Sunday, December 5, 2010

அறிவுடையோர் அறிக!-2


நண்பர்களே,

இத் தொடரானது, அறிவுக்கும் மானுட இயலுக்கும் தொடர்புடைய விஷயங்களை மட்டுமே சிந்தனை கொண்டு எழுதப் படுகிறது.

‘உண்மையை அறிவுப் பூர்வமாக உரைக்கும்போது வரலாறுகள் திசை மாறிப் போவதும் திக்குமுக்காடிப் போவதும் உண்டு. அதனால் ‘வரலாறுகள் எந்த அடிப்படையில் எழுதப் படுகின்றன’ என்பதும் யாரால் எழுதப் படுகின்றன?’ என்பதும் மறு பரிசீலனைக்கு உரியதாகி விடுகின்றது.

இன்று, உலகில் எழுதப்பட்ட வரலாறுகள் எல்லாம் கடந்த 2500 ஆண்டுகளை மட்டுமே சொல்கின்ற செய்திகளை உள்ளடக்கியது. அதுவும் உலகெங்கிலுமான நிகழ்வுகளைக் கோர்வைப் படுத்தவில்லை. நான்கு குருடர்கள் ஒரு யானையைத் தடவிப் பார்த்து அவரவருக்குத் தோன்றியஉண்மைகளைச் சொன்னது எத்தகைய உண்மையோ அத்தகையதே, ஐரோப்பியர்களும் மேலை நாட்டினரும் நாட்டிச் சென்ற நமது நாட்டின் சரித்திர வரலாறுகள்.

வரலாற்றாசிரியர்களுக்கும் தொல்லியல் ஆய்வாளர்களுக்கும் லட்சக் கணக்கான,ஏன் கோடிக்கணக்கான ஆண்டுகள் வித்தியாசப் பட்டு உண்மைகள் உதைபடும் நிலையில், எழுதப்பட்டுள்ள  வரலாறுகளைப் படித்துத்தான் இன்று ஆயிரக்கணக்கானோர் 'Ph.D' பட்டம் பெற்று மிகப் பெரும் வரலாற்றுத் துறைப் பேராசிரியர்களாகத் திகழ்கின்ற விந்தை, இங்கு மட்டுமல்ல அமெரிக்கா,பிரிட்டன்,ஆஸ்திரேலிய,கனடா உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இருப்பதுகண்கூடு.

டைனோசர்களின் வாழ்க்கை, பல கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதுஎன்று தொல்லியலாளர்களும்,உயிரினங்களின் வாழ்வு குறித்து ஆராயும் உயிரின ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர். அவ்வாறாயின், அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் உள்ளிட்ட பிற உயிரினங்களின் வாழ்க்கை குறித்து மனிதனால் அறுதியிட்டுக் கூறும் நிலை இதுவரை ஏற்படவில்லையே! ஏன்?

சூரிய சித்தாந்தம்என்ற ஒரு நூல். இன்று அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் ASTRONOMYஆராய்ச்சிப் படிப்புக்கு முக்கியப் பாட நூலாக இருக்கிறது. நமது ஜோதிட அறிவுக்கே இதுதான்அல்ஜீப்ரா’ .

இதை, சூரிய பகவானே நாரத முனிவருக்கு உபதேசித்ததாகவும் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இது எழுதப் பட்டதாகவும் இந் நூலிலேயே கருத்துச் சொல்லப் பட்டிருக்கின்றது.

அப்படியானால் எந்தப் பனை ஓலையில், யாரால், முதன் முதலில் எழுதப் பட்டது?’ என்று அறிவு ஜீவித் தனமாகக் கேள்விதான் கேட்க முடியுமே தவிர,இன்ன கால கட்டத்தில், இன்னாரால், இன்ன விதத்தில், இந்த உண்மை கண்டு பிடிக்கப் பட்டது என்று யாராலும் தெளிவிக்க முடியாது.

மனிதனே 100 ஆண்டுகளுக்குள் வாழ்ந்து முடிகிற அற்ப ஜீவிதானே?

