Wednesday, September 26, 2012

தேவாரம் பெற்ற திருவாமாத்தூர்!


ன்று மாலை (25.9.2012) சென்னையிலிருந்து திருச்சிக்கு எனது அருமை நண்பர்  ‘தாம்பரம் கண்ணன்’  என்கிற திரு பாலசுப்பிரமணியம் அவர்களுடன் காரில் சென்றேன்.

விழுப்புரம் நெருங்கியதும், அங்கிருந்து சரியாக மேற்குத் திசையில்  (சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரத்துக்கு முன்னதாக பொன்னுசாமி ஓட்டல் அமைந்துள்ளதற்கு சரியாக மேற்கில் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள திருவாமாத்தூர் ( திரு மாத்தூர்)  என்ற குக்கிராமத்துக்கு அழைத்துச் சென்றார் நண்பர்.

திருஆ மாத்தூர் என்ற இக்கிராமம் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் சோழப் பேரரசுக்கும் பின்னர்  பல்லவப் பேரரசுக்கும் உட்பட்டிருந்த ஓர் உன்னத பகுதி என்பது இங்கு அமைந்திருக்கும் ஸ்ரீ அபிராமேஸ்வரர்-முத்தாம்பிகை திருக்கோவிலே சான்று.

அன்று மிகப் பெரும் ஊராகவும் கலை,ஆன்மீகம், விவசாயம் செழித்த முக்கிய நகராகவும் இருந்திருக்கிறது என்பதற்கு இத்திருக்கோவில் எழுப்பப்பட்டுள்ள கம்பீரமே காட்டிக் கொடுக்கும்.

‘ஆமாத்தூர் என்கிற இந்தப் பேரூர், காலச் சுழற்சியில் இன்று சிற்றூராகச் சிறுத்துப்போன காரணத்தை நாம் கண்டு பிடித்தாக வேண்டும்’ என்ற வரலாற்றுத் தேடலைத் தூண்டி நிற்கிறது இங்கு எழுப்பட்டுள்ள இத்திருக்கோவில். இப்போது சுமார் 60,70 குடும்பங்கள் மட்டுமே இங்கே வாழ்கின்றன.

மாணிக்க வாசகர் நீங்கலாக மற்ற மூவரும் (திருஞான சம்பந்தர்அப்பர்,சுந்தரர்) நேரில் இத்திருத்தலம் வந்து பாடிப் பரவிதேவாரம் கண்டிருக்கின்றார்கள் என்றால் இந்தத் திருவாமாத்தூரின் பெருமையை  என்ன வென்று சொல்லவும் வேண்டுமோ?

ஏறத்தாழ 1500 வருடங்களுக்கு முன் நிற்பது, திருஞான சம்பந்தப் பெருமானின் காலம்.

அப்பெருமான் இங்கு எழுந்தருளி இந்த திருக்கோவில் ஈசனைப் பாடி, தேவாரம் சூடியிருக்கின்றார் என்றால் அதற்கும் முந்தியே இத் திருத்தலம் பலநூறு ஆண்டுகள் பெருமை கொண்டிருந்திருப்பது உண்மை அல்லவா?
.
அது மட்டுமின்றி, ’வண்ணச் சரபம்’ ஸ்ரீ தண்டபாணி சுவாமிகள் 
ஜீவசமாதியுற்று எழுந்தருளி, ஆளும் திருத்தலமாகவும் இது அமைந்திருப்பதை இன்றுதான் நேரில் கண்டு நெகிழ்ந்தேன். 

‘இரட்டைப் புலவர்கள்’ என்று புகழ்பெற்ற இருவரால் கலம்பகம் பாடப் பெற்ற ஆலயமும் இது’ என்பது இன்னொரு கூடுதல் சிறப்பு.

