Friday, December 7, 2012

இதுநம் கடமை!


கொச்சை மொழியும் குறுக்குவழியும்
கூடாநட்பின் குத்தாட்டம்;
எச்சம் எனவே முகநூலில்
இருக்கக் கண்டே எழுதுகிறேன்:

அடுத்தவன் எழுத்தைத் திருடுவதும்
அழகியர் பின்னால் வருடுவதும்
மடத்தனமான வார்த்தைகளை
மலச்சிக்கல்போல் எழுதுவதும்

மந்தைகள் போன்று குழுவாகி
மலங்க மலங்கப் பாடுவதும்
சிந்தனை சிறிதும் இல்லாத
சிறுவர் என்றே காட்டுவதும்

அதிகம் பெருகி, அசிங்கம்தான்
ஆறாய் ஓடிடக் காண்கின்றேன்;
பதியும் கருத்தில்இதை வைத்தே
பண்பைக் காத்திட வலியுறுத்தி,

அச்சம் இன்றி இடித்துரைத்தால்
ஆணவம் என்றே சொல்கின்றார்;
எச்சில் கூட்டம் அதற்கெல்லாம்
எப்படிப் பதில்நாம் சொல்லுவதாம்?

பெண்டீர் சிலரும் கணிகையர்போல்
பிதற்றும் மொழிகள்,பலவாறு
பண்பில்லாத கருத்துக்களைப்
படைத்தால் அவரைப் பொறுப்போமா?
  
பெட்டைக் கோழிகள் பின் சென்று
பிதற்றும் சேவல் கூட்டத்தை
வெட்டிப்பயல்கள் என்கின்றேன்;
வீணர் அவரை மதிப்போமா?

தட்டி எழுப்பும் தமிழ் வீரம்
தாங்கிப் பொழியும் மொழியமுதம்;
கொட்டிக் கிடக்கும் களஞ்சியத்தில்
கொட்டும் விஷத்தை ஏற்போமா?

இறைநெறி வாழ்ந்து எல்லோரும்
இனிதாய் இருக்க முனைவோரை
மறைமொழியாக நர மொழியில்
மருளச் செய்தால் விடுவோமா?

எட்டி உதைப்போம்;தமிழாலே;
‘இதுநம் இயல்’பென நாட்டிடுவோம்;
கட்டிவைப்போம்; நல்லோரை;
கருணையும் உண்டெனக் காட்டிடுவோம்!

சிறுமை கண்டு பொங்கிடுவோம்;
சீர்மை கொண்டு தங்கிடுவோம்;
அறிவு கொண்டு அணுகிடுவோம்;
அச்சமின்றி எழுதிடுவோம்!

மரபும் மாண்பும் இணையற்ற
மாந்தர் காட்டிய அறநெறிகள்;
வரவும் செலவும் ஆக,இங்கு
வாழ்வதுதானே நம் கடமை?

இவண்-
கிருஷ்ணன்பாலா
7.12.2012

No comments: