Thursday, September 20, 2012

கூடன் குளம்:சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு....!


நண்பர்களே,

கூடன் குளம் அணுமின் உற்பத்தி ’எதிர்ப்புக்கு உதாரணமாக, ஏற்கெனவே நடந்துள்ள அணு உலை விபத்துக்களின் ‘காணொளிக் காட்சிகளையே
வாதப் பொருளாக்கிஇங்கு சில அறிவு ஜீவிகள் பேச முனைகின்றார்கள்.

ஒரு காலத்தில்’ கூடன் குளம் பகுதி’ புதிய பரிமாணம் பெற வேண்டும்’ மத்திய அரசு என்று திட்டமிட்டபோது, இப்பகுதி வாழ் மக்கள் வெகு உற்சாகமாக அதற்கு வரவேற்புக் கோஷங்கள் வானைப் பிளந்தன.அப்போதெல்லாம் இந்த உதயகுமார்கள் இல்லை.

அப்போது ’கூடன் குளம் பகுதியைத் தேர்வு செய்வதா,வேண்டாமா? அல்லது வேறு பகுதிக்குக் கொண்டு செல்லலாமா? என்றதொரு குழப்பம் அப்போதைய மத்திய அரசுக்கு இருந்தது.

கூடன் குளத்துக்கு கொண்டு வா’ என்று கோஷம் இட்டவர்களும் அதன் மூலம் அரசியல் முகமை செய்தவர்களும் அப்போது இருந்தனர்.

அதன் பிறகு ’கூடன் குளத்தில் அணுமின் உற்பத்தி நிலையம் அமைப்பது’ என்ற கொள்கை முடிவை அப்போதைய ராஜிவ் காந்தி அரசு எடுத்தது.

அதையொட்டி அமெரிக்கா உள்ளிட்ட பிற தேசத்து நிறுவனங்களும் இந்தியாவில் அணு மின் உற்பத்தி நிலையம் அமைக்கின்ற போட்டியில் - ‘டெண்டரில்’’ இறங்கின.

செலவினம்,சிறப்பான கட்டுமானம்,பிறகு அதை நிர்வாகிப்பதில் எளிதான நடைமுறைகள், பாதுகாப்புக்கு உத்தரவாதம்” என்ற தகுதியின் அடிப்படையில் சோவியத்-அதாவது இன்றைய ரஷ்யா வெற்றி பெற்றது.

தோற்றுப் போனவர்களும் பேராசை கொண்டவர்களுமான அமெரிக்கர்களுக்கு இது ஏமாற்றமும் எதிரியின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும்” என்ற வஞ்சமும் அங்கே விதையுண்டன.

அதன் பிறகு இந்த ‘கூடன்குளம் அணுமின் உற்பத்தி மையம்’ மீது அமெரிக்காவின் கண்பட்டு, அதை எப்படியாவது சிதறடிக்கச் செய்ய வேண்டும்’ என்ற சதி உருவாகிஅந்தச் சதியின் சிறகுகளாகப் பலரும் பலவித்தில் சிக்க வைக்கப்பட்டனர்.

இந்தச் சதியின் சண்டாளர்கள் எங்கோ மறைந்திருக்க, அம்புகள் மட்டுமே நம் கண்ணுக்கு தெரிகின்றன. ஒரு சர்வதேசச் சதிவலையின் இலக்கணமே இதுதானே?

இந்தச் சதியை நடைமுறைப் படுத்திடத்தான் ‘கூடன் குளம் அணுமின் உற்பத்தி மக்களின் உயிருக்கு ஆபத்தானது, அது வெடித்து விடும் இயல்புடையது’ என்று பயங்கரப் படுத்தி மக்களை அச்சுறுத்துகிறார்கள்.

ஒருவேளை,ரஷ்யாவின் செர்னோபில் அணு உலையையும் ஜப்பானின் புகுஷிமா அணு உலையையும் வெடிக்க வைத்த வித்தையைக்கூட இவர்கள் செய்து விட்டு அதைக் காணொளியாய் வளரும் நாடுகளின் அப்பாவி மக்களை மிரள வைத்துத் தங்கள் வியாபாரத்தை வெற்றியாக்கும் உத்தியில் உழல்கின்றார்களோ? என்ற சந்தேகத்தை நாம் கொள்ள வேண்டியிருக்கிறது.

இன்று அமைதிக்குப் பங்கம் ஆகி விட்ட கூடன்குளம் பகுதி தேவையற்ற போராட்டக் களமாக உருவானதில் இந்த சண்டாளர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.

இவர்களோ,இவர்களின் சதிக்கு உடன்பட்டு உரத்த குரல் எழுப்பும் அறிவு ஜீவிகளோ உண்மையை அதன் உள் அர்த்தங்களோடு பார்ப்பதும் இல்லை;சிந்திப்பதும் இல்லை.

பாமர மக்களுக்கு மரண பயத்தைத் தூண்டி அதன் அடிப்படையிலேயே ஒரு போராட்டத்தைப் புதிய பரிமாணத்துக்குக் கொண்டு வந்தவர்களே, இந்த அணு உலையைப் பின் ஒரு காலகட்டத்தில் வெடிக்க வைக்கும் வேலையைச் செய்யவும் தயங்க மாட்டார்கள்’ என்பதையும் நாம் வியர்த்துக் கொண்டுதான் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

அதற்கு அச்சாரமாகத்தான் ‘கூடன்குளம் மின் உற்பத்தி நிலையம், இப்பகுதி மக்களுக்கு ஆபத்தானது’ என்ற அதிபயங்கர எண்ணத்தை மக்களிடையே பரப்பி வருகின்றார்கள் போலும்?