இந்த அற்ப ஜீவியானவன், தன் வாழ்க்கையில் தொடர்புடை முன்னோரின்
பல லட்சம் ஆண்டுகள் தொடர்புடைய வாழ்க்கையின் கூறுகளை எப்படிக் கூறுபோட்டுக் கூறியிருக்க முடியும்?

நமது புராண இதிகாசங்கள்  உலகின் கால சுழற்சியை  நான்கு யுகங்களாக கணக்கிட்டு, அந்த நான்கு யுகங்களும் பல ஆயிரம் முறை காலச் சக்கரங்களாகச் சுழன்று வருவதையும் மனுக்களையும் பிரஜாபதிகளையும் படைக்கும் பிரம்மாக்கள் கூட  அந்த காலச் சக்கரத்தில் பல்வேறு யுகங்களுக்கு ஒருமுறை உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உயிரானது, பிரும்மத்திலிருந்து மண்ணில் பல்வேறு ஜீவராசிகளாய் மலர்ந்து மறைகிறது என்றும் அது மனித நிலைக்குப் பிறகும் பல்வேறு நிலைகளை எட்டி இறுதியில் தேவ நிலையை அடைகிறது. பிறகு அதுவே யுகங்களின் சுழ்ற்சியில், பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும்  மண்ணில் ஜீவராசிகளாகப் பிறக்கிறது’ என்று வியக்கத்தக்க மெய்ஞ் ஞான விஷயங்களை இந்திய மண்ணில் உருவான வேத,புராண,இதிகாசங்கள் கூறுகின்றன.இதன் கருத்துக்களையும் கொள்கைகளையும் ஆராய்ந்து காண்கின்ற ஞானமே மெய்யறிவு;மற்றதெல்லாம் பொய்யறிவுதான்.
 
உலகில் வேறு எந்த நாட்டிலும்  கூறப்படாத இந்த பூர்வீக புராண,இதிகாசங்களின் கருத்துக்களை ஆழ்ந்து நோக்காமல், ‘நமது
இதிகாசங்களையும் புராணங்களையும் வெறும் கற்பனைக் கதைகள்என்று புறந் தள்ளுவதும் ஏகடியம் பேசுவதும் கிணற்றுத் தவளைகளின் கத்தலே தவிர கீர்த்திமான்களின் உரையல்ல.

இந்தக் கிணற்றுத் தவளைகளின் வாரிசுகளாக உலா வந்து கொண்டிருக்கும் பேர்வழிகளின் திராவிடப் புளுகுகளுக்கும், திராவிட மாயைக்கும் புத்தியைப் பலிகொடுத்துவிடாமல், நமது புராணங்களையும் இதிகாசங்களையும் வேதமொழிகளையும் பக்தியோடு ஏற்றி, ஆராய்ந்து  ஆராய்ந்து நாம் மெய்யறிவைத் தேட வேண்டும்என்ற கொள்கையை வலியுறுத்தும் கோணத்தில் இதை எழுதுகிறேன்:
     
                                                   * * * * * * * * * * *

நமக்குத் தெரிந்தவை எல்லாம் அறிவுப் பூர்வமான விஷயங்களும் அல்ல; தெரியாதவை எல்லாம் மூடத்தனமான விஷயங்களும் அல்ல.

புராணங்களில் சொல்லப்பட்ட கதை நிகழ்வுகளின் தாக்கம் ஏதோ மாய ஜாலம் போல் 60,70 வருடங்களுக்கு முன்புவரை மக்களால் கருதப்பட்டு வந்தது.

