Wednesday, March 26, 2014

ஊழல் அரசியலின் உச்சக் கட்டம் (அரசியல் அரங்கம்:9)


காங்கிரஸை அதன் மதச் சார்பற்ற கொள்கைக்காக மன்னிப்போம்” என்று கலைஞர் திடீரென்று இன்று (26.3.2014) சென்னை தேர்தல் பிரச்சார மேடையில்  அறிவித்துள்ளார்.

’நரேந்திர மோதி’என்ற மந்திரச் சொல் நாடெங்கிலும் மக்கள் மனதில் நாளுக்கு நாள் கவ்வத் தொடங்கி மோதியின் எதிர்ப்பாளர்கள் மற்றும் மோதி பிரதமராக வரக் கூடாது;குழப்பக் கூட்டு மூலமாவது தாங்கள் பிரதமாரகி விட வேண்டும்’ என்று பகல் கனவு காண்பவர்கள் எல்லோரும் தலை தொங்கிப்போய்,நாளுக்கு நாள் தங்களுடைய ஈன ஸ்வரத்தில் இளகிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸ் இல்லாத தி.மு.க கூட்டணிக்கு இருந்த பலமும் போய். அழகிரியால் இருக்கின்ற பலமும் குன்றிய நிலையில் அதன் வெற்றி மிக மிகக் குறுகிப்போய் விட்டது.

அ.தி.மு.க வுக்கோ தனித்து நிற்பதாலும், கம்யூனிஸ்டுகளைக் கை கழுவி விட்டதாலும்  ஆட்சி நிர்வாகம் குறித்து மக்களிடையே பெரும் அதிருப்தி நிலவுவதாலும், கட்சிக்காரர்களிடையே கசப்பும் வெறுப்பும் அதிகரித்துள்ளதாலும் அதன் வாக்கு வங்கி சிறுத்துப் போய் இருக்கிறது.

அ.தி.மு.க அமைச்சர்களையும் கட்சி நிர்வாகிகளையும்  பதவிகளைக் காட்டி ’அடிமைகள் போல் ஆக்கி, பரப்பப்படும் ‘அம்மா புராணம்’ எதிர்மறையான விளைவுகளை நிச்சயம் ஏற்படுத்தும். இதை, இந்தத் தேர்தல் மூலம் நாம் காணப் போகிறோம்.

ஆம் ஆத்மி கட்சி என்பது பிறந்ததும் செத்துப்போன குழந்தையாகி விட்டது.

“படைத்தவனே பறித்துக் கொண்டாண்டி’ என்ற பாட்டுக்கேற்ப உயர்ந்த லட்சியங்களைத்  தனது மாய்மால அரசியலுக்குப் பயன் படுத்தி, வெற்று ஆர்ப்பாட்டங்களில் மீடியாக்களில்  ஆரவாரம் செய்து காட்டி, அதன் மூலம் புது டில்லியில் படித்தவர்களையும் பாமரர்களையும் ஒரே தட்டில் வைத்து ஏமாற்றிய ’அரைவேக்காட்டு’ அரவிந்த் கெஜ்ரிவால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாலறுந்த நரியாக ஊளையிடப்போகிறார்.

நரேந்திர மோதியின் உறுதி மிக்க தலைமையை இந்தியாவின் பாமரன் முதல் படித்தவர்கள்வரை விரும்புவதால் அவருக்காகவே வாக்களிக்கும் மக்களின் உணர்வு அலை சுனாமியாக வீசப்போகிறது.

உட்கட்சிப் பூசல், உளுத்தர்களின் பதவிப் பித்து மற்றும் ஒவ்வாத கட்சிகளின் கட்சிகளின்  கோமாளித்தனக் கூட்டு இவற்றால் மோதிக்குச் சின்னச் சறுக்கல்போல் தோன்றினாலும் ‘மோதி’என்ற மந்திரச் சொல்லுக்காக கண்ணை மூடிக் கொண்டு தாமரைத் தடாகத்தில் குதிப்பதற்கு மக்கள் தயாராக இருக்கின்றார்கள்.

இதையெல்லாம் கணக்குப் போடத்தெரியாதவர் அல்ல கலைஞர்.

அழகிரியால் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும்  சிதைவும் தமிழக மக்களிடையே மோதிக்கு ஏற்பட்டிருக்கும் பேராதரவுப் பேரலையும் தி.மு.கவை 3 ஆம் இடத்துக்குக் கொண்டுபோய் விடும் என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டு விட்டது.