இப்படிப்பட்ட பேரழிவை  ‘வரும்’  என்றோ வர வேண்டும்’ என்றோ சிந்திப்பதுகூட மாபெரும் மானுடக் குற்றம்.

ஆனால்இதன் எதிர்ப்பாளர்கள் இப்பொழுதிலிருந்தே ‘அது வெடிக்காது என்பதற்கு உத்தரவாதம் உண்டா? என்று,  அணு மின் உற்பத்தியை ஆதரிக்கும் என் போன்றவர்களிடம்கூட கேட்கும் அறிவு மிகுந்திருக்கின்றார்கள்

நான் அணுத்திறன் ஆய்வாளன் அல்லன்; எனினும்,  ‘அது தென் தமிழ்நாட்டின் கடற்பகுதியில் நமது தேசியச் சொத்தாய்ச் சிறகடித்துஇப்பகுதி மக்களின் வசதிகள் நிறைந்த வாழ்வுக்கும் வளமான சிந்தனைகளுக்கும் கட்டியம் கூறிக் கொண்டிருக்க வேண்டும்’ என விரும்புகின்றவன்.

கூடன்குளம் மின் உற்பத்தி நிலையம் வரவேண்டும்.அதன் மூலம் ஓரளவேனும் நமது மாநிலத்தில் மின் தேவை பூர்த்தி செய்யபட வேண்டும்.

எனினும் இதை இயக்கும்போது,மக்களின் பாதுகாப்பும் அவர்களுக்குரிய வாழ்வாதார வசதிகளும் மத்திய- மாநில அரசுகளால் உறுதிப் படுத்தப் படவேண்டும். இதில் மத்திய-மாநில  அரசுகள்தான் மிகமிகக் கவனத்தோடு இருந்து மக்களின் உயிர் உடைமைகளுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

சரி.
எங்கோ உருவாக்கப் பட்ட சதியில் சிக்குண்டு கீறல் விழுந்த ஒலித் தகடாக ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் ‘கூடன் குளம் மின் உற்பத்தி எதிர்ப்பாளர்கள் பதில் சொல்லட்டும்:

மோசமான விபத்துக்களுக்கு முன் உதாரணம் உலகில் நிறைய உண்டுதான்;அதைவிடப் பன்மடங்கு பெரிதான, வியப்பான விஞ்ஞானத்தின் விளைச்சல்களுக்கும் பயன்களுக்கும் உதாரணமே இவ்வுலக வாழ்வு.

செர்னோபில் போன்ற அருதப் பழசான அணுமின் உலை விபத்துக்களைக் காரணம் காட்டி, இன்றைய அணுத் திறனின் புதிய,பரிணாமம் பெற்ற கட்டுமானத்தை ஒப்பிட்டுப் பிரச்சாரம் செய்வது அறிவீனம்.அரசியல் உள் நோக்கம் வாய்ந்தது.

பாமர்கள் அறிவியலின் நுட்பம் அறியாது அஞ்சுவது நியாயம்; ஆனால் அவர்களுடைய அச்சத்தை அதிகப் படுத்திப் படித்தவர்கள் விவாதத்தை வளர்ப்பது அநியாயம்;அக்கிரமம்.

இதில் பத்திரிகையாளர்கள்,அரசியல்வாதிகள்அறிஞர்கள்  என்று பலருக்கு பல முகங்கள் இருந்தாலும் அவர்களுடைய ‘சமூக அக்கறை’ என்ற போலித் தகுதிதான் நம் கண்முன்னே நிற்கிறது என்பதை வருத்தத்தோடு காண்கின்றேன்.

இவர்களுக்கு சென்னைக்கு அருகில உள்ள கல்பாக்கம் அணு உலை தெரியாமல் போனது இவர்களின் குருட்டுத் தன்மையும் குயுக்தியையும் குவலயத்துக்குக் கோடிட்டுக் காட்டவிலையா?

எனது கட்டுரைகள் ’கூடன் குளம் மக்களைக் கொல்ல வேண்டும்’ என்று இருப்பதாக இங்கு ஒரு சில மூடர்கள் முனகுகிறார்கள்.இன்னும் ஒருபடி மேலே போய்,’கூடன் குளம் அணுமின் உற்பத்தியை எதிர்ப்போர் மக்களிடையே மிகப் பயங்கரமான பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதைத் தோலுரித்துக் காட்டி எழுதும் என்போன்றவர்களை ’கூடன் குளம் பகுதி மக்களைக் கொல்ல எண்ணும் சாத்தான்கள்’ என்று கூட அலறுகிறார்கள்கொஞ்சமும் அறிவின்றி அவல மொழியில் கொக்கரிக்கின்றார்கள்.

ஆனால் கூடன் குளம் அணுமின் உற்பத்தி நிலையம் என்று பேசும் படித்தவர்களான எதிர்ப்பாளர்கள் நிச்சயம் அவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்பார்கள் என்று நம்புகிறேன்.

தவறுகளில் இருந்து மீள்வதைக் கற்றுக் கொண்டு,விரிவதே விஞ்ஞானம் என்பதை நான் அவர்களுக்குச் சொல்ல வேண்டுமா?

சிந்திப்பீர்;தேச நலனில் உண்மையான பார்வையைச் செலுத்துவீர்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
12.9.2012
Post a Comment