(இரட்டைப் புலவர்களில் ஒருவர் குருடர்;இன்னொருவர் முடவர். முடவரைத் தன் தோளில் ஏற்றிக் கொண்டு, அவர் சொல்லும் வழியில் குருடர் நடப்பார். குருடருக்கு வழித்துணையாக மட்டுமின்றி, குருடர் பாடும் முதல் இரண்டு வரிகளைப் பின்பற்றி முடவர் அடுத்த இரண்டு வரிகளைப் பாடி முடிப்பார். இவ்வாறாக இவ்விருவரும் வெண்பாவின் நாலடிகளை சரி சமமாகப் பகிர்ந்து பாடி முடிப்பதுடன் வாழ்க்கையையும் ஒன்றாகவே பங்கிட்டு வாழ்ந்தவர்கள். அவர்களுடைய பாடல்களைக் கேட்டு மன்னர்களும் செல்வந்தர்களும் மகிழ்ந்து தரும் பொற்கிழிகளையும் பகிர்ந்து அதன் மூலம் வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள்தான் இந்த இரட்டைப் புலவர்கள்)
  
வண்ணச் சரபம் ஸ்ரீதண்டபாணி சுவாமிகள், வள்ளல் பெருமானார் மற்றும் – ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் காலத்தில் வாழ்ந்து அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த தலைசிறந்த மகான்.

ஸ்ரீஆதி சங்கரர் வகுத்தருளிய ஆறு சமயங்களில் ஒன்றான ‘கௌமாரம்’ என்ற குமார வழிபாட்டை (முருகனை முதற்பொருளாய் கொண்டு வழிபடும் நெறி) செழிக்கச் செய்து,அதைக் காத்துப் போற்றிய தெய்வ அவதாரம்தான்  வண்ணசரபம் ஸ்ரீதண்டபாணி சுவாமிகள்.

‘வண்ணச் சரபம்’ என்ற அதிசயமான இலக்கண மரபில் இவரது பாடல்கள் அமையப் பெற்றிருப்பதை இன்று நாம் படித்து மகிழ்ந்து நெகிழலாம்.

இவருடைய நேரடிச் சீடர்தான் ஸ்ரீ ராமானந்த சுவாமிகள். தனது குரு ’வண்ணச் சரபம்’ஸ்ரீ தண்டபாணி சுவாமிகளின் வழியில் கோயம்புத்தூர் அருகே சரவணம்பட்டியில் கௌமார மடத்தை நிறுவிய சுவாமிகள்.

இவ்வாறு திருவாமாத்துரின் சிறப்புக்கள் இருப்பதை இவ்வூரை நெருங்க நெருங்க நண்பர் திரு கண்ணன் அவர்கள் சொல்லச் சொல்ல,அதில் எண்ணங்கள் விரிந்தவாறே திருவாமாத்தூர் கிராமத்தை நெருங்கினோம்.

அப்போது  சூரியன் செக்கச் சிவந்த பெரிய பந்தாக மேலை வானில் வீழ்ந்து மறையத் தொடங்கினான்;  அதன் பின்னணியில் ஆங்கே, கண்கொள்ளாக் காட்சியாக  ஸ்ரீ அபிராமேஸ்வரர் கோபுரம்  வானளாவித் தோன்றி எங்களை ‘வா’வென்று அழைத்து நின்றது.

இங்குள்ள முன்னவர்
திருமால் துயர் தீர்த்த ஸ்ரீவிநாயகர்
புராணச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க  அபிராமேஸ்வரர்-முத்தாம்பிகை ஆலயம் பச்சைப் பசேல்என்ற கரும்பு வயல்கள் கட்டியம் கூற  கருணை மிளிர காத்துக் கொண்டிருப்பது நம் எண்ணங்களைத் தூய்மைப் படுத்துவதாக இருந்தது. இங்கு இறை நம்பிக்கையோடு செல்வோர்தான் இதை உணர முடியும்.

நாங்கள் இந்த ஆலயத்துக்குள் புகுந்தபோது,சூரியன் சுத்தமாகக் கவிழ்ந்து போய் இருள் கவ்வியிருந்தது.  அந்த இருட்டை மேலும் வலுவாக்கியிருந்தது மேடம் ஜெ. அரசின் மின்வாரியம்.

அற்புதமான - நுண்ணிய கலைச் சிற்பங்கள் அந்த ஆலயச் சுவர்களின் ஆபரணம் போல் மிளிர, அந்தக் கலை நயம் மிக்க சிற்பங்களை இருட்டின் மாட்சிமையால் முழுமையாகக் காண முடியவில்லை.

இருட்டிலும் ஒளிர்ந்த
சிற்பங்களில் ஒன்று
ஆயினும், அவற்றை இருட்டிலும் வியக்கவைக்கும் தோற்றங்களாகக் கண்டு, வியப்பும் விந்தையும் மேலிட ஆலயத்துள் பிரவேசித்தோம்.

வேறு எங்கும் காண இயலாத விந்தையாக அபிராமேஸ்வர் ஒரு ஆள் உயரத்துக்குச் சற்று சாய்ந்த நிலையில் ஆவுடையில் இலிங்கமாக எழுந்தருளியிருக்கின்றார்.

இருட்டில் தட்டுத் தடுமாறித்தான் கருவறையை ச்சுற்றி வந்தோம்.

சுற்றிலும் உள்ள பரிவாரத் தேவதைகளும் தெய்வங்களும் கொள்ளை அழகுச் சிற்பங்களாகக் கொலுவீற்றிருந்தன.

எல்லாச் சிவன் கோவில்களிலும் அய்யனுடன் உடனமர் அம்மையாக இருக்கும் சக்தி, இங்கு சற்று வேறுபட்டுச் சிவன் கோவிலுக்கு எதிரே தனிக் கோவில் கொண்டிருக்கின்றாள். அதற்கு ஒரு தனிக் கதை உண்டு.

என்றாலும் பேரழகு கொண்ட கோலத்தில் நின்றவாறு அருள் பாலிக்கும் முத்தாம்பிகையாக இங்கே நாமகரணம் சூடி நிற்கின்றாள்; அம்மையை  அபிராமியின் வடிவாகவே என் மனம் தரிசித்தது.

உள்ளே எழுந்தருளியிருந்த அபிராமேஸ்வரரையும் இன்னொரு தனிக் கோவிலில் நின்ற நிலையில் அருள்பாலித்த அன்னையையும் உள்ளே ஏற்றப்பட்டிருந்த விளக்குகளின் ஒளி, தனிப் பொலிவு காட்டி அற்புத வடிவங்களாய்க் காட்சி தர, தரிசித்தது இன்றைய நாளில் கிடைத்த தெய்வீக அனுபவம்.

மின் வெட்டுக் காரணமாக,வெளி ப்ரகாரத்திலும் வெளியிலும் கும்மிருட்டுச் சூழ்ந்திருந்ததுகூட  ’ஒரு விதத்தில் நன்மையோ?’ என்று மனம் எண்ணியது.

அம்பிகையின் வெளிப் பிரகாரத்தைச் சுற்றி வந்த போது அதே அம்பிகையின் நுழை கோபுரத்தின் பின்னணியில் தோன்றிய ஈசன் திருக்கோவிலின்  தோற்றம் ஒரு தனிப் பொலிவுடன் காட்சி தந்தது. அதன் உச்சியில் இருந்த விளக்கு ஒருவிதமான ‘தெய்வீக ஜோதி’ யை உமிழ்வதுபோல் தெரிய, அதை அப்படியே  கையில் இருந்த சாதாரண மொபைல் காமிராவில் படம் பிடித்தேன்.

அதுதான் இங்கு அசாதாரண தோற்றத்தில் இடம் பிடித்துள்ளது.

என் அருமை நண்பர்
தாம்பரம் கண்ணன் அவர்கள்
ஸ்ரீ அபிராமேஸ்வரர்-முத்தாம்பிகை திருக்கோவில் தரிசனத்தை முடித்துக் கொண்டு அருகில உள்ள வண்ணச் சரபம் ஸ்ரீ தண்டபாணி சுவாமிகளின் திருக் கோவிலை இருட்டுக்குள் சென்றவாறு நுழைந்தோம். ’மாலை 7 மணியுடன் கோவில் சாத்தப்பட்டு விட்டது’ என்பதை அறிந்த போதும் ’அம்மகானின் திருவடி பட்டும் திருவுளம் தொட்டும் எழுப்பப்பட்டுள்ள திருத்தலத்தைத் தொட்டு விட்டாவது திரும்ப வேண்டும்’ என்று நாங்கள் பேசிக் கொண்டது அங்கே சமாதி கொண்டிருந்த நிலையில்சுவாமிகளே கேட்டுவிட்டதுபோல் அங்கே அதிசயம் நிகழ்ந்தது.

