Monday, October 14, 2013

’தமிழ்க் கடல்’ நெல்லைக் கண்ணன் - 1

அறிவார்ந்த நண்பர்களே,
’தமிழ்க் கடல்’ அய்யா திரு நெல்லைக் கண்ணன் அவர்கள் நம்மிடையே வாழும் தமிழ்ச் சான்றோர்களில் தனிப் பண்பு மிக்கவர்.

அவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டவிதம் தனிக் கதை.

முகநூலில் அவர் எனக்கு எழுதிய கருத்தூட்டம் ஒன்றைப் பதிவாக இட்டபோது நண்பர்கள் பலரும் அவரது நட்பு உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? என்று கேட்டார்கள். நீங்களும் தெரிந்து கொள்ளவேண்டியதுதான்.

2010 ஆம்  ஆண்டு நெல்லையில் SCAD என்ற குழுமங்களின் பொறியியல் கல்லூரிகளின் வேலைவாய்ப்ப்பு மற்றும்பயிற்சித் துறை இயக்குநராக  நான் இருந்தேன்.  

எங்கள் கல்லூரி மாணவர்களுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஊட்டும்  சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்தி வந்தோம்.

அந்த நிகழ்ச்சி ஒன்றுக்காக எங்கள் கல்லூரி நிர்வாகத்தினர் ’தமிழ்க் கடல்’ அய்யா திரு. நெல்லைக் கண்ணன் அவர்களை 13.7.2010 அன்று அழைத்திருந்தனர்.

’தமிழ்க் கடல்’ திருநெல்வேலியில்தான் இருக்கின்றார் என்பது எனக்கு நினைவில் இல்லாமல் கல்லூரிப் பணிகளில் தீவிரமாக இருந்து விட்டேன். தெரிந்திருந்தால் ஆறேழு மாதங்களாக நெல்லையில் இருந்து கொண்டு சந்திக்காமல் இருந்திருப்பேனா?

நீண்ட காலமாக அவரை நேர் கொண்டு பழகவும். நட்புக் கொள்ளவும் கனவு கண்டிருந்த எனக்கு, எங்கள் கல்லூரி நிகழ்ச்சியில் அவரை வரவேற்புச் செய்யும் வாய்ப்பு அமைந்தது.

இம் மாபெரிய  சான்றோனுக்கு  எதைத் தந்தால் அவர் மனம் குளிரும்என்று  எனக்குள் பேரலையை ஏற்படுத்தியது. இருப்பதோ 24 மணி நேர அவகாசம்.

’அவருக்குத் தமிழால் புகழ்மாலை சூடுவதை விடப் பெரிய பரிசு வேறு எதுவும் இருக்க முடியாதென’  மனம் சொல்லிற்று.

உடனேமட மட என்றொரு கவிதை நதி ஊற்றெடுத்தது. அரை மணித் துளியில் ஒரு வரவேற்புரையைக் கவிதை நடையில் எழுதி விட்டேன்.
எனது சக அலுவலர்கள் சிலர் அந்தக் கவிதையைப் படித்து விட்டு அற்புதம் என்றனர். எனது படைப்பின் மெருகும் பவிசும் வெகுவாகக் கூடி விட்டது.

சரி,இதை அழகான வடிவத்தில் கணினியின் மூலம் அச்சிட்டு அழகு படுத்த வேண்டுமே?’

அவ்வளவு பெரிய கல்வி நிறுவனத்தில் உடனடியாகத் தமிழில்டைப், செய்து தரும் திறமையுள்ள ஊழியர் அந்தச் சமயத்தில் இல்லை. இனி நெல்லையின் வீதிகளில் சென்று உரிய கடையைத் தேடிடைப்செய்யும் மனோ நிலையோ நேரமோ இல்லை.

எனக்கும் வெகு நாட்களாவே, ‘ நமது  எழுத்துக்களையும் கவிதைகளையும் நாமே கணினியில் அடிக்க முடியாத நிலை கேவலமாக இல்லையா?’ என்று எனக்குள் ஒரு கேள்வி தொடர்ந்திருந்தது.

எனக்கு நவீன கணினி வசதிகளை SCAD நிறுவனத் தலைவர் தந்திருந்தார். இதைவிட வேறு என்ன வேண்டும்? எத்தனை நாள்தான் பிறரைச் சார்ந்திருந்து நமது தமிழைப் பிறர் பிழைபட எழுதுவதும் திருத்துவதுமான நிலை தொடர்வது?

சிந்தித்த மனம் ,கணினியில் அமர்ந்து  அதற்கென்ற தமிழ் SOFTWARE இறக்குமதி செய்து அரை மணி நேரத்தில் எனது தமிழை நானே அச்சில் ஏற்றும் திறனை நிரூபித்துக் கொண்டேன்.

யாரும் நம்பவில்லை!

நானே அந்தஅற்புதமானவரவேற்புக் கவிதையை  தமிழில் டைப்செய்தேன் என்பதை. ஆனால் எனது சக ஊழியரான முத்தையா தயாளன்தான் அருகிருந்து வியந்து மகிழ்ந்த  சாட்சி.

பிறகென்ன அடுத்த நாள் மேடையில் அய்யா நெல்லைக் கண்ணன் அவர்களுக்கு எனது வரவேற்புக் கவிதையை நீட்டிய கணமே,அவருக்கு நான் ஆயுட்கால நண்பனாக மாறிவிட்டேன்.

அன்றைய விழாவில்,,அதுவரை நான் ’தமிழ்க்கடல்’ நெல்லைக் கண்ணன் அய்யா அவர்களைச் சந்தித்திருக்கவில்லை;அவரும் என்னைப் பற்றி அறிந்திருக்கவில்லை.

