Thursday, December 27, 2012

வள்ளுவ நீதி!
ண்பர்களே,
இன்று (27.12.2012) தலைநகர் டெல்லியில்  பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த தேசிய கவுன்ஸில் வளர்ச்சிக் கூட்டத்தில் அதிரடியாக தமிழகத்தின் முதல்வர் மேடம் ஜெ. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே வெளிநடப்புச் செய்து தேசியச் செய்திகளில் தலைப்புச் செய்திக்குரியவாராக ஆகியிருக்கிறார்.

தேசிய வளர்ச்சிக் கவுன்ஸில் கூட்டத்தில்  தமிழகத்தின் தொழில் வளம் எந்த அளவுக்கு முன்னேற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது?

இந்தியாவின்  வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தின் பங்கு
என்ன ?
இதை மேலும் வலுப்படுத்த,மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி வசதிகள்,சலுகைகள் எவை என்பது பற்றியெல்லாம்
கம்பீரத்தோடும் கண்ணியத்தோடும் பேசி, நாட்டின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டிய நம் முதல்வர், தான் 10 நிமிடங்கள்  பேசியதும்,  ‘பேச்சை முடிக்கும்படி மணியடிக்கப்பட்டதால் தனது பேச்சை முழுவதுமாக பேச அனுமதிக்கவில்லை’ என்று காட்டமாகக்  குறிப்பிட்டுவிட்டு, அதைக்  கண்டிக்கும் வகையில்  கூட்டத்திலிருந்து  வெளிநடப்புச் செய்து இன்றைய ‘தலைப்புச் செய்திகளின் முதல்வராகி’ விட்டிருக்கிறார்.

இந்த வெளிநடப்பு என்பது ஏதோ ஒருவகை அரசியல் ஆதாயத்துக்காகவே அன்றி நிச்சயம் மாநிலத்தின் நன்மைக்காகவோ, கண்ணியமான அரசியல் தர்மத்தின்  நடைமுறைகளைக் காக்கவோ அல்ல.

அறிவு சார்ந்த அரசியல் நோக்கர்கள் முகம் சுளிக்கவும்  பாமரர்கள் கூட்டம் மேடம் ஜெ. அவர்களின் துணிச்சல் பற்றி வெற்றுப் புகழாரம் சூட்டவும் இந்திய அளவில் மீடியாக்களில் பேசப்படவும்தான் இந்த வெளிநடப்பு உதவி இருக்கிறதே தவிர, தமிழகத்தின் நலன் சார்ந்த வெளிநடப்பாக  உணர முடியவில்லை.

இது எந்த வகையிலும் முதிர்ந்த ராஜதந்திரமாகவோ தமிழகத்துக்குப் பெருமை தருவதாகவோ அமையவில்லை.

மாறாக, ‘மேடம் ஜெ, அவர்களை அகில இந்திய அரசியல் அரங்கில் பக்குவமற்றவர்’  என்பதையே   காட்டிஅரசியல் நாடகத்தின்  அரைவேக்காட்டுத்தனமான அரங்கேற்றம் இது’என்பதையும் உணர்த்தியிருக்கிறது.

கோபத்தைக் காட்டவேண்டிய இடம் வேறு; சூழ்நிலை வேறு.
இது, நமக்கெல்லாம் பெருத்த அவமானத்தையும் வருத்தத்தையும் தந்திருக்கும் நிகழ்வு.
               
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது

என்பது வள்ளுவ நீதி.

அரசியலுக்கு சூழ்ச்சி,முடிவு எடுத்தல்,துணிவு மூன்றும் இலக்கணம்தான். ஆனால் அவை தவறான பாதையில் அமைந்து விட்டால் அது கேடாகவே முடிந்து விடும் என்று வள்ளுவப் பெருமான் ‘அமைச்சியலில்’ ’வினை செயல்வகை’ அதிகாரத்தில் இது பற்றிய நீதியை இடித்துச் சொல்கிறான்.

