Wednesday, October 23, 2013

இருபத்தெட்டு ஆண்டு இல்லறம் வாழ்க!

பிரேமநாயகம் -ஆவுடை நாயகி தம்பதிக்குப் பூங்கொத்து வழங்கும் நண்பர் திரு.கார்த்திக்.

பொய் தகர்த்த எண்ணம்;
பொன் நிகர்த்த உள்ளம்;
மெய்வழி யில் நின்று
மேவி வாழும் கொள்கை!

தன் மனத்தை வென்று
தர்ம நெறி கண்டு;
பன்ம தங்கள் அறிவைப்
பதித்து வாழும் மனிதன்!

பிரேமநா யகத் தைப்
பேசுகின் றேன் இங்கே;
உரிமை கொண்ட நட்பில்
உவந்து வாழ்த்து கின்றேன்!

என்ம னத்தை ஈர்த்து
எப்பொ ழுதும் சேர்த்து;
புன்ன கைத்து வாழும்
பொறுமை மிக்க நண்பர்!

ஆவு டைநா யகியை
அன்புத் துணை ஆக்கி;
மேவு கின்ற வாழ்வில்
மீட்டும் நல் லறத்தில்

இன்று ஆன காலம்
இருபத் தெட்டு ஆண்டு;
என்றும் அதன் பெருமை
இருக்க வேண்டி வாழ்த்து!

சொத்து சுகம் தேட
சூழ்ச்சி செய்த தில்லை;
எத்தனை யோஇழந் தும்
இதயம்  சோர்ந்த தில்லை!

துன்பம் என்ற ஒன்று
தோல்வி செய்த தில்லை;
இன்பம் வந்த போதும்
எகிறிக் குதித்த தில்லை!

ஞானம் மிக்க மனிதன்
நல்ல றிவுப் புனிதன்;
ஊனமற்ற உணர் வில்
ஓங்கி நிற்கும் அறிஞன்!

இல் லறத்தை ஏற்று
இருபத் தெட்டு ஆண்டு;
நல் லறத்தை நடத்தும்
நண்பர் நீடு வாழ்க!


வாழ்த்தும்-
கிருஷ்ணன்பாலா
22.10.2013

Tuesday, October 22, 2013

பண்புத் தமிழ்ப் பேண.....!


வேசைக் குணங்கள்;அதில்
ஆசைப் பட் டுழன்று
பேசித் திரிகிறவள் பெண்ணா?

தாசித் தனம் காட்டும்
தமிழை எழுதப் பெரும்
ஆசைப் படுகிறவன் ஆணா?

மோசம் மிகும் பண்பை
முந்திப் படித் திங்கு
நேசம் கொள்பவர்கள யாரும்

நாசம் புரிபவர் கள்;
நாட்டைக் கெடுப்பவர்கள்;
நபும்சப் பிறவியெனச் சொல்வேன்!

தாலித் தலைவ னையும்
தனது மனைவி யையும்
கேலிப் பொருள்ஆக்கிக் கொண்டு

போலித் தனங்க ளிலும்
புரட்டுக் குணங்க ளிலும்
பூசும் அரிதாரம் கண்டு

சேலைக்குள் ஆண் மகனும்
சேவல்போல் பெட்டைகளும்
ஆளுக்கு ஒருவிதமாய் இங்கு

தாளிக்கும் வார்த்தை களில்
தரம் கெட்ட பேர்வழிகள்
கேளிக்கை செய்வதைநான் கொல்வேன்!

யாருக்கும் அஞ்சா மல்
எவருக்கும் தாழா மல்
எழுதும் துணிவுதனைக் காட்டி

நேருக்கு நேர் நின்று
நிஜமான எழுத் துக்கள்
நிமிர்திங்கு நடைபோடத்  தீட்டி

தோளுக்குத் தோள் தந்து
தொய்வில்லா நட்போடு
தொடர்கின்ற கூட்டத்தைக் கூட்டி

பாருக்கு நலம் சொல்லும்
பாதைக்கு வா வென்று
படைக்கின்றேன்,என் மனதை இங்கே!

பற்றும் கணினி யுகம்
பண்புத் தமிழ் பரப்பப்
பற்றும் உணர்வுகளை நன்று

கற்ற மனம் உடையோர்
காட்டும் அக்க றையை
உற்று நோக்குகிறேன்,இன்று!

