Friday, December 31, 2010

வருக,வளமான ஆண்டு!



ஆண்டுகள் தோறும் புதிய
ஆண்டினை வரவு கூறி
பூண்டிடும் உணர்வினாலே
புதுமையை நாடு கின்றோம்;


வேண்டுதல் மட்டும் எண்ணி
வேறொன்றைச் செய் வதாலே
ஆண்டவன் எண்ணம் வேறாய்
ஆனதைக் காணு கின்றோம்!


எதுநலம் தருமோ;அதனை
எண்ணிடும் அறிவு கெட்டு
பொதுநலம் உணர்ந் திடாமல்
புன்மையை நாடு கின்றோம்!!


சுயநலப் பேய்கள் செய்யும்
சூழ்ச்சியில் மூழ்கி;வாழ்வுப்
பயனதை உணர்ந் திடாமல்
பள்ளத்தில் வீழு கின்றோம்!


பிறர் மனம் கண்டு அன்பு
பேணினோம் இல்லை;ஏழை
வறுமையில் வாடக் கண்டும்
வசதியைக் குறைத்தோம் இல்லை;


அறம் எனக் கண்டும்;வாழ்வில்
அடுத்தவர் துன்பம் நீக்கும்
நெறிகளில் நின்றோம் இல்லை;
நேர்மையைக் கொண்டோம் இல்லை!


வரைமுறை இன்றி ஆசை
வளர்த்திட வாழு கின்றோம்:
திரைமறைவாகச் செல்வம்
தேர்ந்திட வாடு கின்றோம்!


அரசியல் நேர்மை கெட்டு
அறநெறி முறையும் கெட்டு
தரம்மிகு கொள்கை தன்னைத்
தலைமுறை தவற விட்டோம்!


எது சரி என்னும் நல்ல
இலக்கணம் மறந்து இங்கு
பொது நலம் அழிய; நித்தம்
பொய்களில் விளைந்து விட்டோம்!


பொல்லாங்கு எல்லாம் இன்று
பொசுங்கிட வேண்டும்; மக்கள்
எல்லோரும் ஒன்று போல
இறைவனை வேண்ட வேண்டும்!


எல்லோரும் இன்புற்றிருக்க
இறையருள் நினைப்ப தல்லால்
நல்லோரின் எண்ணம் வேறு
நாடுதல் இல்லை அன்றோ?


வருகின்ற காலம் நாட்டில்
வளம் எலாம் சேர; மக்கள்
பெருமையே கொள்ளும் வண்ணம்
பிறக்கட்டும் புதிய ஆண்டு!


அனைவருக்கும் வாழ்த்துக்களுடன்,
கிருஷ்ணன் பாலா
31.12.2010

Tuesday, December 28, 2010

பெண்ணின் பெருமை (இலக்கியத் தடங்கள்-4)

றிவார்ந்த நண்பர்களே, அன்புச் சகோதரிகளே,

கல்லாத மாந்தருக்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்;
அல்லாத மாந்தருக் கறம் கூற்றம்; மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய் கூற்றம்;கூற்றமே
இல்லிற் கிசைந் தொழுகாப் பெண்

என்று தனதுவாக்குண்டாம்என்னும்மூதுரையில் மொழிந்து விட்டுச் சென்றாள், நம் பாட்டிகளுக்கெல்லாம் பாட்டி, அவ்வைப் பெருமாட்டி.


என்று சொன்ன அவ்வையின் கருத்தில் இல்லறத்துக்கு உட்பட்டு வாழாத பெண் குடும்பத்துக்கு கூற்றம் என்றாகின்றாள்..

கூற்றம் என்றால் கேடு; அழிவு சக்தி; பகை என்றெல்லாம் பொருள்.கூற்றுவன் என்பது எமனைக் குறிப்பிடும் சொல்; உயிரை எடுக்கின்ற அவனது குணமே கூற்றம் என்று குறிக்கப் படுகிறது.

சில கருத்துக்களை, நேரிடையாகச் சொன்னால் சிறப்பிருக்காது;சிலருக்குச் சினம் பீறிட்டு எழும்.

அவ்வையின் இப்பாடல் இடித்துச் சொல்வது போன்ற எடுத்துக் காட்டு; உவமை நவிற்சி அணியாய் அமைந்த அருமையான வெண்பா.

இல்லிற் கிசைந்தொழுகாப் பெண்என்பது குடும்ப நெறிகளுக்குக் கட்டுபட்டு நடக்காத பெண்என்று பொருள்.அத்தகையவள் குடும்பத்துக்கே கேடு செய்கின்ற கூற்றாக (பகையாக) மாறுவாள் என்பது இதன் விளக்கம்.

கற்றுணர்ந்தவர்களின் சொல்லானது கல்லாத மூடர்களுக்குக் கடும் பகையாகத் தோன்றும்; தீமைகளைப் புரிகின்ற மாந்தர்களுக்கு (இவர்களே அல்லாத மாந்தர்;அதாவது மனிதர் அல்லாதவர்கள்) அறம் கூற்றமாகும்.

இந்த இரண்டு உதாரணங்களைச் சொல்வதன் மூலம் கல்லாத மாந்தர்கள் கற்றறிந்த பெரியோரின் சொல்லைக் கேட்டு நடக்க வேண்டும் என்றும், நல்ல பண்புகளைக் கற்றுக் கொள்ளாது தீய வழிகளில் வாழ்கின்றவர்கள் தங்களைத் திருத்தி கொண்டு அறநெறிகளைப் பின் பற்றி வாழத் தலைப்பட வேண்டும் என்றும் மறைமுகமாகச் சொல்கிறார்.

வாழை மரத்தின் குலையாகிய அதன் காய் முற்ற முற்ற அதை ஈன்ற தாய் மரமானது வலுவிழந்து வீழ்ந்து விடுகிறது.அதற்கு முக்கியக் காரணம் வாழை மரம் மற்ற மரங்களைப் போல் வலுவாக இல்லாமல் மெல்லிய தன்மையோடு இருப்பதுதான்.

மெல்லிய அதன் தன்மையினாலேயே,தான் ஈன்ற காய்களின் கனம் தாங்க இயலாது அது சாய்ந்து வீழும் நிலைக்கு ஆட்பட்டுப்போய் விடுகிறது.இது இயற்கை; மாற்ற முடியாது.

ஆக, இந்த மூன்று வகையான உதாரணங்களையும்இல்லிற்கு (குடும்ப நெறிகளுக்கு) இசைந்தொழுகாப் பெண்ணுக்கு உவமையாக்கிச் சொன்னதன் உட்பொருள், ஒன்று:கல்லாத மூடரைப் போல் அவள் இருப்பதால் குடும்ப நெறிகளைக் கற்றுத் தெளிவதில்லை;குடும்பப் பண்புகள் என்னவென்று அறியாதவளுக்கு, அதைப் பின்பற்றி வாழும் குடும்பத்தில் மற்றவர்களுக்குக் கூற்றம் என்றாகி ஆகி விடுகிறாள்

இரண்டு: ஈகை,தயை,அன்பு,தொண்டு,கனிவு,அறிவுடைமை இவையே மனிதர்களுக்கான உயரிய குணங்கள். இவை இல்லாத மனிதர்மனிதரே அல்லாதவர்என்கிறார் அவ்வை; மனித நேயமற்ற இவர்களுடைய செயல்களுக்கு அறமே கூற்றாக மாறி அவர்களை அழிக்கும் என்கிறார்.

(அரசியல் பிழைத்தார்க்கு,அரசியலில் நேர்மை குன்றிய, அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பிழை செய்கின்றவர்களை-அறமே கூற்றாகிக் கொல்லும் என்று இளங்கோ அடிகள் தனது சிலப்பதிகாரத்தில் சொல்லியிருப்பதையும் இங்கு நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்)

அதைப் போலவே, குடும்பம் என்ற வாழ்க்கை நெறியில் இல்லாதிருப்பவளுக்கு இல்லறமே கூற்றமாகி விடுகிறது. அந்த நெறிகளிலிருந்து பிழன்று, தறிகெட்டுப் போய் விடுகின்ற சூழ்நிலைகளால் அவளை நல்லறம் கூற்றாகிக் கொன்று விடுகிறது.

