Saturday, August 28, 2010

படித்தோரும் பிடித்தோரும்-1

ONE OF MY GOOD FRIEND of Facebook,Madam Kalavathy,from IPOH (Malaysia) WROTE the FOLLOWINGS AFTER GOING THROUGH MY 'KAVITHAI ITHU,KEL'-(கவிதை,இது கேள்) & ABOUT ME (என்னைப் பற்றி...)IN THIS BLOGSPOT:


Kala Vathy 27 August at 23:26
Ungal background patri padithen, manasu romba kashtamage irunthathu. Athai vida kodumai, ungai magalukku ningal eluthina kavithai. 'Unamaiyagavum nermaiyagavum irupavargalukku intha nilamaiya? endru ninaikum poluthu romba vethanaiyaga irunthathu. Iraivan mel baarathai pottuvittu ningal ungal paniyai thodarungal. Ungal natpu kidaika naan perumai padukiren.




My response to the posting:


Krishnan Balaa 27 August at 23:46
நன்றி.அம்மையீர், உங்கள் கருத்தும் மனதின் பிரதிபலிப்பும் நல்ல நண்பரின் கவலையை,கண்ணியமான அன்பை உணர்த்துவதாக இருந்தது.


இறைவன் மேல் எல்லாம் பாரத்தைப் போட முடியாது.ஏனெனில், அவன் பல வழிகளைக் காட்டினான். எல்லா வழிகளிலும் அதனதன் வழியே உள்ள எதிர் விளைவுகளையும் காட்டினான்.


நான்தான் இவ்வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். இம்மையிலேயே நமக்கு விடுதலை வேண்டும் என்பதே நம் விருப்பம்.


நீங்கள் முழுமையாகப் படித்ததுடன் மட்டுமின்றி,உணர்வுப் பூர்வமாக எழுதி இருப்பதற்கும் நன்றி.


இவண்-
கிருஷ்ணன் பாலா

Friday, August 27, 2010

நிழலின் நிஜங்கள்

ஒரு நிஜமான கற்பனையின் நிழல்கள்



நான் யார்?


கற்பனையின் நிழலா?
நிழலின் கற்பனையா?
கனவுகளின் நிஜமா?
நிஜமான கனவா?


நான் யார்?
தூங்கிக் கொண்டிருக்கும்
ஒருவனா?;
விழித்துக் கொண்டிருக்கும்
ஒருவனா?


இந்த உலகம்;
இதன் வாழ்க்கை....
என்பதெல்லாம்,
கனவுகளா? நனவுகளா?


கனவுகள் என்றால்,
கனவுகளில்
விழித்துக் கொண்டிருக்கும்
நான் யார்?


நனவுகள் என்றால்
நனவுகளில்
கனவு கண்டு கொண்டிருக்கும்
நான் யார்?


நீண்ட பெரும் கனவின்
ஓர் அங்கம்தான்
எனது விழிப்பா?


அந்த விழிப்பின்
அத்தியாயங்கள்
இரவும் பகலுமா?


இதில்
நான் தூங்கி எழுந்தேனா?
எழுந்தபின் தூங்குகிறேனா?


கனவுகள் மூலம்
இந்த உலகத்தைக் காண்கிறேனா?
இந்த உலகத்தின் மூலம்
கனவுகள் காண்கிறேனா?


நான் தூங்கினால்-
என்னோடு
இந்த உலகமும் தூங்கி விடுகிறது;


நான் எழுந்தால்-
என்னோடு
இந்த உலகமும் எழுகிறது!


இதோ:
என் முன்-
ஜீவராசிகள் எனும் பிம்பங்கள்.....


அவற்றின் இடையே-
நிறபேதங்கள்; இனபேதங்கள்;
அசைவன;அசையாதிருப்பன;
தெரிவன;தெரியாதிருப்பன…….


இவை எல்லாம்
எதனுடைய அங்கங்கள்?


என்னுள்ளிருந்தே
இவையனைத்தும் தோன்றுகின்றன!


எனது விழிகளால்
பார்க்கிறேன்;
எனது செவிகளால்
கேட்கிறேன்;
நானே தேடுகிறேன்;
நானே உண்கிறேன்!