ஒற்று உற வாடி
ஓங்குத் தமிழ் நாடும்
சுற்றம் உடையவர்கள் என்று

முற்றும் நம்புகி றேன்;
முனைந்து எழுதுகிறேன்
முன்னே இருப்பவர்கள் அறிக!

இவண்-
கிருஷ்ணன்பாலா
22.10.2013

Saturday, October 19, 2013

அமரர் ஹரிதாஸ் கவுண்டர்!

அமரர் ஹரிதாஸ் கவுண்டர்
1948  -  2013
                                               
நாமக்கல் வேலகவுண்டன்பட்டி ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து,படித்து,அரசியலில் ஈடுபட்டு, எலச்சிபாளையம்  பஞ்சாயத்து யூனியன் சேர்மன்’ என்ற தகுதியில் மக்களுக்கு அரிய சேவைகளைப் புரிந்தவர்.

எம்.ஜியாரின் தீவிர ரசிகர். அவரது ஆட்சிக்காலத்தில் தமிழகத்திலேயே இளம் யூனியன் சேர்மன் இவர்தான்என்று முதல அமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களால் பாராட்டுப் பெற்றவர்.

தன் துன்பம் இன்னதெனப் பிறருக்குக் காட்டாதவர்; ஆனால்,பிறர் துன்பம் கண்டு மனம் கலங்கும் மனித நேயர்.

எப்பொழுதும் ஏழை, அனாதைக் குழந்தைகளிடத்தில்  அன்பும் கருணையும் கொண்டு மாதந்தோறும் தவறாமல்  நிதி அளித்து வந்தவர்.

’எவ்வளவு அனுப்பி வருகிறீர்கள் ?என்று வீட்டார் கேட்டால்கூட ‘அந்தக் கணக்கு உங்களுக்கு எதற்கு? என்று பதில் சொல்லி விட்டு, வலது கை கொடுப்பதை இடது கைகூட அறியக் கூடாது என்று  வாழ்ந்த கொங்குத் திருமகன்.

இதே கிழமை சென்ற சனிக்கிழமை (12.10.2013)
தன் உடலில் ஏற்பட்டிருந்த தொல்லைகளைக் கூடப் பொருட்படுத்தாமல் தன் மகனை அழைத்து, தான் வழக்கம்போல் நிதி வழங்கி வரும் அனாதை ஆசிரம் ஒன்றுக்கு காசோலையை அனுப்பச் செய்து விட்டு அன்று மாலையே யாரும் எதிர்பாராத நிலையில் அமரநிலையை எட்டிய வள்ளல்.

உற்றார் உறவினர்களிடம் மட்டுமல்ல; தான் பழகும் நண்பர்கள்,தன்னைத் தேடிவரும் ஏழை எளியவர்கள் அத்தனை பேர்களிடத்திலும் மாறாத அன்பும் பணிவும்காட்டிப் பழகி வந்தவர்.

நோயின் துன்பம் கண்டு கொஞ்சமும் சலனமின்றி குளிர்ந்த முகம் காட்டியவாறே தன் இரு மைந்தர்களும் அருகிருக்க, அன்பு மனைவியின் முகம் பார்த்தவாறே அணைந்து விட்டது, இந்த ஹரிதாஸ் ஜோதி.

என் நட்புத் தோட்டதில் பூத்திருந்த உத்தம மலர் ஒன்று இன்று உதிர்ந்து விட்டது.

வாழ்வில் இணையற்ற பாச நட்பை இழந்து விட்டேன்.

‘மாப்பிள்ளை’ என்று உரிமையுடன் நான் அழைத்து வந்த அந்த வெள்ளை மனத்தின் வேந்தருக்கு  எனது நெஞ்சம் நினைவாஞ்சலி செலுத்தி நெகிழ்கின்றது.

இவண்-
கிருஷ்ணன்பாலா
19.10.2013

Friday, October 18, 2013

முற்பகல் செய்யின் ..!

றிவார்ந்த நண்பர்களே!
வணக்கம்.

தமிழுக்கு இருக்கும் மொழிச் சிறப்பையும் தமிழருக்கென்றிருக்கும் பண்பாட்டுச் சிறப்பையும் காத்திடும் வண்ணம் நமது சிந்தனைகளும் அதன் வழி எழுத்துக்களும் விரிய வேண்டும் என்பதே எனது எழுத்துக்களின் நோக்கம்.

இதற்கு மாறாக,இங்கே பெண்கள் பலர் எழுதி வரும் கருத்துக்களில் வெளிப்படும் விரசமும் துணிச்சல்,சமத்துவ உரிமை என்ற தாக்கத்தில் துள்ளுகின்ற சரசமும்  சமூகவலைத்தளங்கள்  மூலம்  விதைக்கப்படும் விஷக் காளான்கள்.

ஒழுக்கக்கேடும் உன்மத்தப்பாடும் சூழ்ந்த இழிநிலையில் போதை கொண்டு எழுதும் பெண்கள்,’ஆண் இனம் என்ன? பெண்  இனம் என்ன? எல்லாம் ஒன்று’ என்பதைத்தான் இங்கே நிலை நாட்டுகின்றார்கள்’ என்பேன்.

இத்தகைய பெண்களின் எழுத்துக்களையும் எண்ணங்களையும் பேணி ஆதரிக்கும்விதமாக,பெட்டைகளின் பின்னே கட்டுச் சேவல்கள்போல் கொக்கரித்துக் கொண்டு, ஆண் பெயரில் வலம் வரும்  போலிகள் மனசாட்சியும் சுயதரிசனமும் இல்லாத கிரிமினல்களே அன்றி கீர்த்திமான்கள் அல்ல;

நாம்,இத்தகையோரைச் சாடுவது, நமது சமூகத்தின் ஆரோக்கியமான நிலைப்பாட்டுக்கும் நமது சந்ததிகளின் சத்தான எதிர்காலத்துக்கும்தான்.

ஆனால்  இதன் மெய்ப்பொருள் உணராது, நமது நல்லொழுக்கச் சுட்டல்களை ஏதோ தங்களின் உரிமையில் தலையிட்டுச்  சுடுகின்ற நெருப்பாகவும், ஆணாதிக்க உணர்வாகவும் சில பெண்மணிகள்  உளறிக் கொண்டு எழுதுகிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தப்பெண்மணிகளின் கருத்துக்குப் பெண்கள் இடும் ’லைக்’களையும் ‘கமெண்ட்ஸ்’களையும் விட உற்சாகப்படுத்தும் ஆண்களின் ’லைக்’களும் பாராட்டுக் கமெண்ட்ஸ்’களும்தான் அதிகம்.

பிறன் மனையாட்டிகள் இங்கே தங்களை முழுச் சுதந்திரப் புர்ரட்சி பெண்களாய் முகவரி காட்டி உலா வந்து உளறுவதை யெல்லாம் உற்சாகப்படுத்தும் இந்தப் போலி ஆண்கள், இதேபோல் தங்கள் வீட்டு மனையாட்டிகளும் பெண்களும் உருண்டு,திரண்டு எழுதுவதையும் எண்ணுவதையும் உற்சாகப்படுத்தி அவர்களையும் புதுமைப் பெண்களின் வரிசையில் வைத்து அழகு பார்ப்பார்களா?அனுமதிப்பார்களா?

ஆம் எனில் அவர்கள் தங்களின் முக்காடுகளை நீக்கிக்  கொண்டு இங்கேமுன் வந்து  எழுதட்டும்;பார்ப்போம்.

முகநூலில் ’ஆண்- பெண் நட்புக்கு வரைமுறைகளை வகுத்துக்கொண்டு பொதுவில் எம்மாதிரியான விஷயங்களை விவாதிக்க வேண்டும், எப்படி எல்லாம் எழுதக் கூடாது’ என்ற பண்பறிவு கொண்ட பெண்மணிகள் இருக்கிறார்கள்.

‘அவர்களைப்போல் நாம் ஏன் இருக்க வேண்டும்?; எண்ணச் சுதந்திரமும் எழுத்துச் சுதந்திரமும் நமக்கு உண்டு;நாமும் ஆணுக்குச் சளைத்தவர்கள் அல்ல’ என்று  புர்ரட்சி பேசுகின்ற புதுமைப் பெண்கள் ஒருநாள் தங்கள் அகவாழ்வின் இனிமைச் சுகங்களையெல்லாம் இழந்து தங்கள் பிள்ளைகளே தங்களுக்கு எதிராய் எதிர்ப் புர்ரட்சி செய்வதையும் அத்தகையோர் மனம் நொந்து எங்கேனும் முதியோர் இல்லத்தில் விதியே’ என்று சரணாகதி அடைந்து ’முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்’ என்பதையும் அனுபவிப்பது  திண்ணம்.

