Friday, February 24, 2012

மேடம் ஜெ.அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


மதிப்பிற்குரிய அம்மையீர்,வணக்கம்.
இது அரசியலைக் கடந்த  அன்பான வாழ்த்து!

கடந்த கால அரசியல் நடைமுறைகளிலிருந்து உங்களை
நீங்களே மீட்டுக் கொண்டு,நாட்டு நலன் விரும்பிகளிடத்தில் ஓர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய முதல்வாராக இந்த ஆண்டு உங்களை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

துணிவுக்கும் தன்னம்பிக்கைக்கும் ஓர் உதாரணமான பெண்மணி
என்பதிலும் தேசபக்தியிலும் தெளிவான  தேர்ந்த அரசியலிலும் மாறாத பிடிப்பு மிக்கவர் என்பதிலும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நீங்கள் நேர்மைக்கும் நீதிக்கும்தான் இனி உங்கள் ஆட்சியில் முதலிடம் என்பதையும் நிரூபித்துக் காட்ட வேண்டும். தற்பொழுது உள்ள வழக்குகளை எவ்வித  முறைகேடுகளாலும் உங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளாமல் வழக்காடவும் உண்மையான நீதிமான்களின் மனதில் நற்பெயரோடு நின்று ஒருவேளை, உங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தாலும் அதை நேர்மையோடு எதிர் கொண்டு அறநெறிச் செயல்கள் மூலம் உங்கள் மீதான களங்கத்தை நீங்கச் செய்யும் வகையில் செயல் படும் அறிவும் ஆற்றலும் பெறவும் அதன் மூலம்  இந்திய அரசியலில் நீங்கள் புதிய பிரவேசம் பெற்றவராய்த் திகழ்ந்து,உங்கள் கட்சிக்காரர்களும் நலம் விரும்பிகளும்,ஏன் நீங்களுமே விரும்புவது போல் இந்தியப் பிரதமராக வரவும் இந் நாளில் வாழ்த்துகிறேன்.

குறைந்த பட்சம் மத்திய அரசைத் தீர்மானிக்கின்ற அதிகாரம் நீங்கள் பெற வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால்  உங்களுக்கென்ற சொந்தக் குடும்பத்துப் பிள்ளைகளுக்கும் மாமன் மைத்துனர்களுக்கும் மத்தியில்  அமைச்சர் பதவிகளை வாங்கிக் கொண்டு நிச்சயம் தமிழனை அடமானம் வைத்து மானங்கெட்ட  அரசியலை நடத்த மாட்டீர்கள் என்பதால் உங்கள் தலைமை வலுப்பெற வேண்டும் என்றுதான் உண்மைத்தமிழன் விரும்புவான்.

கடந்த காலங்களில் உங்கள் காலைச் சுற்றிக் கொண்டு கழுத்தைப் பிடித்த சனியன்களையெல்லாம் களை எடுத்துக் கூண்டோடு தூக்கி எறிந்த துணிவு இந்திய அரசியலில் உங்களைத்  தவிர யாருக்கும் கிடையாது.

இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் எவருமே இந்தியத் திரு நாட்டின் மேன்மையைக் கௌரவப் படுத்தி திறமை மிக்க ஆட்சியைத் தரும் தகுதி படைத்தவர்களாக இல்லை; அவர்களில் நீங்கள் எவ்வளவோ மேல் என்றுதான் எமது  மனம் எண்ணுகிறது.

போலி ஜனநாயகம் பேசாது; போலி மத உணர்வும் காட்டாது ஆட்சி நிர்வாகத்தையும் கட்சி நிர்வாகத்தையும் துணிச்சலாக நடத்தும் ஒரே
பெண்மணி நீங்கள்தான் என்பதைக் காலம் நிரூபித்துள்ளது.

போலிகளைக் கண்டு ஏமாந்து போகும் இந்தப் பாமர ஜனங்களுக்கு நீங்கள் ஓர் அசல்தான்; களங்கம் மிக்க அரசியலுக்குள் நீங்கள் இருந்த போதும்.

நல்ல தலைவர்களும் நாணயமும் இல்லாத இந்திய அரசியலில் உள்ள வெற்றிடம் உங்களாலாவது நிரப்பப் பட்டால் நாங்கள் நிம்மதி அடைவோம்.

இத்தாலி, இந்த நாட்டை ஆண்டு அனுபவிப்பதை விட,திருவரங்கத்துக்
காவிரி நீர் டெல்லி செங்கோட்டையில் தெளிக்கப் படுவதில் தமிழன் பூரித்துப் போவான்;ஏன் இந்தியனே பெருமைப்படலாம்.

உங்கள் பிறந்த நாளில் எங்களின் வாழ்த்து இதுதான் ;ஏற்பீர்களாக!

இந்திய அரசியல் கண்டு வெறுத்துப் போன தமிழர்கள் சார்பில்,
வாழ்த்தும்,

கிருஷ்ணன்பாலா
24.02.2012

கூடன்குளம் அணுமின் உற்பத்திக்கு எதிர்ப்பு-தேசத்துரோகத் தூண்டல் (பகுதி-1)

மேய்ப்பவர்களுக்கே விளங்கா
விஷயம்;செம்மறி ஆடுகளுக்கு விளங்கி  விடாது  நண்பர்களே!

ஆம்!

