Monday, December 10, 2012

அண்ணலைப் போற்றுவோம்!


அறிவார்ந்த நண்பர்களே, அன்பு நிறைந்த சகோதரிகளே,
வணக்கம்.

தமிழரும் தமிழ் நாடும் இந்தியாவில் தலைநிமிர்ந்திருக்கச் செய்த அரசியல் சிற்பிகளில்  முதன்மையானவர் மூதறிஞர் ராஜாஜி அவர்கள்.

நல்லான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரிஎன்ற,  அந்த மாமனிதர். தமிழன்னை ஈன்ற தலைப் புதல்வர்களில் ஒருவர்.

அவர் பிறந்த நாள் டிசம்பர் 10, 1878; அமரரான தினம் இதே டிசம்பர் 25 (1972) உலகுக்கு அன்பையும் கருணையும் போதித்த ஏசு கிறிஸ்து பிறந்த நாளன்று மறைந்த, இந்த அரசியல் புனிதர், ஓர் ஒப்பற்ற தமிழ்ச் சாணக்கியன் என்பதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை.

இந்திய அரசியல் நிர்வாகத்தில் இவர் பார்க்காத உயர் பதவிகளே இல்லை.சேலம் நகர்மன்றத் தலைவர் பதவி முதல்,வங்காளத்தின் கவர்னர்,குடியரசுத் தலைவருக்கு நிகரான இந்தியாவின் கடைசிக் கவர்னர் ஜெனரல், இந்திய யூனியனின் உள்துறை அமைச்சர்,பிளவு படாத சென்னை மாகாணத்தின் (ஆந்திராவும்,தமிழ்நாடும் ஒரே மாநிலமாய் இருந்த காலத்தில்) பிரதமர், ஆந்திரா பிரிந்த பிறகு,தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் என்று எல்லா உயர் பதவிகளையும் வகித்து இந்திய அரசியல் தலைவர்கள் அத்தனை பேரிடத்திலும் உயர் மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்த தமிழர்,அண்ணல் ராஜாஜி அவர்கள்.

விரும்பியிருந்தால் இந்தியாவின் பிரதமர் பதவியையும் பெற்றிருக்க முடியும். ஆனால், மனச் சான்று ஏற்கவில்லை என்று கூறி,பதவிகளைத் துறந்து அரசியல் பீஷ்மராய் வாழ்ந்த புனிதர் இவர் என்பது இன்று நம்மில் பலருக்குத் தெரியாது.

மகாத்மா காந்தி இவரை, ‘எனது மனச்சாட்சியின் பாதுகாவலர்என்று குறிப்பிட்டது ஒன்றே இந்த மூதறிஞரின் நேர்மைக்கும் தூய்மைக்கும்
உலகத் தரச் சான்று.

பதவிகளை விரும்பாத ராஜாஜி அவர்களுக்கு இந்திய அரசுபாரத ரத்னா
என்ற உயர் விருதினை வழங்கிக் கவுரவம் பெற்றது என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகப் பெரும் பங்களிப்பையும் இந்திய நிர்வாகச் சிறப்பில் ஒப்பற்ற நுண்ணறிவுப் பகிர்வையும் தந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.’ உலகில் அணு ஆயுதப் போருக்கு எதிராக எழுதிய கருத்துக்கள் ஐக்கிய நாடுகள் சபையிலும் எதிரொலித்தது.

உலக நாடுகளிடையே இந்தியரின் நுண்ணறிவுக்குப் பிரதிநிதியாகத் திகழ்ந்து உலக சமாதானத்துக்குப் பாடுபட்டு  ‘மிகப் பெரும் ராஜ தந்திரிஎன்றறு மதிக்கப்பட்டவர், நம் ராஜாஜி அவர்கள்.

ஸ்வராஜ்யாஇதழ்களில் இவர் எழுதிய கருத்துக்கள் இந்தியச் சாணக்கியத்தின் சாசனங்களாகப் பதிக்கப் பட்டவை.

தமிழ் இலக்கியத்தின் முத்தாரங்களாக இவர் எழுதிய வியாசர் விருந்து (மஹாபாரதம்), சக்கரவர்த்தித்  திருமகன் ( இராமாயணம்),கைவிளக்கு (பகவத் கீதை),ஞான தீபம் (கடோபநிடத விளக்கம்முதலான பலநூல்கள்  திகழ்கின்றன.