‘என்ன விதைக்கின்றோமோ அதுதான் அறுவடை செய்யப்படும்’ என்பதை இன்றைக்கு நீங்கள் உணராமல் போனால்,  நாளைக்கு நீங்கள் காணப்போவது உங்கள் கடந்தகால விதைப்பின் முளைப்பாரிதான் அம்மணிகளே. அதுவே ஒப்பாரியாக மாறத்தான் செய்யும்.

பெண்களை ஆண்களுக்குச் சமமாக அல்ல- ஆண்களுக்கும்  மேலான அந்தஸ்தில்  வைத்து மதிக்கின்ற உணர்வினால் பெண்மையின் பண்பாட்டுச் செழிப்பில் அதிக அக்கறைகொண்டு எழுதுகின்றேன்:

கையெடுத்துக் கும்பிடத்தக்க பெண்மை; கையைப் பிடித்து இழுக்கத் தூண்டும்வகையில் இங்கே தோன்றக்கூடாது..

//சிறைக்காக்கும் காப்பெவன் செய்யும்;மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.// 
(குறள்/அறத்துப்பால்/ வாழ்க்கைத் துணை நலம் எண்;57)

என்று-
வள்ளுவன் உரைத்ததை விட உயர்குண மாதர்க்கு
‘உரை’க்கும்படி  இன்னொருவர் உரைக்க முடியாது.

எனது எழுத்துக்கள் பழுது அல்ல; உங்கள் இதயமே பழுது.

‘பெண்மை போற்றுதும்’ என்பதென் எழுத்து.

இவண்-
கிருஷ்ணன்பாலா
18.10.2013

Thursday, October 17, 2013

கவியரசு நினைவுகளில்....!

வரைவு: ஜீவா

எப்பொழுதும் சிந்தனையில் இருப்பவன்தான் கவிஞன்;
எதுகுறித்தும் அஞ்சாது படைக்கும் அவன் இறைவன்;
முப்பொழுதும்முத்தமிழில் மூழ்கி நின்ற   தமிழன்;
முன்னோரின் மரபு வழி முத்தெடுத்த கலைஞன்!

புத்தியுள்ள மனிதரெல்லாம் போதை தலைக்கேற
போதையிலே புதுத் தமிழைப் பொலியவைத்த மேதை;
வித்தைமிகும் எழுத்துக்களால் சத்தியத்தைச் சொல்லி;
விஜயனுக்குச் சொன்னதுபோல்சொன்ன மொழிகீதை!’

அர்த்தமுள்ள இந்து மதம்;அடடா.. அடடா;
அவன்போலச் சொன்னது யார்? வந்திங்கு தொடடா!
கூர்த்த மதி; கொள்கை நெறி;கூடு கட்டி அதிலே
குடியிருந்த கவியரசைக் கூறுகின்றேன்;இங்கே!

கம்பனவன் மறு பிறப்பு; காளிதாசன் ஜாதி;
காதலிலே கரைபுரண்ட உமர்கய்யாம் பாதி;
வம்பரெலாம் வாய் புதைத்து வணங்குகின்றவாறு.
வார்த்தைகளைச் சரம் தொடுத்த காளமேகம் மீதி!

கீதையதன் போதையினைத் தெளிந்து சொன்ன மேதை;
போதைமிகும் கருத்துக்களில் போகும் இவன் பாதை;
நீதி மொழி சொல்லி இங்கு நேர்த்திக் கடன் முடித்தே;
நித்திரையில் சென்று விட்டான்; நினைவுகளை விதைத்தே!

கவியரசை எண்ணி எண்ணிக் கலங்கு கின்றோம்;நெஞ்சம்;
காலனவன் கருணையின்றிச் செய்த கொடும் வஞ்சம்;
கவியரசாய்த்  தமிழை ஆண்டு,புவியில் ஓங்கி நின்ற
கண்ணதாசன் போன்று கவி பிறப்பதென்று? இங்கே!

