Wednesday, October 2, 2013

அண்ணல் காந்தியை அழித்தவர் யார்?

றிவார்ந்த நண்பர்களே,

இன்று அண்ணல் காந்தி பிறந்த நாள்; அண்ணல் காந்தியை ஓர் அவதாரமூர்த்தியாய் அர்ச்சித்த தென்னாட்டுக் காந்தி  ‘கர்மவீரர்’ காமராஜ் மறைந்த நாளும்கூட.

காந்திஜியை உண்மையாக மதிப்பவர்கள் இன்று நிச்சயமாகக் காங்கிரஸ் சார்புக் கொள்கை உடையவர்கள் அல்லர்.

காந்திஜியை எதிர்ப்பவர்கள் தேச விரோத எண்ணம் கொண்டவர்களும் அல்லர்.

காந்திஜியின் புகைப்படங்களைப் போட்டும் அவரது கொள்கை இதுவெனக் கூறிக் கொண்டும் காங்கிரஸ்காரர்கள் மக்களை ஏமாற்றி வாக்குப் பெற்று ஆட்சிக் கட்டில் ஏறி, அத்தனை அயோக்கியத்தனங்களையும் செய்து நாட்டைக் குட்டிச் சுவராக்கிக் கொண்டு வருகிறவர்கள்’ என்பதை நாம் இன்று எண்ணிப் பார்க்கின்றோம்.

காந்தி அடிகளின் வாழ்க்கையும் கொள்கைகளும் வெளிப்படையானவை; நேர்மையானவை. இன்றுவரை அவரைப் போன்ற மகாத்மா எந்த நாட்டு அரசியல் விடுதலைக்கும்  கிடைத்ததில்லை.

‘இது காந்தி தேசம்’ என்ற பெருமை கொண்ட தனிப் பெரும் நாடு. அதன் நிர்மாணம் பாரத தேசத்துப் பண்பாட்டின் நெறிகளின் வழியே உருவக்கப்பட்டிருப்பதற்குக் காந்தி அடிகளே காரணம்.

காந்திஜியைக் கை விட்டு விட்டு இந்தத் தேசத்தின் பெருமையை எவர் பேசினாலும் அவர்கள் கபோதிகளே;கருத்திழந்து பேசும் அஞ்ஞானப் போதிகளே.

அவரது சத்திய சோதனை நூலைப் படித்திராத மூடர்கள் வேண்டுமானால் காந்திஜியைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களையும் பொய்க் கதைகளையும் அள்ளி விடலாம்.

ஆனால் காந்தி அடிகளின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி,அவர் தென் ஆஃப்ரிக்காவில் வெள்ளையர்களின் அடக்கு முறைக்கு எதிராகப் போராடத் துணிந்த விதம்,பிறகு அதிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி, இந்திய சுய நிர்ணய விடுதலைக்காக அஹிம்சை என்னும் ஆயுதம் ஏந்தி,உலகில் எங்கும் காணாத வழியில் அறவழிப் போராட்டத்தைப் பரப்பிய விதம்,உப்புச் சத்தியாக் கிரகப் போராட்டம், அறவழியில் ஒத்துழையாமை இயக்கம்,சுதேசி இயக்கம் என்று பல்வேறு  ஆயுதங்களை அவர் கையில் எடுத்து, சூரியனேஅஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆணவத்தையும் அகந்தையையும் ‘இந்தியர்கள் என்றால் ’இளிச்சவாய அடிமைகள்’ அவர்களின் திமிரையும் தவிடு பொடியாக்கி, அவர்களை அடிபணிய வைத்து  இந்தியாவுக்குக் கௌரவமான விடுதலையைப் பெற்றுத் தந்த ஆத்மப் பேரொளி.

