Friday, December 17, 2010

எங்கள் ராஜாஜி (எழுதுகிறேன் தொடர்-4)

அறிவார்ந்த நண்பர்களே, அன்பு நிறைந்த சகோதரிகளே,
வணக்கம்.

தமிழரும் தமிழ் நாடும் இந்தியாவில் பெருமைபடச் செய்த தலைவர்களில் தலையாயவர் மூதறிஞர் ராஜாஜி.

 ‘பாரத ரத்னா’
மூதறிஞர் ராஜாஜி
’நல்லான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி’ என்ற, அந்த மாமனிதர். தமிழன்னை ஈன்ற தலைப் புதல்வர்களில் ஒருவர்.

அவர் பிறந்த நாள் டிசம்பர் 10, 1878; அமரரான தினம் இதே டிசம்பர் 25 (1972) உலகுக்கு அன்பையும் கருணையும் போதித்த ஏசு கிறிஸ்து பிறந்த நாளன்று மறைந்த, இந்த அரசியல் புனிதர், ஓர் ஒப்பற்ற தமிழ்ச் சாணக்கியன் என்பதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை.


இந்திய அரசியல் நிர்வாகத்தில் இவர் பார்க்காத உயர் பதவிகளே இல்லை.சேலம் நகர்மன்றத் தலைவர் பதவி முதல்,வங்காளத்தின் கவர்னர்,குடியரசுத் தலைவருக்கு நிகரான இந்தியாவின் கடைசிக் கவர்னர் ஜெனரல், இந்திய யூனியனின் உள்துறை அமைச்சர்,பிளவு படாத சென்னை மாகாணத்தின் (ஆந்திராவும்,தமிழ்நாடும் ஒரே மாநிலமாய் இருந்த காலத்தில்) பிரதமர், ஆந்திரா பிரிந்த பிறகு,தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் என்று எல்லா உயர் பதவிகளையும் வகித்து இந்திய அரசியல் தலைவர்கள் அத்தனை பேரிடத்திலும் உயர் மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்த தமிழர்,அண்ணல் ராஜாஜி அவர்கள்.

விரும்பியிருந்தால் இந்தியாவின் பிரதமர் பதவியையும் பெற்றிருக்க முடியும். ஆனால், மனச் சான்று ஏற்கவில்லை என்று கூறி,பதவிகளைத் துறந்து அரசியல் பீஷ்மராய் வாழ்ந்த புனிதர் மூதறிஞர் ராஜாஜி அவர்கள்.

மகாத்மா காந்தி இவரை, ‘எனது மனச்சாட்சியின் பாதுகாவலர்’ என்று குறிப்பிட்டது ஒன்றே இந்த மூதறிஞரின் நேர்மைக்கும் தூய்மைக்கும் உலகத் தரச் சான்று.

பதவிகளை விரும்பாத ராஜாஜி அவர்களுக்கு இந்திய அரசு ‘பாரத ரத்னா’
என்ற உயர் விருதினை வழங்கிக் கவுரவம் பெற்றது என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகப் பெரும் பங்களிப்பையும் இந்திய நிர்வாகச் சிறப்பில் ஒப்பற்ற நுண்ணறிவுப் பகிர்வையும் தந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.’ உலகில் அணு ஆயுதப் போருக்கு எதிராக எழுதிய கருத்துக்கள் ஐக்கிய நாடுகள் சபையிலும் எதிரொலித்தது.

உலக நாடுகளிடையே இந்தியரின் நுண்ணறிவுக்குப் பிரதிநிதியாகத் திகழ்ந்து உலக சமாதானத்துக்குப் பாடுபட்டு மிகப் பெரிய ராஜ தந்திரி’ என்ற பெயர் எடுத்தவர்.

’ஸ்வராஜ்யா’இதழ்களில் இவர் எழுதிய கருத்துக்கள் இந்தியச் சாணக்கியத்தின் சாசனங்களாகப் பதிக்கப் பட்டவை.

தமிழ் இலக்கியத்தின் முத்தாரங்களாக இவர் எழுதிய வியாசர் விருந்து (மஹாபாரதம்), சக்கரவர்த்தித்  திருமகன் ( இராமாயணம்),கைவிளக்கு (பகவத் கீதை),ஞான தீபம் (கடோபநிடத விளக்கம்முதலான பலநூல்கள்  திகழ்கின்றன.