இவண்-
கிருஷ்ணன்பாலா

17.10.2013

Monday, October 14, 2013

’தமிழ்க் கடல்’ நெல்லைக் கண்ணன் - 1

அறிவார்ந்த நண்பர்களே,
’தமிழ்க் கடல்’ அய்யா திரு நெல்லைக் கண்ணன் அவர்கள் நம்மிடையே வாழும் தமிழ்ச் சான்றோர்களில் தனிப் பண்பு மிக்கவர்.

அவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டவிதம் தனிக் கதை.

முகநூலில் அவர் எனக்கு எழுதிய கருத்தூட்டம் ஒன்றைப் பதிவாக இட்டபோது நண்பர்கள் பலரும் அவரது நட்பு உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? என்று கேட்டார்கள். நீங்களும் தெரிந்து கொள்ளவேண்டியதுதான்.

2010 ஆம்  ஆண்டு நெல்லையில் SCAD என்ற குழுமங்களின் பொறியியல் கல்லூரிகளின் வேலைவாய்ப்ப்பு மற்றும்பயிற்சித் துறை இயக்குநராக  நான் இருந்தேன்.  

எங்கள் கல்லூரி மாணவர்களுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஊட்டும்  சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்தி வந்தோம்.

அந்த நிகழ்ச்சி ஒன்றுக்காக எங்கள் கல்லூரி நிர்வாகத்தினர் ’தமிழ்க் கடல்’ அய்யா திரு. நெல்லைக் கண்ணன் அவர்களை 13.7.2010 அன்று அழைத்திருந்தனர்.

’தமிழ்க் கடல்’ திருநெல்வேலியில்தான் இருக்கின்றார் என்பது எனக்கு நினைவில் இல்லாமல் கல்லூரிப் பணிகளில் தீவிரமாக இருந்து விட்டேன். தெரிந்திருந்தால் ஆறேழு மாதங்களாக நெல்லையில் இருந்து கொண்டு சந்திக்காமல் இருந்திருப்பேனா?

நீண்ட காலமாக அவரை நேர் கொண்டு பழகவும். நட்புக் கொள்ளவும் கனவு கண்டிருந்த எனக்கு, எங்கள் கல்லூரி நிகழ்ச்சியில் அவரை வரவேற்புச் செய்யும் வாய்ப்பு அமைந்தது.

இம் மாபெரிய  சான்றோனுக்கு  எதைத் தந்தால் அவர் மனம் குளிரும்என்று  எனக்குள் பேரலையை ஏற்படுத்தியது. இருப்பதோ 24 மணி நேர அவகாசம்.

’அவருக்குத் தமிழால் புகழ்மாலை சூடுவதை விடப் பெரிய பரிசு வேறு எதுவும் இருக்க முடியாதென’  மனம் சொல்லிற்று.

உடனேமட மட என்றொரு கவிதை நதி ஊற்றெடுத்தது. அரை மணித் துளியில் ஒரு வரவேற்புரையைக் கவிதை நடையில் எழுதி விட்டேன்.
எனது சக அலுவலர்கள் சிலர் அந்தக் கவிதையைப் படித்து விட்டு அற்புதம் என்றனர். எனது படைப்பின் மெருகும் பவிசும் வெகுவாகக் கூடி விட்டது.

சரி,இதை அழகான வடிவத்தில் கணினியின் மூலம் அச்சிட்டு அழகு படுத்த வேண்டுமே?’

அவ்வளவு பெரிய கல்வி நிறுவனத்தில் உடனடியாகத் தமிழில்டைப், செய்து தரும் திறமையுள்ள ஊழியர் அந்தச் சமயத்தில் இல்லை. இனி நெல்லையின் வீதிகளில் சென்று உரிய கடையைத் தேடிடைப்செய்யும் மனோ நிலையோ நேரமோ இல்லை.

எனக்கும் வெகு நாட்களாவே, ‘ நமது  எழுத்துக்களையும் கவிதைகளையும் நாமே கணினியில் அடிக்க முடியாத நிலை கேவலமாக இல்லையா?’ என்று எனக்குள் ஒரு கேள்வி தொடர்ந்திருந்தது.

எனக்கு நவீன கணினி வசதிகளை SCAD நிறுவனத் தலைவர் தந்திருந்தார். இதைவிட வேறு என்ன வேண்டும்? எத்தனை நாள்தான் பிறரைச் சார்ந்திருந்து நமது தமிழைப் பிறர் பிழைபட எழுதுவதும் திருத்துவதுமான நிலை தொடர்வது?