அழுவதும் சிரிப்பதும்
ஆனந்திப்பதும் துயர்ப்படுவதும்
எண்ணுவதும் எண்ணாதிருப்பதும்
எல்லாம் நானே….


’நான்’ எங்கிருந்து வந்தேன்?’
என்பது
எனக்குத் தெரியாது…….


’தாயின் கருவறை’
என்று சொன்னால்….
அந்தத் தாயின் கருவறை
எங்கிருந்து வந்தது?


கண்ணுக்குத் தெரிந்திராத
காற்றை
ரப்பர் பை ஒன்றில்
ஊதி அடைத்ததைப் போல்
‘உருவமாய் வந்த
‘நான்’ எனும் மூலம் எது?


’நான்’
என்பதன் நோக்கம் என்ன?


‘நான்’ விரும்பாமல்
வந்த-
இந்த வாழ்க்கை…..


இப்போது-
ஏன்
என்னை விலகுகிறது?
அல்லது விலக்குகிறது?


என்னைச் சுற்றியே
இந்த உலகம் இயங்குகிறது…


நான்……
அதன் இயக்கத்தின் அச்சு:


காலச்சக்கரத்தின் சுழற்சியில்
அதன் அச்சு முறிந்தபின்னும்
சுழற்சி நிற்பதில்லை……


ஆரம்பம் எது?
என்பது தெரியாமல்
முடிவும் அறிவிக்கப்படாமல்
முடிந்து விடுகிற
எனது இயக்கத்தில்
கதா பாத்திரமாகிற
‘நான்’ யார்?


ஒருநாள்-
இந்த உலகத்தை நானும்
இந்த உலகம் என்னையும்
கை விட்டு விடுவதற்க்காக….


இன்று-
இந்த உலகமும் நானும்
கை கோர்த்துக் கொண்டு
கையொப்பம் இடுகிற
காட்சி அரங்கேறுகிறது!


இந்த அரங்கேற்றத்தின்
கதா நாயகனான
‘நான்’ யார்?


ஆம்!
புறப்பட்ட இடம்
புரியாமல் புறப்பட்டுக் கொண்டும்


போகும் இடம்
தெரியாமல் போய்க் கொண்டும் இருக்கின்ற,
ஓர்-
வழிப் போக்கன்;


பிறருக்கு-
வழி காட்டிக் கொண்டே
வழி தெரியாமல்
நின்று தவிக்கும் வழிகாட்டி;


குழப்பங்களை
ஒழிப்பதற்காகவே,
குழம்பிக் கொண்டிருக்கின்ற
கொள்கைவாதி;


ஓய்வு பெறுவதற்காக,
ஓய்வின்றி
உழைத்துக் கொண்டிருக்கின்ற
உழைப்பாளி;


குனிந்திருந்தவர்களை
நிமிரச் செய்து
தலை குனிந்து போன
உபதேசி;


அரண்மனை இல்லாத அரசன்;


பாமரமாய்-
பட்டொளி வீசிக்கொண்டிருக்கும் ”பா’மரம்”;


நிரந்தரமற்ற நிறந்’தரம்;
பேசத் தெரிந்த ஊமை;
விலாசமுள்ள அநாதை;
பொய்யான மெய்யன்;
புழுங்கிக் கொண்டிருக்கின்ற விசிறி;


இருந்தும்,
‘இல்லை’ என்று பொருளுரைக்கும்
அருஞ்சொல் பதம்;


இருட்டைக் கவசமாக்கி
எரிந்து கொண்டிருக்கும்
அகல் விளக்கு!


இரவின் விடியலுக்கும்;
விடியலின் முடிவுக்கும்
விளக்கம் தரும்
முற்றுப் புள்ளி.


-கிருஷ்ணன் பாலா 
 27.08.2010 /அதிகாலை 01:45

1994 கல்கி தீபாவளி மலரில் பிரசுரம் ஆன கவிதை இது.

Tuesday, August 24, 2010

கவிதை இது, கேள்!

அம்மா கவிதாயினி,

வணக்கம்.
உங்கள் தமிழோசை ( thamizoosai) கவிதைப் பக்கங்களைப் பார்த்தேன். சிலவற்றைப் படிக்கவும் செய்தேன்.ஒரு நல்ல கவிதை உணர்வு உங்களுக்குள்ளேயிருந்து வெளிப்பட்டிருப்பது சிறப்பாகத்தான் உள்ளது. வாழ்த்துக்கள்!