இன்றைய அரசியல் தலைவர்கள்-குறிப்பாக ஆளும் தலைவர்கள் வள்ளுவத்தைப் படித்தால் மட்டும் போதாது; அதைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
27.12.2012

Monday, December 24, 2012

கிறிஸ்துமஸ் வாழ்த்து! -25.12.2012எல்லா மதங்களும் நதிகளைப் போலே
இறைவன் என்னும் கடலில் கலக்கும்;
எல்லா மக்களும் தத்தம் வயல்களில்
ஏர்ப்பிடித்துழுது பயிர் செய்துயிர்க்க
எல்லா நெறிகளும் அவரவர் மொழிகளில்
இறைவனின் ஆட்சியை எடுத்துணர்விக்க
எல்லைகள் வகுத்து வாழும்வகையில்
இருக்கும் உலகில் நாமிருக்கின்றோம்!

மூஸா நபியும் ஈஸா மொழியும்
முழுமையாக்குமோர் இறைவழி என்றே
தேசங்கள் தோறும் அறிவோம் ஆயின்
தெளிவு இறைவன் ஒன்றே ஆகும்;
ஏசும் மாக்கள் ஏசட்டும் இங்கே
இறைப்பெயர் இங்கு பலப்பல;அவற்றைப்
பேசும் உரிமையும் பிசகா அறிவும்
பேணுவதைத்தான் மானுடம் என்போம்!

பரம்பொருள் கண்ணன் மாடுகள் மேய்த்தான்;
பரமன்ஏசு ஆடுகள் மேய்த்தான்;
கிருஷ்ணன் என்பதும் கிறிஸ்டியன் என்பதும்
கேட்டால் செவியில் ஒன்றாய் ஒலிக்கும்!
’பரமபிதாவின் மைந்தன் மண்ணின்
பாவத்தை ஏற்கப் பிறந்தான்’ என்ற
கருணையைக் கூறும் கிறிஸ்மஸ் நாளில்
கர்த்தர் ஏசுவை வணங்கி மகிழ்வோம்!
  
மனிதநேயம் யாதெனக் காட்டவும்
மாக்களையெல்லாம் மக்கள் ஆக்கவும்
கனிவும் அன்பும் கருணையும் கொண்டு
கடமையை உணர்த்திநமை உய்விக்கவும்
தனிஒரு பிறவி எடுத்தே மண்ணில்
தானோர் மகவாய்ப் பிறந்தான்;ஈசன்!
புனிதன் ஏசு அவன் தான் என்று
புரிந்து போற்றுதல் மானுடர் கடமை!

இவண்-
கிருஷ்ணன்பாலா
24.12 2012

Friday, December 21, 2012

சொல்வதெல்லாம் உண்மை- (தொகுதி-5)


மூங்கில் காட்டுக்குள்
நுழைந்த புயலை
ஒரே மூங்கில்

கீதமாக
வெளியேற்றியது:
அட,
புல்லாங்குழல்!
    
வண்-
                                                         கிருஷ்ணன்பாலா
                                                         21.12.2012


101

பெண்ணே,

நீ
அழகாகத் தெரிய வேண்டியது
பிறருக்கல்ல;
உன் கணவனுக்கு மட்டுமே.

அறிவோடு இருக்க வேண்டியது
உன் கணவனுக்கல்ல;
பிறருக்கு மட்டுமே.

இவை இடம் மாறும்போது

பிரச்சினைப் புயல்
மையம் கொள்ளும் இடம்
உனது மனம்தான்!

அங்கே
அறிவும் அழகும் இரண்டுமே
வலுவிழந்து
வாழ்விழந்து போய்விடுகின்றன!


102
அழகைத் தேடும் முயற்சி
அறிவற்றது;

அறிவைத் தேடும் முயற்சி
அழகானது!


103
எல்லா மதங்களும்
எல்லா சித்தாந்தங்களும்
மனித நேயத்துக்குக் கீழே
மண்டியிட்டிருக்கும்போதுதான்
மானுடத்தின் மகத்தான
சேவைக்கு
அருகதை பெறுகின்றன.


104
கற்றார் சபையில்-

முதுகைக் காட்டும்
ஆண்களும்;
முகத்தைக் காட்டும்
பெண்களும் 

ஆபத்தானவர்கள்.

105
பெண்களுக்கு-

நாணம் என்பது வேறு;
வெட்கம் என்பது வேறு.

தன்னை
மறைப்பதற்குப்
பயன் படும்
கவசம் நாணம்;

அது-

பெண்களின் நான்குவகைப் 
பொக்கிஷங்களில் ஒன்று.

வெட்கம் என்பது
தன்னை
மறைக்க முடியாதபோது
காட்டிக் கொள்ளும் கவர்ச்சி.

அது-

பலவீனமான ஆண்களை
வசப்படுத்தும்
அபாயகரமான
ஆயுதம்.

106
உலகில்
ஆணைப் படைத்தவளும்
பெண்ணைப் படைத்தவளும்
இயற்கையாகவே
தாய்தான்.

உலகில்
மானுடராக வாழ்வோர்
எல்லோருமே
பெண்ணை
மதித்து வாழும்
இயல்பான சூழ்நிலையில்-

பெண்ணின் பெருமையை
அறியாதோரே
ஆணுக்குப் பெண் சமம்என்று
பித்தலாட்டம்  பேசி,
பெண்ணியம் காப்பவர்களாய்க்
காட்டிக் கொள்கின்றனர்.

எனது
தாயையும் சகோதரிகளையும்
நானாக மதிக்கச்
சட்டம் போட்டுக்
கொட்டம் அடிக்
இவர்கள் யார்?


107
இன்றைய
பெண்ணியவாதிகளின்
எண்ணங்கள்
உண்மையான பெண்ணியத்தை
ஏற்றி வைப்பதாக இல்லை;

சொல்லப் போனால்-
இமயச் சிகரத்தில்
இருந்து வந்ததை
எட்டிப் பிடிக்கும்
உயரத்துக்கு வைத்து விட்டு
உற்சாகப்படும் கூத்துத்தான்
அரங்கேறியுள்ளது, இன்று.


108
தனக்கு
தெரியாததையே பேசுகிறவன்
நாத்திகன்;

தனக்குத்
தெரிந்ததையும் பேசாதிருப்பவன்
ஆத்திகன்!

நான்
இதில் விதிவிலக்கு!


109
தன் வழியில்
அமைதியாகச் சென்று
கொண்டிருப்பவன் மீது
கல்லை எறிகின்றவன்:
நாத்திகன்!

அந்தக் கல்லையே
கடவுளின் சின்னமாக்கி
வழி படுபவன்:
ஆத்திகன்.

110
அன்பே,

முதலில்
உனது
வெட்கத்தில்தான்
வீழ்ந்தது என் மனது;

பிறகுதான்
தெரிந்தது:

வீழ்ந்தது மனமல்ல;
வாழ்க்கையே என்பது!111
முகநூல்
தொடர்புடைய
இரண்டு பேர்
சந்தித்துக் கொண்டாரர்கள்.

அதில் ஒருவன் முட்டாள்;
இன்னொருவன் விவரமானவன்!

முட்டாள் கேட்டான்:
ஸார் நீங்க எழுதினா
எத்தனை பேர்
உங்க பதிவுக்கு வர்ராங்க?’

விவரமானவன் சொன்னான்:
சராசரி 300 பேர்.

முட்டாள் வெடுக்கென்று
சொன்னான்:
அடப் போங்க ஸார்;
நான் தினசரி
400 பதிவுகளுக்குலைக்
போடறவனாக்கும்;

அதுசரி
உங்க பதிவை
நான் பார்ப்பதே இல்லையே?

விவரமானவன்
வெட்கத்துடன் தலைகுனிந்தான்


112
கீழே விழுந்தவன்
வலியை உணருகின்றான்;
மேலே எழுந்தவனோ
வலியை உணர்த்துகின்றான்!