அத்திருத்தலத்தின் மூடியிருந்த இரும்புக் கேட்டை ஓசைப் படாமல் விலக்கி நுழைந்த எங்களைத் திடீரென்று அங்கு கோவில் கொண்டுள்ள சுவாமிகளின் மகன் வயிற்றுப் பேரனும் இப்போதைய திருவாமாத்தூர் கௌமார மடாலயத்தின் நான்காவது மடாதிபதியுமான சுவாமிகள், எதிர்பாராத நிலையில்,வியக்க வைக்கும் அருள் வடிவில், ‘லாந்தர்’ விளக்குடன் வந்து எங்களுக்காக கருவறையைத் திறந்து காட்டினார்.

’முருகப் பெருமான் நின்ற நிலையில் பேரழகுதோன்றப் புன்னகைத்த காட்சியை வேறு எந்த ஆலயத்திலும் பார்க்கவில்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். அத்துணை பேரழகுப் பெருவடிவம் இங்குள்ள முருகன் திரு உருவச் சிலைக்கு.

சுமார் 150 ஆண்டுகளுக்கு ஸ்ரீ தண்டபாணி சுவாமிகள் தன் வாழ்நாள் முழுதும் பூஜித்து வந்த திருக்கைவேல் ஆங்கே கருவறைக்கு முன்பு தனியாக ஸ்தாபிக்கப்பட்டு ஆராதிக்கப்பட்டு வருகிறது. அதனை நெஞ்சார நினைந்து கையாரத் தொட்டுப் பணிந்து இன்புற்றேன்.

வணங்கித் திரும்பியதும் சுவாமிகள் அந்த இருட்டிலும் எங்களுக்கு முருகனுக்கு உகந்த பஞ்சாமிருதத்தை கை நிறைய வழங்கினார்.

நாங்கள் எதிர்பாராமல் திருச்சி செல்லும் வழியில் திருவாமாத்துர் தரிசனம் கண்டது வாழ்நாளின் வரலாற்றுக் குறிப்புத்தான்!


இவண்-
கிருஷ்ணன்பாலா
25.9.2012
·     

Thursday, September 20, 2012

ஒற்றுமைக்கான நெறிகள்


நண்பர்களே,

மறுமடியும் சொல்ல வேண்டியுள்ளது:

இங்கு விவாதம் என்று வைத்தால் வெறும் உணர்ச்சிகளுக்கு மட்டுமே ஆளாகி அர்த்தமற்ற கோஷங்களோடு எழுத்தின் இலக்கறியாமால் எழுதுகின்றவர்கள் காளான்களைப் போல் முளைப்பது முக நூல் தந்த வாய்ப்பு.

நாம் அந்தக் காளான்களை வளர்க்கவும் முடியாது; வளைக்கவும் முடியாது.

அது நமது வேலையும் அல்ல.

ஆனால், தமிழரின் மரியாதையும் தன் மானத்தையும் வளர்ச்சியையும் உலக சமுதாயத்தில் உயர்த்தி வைப்பதற்கான விஷயங்களை இங்கு நாம் சொல்ல வேண்டியிருக்கிறது:
  1. தமிழினத்தின்  ஒற்றுமையும் வலிமையும் இதில்தான் ஓங்கி நிற்க முடியும்:
  2. தமிழ் மொழி,இயல்பாகவே நமக்கு வழங்கும் உயர் பண்பாட்டை உணர்ந்திருத்தல்.
  3. தமிழரின் தொன்மையையும்வன்மையையும் தெரிந்திருத்தல்.
  4. நம்மிடையே இன வேற்றுமை களைந்திருத்தல்.
  5. ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளை ஆதரிக்காதிருத்தல்.
  6. பதவிகளைப் பெறுவதற்காக மானம் கெட்டு வாழாதிருத்தல்.
  7. உலகெங்கும் பரந்து விரிந்து வாழும் தமிழர்களுக்கு உலக அரங்கில் உயர் மரியாதை இருக்கும் வகையிலான சிந்தனைகளை வளர்த்தல்.
  8. மதம்,இன உணர்வுகளின் அடிப்படையில் தமிழர் சமுதாயத்தைப் பிரிக்காதிருத்தல்.
  9. பிற மொழிகளின் பெருமையையும் பிற இனத்தவரின் சிறப்புக்களையும் மதித்தல்.
  10. நமக்குள்ளேயே பிரிவினையையும் பகைமையயும் தூண்டும் துராக்கிரமப் புத்திக்குள் புதையுண்டு சாகாதிருத்தல்.


