Friday, April 27, 2012

மதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்!


அறிவார்ந்த நண்பர்களே,

தமிழ்நாட்டின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று மதுரை ஆதீனம். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டு சைவமும் தமிழும் தழைத்தோங்கி நிற்க ஆலென வளர்ந்து அருகென வேரூன்றி தமிழரின் பண்பாட்டுச் சின்னமாய்த் திகழ்ந்து வந்த இந்த ஆதீனத்தின் பாரம்பரியச் சிறப்பைப் பாழ்படுத்தி, அதைத் தன் இஷ்டம்போல் அரசியல் கூத்து நடத்தும் அரங்கமாய் மாற்றியிருக்கிறார், இப்போதுள்ள ஆதீன கர்த்தர்.

இவர் ஆதீனமாய்ப் பொறுப்பேற்ற நாள் முதல் கத்தியும் துப்பாக்கியுமாய் அலைந்த துர்ப்பாக்கியவானாகாத்தான் தெரிந்தாரே தவிர, தேவாரம் காத்த ஆதீனமாய் அவதானம் செய்யவே இல்லை.

மதுரை ஆதீனத்துக்கும் பிடாதிப் பீடைத் தானத்துக்கும் என்ன தொடர்பு?

தமிழ்த் தொண்டும் தெய்வத்தொண்டும் புரிந்து காலம் காலமாகப் பாரம்பரியம் காத்து வந்த மதுரை ஆதீனம் எங்கே?

அரைகுறை ஆடைகளுடன் - சில சமயம் அதுவுமே இல்லாமல் அரம்பையர், ஊர்வசிகள் தொண்டு புரிய காமக் களிநடம் புரிந்த பிடாதிப் பித்தாலாட்ட பீடம் எங்கே?

கோவணம் கட்டிய காவிக்கும் கோவணமே கட்டாத பாவிக்கும் கூறு போட்டுப் பொருள் சொல்லத் தெரிந்தவர்கள் நாம் என்பது பிடாதி நித்திக்கும் மதுரை நெத்திக்கும் புரிய வேண்டும்.

உமையவளிடம் ஞானப்பால் அருந்தி தெய்வத் திருப் பாக்களை நாம் அருந்தி உருகப் பொழிந்த திருஞான சம்பந்தர் எங்கே? அவர் பாதம் பட்ட இடத்தில் தலையால் நடக்க வேண்டிய இந்த அஞ்ஞான சம்பந்தர் எங்கே?

இவர் ஆதீன கர்த்தராக வந்த பாதை யாதென இவரது மனச் சான்றுக்குத் தெரிய வேண்டும்?

மனச் சான்றே இல்லாத பலவீன கர்த்தராக இந்த 292 ஆவது 
ஆதீனம்; எல்லாப் பலவீனங்களின் மொத்த உருவமாக உலாவந்து கொண்டிருக்கும் ஒருவனை, அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டு,சிறைக் கம்பிகளை எண்ணி விட்டு கொஞ்சம் கூட வெட்கமின்றி, தனக்கிருக்கின்ற பற்களை எல்லாம் வெளியே தெரியக் காட்டிக் கொண்டு அதற்குப் ’பரம்ஹம்ச நிலை’ என்று விளக்கம் வேறு சொல்லிக் கொண்டு ஜாமீனில் திரியும் கபடச் சாமியாரைத் தனது அடுத்த வாரிசென- மதுரை ஆதீனத்தின் 293 ஆவது பட்டம் என அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

நமது இந்து தர்மத்தை வேறு எந்த மதத்தவரும் அழிக்க வேண்டியதில்லை. கோடாரிக் காம்பாய்க் கொலுவீற்றிருக்கும் இத்தகைய ஆதி-ஈனர்களே போதும். அடுத்தவர் கேலி பேசவும் அந்நியர் கூலி பேசவும் நாம் தலை குனிந்து தரம் இழந்து போக வேண்டியதுதான்.

நித்தியானந்தாவுக்கு துறவி எனச் சொல்லிக் கொள்ளக் கடுகளவும் யோக்கியதை இல்லை. யோகத்தை விற்றுக் காசு பண்ணி போகத்தை அனுபவிக்கும் விவஸ்தை கெட்ட காவி வியாபாரி; கபடச் சந்நியாசி நித்தியானந்தா,

அந்த நபருக்கு 293 ஆவது மதுரை ஆதீனம் எனும் பட்டம்; இப்போதைய 292 ஆவது மதுரை ஆதீனம் அறிவித்துள்ளது.

யாரும் எதிர்பாராத மதுரை ஆதீனத்தின் இந்த ஈனச் செயல் கண்டு உலகத் தமிழர்கள் எல்லோரும் தலை கவிழ்ந்து போய் விட்டார்கள்.

மானமுள்ள தமிழரும் மரபு போற்றும் யாவரும் இந்த
ஈனம்கெட்ட நடத்தையை எதிர்க்க வேண்டும் அல்லவா?

இந்த அக்கிரமத்தை அனைவரும் ஒரே குரலில் கண்டிக்க வேண்டும்;
சான்றோரும் ஆன்றோரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்; 
தமிழ் நாட்டின் பிற ஆதீன கர்த்தர்களும் மடாதிபதிகளும் வெளிப்படையாக கண்டித்து மதுரை ஆதீனத்தைப் புறக்கணிக்க வேண்டும்.அவர்கள் ஒருமித்துக் கூடிக் கலந்து, தகுதி மிக்க தமிழ்ச் சான்றோன் ஒருவரை மதுரை ஆதீனகர்த்தராக அறிவிக்க வேண்டும்.
அதற்கேற்ப தமிழக அரசும் சட்டத்தையும் மரபையும் காக்க நடவடிக்கை எடுத்து நீதி மன்றத்தின் வழிகாட்டுதலைப் பெற்று, மதுரை ஆதீனத்தைத் தகுதி நீக்கம் செய்யவும் இந்து அறநிலையத் துறை மூலம் உரிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் தயங்கக்கூடாது.

இந்து அறநிலைத் துறை என்பது இந்து தர்மத்தைக் காக்கவும்
நிலை நிறுத்தவும்தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.

இப்படியொரு அக்கிரமம்-அநியாயம் நடக்க அரசு அனுமதித்தால்,
இனி இங்கே இந்து தர்மம் நிலைக்காது நண்பர்களே.

இந்து தர்மம் இல்லையேல் இங்கே நாடு நிலைக்காது; நம் நாட்டின் சமத்துவ நெறியும் நிலைக்காது.

பேய்கள் அரசாளும்;பிணம் தின்னும் சாத்திரங்கள்.

காறி உமிழ்வீர் மதுரை ஆதீனத்தின் மயான நடத்தைகளை.
சீறி எழுவீர்; அதன் முந்தைய சிறப்புக்களை மீட்க!

இவண்,
கிருஷ்ணன்பாலா 
28.4.2012
Post a Comment