Thursday, September 20, 2012

இது பெருமை அல்ல!


ஒரு முன்குறிப்பு:

திருதுக்ளக்சோ அவர்களும் தினமணி ஆசிரியரும்,எனது நண்பருமான திரு கே வைத்தியநாதன் அவர்களும் இதை மறு பிரசுரம் செய்ய அனுமதிக்கின்றேன்.

நண்பர்களே,

சற்று முன், (13.9.2012 / முற்பகல் 11:30 மணி அளவில்) தமிழக முதல்வர் மேடம் ஜெ. அவர்கள் திருச்சி,திருவரங்கம் வந்து தொகுதி மக்களுக்கு இலவச -மக்கள் நலத் திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழா நிகழ்ச்சியைத் தொலைக் காட்சியில் பார்த்துத் தொலைத்து விட்டேன்.

மாவட்ட ஆட்சித் தலைவர் .தி.மு..மாவட்ட செயளாளர் போலவே வரவேற்புரை நிகழ்த்தி முதல்வர் அவர்களின் காலில் விழாத குறையாக நடந்து கொண்டதைப் பார்க்கும் போதுஒரு IAS அதிகாரியின்- அதுவும் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரின் அத்தனை கம்பீரமும் காணாமல் போய் விட்டது.

அவர் முதல்வரைமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களேஎன்றுதான் விளித்துக் கூறி வரவேற்புரை நிகழ்த்தியிருக்க வேண்டும்.

ஆனால், அதிமுக.காரர்களுக்கே கற்றுத்தரும் வகையில் புகழாரம் சூட்டிபோற்றியோ; போற்றிஎன்று புகழ்ந்ததும் மேடையில் முதல்வர் இலவசங்களை வழங்கியபோது முதல்வர் அவர்களின் கண்ஜாடையிலேயே கருத்துப் பதிந்தவராய் - ஒரு தெய்வத்தை, பக்தை ஒருவர் பார்த்துப் பார்த்துப் பூரிக்கும் காட்சியில்தான் நடித்துக் கொண்டிருந்தார் என்பதைக் காண முடிந்தது;மன்னிக்கவும் நாண முடிந்தது.

விழா முடிவில் நன்றி உரை நிகழ்த்திய மாவட்ட வருவாய் அலுவலரோ, முதல்வரைப் பார்த்து அவரது பெயரைக் கூறும் சந்தர்ப்பங்கள் தோறும் மானசீகமாக மண்டியே போட்டு விட்டார்.

இவர் நிச்சயம் அடுத்துவரும் IAS பட்டியலில் இடம் பெற்று விடுவார் என்பதில் இவருக்குச் சந்தேகம் வேண்டாம்.

பிறகு,முதல்வர் அவர்கள் மேடையில் உரையாற்றும் போதுதமிழர்களின் தன்மானம் எப்படியிருக்க வேண்டும்?’ என்பதற்கு மறைந்த சர் பிடி தியாகராயர் அவர்கள் பிரிட்டீஷ் இளவரசரை வரவேற்பதில் தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் நடந்து கொண்டதை எடுத்துக்காட்டாய் விளக்கிப் பேசினார்.

உண்மையில், தமிழர்களின் தன்மானத்தை வலியுறுத்தும் முதல்வர் அவர்கள் இந்த IAS மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் கம்பீரத்தையும் தன்மானத்தையும் வலியுறுத்தி இருக்க வேண்டாமோ?

மேடம் அவர்களே,
உங்கள் மேடை நிகழ்ச்சிகளை-குறிப்பாக அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை நாடெங்கும் உள்ள அறிஞர்கள், கல்விமான்கள்,தமிழ் உணர்வுமிக்கோர்;அரசு உயர் அதிகாரிகள் நீதிமான்கள்;உண்மையான விமர்சகர்கள்; நாட்டுக்கு நல்லது,கெட்டதைச் சுட்டி காட்டும் ஊடகத் திறனாளர்கள்,ஏன் உங்களைக் கிண்டலும் கேலியும் செய்வதற்கென்றே உங்கள்மீது ஒரு கண் வைத்துக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சி ஏந்தல்கள் என எண்ணிறைந்தவர்கள் பலரும் பல நிலைகளிலிருந்து கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுடைய மனதில் அரசு உயர் அதிகாரிகள் உங்கள் முன் மண்டியிடாத குறையாகப் பொது மேடையிலேயே நடந்து கொள்வதும் நீங்கள் அதை பார்த்துப் பூரித்துப் புன்னகைத்துக் கொள்வதும்ஓர் அவமானகரமான காட்சிஎன்பதையே கருத்தில் பதித்துக் கொண்டிடிருக்கின்றார்கள்

அரசு அதிகாரிகளை உங்கள் முன் பொது மேடையில் மண்டியிட வைப்பது உங்கள் ஆட்சி நிர்வாகத்துக்குப் பெருமை அல்ல மேடம், அவர்களை அரசு நிர்வாகத்தையும் உண்மையான கடமை உணர்வோடு மக்கள் பணி ஆற்ற வைத்துஊழலே இல்லாத ஜெ.அரசுஎன்று அனைவரும் சொல்லும் ஆட்சியைத் தருவதில்தான் பெருமை.

"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்”       
-  இது குறள்.

உண்மையுடன்,
கிருஷ்ணன்பாலா
13.9.2012


பின் குறிப்பு: 

இக்கட்டுரை 13.9.2012 அன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் தமிழக முதல்வர் மேடம் ஜெ.அவர்கள் கலந்து கொண்ட அரசு விழா நிகழ்வின் நேரடி ஒளிபரப்பைக் கண்டு  எழுதப்பட்டது.

Post a Comment