Sunday, August 17, 2014

கைலாஷ் நாதரின் கைலசாத் தோற்றம்!

அன்பிற்குரிய நண்பர்களே,
வணக்கம்.
உலக அதிசயங்களில்  ஒப்பற்ற தெய்வீகத் திருக்காட்சியாக, உலகம் யாவையும் தாமுளவாக்கி,இந்தப்பிரபஞ்சம் முழுதும் தன்னை வியாபித்துக் கொண்டு ஆனந்த தரிசனம் தந்து கொண்டிருக்கும் திருப்பதியாகத் திகழும் இமாலயத்தின் கைலாசத்தைக் கண்டு இன்புறும் பேறு நம்முள் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கும்? கிடைக்கும்?

நமது ரிஷிகளும் முனிகளும் மாமன்னர்களும்  தரிசித்துப் பேறு பெற்ற அந்தக் கைலாசத்தைக் காண நமக்குப் பணம் இருந்தால் மட்டும் போதாது;பாக்கியமும் இருக்க வேண்டும்.

ஈசனின் கருணையும் நாம் செய்த புண்ணியங்களின் பலனும் கை கூடி  இருந்தால் ஒழிய அவன் குடி கொண்டிருக்கும் திருவிடத்தைத் தேடிச் சென்று தெய்வீகக் காட்சியாகக் காணும் பேறு நமக்குக் கிடைக்கவே கிடைக்காது.

அப்படியெல்லாம் இல்லாமல் இந்தப் புகைப்படங்களின் மூலம் அந்தக் கைலாஷ்பதி குடி கொண்டிருக்கும் அருள் தோற்றத்தை கூகுள் சாட்டிலைட் சானல் மூலம் Vidya Subramaniam  என்கிற திருமதி உஷா (Facebook நண்பர்அவர்கள் தரிசித்திருக்கிறார்.

தான் பெற்ற இன்பத்தை இவ்வுலகெல்லாம் பெற்று நெகிழ வேண்டும் என்பதற்காக கூகுள் மூலம் தான் மட்டுமே பெற்ற கைலாஷ் நாதரின் தோற்றத்தை புகைப்படமாக முகநூலில் ஆன்மீக விருந்து படைத்துள்ளார்.

நம்புவோர் நம்புங்கள்.;

மயன் என்னும் தேவசிற்பி செதுக்கிய முகம்போல் கைலாச முகடுகளுக்கு நடுவே ஓர் முகடை சிவபெருமானின் திருமுகமாக வடித்ததுபோல் தோன்றும் கைலாஷ் பதியின் காட்சி, நம்புவோரை மெய்சிலிர்க்க வைக்கும்.

அந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டது.

உங்களுக்கு?

பார்த்து விட்டு எனக்கு எழுதுங்கள். உங்கள் வார்த்தைகளை அரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் இருக்கிறது.உங்கள் கருத்துக்களை அவருக்கு முகநூல் மூலமே  அனுப்புவுவேன்.

படங்களுடன் திருமதி உஷா சுப்பிரமணீயம் அவர்கள் ( முகநூலில்: Vidya Subramaniam)  எழுதிய குறிப்பு இது:

// Google Earth ல் தினமுமே ஒரு முறை கயிலாயத்தை சுற்றி சுற்றி வந்து பார்த்து சிலிர்ப்பது என் வழக்கம். இன்று அவ்வாறு செய்த போது இதுவரை காணாத அதிசயம் ஒன்று திடுமென என் முன் தெரிந்தது. கயிலையின் மேற்கு முகத்தில் சிவனின் முகம் மிக அழகாகத் தெரிந்தது. புருவம், கண்கள் , புன்னகைக்கும் அதரங்கள் ஜாடாமுடி, தோள்கள் என கம்பீரமான சிவனின் தோற்றம் தெரிந்ததும் அதிர்ந்து போனேன் ஒரு வினாடி. என் தேகம் சிலிர்த்தது. இக்காட்சி இதுவரை நான் காணாதது. மிக வித்தியாசமாகத் தெரிந்த இந்த அபூர்வ கட்சியை நீங்களும் காணவேண்டும்  என விரும்புகிறேன்.

யாம் பெற்ற இன்பம் பெறு இவ்வையகம்.

-Vidya Subramaniam @ Facebook on 16.8.2014 //

அன்புடன்,
கிருஷ்ணன்பாலா                                                             









  

Thursday, August 14, 2014

தேசீய நீதி!