ஆனால்,வயசுக் கோளாறு காரணமாகவும் அனுபவமின்மை காராணமாகவும் உங்கள் கவிதை உணர்வுகள், நமது பண்பாட்டையும் பாரம்பரியக் கட்டுபாட்டையும் காயலான் கடைக்கு அனுப்பி விட்டு வெறும் தகர டப்பாவைக் குலுக்கி கொண்டு பாடுவது போல் இருக்கின்றன. அதைப் பற்றி இங்கு எழுத வேண்டியதன் அவசியம் உள்ளது.

உலகத்தில் எல்லா ஜீவர்களும் தனித் தனியானவைகள்தாம். பிரபஞ்சச் சுழலில் அவை, சிருஷ்டியின் மாயா விநோதத்தில் ஈர்க்கப்பட்டு ஒரு அணுவாய் ஓரிடத்தில் அண்டுகிறது. ஐந்து பூதங்களாகிய வெம்மை,குளுமை,காற்று,ஆகாயம் (விசும்பு) நீர்மை என்ற கலவைகளின் இன்னொரு மாயா ஜாலத்தில் கருவின் உருவாய் மாறி, குறிப்பிட்ட காலத்துக்குள் அதன் ஜட மூலமாகிய கருவறையை விட்டு வெளியே தள்ளப்படுகிறது.இது, கண்ணுக்குத் தெரியாத பூச்சி முதல் கண்ணுக்குக் கவர்ச்சியான மனித ஜந்துக்கள் வரைக்குமான பிறவி விஷயம்.

ஜந்துக்களாகிய நமக்கு ஏற்படுகின்ற பசி,காமம்,மயக்கம்,துக்கம், தூக்கம், கோபம்,தனிமை, சந்தோசம்,ஆசை, திமிர்,ஆணவம்,அச்சம்,வெறுப்பு யாவும் நீரின் மேல் தோன்றி மறையும் குமிழிகள் போல்தான்.

’நாம் ஒரு மலர்ச் சோலைக்குள் இருக்கும் போது நறுமணத்தால் சூழப்பட்டு அகமும் முகமும் மலர்ந்திருப்போம்; சாக்கடை சூழ்ந்த பகுதியில் இருக்கும் போதோ, முகம் சுழித்து மனம் சலித்துத்தான் இருப்போம்’ என்பது போல்தான் இது; இயற்கையின் நியதி.

எனவே, நாம் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்றால்,நமது சூழ்நிலை நன்றாக, அதில் நம் மனம் ஒன்றி இருக்கிறது என்று பொருள். அப்போது கவிதை எழுதும் சிந்தனைத் திறன் உள்ளோர் அச் சூழலுக்கு ஏற்பத்தான் எழுதுகிறார்கள்.அப்போது அவர்கள் துக்கங்களை வெளிப்படுத்தி எழுதுவதில்லை.

பெரும்பாலும் இழவு வீட்டில் இருந்து கொண்டு மோகன ராகம் யாராவது பாடுவதுண்டா? அப்படிப் பாடுவோர் பைத்தியக்காரனின் மனோநிலையை அடைந்தவர்களே தவிர வேறென்னவாக இருக்க முடியும்?

'உள்ளத்தில் உள்ளது கவிதை; உணர்ச்சியில் வருவது கவிதை' என்பான் பாரதி.

உங்கள் அற்புதமான சிந்தனைகளை, காதலென்னும் காமத்தில் உழல்வோரின் அரிப்புக்களை நன்றாக சொரிந்து விடும் சரக்காகவும் உங்களுடைய முதற்காதலின் (முதல் காதல்; முற்றிலும் கோணல்!) சருக்குதலைச் சொல்லி, ஒருதலை முகாரி பாடும் அவல நிலையை ஆராதிக்கும் போக்கை மாற்றி, மனித நேயத்தின் மாண்பைப் பற்றி எழுதத் தலைப் படுங்கள்.

உங்களுடைய உணர்வுகளைப் படித்ததும் ஏனோ, என்னுள் மறைந்து போயிருக்கும் வாழ்க்கை நினைவுகள் சுழல்கின்றன. பாவம், உங்களுக்கு பக்குவம் சொல்ல ஒருவரும் இல்லை போலும்: அல்லது பக்குவம் உடையோர் உங்கள் பக்கத்தில் இருக்கவில்லையோ.?

