Tuesday, July 30, 2013

யார் வெகுளி? (நினைவுக் குறிப்புக்கள்:4)
1971களில் எனது வாழ்க்கைப் பகுதியில் தொடர்புடைய நினைவு ஒன்று இப்போது சுழல்கின்றது.

சரியான பட்டிக்காட்டுக் கிராமத்திலிருந்து பள்ளிப்படிப்பை முடித்தபின் ஒரு வருடம் கழித்து கிராமத்தில் அடிமை வேலை செய்ய இஷ்டம் இன்றி, மஞ்சள் பையைத் தூக்கிக் கொண்டு சென்னைக்கு ரயில் ஏறி வந்திருந்தேன்.

எனது லட்சியம்: “நமக்கிருக்கும் அறிவுத் தாகத்துக்கு ஏற்ற வேலையில் சேர்ந்து விட வேண்டும்” என்பதுதான்.

அதற்கு இரண்டே இரண்டு துறைகள்தான் அப்போது எனக்கு ஏற்றதாக இருந்தன.

ஒன்று சினிமா; மற்றொன்று பத்திரிகை.

அப்போது,இந்தச் சினிமா மோகம் கொஞ்ச காலமாக  என்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது.

’எப்படியாவது சினிமாத் துறையில் நுழைந்து எனது எழுத்துக்கள் பிரபலமாகி விட வேண்டும்’ என்ற லட்சியப்  பயணத்தில் மனம் போனபோக்கில் எனது கால்கள் நடந்து அலைந்த நேரம் அது.

அப்போது எனது கனவுலக நாயகர்களாக இருந்தோர் கவியரசு கண்ணதாசன், இயக்குநர் கே.பாலச்சந்தர், இயக்குநர் கோபாலகிருஷ்ணன், இயக்குநர்  ஸ்ரீதர் மற்றும் கதாசிரியர் மகேந்திரன் இவர்கள்தான்.

எனக்குப் பரிந்துரைக்க சினிமாத்துறையில் அப்போது யாருமே அறிமுகம் இல்லை. சென்னையில் அறிமுகம் ஆகி இருந்த நண்பர்கள் எல்லோருமே சினிமாவை ரசிப்பவர்களே தவிர,சினிமாக்காரர்களாக இல்லை.

அப்போதெல்லாம் எனது நோட்டு புத்தகத்தில் சினிமாவைச் சிந்தித்துக் கொண்டு ஐந்தாறு கதைகளை எழுதி வைத்துக் கொண்டு. ‘பாலச்சந்தரைப் பார்த்தால் எந்தக் கதையைச் சொல்வது?  கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பார்த்தால் எந்தக் கதை? ஸ்ரீதரைப் பார்த்தால் எந்தக் கதை? என்று எனக்குள்ளேயே ஒரு ‘ஜட்ஜ்மென்ட்டை ஏற்படுத்திக் கொண்டு கற்பகம் ஸ்டுடியோ, ஏ.வி,எம் ஸ்டுடியோ,விஜயா ஸ்டுடியோ,பரணி ஸ்டுடியோ என்று அலைவது எனது லைஃப் பிரச்சினையாக இருந்தது.

எனது கதாச் சிந்தனையில் வார்க்கப்பட்ட இரண்டு கதைகளைப் பற்றிச் சொன்னால்’கதை விடுகிறான்’ என்றுதான் அநேகமாகப் பலரும் நினைப்பார்கள்.

(அப்படி எழுதப்பட்டு,எனக்குச் சினிமாக் கனவுகளைத் தூண்டிய அந்தக் கதைகளின் Manuscriptகள் இன்னமும் எனது கைவசம் மக்கிய நிலையில் உள்ளன)

நான்  அவற்றைப் பற்றி, இதுவரை மீள் நினைவு செய்யாதிருந்து விட்டேன்.

ஆனால் இப்போது இந்தச் சந்தர்ப்பத்தில் அவற்றில் ஒரு முக்கிய கதைக் கரு  பற்றிச் சொல்ல வேண்டிய வாய்ப்பும் தூண்டலும் இப்போது ஏற்பட்டுள்ளது.

சினிமாத் துறையில் வாய்ப்புத் தேடி அலையும் ‘அப்ரண்டீஸ்’ ஆர்வலர்கள் பிரபலமான சினிமா இயக்குநர்களையோ, சினிமா சம்பந்தப்பட்ட கலைஞர்களையோ,  ஏன், ஒரு அஸிஸ்டண்ட கேமிரமேனையோ சந்தித்தால்கூட  தாங்கள் வடிவமைத்திருக்கும் புதுமைக் கதை கருவை மனந் திறந்து ஒப்பிப்பதும் அதில் கனவுகளை வளர்த்துக் கொள்வதும் சகஜமானதுதான்.

’அதைவிட அவர்கள் சொல்லும் கதைக் கருக்களை அப்படியே காப்பி அடித்துக் கொண்டு ஒரு வருடத்துக்குள் வெள்ளித்திரையில் விசாலமான திரைச் சித்திரமாக  உலாவிட்டு லட்சங்களைக் குவித்து விடும் சாமர்த்தியம் பெரிய பெரிய இயக்குநர்களுக்கும் கூட இருக்கிறது’ என்பதற்கு, எனது சினிமா ஆர்வக் கோளாற்றில் நிகழ்ந்த இச் சம்பவமும் உதாரணம்.

இந்த உதாரணம் சாதாரணம் ஆனதல்ல; அப்போது எனக்கு இரண்டு மூன்று ஆண்டுகளாக சதா ரணமாக- என்னுள் ஏமாற்றம் மிகுந்த வலியைத் தந்து கொண்டிருந்தது என்று சொன்னால் மிகையல்ல..

அந்தக் கதை.....

செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் கணவன் -  மனைவியாக வாழ்ந்த  இருவரின் வாழ்க்கையில் விரிசல் ஏற்படுகிறது.

அன்பான ,அழகான மனைவிதான்; ’குழந்தை இல்லை’ என்ற குறை; ஆனால் அந்தத் திருமதியின் தங்கையே ‘ஒரு குழந்தை போல்’பாவிக்கப்பட்டு செல்லப் பெண்ணாக  அந்த வீட்டில் உலாவந்து கொண்டிருக்கிறாள்;பருவம் எய்தியும் பக்குவ அறிவு இல்லாத அந்த மைத்துணி மீது முதலில் பாசம் கொண்ட அவள் அத்தான், அவளுடைய அங்க எழுச்சியோடு அறியாத்தனத்தில்,ஒரு குழந்தைபோல்   தன்னிடம்  நெருக்கமாகப் பேசுவதிலும் உணர்ச்சிகளைத் தூண்டியதிலும் பழகிய விதத்திலும் கள்ள உணர்வுகளை வளர்த்துக் கொண்டான்.

ஒரு சமயம் மனைவி வெளியூரில் இருக்க வேண்டிய காலகட்டத்தில் மைத்துனி மீது மோகமும் தாகமும்  கொண்ட அத்தான் அவளைக் கட்டிலில் கிடத்தி அனுபவித்து விடுகிறான்.

விளைவு: அவள் கர்ப்பிணி ஆகிறாள்.

அவள் கர்ப்பிணி ஆன அதிர்ச்சியில் அவளது அக்காள் துடிதுடித்துப் போகிறாள்.

உலகம் அறியாத,தனது தங்கையின் நிலை பற்றி ஒரு வெகுளியாகத் தன் கணவனிடமே சொல்லிக் கதறுகிறாள்

’என் தங்கை இப்படி ஒரு வெகுளியாக இருந்து விட்டாளே’ எப்படியாவது அவள் கர்ப்பத்துக்குக் காரணமானவனைக் கண்டறிந்து அவனுக்கே திருமணம் செய்து வைக்க வேண்டும்’என்று மன்றாடுகிறாள்.

அக்காவின் அன்பு மணவாழ்வைப் புரிந்து கொண்ட அவளது தங்கை தன் கற்பு யாரிடம் பறி போனதென்பதைச் சொல்வதில்லை.என்று சபதம் பூணுகிறாள்.
 
தங்கையின் வயிற்றில்  கரு வளர வளர அக்காவின் உடல்நிலை தளர்ந்து நோயாளி ஆகி விடுகிறாள்.

இறுதியில் உண்மை தெரிய வருகிறது.

உண்மையில் வெகுளிப்பெண் தான்தான் என்பதும், தங்கைக்கு வாழ்வளிக்க இதை விட சந்தர்ப்பம் வேறில்லை என்பதும் உணர்ந்து தனது கணவனை தங்கைக்கே கைப்படித்து மரணம் அடைகிறாள்.

இப்படி ஒரு கதையை வார்த்து T'Nagr G.N.Shetty Roadல் இன்றுள்ள BHEL REGIONAL OFFICEக்கு அருகில் அலுவலகம் நடத்தி வந்த அந்தப் பிரபலமான சினிமாக்காரரைச் சந்தித்துச் சொன்னேன்.