இவற்றை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்கள் சிந்திக்கவும் பேசவும்தான் நமது எழுத்துக்களை இங்கே நடுகின்றோம்.

இதற்கு எதிரானவர்களோடும் ஏளனம் செய்கின்றவர்களோடும் நமக்கு நட்புமில்லை;நாட்டமும் இல்லை.

ஊருக்கு நல்லது சொல்வோம்;நமக்கு
உண்மை தெரிந்ததைச் சொல்வோம்

என்ற பாரதியின் முரசை இங்கேயும் கொட்டுவோம்.

இவண்-
கிருஷ்ணன்பாலா

கூடன் குளம்:சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு....!


நண்பர்களே,

கூடன் குளம் அணுமின் உற்பத்தி ’எதிர்ப்புக்கு உதாரணமாக, ஏற்கெனவே நடந்துள்ள அணு உலை விபத்துக்களின் ‘காணொளிக் காட்சிகளையே
வாதப் பொருளாக்கிஇங்கு சில அறிவு ஜீவிகள் பேச முனைகின்றார்கள்.

ஒரு காலத்தில்’ கூடன் குளம் பகுதி’ புதிய பரிமாணம் பெற வேண்டும்’ மத்திய அரசு என்று திட்டமிட்டபோது, இப்பகுதி வாழ் மக்கள் வெகு உற்சாகமாக அதற்கு வரவேற்புக் கோஷங்கள் வானைப் பிளந்தன.அப்போதெல்லாம் இந்த உதயகுமார்கள் இல்லை.

அப்போது ’கூடன் குளம் பகுதியைத் தேர்வு செய்வதா,வேண்டாமா? அல்லது வேறு பகுதிக்குக் கொண்டு செல்லலாமா? என்றதொரு குழப்பம் அப்போதைய மத்திய அரசுக்கு இருந்தது.

கூடன் குளத்துக்கு கொண்டு வா’ என்று கோஷம் இட்டவர்களும் அதன் மூலம் அரசியல் முகமை செய்தவர்களும் அப்போது இருந்தனர்.

அதன் பிறகு ’கூடன் குளத்தில் அணுமின் உற்பத்தி நிலையம் அமைப்பது’ என்ற கொள்கை முடிவை அப்போதைய ராஜிவ் காந்தி அரசு எடுத்தது.

அதையொட்டி அமெரிக்கா உள்ளிட்ட பிற தேசத்து நிறுவனங்களும் இந்தியாவில் அணு மின் உற்பத்தி நிலையம் அமைக்கின்ற போட்டியில் - ‘டெண்டரில்’’ இறங்கின.

செலவினம்,சிறப்பான கட்டுமானம்,பிறகு அதை நிர்வாகிப்பதில் எளிதான நடைமுறைகள், பாதுகாப்புக்கு உத்தரவாதம்” என்ற தகுதியின் அடிப்படையில் சோவியத்-அதாவது இன்றைய ரஷ்யா வெற்றி பெற்றது.

தோற்றுப் போனவர்களும் பேராசை கொண்டவர்களுமான அமெரிக்கர்களுக்கு இது ஏமாற்றமும் எதிரியின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும்” என்ற வஞ்சமும் அங்கே விதையுண்டன.