எப்பொழுது, உங்கள் உணர்சிகளை கவிதையாக்கி அவற்றை விதை போல் இந்தச் சமுதாயத்தில் விதைக்கத் தலைப் பட்டீர்களோ, அப்பொழுதே நீங்கள் ஓர் நல்ல விவசாயத்தை செய்ய முனையும் விவசாயி என்றாகி விட்டீர்கள்!.

நீங்கள் பயிரிடுவதற்காக இதோ, என்னால் முடிந்த உரச் சத்தை இலவசமாகத் தருகின்றேன்:

ஏனென்றால், அநாதையான, எனக்கென்று சேமித்து வைக்கும் தேவை எதுவும் இல்லையால், ’தங்களைப் போன்ற அறிவு ஜீவிகளுக்கு எனது கருத்துக்கள்,ஒருவேளை, உபயோகமாய் இருக்கக் கூடுமே’ என்னுமோர் எண்ணம்தான் எனது தானத்துக்குக் காரணம்.

இதை,‘கிண்டலுக்காக எழுகின்றேன்’ என்று மட்டும் எண்ணி விடாதீர்கள்.

இதைச் சொல்லக் காரணம், உங்களைப் போன்றே ஒரு பெண் எனக்கு இருந்தாள்; அவள் மீது உயிரை வைத்திருந்தேன்;ஆனால், ‘அவள் என்ன நினைத்துக் கொண்டு வளர்ந்தாள்’ என்பது தெரியாமலேயே அவளுக்குள் இருக்கும் உணர்வுகளைப் பற்றி நான் நினைத்துப் பார்க்கின்ற வாய்ப்பின்றி, எனது நேர்மை,பண்பு, இரக்கம்,சிந்தனை இவற்றின் வார்ப்பாகவே இருக்க வேண்டும்’ என்ற’ ஒரு நல்ல தகப்பனின்’ சுய நலச் சிந்தனையோடு, கட்டுப் பாட்டோடு வளர்க்கவே விரும்பி, எனது வாழ்க்கையை மேற்கொண்டதன் விளைவு: அவள் படித்து முடித்ததும் திடீர் என்று சிறகுகள் முளைத்தவளாய் என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாள்; விண்ணில் பறவையாய்ப் பறந்து மறைந்து விட்டாள்.

நமக்கு செல்லமான பறவைகளை நாம் தங்கக் கூட்டில் வைத்து வளர்த்தாலும்,ஒரு நாள் அதற்கு கூண்டை விட்டு வெளியில் இருக்கின்ற வாய்ப்புக் கிடைத்தால்,எதிர்பாராமல் அது சிறகு விரித்துப் பறந்து விடும்; ஆனால்,'அதை உயிர் போல் பாவித்து வளர்த்த அதன் எஜமான் ‘என்ன நினைப்பான்:எப்படித் துடிப்பான்' என்றெல்லாம் அது கவலைப் பட்டால்,பிறகு அதற்கேது சுதந்திரம்?

அப்படிப்பட்ட நிலையை அனுபவத்தில் பெற்றவன் என்ற நிலையில் மட்டுமின்றி,உங்களைப் போல் ‘ஒருதலைக் காதலில் உணர்ச்சி வசப்பட்டு, எழுதுகின்ற விஷயங்களை என்னைப் போன்ற தந்தைமார்களும் படிப்பார்கள்; இந்த விஷயங்களைப் படித்துவிட்டு எப்படித் துடிப்பார்கள்’ என்பதாலும் ஏதோ, வேதம், மரணம்’ என்றெல்லாம் நீங்கள் குறிப்பிட்டு ‘ஓர் அறிவு ஜீவியாய்’ நிலைப்படுத்திக் கொண்டிருப்பதாலும், 'எனக்கு ஒரு மகள் இருந்தாள்' என்று சொன்னேன் இல்லையா, ‘அவளாக’ உங்களை நினைத்துக் கொண்டு (அவலை நினைத்து உரலை இடிக்கும் கதையாகி விடக் கூடாது அல்லவா?) இதோ,நானும் கொஞ்சம் கதைக்கின்றேன்.