ஆனால் விழா மேடையில் எனது வாழ்த்து மடலை அழகிய வண்ணத்திலும் உயரிய எண்ணத்திலும் வழங்கிய பின்னர், மேடையில் அம்மடலையே ஆழமாகப் படித்துக் கொண்டிருந்த அய்யா அவர்கள், தனது சிறப்புச் சொற்பொழிவில் பலமுறை எனது பெயரைக் குறிப்பிட்டுப் பலநாள் நண்பரைப்போல் பேசி,பாசமழை பொழிந்தது எங்கள் நட்பின் ஆரம்பத்தின் நெகிழ்வுமிக்க தருணங்கள்.

மறுநாள் அவரைத் தேடி அவரது இல்லம் சென்றபோது அய்யா அவர்கள் காட்டிய அன்பும் பாசமும் நேசமும் தமிழ்ச் சோலையில் எங்கள் இருவரையும் எங்கோ உயர வைத்து விட்டது.

அதைவிட எனக்கு ஓர் இன்ப நெகிழ்ச்சி:
அய்யா அவர்கள் தனது அறையில் அமர்ந்திருக்கும் ஆசனத்தின் பின்னே
வருகின்ற விருந்தினர்கள் அனைவரும் படித்து மகிழும்வகையில் எனது வாழ்த்து மடலை சுவற்றில் மாட்டி வைத்திருந்தது

ஆயிரக் கணக்கான வரவேற்புப் பத்திரங்களைப் பெற்றிருக்கும் அந்தப் பெரியோன், ‘இந்தச் சிறியோனின் வாழ்த்துக் கவிதையைத் தனது அறைக்கு  வருகின்ற அத்தனை பேரும் படிக்கவும் மகிழவும் மாட்டி வைத்திருப்பது ஒன்றேஎனது தமிழுக்கு வழங்கப் பட்டிருக்கும் தரச் சான்றிதழ்என தலை நிமிர்ந்து  எண்ணீக் கொள்கிற நான், தமிழ் இலக்கியங்களிலும் அதன் பண்பாட்டுச் சிகரத்திலும் செம்மார்ந்த ஆன்மிகச் செறிவிலும் கோலோச்சிக் கொண்டிருக்கும் அந்தத்தமிழ்க் கடல்’ விரும்பும் எழுத்துக்களைத்தான்  இங்கே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறேன்’  என்பதைக் கர்வத்தோடு சொல்லிக் கொள்கிறேன்.

நண்பர்களே.

தமிழ்க் கடல் அய்யா திரு நெல்லைக் கண்ணன் அவர்களின் நேர்முக நட்பு எனக்கு அமைந்த விதம் இதுதான்.

அவருக்கு நான் முதன் முதலாக எங்கள் கல்லூரி விழா மேடையில்
வாசித்து அளித்த ‘நெல்லைக் கண்ணன் நெடும்புகழ் வாழ்க!’ வாழ்த்து மடலின் புகைப்பட நகலையும் வாழ்த்து வரிகளையும் இங்கே காணலாம்.


நெல்லை கண்ணன் நெடும்புகழ் வாழ்க!
      - கிருஷ்ணன் பாலா
§  

            முப்பெரும் தமிழை முனைப்புடன் உலகில்
                                                  முழங்கிடும் அறிஞர் கூட்டத்தில்;
அப்பரும் மாணிக்க வாசகர் மற்றும்
                                                 அவர்போல் பற்பல ஞானியரும்
செப்பிய பொருளைச் சிந்தனை செய்து
                                                 செழித்திட வைக்கும் தமிழ்க் கடலே!
ஒப்பரும் உனது திசைவைத் தெனது
                                                 உளமார் வணக்கம் சொல்கின்றேன்!

’நெல்லை என்றால் தாமிரவருணி,
                                                 நெடும்புகழ் சேர்ந்த நதியும்;
நெல்லையப்பர் காந்திமதி யாள்
                                                நெகிழச் செய்யும் அருளும்
’எல்லை’ என்றே இருந்தது மாறி
                                                இணைந்தது உனது பெயரும்;
நல்லவன் உனது நாமம் உலகில்
                                                நாளும் நிலைத்திட வாழி!
                                                               
(வேறு)

கண்ணன் தமிழ் அமுதைக்
                                                கண்டு கொண்ட நாள் முதலாய்;
எண்ணம் முழுதும் இவர்
                                                எழுந்தே நிற் கின்றார்;
அண்ணன் இவரை நாம்
                                                அணு குவது எப்போது?
திண்ணமுடன் இதை எண்ணித் 
                                                தினந் தோறும் காத்திருந்தேன்!.

              காத்திருந்த நாள் இன்று
                                                கனிந்து வர, உணர்ச்சிகளை
வார்த்தெடுத்து என்றென்றும்
                                                 வாடாத மாலை' எனப்
பூத்தொடுத்து போடுகின்றேன்:
                                                பொய்யாத கவி மாலை;
நாத்திறத்தால் நாற்றிசையும்
                                                நலம் காணும் நாயகர்க்கு.!

                                                               
                                                                  ( வேறு )

அறிவில்,அன்பில்,ஆளுமை நோக்கில்
                                                அரசியல் அணுகுமுறையில்,
இறைநெறி போற்றும் இலக்கணத் தமிழில்
                                                இரண்டறக் கலந்த பண்பில்
உறைவிடமாகத் திகழும் சான்றோன்;
                                                உண்மை:நெல்லை கண்ணன்;
அறவுரை செய்ய வந்தார்,இங்கு;
                                                அனைவரும் அவர் சொல் கேட்போம்!
§  
                     கிருஷ்ணன்பாலா 
          13.17.2010                          


No comments: