Friday, October 11, 2013

மனதொடு மனதாய்......!




மனமே, உன்னுடன் உரையாடி
மகிழ்ந்ததும் நெகிழ்ந்ததும் பலவுண்டு;
சினமோ,துயரோ,செல்வாக்கோ
சேர்ந்தால் உன்னுடன் பகிர்வுண்டு!

பறவைகள்,விலங்குகள்,புல்லினங்கள்
பரபரப்போடு வாழ்வ தில்லை;
முறையோ டவைதாம் வாழ்ந்திருந்து
முனகிக் கொண்டு சாவதில்லை!

அவையவை இயற்கைக் குணங்களுடன்
அற்புதமாக வாழ்வதைத் தான்
தவறியும் மனிதர் உணர்வதில்லை;
தத்துவம் மட்டும் பொழிகின்றார்!

பேரறிவோடு பிறக் கின்ற
பெருமை கொண்ட மானுடர்கள்
ஓரறிவுள்ள உயிரினம் போல்
உற்று உணர்ந்து வாழ்வதில்லை!

இரண்டு மூன்று நான்கைந்து
இருக்கும் அறிவு விலங்கினங்கள்
உருண்டு புரண்டு அழுவதில்லை;
உருட்டும் புரட்டும் செய்வதில்லை!

ஆனால் மனிதன் அப்படியா?
ஆறறி வாற்றல் பயனுண்டா?
ஏனோ,தானோ என உலகில்
ஏய்த்துப் பிழைப்பது அவன்குணமா?

ஆலயம் தேடி ஆண்டவனை
அழுதும் தொழுதும் பொய்பேசி
காலையும் மாலையும் சுகம்காணக்
கவலையில் உழல்வது அவன்தானே?

ஊனுடல் தானொரு ஆலயமாம்
உள்ளே இருப்பது மனசாட்சி;
மானுடன் இதனை அறியாமல்
மறந்தே வாழ்வது ஆறறிவோ?

ஊருக்கு மறைக்கும் உண்மைகளை
உள்ளே இருக்கும் மனசாட்சி;
நேருக்கு நேராய்ப் பார்த்திருக்கும்;
நினைத்தா மனிதன் பார்க்கின்றான்?

பணத்தைத் தேடி;பகைதேடி;
பலமும் நலமும் கெட்டழிந்து
குணத்தைக் கொன்று, கொடுவினையில்
குப்புற வீழ்வது அவன்விதியோ?

காமம்,வெகுளி மயக்கம் எனக்
கைக்கொண்டுழன்று;அறிவின்றி
நாமம் கெட்டு நரகடைய,
நாயினும் கீழாய் வாழ்வதுயார்?

மனமெனும் ஒன்று இருப்பதுதான்
மனிதர் அறிவின் சிகரம் என
புனிதத் தொல்காப் பியன்சொன்ன
புதிரை உணர்ந்தவன்தான் மனிதன்!

கவலைகள் இல்லா மனிதரைநான்
கடுகளவேனும் பார்த்ததில்லை;
அவலமில் லாதசூழ் நிலையை
அடையா திருந்தால் மனிதரில்லை

ஆயினும் அவற்றை எதிர்கொண்டு
அறிவின் பயனைக் கையாண்டு
‘தூயவன் மனிதன்’ எனக் காட்டத்
தூண்டும் அறிவை நீ தருக! 

மனமே,உன்னுடன் பலமுறையும்
மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் உரையாடித்
தினமும் விழைவது, இதைத்தானே?’
தெளிவாய் என்னுடன் இருப்பாயே!

இவண்-
கிருஷ்ணன்பாலா

11.10.2013

2 comments:

Anonymous said...

//"மனமே,உன்னுடன் பலமுறையும்
மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் உரையாடித்
தினமும் விழைவது, இதைத்தானே?
தெளிவாய் என்னுடன் இருப்பாயே!"//

அருமையான வரிகள்!
கொடுத்துவைத்த மனம்!

நடராஜன் said...

அற்புதமான பதிவு. இன்றைய மனிதன் வாழும்போது தனது மனதை அறிந்து வாழவும் வழிசொல்லுங்கள் ஐயா