மூன்றாவதாக மெல்லிய வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் என்ற உவமை.வாழை போன்ற அந்த மெல்லியலாள் தான் ஈணுகின்ற காய்களாம் குற்றக் குலைகளால், அவற்றின் சுமைகளால் நாளுக்கு நாள் வலுவிழந்துபோய், அவளுடைய நெறி தவறிய வாழ்க்கையினால் அவள் அந்தக் குடும்பத்துக்கே கூற்றமாகி விடுகிறாள்இறுதியில் அவளும் அழிந்து அந்தக் குடும்பத்துக்கும் களங்கம் உண்டாக்கி விட்டவள் ஆகிறாள்.

நான்காவதாக-
இல்என்பது  ‘இல்லம்’ என்று பொருள் தரும். அது கணவன்,குழந்தைகள், கணவனின் பெற்றோர், கணவனுக்கு உடன் பிறந்தார்,அவர்களைச் சார்ந்த சுற்றம் என அனைத்தையும் உள்ளடக்கியது

அதன் பரம்பரியத்துக்கேற்ப வாழும்  ‘அறிவு இல்லாதவள்’ என்பதையும் ‘கல்லாத மாந்தர் கூட்டதைச் சேர்ந்தவள்’ என்பதையும் ‘குடும்ப அறநெறி பேணாதவள்’ அல்லாத மாந்தர்எனப் பட்டது போல்  ‘பெண்ணே அல்’ல என்பதையும்; வாழையைப் போல் மெல்லியலாளான அவள் ஈணும் ஒழுக்கேடான வினைகளே அந்த வாழையின் காய்க் குலைபோல் நாளுக்கு நாள் முற்றிக் கூற்றங்களாகும்’ என்பதையும் உள்ளடக்கி ‘இல்லுக்கு இசைந்தொழுகாப் பெண்’ என்று முடிக்கின்கிறார் அவ்வை.

இந்த உலகியல் நடைமுறைகளில் உள்ள உண்மைகளின் அடிப்படையிலும் ,குடும்ப ஒழுக்க நெறிமுறைகளின்படியும் வாழாத பெண்ணுக்கு ஒழுக்கக் கேடான செயல்கள் மிகுந்து அந்தச் செயல்களே அவளுக்குக் கொடுங் கூற்றாய் மாறிவிடும்என்ற கருத்தை  ‘இல்’ வாழும் இல்லத்தரசிகளுக்கு ஏற்றம் தரும் எச்சரிக்கையாக இந்தப் பாடல் மூலம் நீதி மொழி உரைக்கின்றாள், அவ்வைப் பெருமாட்டி.

அதென்ன?,

இல்லிற் கிசைந்தொழுகாப் பெண் கூற்றம்தான்என்று ஒரே வரியில் சொல்லிவிட்டுப் போகாமல் அதற்கென்று உவமைகளையும் சேர்த்துக் கூற வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது அவ்வைக்கு? என்று சிலர் கேட்டார்கள், முகநூலில்(Facebook ).

சிலர், ‘ஒரு பெண்ணை அடிமையாகக் கருதி  பெண்களின் சுதந்திரத்துக்கே எதிரானது போல் தோன்றவில்லையா? என்றும் சந்தேகம் எழுப்பினர்.

இன்னும் சிலர், ‘இதுபோல் தினம் ஒரு பாடலைக் குறிப்பிடுங்கள்; பலருக்கும் பயன் உள்ள கருத்துக்களை மனதில் பதிய உதவும்என்றனர்.

பலரும் பலவிதத்தில் அவ்வையின் இந்தப் பாடம் பற்றிக் கருத்துக்கள் எழுதியுள்ளதற்கிடையில், நமது தமிழ் இசைத் துறையில் ஒப்பற்ற ஞானவானாகத் திகழ்ந்து, தேனான பாடல்களைப் பொழிந்த அமரர் 
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் புதல்வரும் உருவத்திலும் இசையின் படிவத்திலும் தனது தந்தையை அப்படியே நினைவுபடுத்திக் கொண்டிருப்பவருமான டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம் அவர்கள் முகநூலில் நாம் அவ்வையின் தமிழ் பற்றி எழுதுவதைப் பார்த்துப் பெரும் ஆறுதல் கொள்வதாக எழுதியிருந்தார்’

அது  நமக்கு மேலும் அவ்வையின் அறிவுத் தமிழையும் அழகுத் தமிழையும் ஞானத் தமிழையும் எடுத்து விரித்து கூறுவதற்கான கூர்மையைத் தூண்டுகிறது.