அப்போதெல்லாம்,புராணங்களில் விவரிக்கப் பட்ட போர்முறைகளும்,கையாளப் பட்ட பாணங்களும் (போர்க் கருவிகள்) படித்தவர்களுக்கும் நம்ப முடியாதபடிக்கு ஏதோ மந்திர சக்தி கொண்டவைபோல் உணரப்பட்டு வந்ததனால்தான் ‘பகுத்தறிவுவாதிகள்’ என்று தங்களைப் பகிரங்கப் படுத்திக் கொண்டவர்கள், புராணங்களின் கூற்றை ’வெற்றுக் கதைகள்’ என்றும் ‘அண்டப் புளுகு’ என்றும்  ‘அவை ஆரியர்களால் திரிக்கப்பட்டு மக்களைத் தங்கள் அடிமைகளாக வைத்திருக்கின்ற ‘ஆரியச் சூழ்ச்சி’’ என்றும்  ‘ஆரியப் புளுகுகள்’ என்றும் புதிய கதைகளைத் திரித்து தாங்கள் இந்த ஆரிய மாயைக்கு’ எதிராக எழுச்சி பெற்றிருக்கும் ஆதவன்களாக அறிவித்துக் கொண்டனர்.

புராணங்களின் கூற்றை தங்கள் வாதத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, நாத்திக வாதம் பேசி,‘கிழியோ கிழி’ என்று கிழித்துத் துவம்சம் செய்து பிரச்சாரங்கள் செய்தனர்.

அந்தக் காலங்களில் இன்றைய அணு ஆயுதங்களும், ஏவுகணைகளும் கண்டு பிடிக்கப் படாத நிலையிலும், கணினியின் பயன்பாடு அப்போது இல்லாததினாலும் அந்தப் பகுத்தறிவுப் பிரச்சாரங்களுக்கு எதிர்ப் பிரச்சாரம் செய்ய முடியாமல், எடுத்துக் கூறினாலும் எடுபட முடியாத நிலையில்,ஆன்மீக அறிவு தடுமாறிப் போனது.

இதனால்,பகுத்தறிவு பேசுவதும் ‘ஆரிய மாயை’,‘ஆரிய சூழ்ச்சி’ ‘ஆரியப் புளுகு’ என்றெல்லாம் கலாய்ப்பதிலும் கண்டிப்பதிலும் அந்த ‘பகுத்தறிவு’ப் பட்டங்கள் இறக்கை கட்டிப் பறந்தன.

உண்மையில் அவ்வாறு பேசுவது ‘திராவிட மாயை’,‘ திராவிடச் சூழ்ச்சி’ ‘திராவிடப் புளுகு’ என்பதை யாரும் எடுத்துச் சொல்லவும் இடித்துச் சொல்லவும் முன் வரவில்லை.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி கொண்ட பகுத்தறிவாளர்கள், இந் நாட்டு ‘இங்கர்சால்’களாகவும், தாடிவைத்த ‘பெர்னார்டு ஷா’க்களாகவும் தங்களைத் தாங்களே உருவகப் படுத்திக் கொண்டு, பாமரத் தமிழர் கூட்டத்தைக் கூட்டி அவர்களின் கைதட்டல்களைப் பெறுவதற்காக, பொருந்தாத உவமைகளையெல்லாம் உளறி, மேனாட்டு மேதைகளை ஒப்பிட்டுக் காட்டிப் பேசுவதையே ‘ஒரு ஃபேஷன்’ ஆக்கிக் கொண்டு அதன் மோகத்தை வலைவிரித்து, ஆட்சி மாற்றத்தையே கொண்டு வந்து விட்டனர்.

விளைவு: தமிழனே அதில் வீழ்ந்தான்.

இந்தத் திராவிடப் புளுகர்கள், ‘ஆரிய மாயை’ என்ற இல்லாத ஒன்றைப் பூதமாகக் காட்டித் தமிழர்களை மிரளவைத்துத் தங்கள் ஓட்டு வங்கியைப் பலப் படுத்திக் கொண்டனர்.

திராவிட சூழ்ச்சியான இந்தத் ’திராவிட மாயை’ என்ற பேய்,தமிழனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது;’பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்பது நிகழ்வாகி விட்டது.

தமிழனும் தமிழ்ப் பண்பாடும் தலைகீழாகிப் போனது.

நண்பர்களே,
நேரிடையாகவே வருகின்றேன்.

