Thursday, December 6, 2012

கவிதைக்குப் பொய் அழகு!





நண்பர்களே,

’கவிதைக்குப் பொய் அழகு’ என்பது-

முன்னாளில்  புலவர்களால் உண்டான சொலவடை.
இந்தச் சொலவடை இன்று
பல பொய்யர்களுக்கு வசதியாகி,பொய்யைத் தவிர
கவிதையில் எந்தப் பொருளையும் வைக்காமல்
எழுதி இன்புறும் அவலம்தான் மிஞ்சி நிற்கிறது.


தனி மனிதர் ஒழுக்கத்தையும் சமூக நலனையும்
ஒன்றாக வைத்து எழுதும் கவிதைகளில்
உருவகங்களையும் உவமைகளையும்
இணைத்துச் சொல்வது பொய்தான் ;எனினும்
அதன் அழகே அழகுதான்.
அதை இலக்கிய நயத்தோடும் கவிதை மனத்தோடும்
கண்டு,படித்தால் சுவை மிகுந்திருக்கும்.

எடுத்துக் காட்டாக - 

காதலன் காதலியை வர்ணிக்கும்போது:

நிலவு முகம்; மலர் இதழ்;
உலவு தென்றல்;உற்சாக அருவி;
மான் விழி;தேன் மொழி;
அன்ன நடை;மின்னல் இடை;

கார் கூந்தல்; கத்துங் குயில்
தேரசையும் திருமேனி
வானகத்துத் தேவதையே!
வந்தென்னை வதையேநீ;

கொத்தும் மலர்ச் செண்டே
கொவ்வைஇதழ் கொண்டு
கொத்தி எனைக் கொய்யாயோ?
கூடலிலே கொல்லாயோ?

என்று-
ஊடல் கொண்ட காதலியைக்
கூடவைக்கும் தந்திரத்தில்

காதலன் பாடினால்
காதலி என்ன செய்வாள்?
கர்வத்தோடு 
கட்டி அணைக்க மாட்டாளோ?

கவிஞனின் இந்தப் பொய்களை
நாம் ரசிப்பதில்லையா?
கவிதைக்குப் பொய் அழகு என்பது இதுதான்.

அதேபோல்-
சமூக விழிப்புணர்வைத் தட்டி எழுப்ப,
எழுதப்படும் கவிதைகளில்:

மலை நிகர்த் தோளும் மழுங்காத வாளுமாய்
மகனே உடனே புறப்படு;
அலையெனப் பகைவர் திரண்டு வந்தாலும்
அஞ்சாதே நீ போர்த்தொடு!”

என்று எழுதுவதும் பொய் என்றாலும்
உவமைகளும் உருவகங்களும்
உன்னதமான உணர்வுகளை ஏற்படுத்துபவை.


அன்றைய காலகட்டத்தில்-

மன்னருக்கு மனைவியிடத்திலோ, காதலியிடத்திலோ
ஏற்படும் ஊடலை கூடலாக்கித் தரும் பொருட்டு,
அரசவைப் புலவர்களில் பலர்
நாயகியருக்குச்
சிற்றின்ப வேட்கையைத் தூண்டி,

அரசர்களின் அந்தப்புர
ஆசைகளை நிறைவேற்றும் கவிதைகளை எழுதினார்கள்.

நாயகிகளை-

மான் என்றும் மலர் என்றும்
தேன் என்றும் தென்றல் என்றும்
ஊன் என்றும் உயிர் என்றும்
வான் ஊரும் நிலவு என்றும்

வார்த்தைகளை அலங்காரப் படுத்தி
அரசர் சொல்வதாகத் தூது போனவர்களும் உண்டு.

அதில் –
பாராட்டப்பட்டு, பரிசில் பெற்ற
புலவர்களைப் பார்த்து. (நாயகி இல்லாத சமயத்தில்)
அரசர்கள் வழக்கமாகச் சொல்லும்
உயர்வு நவிற்சி அணிதான்: ‘கவிதைக்குப் பொய் அழகு’

இவண்-
கிருஷ்ணன்பாலா
6.12.2012

2 comments:

Unknown said...

தலைப்பிலேயே சொல்லிவிட்டீர்கள் அய்யா "கவிதைக்கு பொய் அழகு"
அழகான தலைப்பில் உண்மையை எடுத்துக்காட்டுடன் விளக்கியவிதம் அருமை.
புலவர்கள் வர்ணிக்கும் விதத்தை பாடநூலில் கூட கூறவில்லை. ஆனால் உங்கள்
வரிகளில் விளக்கியது அருமை. பயனுள்ள வரிகள்

நன்றி அய்யா.

Unknown said...

தலைப்பிலேயே சொல்லிவிட்டீர்கள் அய்யா "கவிதைக்கு பொய் அழகு"
அழகான தலைப்பில் உண்மையை எடுத்துக்காட்டுடன் விளக்கியவிதம் அருமை.
புலவர்கள் வர்ணிக்கும் விதத்தை பாடநூலில் கூட கூறவில்லை. ஆனால் உங்கள்
வரிகளில் விளக்கியது அருமை. பயனுள்ள வரிகள்

நன்றி அய்யா