Sunday, October 13, 2013

வாணியை வணங்குவோம்!


வாக்கிலே என்றும் உனது
வார்த்தையே வேண்டும்; என்றன்
நோக்கிலே பிழைகள் அற்ற
நுகர்ச்சியே வேண்டும்;வாழ்க்கைப்
போக்கிலே பொய்ம்மை சேராப்
புதுமைகள் வேண்டும்;நெஞ்சில்
தேக்கிநான் வேண்டுகின்றேன்;
தேவைகள் அருள்வாய்,வாணீ!

கல்விதான் பெரிதா? செல்வம்
காண்பதே பெரிதா? இதிலே
நல்லது யாதென் றிங்கு
நவில்வதைச் சிந்திக்கின்றேன்:
செல்வத்தைச் செல்வம் என்று
சிந்திக்கும் அறிவில் லாது
செல்வதைப் பெற்ற வாழ்க்கை
சிதைந்துதான் போகும்,வீணே!

கல்வியைப் பெற்ற வாழ்வில்
கசடுகள் சேரா; அதுவே
செல்வமாய்த் திகழ வாழ்வோர்
சிதைவதும் இல்லை; அதனால்
கல்வியே உயர்ந்த தென்று
காண்கிறேன்; வாணி என்றன்
செல்வமாய்த் திகழு கின்றாள்;
சிந்தனை வேறு எதற்கு?

உலகிடைப் பிறந்த மாந்தர்
உணர்கின்ற அறிவைப் பெற்று
‘நலமெது? தீதெது?’ என்று
நாடினால் அதுதான் வாழ்வின்
பலம் மிகு துணையாய் மாறி
பலவிதம் உயர்த்தும்;அதனால்
கலைமகள் மாந்தர் வாழக்
கருப்பொருள்; கண்டீர் இங்கே!

வாணியைப் போற்றி நின்றால்
வாழ்க்கையில் அறிவு கூடும்;
வாணியால் சேரும் செல்வம்
வளர்ந்திடும் நித்தம் நித்தம்!
வாணியால் தோல்வி இல்லை;
வாழ்க்கையில் வெறுமை இல்லை;
‘வாணியே, வா,நீ’ என்று
வணங்குதல் செய்வோம் வாரீர்!

இவண்-
கிருஷ்ணன்பாலா

13.10.2013

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...