நண்பர்களே,சகோதரிகளே,

இங்கே நாம்இலக்கியத் தடங்கள்என்ற தொடரை  எழுதுவதன் இலக்கு, அறிவும் இலக்கியச் செறிவும் நிறைந்த விஷயங்களை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குத் தருவது மட்டும் அல்லாது,  ‘தரமான தமிழையும் உரமான பண்பாட்டுச் செய்திகளையும் தெள்ளு தமிழ்ச் சுவைஞருக்கும் விளைபயிர்களாகிய நமது இளைஞருக்கும் தர வேண்டும்’ என்ற நோக்கத்தையும் உள்ளக்கியதுதான்.

 ‘நம் கடன் தமிழ் செய்து கிடப்பதே

தமிழர்களாகியநாம், “நமது பண்பாடும் கலாச்சாரமும் இலக்கணமும் மாறா வாழ்வைத் தொடர்ந்து மேற்கொண்டிருக்க வேண்டும்என்ற குறிக்கோளுடன் படைக்கப் பட்டவைதாம் நமது தமிழ் இலக்கியங்கள்.

‘இலக்கிய’ம் என்றாலே  ‘வாழ்க்கைக்குரிய மேம்பட்ட இலக்கை நோக்கி இயம்புவது’  (இலக்கு + இயம் =இலக்கியம்)  என்றுதான் பொருள்.

உயர் மாண்புடைய இலக்கியக் கருவூலங்கள்,இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் அதிகம். சொல்லப்போனால் பிற மொழி இலக்கியச் செழுமைக்குத் தமிழே தாய்.

ஒப்பற்ற ஞானியராலும்,முனிவர்களாலும்,தெய்வீகப் புலவர்களாலும் படைக்கப்பட்டவை ‘ நமது இலக்கியங்கள்.’ அவற்றைப் ‘படைக்கப்பட்டவைஎன்று சொல்வதை விட ‘அருளப் பட்டவை’ என்று சொல்வதில்தான் நான் இறும்பூது எய்துகின்றேன்.

காரணம், நமது தமிழ் இலக்கிய கர்த்தாக்கள்,சாதாரண மனிதர்களைப் போல் வாழாமல் மக்களுக்காகவும் மக்களின் மேம்பட்ட வாழ்வுக்காகவும் வாழ்ந்தார்கள்; சிந்தித்தார்கள்; செயல்பட்டார்கள்.

அவர்களின் சித்தத்தில் இறைமாட்சி முழுமையாகக் குடிகொண்டிருந்தது. அந்த இறைமாட்சியோடு அவர்கள் கூறியதெல்லாம் அருளுரைகள்தானே?

நமது தமிழ் இலக்கிய கர்த்தாக்களில் குறிப்பிடத் தக்கவர்களான அகத்தியமுனிவர், திருமூலர், தொல்காப்பியர், அவ்வை, திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பன்,மாணிக்க வாசகர், மூவர் எனப் படும் அப்பர், சுந்தர்,திருநாவுக்கரசர், நாயன்மார்கள் ஆழ்வார்கள், சித்தர்கள், தாயுமானவர், வள்ளல் பெருமானார்,பாரதி முதலான ஏராளமான சான்றோர்கள் தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் கிடைத்த தெய்வீகப் பொக்கிஷங்கள்.

மொழியியல்,இறையியல்,ஞானம்,யோகம்,வைத்தியம்,வாழ்க்கை,சமூக நீதி,அரசாட்சி,அகம்,புறம் என்று உலகியலில் அனைத்துத் துறைகளிலும் அறம் ஒன்றையே குறிக்கோளாக நாட்டி, வாழ்ந்த அவர்கள், தங்கள் செழும்பட்ட சிந்தனையில் தோன்றிய கருத்துக்களை அழகான உலகியல் உவமைகளுடன், கற்றாரையும் கேட்டாரையும் பிணிக்கின்ற வண்ணம் சொல்லியும் எழுதியும் நமக்கு இலக்கிய அறிவை ஊட்டி வைத்தனர்.