அப்போதுதான் அவர்,அந்தப் பிரபலக் கதாநாயகியைக் காதல் திருமணம் செய்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருந்த இயக்குநராக தமிழ்த் திரையுலகம்  அவரைக் கொண்டாடிக் கொண்டிருந்தது.

நான் அவரைச் சந்திக்கும்போது ஏற்கெனவே ஒரு படம் தயாரித்து வெளியிட்டிருந்தார்.

எனது  கதையைப்  படித்து பார்த்து விட்டு என்னிடம் சொன்னார்; “ பிரதர் இதுபோலவே ஒரு கதை ரெடியாகிக் கொண்டிருக்கிறது; வேறு கதை இருந்தால் சொல்லுங்கள்” என்றார்.

எனக்கோ பெரும் ஏமாற்றம்.நாவெல்லாம் வறண்டு விட்டது; பிறகு வருகிறேன் ஸார்’ என்று சொல்லி விட்டுத் திரும்பி விட்டேன்.

நண்பர்களிடம்  இந்தச் சந்திப்பைப் பற்றிச் சொன்ன போது.” ஆகா...சரியான வெகுளியப்பா நீ. உன்னோட கதையை இன்னும் கொஞ்ச நாட்களில் சினிமாவாகவே  பார்க்கலாம் ” என்று பரிகசித்தார்கள்.

ஏழெட்டு மாதங்களில் வெள்ளித்திரைகளில் அந்தப் பிரபல நடிகையின் காதல் கணவர் இயக்கிய   படம்  பளிச்சிட்டது.

படத்தை பார்த்துத் திடுக்கிட்டேன்.

நான் அந்த இயக்குநரிடம் எப்படியெல்லாம் சீன் போட்டுச் சொன்னேனோ அதில் 80 சதவீதம் அப்படியே சினிமாவாகச்  சிரித்தது.

கொஞ்ச நேரத்தில் தனக்குத்தானே ஆறுதல் கொண்ட எனது மனம்  ஒருவகையில் மகிழ்ந்தது:

“’எப்படியோ நம் கதை சினிமாவாகி விட்டது; இனி நமக்கு சினிமா ராசி வந்து விடும்”

அந்தப் படத்தின் பெயரே: வெகுளிப் பெண்

இயக்குநர்; தேவதாஸ்.

அந்தப் படம் வெளிவருவதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் நடிகை தேவிகாவைக் காதல் திருமணம் செய்திருந்தார் .

இந்தப் படத்தில் தேவிகா,ஜெமினி கணேசன் மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் நடித்தது.

நடிகை கனகா இப்போது தேவதாஸ் பற்றி ’ஒரு அயோக்கியர்’ என்று வருந்திச் சொல்வது உண்மையென அந்த 1971களிலேயே- கனகா பிறப்பதற்கு முன்பே எனது விஷயத்தில் சாட்சியம் ஆகி விட்டிருக்கிறாரே!

சரி,’இதில் யார் வெகுளி? 

நானா? அவரா? என்பதில்தான் இன்னமும் எனக்குக் குழப்பம்....

இவண்-
கிருஷ்ணன்பாலா
30.7.2013


Sunday, July 28, 2013

கற்றோர் சபையில்…..

றிவார்ந்த நண்பர்களே,

வணக்கம்.

’கணினியைத் தட்டினால் தமிழ் தானாக உருவெடுக்கிறது’ என்ற வசதி வந்த பின்பு  'கணினியைத் தொட்டவன் எல்லாம் தமிழ் எழுத்தாளன்’  என்ற நினைப்புக்கு வந்து விட்டான்.

இது ஒருவகையில் நல்லதுதான்.

’உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் தங்களிடையே உள்ள நட்பை.உறவை, எண்ணங்களைப்  பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும்உலகெல்லாம் தமிழ்என்ற சித்தாந்தத்தை நுகர்ந்து கொள்ளவும் கிடைத்திருக்கிற வாய்ப்பு இதுஎன்று நாம் எண்ணிப் பூரித்து  மகிழலாம்.

ஆனால், இதைக் கொண்டு சமூக வலைத்தளங்களில் எழுத வருகின்ற ஆயிரக்கணக்கானோர், தமிழ்ப் பண்பாட்டின் ஒப்பற்ற ஆளுமையை அசிங்கப்படுத்திக் கொண்டு  தங்களையும் மானமற்றவர்களாக  அடையாளப் படுத்திக் கொண்டு சகட்டு மேனிக்கு எழுதுகிறார்கள்.