அறன்வலியுறுத்தி எழுதும் தரமான எழுத்தாளர் என்பதுடன் 
இவர் மிகப் பெரும் பாடல் ஆசிரியர் என்பதையும்உலகெங்கும் வாழும் தமிழர்களின் செவிக்கும் சிந்தைக்கும் அழியா ஆனந்தத்தைத் தந்து கொண்டிருக்கும்
 ”குறையொன்றுமில்லை கோவிந்தா…’ என்ற பாடல் பறைசாற்றும்.  

அரசியல்,இலக்கியம், பத்திரிகை,ஆன்மீகம்,.சட்டம்,சமூகத் தொண்டு என்று பல்வேறு துறைகளிலும் மேதைமை கொண்டு திகழ்ந்த மூதறிஞர் ராஜாஜி அவர்கள் தமிழர்களின் மேம்பட்ட உதாரண புருஷர்.

அண்ணல் ராஜாஜி அவர்களின் உயர்ந்த ஒழுக்க வாழ்வு,சிந்தனைகள், செயல்பாடுகள், அரசியல் நேர்மை,எழுத்து எல்லாம் உண்மைத் தமிழரின் பண்பாட்டு சின்னம்.

மூதறிஞர் ராஜாஜி அவர்கள்,‘குலதர்மக் கல்வியின் பயன் குறித்த
வெளியிட்ட கருத்துக்கள் அப்போதுதிராவிடப் பிரசங்கிகளின்
கடும் விமர்சனத்துக்குள்ளாயின.

எனினும், அதே திராவிடக் கட்சிதான் இதே ராஜாஜி அவர்களின்ஆசிர்வாதம்பெற்று 1967ல் தமிழ் நாட்டில் ஆட்சிக் கட்டில் ஏறியது.

அரசியல் வானில் ஆதவன் போல் பிரகாசித்த ராஜாஜி அவர்களின் அறிவாற்றலைக் கண்டு வியந்து 1967 தேர்தல் சமயம், அறிஞர் அண்ணாதுரை அவர்கள் அவரைமூதறிஞர் ராஜாஜிஎன்று குறிப்பிட்டார்.

உண்மையிலேயே, ‘அறிஞர்களுக்கெல்லாம் அறிஞர்என்னும் பொருள் கொண்டது இந்தமூதறிஞர்பட்டம்.

ஆனால், எவர் அவரைமூதறிஞர்என்று கண்டுணர்ந்து அந்தத் தகுதியைச் சொல்லி அழைத்தாரோ, அந்தப் பெருமையை, அதே, அவரால், அறிஞர் அண்ணாதுரை அவர்களால் வளர்க்கப் பட்ட திராவிடக் கட்சிகள் நடத்தியதிராவிட மாயைத் தெரு விழாக்களின் தூசுகள் மறைத்து விட்டன; தமிழன் அந்தத் தூசிகளின் படிமானத்தால் மாசு படிந்து விட்டான்.

மூதறிஞர் ராஜாஜி அவர்கள், ’கலியுகக் காலஅரசியலில் மஹா பாரதத்துக் கண்ணனைப் போல. சமூக தர்மத்தையும் மனித தர்மத்தையும் கலந்து நேர்மையான அரசியலை நடத்தத் தூண்டியவர்.

இந்த கலியுக அரையல் கண்ணன், 1967 தேர்தல்களில்  பாண்டவர்களைத்தான்  ஜெயிக்க வைத்தார்; ஆனல் அதே பாண்டவர்கள் கவுரவர்களாக மாறிப் போய்,,திராவிட அரசியலால் இந்த தேசத்தையே பாழ்படுத்தி விட்டார்கள் என்று வரலாறு எழுதப்பட்டுவிட்டதே?

இந்தத் திராவிடக் கட்சிகளின் மாட்சிமையினால், எந்தப் பெருமைகளைத் தமிழன் பேசினால் உலக அரங்கிலும் பாரதத் திரு நாட்டிலும் தமிழனுக்கு மதிப்பும் மரியாதையும் கூடி நிற்குமோ, அந்தப் பெருமையைப் பேசிட, அவனுக்குக் கற்றுத் தர யாருமில்லை; கற்றுக் கொண்டிருப்பவர்களோ இப்போதெல்லாம் முன் வருவதுமில்லை.