மறுபடியும் மேலே சென்று எனது கருத்தை மீண்டும் ஒருமுறை படித்து விட்டு,கீழே விழுந்து விடாமல் பிறகு,இந்த அநாதை எழுதும் உண்மைக் கவிதை உணர்சிகளை நீங்கள் படித்தால், உங்களுக்குக் கவிதையின் தன்மை அழகாகப் புரியும்;இன்னும் சிறப்பாகக் கவிதையை விதைப்பீர்கள்.

‘நாம் எழுதும் கவிதைகள் சமுதாயத்தின் மேன்மையைப் புகுத்தும்’ வகையிலும், ‘ நூலோர் உங்களை மேலோர்’ எனப் புகழும்படியும் ‘நாளொரு வண்ணம்; பொழுதொரு எண்ணம்; பொத்துக் கொண்டு கொட்டும் அருவி’ எனப் போற்றும் அவகையிலும் இருக்க வேண்டும் என விழைந்தே இதனை எழுதலுற்றேன்.

இதை நீங்கள் புரிந்து கொள்வீர்களானால் நான் உங்களுக்குச் சொல்லும் ’பராக்’ இதுதான்:

‘அம்மா, கவிதாயினி, 'கவி தா, இனி, சத்தாக நல்ல வித்தாக’

வாழ்க!
-கிருஷ்ணன் பாலா

கவிதை இது, கேள்!

விழலுக்கு நீர்பாய்ச்சி மாய வேண்டாம்;வீண்
விஷயத்தில் மனம் செலுத்தி வீழ வேண்டாம்;
மழலையென வாழ்ந்த நிலை அறிந்துஉங்கள்
‘மடமையது யாது’எனத் தெளிதல் நன்று!

சிறுகுழந்தை கேட்பதெல்லாம் வாங்கித் தரும்
செல்வநிலை இல்லாத தந்தையவன்,
உறுதியுடன் வாழ்ந்து என்றும் வளைந்திடாமல்;
‘ஒழுக்கமுடன் வாழ்வதற்கே’ பாதை சொன்னான்!

இன்று 'மிக நன்று' எனக் கவிதை பாடி’
‘இளமை உயிர்ச் சத்தைஎலாம் விரயமாகிக்
கொன்று வரும் குழந்தை’உனை, ஒன்று கேட்பேன்:
'குவலயத்தில் காதல்தான் பொருளா என்ன?'

'நல்ல பொருள் இன்னதென' அனுபவத்தால்
நல்லறிவு உமக்கெல்லாம் வளர்வதற்கே’
சொல்லிவந்த அறிவுரையைத் தண்டனைபோல்
சூடிக்கொண்டு வளர்ந்ததற்கு யார் பொறுப்பு?

தினந்தோறும் விளையாடி, குழந்தையுடன்
தெருவெல்லாம் கைப்பிடித்துக் கூட்டிச்சென்று,
'சினிமாவா, தெருக்கூத்தா,போவோம்' என்று
சிணுங்காமல் வளர்த்திருந்தால் நல்ல தந்தை!


பணம் இருந்தால் பாரினிலே வசதி எல்லாம்
பம்பரமாய்ச் சுழன்றிருக்கும்; பண்பு மட்டும்
பிணமாகிப் பயண மெல்லாம்; பெருமையின்றிப்
பிணவாழ்வு ‘வாழ்வதுவா வாழ்க்கை’ என்பீர்?

அந்தப் பணம் ‘பாலை வனப் பயணத்துக்கு;
அருந் தாகம் தணிப்பதற்கு மட்டும்’ என்றே
தந்தென்னைக் குருநாதன் கருணை செய்தான்;
தருமமாய் அதைக்கூடச் செய்து விட்டேன்!

படிப்பதற்கும் பசியின்றி வளர்வதற்கும்
‘பாலாவின் பிள்ளை ‘எனச் சொல்வதற்கும்
நொடிப்பொழுதும் நோயின்றி இருப்பதற்கும்
நுண்ணறிவும் பெறத்தானே வாழ்க்கை செய்தேன்!