இவர்களின் எழுத்தில் உள்ள ஆபாசம்; ஆபாசத்தைத் தூண்டும் கருத்துக்கள்;காம விகாரமான கமென்ட்ஸ், அர்த்தமற்ற ஆங்கிலக் கலவை கொண்ட  அரைகுறைத் தமிழ்; எப்போதும் காதல் பற்றிய புலம்பல்கள்; கவிதை என்ற பெயரில் கிறுக்கப்படும் கேவலமான  பதிவுகள் ……….

இவையே மிஞ்சிப் பரவி நிற்க, சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருக்கின்ற இளைஞர்களும் இளிஞிகளும்தமிழை இப்படியும் எழுதப் பயன் படுத்தலாமேஎன்ற உற்சாகத்துக்குத் தள்ளப்படுகின்றனர்.

வள்ளுவன்,கம்பன், அவ்வை,இளங்கோ, பாரதி முதலான தெய்வப் புஅவர்களின் செந்நாக்களில் தவழ்ந்து, ‘உயர் தனிச் செம்மொழி’ யென விரிந்து,நிமிர்ந்து  தரணியெல்லாம் வியந்த தமிழ், தறுதலைகளின் தவறான புரிதலுக்குத் தள்ளப் படுவதும் இதே கணினி வசதிகளால்தான்.

தவறான சிந்தனை கொண்டோரால் தமிழ் அவமான மிக்க படைப்புகளில் வெளிப்படுவதை நான் கடுமை கொண்டு சாடுகிறவன்.

தமிழன்னையின் தலை நிமிர்ந்த மைந்தர்எனத் தரச் சான்று கொண்டிருப்போர் யாராயினும் அவர்களுடை வரிசையில் முன் நிற்கத் துடிக்கின்றவன்  நான்.

தரமற்ற பதிவுகளையும் தரம் கெட்ட சிந்தனைகளையும் புகுத்தி அன்றைய கால கட்டத்தில்சரோஜா தேவிபுத்தகங்கள்  எனப் பலரும் பல பதிவுகளாக எழுதி வெளியிட்டனர்.

அன்றைய இளைஞர்கள் அப் புத்தகங்களை பள்ளி,கல்லூரிப் பாடப் புத்தகங்களுக்குள் மறைத்து வைத்து படித்துப்பேரின்பம் காண்பர்;வயோதிகர்களோ பகவத் கீதைகளுக்குள்ளும்; புராண நூல்களுக்குள்ளும் புதுக்கி வைத்துப் படித்து பரவசம் கொள்வர்.

அதாவது அன்றைய காலகட்டத்தில் மறைத்து வைத்துப் படித்த  


காமஞ்’சரிகள்இன்று கணினித் தமிழாய்  உருவெடுத்துப் பரவுவதை உண்மைத் தமிழ்ப் பண்பாடு காப்போர் கண்டிக்கவும் தண்டிக்கவும் முன் வர வேண்டும்.

இதுதான் தமிழனின் தலையாய கடமை;பொறுப்பு.

உங்கள்  தலைமுறை ’முறைகெட்ட’தென உரை செய்யாதிருக்க, புதிய தலைமுறை பழுதற்று வளர  தமிழ் மொழியின் தனிச் சிறப்பை அனைவரும் உணரும் வண்ணம் எழுத வேண்டும்;சிந்திக்க வேண்டும்.

தமிழையும் தமிழனின் பண்பையும் சீரழிக்கின்ற சிந்தனைகளுக்கு எதிரான சிறுமைத்தனத்தைப் பொறுத்துக்  கொள்வது  பொறையுடைமை’ எனின் அது நம்மை நாமே இடுகுழிக்கு இட்டுச் செல்லும் ஏமாளித்தனம் என்பதை அனைவரும்  உணரவேண்டும்.

இதன் பொருட்டு நான் தொடர்ந்து எழுதி, ‘அறிவிலக்கிய ஆளுமை வேண்டும்’ என்று வலியுறுத்தினால்  எழுத்துச் சுதந்திரத்துக்கு முட்டுக் கட்டை போடும் சர்வாதிகாரத்தனம்என்று எழுத்தறியாப் பேதைகள் எதிர்க் குரல் இடுகிறார்கள்.