தரமான எழுத்தாளர் என்பதுடன் இவர் மிகப் பெரும் பாடல் ஆசிரியர் என்பதையும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் செவிக்கும் சிந்தைக்கும் அழியா ஆனந்தத்தைத் தந்து கொண்டிருக்கும்குறையொன்றுமில்லை கோவிந்தா…’ என்ற பாடல் பறைசாற்றும்.  

அரசியல்,இலக்கியம், பத்திரிகை,ஆன்மீகம்,.சட்டம்,சமூகத் தொண்டு என்று பல்வேறு துறைகளிலும் மேதைமை கொண்டு திகழ்ந்த மூதறிஞர் ராஜாஜி அவர்கள் தமிழர்களின் மேம்பட்ட உதாரண புருஷர்.

அண்ணல் ராஜாஜி அவர்களின் உயர்ந்த ஒழுக்க வாழ்வு,சிந்தனைகள், செயல்பாடுகள், அரசியல் நேர்மை,எழுத்து எல்லாம் உண்மைத் தமிழரின் பண்பாட்டு சின்னம்.

மூதறிஞர் ராஜாஜி அவர்கள்,‘குலதர்மக் கல்வி’யின் பயன் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் அப்போது ’திராவிடப் பிரசங்கிகளின் கடும் விமர்சனத்துக்குள்ளாயின.

எனினும், அதே திராவிடக் கட்சிதான் இதே ராஜாஜி அவர்களின் ’ஆசிர்வாதம்’ பெற்று 1967ல் தமிழ் நாட்டில் ஆட்சிக் கட்டில் ஏறியது.

அரசியல் வானில் ஆதவன் போல் பிரகாசித்த ராஜாஜி அவர்களின் அறிவாற்றலைக் கண்டு வியந்து 1967 தேர்தல் சமயம், அறிஞர் அண்ணாதுரை அவர்கள் அவரை ‘மூதறிஞர் ராஜாஜி’ என்று குறிப்பிட்டார்.

உண்மையிலேயே, ‘அறிஞர்களுக்கெல்லாம் அறிஞர்’ என்னும் பொருள் கொண்டது இந்த ‘மூதறிஞர்’ பட்டம்.

ஆனால், எவர் அவரை ‘மூதறிஞர்’ என்று கண்டுணர்ந்து அந்தத் தகுதியைச் சொல்லி அழைத்தாரோ, அந்தப் பெருமையை, அதே, அவரால், அறிஞர் அண்ணாதுரை அவர்களால் வளர்க்கப் பட்ட திராவிடக் கட்சிகள் நடத்திய ‘திராவிடமாயை’த் தெரு விழாக்களின் தூசுகள் மறைத்து விட்டன;தமிழன் அந்தத் தூசிகளின் படிமானத்தால் மாசு படிந்து விட்டான்.

மூதறிஞர் ராஜாஜி அவர்கள், ’கலியுகக் கால’ அரசியலில் மஹா பாரதத்துக் கண்ணனைப் போல. சமூக தர்மத்தையும் மனித தர்மத்தையும் கலந்து நேர்மையான அரசியலை நடத்தத் தூண்டியவர்.

அவர் பாண்டவர்களைத்தான் 1967 தேர்தலில் ஜெயிக்க வைத்தார்;ஆனல் கவுரவர்களாக மாறியல்லவா, ஆட்சி நடத்துகிறர்கள்,இந்தப் போலிக் கவுரவர்கள்?

இந்தத் திராவிடக் கட்சிகளின் மாட்சிமையினால், எந்தப் பெருமைகளைத் தமிழன் பேசினால் உலக அரங்கிலும் பாரதத் திரு நாட்டிலும் தமிழனுக்கு மதிப்பும் மரியாதையும் கூடி நிற்குமோ, அந்தப் பெருமையைப் பேசிட, அவனுக்குக் கற்றுத் தர யாருமில்லை; கற்றுக் கொண்டிருப்பவர்களோ இப்போதெல்லாம் முன் வருவதுமில்லை.