சிந்தித்த மனம் ,கணினியில் அமர்ந்து  அதற்கென்ற தமிழ் SOFTWARE இறக்குமதி செய்து அரை மணி நேரத்தில் எனது தமிழை நானே அச்சில் ஏற்றும் திறனை நிரூபித்துக் கொண்டேன்.

யாரும் நம்பவில்லை!

நானே அந்தஅற்புதமானவரவேற்புக் கவிதையை  தமிழில் டைப்செய்தேன் என்பதை. ஆனால் எனது சக ஊழியரான முத்தையா தயாளன்தான் அருகிருந்து வியந்து மகிழ்ந்த  சாட்சி.

பிறகென்ன அடுத்த நாள் மேடையில் அய்யா நெல்லைக் கண்ணன் அவர்களுக்கு எனது வரவேற்புக் கவிதையை நீட்டிய கணமே,அவருக்கு நான் ஆயுட்கால நண்பனாக மாறிவிட்டேன்.

அன்றைய விழாவில்,,அதுவரை நான் ’தமிழ்க்கடல்’ நெல்லைக் கண்ணன் அய்யா அவர்களைச் சந்தித்திருக்கவில்லை;அவரும் என்னைப் பற்றி அறிந்திருக்கவில்லை.

ஆனால் விழா மேடையில் எனது வாழ்த்து மடலை அழகிய வண்ணத்திலும் உயரிய எண்ணத்திலும் வழங்கிய பின்னர், மேடையில் அம்மடலையே ஆழமாகப் படித்துக் கொண்டிருந்த அய்யா அவர்கள், தனது சிறப்புச் சொற்பொழிவில் பலமுறை எனது பெயரைக் குறிப்பிட்டுப் பலநாள் நண்பரைப்போல் பேசி,பாசமழை பொழிந்தது எங்கள் நட்பின் ஆரம்பத்தின் நெகிழ்வுமிக்க தருணங்கள்.

மறுநாள் அவரைத் தேடி அவரது இல்லம் சென்றபோது அய்யா அவர்கள் காட்டிய அன்பும் பாசமும் நேசமும் தமிழ்ச் சோலையில் எங்கள் இருவரையும் எங்கோ உயர வைத்து விட்டது.

அதைவிட எனக்கு ஓர் இன்ப நெகிழ்ச்சி:
அய்யா அவர்கள் தனது அறையில் அமர்ந்திருக்கும் ஆசனத்தின் பின்னே
வருகின்ற விருந்தினர்கள் அனைவரும் படித்து மகிழும்வகையில் எனது வாழ்த்து மடலை சுவற்றில் மாட்டி வைத்திருந்தது

ஆயிரக் கணக்கான வரவேற்புப் பத்திரங்களைப் பெற்றிருக்கும் அந்தப் பெரியோன், ‘இந்தச் சிறியோனின் வாழ்த்துக் கவிதையைத் தனது அறைக்கு  வருகின்ற அத்தனை பேரும் படிக்கவும் மகிழவும் மாட்டி வைத்திருப்பது ஒன்றேஎனது தமிழுக்கு வழங்கப் பட்டிருக்கும் தரச் சான்றிதழ்என தலை நிமிர்ந்து  எண்ணீக் கொள்கிற நான், தமிழ் இலக்கியங்களிலும் அதன் பண்பாட்டுச் சிகரத்திலும் செம்மார்ந்த ஆன்மிகச் செறிவிலும் கோலோச்சிக் கொண்டிருக்கும் அந்தத்தமிழ்க் கடல்’ விரும்பும் எழுத்துக்களைத்தான்  இங்கே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறேன்’  என்பதைக் கர்வத்தோடு சொல்லிக் கொள்கிறேன்.

நண்பர்களே.

தமிழ்க் கடல் அய்யா திரு நெல்லைக் கண்ணன் அவர்களின் நேர்முக நட்பு எனக்கு அமைந்த விதம் இதுதான்.

அவருக்கு நான் முதன் முதலாக எங்கள் கல்லூரி விழா மேடையில்
வாசித்து அளித்த ‘நெல்லைக் கண்ணன் நெடும்புகழ் வாழ்க!’ வாழ்த்து மடலின் புகைப்பட நகலையும் வாழ்த்து வரிகளையும் இங்கே காணலாம்.