திராவிடத்தின் பேரால் மக்களை மாய்மாலம் செய்து ஆட்சி மாற்றம் செய்தவர்களால் தமிழ் நாடும் தமிழர் வாழ்வும் அதன் உண்மையான பாதையில் உயர்ந்த நிலைக்கு வழி நடத்தப் பட்டதா? என்ற கேள்வியை இப்போது கேட்டுப் பார்த்துச் சொல்லுங்கள்.

நமது இதிகாசங்களைக் கேலி செய்வதும்,புராணங்களைப் ‘புளுகுகள்’ என்று வசை பாடுவதும், தமிழ்,தமிழர் இனம்’ என்று பேசிப் பேசி ஒட்டு மொத்த தமிழர்களை இந்த ’திராவிடப் புளுகர்கள்’ அடமானம் வைத்து விட்டதுதான் உண்மையாயிற்றே தவிர, உருப்படியாய் எதைச் செய்து தமிழரை மேன்மைப் படுத்தினர்?

திராவிடத்தின் ஆட்சி என்று பேசிப் பேசி, ஒரு குறிப்பிட்ட கூட்டம், ஐந்தாண்டுத் திட்டங்கள் போட்டு அரசாங்கக் கஜானாவைக் கபளீகரம் செய்து, இன்று பில்கேட்சுகளுடன் பேரம் நடத்தி அவரோடு கூட்டுச் சேர்ந்து, பெருந்தொழில் செய்து கொள்ளும் வகையில் வாகை சூடிக் கொண்டதைத் தவிர வேறென்ன கண்டோம்?

நல்லதைப் பேசாதே;நல்லதைப் பார்க்காதே; நல்லதைக் கேட்காதே’ என்ற மூன்றும்தானே இவர்களின் தாரக மந்திரமாய் தத்துவ உலா வந்தது?

’பார்ப்பனத் துவேஷம்’ என்ற பெயரால் ‘இறை நிந்தை’ செய்து தமிழனின் வாழ்வை ‘பாரில்’(BAR) நடத்த வைத்ததே தவிர, பாரினில் (உலகில்) நடத்த வைத்ததா?

தமிழர்களின் ஓட்டுவங்கிகளைத் தக்கவைத்துக் கொள்ளும் சாமர்த்தியம் (?) இவர்களுக்கு இருந்ததை வைத்துக் கொண்டு, பழமைமிகுந்த பெருங்கோவில் சொத்துக்களைக் கொள்ளையடித்தனர்.

கோரி முஹம்மது, படை எடுத்து வந்துதான் நமது கோவில்களைச் சூறையாடினான்; ஆனால் இவர்களோ அந்தக் கோவில்களுக்கே தர்மகர்த்தாக்களாகி,மக்கள் முன்னிலையிலேயே பதவி என்ற பெயரால் அடித்த கொள்ளைகள் கோரி முஹம்மதுவை மிகவும் நல்லவனாக்கி விட்டதே!.

’ஆரிய சூழ்ச்சி’,‘ஆரிய மாயை’,‘ஆரியப் புளுகு’ என்றெல்லாம் சொல்லிச் சொல்லியே,பாவம்,ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை இனத்தை மிகப் பெரும் பூதமாய்த் தமிழனுக்கு காட்டி அவன் வாயைப் பொத்திக் கொண்டுவளர வேண்டும்’ என்று திட்டம் போட்டுத் திருடிய கூட்டம்தான் திராவிடம் என்ற பெயரால் பகுத்தறிவு பேசிப் ‘பார்ப் பணம்’ (GLOBAL MONEY) கண்டது.

நண்பர்களே,

உலகிற்கே மூத்த மனித இனம் நமது தமிழினம்.மூத்த மொழி நமது தமிழ் மொழி.

இறைநெறியிலும் அவ்வாறே உலக மாந்தருக்கே முன் நின்று ‘வழியும் ஒளியும்’ காட்டியதும் நமது தமிழ் இனம்தான்.