113
 ‘சாதி இல்லை
என்று
சாதிப்பதும்
சாதீயாலேயே
சாதித்துக் கொள்வதும்
எங்கள்
தலைவர்களின் சாதிதான்!


114
செவிடர்கள் முன்னே
பேசிக் கொண்டிருப்பவனும்;

சிரித்துக் கொண்டு
கூத்தடிப்பவர்களின்
கூட்டத்தில்
கற்றறிந்ததைப்
பேசுபவனும்

ஊமை என்றே
உணரப்படுகின்றான்.


116
நேசிக்கத் தெரியாதவனின்
வாசிப்பும்

வாசிக்கத் தெரியாதவனின்
நேசிப்பும்

பயனற்றவை!


117
சொல்லிக் கொடுப்பதைக்
கற்றுக் கொள்பவன்:
மாணவன்;

மாணவனிடமிருந்தும்
கற்றுக் கொள்பவன்:
ஆசிரியன்.


118
நண்பனே,
நம்
முன்னோர் வகுத்த -

சாத்திரங்களையும்
சூத்திரங்களையும்

மீறுகின்ற
பாத்திரமாக

உன்னால்
நடிக்கத்தான் முடியுமே தவிர,
அவற்றைப் படிக்க முடியாது!

ஏனெனில் -

அவற்றை உணர
உனக்குத் தேவை:

ஆயுள் அல்ல;அறிவு!

119
இரண்டு ஜாதிகள்
சண்டையிட்டுக் கொண்டன.

நான்
அந்த சண்டையைக் கண்டித்தேன்.

விளைவு:

நான்
இரண்டு ஜாதிகளுக்கும்
வேண்டாத ஜாதி
ஆகிவிட்டேன்.

120
நீங்கள்
உங்கள் மத நம்பிக்கையில்
தீவிர நாட்டம்
கொண்டவர்
எனில்-

பிற மதத்தவர்
உங்களுக்குத் தரும்
மரியாதையை
அவர்களின் உணர்விலேயே
ஏற்றுக் கொள்ளுங்கள்;

அதுதான்
உங்களுக்குப் பெருமை!

பிற மதத்தவர்
தருவது
அவமரியாதை
எனில்
பொறுத்துக் கொள்ளுங்கள்;

அது -
உங்கள் சித்தாந்தங்களுக்குப் பெருமை!


121
கர்வம்
----------
இங்கே-
கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு
என் எழுத்துக்கள்
விருந்து;

கவனிக்காதவர்கள்
என் எழுத்துக்கு விருந்து.122
பழையன கழிதலும்
புதியன் புகுதலும்
வழுவல;
கால மரபினானே

என்கிறது
நன்னூல் சூத்திரம்;

அதற்காக-
கழிதல்களையெல்லாம்
புதியதெனப் புகுத்துவது
மூடர்களின் சாத்திரம்.

123
திடீரென்று
கிடைக்கின்ற அதிர்ஷ்டத்தை
வாழ்க்கையின் வெற்றி
என்று
விளம்பரப் படுத்தாதீர்!

ஏனெனில்-

வெற்றி என்பது
சுலபமானதல்ல;

சுலபமானது
வெற்றியும் அல்ல124
மேப்பனில்லாத ஆடுகள்
-----------------------------------

நான் சுத்த சைவம்
என
ஆடுகளைக் கைவிட்டான்
மேல்சாதிக்காரன்;

மேய்ச்சலைத் தேடி
தோட்டம் தோட்டமாக
அலைந்து
தோட்டக்காரர்களால்
விரட்டி அடிக்கப்பட்ட
அந்த ஆடுகள்,
மேய்ச்சலை விடவும்
மேய்ப்பனுக்காக
ஏங்கின....

இதோ-
நான் இருக்கிறேன்,
உங்கள் மேய்ச்சலுக்கு
என்று
மார்தட்டிக் கொண்டு
கசாப்புக் கடைக்காரன்
ஒருவன் வந்தான்..