இவர்கள் கூறிய கருத்துக்கள் யாவும் நமது வேதங்களுக்கு இணையானவை. சொல்லப் போனால் சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாத வேதப் பொருளின் தத்துவங்களை அழகுத் தமிழில் பல்வேறு வடிவங்களில்
பல்வேறு படிமானங்களில் பாடல்களாக எடுத்துரைத்துள்ளார்கள்.

சான்றோர் வாக்குஎன்று நம் முன்னோர், போற்றிப் பணிந்து ஏற்றுத் தொழும்படி வாழ்ந்தவர்கள் உரைத்த மொழிகள் யாவும் நமக்கு 
வேதங்களே அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

நிறைமொழி மாந்தர் வாக்கினில் எழுந்த
மறை மொழிதாமே மந்திரம் என்ப
என்ற வரிகளை உணர்ந்தால் இதன் பொருள் எளிதில் விளங்கும்.

‘நிறைமொழி மாந்தர்’ என்பது, ‘தமக்காக அன்றி உலகின் நன்மைக்காக வாழும் ரிஷிகள்;கவிகள்,புலவர் பெருமக்கள்,மேலோர் (மேன்மையான குண நலன்களைக் கொண்டவர்கள்) மற்றும் நூலோர் ஆகியசான்றோர்களைக் குறிக்கும் வார்த்தைதான்.

எனவே,சான்றோர்களாகிய நம் முன்னோர் உரைத்த மொழிகளை எல்லாம் இறைத் தன்மையோடு அருளப் பட்ட மறை மொழிகளாக நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு பொருள் குறித்துப் பாடியிருந்தாலும் அவர்களுடைய கருத்துக்கள் யாவும் மனிதனுக்கு நீதியையும் அறத்தையும் போதிக்கக் கூடியவையே.

இக்கருத்தை ஏக மனதோடு உரைக்கும் பாடல் ஒன்று அவ்வை பாடியதாக நமக்குக் கிடைத்துள்ளது. அது அவ்வையார் என்று சங்க காலத்தில் வாழ்ந்த தெய்வீகப் புலவராக இருக்க முடியாது’ என்று கருத இடமுண்டு; ஆயினும் அதன் பொருள் பற்றிச் சிந்திப்பது ஒன்றே நமக்கு பெருமை என்பேன்.

அப்பாடலின் கருத்தானது ‘வேதரிஷிகள் முதல் மகாகவி பாரதி வரை இந்த மானுடத்துக்குச் சொல்லி வைத்த கருத்துக்கள் யாவும் ஒரே குறிக்கோள் உடையவைதாம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டு’ம் என்கிறது..

அது-

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர்தமிழும் முனிமொழியும் கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்

திருவள்ளுவ தேவர் எழுதிய திருக்குறளும், நான்கு வேதங்கள் சொல்லுகின்ற தத்துவங்களின் முடிவும்,அப்பர்,சுந்தர்,ஞானசம்பந்தர் ஆகிய மூவர் இயற்றிய பக்திப் பனுவல்களும்,முதன்மையான முனிமொழி என்று போற்றப் படும் மாணிக்க வாசகப் பெருமானார் மொழிந்த திருவாசகக் கோவையும் திருமூலர் அருளிய திருமந்திரமும் ஒரு பொருளின் தத்துவார்த்தத்தையே காட்டுகின்றன என்பதை உணர்ந்து கொள்என்பது இதன் பொருள்.

’நமது சான்றோர்கள் கூறிய எந்தக் கருத்தும் இந்த மானுட வாழ்க்கையை உயரிய நிலைக்குச் செலுத்தக் கூடியதே’ என்பதையும்அவர்களுடைய படைப்பிலக்கியங்கள் யாவும் நமது முன்னோர்களின் ஒப்பற்ற வாழ்க்கையின் பிரதிபலிப்புக்களே என்பதையும்  நாம் நினைவு கொண்டு வாழ்வது நமது சந்ததிகளை சத்தான குடிமக்களாக விளைவிக்கும்’ என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

‘அத்தகைய சான்றோர் சொன்ன கருத்துக்கள் யாவும் காலங்கள் மாறினாலும். அவற்றின் அறநெறிக் கூற்று மாறாதிருந்து நம்மை வழிப்படுத்தும் தெய்வீக சக்தி மிகுந்தவை’ என்பதில் இரு வேறு எண்ணம் நமக்கிருக்கக் கூடாது.