கணினியின் கரையற்ற சுதந்திரத்தைப் பயன் படுத்தி,சமூக வலைத்தளங்களில் கறைமிக்க தமிழை எழுதுகின்றவர்கள் சிந்திக்க வேண்டியவை இவை:

எழுத வரும் நோக்கத்தைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்;

அது எழுதுகின்றவரின் குடும்பத்துக்கும் படிக்கின்றவர்களுக்கும் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்என்று சிந்திக்கின்ற அறிவு தனக்கு இருக்கிறதா?’ என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கணினியைத் தட்டினால் தமிழ் வருகிறதுஎன்பதற்காக எழுதாதீர்கள்.

’உங்கள் எழுத்துக்கள் ஒரு கோமாளியினுடையது ’ என்றோ ,’கிறுக்கனுடையது’ என்றோ,’கடைந்தெடுத்த காமுகனுடையது’ என்றோ, ’கவிதை என்பது இன்னதென்று அறியாத கடை கெட்ட முட்டாளுடையது’  என்றோ, இங்கு படிக்கின்றவர்கள்  சொல்லாதிருக்க எழுதுங்கள்.

எழுதச் சுதந்திரம் உண்டுஎன்பதற்காக கக்கூஸ்களின் சுவர்களிலும் ரயில் கழிப்பிடங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிற அரிப்பாளர்களின் வரிசையில் நில்லாதிருங்கள்.

’தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’ என்ற தமிழ்ச் சான்றோரின் வரிசையில் நிற்க முயலுங்கள்.

உங்கள் எழுத்துச் சுதந்திரத்தைப் பண்பட்ட தமிழில் பயனுள்ள சமூகக் கருத்துக்களை வடிக்கப் பயன்படுத்தி, கற்றோர் சபையில் கர்வத்தோடு நில்லுங்கள்என்று விழைவது தங்களைக் காயப்படுத்தி, அடிமைப் படுத்துகிற விஷயம்என்று எண்ணுகிற மேதாவிகளுக்கு எனது அனுதாபங்கள்.

வேலியின் ஓரத்தில் நின்று கொண்டு எனது பதிவுகள் குறித்து ஓலமிடும் நண்பர்களுக்குத்தான் இது.

இவண்-
கிருஷ்ணன்பாலா
28.7.2013

Friday, July 26, 2013

சட்டமும் நீதியும்!றிவார்ந்த நண்பர்களே,

சட்டமும் நீதியும் வேறு வேறு பார்வைகளையும் பாதைகளையும் உடையவை.

மக்களைப் பாதுகாத்து நியாயங்கள் வழங்கப்படத்தான் சட்டம் தேவைப்படுகிறதே தவிர, நீதியைக் காக்க அல்ல.

மக்கள் எண்ணிக்கை பெருகிவிட்ட சமுதாயத்தில்,நாட்டில் மக்கள் தொகை பெருகப் பெருக குற்றங்களும் பெருகிக் கொண்டிருக்கின்றன.

நீதி எது? நியாயம் எது என்று சிந்திக்கத்தெரியாத, சிந்திக்காது மனிதர்கள் தங்கள் சுய நலத்துக்காக செய்யும் கொலை,களவு, ஏமாற்றுதல் முதலான குற்றங்களைத் தண்டிக்கவும்  தேச நலனுக்கு விரோதமான சாதி மோதலைத் தூண்டல், சதி செய்தல், அந்நிய சக்திகளுக்கு ஆதரவாகச் செயல்படல், இன வெறி சாதி வெறி அரசியல் செய்தல்,பேசுதல், எழுதுதல் முதலான குற்றங்களைத் தடுக்கவும் சட்டத்தால் முடியும்.

சட்டம் என்பது  நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்காக  சமுதாயத்துக்குப் பாதகமான நடைமுறைகளைக் களைந்து மக்கள் அனைவரும் கட்டுப்பாட்டோடு வாழும் வகையில்  மனிதரால், படித்த மேதைகளால் வகுக்கப்பட்டது; அது நாட்டுக்கு நாடு வேறுபடும்;படலாம்.

ஆனால் நீதி என்பது யாராலும் இயற்றப் படாதது. அது இயல்பாகவே மனித நேயமும் இறை நேயமும் கொண்ட ஒவ்வொருவரின் இயல்பான உயர்பண்பு.

சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதுதான் நீதி.