உலகில் அவருக்கு இணையான சத்திய சீலர்கள் எந்த நாட்டிலும் இல்லை;எவரும் இல்லை.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இறுதி வடிவம் அவரது சுட்டு விரல் அசைவில்தான் நின்றது;அவரது அஹிம்சை நெறியே வெள்ளையர்களின் மனதை வென்றது.

‘அவர் யார்?’ என்பதைப் படிக்காமல், ‘காந்தியை எனக்குப் பிடிக்கவில்லை’ என்று சொல்லும் ’கமர்கட்டு’ கருத்தாளர்களிடம் நாம் அனுதாபம் கொள்ள முடியுமே தவிர ஆத்திரம் கொள்ள முடியாது.

அண்ணல் காந்திஜியை பற்றித் தவறான பார்வை கொண்டு எழுதுவோர் இந்திய சமூகத்தில் மதிப்பிழந்து போவார்கள், ‘மதி கெட்டவர்கள்’ என்ற மதிப்பினால்.

அத்தகையவர்களால்தான்,அண்ணல் காந்தி அடிகளைப் பற்றி  உண்மைக்கு மாறான சில செய்திகள்,கதைகளாகத் திரிக்கப்பட்டு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.

அவர் பெண்களோடு பயணம் செய்ததும் பெண்களோடு ஒரே அறையில் தங்கியதும் அனர்த்தமாகத் திரிக்கப்பட்டு அனாச்சாரமான எண்ணக் கலவையில் இன்று சிலர் காந்தி மகாத்மாவை விமர்சிக்கின்றார்கள்.

‘மகாத்மா காந்தி அடிகளை விமர்சிப்பதற்கு நமக்கு என்ன தகுதிகள் இருக்கிறது?’ என்பதை அவ்வாறு விமர்சிப்பவர்கள் தங்களைக் கண்ணாடி முன் நிறுத்தி உறுதி செய்து கொள்ளட்டும்.

‘இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை; நேருவைப் பிரதமராக ஆங்கீகரித்தது; வல்லபாய் படேலின்  முக்கியத்துவத்தை ஓரம் கட்டியது;நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தை ஒப்புக் கொள்ளாதது இவை அண்ணல் காந்தி அடிகளின் அரசியல் பிழை என  அலசுவது, அரை வேக்காட்டுத்தனம்.

அன்றைய அரசியல் நிர்பந்தமும் சூழ்நிலைகளும் அவ்வாறு எழுதுபவர்களுக்கும் விமர்சிப்பவர்களுக்கும் விளங்காது; காந்திஜி தனி மனிதராக இருந்து கொண்டு நேர்மை;சத்தியம்,அஹிம்சை இவற்றின் அடிப்படையிலேயே மனச் சாட்சியோடு நடந்து கொண்டவர்.

‘தீவிர மத வெறித்தனத்தினால், இந்தியா துண்டாடப்பட்டுவிட்டதே’ என்று அதே அளவு மத வெறி உணர்வு கொண்ட நாதுராம் விநாயக் ராம் கோட்சே இந்தியப் பிரிவினையை அங்கீகரித்த காந்தி அடிகளின் மீது கருத்திழந்த வன்மம் கொண்டு   அண்ணலைச் சுட்டு வீழ்த்தினான்.

கோட்சே என்னும் அந்த தனிமனிதன் செய்த கொலையினால் முழுமையான பலனை அடைந்தது காங்கிரஸ்தான்.

இந்தியா சுதந்திரம்  பெற்ற கையோடு  ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதில் காங்கிரஸ்கார்களிடையே உக்கிரமான உள்கட்சி மோதல்கள் ஏற்பட்டிருந்தன.