இந்த சான்றோர்கள் வரிசையில் நின்று, அழியாப் புகழுடன் வாழும் அவ்வைப் பெருமாட்டியின் அற்புதமான சிந்தனைத் தொகுப்புக்களில் ஒன்றுதான்வாக்குண்டாம்என்னும்மூதுரை’.

இந்த மூதுரையின் 40 பாடல்களும் சொல்லறம் கூட்டி நல்லறம் நாட்டுபவை.

அதில் ஒன்றுதான் இங்கே ஆரம்பத்தில் குறிப்பிடப் பட்ட பாடல். அது உங்களுடைய இலக்கியச் சுவைக்காக மட்டுமின்றி, வாழ்க்கையின் இலக்கணச் சுவைக்காகவும் எடுத்துக் காட்டப் படுகின்றது.

பன்னெடுங் காலத்துக்கு முன்பே அவ்வை மூதாட்டி சொன்ன, இந்தப் பாடல் முக்கியமாக இன்றைய நம் நாட்டுப் பெண்மணிகளின் பண்பாட்டு மேன்மைக்காக, அவர்களின் பெருமை மிக்க வாழ்வுக்காகச் சிந்திக்கப்பட்டது.

நாகரீக மோகமும் புரட்சீகர எண்ணங்களும் ஓங்கி, பெண்ணீயம் பேசப்படும்
இந் நாளில் பெண்மணிகளின் பெருமாட்டியாய், பெரு மணியாய்ப் பிறந்த அவ்வையின் இக் கருத்து ஆயிரங்காலத்துப் பயிராகவும் பெண்ணினத்தின் பெருமை காக்கும் வேலியாகவும் திகழ்கிறது.

பெண்ணுக்குரிய மேலான பண்புகளையும் வாழ்க்கை நெறிகளையும் கற்றுக் கொள்ள விழைவோர் அவ்வையின் படைப்புக்களைக் கட்டாயம் படிக்க வேண்டும்.

அவை பெண்களின் பெருமைகளை வலுவாக்கி, சமுதாயத்தில் அவர்களுக்குப் பெரிய மரியாதையை ஏற்படுத்த வல்லது.

பெண் என்பவள் எப்படி இருக்கக் கூடாது என்பதை இடித்துச் சொல்லி, உலகில் நடைமுறையில் உள்ள கேடுகளையும் இயற்கையாய் உள்ள கேடுகளையும் உவமையாய் எடுத்து காட்டும் அறிவும் அழகும் எளிமையும் கூட்டும்

கல்லாத மாந்தருக்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்;
அல்லாத மாந்தருக் கறம் கூற்றம்; - மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய் கூற்றம்;கூற்றமே
இல்லிற் கிசைந் தொழுகாப் பெண்

என்ற இப்பாடலை நமது தமிழ்ப் பெண்டிர் கட்டாயம் ஊன்றிப் படித்து அதன் மெய்ப் பொருளைக் காண வேண்டும்.

அன்பிற்குரிய சகோதரிகளே,

இக் கருத்தும் பாடு பொருளும்-
‘நாகரீகம்மற்றும்பெண்ணுரிமை’ என்ற பெயரால்நல்ல பண்புகள் என்பது தமக்கு இடப் படும் விலங்குகள்என்று  பேசி,அவற்றை உடைத்தெறிந்து, வீட்டை விட்டு வீதியில் வந்து வீறுகொண்டெழும் பெண்டீர்களைக் கூப்பிட்டுச் சொல்லவில்லை’ 
என்பதைக் கவனிக்க வேண்டும்.

அவ்வையின் கருத்தாழம் மிக்க பாடல்களைச் சிந்தித்துச் செயல் படும் பெண்கள் நிச்சயம் மனித குலத்தின் மகத்தான சக்திகளாகத் திகழும் நிலையை எய்துகிறார்கள்.

அவ்வை மொழி உணர்ந்து அனைவரும் வாழ்வோமாக!

இவண்-
கிருஷ்ணன் பாலா
28.12.2010 /10:30 AM