நெல்லை கண்ணன் நெடும்புகழ் வாழ்க!
      - கிருஷ்ணன் பாலா
§  

            முப்பெரும் தமிழை முனைப்புடன் உலகில்
                                                  முழங்கிடும் அறிஞர் கூட்டத்தில்;
அப்பரும் மாணிக்க வாசகர் மற்றும்
                                                 அவர்போல் பற்பல ஞானியரும்
செப்பிய பொருளைச் சிந்தனை செய்து
                                                 செழித்திட வைக்கும் தமிழ்க் கடலே!
ஒப்பரும் உனது திசைவைத் தெனது
                                                 உளமார் வணக்கம் சொல்கின்றேன்!

’நெல்லை என்றால் தாமிரவருணி,
                                                 நெடும்புகழ் சேர்ந்த நதியும்;
நெல்லையப்பர் காந்திமதி யாள்
                                                நெகிழச் செய்யும் அருளும்
’எல்லை’ என்றே இருந்தது மாறி
                                                இணைந்தது உனது பெயரும்;
நல்லவன் உனது நாமம் உலகில்
                                                நாளும் நிலைத்திட வாழி!
                                                               
(வேறு)

கண்ணன் தமிழ் அமுதைக்
                                                கண்டு கொண்ட நாள் முதலாய்;
எண்ணம் முழுதும் இவர்
                                                எழுந்தே நிற் கின்றார்;
அண்ணன் இவரை நாம்
                                                அணு குவது எப்போது?
திண்ணமுடன் இதை எண்ணித் 
                                                தினந் தோறும் காத்திருந்தேன்!.

              காத்திருந்த நாள் இன்று
                                                கனிந்து வர, உணர்ச்சிகளை
வார்த்தெடுத்து என்றென்றும்
                                                 வாடாத மாலை' எனப்
பூத்தொடுத்து போடுகின்றேன்:
                                                பொய்யாத கவி மாலை;
நாத்திறத்தால் நாற்றிசையும்
                                                நலம் காணும் நாயகர்க்கு.!

                                                               
                                                                  ( வேறு )

அறிவில்,அன்பில்,ஆளுமை நோக்கில்
                                                அரசியல் அணுகுமுறையில்,
இறைநெறி போற்றும் இலக்கணத் தமிழில்
                                                இரண்டறக் கலந்த பண்பில்
உறைவிடமாகத் திகழும் சான்றோன்;
                                                உண்மை:நெல்லை கண்ணன்;
அறவுரை செய்ய வந்தார்,இங்கு;
                                                அனைவரும் அவர் சொல் கேட்போம்!
§  
                     கிருஷ்ணன்பாலா 
          13.17.2010                          


காகித பூஜை!

எல்லோருக்கும் இன்று ஆயுத பூஜை;

எனக்குமட்டும் காகித பூஜை!

ஆம்!.
கவிதை மலர்களால் மாலை தொடுத்து
அன்னை கலைவாணிக்கு
அணிவித்து மகிழந்த காகித பூஜை!

-கிருஷ்ணன்பாலா
13.10.2013

வாணிக்குக் காணிக்கை!

தீதிலன்,உலகில் யானோர்

தெளிவுளன் நினதருளாலே;
யாதெனை வெல்லும்?;உன்னை
யாசித்தேன்; இன்று,இப்போது
ஓதிடும் உன்றன் நாமம்
ஒளிர்செயக் கண்டேன்;வாணீ,
சோதியே வருக என்னுள்;
சுடர்க, இவ்வுல கெல்லாமே!

  • ·        


பூவிற் பொலியும் வாணி; என்றன்

நாவிற்புகுந்து நற்றமிழ் செய்தாள்;
தேவி அவளென் அன்னை;என்னைத்
தேர்ந்தே இப்புவி வைத்தாள்!

கூவி அழைத்து, அவள் தமிழைக்
குவிக் கின்றேன் நான், முகநூலில்
தேவை யுடையீர்,வாருங்கள்;என்
தேன் தமிழ் விருந்தில் சேருங்கள்!