அதன் பிறகு இந்த ‘கூடன்குளம் அணுமின் உற்பத்தி மையம்’ மீது அமெரிக்காவின் கண்பட்டு, அதை எப்படியாவது சிதறடிக்கச் செய்ய வேண்டும்’ என்ற சதி உருவாகிஅந்தச் சதியின் சிறகுகளாகப் பலரும் பலவித்தில் சிக்க வைக்கப்பட்டனர்.

இந்தச் சதியின் சண்டாளர்கள் எங்கோ மறைந்திருக்க, அம்புகள் மட்டுமே நம் கண்ணுக்கு தெரிகின்றன. ஒரு சர்வதேசச் சதிவலையின் இலக்கணமே இதுதானே?

இந்தச் சதியை நடைமுறைப் படுத்திடத்தான் ‘கூடன் குளம் அணுமின் உற்பத்தி மக்களின் உயிருக்கு ஆபத்தானது, அது வெடித்து விடும் இயல்புடையது’ என்று பயங்கரப் படுத்தி மக்களை அச்சுறுத்துகிறார்கள்.

ஒருவேளை,ரஷ்யாவின் செர்னோபில் அணு உலையையும் ஜப்பானின் புகுஷிமா அணு உலையையும் வெடிக்க வைத்த வித்தையைக்கூட இவர்கள் செய்து விட்டு அதைக் காணொளியாய் வளரும் நாடுகளின் அப்பாவி மக்களை மிரள வைத்துத் தங்கள் வியாபாரத்தை வெற்றியாக்கும் உத்தியில் உழல்கின்றார்களோ? என்ற சந்தேகத்தை நாம் கொள்ள வேண்டியிருக்கிறது.

இன்று அமைதிக்குப் பங்கம் ஆகி விட்ட கூடன்குளம் பகுதி தேவையற்ற போராட்டக் களமாக உருவானதில் இந்த சண்டாளர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.

இவர்களோ,இவர்களின் சதிக்கு உடன்பட்டு உரத்த குரல் எழுப்பும் அறிவு ஜீவிகளோ உண்மையை அதன் உள் அர்த்தங்களோடு பார்ப்பதும் இல்லை;சிந்திப்பதும் இல்லை.

பாமர மக்களுக்கு மரண பயத்தைத் தூண்டி அதன் அடிப்படையிலேயே ஒரு போராட்டத்தைப் புதிய பரிமாணத்துக்குக் கொண்டு வந்தவர்களே, இந்த அணு உலையைப் பின் ஒரு காலகட்டத்தில் வெடிக்க வைக்கும் வேலையைச் செய்யவும் தயங்க மாட்டார்கள்’ என்பதையும் நாம் வியர்த்துக் கொண்டுதான் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

அதற்கு அச்சாரமாகத்தான் ‘கூடன்குளம் மின் உற்பத்தி நிலையம், இப்பகுதி மக்களுக்கு ஆபத்தானது’ என்ற அதிபயங்கர எண்ணத்தை மக்களிடையே பரப்பி வருகின்றார்கள் போலும்?

இப்படிப்பட்ட பேரழிவை  ‘வரும்’  என்றோ வர வேண்டும்’ என்றோ சிந்திப்பதுகூட மாபெரும் மானுடக் குற்றம்.

ஆனால்இதன் எதிர்ப்பாளர்கள் இப்பொழுதிலிருந்தே ‘அது வெடிக்காது என்பதற்கு உத்தரவாதம் உண்டா? என்று,  அணு மின் உற்பத்தியை ஆதரிக்கும் என் போன்றவர்களிடம்கூட கேட்கும் அறிவு மிகுந்திருக்கின்றார்கள்

நான் அணுத்திறன் ஆய்வாளன் அல்லன்; எனினும்,  ‘அது தென் தமிழ்நாட்டின் கடற்பகுதியில் நமது தேசியச் சொத்தாய்ச் சிறகடித்துஇப்பகுதி மக்களின் வசதிகள் நிறைந்த வாழ்வுக்கும் வளமான சிந்தனைகளுக்கும் கட்டியம் கூறிக் கொண்டிருக்க வேண்டும்’ என விரும்புகின்றவன்.