நல்ல மேய்ப்பன்
கிடைத்து விட்டதாய்
ஆடுகள்
மந்தை மந்தையாகப் பிரிந்து
தங்களுக்கு இஷ்டமான
மேய்ப்பனிடம்
அடைக்கலம் ஆகின.

இப்போது
அந்த மேய்ப்பன் சொன்னான்:

இனி
நானே உங்கள் மேய்ப்பன்;
உங்களுக்குச்
சுவர்க்கம் பக்கத்திலிருக்கிறது”125
எழுதும்போது
எழும் சிந்தனைகள்;

சிந்திக்கச் சிந்திக்க
முந்தும் எழுத்துக்கள்!

எல்லாம் எழுத்து மயம்


 (சொற்கள் சுடரும்)

Thursday, December 20, 2012

மோடி : ஒரு பார்வை.காங்கிரஸின் எதிர்ப்பைவிட,முஸ்லீம் தீவிரவாதிகளின் பித்தலாட்டப் பிரசாரங்களில் சிக்கியவர்களின் எதிர்ப்பை விடபி.ஜே.பி.யின் உள்குத்து வேலைகளை மீறி, குஜராத் மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் மாநிலத் தேர்தலில் நரேந்திர மோதி வென்றிருக்கிறார்.

பி.ஜே.பி.யின் ஆட்சி இம்மாநிலத்தில் 4 ஆவது முறையாகத் தொடரவும்.மூன்றாவது முறையாக குஜராத் மக்கள், தன் தலைமையின் மீது நம்பிக்கை கொள்ளும்படியும் நடந்திருக்கிறார்.

இது இந்திய அரசியல் அரங்கில்-குறிப்பாக, கடந்த 50 ஆண்டுகளில் ஜோதி பாசு அவர்கள் நீங்கலாக,வேறு எந்த ஒரு  மாநில முதல்வரும் சாதித்திராத சாதனை.

நமது மாநிலத்தைப் போல், ‘தமிழர்களைப் பிச்சைக்காரர்களாக’ எண்ணி, ஆளாளுக்கு இலவசங்களை அள்ளித் தருவதாகத்  தேர்தல் அறிக்கைகள் விட்டு, ஓட்டுப் பிச்சை ஏந்தும் கேடு கெட்ட அரசியலைச் செய்யாமல், மாநிலத்தின் தொழில் வளத்திலும் மக்களின் நீண்டகால நலத்திட்டங்களிலும் கவனம் செலுத்தி, சிகப்பு நாடா நிர்வாகத்தை ஒழித்து, ஒற்றைச் சாளர (Single window) நிர்வாகத்தைத் தந்து, மாநிலத்தின் ஒட்டு மொத்த நலனுக்காக ஆட்சி நிர்வாகத்தை நடத்தியதன் மூலம், மிகப்பெரும் தொழில் நிறுவனங்கள் எல்லாம் குஜராத்தில் பெரிய தொழில்களைத் தொடங்கும்படிச் செய்தவர் நரேந்திர மோதி.

‘குஜராத்தை முன் மாதிரியாகக் கொண்டு  இந்தியாவில் ஊழல் அற்ற  நிர்வாகத்தை இவர் தர முடியும்’ என்ற நம்பிக்கையை ‘நல்லோர் மத்தியில் விதைத்திருக்கிறார் இவர்’ என்பது உண்மை.

பதவிப் பகட்டு, படாபடோபம், உறவினர்கள், தன் கட்சியினர், நண்பர்கள் என்ற பச்சாதாபம் எல்லாம் காட்டாமல்மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு எப்படி நேர்மையும் துணிச்சலும் மிக்க நிர்வாகத்தைத் தர முடியுமோ, அப்படி ஒரு தரமான ஆட்சி நிர்வாகத்தைத் தந்த மோதியை அவருடைய ஜன்ம வைரிகள் கூட ஊழல்வாதி என்று விரலை நீட்டி விட முடியாது.

