Wednesday, April 8, 2015

இந்தச் சிவப்பு விளக்குச் சிங்காரிகளை....

அறிவார்ந்த நண்பர்களே,

பலர் தங்கள் காதல் ரசனையைக் காட்டிக் கொள்வதற்காக காதல் ஏக்கம் அதன் வர்ணனைகள் பற்றிய சினிமாப் பாட்டுக்களை  எடுத்து கூறி, சுகித்தும் அதன் சுவையில் மனம் தகித்தும் காம ரசத்தைக் கொட்டிக்  காதலை வளர்க்கின்ற கடை கெட்ட வேலையை சமூக வலைத்தளங்கள் வழங்கி இருக்கும் கட்டற்ற  கெட்டசுதந்திரத்தைப்  பதிவிட்டு மகிழ்கின்றார்கள்.

மகிழட்டும்.

ஆனால்,அதன் எதிர் விளைவை அதாவது படிக்கின்றவர்களின் எண்ணப்பிரதிபலிப்பாக எதை,என்ன மனோநிலையில் பார்க்க விரும்புகின்றார்கள்? என்பதை அவர்களாக ஆழ்ந்து சிந்தித்து விளக்கம் கூறட்டும்,இங்கே.

இப்படிப்பட்ட  பதிவுகளை  45.50 வயதுகளைக் கடந்து நிற்கும்   சீமான்களும் சீமாட்டிகளும் இடுகிறார்கள் என்பதுதான் கவலைப்படத்தக்க விஷயமாக இருக்கிறது.

‘அய்யாமாரே அம்மாமாரே’  என்றழைக்கத் தக்க இவர்கள் இன்னமும் தங்கள் மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டு,தங்கள் வாரிசுகள் எதைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதைத் தெரிவிக்கின்ற மன வளம் இல்லாமல் கெட்டுப் போய், எதை யெல்லாம் அவர்கள் தெரிந்து கொண்டு கெட்டுப் போகக் கூடாதோ அதையெல்லாம் வெட்கப்படாமல் பொதுவில் எழுதி ஆனந்தம் நடனம் ஆடிக் களிகூர்கின்றார்கள்.

குறிப்பாகப் பெண்கள் பலரும் இப்படி எழுதி,விதம்விதமாகக் காதல் ரசனையையும் காம ரசத்தையும் கதைக்க  விடலைகள் பலர் அதற்கு ‘உச்சுக்’கொட்டக் கொட்ட உற்காசம்  கொண்டு விடுகிறார்கள்.

‘ஆகா, நாம் எழுதும் விஷயங்களுக்கு இவ்வளவு உற்சாகமான பதிலூட்டங்களா? ‘என்று தன்னைத்தானேஅர்கின்றார்கள்.,முகம் பார்த்துக் கொண்டு  ‘செல்ஃபி’ போல் தங்கள் குணாதிசயத்தைக் காட்டும் குணக்கேடு தரும் பதிவுகளைத் தொடர்கின்றார்கள்.

நண்பர்களே,

காதல் உணர்வுகளும் அதன் வித்தாகிய காமமும் ஒவ்வொரு மனிர்தர்க்கும் பிறப்பின் ஊடே இரத்தத்தில் ஊறி விளைந்து வருவதுதான். உரிய பருவத்தில் அது பிற உணர்ச்சிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு, வாலிப வயதினரை  அதிகம் ஈர்த்து வழி கடத்தும் வல்லமை கொண்டது.

காரணம்,இளமை என்பது கட்டுக் கடங்காக் குதிரைபோல் ஆகி அது அங்கும் இங்கும்  தாவிக் குதிக்கத் தயாராகி விடுவதுதான்.

அந்த நிலையில் அதற்குச் சரியான கடிவாளம் போட்டு ,கட்டுப்பாடற்ற அந்தக் குதிரையைப் பிடித்து அடக்கமுடியாமல் போகும்போதுதான் அதன் வசீகரத்தில் பலர் வீழ்ந்து படுகாயமுற்று நேரிய வாழ்க்கையின் நிஜத்தை இழந்து போகிறார்கள்.

காதலின் உணர்வுகளும் காமத்தின் விளைவுகளும் கொஞ்சம் ஏமாந்தால் என்ன நிலைக்குக் கொண்டு போகும் என்பதை, அதில்  வீழ்ந்து,விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் 45,50  வயதுகளைக் கடந்தவர்களுக்குத்தானே தெரியும்?

பெற்றோர் என்ற தகுதியில் இருக்கும் அவர்கள்,தங்கள் பிள்ளைகளான, அல்லது தங்கள் பிள்ளைகளைப் போன்ற ‘டீன்’ ஏஜ்’ (இளம் வயதுக்) கன்னியருக்கும் காளையருக்கும் கட்டுப்பாடற்ற காதலின் பின் விளைவுகளை இடித்துச் சொல்லும்  தகுதியும் இவர்களுக்குத் தானே இருக்கிறது?

மாறாக, இளமையின் துள்ளலையும் காதலின் ஈர்ப்பையும் அதன் உள்ளார்ந்த மதனச் சுவையையும் இந்த டீன் ஏஜ்களுக்கு இலவசமாக  வாரி வழங்கும் பிரதாபத்தில் இந்த நாலு கழுதை வயசை எட்டி விட்ட முதிர்வயது அம்மாக்களும்  அப்பாக்களும் துடிப்பதும் அந்தத் துடிப்பின் விளைவாக தங்கள் எழுத்தின் மேன்மையை  நிரூபிக்க இங்கே வரிசையில் வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதும் நமக்குக் கடும் சினத்தைக் கூட்டி வருகிறது.