பாவம், அவர்கள்! கல்லெறி பட்டாலும்கூடத் தாங்கி கொள்வார்கள்; ஆனால் சொல்லெறி தாங்கும் துணிச்சல் அவர்களுக்கு இல்லையே.

1962 களில் இளைஞனாக, அறிவு வளராச் சிறுவனாக இருந்த நானும் கூட திராவிடப் பிரசங்கிகளின் சொல் ஜாலத்தில் மயங்கி, மதியிழந்து, திராவிடக் கட்சிகளுக்காக எங்கள் கிராமத்துத் தெருக்களில் சுவர்ச் சரித்திரம் எழுதிப் பிரச்சாரம் செய்தவன்தான். அது,அஞ்சாங் கிளாஸ் பிரச்சாரம்!

அதன் ’அறிவு கெட்ட’ வளர்ச்சியினால்,பின்னால் 1972களில் அதே ராஜாஜி அவர்களால் எனக்குக் கல்கி தோட்டத்தில் நுழையவும், ’கல்கி’ அதிபர் திரு.சதாசிவம் அவர்களால், கல்கி, கோகுலம், ஸ்வராஜ்யா இதழ்களில் பணியாற்றவும் வாய்ப்ப்புக் கிட்டி, நான், அத்தகைய பெரும் வாய்ப்பை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ளாமல் போய் விட்டேன்.

அம்மையும் அப்பனும்
கல்கி ஸ்ரீ T.சதாசிவம்--M.S.சுப்புலட்சுமி
கல்கியில் ஏறத்தாழ 5 ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில், கல்கி அதிபர்திரு  சதாசிவம், அவரது துணைவியாரும் உலகப் பிரசித்தி பெற்ற இசைப் பேரரசியுமான திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி, அவர்களின் செயலாளரும் கோகுலம் இதழ் ஆசிரியருமான திரு கே.ஆர்.ஆத்மநாதன்,கல்கி ஆசிரியர் திரு கி.ராஜேந்திரன் ஆகியோரிடம் நான் ஓர் செல்லப் பிள்ளை போல் இருந்தும் என்னுள்ளே இருந்து வந்த ’திராவிட மாயைப்’ பற்றினால், உண்மையான அறிவுத் தேடலை இழந்து விட்டேன். நானாக கல்கியை விட்டு விலகும் பேதமை என்னை ஆட்கொண்டிருந்தது,அப்போது.

இந்த திராவிட மாயை தந்த மயக்கத்தில்,அண்ணல் ராஜாஜி அவர்களுடன் நெருக்கமாக இருந்து கல்கி,ஸ்வராஜ்யா,கோகுலம் இதழ்களில் பணியாற்றிய காலங்களில் அவர் பெருமையை உணராதொழிந்தேன்.

அவர் ஜாதி வர்ணங்களைக் கடந்த ஓர் ஒப்பற்ற ஞானி, தெளிந்த அரசியல் மேதை’ என்பதை, அவர் மறைந்து இருபத்தைந்தாண்டுகள் கழித்து உணர்ந்து கண்ணீர் மல்கிக் கசிந்து உருகுகின்றேன்.

நம் மூதறிஞரின் நினைவைப் போற்றும் வகையில்,அவரைப் பற்றிய உண்மை,அவரது தகுதிகள்,வாழ்வு இவை பற்றிய செய்திகள் தொடர்ந்து பரவி, ராஜாஜி யார் என்பதே தெரிந்து விடாதபடிக்கு திராவிட மாயை சூழ்ந்திருக்கின்றது; உண்மை.

உண்மையை, அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்ட என் மனத்தில் திராவிட மாயைக்கு எதிராக எனது எழுத்துக்கள் எரிதழல் ஏந்தி வருவது, சமூக அக்கறையின் இயற்கையான வெளிப்பாடே தவிர அரசியல் நோக்கத்துக்கோ வெற்றுப் புகழுக்கோ அன்று.

நண்பர்களே,

தமிழனுக்கு இந்தத் திராவிட மாயைப் பிசாசினால் நேர்ந்து வரும் இழிவு நிலையை அனுபவப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் உணர்ந்தவன் என்ற அடிப்படையில் ’ஊருக்கு நல்லது சொல்வேன்; எனக்குண்மை தெரிந்ததைச் சொல்வேன்’ என்று மாகவி பாரதி கற்றுத் தந்ததைச் செய்து வருகின்றேன்.