காங்கிரசும்,பி.ஜே.பி யும் ஒன்றுக்கொன்று ஊழல் நிர்வாகத்தைத் தந்து,தேசப் பற்றாளர்களை எல்லாம் சலிப்பும் வெறுப்பும் கொள்ளச் செய்தவைதாம்.

தனது கட்சியில் இப்படி ஒரு நேர்மையும் துணிவும் தேசப் பற்றும் கொண்ட ஒரு முதல்வர் இருக்கிறாரே!” என்று பெருமை கொள்வதற்குப் பதில், “அய்யோ, இந்த ஆளை வளரவிட்டால் நாளை அகில இந்தியத் தலைமைக்கும் பிரதமர் பதவிக்கும் தானாக வந்து விடுவாரேஎன்று அஞ்சி, நயவஞ்சகத்தால் ‘குஜராத்திலேயே இவரது பெருமையைக் குலைக்க வேண்டும்என்று திட்டமிட்டுச் செயல்பட்டது, அகில இந்தியக் காங்கிரஸ் தலைமை அல்ல; அகில பாரதீய ஜனதாக் கட்சித் தலைமைதான்.

இன்று குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தலில் மாபெரும் வாகை சூடியதன் மூலம், அவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்து பல தலைவர்களைப் பாத்ரூமுக்குள்ளேயே படியளக்கச் செய்திருக்கிறார் இந்த மோதி

அந்த வகையில் இவர் ஒரு ’மோடி மஸ்தான்’தான்.

‘மோதி இந்த குஜராத் தேர்தலில் வென்றால் இந்தியாவின் அடுத்த பிரதமர்தான்’ என்ற அரசியல் கணிப்பு இப்போது அதிகரித்துள்ளது.

ஆனால்,அதற்கு பி.ஜே.பி.யின் இமேஜ் அல்லவா தடையாக இருக்கிறது? என்பதை இந்த அரசியல் பார்வையாளர்கள் பார்க்கத் தவறி விட்டனர்.

காங்கிரஸைக் குப்பையில் எறிய மக்கள் தயாராக இருந்தாலும்,மோதியை கோபுரத்தில் ஏற்றி வைக்க பி.ஜே.பி.யின் உள் குத்து, ஊழல் தலைவர்கள் தயாராக இல்லையே?

இந்தியா, இன்றுள்ள நிலையில், இரும்புக் கரம் கொண்ட வலிமையான  மனிதர்தான் இந்தியாவுக்குத் தலைமை ஏற்க வேண்டும்.

ஆனால் அது சாத்தியப்படவோ, சாத்தியப் பட்டாலும் நிலைத்திருக்கவோ நமது அரசியல்வாதிகளும் சரி; மதத் தீவிரவாத வன்முறையாளர்களும் சரி; ஏன்,  ‘இந்தியா ஒரு வலிமை மிக்க தலைவனால் ஆளப்படக் கூடாது’ என்று கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு விழித்திருக்கும் சர்வதேசச் சதியாளர்களும் சரி,விட்டு வைப்பார்களா? சந்தேகம்தான்.

மோதிதான் பிரதமர் என்று பல்வேறு ஜோதிடர்கள் இன்று ஜெபிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

ஆனால், இந்தியாவின் தலை எழுத்தும் இவருக்கு நடக்கும் ஏழரைச் சனியின் விதியும் இன்றைய இந்தியாவின் ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளின் சதியும் மற்றும்   ‘போலி மதச் சார்பற்ற பித்தலாட்டப் பிரசங்கிகளின்’ பேச்சில் மயங்கும் முட்டாள்களின் மதியும் சேர்ந்து  இம்மனிதரை  இந்தியாவின் உயர் நிலைக்குக் கொண்டு செல்லுமா?

சற்றுச் சிந்தித்தால் தேசப் பற்றாளர்கள் மனம் தத்தளிக்கத்தான் செய்யும்!.

தேசத்தின் தலைவிதி நன்றாக இருக்க, பிரார்த்திப்பதை விட வேறு ஒன்றும் பெரிதாக  இருக்க முடியாது.

இவண்-
கிருஷ்ணன்பாலா
20.12.2012