அதனால்தான்  காங்கிரஸ் உதவாக்கரை கட்சி என்று முடிவெடுத்து,மோதியின் கூட்டுக்காக திரை மறைவுத் தூதுகள் அனுப்பித் தோல்வியுற்று ‘சீச் சீ,இந்தப்பழம் புளிக்கும்’ என்ற நரியின் கூற்றாக பா.ஜா.க. மதச் சார்புக் கட்சியாக வர்ணித்தும் காங்கிரஸை மதச் சார்பற்ற கட்சியாக வர்ணித்தும்  தேர்தல் திரைப்பட வசனத்தை எழுதுகிறார்.

தேர்தலுக்குப் பிறகு முன்புபோல் காட்சி மற்றம் செய்து, ‘மத்தியில் ஆட்சிப் மாற்றத்தில் பங்கு வகிக்கும் கலைஞரின் கனவு, இனி நிறைவேற வாய்ப்பே இல்லை’ என்பதாலும் விரல் விட்டு எண்ணும் அளவுக்கேனும் தன் கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற நப்பாசை அவருக்குள் ‘நறுக்’கென்று இப்போது தோன்றி இருக்கிறது.

காங்கிரஸோ தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் டெபாஸிட் பறி போகும் நிலையில் இருக்கிறது.

கந்து வட்டிக்கடைக்காரன்போல் நாட்டைச் சுரண்டி, இந்திய ஜனங்களின் வயிற்றில் அடித்து, ’வரி வரி’யாக மக்கள் வசைபாடும் அளவுக்கு வரி வசூல் அறிஞரைப்போல் காட்டிக்கொண்ட வேட்டி கட்டிய தமிழன் ‘பானா சீனா, தேர்தல் அறிவிப்பு வரும்வரை வீர வசனம் பேசிக் கொண்டிருந்தார்.  எப்படியாவது தி.மு.வுடன் கூட்டணியை ஏற்படுத்தும் ராஜ தந்திர வேலைகள் அனைத்தும் செய்து, தன்னிடமிருந்த முனை மழுங்கிப் போன அத்தனை அஸ்திரங்களையும் எடுத்து எடுத்து வீசிப்பார்த்து வீழ்ந்தும் போனார்.

காங்கிரஸும் கடைசிவரை தமிழகத்தில் தி.மு.கவுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஏதோ ஒரு வகையில் பேரம் படியாமல் போய், தேர்தலும் நெருங்கி விட்ட சூழ்நிலையில், தன் முயற்சியில் தலை தொங்கிப் போகாத வேதாளம் போல். குயுக்திகள் மூலம் எப்படியும் 100 சீட்டுக்களையாவது வெல்ல வேண்டும்’ என்று காங்கிரஸ் தப்புத்தாளம் போட்டுக் கொண்டிருக்கிறது. அதற்காகச் சூடு.சுரணை,மானம், வெட்கம் இவற்றைத் தூக்கி எறிந்து விட்டுத் தன் பழைய கூட்டாளிகளையெல்லாம் விடாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது.

இதன் விளைவாகத்தான் கலைஞர்  ‘காங்கிரஸைசை அதன் மதச் சார்பற்ற கொள்கைக்காக மன்னிப்போம்’ என்கிறார்; இதற்கான துணிவு ஏற்கெனவே பலமுறை, தமிழர்களை முட்டாள்கள் ஆக்கிய அனுபவத்தில் இருந்துதான் தோன்றி இருக்கிறது.

இவரது திடீர் வசனத்தைக் கேட்கும்போது தமிழ்நாட்டில் கடைசித் திருப்பு முனையாக காங்கிரஸுக்குக் குறைந்த பட்சம் 5 தொகுதிகளைவிட்டுக் கொடுத்து, தனது கட்சிக்கும் கொஞ்சம் வாக்கு வங்கியைக் கூட்டிக் காட்டவும் காங்கிரஸ் டெபாசிட்டையாவது காப்பாற்றிக் கொண்டு தமிழ் நாட்டில் ‘கோமா நிலையில் இருந்து எழுந்து உட்கார்த்துக் கொள்ளும் வாய்ப்பைத் தரவுமான அயோக்கியத்தனமான கூட்டணி அரசியல் நிகழ்வுகளை நாம் கண்டாலும் வெட்கப்பட முடியாது.

’தி.மு.க வின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியல் கடைசி நிமிடம் வரைகூட மாறுதலுக்கு உட்பட்டது’ என்று கலைஞர் சும்மாவா சொல்லி இருப்பார்?.

அவர்தான் ’சொன்னதைச் செய்வார்;சொல்லாததையும் செய்பவர் ஆயிற்றே!

வடக்கில் காங்கிரஸ் ஊழலில் நாடறிந்தவர்களை மீண்டும் தனது வேட்பாளர்களாக அறிவித்திருப்பதும் மீண்டும் தி.மு.கவின் நட்பை நாடுவதும் ஒரே கோட்டில் உணர்த்தப்படும் ஊழல் அரசியலின் உச்சக் கட்டம்தான்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
26.3.2014