காந்தி அடிகள் கவலையோடு சொன்னார்:
‘இனி காங்கிரஸைக் கலைத்து விட வேண்டும். அது ‘இந்திய தேசிய விடுதலைக்கு பாடுபட்ட இயக்கம்’ என்ற அளவோடு கலைக்கப்படுவதே மரியாதையானது’

சுதந்திரம் பெறும்வரையில் காந்தியின் காலடியில் தவம் செய்து வந்தவர்கள்,விடுதலைக்குப் பிறகு நேரு குடும்பத்தின் முறைவாசல் காரர்களாக மாறி,பதவிப் பித்துக் கொண்டவர்களாகி விட்டனர்.
நேரு குடும்பத்தின் வேலைக்காரர்களைக் கண்டாலே காலில் விழும் காங்கிரஸார் சோனியாவிடம் எப்படி இருப்பார்கள்? அவர் புதல்வன் ராகுலிடம் எப்படி நடந்து கொள்வார்கள்? என்பதையெல்லாம் நாம் இப்போது விளக்க வேண்டியதில்லை.

இத்தகைய பதவி வெறி கொண்ட காங்கிரஸ்காரர்களுக்கு  அந்தப் பதவியே கிடைக்காமல் செய்யும் கருத்தைச் சொன்ன காந்தி அடிகளை எப்படிப் பிடிக்கும்?

கோட்சேயைத் தூண்டி விட்டு மத உணர்வின் அடிப்படையில் வெறி கொண்டோ வீர லட்சியம் கொண்டோ காந்தியைக் கொல்ல விட்டது யாராக இருக்க முடியும்? என்று சிந்தித்தால் காந்தியைக் கொன்றவர்களின் ரகசியப் பின்னணி புலப்படும்.

கோட்சே, காந்தி அடிகளைக் கொன்றதன் பலனாகத்தானே, காங்கிரஸ் காந்தி அடிகளைத் தனது கட்சியின் அடையாளமாகக் (iCon) காட்டிக் காட்டியே ஓட்டுக்கள் வாங்கி, காங்கிரஸ்காரர்கள்  கோடிக் கணக்கில் இன்று ஊஊழல் செய்து உப்பரிகையில் உலாவந்து கொண்டிருக்கிறார்கள்?

காந்திஜியின் திருமேனியைக் கோட்சே கொன்றான்’ என்றால் அவரது ‘காந்தியின் குல்லா’வைப் போட்டுக் கொண்ட,இந்தப் பகல் வேஷதாரிகள்தான் காந்திஜியின் கொள்கை அனைத்தையும் கூறு போட்டு விற்றுக் காசாக்கிக் காந்திஜியை உண்மையாகக் கொன்றவர்கள்’ என்பேன்.

அதற்காக அடித்தளம் இட்டு, கோட்சேயைத் தூண்டி விட்டவர்கள் இந்தக் காங்கிரஸ் கூடாரத்தின் கொள்கைத் தீபமாக வேஷம் போட்டுக் கொண்டு திரிந்தவர்களோ என்ற அறிவுப்பூர்வமான ஐயப்பாடு எனக்குள் தோன்றுகிறது.

இந்திய சுதந்திரம் பெற்று ஒரு ஆண்டுகூட முடியாத நிலையில் காந்தி அடிகள் கொல்லப்பட்ட துயரம் குறித்து அன்றைய பிரிட்டீஷ் பிரதமர்  வின்ஸ்டன் சர்ச்சில் மிக வருந்திச் சொன்னார்:

‘நாங்கள் இத்தனை காலமாகப் பாதுகாத்து வைத்திருந்த காந்தியை நீங்கள் ஒரு ஆண்டுக்குள் கொன்று விட்டீர்களே!’


நண்பர்களே,
இந்தக் கருத்து கோட்சேவுக்குப் பொருந்தாது; முழுக்க முழுக்க காங்கிரசின் பதவிப் பித்தர்களுக்கே பொருந்தும்.

அதனால்தான் சொல்கிறேன்:

‘எனக்குக் கோட்சே மீது கோபம் உண்டு; ஆனால் இந்தக் காங்கிரஸ்மீது கொலை வெறியே உண்டு!’

இவண்-
கிருஷ்ணன்பாலா
2.10.2013
Post a Comment