‘கூடங்குளம் அணு மின் உற்பத்தி’  எதிர்ப்பில் இறங்கி இன்று  வழிதெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருக்கும் ஆட்டு மந்தைகளாகிவிட்ட மக்களைப் பற்றித்தான்  நாம்இன்று கவலைப்படவேண்டியுள்ளது

கூடன் குளம் அணுமின் உற்பத்திக்கு எதிர்ப்பு’ என்பது ’தேசத் துரோகச்  செயல்பாடுகளின் கடைந்தெடுத்த குற்ற நடத்தை’  என்பதை முதலில் இங்கு நாம் எச்சரித்துநம் கருத்தை  வைக்க வேண்டியிருக்கிறது.

இன்று நமது மாநில அரசுக்குப் பெரும் பிரச்சினையாக இருப்பது : மின் பற்றாக் குறை.

இதன் விளைவுகளின் கொடிய பாதிப்புக்கள் வசதிமிக்க தலை நகரில் வாழுகின்றவர்களுக்கு  இன்னும் வந்து சேரவில்லை.ஏன்,
ஆட்சியாளர்களுக்கே  கூட உரிய பாதிப்பை  இன்னும் அது தந்துவிடவில்லை.

வரும்;வந்த பின்  நொந்து பயனில்லை;
தரும்தந்த பின்  தலை நிமிர்ந்து பார்த்துப் பயனில்லை!

இந்தப் போராட்டத்தை இந்த அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கிபோலிப் போராட்டக்காரர்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்
என்பதே தேசத்தின் வளர்ச்சியையும் அறிவியலின் ஆக்கத்தையும் புரிந்து கொண்டவர்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கை.

இதை ஆதரிப்போருக்கு எனது வணக்கமும் வாழ்த்துக்களும் உரியது;
ஆதரிக்காதோருக்குநமது ஒட்டு மொத்த அனுதாபங்கள்

நண்பர்களே,

ஏறத்தாழ ரூபாய்  12000 கோடிகளைச் செலவிட்டு நமது மத்திய அரசு
உருவாக்கிய ‘கூடங்குளம்  அணுமின் உற்பத்தி மையம்செயல் படத்
தொடங்கும் வேளையில்,தமிழ் நாட்டின் 40 சதவீத மின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய அணுமின் நிலைய உற்பத்தித் தொடக்கத்தை
உதயகுமார் முதலான திடீர்ச் சமூகச் சேவகர்கள்’ முளைத்து,
முடக்கி இருக்கிறார்கள்.


அதாவதுஇந்தத் தேசத்தின் பொருளாதாரக் கட்டமைப்பின் மீது
‘ஜனநாயக உரிமைஎன்கிற கவசத்தை அணிந்து கொண்டு 'மக்களுக்கான போராட்டம்’ என்று ஒரு புரட்டுத் தத்துவத்தைக்
கையில் எடுத்துக்கொண்டு மிகமோசமான அதர்ம யுத்தத்தைச்
சொந்த மண்ணில்,சொந்த மக்கள் மீதே திணித்துள்ளார்கள்.


இந்தப்  படுபாதகத்தை ‘வெகுஜன எழுச்சி’ என்று காட்டிக் கொண்டு
ஆபத்து வரும் காலத்தில் அதே பொது ஜனத்தையே பலிகடா ஆக்கித் தாங்கள்  தப்பித்துக் கொள்ளும் தந்திரோபாயம்தான் இந்த ‘மக்கள்
போராட்டமே’ தவிர,உண்மையில் மக்களைக் காக்கின்ற சமூக
நோக்கம் இவர்களுக்கு இல்லை;இவர்கள் உண்மையான 
சமூகச் சேவகர்களும் இல்லை;இவர்கள் தேசத் துரோகிகள்.


உலகச் சந்தையில் இரண்டு பெரும்வல்லரசுகளின் அறிவியல்
தொழில் நுட்ப வியாபாரப் போட்டியினால் பின்னடைவாகிவிட்ட
ஒரு பெரிய வல்லரசு நாட்டின் வஞ்சக வலையில் சிக்கி,
அவர்களின் பின்பலத்தால் கூட்டம் சேர்த்து,'வியாபாரத்தில் வென்ற
நாட்டின் மதிப்பையும் அதனோடு ஒப்பந்தம் செய்து கொண்டநமது
நாட்டின் வளர்ச்சியையும் சீர்குலைப்பது ஒன்றே நோக்கம்’
எனச் செயல்படும் சிறு மதியாளர்கள்.

தாங்கள்  ஏற்றுக் கொண்ட பாத்திரத்தை கச்சிதமாய்  நடத்தி முடிக்க
இவர்கள் எடுத்துக் கொண்ட கருவிதான்’ மக்கள் போராட்டம்
என்னும் மௌடீகசாதனம்.

இப்பகுதிவாழ் மக்களின்  உயிருக்கு ஆபத்து’  என்ற புரளியைக்
கிளப்பி விட்டு, தங்கள் நோக்கத்தில் இவர்கள் பூதாகர வளர்ச்சியை
அடைந்து விட்டார்கள் தாடிகளை வளர்த்து சே கு வாராக்கள்
போல் இவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளத்தலைப்பட்டு,
ஒன்றும் அறியாத அப்பாவி மக்களின் கூட்டத்தில் ‘மக்கள் புரட்சியின் நாயகர்களாக இப்போது உளறிக் கொண்டு உலாவந்து
கொண்டிருக்கின்றார்கள்.

விஞ்ஞானத்தின் வியத்தகு சாதனைகளைக் கொண்டு வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்ற உலகில்,இவர்களின் வளர்ச்சியைக் கண்டு நாம் தலை குனிந்து வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நண்பர்களே,

அறிவியலின் பயன்பாட்டை அனுபவிக்காதவர்கள் என்று உலகில்
யாருமே இன்று இருக்க முடியாது.வெளி உலகிற்குத் தட்டுப்படாத
ஆதிவாசிகள் உட்பட.

அறிவியலின் மேம்பட்ட பரிணாமம்தான் அணு சக்தி.

அந்த‘அணுசக்தியை,மனிதகுலத்தின் ஒட்டுமொத்த அழிவுக்கும்
பயன்படுத்த முடியும்வசதிமிக்க வாழ்வுக்கும் பயன்படுத்த முடியும்
என்பதுதான் இன்றைய அணுசக்திப் பயன்பாட்டுத் திறனில்
மனிதன் அடைந்துள்ள முன்னேற்றம்.

முதல் உலக மகாயுத்தத்தின்போது அமெரிக்கா அணுசக்தியினால்
தயாரிக்கப் பட்ட அணு குண்டுகளை முதன் முதலாக ஜப்பான் மீது
போட்டபோதுதான் அணுவின் பேரழிவுத் தன்மை பற்றிய பேரச்சமும்
விழிப்புணர்வும் உலக மக்களிடையே தோன்றியது.

ஹிரோஷிமா-நாகசாகியின்(ஜப்பான்) பேரழிவுப் பெரும் கொடுமை
கண்டு உலகமே கண்ணீர் சிந்தியது; அணு குண்டு வீசிய அமெரிக்கா
உட்பட.

இதன்  எதிரொலியாக, அணு ஆராய்ச்சிப் பரவலுக்கே உலக
நாடுகளிடையே  கடும் எதிர்ப்பும் அதை ஒழிப்பதற்குரிய பிரச்சாரமும்
எல்லாத் திசைகளிலும் எழுந்ததுஆனால்அணுவியலாளர்களின்
கருத்தோ நேர் எதிர்த் திசையில் சென்றுஅணுவை ஆக்கச் 
சக்திக்கும் பயன்படுத்த முடியும்’ என்ற  உண்மையைப் பல்வேறு 
ஆழ்ந்த,நுட்பமான ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபித்துக் காட்டினர்.

அதன் விளைவுதான்இந்தப் பிரபஞ்சத்தில் பூமிப்பந்துக்கும் அப்பால்
பலகோடி மைல்கள் இடைவெளியில் சுழன்று கொண்டிருக்கும்
மற்ற கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சியில் அறிவியலாளர்கள்
நுழைந்தது.

விண்வெளி ஆராய்ச்சி என்பதும் அதில் பெரும் பங்கு வகிக்கும்
அணு சக்தியின் பயன்பாடுகள் எந்த அளவுக்கு மனித குலத்துக்குப்
பயன்தரும்என்பதும்தான் அறிவியல் தொழில் நுட்பங்களில்  
முன்னேறிய நாடுகளின் வியத்தகு பரிணாம வளர்ச்சி.

அந்த வகையில் இந்தியா, அணுசக்திப் பயன்பாட்டுத் துறையில்
மற்றெந்த நாடுகளுக்கும் சளைத்ததுமல்லஇளைத்ததும் அல்ல
என்பதை நிரூபித்துக் காட்டி அணு சக்தியை மக்களின் ஆக்கச்
சக்திக்கு மட்டுமே பயன் படுத்துவதுஎன்ற சுய சார்பு உறுதி
மொழியைஉலக நாடுகளின் முன் வைத்துப் பிற நாடுகளைப் 
பிரமிக்க வைத்திருக்கிறது.


தைச் சாதித்துக் காட்டுகின்ற திட்டத்தின் ஒரு பகுதிதான்
அணு சக்தி மூலம் மின் உற்பத்தியைச் செய்வதுஎன்பது.

நண்பர்களே,

இதை எதிர்ப்பது எத்தகைய பத்தாம் பசலித் தனமான அறிவு?
என்பதும் அது தேசத் துரோகத்தின் கடைந்தெடுத்த குற்றச்
செயல்களின் அங்கம் என்பதும் உண்மையிலேயே கல்வி 
அறிவு பெற்றிராத மக்களுக்குத் தெரியாதுதான்.

ஆனால், ’அமெரிக்காவில் படித்து விட்டு வந்திருக்கின்றேன் பேர்வழி
என்று சொல்லிக் கொண்டு ஒரு சிலர்அணு மின் உற்பத்திஎன்பது
மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பது’ என்று பாமர மக்களுக்கு அச்சமூட்டும்  வதந்தியைக்  கிளப்பிவிட்டு, அவர்களை ஒன்று திரட்டி,
சொந்தத் தேசத்தின் மீதே போர்தொடுப்பது போலத் தாயார்ப் படுத்தி,
ஒட்டு மொத்த தேசத்தின் நலனுக்கான திட்டத்தை அமலாக்கப் படுத்துவதைக் கெடுக்கவும் தடுக்கவும் முயல்கின்ற செயல் தேச விரோதச்செயலே அன்றி வேறென்னவாக இருக்க முடியும்?


அறிவியல் தொழில் நுட்பப் பாதுகாப்பு உறுதி செய்யப் பட்ட
’கூடன்குளம்  அணுமின் உற்பத்தி’ மையத்தின் கட்டமைப்பு பற்றிய 
ஒரு மூடத் தனமான அச்சத்தை மக்களிடையே பரப்பி, “மக்களே
உங்கள்  உயிருக்குஆபத்துஉங்களைக் காக்கக் கூடிய ரட்சகர்கள் 
நாங்கள்தான்”  என்று சுயதம்பட்டம் அடித்துக் கொண்டு ‘அணுமின்
திறன்  என்றால்  என்ன?’ என்பதே  தெரியாத அந்தப் பாமர 
மக்களிடையே உயிர்பற்றிய அச்சத்தைப் பரப்பி இருப்பதானது
நிச்சயம்  தேசத் துரோகத்  தூண்டலின்  ஒரு பகுதிதான்.

அதன் மூலம் ‘மக்கள் போராட்டம்’ என்பதாக ஒரு போலி நாடகத்தை
நடத்திக் கொண்டு தேச விரோதச் செயலில் ஈடுபட்டு அரசியல்
பூச்சாண்டி காட்டியிருக்கிறார்கள், இந்தப் போலி மேய்ப்பர்கள்.

கூட்டத்தைப் பார்த்தாலே ‘குஷியாகிப் போகின்றன் நம் சில்லறை
அரசியல்வாதிகள் சிலருக்கு, இதுஅல்வா’ போல் ஆகிவிட்டது.
விடுவார்களா? அவர்களும் இதை அரசியலாக்கிக் கொண்டு உளறத்
தொடங்கி விட்டார்கள்.

இப்பகுதி முன்னேற்றம் அடைந்து விட்டால், ‘நம் வியாபாரம்
எடுபடாமல் போய் விடும்’ என்று சிலபணமுதலைகள்கூட
இவர்களின் போராட்டக் கூத்துக்கு நிதி உதவி வழங்கி, இந்தப் 
பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு எதிராகத் திரை
மறைவில் நின்று செயல்படுவதாகச் சில செய்திகளும் இப்போது
வெளிவரத் தொடங்கியுள்ளது.

ஆனால்இதையும் கடந்த சில சிந்தனைகளை நாம் இங்கு
சற்று எதிர்கொண்டால் ‘கூடன்குளம் அணுமின் உற்பத்திச்
செயல்பாட்டுக்கு எந்த மாதிரியான பெரும் சக்தி,இதன்
பின்புலத்தில்  நிற்கிறது?’என்பது விளங்கும்அது நம்மை
அதிரவும் வைக்கும்.....
                                                                  
                                                                       ( அடுத்த பகுதி 2ல் சந்திப்போம்)

Saturday, February 18, 2012

ஏழை சொல் அம்பலம் ஏறுமா?


















பணக்காரன் சொன்னால் தத்துவம்;
பாமரன் சொன்னால் பைத்தியம்

என்று-
சொல்லும் இளிச்சவாயர்கள் நிறைந்த
இவ்வுலகில்-

பில் கேட்சொல்லி விட்டார் என்பதற்காகவே
இதை ப்ரேம் போட்டு வைப்பவர்கள் உண்டு
எனபது நமக்குத் தெரியும்!

இதையே -
ஒருமில் கேட்தொழிலாளி சொல்லியிருந்தால்
எத்தனை பேர் ஏறெடுத்துப் பார்ப்பார்கள்?

ஏழை சொல் அம்பலம் ஏறுமா?

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்....

இவண்-
கிருஷ்ணன்பாலா
18.2.2012

Monday, February 13, 2012

கலாச்சாரக் கொலைத் தினம்!

அறிவார்ந்த நண்பரகளே,

வணக்கம்.

எனக்குத் தெரியும்:

நிர்வாண தேசத்தில் கோவணம் அணிந்தவன் பைத்தியக்காரன் என்பதும் செவிடர்களின் சபையில் பேசுபவன் ஊமை என்பதும்!

இதோ, நான் கோவணம் அணிந்து கொண்டு  பேசுகிறேன்

தங்கள் எதிர்காலக் குழந்தைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வளரத்
தேவையில்லை’ என்றும் ‘அவர்கள் மிருகங்களைப் போல்
எதிர்காலத்தில் எக்கேடு கெட்டேனும் போகட்டும்என்றும் எண்ணிக் கொண்டு இன்று பருவக் காதலில் பட்டுப்போய், பெற்றவர்களைக் கண்ணீர் சிந்த வைத்து, கனவுக் கற்பனைகளில் சிறகடித்துக் கொள்கிறவர்களுக்குச் சிலிர்ப்பூட்டும் தினம்தான்இந்தவாலண்டைன்ஸ்’  டே

அறிவையும் அனுபவத்தையும் ஒன்றாக்கிச் சிந்திப்போர்க்கு இது, உண்மையான காதலின் பெருமையைச் சிறுமைப்படுத்தும் நாள்;
பக்குவமற்ற இரு’பாலர்’கள் தங்களின் எதிர்காலத்துக்குக் குழியைப்
பறித்துக் கொண்டு குதூகலிக்கும் நாள்.

வாலண்டைன்’ஸ் டே’ என்று அதை வெகுவாகச் சிலாகித்துக் கொண்டு சிறகடிக்கின்ற பேர்வழிகளை வாழ்த்திகபோதித்தானமாகக் கருத்து விடுதிகளைப்போலீஸ் நிலையம் போல்நடத்தும்  பேர்வழிகளை என்ன சொல்ல?

தந்தையர் தினம்என்றும்தாயைப் போற்றும் தினம்என்றும்
தமிழர் பண்பாட்டுத் தினம்என்றும் கொண்டாட வேண்டிய தமிழன்,
நமது பண்பாட்டைச் சீரழிக்கும் அனாசாரத்துக்குஆலோலம்பாடத் தொடங்கி அதில் ஆரவாரம் செய்யத் தொடங்கி விட்டான்.

’எதையும் பேசலாம்;எதையும் பரப்பலாம்’ என்பதற்கு வலை விரிக்கும் வலைத்தளங்களில் அவன் சிலந்தியின் வலையில் சிக்கிச் சீரழியப்போகும் ஈக்களைப்போல் ஈன ஸ்வரம் பாடுவதில் இன்பம் காண்கின்ற இழிபிறவியின் இனத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கின்றானே?.

தனது பண்பாட்டுப் பெருமைகளின் சவ ஊர்வலத்துக்கு இதன் மூலம் பாடை தூக்குவதில் பரவசம் கொள்கின்றவனாகி விட்டானே என்ற நமது கவலையை இங்கே தெரிவித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கேற்பட்டு விட்டது.

காதல் ஜோடிகளை சேர்த்து வைத்து ஃபாதர் வாலண்டைன் இறந்துவிட்ட நாளைத்தான்காதலர் தினமாகக் கொண்டாடுவதாக  காதல் கிறுக்கன் எவனோ ஒருவன் கட்டி விட்ட கதை, இன்று மூடர்களின் வேதமாகி,கலாச்சாரப் படுகொலை நாளாகி விட்டது.

இந்தப் பைத்தியக்காரத்தனத்தை உண்மைத் தமிழர்கள் கண்டிக்க வேண்டாமா?
கடவுளுக்கு வழிகாட்ட வேண்டிய பாதிரியார்,கண்ணறாவிக் கஷ்டத்துக்கல்லவா வழி காட்டியிருக்கிறார்?

அது சரி, காதலர்களைச் சேர்த்து வைத்துத்தான் அவர் இறந்தாரா? சேர்த்து வைத்த பாவத்துக்காக இறந்தாரா?

இதை ஆராய்ச்சி செய்து யாராவது சொன்னால் நல்லது.

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.2.2012


Tuesday, February 7, 2012

திருச்சியைத் தலைநகராக்குவீர்!



மாண்புமிகு தமிழக முதல்வர் மதிப்புக்குரிய மேடம்அவர்களுக்கு,
வணக்கம

எதையும் துணிச்சலுடன் முடிவெடுத்து அதை நடைமுறைப் படுத்தும் வல்லமையுள்ள முதல்வர் நீங்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை என்று மகிழ்கின்றவர்களில் நானும் ஒருவன்.

உள் கட்சி அரசியலை ஆட்டிப்படைக்கும் உங்கள் சர்வாதிகாரப்
போக்கு உங்களுக்கு மேலும் மேலும் வலுவூட்டும் விதமாகவே அமைந்து விடுவது ஜனநாயக அதிசயம்தான்.

அந்த அதிசயம் உங்களுடைய ஆட்சி நிர்வாகத்திலும் வெளிப்பட்டு, தமிழ்நாட்டின் புதிய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைய வேண்டும் என்பது என்னைப் போன்ற நிலைவாதியாளர்களின் எதிர்பார்ப்பு.

ஒரு முடிவு என்று எடுத்து விட்டால் எத்தகைய எதிர்ப்பையும் முனை மழுங்கச் செய்து உறுதி குலையாமல் அதை நிறைவேற்றுவதில் உங்களுக்கு இணையான ஆட்சியாளரை நாடு இதுவரை காணவில்லை;இனியும் காணுமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

அரசியலில்குறிப்பாக இந்திய அரசியல் களத்தில் நிரந்தர வெற்றியாளர்கள் இல்லை என்றாலும் மக்களின் எண்ணங்களில் நிரந்தரமான இடம் பெற்று அதில் முன்னிலை வகிக்கும் தகுதி பெற்ற பெண்மணியாக நீங்கள் திகழ்வதை உங்கள் அரசியல் எதிரிகள் கூட முனகிக் கொண்டேனும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

அறிவுப் பூர்வமாக எடுத்துரைக்கக் கூடிய உங்கள் தகுதியும் அச்சமற்ற அரசியல் அணுகுமுறையும் உண்மையிலேயே அரசியல் வரலாற்றில் தனி இடம் பெற்றவை, ஆனால், உங்கள் கட்சியினர் உங்கள் கவனத்தைப் பெற வேண்டும் என்பதற்காக தமிழ் அகர முதலியில் இல்லாத வார்த்தைகளைக்கூட உருவாக்கி அடிக்கும் போஸ்டர்களில் அவர்கள் அடிமைகள் போல் நாட்டு மக்களுக்கு அறியப்படும் அவல நிலையை நீங்கள் புரிந்து கொண்டு,உருப்படியான புகழுரைகளையும் சாதனைகளையும் சாற்றும்படிச் செய்தால், அறிவு ஜீவியான உங்களுக்கு அது மிகப்பெரும் அரசியல் வெற்றியென பேசப்படும்.

உங்களை மையப்படுத்தி அடிக்கப்படும் போஸ்டர்களில் கட்சியின் எந்தப் பிரமுகர்களின் படமும் இருக்கக் கூடாதென ஆணையிட்டு அதை நூறு சதவீதம் எவ்வித முனுமுனுப்பும் இன்றி கட்சிக்காரர்களை எல்லாம் கடைபிடிக்கச் செய்த உங்கள் துணிவு இந்திய அரசியல் வரலாற்றிலேயே புதுமையானது;போற்றப்படத் தக்கது.

இதன்மூலம்,வீரமும் விவேகமும் சேர்ந்த அரசியல் தலைவராக இன்று நீங்கள் உயர்ந்திருக்கிறீர்கள்.

இன்றைய சூழ்நிலையில் இந்திய அரசியலில் இணையற்ற தலைமை இடத்துக்கு உங்களைத் தயார்படுத்திக் கொண்டு வருகிறீர்கள் என்பதைக் கடந்த சில மாதங்களாக வெளியிடப்படும் கட்சிக்காரர்களின் கருத்தோட்டப் போஸ்டர்கள் மூலம் கணிக்க முடிகிறது.

முலாயம் சிங்கும் மாயாவதியும் மூன்றாம் அணிக்குத் தலைமைதாங்க ஆயாசப்படும்போது அவர்களை விட ஆயிரம் மடங்கு அறிவும் அரசியல் தெளிவும் கொண்ட நீங்கள் நாளைய பாராளுமன்றத்தில் உயர் பங்கு வகிக்கவும் ஆட்சித் தலைமையில் உயர் பதவி அடையவும் தடை ஏதும் இருக்க முடியாது.

அதற்கு முன் நீங்கள் துரிதமாகச் செயல்பட்டு நிறைவேற்ற வேண்டிய
முக்கிய விஷயங்கள் இரண்டு உள்ளன.

இரண்டுமே அகில இந்திய அரசியலில் மிகப் பெரும் ஆச்சரியத்தையும் புகழையும் உங்களுக்கு ஈட்டித் தருபவை.

அவற்றில் ஒன்று:
கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்டு தமிழ் நாட்டுடன் இணைக்கச் செய்வது.

இதன் மூலம் இலங்கையின் கடலாதிக்க எல்லையைக் கட்டுப்படுத்தி தமிழக மீனவர்களின் வாழ்வுரிமைக்கு வழி வகுத்த பெருமை உங்களுக்குச் சேரும். அன்று மத்திய அரசிடம் உள்ளடி வேலை செய்து தமிழ் நாட்டின் கடல் பகுதியைத் தாரை வார்க்கச் செய்த கலைஞரின் கபட அரசியலைக் குழி தோண்டிப் புதைத்த விவேகமிக்க தலைவர் என்று போற்றி இந்திய அரசியல் அரங்கம் அதிரும்.

வாரம்தோறும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதும் அவர்களை விடுவிக்கின்ற நாடகத்தில் இங்குள்ள அரசியல்வாதிகள் கூத்தாடுவதும் தமிழக மீனவர்களின் மீது தேவையற்ற வன்மத்தை இலங்கை திணிக்கும் அபாயத்தை ஒழித்த மாபெரும் தலைவி என இத்தமிழகம் உங்களைத் தாங்கிப் போற்றும்!

தமிழ் மரபுக்கும் மண்ணுக்கும் உரிய கச்சத் தீவை, மத்திய அரசு இலங்கைக்கு விட்டுக் கொடுத்த பிறகு,தமிழர்கள் கண்டு வரும் அவலங்களை நாடு உணர்ந்து வருந்துகின்ற நிலையில், ‘கச்சத்தீவை மீட்டே தீருவதுஎன்று சபதம் எடுத்துள்ள தங்களின் தலைமையும் நோக்கமும் நூறு சதம் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகின்றேன்; வாழ்த்துகின்றேன்.

இரண்டாவது செயல் திட்டம்:
மாநிலத்தின் தலைநகரை திருச்சிக்கு மாற்றுவது.

மக்கள் திலகமாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர் அவர்களின் மக்கள் நலச் சிந்தனைகளின் அடியொற்றி நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் பெரும்பான்மைத் தமிழர்களின் ஆதரவை முழுமையாகப் பெற்று விடுவீர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை.

திருச்சியைத் தமிழ் நாட்டின் தலைநகரமாக மாற்றுகின்ற திட்டமானது,
மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் புரட்சிகரமான எண்ணமாக அவர் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் சிந்திக்கப்பட்டது.

எம்.ஜி.ஆரின் கனவாகத் தோன்றி கானலாக மாறிப் போன இத்திட்டத்தை நீங்கள் நினைவில் கொண்டு அதை இப்போது நிறைவேற்ற முடிவு செய்வீர்களானால், அது பல வகையிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத செயல் திட்டமாக, இந்திய அரசியல் வரலாற்றில்,குறிப்பாக தமிழர்களின் அரசியல் வரலாற்றில் இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு வேறு எவராலும் மிஞ்ச முடியாத சாதனையாக தனித்து நின்று, உங்களுடைய அரசியல் நிலைப்பாடுகளுக்கு மாபெரும் வெற்றிகளை ஈட்டித்தரும்.

தமிழகத்தின் மறு மலர்ச்சியிலும்,அதன் நிகரற்ற வளர்ச்சியிலும் வித்திட்ட உங்களுடைய தீரம் நிறைந்த செயல்திட்டங்களின் சிகரமாக, அத்திட்டம் இனி வரும் தலைமுறை தோறும் புகழப்பட்டு,உங்கள் பெயர் வரலாற்றின் முகவுரையாக முன் மொழிந்து நிற்கும்.

திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகராக மாற்றும் திட்டத்தை, எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது அறிவித்துச் செயல் படுத்த முனையும்போது அன்றைய அரசியல் சூழ்நிலையும் சென்னையைத் தங்கள் பூர்வீகமாகக் கொண்டு இங்கேயே அதன் சுகத்தில் சொக்கிப் போய்ச் சுருண்டுவிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பெரும் தொழில் அதிபர்களின் துர் ஆலோசனையும் நிர்பந்தமும் காரணமாக அது கைவிடப் பட்டுவிட்டது.

உண்மையில் அத்திட்டம் எவ்வளவு மகத்தானது என்பதை அறிந்திருந்தும் அன்று எம்.ஜி.ஆர் அவர்கள் ஏனோ அதை அறிவித்த நிலையிலே கைவிட்டு விட்டார்.பத்திரிகை ஊடகங்களும் அதன் முக்கியத்துவம் பற்றித் தூண்டாமலும் கருத்து ஆக்கத்தைத் தொடராமலும் விட்டு விட்டன.