பாவம், அவர்கள்! கல்லெறி பட்டாலும்கூடத் தாங்கி கொள்வார்கள்; ஆனால் சொல்லெறி தாங்கும் துணிச்சல் அவர்களுக்கு இல்லையே.

1962 களில் இளைஞனாக, அறிவு வளராச் சிறுவனாக இருந்த நானும் கூட திராவிடப் பிரசங்கிகளின் சொல் ஜாலத்தில் மயங்கி, மதியிழந்து, திராவிடக் கட்சிகளுக்காக எங்கள் கிராமத்துத் தெருக்களில் சுவர்ச் சரித்திரம் எழுதிப் பிரச்சாரம் செய்தவன்தான். அது, தீமைகளை உணராது,சிறுமைத்தனங்களின் சேர்க்கையில் இணைந்து திரிந்ததில் ‘அஞ்சாங்’ கிளாஸ் பிரச்சாரம்!

அதன்அறிவு கெட்டவளர்ச்சியினால்,பின்னால் 1972களில் அதே ராஜாஜி அவர்களால் எனக்குக் கல்கி தோட்டத்தில் நுழையவும், ’கல்கிஅதிபர் திரு.சதாசிவம் அவர்களால், கல்கி, கோகுலம், ஸ்வராஜ்யா இதழ்களில் பணியாற்றவும் வாய்ப்ப்புக் கிட்டி, நான், அத்தகைய பெரும் வாய்ப்பை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ளாமல் போய் விட்டேன்.


கல்கியில்
ஏறத்தாழ 5 ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில், கல்கி அதிபர்திரு  சதாசிவம், அவரது துணைவியாரும் உலகப் பிரசித்தி பெற்ற இசைப் பேரரசியுமான திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி, அவர்களின் செயலாளரும் கோகுலம் இதழ் ஆசிரியருமான திரு கே.ஆர்.ஆத்மநாதன்,கல்கி ஆசிரியர் திரு கி.ராஜேந்திரன் ஆகியோரிடம் நான் ஓர் செல்லப் பிள்ளை போல் இருந்தும் என்னுள்ளே இருந்து வந்ததிராவிட மாயைப்பற்றினால், உண்மையான அறிவுத் தேடலை இழந்து விட்டேன். நானாக கல்கியை விட்டு விலகும் பேதமை என்னை ஆட்கொண்டிருந்தது,அப்போது.

இந்த திராவிட மாயை தந்த மயக்கத்தில்தான், அண்ணல் ராஜாஜி அவர்களுடன் நெருக்கமாக இருந்து கல்கி,ஸ்வராஜ்யா,கோகுலம் இதழ்களில் பணியாற்றிய காலங்களில் அவர் பெருமையை உணராதொழிந்தேன்.

அவர் ஜாதி வர்ணங்களைக் கடந்த ஓர் ஒப்பற்ற ஞானி, தெளிந்த அரசியல் மேதைஎன்பதை, அவர் மறைந்து இருபத்தைந்தாண்டுகள் கழித்து உணர்ந்து கண்ணீர் மல்கிக் கசிந்து உருகி,வருந்தியன் நான்.

நம் மூதறிஞரின் நினைவைப் போற்றும் வகையில்,அவரைப் பற்றிய உண்மை,அவரது தகுதிகள்,வாழ்வு இவை பற்றிய செய்திகள் தொடர்ந்து பரவி, ராஜாஜி யார் என்பதே தெரிந்து விடாதபடிக்கு திராவிட மாயை சூழ்ந்திருக்கின்றது; உண்மை.

உண்மையை, அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்ட என் மனத்தில் திராவிட மாயைக்கு எதிராக எனது எழுத்துக்கள் எரிதழல் ஏந்தி வருவது, சமூக அக்கறையின் இயற்கையான வெளிப்பாடே தவிர அரசியல் நோக்கத்துக்கோ வெற்றுப் புகழுக்கோ அன்று.