அந்த நீதியின் பிரதிநிதிகளாகத்தான் சட்டம் பயின்ற சான்றோரைத் தெரிவு செய்து  அவர்களை நீதி மன்றங்களில் நீதிபதிகளாக அரசு நியமனம் செய்கிறது. நீதிபதிகள் தங்கள் பாரபட்சமற்ற நீதிமையினால் உயர்ந்து ’நீதி அரசர்கள்’ என்று மதிக்கப்படும் நிலையை அடைகின்றர்கள்.

நண்பர்களே,

சட்டங்களையும் அதன் வியாக்கணங்களையும் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெறலாம்.

ஆனால்,நீதியை எங்கும் படிக்க முடியாது.

அது பரம்பரை பரம்பரையாக ரத்தத்தில் ஊறிவரும் தெய்வீகக் குணம்.

வாழுகின்ற சமூகத்தில் வகையாக வாழும் முறைமையை நீதி இயல்பாக உணர்த்துகிறது.

எது தர்மம்? எது அதர்மம்? என்ற நீதியை  ஒருவன் அடிப்படையாகத் தெரிந்து கொள்வானானால்,அவனுக்கு மனிதர்கள் எழுதிய சட்ட ஞானம் தேவையே இல்லை.

எது தர்மம்? எது அதர்மம்? என்ற நீதியை உணராதவனுக்கு எந்தச் சட்டத்தாலும் பயனே இல்லை!

சட்டங்கள் திருத்தப்படலாம்; நீதி, நீதிதான் அது திருத்தப்பட முடியாது.
ஆனால் சட்டம் பேசுகிறவன் தனது வாதத்தின் வலிமையினால் நீதியைக்கூட சிறைக்கு அனுப்பிவிடும் துர்பாக்கியம் உண்டு.

நீதியின் தீர்ப்போ சட்டத்துக்கும் அப்பாற்பட்டது; சட்டத்தால் செய்ய முடியாததை நீதி உணர்த்தி விடும்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் சக்திமிக்க அரசியல்வாதி  ஒருவர் எம்.எல்..ஏ ஆக இருந்தார்.

திருச்செந்தூர் ஆலயத்தின் உண்டியல் பணம் அவர் தர்ம கர்த்தாவாக இருந்த காலத்தில் சுரண்டப்பட்டது. பணம் எண்ணப்படும்போது உண்மையான் பெரும்தொகை ம்றைக்கப்பட்டது வெட்ட வெளிச்சம் ஆனதில் ’கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்த சுப்பிரமணிய பிள்ளைதான் உண்டியல்பணத்தை மறைத்தார்’ என குற்றம் சாட்டப்பட்டு, எம்.எல். ஏ தனது அரசியல் அதிகாரத்தின் பலத்தால் அவரைக் கைது செய்ய வைத்தார்.

உண்மையில் ’எம்.எல்.ஏதான் அதைச் செய்து விட்டு பின், செய்தி வெளியில் வந்ததும் அதை கோவில் நிர்வாக அதிகாரி மீது சுமத்தி கைது செய்ய வைத்து விட்டார்’ என்று உண்டியல் பணத்தி எண்ணிக் கொண்டிருந்தவர்கள் மூலம் செய்தி கசியத் தொடங்கியது.

அவமானமும் அதிர்ச்சியும் அடைந்த கோவில் நிர்வாக அதிகாரி, அரசியல் பலத்தின் அசுரத்தனமான குற்றச் சாட்டில்  குமைந்து போனார்.

உண்மையில் என்ன நடந்தது? என்பதை  சட்டம் அதற்கு மேல் ஆராய இடம் வைக்காமல் அந்தக் கோவில் அதிகாரி கோவில் கழிவறையில் தூக்கில் தொங்கினார்,பிணமாக.

அது கொலையா,தற்கொலையா என்பது கூட தீர விசாரிக்கப்படவில்லை, ஏறத்தாழ 35 ஆண்டுகள் ஆகியும்கூட.

திருச்செந்தூர் முருகன் இருக்கின்றானா? அவன் திருடர்களின் பின்னே நின்று சிரிக்கின்றானா?

என்று நாத்திகரும் ஆத்திகரும் பட்டி மன்றம் நடத்தினர்.

ஒரே ஆண்டு!

எந்தத் தேதியில் சுப்பிரமணியப் பிள்ளை தூக்கில் தொங்கினாரோ
அதே தேதியில் அடுத்த ஆண்டில் நடு ரோட்டில் லாரி ஒன்று மோதி அந்த அரசியல்வாதி,எம்.எல்.ஏ. கொசு நசுங்குவதுபோல் நசுக்கபட்டுச்  செத்தார்.