ஸ்வராஜ்யா ஆங்கில வார இதழ் அண்ணல் ராஜாஜி அவர்களால் உருவாக்கப் பட்டது; கல்கி குழுமத்தின் ஆங்கில வார இதழ் அது. ஸ்வராஜ்யாவில் ராஜாஜி அவர்கள் எழுதும் விஷயங்களை அகில இந்தியாவின் அரசியல் தலைவர்களே, ஏன் உலக நாடுகளின் தலைவர்களே உன்னிப்பாகக் கவனித்தார்கள்.

காந்தியடிகள், பண்டித நேரு, வல்லபாய் பட்டேல்,நேதாஜி போன்ற பெரும் தலைவர்களுக்குச் சற்றும் மாற்றுக் குறையாத தமிழன் ராஜாஜி என்று சொன்னால் ‘தமிழர்’அல்லாத பலர் பொங்கி எழுகின்றார்கள்.

அறவோர்களாகிய அந்தணர்களை ஆதரித்துப் பேசுவதும்,திராவிடக் காட்சிகளை விமர்சிப்பதும் ஏதோ ‘ஒரு தமிழ்க் குற்றமாகவே’ பேசிப் பிதற்றும் கூட்டம் மலிந்து விட்டது, இன்று.

அப்படியானால் இவர்கள்-

’அந்தணர் என்போர் அறவோர்;மற்றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுகலான்’

என்று மானுடச் சட்டம் எழுதி வைத்தானே வள்ளுவன்,அவனையும்
இதே குற்றவாளியாக்குகிறார்கள் என்றுதானே பொருள்?.

வள்ளுவன் மொழியே மறைமொழியாய் ஏற்பது அறிவார்ந்த தமிழனின் கடமை அல்லவா?

அவ்வாறு, வள்ளுவன் சொன்ன அறவழி நின்ற அந்தணர்தான் நமது மூதறிஞர் ராஜாஜி.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் இருந்து காந்தி அடிகள் முன்னிலையில் பண்டித நேருவுக்குப் பதவிப் பிரமாணம்செய்து வைத்தவர். காந்தி அடிகளின் சம்பந்தியாகி, சுதந்திர இந்தியாவில் புகழ் பெற்ற கலப்புத் திருமணத்தை நடத்திய முதல் அரசியல் தலைவர் ராஜாஜி என்பதை அநேகம் பேர் தங்கள் வசதிக்காக மறந்து விட்டனர்.

காந்தி அடிகளின் மறைவுக்குப் பின் அவருடைய இடத்தில் அண்ணல் ராஜாஜி அவர்களை வைத்து, உலக நாடுகளே மதித்தன’என்கிற பெருமையை நாம் கொண்டாட மறந்து விட்டோம்.

கொண்டாட மறந்தது தமிழர்களின் துரதிர்ஷ்டம்; கொண்டாடாமல் இருப்பது திராவிடக் கட்சித் தலைவர்களின் அதிர்ஷ்டம்.

தமிழர்களுக்கு பெருமை சேர்க்கத் பிறந்த அண்ணல் ராஜாஜி அவர்களை நாம் இன்று நினைந்து நிமிர்வோம்; பாரத அரசியலில் ஓர் பீஷ்மராகவும் தமிழ் இலக்கிய உலகில் ஓர் வியாசரைப் போன்றும் திகழ்ந்த மூதறிஞர் ராஜாஜி அவர்களின் நினைவுநாளில் அவர் புகழ் போற்றிப் பெருமை கொள்வோம்.

அண்ணல் ராஜாஜி அவர்கள் காலத்து அரசியலையும் அவரது அணுகுமுறைகளையும் அறிந்திருந்தவர்கள், இன்று,அவர்கள் திராவிடக் கட்சிகளின் ஆதரவானவர்களாக இருப்பினும், உண்மையை மட்டும் நேசிப்பவர்களாயின் இந்தக் கவிதையையும் அண்ணல் ராஜாஜி அவர்களையும் போற்றத் தவற மாட்டர்கள் என்று நம்புகிறேன். வாழ்க, மூதறிஞர் ராஜாஜி அவர்களின் புகழ்!

இதோ மூதறிஞர் ராஜாஜி பற்றிச் சிறப்புக் கவிதை ஒன்று:

எங்கள் ராஜாஜி!
--------------------------
வரைமுறை தவறிய
வாழ்க்கையைத் தூண்டும்
வகைசெயும் தீயவ ரான

வஞ்சக மானிடர்
வழிகளை எதிர்த்து
வையகம் புகழும் வண்ணம்

அரசியல் ஒளியை
அணைய விடாமல்
அரண்போல் காத்து நின்று

அண்ணலின் நிழலாய்
அணைந்தார் ஒருவர்;
அவர்தான் எங்கள் ராஜாஜி!

திரை விழுந்தாலும்
தெளி விழக்காமல்
திராவிடப் பொய்களை எதிர்த்து

திடமுடன் நியதி
தினம் வலியுறுத்தி
தேசத்தின் நன்மை கருதி

கறைபடும் மனங்கள்
கலங்கிடச் செய்யும்
கருத்துக்கள் நாளும் எழுதி,

கண்ணியம் என்னும்
கரைதனில் நின்ற
கலங்கரை எங்கள் ராஜாஜி!

கீதையின் சாரமும்
ராமனின் காதையும்
கேட்டவர் வியக்கப் படைத்து

கீர்த்திகொள் தமிழில்
கேடறு கருத்தினை
கிளர்ந்தெழச் செய்து நிறுத்தி

நீதிசொல் இலக்கியம்
நின்றிடும் வாழ்வினில்
நேர்ந்திடும் மேன்மையைக் காட்டி

நஞ்சுறை எழுத்தினர்
நடுங்கிட வைத்த
நல்லவர்;மாமுனி ராஜாஜி!

பாதகம் கூட்டுமோர்
பாதையை வகுத்திடப்
பார்த்திடும் நாடுகள் யாவையும்

பரிவுடன் அணுகிடும்
பண்புடைத் தூதராய்ப்
பார்த்தது ஐக்கிய நாடுகள்;

ஆதலால் மோதலும்
அணுக்கதிர்ச் சேதமும்
ஆவதைத் தடுத்ததோர் தமிழர்;

அவர்,இவர் என்பதை
அறிந்தவர் மிகச் சிலர்
அறிவிலிக் கூட்டமே அதிகம்!

ஆதவன் போலொரு
அறிஞனாய் வந்தனன்;
ஆகவே அவனொரு அந்தணன்;

ஆகையால் அவன் புகழ்
ஆவதைத் தடுத்தவர்
அறிவிலிக்கூட்டமே அன்றி

நீதியைச் செய்தவர்;
நேர்மையைப் புரிந்தவர்
நிச்சயம் இவர்கள் அல்லர்!

’அறவழி நின்றவர்
அந்தணன்’ என்றனன்;
அறநெறி வள்ளுவன் இல்லையா?

அண்ணல்ரா ஜாஜிதான்
அறவழி நின்றவர்;
ஆகவே அந்தணர்,நண்பரே!

நெறிமுறை அரசியல்
நின்றவர் அவர் பெயர்
நெஞ்சில் வைத்திடல் வேண்டும்;

நேர்வழி;அவர்வழி
நிஜம்;அது நம்வழி
நித்தமும்; அவர்புகழ் வாழி!

இவண்-
கிருஷ்ணன் பாலா
17.12.2010

9 comments:

Poovalur said...