சொல்லப்போனால், தமிழகத்தின் தலை நகராகச் சென்னை, இன்று ஒரு தலையாய நரகமாகத்தான் அவலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

குண்டும் குழியுமான குறுகிய சாலைகள், நாற்றமெடுத்த குப்பை மேடுகள்,நாகரிகமற்ற சந்துகள்,சாக்கடைகள், விரிவாக்கம் செய்ய வழியில்லாத நடைபாதைகள், குடிநீர் வசதியும் காற்றோட்டமும் இல்லாத குடும்ப வாழ்க்கை, ஒருபக்கம் ஆடம்பரப் பங்களாக்கள் அதன் அருகிலேயே குடிசைகள்,குப்பைமேடுகள்,முறையற்ற தொழிற்சாலைகள்,தகர டப்பாக்களான கடைகள், சுகாதாரமற்ற ஓட்டல்கள்......

ம்ம்ம்பட்டியலிட்டால் நமக்கு பதைபதைப்பு நீளச் செய்யும் மாநரகமாகச் சென்னை மாநகரம்..

தலைநகர் சென்னை என்பதற்கான லட்சணங்கள் சிறிதுமற்ற நிலை பெருகி வரும் சூழ்நிலையில் இருக்கின்ற சாலைகளை அடைத்துக் கொண்டு மெட்ரோ ரயில்களை விட வேண்டிய அவலத்தில் நிர்வாகம்.

ஒரு தலை நகருக்குரிய கம்பீரமும் அழகும் தோற்றப் பொலிவும் இதற்கு இருப்பதாக எவரேனும் நினைத்துக் கொண்டிருந்தால் அவர்கள் கிணற்றுத் தவளைகளே அன்றி கற்றறிந்தவர்கள் அல்லர்; தமிழகத்தின் உண்மையான வளர்ச்சியில் அக்கறை அற்றவர்களாகவும் பெரும்பான்மைத் தமிழர்களின் வாழ்வைச் சுரண்டிப் பிழைக்கும் சுயநலவாதிகளாகவும்தான் அவர்கள் இருப்பார்களே தவிர உண்மைத் தமிழர்களாக இருக்க முடியாது.

சீர்குன்றிப்போய்,சிறப்பிழந்த சென்னையை மேலும் விரிவடைச் செய்தல் என்பது அதன் பழம் பெருமையைக் குலைத்து குப்பை மேடாக்கும் முற்சியாகத்தான் அதன் வளர்ச்சியைக் காண முடியும்.

ஒரு மாநிலத்தின் தலைநகர் எப்படிப் பொலிவுடன் இருக்க வேண்டும்?” என்பதற்கு பெங்களூரூவையும் ஹைதராபாத்-செகந்திராபாத் நகர்களின் வளர்ச்சியையும் போய்ப் பார்த்தால் மட்டும் போதாது அவற்றின் தோற்றப் பொலிவையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஏன் பஞ்சாப்,ஹரியாணா மாநிலங்களின் ஒரே தலைநகரான சண்டீகரின் வடிவமைப்பைப் பார்த்துச் சிந்திப்பது சாலச் சிறந்தது.
.
இந்த நகரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், சென்னையைப் பொறுத்தவரைநாம் குண்டுச் சட்டிக்குள்தான் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கின்றோம்; சென்னையை விட்டு வெளியே சிந்திக்கத் தெரியாத சிக்கல் கொண்டவர்களாகத்தான் வாழ்கிறோம்என்பது உள்ளங்கையிடை நெல்லிக் கனியென விளங்கும்.

ஏறத்தாழ எழுநூறு கி.மீ நீளமும் ஐந்நூறு கி.மீ.அகலமும் கொண்ட
மாநிலமாகத் திகழும் தமிழகத்தின் தலைநகர் அதன் வட கிழக்குப் பகுதி முனையில் இருப்பது பூகோள ரீதியிலும் சரியில்லை: பொருளாதார ரீதியிலும் சரியில்லை. ஏன் கலாச்சாரப் பண்பாட்டு ரீதியிலும் சரியில்லைதான். வாஸ்து அமைப்புப்படியும் மிகப் பெரும் கோளாறான இடத்தில் தலைநகரம் தள்ளாடிக் கொண்டிருப்பதை உணரலாம்.

தென் முனையில் நெல்லை-கன்யாகுமரியில் இருக்கின்ற தமிழன் பல்வகையிலும் தனது வாழ்வாதாரத்தின் வசதிக்காக வடகோடிக்கு 700 கி.மீ.தொலைவுக்கு வந்து திரும்புவதும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அவன் 500 கி.மீ தூரம் வந்து செல்வதும் தெற்கு மேற்குப் பகுதி மக்களுக்கு பொருளாதாரச் சுமையைத் தருவதாகவே இருக்கிறது என்பதை நமது அரசியலாளர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை..

தவிர மாநிலத்தின் உயர்தர வசதிகள் அனைத்தையும் அதன் வடகிழக்குப் பகுதியிலேயே குவித்து வருவது என்பது, ‘வடக்கு வாழ்கிறது;தெற்கு தேய்கிறதுஎன்கிற விபரீதச் சிந்தனையை இன்றில்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் தெற்கு மேற்குப் பகுதித் தமிழர்களுக்குத் தந்து விடும்.

ஒரு நாட்டின் தலைநகர் அதன் மையப் பகுதியில் இருப்பதே அனைத்துத் தரப்புப் பகுதி மக்களுக்கும் சம வாய்ப்பைத் தரும் சிறந்த அரசின் சிறந்த நிர்வாகப் பகிர்வாக அமையும்என்ற இலக்கணத்தைப் புத்திமான்கள் ஏற்பார்கள் என்றால்,தமிழகத்தின் தலை நகர்அதன் மையப் பகுதி என ஏற்றுக் கொள்ளப் படும்திருச்சியை அடிப்படையாகக் கொண்டு புதிதாக ஏற்படுத்தப் படுவதே நியாயமும் நீதியும் ஆகும்.

இதற்கான புதிய நிர்மாணக் கட்டமைப்புக்களை உருவாக்கும் செயல் திட்டத்தை, தமிழர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள தாங்கள் முன் வந்து சிந்தித்து எடுக்க வேண்டும்.

இதற்கான பெருமையும் புகழும் புண்ணியமும் முழுக்க முழுக்க உங்களையே சார வேண்டும் என்பதே எனது நெஞ்சம் நிறைந்த விழைவு..

தமிழகத்தின் புதிய தலை நகராக,திருச்சிப் பகுதியை புதிய நிர்மாணமாக உருவாக்குவதன் பயன்களை உங்களுக்கு விவரிக்க வேண்டிய அவசியமில்லைதான்.

கிருஷ்ணன்பாலா
எனினும் அவற்றில் சில விஷயங்களை கொஞ்சம் கோடிட்டுக் காட்டுவது நல்லதென நம்புகிறேன்:

1.
லட்சக் கணக்கான கோடிகளில் புதிய முதலீடுகளில் கட்டுமாணப்
பணிகள் மற்றும் புதிய தொழில்சாலைகள் இப்பகுதியில் உருவாகும்

2.
லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்புப் பெறுவார்கள்.அதன்
மூலம் வேலை வாய்ப்புத் திண்டாட்டம் முற்றிலும் ஒழியும்.

3.
நீர் வளம் மிக்க பகுதி இது என்பதால் குடி நீர்ப் பிரச்சனையற்ற
தலைநகர் பகுதி என்று மட்டும் இல்லாது,’பசுமை நிறைந்த தலைநகர்
இதுஎனும் தகுதியையும் பெறும்.

4.
தமிழகம் முழுவதையும் இணைக்கும் போக்கு வரத்து மையம்
எனும் முழுத் தகுதிக்கும் உரிய தலைநகர் இதுஎன விளங்கும்.

5.
அனைத்துத் தரப்பு மக்களும் எளிதில் சென்று திரும்பும் நிர்வாகத்
தலைநகர் என்ற பெருமைக்கு உரிய பகுதியாக விளங்கும்.

6.
இதன் சுற்று வட்டாரப் பகுதிகள் தமிழர்களின் வரலாற்றுப்
பகுதிகளாக இருந்தவை என்பதால் இப்பகுதி புதிய தலைநகர்
என்று ஆக்கப் படுவதன் மூலம் தமிழர்களின் பண்பாடும் வரலாறும்
எதிர்காலத்தில் உலக அளவில் முக்கியத்துவம் பெறும்.

7.
தலைநகரம் என்ற தகுதி வரலாற்றுக் காலம் தொட்டே
அடைந்திருந்தது திருச்சி,உறையூர்ப் பகுதிகள். இது தமிழர்களின்
தலைநகரம் என்று ஆக்கப்படுவதன் மூலம் தமிழ்
உணர்வாளார்களின் ஒட்டு மொத்த ஆதரவையும் உங்களுக்குப்
பெற்றுத் தரும் உன்னதத் திட்டமாக அமைந்து,அதன் மூலம்
அரசியலில் உங்களுக்கு எதிரிகளே இல்லை எனச் செய்து
விடும்.ஒட்டு மொத்த தமிழர்களும் உங்களை ஆயுள் முழுதும்
ஏற்றி வைத்து வாழ்த்துவர்..

8.
எம்.ஜி.ஆர் அவர்களின்ஒப்பற்ற லட்சியத்தை நனவாக்கிய
பெருமை உங்களின் அரசியல் வரலாற்றில் இமயச் சிகரமாய்த்
திகழும்.
.
9.
எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் சரித்திர வெற்றி பெற்று,
இந்த அளவுக்கு மறுபடியும் ஆட்சிப்பீடத்தில் ஏற்றி வைத்த
திருவரங்கன் பள்ளி கொண்டெழுந்துள்ள பூலோக
வைகுந்தமாகிய பகுதியே, தமிழகத்தின் தலைநகர் என்பது
காலத்தின் கட்டாயம் என்பதாக அமைந்த திட்டம் இது
என்பதை எவரும் மறுக்க முடியாது.

மதிப்புக்குரிய மேடம் அவர்களே,

திருச்சியைத் தலை நகராக்கும் வல்லமையும் வாய்ப்பும்
இறைவன் உங்களுக்குத் தந்த வாய்ப்பெனக் கருதுங்கள்.

இதைச் செய்வீர்களானால்-
கச்சத்தீவுப் பிரச்சினையும் இராமேஸ்வரம் மீனவர் வாழ்வாதாரப்
பிரச்சினையும் ஏன் இலங்கைப் பிரச்சினையும் உங்கள் காலடியில் தானாக வந்து தவம் கிடக்கும் பாருங்கள்.

வாழ்த்துக்கள்.
உண்மையுடன்,
கிருஷ்ணன்பாலா
7.2.2012 / தைப் பூசத் திருநாள்