அறிவார்ந்த நண்பர்களே,

"தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்! ”

என்று நம் நாட்டின் தேசியக் கொடியைப்ற்றி உணர்ச்சி பொங்கிட வெகுஅற்புதமாகப் பாடினார் மகாகவி பாரதி.

இந்தியா விடுதலை பெறும்  முன்னரே பாடிப் பரவசப்பட்டவன் அந்தப் பாட்டன்.

அவன் பாடிப் புகழ்ந்த இந்தக் கொடிக்கு ஜாதி,இனம்,மதம் மற்றும் மொழி என்ற வர்ண பேதம் இல்லை, ஆரஞ்சு,வெள்ளை,பச்சை என்ற மூன்று வர்ணங்களைத் தவிர.

இந்த மூன்று வர்ணங்களைக் கூட, எனது நண்பர்,ஆடிட்டர் திரு விஜயக்குமார் அவர்கள் வியக்கத்தகும் ஒப்புவமையாகக் கூறியதை இங்கே வாசக நண்பர்களுக்கும் பகிர்வது  மிகப் பொருத்தமாக இருக்கும்:

//இக்கொடியின் மூன்று வர்ணங்களில் ஆரஞ்ச் நிறத்தை காவிக் கொடியைப் போற்றும் இந்து மக்களின் எண்ணமாகவும் நடுவில் உள்ள  வெள்ளை நிறத்தைத் தூய்மையான கிறிஸ்துவர்களின் சின்னமாகவும் பச்சை நிறத்தை இஸ்லாம் மக்களின் இதயம் கவர்ந்த  எண்ணமாகவும் கருத  வேண்டும்//.

அடடா....
நமது தேசியக் கொடியின் மூன்று வர்ணங்களும்  நமது தேசத்தின் முப்பெரும் மதங்களின் தோற்றத்தைத்தான் நமக்கு உரைக்கின்றன என்பதை அறிவுப்பூர்வமாக உணர்ந்து கொள்வதுதான் சரியான தேசப்பற்றின் சான்று என்பதைப் பெருமையாக எண்ணுகிறேன்.

நண்பர்களே,

நித்தமும் நினைத்துப் பணிந்து,புகழ்ந்து போற்றப்பட வேண்டியது இந்த மூவர்ணக் கொடி.

என்றாலும் ’குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒரு  முறையாவது இந்தக் கொடியின் பெருமையை உணர்ந்து  இந்திய தேசியத்தின் அருமையைக் கட்டிக் காக்கும் குடிப் பெருமை பெற்றவர்களாக இந்தியக் குடிமக்கள் இருக்க வேண்டும்’ என்பதற்குத்தான் இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15 ஆம் நாளை கொண்டாடுகின்றோம்.

இவ்வழக்கம் அரசியல் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட  நெறிமுறை.

இந்த மூவர்ணக் கொடியின் மகத்தான சிறப்புக்களை,அதன் பின்னணியில் இருக்கும் நம் முன்னோர் செய்த அளப்பரிய தியாகங்களின் உன்னத மதிப்பை  நற்பண்புடையோரும் நற்குடிப்பிறந்தோரும் உணர்ந்து போற்றுவார்கள்.

எப்படி வேண்டுமானாலும் இந்தியத் தேசியக் கொடியைப் பற்றி  இழிவுபடுத்தும் வகையில் பேசுவது  அறிவார்ந்த மக்களின் இயல்பாகாது.

ஆகவே, இந்திய விடுதலையின் அறுபத்தெட்டாவது ஆண்டில் அடிவைக்கும் இத்தினத்தில் அதன் மகத்தான உணர்வுகளைப் பரப்புவதையே தாய் நாட்டுக்கு நாம் தரும் தனிப்பெரும் மரியாதை என்று உணர வேண்டும்.

ஒரு நாட்டின் தேசியக் கொடியை எரிப்பதும் அவமானப்படுத்துவதும் வீரமல்ல; விடுதலைக் கோஷமும் அல்ல. அது, மதி கெட்டவர்களின் மடமைக்கும் மூர்க்கக் குணத்துக்குமான அடையாளம்.

மூர்க்கக் குணம் உள்ள மிருகங்கள் தண்டிக்கப்படுவதே பண்பட்ட சமூகத்தை ஊக்குவிக்கும் தேசீய நீதி..

வாழ்க,இந்திய சுதந்திரம்;வளர்க அதன் தேசீயப் பண்பாடு!

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.8.2014