கூலி செய்து என் தந்தை படிக்க வைத்தான்:
குறையின்றி உங்களை நான் படிக்க வைத்தேன்?
கேலி செய்து என் மனத்தைக் குழியில் தள்ளி
'கேவலம்நான்'என்பதுபோல் வாழ்கின் றீர்கள்!

கவிதை என்றால் என்னவென்று தெரிந்து கொள்க:
‘கடவுளையும் துச்ச’மெனக் காணும் நேர்மை;
புவியிதனில் புரிந்து கொள்ள யாரும் இன்றிப்
போனாலும் சிந்தனைகள் சிங்கம் ஆகும்!

நேர்மை கொண்டு வாழ்பவனே கவிதை செய்வான்;
நெஞ்சகத்தில் வஞ்சமில்லான் கவிதை செய்தான்:
யார்துரோகம் செய்தாலும் கவிதை செய்து
யஜமானன் போல்வாழ்ந்து நிமிர்ந்து நிற்பான்!

பாட்டெழுதிப் பிழைக்காமல் அவன்பாட்டுக்குப்
பயணத்தைத் தொடர்வதிலே மகிழ்ந்திருப்பான்;
வாட்டமெலாம் அவனுக்குள் இருந்தபோதும்;
வாடாத கவி நெஞ்சால் வாழ்வான், அவனே!

'போகும் இடம் இது' என்று அவனுக்கில்லை;
‘போகின்ற இடமெல்லாம்’ அவனுக் கெல்லை;
சாகும் வரை ‘சாகாத நேர்மை ஒன்றே,
சார்ந்திருக்கும் சொந்த’மென வாழ்வான், காண்க!

அன்று, ‘அவன் உமக்காகப் பட்ட பாடு’
அத்தனையும் என்னவென்று பார்த்திடாமல்;
‘நன்று எது?’என்று சொலும்அறிவு இன்றி;
‘நாடுவது கவிதை’ எனில், ஏற்க லாமோ?

அழுகைதனைச் சொல்லுவது கவிதையன்று;
அடுத்தவரை அழவைக்கும் கவிதை நன்று;
‘எழுதுவது எல்லாமே எழுத்தா, என்ன? ;
எதிரிகளும் படித்தால்தான் எழுத்து’ ஆகும்!

எழுதுகின்றீர்;’என் மகள் போல்’ காணுகின்றேன்!
என் உணர்வை அவ்வாறே கூறுகின்றேன்;
‘பழுதறவே எழுது தற்கு’ வாழ்த்து கின்றேன்;
பரமகுரு நாதன்அவன் துணை யிருக்க!

-கிருஷ்ணன் பாலா
18.7.2010 / 16:00 Hrs.

Monday, August 23, 2010

நண்பர்கள் தேவை!

நாக்கும் வாக்கும் ஒன்றெனக் காட்டும்
நண்பர்கள் நமக்கு என்றும்தேவை;
தாக்கும் நோக்கம் தவிர்த்திடல் வேண்டும்;
தமிழை இறையாய் எடைகொளல் வேண்டும்!


அன்னை மொழியின் அணிகலன் என்றே
அவரவர் எழுத்தைக் காணிக்கை செய்து
நன்றெனத்தேறும் நட்பினை நாட்டும்
நண்பர்கள் இதனை,உடனே அறிக!


நட்புடன்,
கிருஷ்ணன் பாலா


23.08.2010 / அதிகாலை:1.05

Thursday, August 19, 2010

காதல் அல்ல இது,காமம்!

இன்று வலைத் தளங்களில் பெரும்பாலான இளைஞர்களும் இளங் கன்னியரும்
தங்கள் காதல் உணர்வுகளைக் கவிதை என்ற பெயரில் கண்ணறாவிக் கருத்துக்களையே பதிவு செய்து வருகிறார்கள். 


நன்கு எழுதத் தெரிந்தும் சிலர், விளம்பரத்துக்காக அதை ‘ஆஹா …அற்புதம்..புதிய பாணி; புதிய சிந்தனை’என்று போற்றிப் புகழ்ந்து எழுதிவிடுகிறர்கள்.