அற்புதமாக ஆர்ப்பரிக்கும்;சொல்
அடுக்கடுக்காக சரம் தொடுக்கும்;
கற்பனையிங்கே படை எடுக்கும்;அது;
காட்டா றெனவே கரை உடைக்கும்!

சிற்சில போழ்து இலக்கணத்தை
சிதறச்செய்யும்; தனை மறக்கும்!
கற்பது யாதெனக் கேட்காதீர்; அந்தக்
கலைமகள்;அவளைக் கேளுங்கள்!
·        

முன்னைப் பழம் விதியின்
முழுப் பயனில் வைத்திங்கு;
என்னைப் படைத்துலகை
எந் நாளும் காப்பவளை;
அன்னை வாணி எனும்
அறிவுடையோர் கருப் பொருளைப்
பின்தொடரும் பிள்ளைஎனப்
பேசுகின்றேன்; அறிவீரோ?

மானுடத்தின் மத்தியில் ஓர்
மனிதனெ எனைப் படைத்து,
வான்புகழும் தமிழ்மறைகள்
வளமைமிகும் இலக்கியங்கள்
நான் படிக்க அருளியவள்;
நான்முகனின் தேவியவள்;
வானவரும் போற்றுகின்ற
வாணியைத்தான் வணங்கு கின்றேன்!
·        ·
வாக்கிலே வந்தாள் அன்னை

வாணியே; ;வந்து,அந்தப்
போக்கிலே புகல வைத்தாள்;
பொய்யிலாச் சேதி;உண்மை1
நோக்கியே சொன்னேன்;நானும்
நுகர்ந்திடும்  மொழியை யிங்கு
தூக்கியே நிறுத்தி என்றும்
தோல்வியைத் தவிர்ப்பாள் வாழி!

·        ·

வாக்கிலே என்றும் உனது
வார்த்தையே வேண்டும்; என்றன்
நோக்கிலே பிழைகள் அற்ற
நுகர்ச்சியே வேண்டும்;வாழ்க்கைப்
போக்கிலே பொய்ம்மை சேராப்
புதுமைகள் வேண்டும்;நெஞ்சில்

தேக்கிநான் வேண்டுகின்றேன்;
தேவைகள் அருள்வாய்,வாணீ!

·        ·

கல்விதான் பெரிதா? செல்வம்
காண்பதே பெரிதா? இதிலே
நல்லது யாதென் றிங்கு
நவில்வதைச் சிந்திக்கின்றேன்:
செல்வத்தைச் செல்வம் என்று
சிந்திக்கும் அறிவில் லாது
செல்வதைப் பெற்ற வாழ்க்கை
சிதைந்துதான் போகும்,வீணே!

கல்வியைப் பெற்ற வாழ்வில்

கசடுகள் சேரா; அதுவே
செல்வமாய்த் திகழ வாழ்வோர்
சிதைவதும் இல்லை; அதனால்
கல்வியே உயர்ந்த தென்று
காண்கிறேன்; வாணி என்றன்
செல்வமாய்த் திகழு கின்றாள்;
சிந்தனை வேறு எதற்கு?

·
உலகிடைப் பிறந்த மாந்தர்
உணர்கின்ற அறிவைப் பெற்று
நலமெது? தீதெது?’ என்று
நாடினால் அதுதான் வாழ்வின்
பலம் மிகு துணையாய் மாறி
பலவிதம் உயர்த்தும்;அதனால்
கலைமகள் மாந்தர் வாழக்
கருப்பொருள்; கண்டீர் இங்கே!

·

வாணியைப் போற்றி நின்றால்
வாழ்க்கையில் அறிவு கூடும்;
வாணியால் சேரும் செல்வம்
வளர்ந்திடும் நித்தம் நித்தம்!
வாணியால் தோல்வி இல்லை;
வாழ்க்கையில் வெறுமை இல்லை;
வாணியே, வா,நீஎன்று
வணங்குதல் செய்வோம் வாரீர்!
·      · 
ஊனெடுத்துப் பிறந்த பின்பு

ஓய்ந்து விழும் நாள் வரைக்கும்
நானெடுத்து நடிக் கின்ற
நாடகத்தின்,பாத்திரத்தைத்
தானுரைக்கும் கவிதை இவை;
தருகின் றேன்,நண்பர்களே!
யானுளநாள் வரை’,இவற்றை
யாத்திடுவேன்: புரிவீரே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
13.10.2013