நண்பர்களே,

தமிழனுக்கு இந்தத் திராவிட மாயைப் பிசாசினால் நேர்ந்து வரும் இழிவு நிலையை அனுபவப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் உணர்ந்தவன்’ என்ற அடிப்படையில்ஊருக்கு நல்லது சொல்வேன்; எனக்குண்மை தெரிந்ததைச் சொல்வேன்என்று மாகவி பாரதி கற்றுத் தந்ததைச் செய்து வருகின்றேன்.

ஸ்வராஜ்யா ஆங்கில வார இதழ் அண்ணல் ராஜாஜி அவர்களால் உருவாக்கப் பட்டது; கல்கி குழுமத்தின் ஆங்கில வார இதழ் அது. ஸ்வராஜ்யாவில் ராஜாஜி அவர்கள் எழுதும் விஷயங்களை அகில இந்தியாவின் அரசியல் தலைவர்களே, ஏன் உலக நாடுகளின் தலைவர்களே உன்னிப்பாகக் கவனித்தார்கள்.

காந்தியடிகள், பண்டித நேரு, வல்லபாய் பட்டேல்,நேதாஜி போன்ற பெரும் தலைவர்களுக்குச் சற்றும் மாற்றுக் குறையாத தமிழன் ராஜாஜிஎன்று சொன்னால்தமிழர்அல்லாத பலர் பொங்கி எழுகின்றார்கள்.

அறவோர்களாகிய அந்தணர்களை ஆதரித்துப் பேசுவதும்,திராவிடக் காட்சிகளை விமர்சிப்பதும் ஏதோஒரு தமிழ்க் குற்றமாகவேபேசிப் பிதற்றும் கூட்டம் மலிந்து விட்டது, இன்று.

அப்படியானால் இவர்கள்-

அந்தணர் என்போர் அறவோர்;மற்றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுகலான்

என்று மானுடச் சட்டம் எழுதி வைத்தானே வள்ளுவன்,அவனையும்
இதே குற்றவாளியாக்குகிறார்கள் என்றுதானே பொருள்?.

வள்ளுவன் மொழியே மறைமொழியாய் ஏற்பது அறிவார்ந்த தமிழனின் கடமை அல்லவா?

அவ்வாறு, வள்ளுவன் சொன்ன அறவழி நின்ற அந்தணர்தான் நமது மூதறிஞர் ராஜாஜி.

அவர்வழி நின்று அந்தணராய்த் தன்னை உயர்த்தி கொள்ளும் உரிமையை எந்தச் சட்டமும் தடுக்கவில்லை;எவர்க்கும் தடையுமில்லையே!

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் இருந்து காந்தி அடிகள் முன்னிலையில் பண்டித நேருவுக்குப் பதவிப் பிரமாணம்செய்து வைத்தவர். காந்தி அடிகளின் சம்பந்தியாகி, சுதந்திர இந்தியாவில் புகழ் பெற்ற கலப்புத் திருமணத்தை நடத்திய முதல் அரசியல் தலைவர் ராஜாஜி என்பதை அநேகம் பேர் தங்கள் வசதிக்காக மறந்து விட்டனர்.

காந்தி அடிகளின் மறைவுக்குப் பின் அவருடைய இடத்தில் அண்ணல் ராஜாஜி அவர்களை வைத்து, உலக நாடுகளே மதித்தனஎன்கிற பெருமையை நாம் கொண்டாட மறந்து விட்டோம்.

கொண்டாட மறந்தது தமிழர்களின் துரதிர்ஷ்டம்; கொண்டாடாமல் இருப்பது திராவிடக் கட்சித் தலைவர்களின் அதிர்ஷ்டம்.

தமிழர்களுக்கு பெருமை சேர்க்கத் பிறந்த அண்ணல் ராஜாஜி அவர்களை நாம் இன்று நினைந்து நிமிர்வோம்; பாரத அரசியலில் ஓர் பீஷ்மராகவும் தமிழ் இலக்கிய உலகில் ஓர் வியாசரைப் போன்றும் திகழ்ந்த மூதறிஞர் ராஜாஜி அவர்களின் நினைவுநாளில் அவர் புகழ் போற்றிப் பெருமை கொள்வோம்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
10.12.2012
Post a Comment