இன்று, இந்தியாவிலேயே அதிக அளவு திருக்கோவில்களைக் கொண்ட மாநிலம் தமிழகம்தான் என்பதிலிருந்தே இந்த உண்மை விளங்கும். வரலாறுகளுக்கும் முற்பட்ட நூற்றுக்கணக்கான புராதனக் கோவில்கள் இன்னமும் இருப்பதும் இவற்றுக்கு செவிவழியாகவும்,புலன் வழியாகவும் ‘ஸ்தல வரலாறுகள் இருப்பதும்; கூறப்பட்டுவருவதும் குருட்டு நம்பிக்கையால் அல்ல;ஞானக் கண் கொண்டு பார்ப்பதற்கும் உணர்வதற்கும்தான்.

சரி, அடிப்படை விஷயத்துக்கு வருவோம்:

மேற்கு ஆசியாவிலிருந்து சுமார் 2500 அல்லது 3000 ஆண்டுகளுக்கு முன்பு இப்போதுள்ள ஈரான் தேசப் பகுதியில் வாழ்ந்த அப்போதைய பெர்ஷியர்களான ஆரியர்கள் இங்கு (இந்தியாவின் கங்கை நதி தீரங்களில்) வந்து குடியேறினார்கள்.

இவர்கள் இங்கு குடியேறியதற்கான காரணங்களை, சென்ற முதல் தொடரிலேயே (பதிவு தேதி: 31.10.2010 ; திடமான ஜோதிடம்-1) பார்த்து விட்டோம்.

லெமூரியா என்னும் குமரிக் கண்டத்தை மிகப் பெரும் கடல் கோள் சிதைத்து உருமாற்றிய காலகட்டம் அது.

தென்னிந்தியாவில் அப்போது பஃறுளியாறு என்று ஒரு மிகப் பெரும் நதி இருந்தது; அது, இந்த கடல் கோளினால் கபளீகரம் செய்யப்பட்டு விட்டது என்றும் பூம்புகார் என்று ஒரு மிகப் பெரும் வணிக நகரம் சோழ சாம்ராஜ்யத்தில் இருந்தது- கண்ணகி பிறந்த அந் நகர்- இந்தக் கடல் கோளினால் விழுங்கப் பட்டது என்றும் நமது சங்க இலக்கியங்களிலிருந்தும் கடல்கோள் ஆய்வுகளிலிருந்தும் தெரிந்து கொள்கிறோம்.

இதே கடல்கோளையே பழைய ஏற்பாடும் கூறுகிறது; ‘ஜீஸஸ் கிறிஸ்துவுக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய ‘மோஸஸ்’ அப்போது தன்னை நம்பியவர்களையெல்லாம் அந்தக் கடல் கோளின் அழிவிலிருந்து காப்பாற்றிக் கரை சேர்த்தார் என்கிறது பைபிளின் பழைய ஏற்பாடு. (TEN COMMANDMENTS என்ற ஆங்கிலத் திரைப்படம் பார்த்தவர்கள் இதை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்)

மோஸஸ் வாழ்ந்த பகுதியும் ‘மேற்கு ஆசியா’ எனப் படும் சிரிய,பாலஸ்தீனம்,பாரசீகம் (இன்றைய ஈரான்) இவையெல்லாம் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருந்த தேசங்கள். அன்றைய மொசபடோமியாவும் சுமேரியாவும் இதில் சம்பந்தப்பட்டவைதான்.

ஆசியாவின் மேற்குக்கரை என வர்ணிக்கப்படும் இஸ்ரவேல் என்ற இஸ்ரேல் நாட்டு யூத இனமக்களே ஆதிகாலத்தில், அதாவது பழைய ஏற்பாடு கூறும் அந்தக் கால கட்டங்களில் மேற்கு ஆசியாவின் அறிவு ஜீவிகள் என்று வர்ணிக்கப் பட்டவர்கள்.