அந்த லாரியின் முகப்பில் எழுதப்பட்டிருந்த வாசகம்: ‘திருச்செந்தூர் முருகன்!’

இது நீதி வழங்கிய தீர்ப்பு என்று எவரும் பேசத் தொடங்கினர்.


(நம்புங்கள்; தொலைக் காட்சியில் ஆங்கிலச் செய்தி ஒன்று ஒலிபபரப்பாகிக் கொண்டிருக்கிறது. திருச் செந்தூர் ஆலய உண்டியல்  சுரண்டல் வழக்கில்
நீதியை அந்த சுப்பிரமணிய சாமி கொடுத்து விட்டதைத் தொட்டு எழுதி முடிக்கும்போது, Here Subramanyam Swami says....' என்று செய்தி வாசிப்பாளர் சொன்னது மட்டும்  என்காதில் விழ, நான் எதேச்சையாக தொலைக் காட்சிப் பக்கம் என் பார்வையைச் செலுத்துகிறேன்.
அட...!  தொலைக் காட்சியில் மெய்யாகவே சுப்பிரமண்ய சுவாமி பேசிக் கொண்டிருந்தார்.  நம்ம சுப்பிரமண்யம் சுவாமிதான். இந்த CO-INCIDENT என்ற நிகழ்வு சில சமயம் தெய்வீகமானது என்று நினைக்கும்போது மெய் சிலிர்த்துப்போகிறது. நம்புபவர்களுக்குத்தான் இந்தச் செய்தி;கிண்டல் செய்பவர்களுக்கு அல்ல)

நீதியின் உந்துதலால்தான் மனிதன் அன்புள்ளவனாக,இரக்கம் உள்ளவனாக,பிற உயிர்களை நேசிக்கும்  கருணை உள்ளவனாக, உண்மையும் ஒழுக்கமும் உள்ளவனாக மனிதர்களில் மேம்பட்ட சிந்தனையும் உள்ளவனாக வாழ்கிறான்.

நீதியை உணர்ந்தவன் அதிக பட்சமாக இறைவனுக்கு அடுத்த இடத்தில் இருப்பான்.

சட்டத்தைப் படித்தவன்  அதிகபட்சமாக நீதிபதியின் அருகில் வழக்கறிஞனாகத்தான்  இருப்பான்.

இன்று -

நம் நாட்டில் நீதிக்கும் சட்டத்துக்கும்தான் போர் நடந்து கொண்டிருக்கிறது.

சட்டம் தெரிந்தவன்தான் நீதியை சட்டப்படி ஏமாற்றுவது எப்படி? என்று இரவு பகலாகச்  சிந்தித்து அத்தனை அயோக்கியத் தனங்களையும் செய்து சட்டப்படி குற்றம் அற்றவன் ஆகி வாழ்கிறான்.


என்னிடம் ஒரு நண்பர் மிகவும் நொந்து போய்ச் சொன்னார்:

“நான் கடவுளுக்குப் பயந்து மனசாட்சியோடு வாழ்கிறேன்; எனது தொழில் வசதிகள் நைந்து விட்டன; ஆனால் எனது கூட்டாளி என்னை ஏமாற்றிப் பெரிய மனிதனாக   உலாவந்து கொண்டிருக்கிறார்.அவரிடம் இல்லாத தீய ஒழுக்கங்கள் இல்லை; வயோதிக நிலையை அடைந்த போதும் வாலிப ஆசைகள் அவரை ஆட்டிப் படைக்கின்றன. அத்தனையிலும் அவர் புரண்டு எழுந்து கொண்டு பொய் வேஷம் இட்டுக் கொண்டுதான்  வாழ்கிறார்.

எங்கே நீதி இருக்கிறது?”

நான் சொன்னேன்:

நண்பரே,
‘ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  மனசாட்சி’ என்று ஒன்று காட்டாயம் இருக்கிறது. ஊருக்கு வேஷம் இட்டாலும் தன் மனச்சாட்சி முன்னால் நின்று கொண்டு எவரும் நிம்மதியாக இருக்க முடியாது.

நீதி என்பது ஒருவனுடைய  மனசாட்சியாய் இருந்து கொண்டு அவனுக்குள் எப்போதும் சிரித்துக் கொண்டுதான் இருக்கும். அதை அவன் இந்த சமூகத்தின் முன் மறைத்துக் கொண்டு பெரிய மனிதனாக உலா வந்து கொண்டிருந்தாலும்  அவனை காலத்தாலும் வயோதிகத்தாலும் வக்கிரமான குடும்ப உறவுகளாலும் அக்கிரமமான, அசிங்க நடத்தைகளாலும் தினம் தினம் தன்னைத் தண்டித்துக் கொண்டிருப்பதையும் உணர்ந்து கொண்டேதான் அவன் செயல்பட்டாக வேண்டும்.

நீதி என்பது ஒருவனைத் திருத்துவதல்ல: தண்டிப்பது.

‘தான் செய்வது பாவம்’ என்று ஒருவன் சிந்திக்கத்தெரியாத அறிவு உள்ளவன் என்றால் ’பெரும் தண்டனையை அனுபவிக்கப் போகின்ற விலங்குக்கு ஒப்பானவன் அவன்’ என்று அறிந்து கொள்ள வேண்டும்.
 
விலங்குக்கு இணையாக வாழ்வனிடம்  எவ்வளவு பணம் இருந்தாலும் திருடித் தின்பவர்களும் முகஸ்துதி செய்பவர்களும்,அவனுடைய சிற்றின்பத் தேடலுக்குச் சேவை செய்பவர்களும் அவனைச்  சூழ்ந்திருந்து, பிணம் தின்னிப் பருந்துகளாய் இருப்பது தான் அவனுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிற தண்டனையாக இருக்க முடியும்!.

விலங்குகளைத் திருத்துவது மனிதனின் வேலை அல்ல; விலகி இருப்பதுதான் அறிவுடைமை. அதைச் செய்யுங்கள் உங்களுக்கு அமைதியும் ஆனந்தமும் தானே வரும்.”

எனவேதான் சொல்கிறேன்,நண்பர்களே.

நீதி வேறு; சட்டம் வேறு.

இவண்-
கிருஷ்ணன்பாலா
25.7.203

Wednesday, July 24, 2013

தந்தை மகனுக்கு எழுதிய கடிதம்:1


மகனே,

இன்று உன் மகனுக்கு
நீ வாங்கித் தந்து மகிழும்
அத்தனை பொருட்களையும்
அன்றே
உனக்கு வாங்கித் தந்து விட்டேன்!

நீ, அவனை
ஆடவும் பாடவும்
வைத்து மகிழ்வது போல்
நானும்
உன்னிடம் பார்த்து மகிழ்ந்து விட்டேன்.

நீ கேட்டதையெல்லாம்
மறுக்காமல் வாங்கித் தந்து
என் தந்தையின்
வருத்தத்துக்கு ஆளாகிப்
பிறகு நானே
வருத்தப்பட்டுப்
பாரம் சுமந்து கொண்டிருக்கிறேன்
இங்கு.

எப்போதும் உன் விருப்பத்துக்கு மாறாக
நான் இருந்ததில்லை;

கட்டுப்பாடுகளுக்குள் கட்டுப்படாத
உன்மீது
நான் கொண்டிருந்த பாசத்தில்தான்
நான் வழுக்கி வீழ்ந்து விட்டேன்

அதன் விளைவுதான்:
இன்று
முதியோர் காப்பகத்தில் நான் வாழ்வது!.

உனது மனைவிக்கு
நான் இருப்பது சுமையாகிப் போனதால்-
அவள் சுமையை
இறக்குவதாகக் கருதிக் கொண்டு
எனது மகன்என்ற உறவிலிருந்து
நீ இறங்கி விட்டாய்.

மகன் - தந்தை உறவை
நிலைபெறச் செய்வதற்கு
சில கட்டுப்பாடுகளைத் தகர்க்கக் கூடாது
என்ற உண்மையை,
இந்த முதியோர் காப்பகம்
எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது.!

நான் கற்றுக் கொண்டதையாவது
கடைசி முறையாகக் கேட்டுக் கொள்:

நான் எனது மகனுக்கு
விட்டுக் கொடுத்து வாழ்ந்ததைப் போல்

நீ உன் மகனிடம்
நடந்து கொள்ளாதே;

என்னைப்போல் வாழாமல்
என் தந்தையைப்போல்
வாழக் கற்றுக் கொள்.

அப்போதுதான்

இந்த முதியோர் காப்பகம்,
உன் மகனின
கண்ணுக்குத்
தெரியாத தூரத்தில் இருக்கும்!

இப்படிக்கு
முதியோர் காப்பகத்தில்
முதிர்ச்சியோடு வாழும்
உன் அப்பா

இவண்-
கிருஷ்ணன்பாலா
24.7.2013