அருமையான பதிவு, ராஜாஜி, சதாசிவம், எம் எஸ் அம்மா ஆகியோரின் உங்களது நெருக்கம் மகிழ்வடைய வைக்கிறது. எப்படி கண்ணதாசன் கீதையை திராவிட பாணியில் கிழித்து எரிய ஈ வே ரா அவர்களால் பணிக்கப்பட்டு அதை படித்து ஆத்திகர் ஆனது வரலாறு.
அதுபோல இந்த காலகட்டத்தில் இணையத்தில் இப்பணி நீங்கள் செய்யவேண்டும் என்ற கடவுளின் சித்தம் உங்களை அங்கிருந்து பிரித்ததாகவே எண்ணுகிறேன்.
எனக்கு எம் எஸ் அம்மா, சதாசிவம் மாமா ஆகியோருடன் கல்கத்தாவிற்கு பயணம் செய்தது ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன்.
ராஜாஜி ஒரு அரசியல் சாணக்கியர் என்பதில் சந்தேகம் இல்லை! குறிப்பாக அம்பேத்கார் அவர்களும், ஈ வே ரா அவர்களும் இந்திய சுதந்திரத்திற்கு பின் அனைத்து ஹிந்துக்களையும் சக்கரவர்த்தி அசோகனை போல் புத்த மதத்திற்கு மாற்ற திட்டமிட்டனர். ஈ வே ரா 1953ஆம் ஆண்டு மக்களின் விழிப்புணர்ச்சிக்காக பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அதை உடைக்கும் விழாவை நடத்தினார். அப்போது ராஜாஜி அவர்கள் பக்த்தர்கள் அனைவரையும் அந்த நேரத்தில் கோவிலுக்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார். அனைத்து பத்திரிக்கை, மற்றும் கோவில்களில் விசேஷ அறிக்கைகள் பிரசுரிக்கப்பட்டது. அந்த நாள் அனைத்து கோவிலிலும், வட இந்தியா தென் இந்தியா எங்கும் எந்தவிதமான விசேஷமும் இல்லாத நாளில் கோவிலில் மக்கள் கூட்டம்!!.
இதனால் அம்பேத்கரின் புத்த மத லட்ச்சியமும் தவிடு பொடியானது. பெரியாரின் இந்த செய்கை அம்பேத்கரை வெட்கப்பட வைத்தது.
என் வருத்தம் இப்படிப்பட்ட ஒரு அரசியல் சாணக்கியர், தனுக்கு காங்கரஸ் மேல் ஏற்ப்பட்ட தனிப்பட்ட கசப்பால், இதே திராவிட கட்சியை 1967ஆம் ஆண்டு அரியணையில் அமர்த்தி, காமராஜ் என்ற ஒரு பெரும் தலைவனை தவிடு பொடியாக்கியது வருந்தத்தக்க செயல்.
என்ன செய்வது யானைக்கும் அடி சறுக்கும்!
பூவாளூர் ஸ்ரீஜி

ulagathamizharmaiyam said...

நன்றி.பூவாலுர் ஸ்ரீஜி.
அண்ணல் ராஜாஜி ஒரு சகாப்தம்.தமிழர்களின் மேம்பபட்ட பிரதிநிதித்துவப் பண்பாட்டாளர். இந்தியாவின் உயர்நிலைப் பொறுப்புக்களில் எல்லாம் இருந்தும் கூட,தன் வாழ்வின் இறுதிக் காலங்களில் ஒரு ரிஷியாகவே வாழ்ந்தார்.அவரோடு எனது பரிச்சயம் சரியாக ஒரு வருடம் தான்.அவரது அந்திமக் காலத்தில் அரசுப் பொது மருத்துவ மனையில் உயிர் பிரியும் சமயம்,அவருக்கு கர்ண மந்திரம் ஓதப்பட்டபோது அங்கு இருந்தவர்களில் நானும் ஒருவன்.

அவரை நமது பண்டைக்கால ரிஷிகளில் ஒருவராகவே இப்போது உணர்கிறேன்.

அவர் திராவிடக் கட்சிகள் ஆட்சி பீடத்துக்கு வழிவகுத்து விட்டாரே என்பதில் உங்களுக்குக் குறையிருக்கத் தேவையில்லை.தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருக்குமானால் என்ன ஆகியிருக்கும்? ஆட்சியில் இல்லாத காங்கிரஸாரின் கண்ணியமற்ற,கேடு கெட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தாலே தெரிகிறதே,ராஜாஜி அவர்களின் சாணக்கியம்! என்ன,எரிகின்ற வீட்டில் ‘யார் நல்ல பிள்ளை?’ என்று கேட்டதற்கு, அதோ,வீட்டின் மேல் ஏறி ‘கொள்ளி’வைத்துக் கொண்டிருக்கின்றானே அவன்தான் இருக்கின்ற பிள்ளைகளிலேயே நல்லவன்’என்று அவனுடைய அப்பன் சொன்னானாம்.அதுபோல் அப்படிக் கொள்ளி வைக்கும் புள்ளையாண்டானை அடையாளம் கண்டு சொல்வதைத் தவிர அவருக்கு அன்றையக் காலக் கட்டத்தில் வேறு வழியில்லை என்றிருந்ததே உண்மை.