அமெரிக்கா,ஜெர்மன்,ரஷ்யா முதலான நாடுகள் இன்றைய அறிவியல்-தொழில் நுட்பத் துறையில் முதலாவதாக இருப்பதற்கு இந்த யூத இனத்தைச் சார்ந்த விஞ்ஞானிகளே காரணம் என்பது உள்ளங்கையிடை நெல்லிக்காய்.

1974 வரை பெர்ஷியாவில் (ஈரானில்) தொடர்ந்து 2500 ஆண்டுகளாக ஒரே வம்சத்தை சேர்ந்த அரசர்களே முடிசூடி அரியாசனம் செய்து வந்தனர் என்பதும், அந்த வம்சத்தின் பெயரிலே ஆரிய வம்சம் என்ற பட்டப் பெயர் தொடர்ந்து 2500 ஆண்டுகளாக ஒவ்வொரு அரசருக்கும் இருந்து வந்தது என்பதும் உலக வரலாறு. நம்மில் நிறையப்பேர் அந்த வரலாற்றைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1979 பிப்ரவரி மாதம் இரானில் நடந்த வந்த அயத்துல்லா கோமெய்னியின் தலைமையிலான இரானியப் புரட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 2500 ஆண்டுகளாக ’ஆர்ய மெஹர்’,‘ஆர்ய பஹ்லவி’ என்ற அரசப் பட்டப் பெயர்களைத் தாங்கி, மன்னராட்சி செய்து வந்த, ஈரானின் 2500 ஆண்டுக்கால ஆர்ய வம்சத்தின் கடைசி மன்னர்’ இரான் ஷா’ என்கிற ‘Arya Mehr’ Mohammad Reza Shah Pahlavi தமது அரியணையைத் துறந்து எகிப்தில் அடைக்கலமானார். அயத்துல்லா கோமெய்னியின் கட்சி இரானில் இஸ்லாமியக் குடியரசு ஆட்சியைத் தொடங்கியது. (இந்த அயத்துல்லா கோமெய்னிதான்,பிரபல ஆங்கில நாவலாசிரியரான சல்மான் ருஷ்டிக்கு அவர் Satanic Version (சாத்தானின் வேதம்) என்ற ஒரு நூலை எழுதியதற்காக,மரண தண்டனை வித்தித்தவர் என்பதும் ருஷ்டியைத் தன் ஆயுட் காலத்தில் பிடித்து,அந்த மரண தண்டனையை நிறைவேற்றமுடியாமலேயே மரித்துப் போனவர் என்பதும் சமீபத்திய சரித்திர உண்மை)

‘ஆர்ய மெஹர்’ என்பதற்கு ’ஆரியவம்சத்தின் ஒளி’என்றும் ’ஆர்ய பஹல்வி’ என்பதற்கு ஆர்ய வம்சத்தின் முதல்வன் என்றும் பொருள்; இன்றைய இரான் கடந்த காலங்களில்,அதாவது வரலாற்றுக் காலத்தில் பெர்ஷியா அல்லது பாரசீகம் என அழைக்கப் பட்டது.

பாரசீகத்துக்கும் தமிழகத்துக்கும் பண்டைக் காலத்தில் வணிகத் தொடர்பு இருந்திருக்கிறது, பாரசீகத்திலிருந்து முக்கியமாக குதிரைகள் இறக்குமதி செய்யப் பட்டன.

இந்தப் பாரசீகம் மட்டுமல்ல;பாபிலோனா,கல்தேயா,சுமேரிய முதலான மேற்கு ஆசியப் பகுதிகளுக்கும் இமாலயத்தில் வாழ்ந்த நமது ரிஷிகள் அவ்வப்போது சென்று வந்திருக்கிறார்கள்.,

இந்திய வரலாற்றுக் காலம் என்பது ஏறத்தாழ அலெக்ஸாண்டர் இந்தியாவுக்குள் படை எடுத்து நுழைந்த காலத்தை ஒட்டியே தொடங்குகிறது. புராணகாலத்தில் சொல்லப்பட்ட மன்னர்கள் பற்றிய சரியானபடி வரலாறுகள் அறிவியல் ரீதியாக அறிந்து கொள்ள வாய்ப்பில்லாத காரணத்தால் இந்தியாவின் வரலாற்றை எழுதியவர்கள் சந்திரகுப்த மெளரியச் சக்கரவர்த்தியின் காலத்திலிருந்துதான் தொடுகின்றனர். அதுவும் ஐரோப்பிய அறிஞர்கள் எழுதியதன் அடிப்படையிலேதான் தொடுகிறார்கள்.

ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுமையும் (தமிழகம் கலிங்கம் நீங்கலாக) கிழக்கு வங்கம் முதல் மேற்கே ஆப்கானிஸ்தான், ஈரான் வரை தனது அகண்ட-விரிந்த சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்திய மாபெரும் அரசன் சந்திர குப்த மெளரியன்.

மௌரியப் பேரரசுதான் அன்றைய கால கட்டத்தில் ஆசிய முழுவதும் மக்களால் பேசப்பட்டு வந்த மிகப் பெரும் இந்திய அரசாகத் திகழ்ந்தது.

இன்றுள்ள நமது சட்டங்களுக்குப் பெரும்பாலும் அடிப்படையான கருத்துக்களை வகுத்துக் கொடுத்தது இந்த மௌரியப் பேரரசுதான். நிர்வாகம்,வாணிபம்,போக்குவரத்து,பொருளாதாரம் முதலான எல்லாத்துறைகளுக்கும் உரிய விதி முறைகளை வகுத்து நடைமுறைக்குக் கொண்டு வந்தவன் சந்திரகுப்த மௌரியன் என்கின்ற மாபெரும் சக்கரவர்த்தி.

இந்த சட்ட திட்டங்கள் எல்லாத் தரப்பு மக்களாலும் ஏற்கப் பட்டு நடை முறையில் இருந்ததுடன் இதன் மாண்பு,மேலை நாடுகளுக்கும் பரவியிருந்தது.

மிகுந்த மதி நுட்பத்தோடும் மக்களுக்கு நீதி வழுவா நெறி முறைகளோடும் நடைமுறைப் படுத்தப் பட்ட மௌரியப்பேரரசின் சட்ட திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர் ஓர் அந்தணர்.

இவர் அந்தணர்.அதாவது வள்ளுவன் சொன்னானே ’அறவோர் ஆகிய அந்தணர்;எந்த உயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகிய அந்தணர். அவர் பெயர் விஷ்ணு குப்தன் என்கிற சாணக்கியன்.

சாணக்கியன் நான்கு வேதங்களையும் அது தொடர்பான அனைத்து உபநிஷதங்களையும் கசடறக் கற்றுத் தேறிய மஹரிஷி.

அவர் ஒன்றும் ஆரிய வம்சத்தைச் சார்ந்தவர் அல்லர்;வேண்டுமானால் ‘திராவிட அந்தணர்’ என்று சொல்லிக் கொள்ளலாம்.

அவருடைய அறிவும் குறிக்கோளும் வாழ்வும் உலகத் தத்துவ நெறிகளுக்குகெல்லாம் உயிர்த் தத்துவமாக விளங்கிய இந்தியத் தத்துவத்தின் மகுடமாகத் திகழ்ந்தன.

‘வேதகாலம்’ என வழங்கப் பட்டிருந்த உலக வரலாற்றுக் காலத்துக்கும் முற்பட்ட காலத்தையும் உலக சரித்திர காலத்தையும் இணைக்கின்ற மாபெரும் அறிஞனாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட அந்தணர்தான் சாணக்கியன் என்னும் இந்த விஷ்ணு குப்தர்.

இவரைப் பற்றிய குறிப்புகள் மிகச் சுருக்கமானவைதான். ஆனால் இவரது அறிவும் ஆற்றலும் உலக அரசியல் சட்டங்களின் தாய்.இந்திய சாத்திரங்களின் சேய்.

அது எவ்வாறு என்பதைப் பார்ப்போம்….

-கிருஷ்ணன் பாலா
5.12.2010 /01:55 AM
--
Post a Comment