கூடன்குளம் மின் உற்பத்தி நிலையம் வரவேண்டும்.அதன் மூலம் ஓரளவேனும் நமது மாநிலத்தில் மின் தேவை பூர்த்தி செய்யபட வேண்டும்.

எனினும் இதை இயக்கும்போது,மக்களின் பாதுகாப்பும் அவர்களுக்குரிய வாழ்வாதார வசதிகளும் மத்திய- மாநில அரசுகளால் உறுதிப் படுத்தப் படவேண்டும். இதில் மத்திய-மாநில  அரசுகள்தான் மிகமிகக் கவனத்தோடு இருந்து மக்களின் உயிர் உடைமைகளுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

சரி.
எங்கோ உருவாக்கப் பட்ட சதியில் சிக்குண்டு கீறல் விழுந்த ஒலித் தகடாக ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் ‘கூடன் குளம் மின் உற்பத்தி எதிர்ப்பாளர்கள் பதில் சொல்லட்டும்:

மோசமான விபத்துக்களுக்கு முன் உதாரணம் உலகில் நிறைய உண்டுதான்;அதைவிடப் பன்மடங்கு பெரிதான, வியப்பான விஞ்ஞானத்தின் விளைச்சல்களுக்கும் பயன்களுக்கும் உதாரணமே இவ்வுலக வாழ்வு.

செர்னோபில் போன்ற அருதப் பழசான அணுமின் உலை விபத்துக்களைக் காரணம் காட்டி, இன்றைய அணுத் திறனின் புதிய,பரிணாமம் பெற்ற கட்டுமானத்தை ஒப்பிட்டுப் பிரச்சாரம் செய்வது அறிவீனம்.அரசியல் உள் நோக்கம் வாய்ந்தது.

பாமர்கள் அறிவியலின் நுட்பம் அறியாது அஞ்சுவது நியாயம்; ஆனால் அவர்களுடைய அச்சத்தை அதிகப் படுத்திப் படித்தவர்கள் விவாதத்தை வளர்ப்பது அநியாயம்;அக்கிரமம்.

இதில் பத்திரிகையாளர்கள்,அரசியல்வாதிகள்அறிஞர்கள்  என்று பலருக்கு பல முகங்கள் இருந்தாலும் அவர்களுடைய ‘சமூக அக்கறை’ என்ற போலித் தகுதிதான் நம் கண்முன்னே நிற்கிறது என்பதை வருத்தத்தோடு காண்கின்றேன்.

இவர்களுக்கு சென்னைக்கு அருகில உள்ள கல்பாக்கம் அணு உலை தெரியாமல் போனது இவர்களின் குருட்டுத் தன்மையும் குயுக்தியையும் குவலயத்துக்குக் கோடிட்டுக் காட்டவிலையா?

எனது கட்டுரைகள் ’கூடன் குளம் மக்களைக் கொல்ல வேண்டும்’ என்று இருப்பதாக இங்கு ஒரு சில மூடர்கள் முனகுகிறார்கள்.இன்னும் ஒருபடி மேலே போய்,’கூடன் குளம் அணுமின் உற்பத்தியை எதிர்ப்போர் மக்களிடையே மிகப் பயங்கரமான பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதைத் தோலுரித்துக் காட்டி எழுதும் என்போன்றவர்களை ’கூடன் குளம் பகுதி மக்களைக் கொல்ல எண்ணும் சாத்தான்கள்’ என்று கூட அலறுகிறார்கள்கொஞ்சமும் அறிவின்றி அவல மொழியில் கொக்கரிக்கின்றார்கள்.

ஆனால் கூடன் குளம் அணுமின் உற்பத்தி நிலையம் என்று பேசும் படித்தவர்களான எதிர்ப்பாளர்கள் நிச்சயம் அவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்பார்கள் என்று நம்புகிறேன்.

தவறுகளில் இருந்து மீள்வதைக் கற்றுக் கொண்டு,விரிவதே விஞ்ஞானம் என்பதை நான் அவர்களுக்குச் சொல்ல வேண்டுமா?

சிந்திப்பீர்;தேச நலனில் உண்மையான பார்வையைச் செலுத்துவீர்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
12.9.2012