சொல்லப்போனால், தன்பிள்ளைகள் தங்களின் குடும்பத்துக்குக் கட்டுப்பட்டு தங்களை மதித்து குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்திக்  கொள்ள வேண்டும் என்பதைத்தான் 98 சதவீதப்பெற்றோர் விரும்புவார்கள்; அதற்காகவே பண்பாட்டையும் உயர் மரபுகளையும் பேணுகின்ற சிந்தனைகளில் கவனம் செலுத்துவார்கள்.அதுதானே சராசரி இந்தியக் குடும்பங்களில் நியாயமான போக்கு?

ஆனால் இதற்கு விதி விலக்காக அத்தகைய பெற்றோர் நிலையிலிருக்கும் பெண்களும் ஆடவரும்  பக்கத்து வீட்டுப் பிள்ளைகளின் காம வேட்கைக்குச் சிட்டுக் குருவி லேகியம் விற்பவர்களாக இங்கே முகநூலில் கடை விரிக்கின்றார்கள்.

காதலையும் காமத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் புத்தி பேதலித்துப் போய் அரைவேக்காட்டுத்தனத்தில் பிதற்றுகின்ற இவர்களின் பதிவுகள் சினிமாத்தனமான சில்லறைக் காதலுக்கே படிப்பவர்களைக் கனவு  காண வைக்கும் சமூகக் கேட்டின் சாட்சியாகத்  திகழ்கின்றது.

காதலை யாருக்கும் யாரும் கற்றுத் தரத் தேவை இல்லை;
படிப்பறிவு இல்லா மிருகங்கள் கூட ஆண்-பெண்  இனச் சேர்க்கையில் வாழும்போதும் போது இந்தப் படித்த மிருகங்கள் இங்கே காதலை வளர்க்கப் பாடம் நடத்தும் அவல நிலையை நாம் கண்டிக்காமல்  இருக்க முடியாது.

ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான  ஜீவன்கள் எல்லாம் காமத்தின் ஈர்ப்பிலும் வரைமுறைக்குட்பட்ட வாழ்க்கையையே காண்கின்றன.

ஆறறிவிருந்தும் ஓரறிவில் கூட உருப்படியாக  உயராமல், வீணாய்ப் போன காமத்தில் உழன்றும் அதிலேயே பொழுது போக்கிக் கொள்ளும்  தேரா மானுடத்துக்கு வழிப் படுத்தும் வக்கிரப்புத்தியாளர்களாக இந்த முக நூலில்  உலாவரும்  பெண்களும் ஆண்களும்   சமூகக் கேடர்கள் என்பதை புத்தியுள்ளோர் புரிந்து கொள்ளட்டும்.

இவர்களின் எழுத்துக்கள் இவர்கள் வாழும் கேடு கெட்ட வாழ்க்கையின் முகவரிகள்கள் என்பதை அடையாளம் கொண்டு அவர்களின் சுவரில் காறி உமிழ வேண்டாமா?.

எழுதுவதற்கும் எடுத்துச் சொல்வதற்கும் இனிய தமிழ் மொழியின் இணையற்ற படைப்பிலக்கியங்கள் எண்ணற்றுக் கிடைக்கின்றன. அறமும் நீதியும் சமூகத்தின் மாண்பும் வினைப்பயனும் வியப்பான  சிந்தித்து அதன் விரிவுரைகளை  எழுதும் திறன் இன்றி, சமூக ஒழுக்கத்தின் ஆதாரத்தையே   சீர்குலைய  வைக்கும் சிறுமதியாளர்கள்,கனியிருப்பக் காய் கவர்ந்து கசக்கும் கசடர்கள்.

அதிலும் புதுமைப்பெண்,புரட்சிப் பெண் என்றெல்லாம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக கண்டதை எழுதிக் காமச் சுவையில் தாங்கள் திளைப்பதைக் காட்டிக் கொள்வதானது, சிவப்பு விளக்குப் பகுதிகளில் வசித்துக் கொண்டு அவ்வழியே வருவோர் போவோரையெல்லாம் வசீகரிக்க எப்படியெல்லாம் தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்களோ அப்படித்  தங்கள் எழுத்தின் மூலம் தங்களைக் காட்டிக் கொள்ளும் விபச்சாரப் பதிவர்கள் என்றுதான் பார்க்க  முடிகிறது.

முகநூல் முதலான சமூக வலைத்தளங்களில்  கண்ணியத்தையும் களங்கமற்ற மரபு வழிப் பண்பாட்டையும் அரசியல் விழிப்புணர்ச்சிகளைத் தூண்டும் எழுத்துக்களைப் பரப்பாமல்,  வேறு எதையோ பரப்பபிக் காட்டும் வேசைத்தனத்துக்கு எதிராக முகநூல் நண்பர்கள் எழாமல் போனால் அவர்களுடைய சந்ததியினர்  இந்த உலக சமூகத்தின் முன்பு, எழ முடியாத சவலைகளாகவே ஆகிப் போவார்கள்.

இப்போது சொல்லுங்கள்:

இந்த  இந்தச் சிங்காரச் சிறுக்கிகளுக்கும் சில்லறைத்தனமான சினிமாத்தனப் பதிவர்களுக்கும் நீங்கள்  சீட்டி அடிக்கின்றவர்களா?அல்லது செருப்பைக் காட்டுகின்றவர்களா?

உங்கள்
அகநூலைப் படிக்க விரும்பும்-
கிருஷ்ணன்பாலா
8.4.2015

Post a Comment