதால் மதிப்பிழந்து போய் விட்டீர்கள்என்று சிலர் எழுதுகின்றார்களேஎன்று நண்பர் ஒருவர் கேட்டதற்குக் கமலாதாஸ் சொன்னார்:

நான் வாழ்ந்த வாழ்க்கையின் உள்ளார்ந்த உண்மைகளை மறைக்காமல் எழுதி விட்டேன்; எனது எழுத்தையும் அதன் உண்மைகளையும் நேசிப்போர் என்னை நேசிக்கட்டும்; உண்மைகளைச் சொல்வதில் வெறுப்பவர்களைக் கண்டு நான் ஏன் வருத்தப்பட வேண்டும்?’’

உண்மையில் அவர் மரணம் அடைந்த பிறகு அவரது உடலை அவரது புதல்வர்களும் சில நண்பர்களும் புனேயிலிருந்து  கொச்சிக்கும்
கொச்சியிலிருந்து  கமலாதாஸ் பிறந்த திருவனந்தபுரத்துக்கும் அடக்கம் செய்ய விமானம் மூலம் எடுத்துச் சென்றனர்.

அப்போது, இந்த மூன்று இடங்களிலும் (புனே,கொச்சி,திருவனந்தபுரம்) ஆயிரக்கணக்கான மக்கள் கூடி கமலாதாஸ்  உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

ஒரு எழுத்தாளருக்கு, தனது மரணத்தின் போது  பல்லாயிரக் கணக்கானவர்களைக்  கண்ணீர் மல்க வைக்கின்ற தகுதி இருக்கிறது  என்றால் அது அவர் அழகான எழுத்தாளர்  என்பதால் அல்ல;அவர்தம் எழுத்துக்களில் உரைத்த உண்மையும் நேர்மையும் துணிச்சலும் நிறைந்த அழகுதான்.

கமலாதாஸ் உண்மையின் துணிச்சலை வெகு அழகாக வடித்துக் காட்டியவர்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
3.4.2015