குறிப்பாக,தாங்கள் ஏதோ,அம்பிகாபதி – அமராவதிகள் போல் எண்ணிக்கொண்டு, கவிதை கவிதையாய்ப் புலம்பித் தள்ளி, தாஜ் மஹால்களையே கட்டிவிடுகிறார்கள். விளைவு,பிண நாற்றம்…..கொஞ்ச நாட்கள் கழித்துப் பார்த்தால் தெரியும்,இன்றைய அமாரவதிகள் நாளை வேறொரு அம்பிகாபதியுடன் அல்லது இன்றைய அம்பிகாபதிகள் இன்னொரு அமராவதியுடன் ’ஜம்’மென்று ‘செட்டில்’ ஆகி இருப்பார்கள். யாராவது தெரிந்து தோழிகள் அல்லது தோழர்கள் இந்த முன்னாள் காதலைப் பற்றிக் கண்ணடித்துக் கேட்டால்,’இவர்கள்,’அது ஒரு கனாக் காலம்’என்று இன்னொரு கவிதை பாடுவார்கள்…..இதைவிடக் கண்ணறாவிக் கொடுமை என்னவென்றால், தன் பழைய காதல் கவிதையை ’இவன்’ அவளுக்குப் பாடிக் காட்டுவதும்,பதிலுக்கு ’இவள்’ அவனுக்குத் தன் பாட்டுத் திறத்தைக் காட்டுவதும் உண்டு.,


இதைப் பற்றி நாம் முகநூலில் (FACEBOOK)  நான் பதிவு செய்திருந்த கருத்தை 
இங்கே தருவது நம் வாசகர்களுக்கு ஏற்புடையதாயிருக்கு என நம்புகிறேன். 




காதல் அல்ல,இது காமம்!
---------------------------------------------


காதலில் ஏற்படும் தோல்விகளில்
புலம்புவதைத் தவிருங்கள்;


நண்பர்களே..
காதல் மட்டுமா மனித வாழ்க்கை?


காதல் கொண்ட மனது,
அதன் வசப் பட்டிருக்கும்போது'
நிற்கின்ற இடம் சேறு'
என்று கூடப் பார்ப்பதில்லை
.
காதலியையோ,
காதலனையோ
ஒருவர்
விட்டுப் பிரியும்போதுதான்,
'தான் சேற்றில் நிற்கிறோமே'
என்று புலம்பச் சொல்கிறது
மனம்!


நண்பர்களே,
காதல் என்பது எல்லோருக்கும் வருவதுதான்.
ஆனால்,
வருவதெல்லாம் காதல் அல்ல;
காமம்' என்கிற கொடுமை!
அது-


வரும்போதே கண்களைக் குருடாக்கி விடுகிறது!
பிறகு,
எங்கே நாம் பார்த்துப் பார்த்துக் காதலிக்கிறதாம்?


விழித்துக் கொண்டு காதலிக்கிறவர்களே
புத்திசாலிகள்;
அவர்கள்-
காமத்தைத் தடுத்து விடுகிறார்கள்;
காதலித்துவிட்டுப் பின் புலம்புகிறவர்களோ
புத்திகாலிகள்;
அவர்கள்-
காமத்தில் தடுக்கி விழுகிறார்கள்!


உண்மையான காதலின் தோல்வி,
நல்ல கவிதைகளாக மாறும்;


காமத்தினால் ஏற்படும் சறுக்குதலோ,
‘கவிதை' என்றபெயரில் நாறும்.


தயவு செய்து-


உங்கள் வலைத் தளங்களில்
காதலைச் சொல்லுவதாகக்
கற்பனை செய்து கொண்டு
காமத்தின் துர்நாற்றத்தைப் பரப்பாதீர்கள்!


ஆகவே,
நண்பர்களே.....!
காதலில் ஏற்படும் தோல்விகளில்
புலம்புவதைத் தவிருங்கள்!


காதல் மட்டுமா மனித வாழ்க்கை?


நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
28.7.2010

Wednesday, August 18, 2010

சேர வாரும் செகத்தீரே!

மதிப்பிற்குரிய நண்பர்களே!


வணக்கம். 
இந்த ‘உலகத் தமிழர் மையம்’ என்ற வலைத் தளத்தில்,
எனது நண்பராய் உள்ளே புகுந்துள்ளமைக்கு நன்றி!
மிகுந்த மகிழ்வுடன் வரவேற்கின்றேன்.