போ. மணிவண்ணன் said...

பொதுவாழ்விற்கு தன்னை தியாகம் செய்து பொதுமனிதராகவே வாழ்ந்த நல்ல தலைவர் குறித்த பதிவு நம்மை செம்மை படுத்தவே செய்கிறது.நிறைவான பதிவுக்கு நன்றி கிருஷ்னன்பாலா ஐயா

narayanan said...

ஐயா,
ராஜாஜி முதலமைச்சராக இருந்த சமயம் கும்பகோணத்தில் என்று நினைக்கிறேன்.[எந்த கட்சி என்று தெரியாது]ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ரெயில்வே ஸ்டேஷனில் பெயர் அழிப்பு போராட்டம்.ராஜாஜி ஸ்டேஷனுக்கு வந்து போலிஸ்காரரை யெல்லாம்
அப்புறப்படுத்தி தானே நேரில் போராட்டக்காரார்களை சந்தித்து உங்களுக்கு என்ன தேவை என்று விசாரித்து ,நானே உங்களுக்கு உதவுகிறேன் என்று சொல்லி, ஒழுங்கு முறையை கடைபிடித்து ஒருவர் ஒருவராக அழிக்கச்சொன்னார்
பூராக அழிக்கப்பட்டதும் கூட்டம் கலைந்து சென்றுவிட்டது.எந்த வன்முறையும் நடக்கவில்லை.
எவ்வளவு வித்தியாசம் பாருங்கள்

narayanan said...

ஒரு சுவையான சம்பவம்
ராஜாஜி பதவியில் இருக்கும்போது ஒரு ஏழை அவரை சந்தித்து வேலை தேடி அலைந்ததாகவும் கிடைக்கவில்லை என்றும் ஊருக்குப் போக கூட பணம் இல்லை என்று கூறினார். அவருடைய விலாசத்தை கேட்டுவிட்டு பயணத்தொகை கொடுத்து அனுப்பினார்.
அவர் சென்ற சிறிது நேரத்திற்க்குப்பிறகு கலெக்டர் மூலம்
அவரது விலாசம் உறுதி செய்யச் சொன்னதில் தாம் ஏமாந்த விஷயம் தெரிந்தது.வந்த கோபத்தில் அவர் மீது
வழக்கு தொடுத்தார்.விசாரித்த நீதிபதி ஒரு தொகை{எவ்வளவு என்று தெரியவில்லை]அபராதம் விதித்தார்.தொகை அதிகம் என்று ராஜாஜியே வாதிட்டு அதை குறைக்க
சொன்னார். நீதிபதியும் வாதத்தை ஏற்றுக்கொண்டு குறைத்தார்.
அந்த தொகை கூட குற்றவாளியிடம் இல்லாததால் மேற்படி தொகையை
தானே கட்டிவிட்டு அவனை விடுவித்தார்

இது எப்படி இருக்கு

SMV said...

I appreciate your boldness. Very few have the courage to admit that too after a long time, that the principle in which they believed is wrong. I remember that It was Bernard Shaw who did when he very old.

I agree with you that for the sake of capturing power and money the so called Dravida Kazagangal have used Sri.Rajaji and dumped him once their job was over. It is great on your part to write such a wonderful blog and that too against the current day dravida kolgaigal. May your service to the society long live.

ulagathamizharmaiyam said...

M/s Parama Health Care,(Mr.Manivannan SV Chary) Thank you for the genuine compliments and encouragement for my article on Sri Rajaji.

'முன்றில்' said...

நல்லோரை பெற்ற நாடு நலமடையும்.

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

பயனுள்ள இடுகை! பாராட்டுகிறேன்..
-தேவமைந்தன்
http://kalapathy.blogspot.com
facebook: Annan Pasupathy Devamaindhan