அவ்வப்பொழுது நாம்,
நமது சிந்தனைகளை ஒருவருக்கொருவர்,
பகிர்ந்து கொள்வோம்;புரிந்து கொள்வோம்.!


இந்த-
'உலகத் தமிழர் மையம்' என்ற
வலைத் தளமானது-


ஒரு மின்னஞ்சல் இதழுக்கு
நிகரான விஷயங்களை, விவாதங்களைப் ...
பலதரப்பட்ட பார்வைகளோடு தரவும்,
அவற்றை-
பன்னாட்டுத் தமிழ் ஆர்வலர்களுடன்
பகிர்ந்து கொள்ளவும்
ஏற்ற் வகையில்
படிப்புக்களைத் தரும்;
பகிர்ந்து கொள்ளும்.


'பல்வேறு பத்திரிக்கைகளில் பணியாற்றியவன்'
என்ற தகுதியிலும்
ஏராளமான பத்திரிகை நண்பர்கள்,படைப்பாளர்கள்,
கலைஞர்கள், தொழில்துறையாளர்கள்,
சமூகச் சிந்தனையாளர்கள், சேவையாளர்கள்,
வெளிநாட்டு நண்பர்கள்,
அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள்,
முன்பின் அறிமுகமில்லாப் பயணிகள்....


என்று-


எனக்குக் கிடைத்திருக்கும் நட்பும் பழக்கமும்
அனுபவங்களும்
எனது எழுத்துக்களுக்கு ஆக்கமும் தேக்கமும்
வலுவான நோக்கமும் ஊக்கமும் தருபவை.....


படிக்கின்றவர்களின்-
நெஞ்சிலும் நினைவிலும்
பதிகின்றவாறு இருக்கும்;பயன் உள்ளவாறும் தழைக்கும்


என்பதற்கு நிச்சயம் உத்தரவாதம் உண்டு.


இந்த வலைத் தளம்-


பல்வேறு நாடுகளிலும் பரவி வாழ்கின்ற நம்தமிழருக்கு,
அவர்களின்-
நெஞ்சை நிரப்பி,நினைவுகளைப் பசுமையாக்கி
நேசத்தை வளர்க்கும்.


கம்பன்,வள்ளுவன்,கவி இளங்கோ, பாரதி,
கண்ணதாசன், அவ்வை,பட்டினத்தார்,திருமூலர் மற்றும்
தாயுமானவர்,வள்ளல் பெருமான்.......


முதலான சான்றோர்களின்-


சிந்தனைச் சாரல்கள்,இங்கே விழும்; அதில்
நனைவோரின் மனதில் செம்மார்ந்த அறிவின் முளைப்பாரி எழும்;


நம்முன்னோரான இப் பெரும் ஞானிகளின்
ஆன்மீகத் தத்துவ முத்துக்கள்
இத்தளம் முழுமையும் பரவிக் கிடக்கும்.


'அறியாமை இருள்' நீங்கி,
எல்லோர்மனமும் புத்தொளி பரவி
மகிழும்படி-
விவேகானந்தர்,ஸ்ரீ ராமகிருஷ்ணர், பரமஹம்ச யோகானந்தர்,
இயேசு கிறிஸ்து,நபிகள் நாயகம்,புத்தர்,மகாவீரர்
மற்றும் நம்-
பரம குருநாதர்கள் முதலான மகாபுருஷர்கள்
அவ்வப்போது நினைவில் தோன்றி
நம்மை நல்வழிப் படுததுவார்கள்.


இந்த வலைத் தளத்தின் மூலம்-


அவர்களுடைய தெய்வீக,ஞானச் சிந்தனைகள்
இங்கே-
புண்பட்டுப் புரையோடிப் போன உள்ளங்களுக்கு,
நல் மருந்தும் சொல்விருந்துமாக
நயம் பயக்கும்:செறிவூட்டும்.


'நம்மை-


வருத்தப்படுத்தும் நிலைமையை
வருத்தப் படுத்தும் விதமாக
செழுந்தமிழ்ச் சிந்தனைக் களமாய்....


இத் தளத்தை உருவாக்க
உறுதி பூண்டுள்ளேன்.


இதில்-


நீங்களும் பங்கு கொண்டு,
அறிவார்ந்த நண்பராய் இணைந்து,
எனது முயற்சிகளுக்கு உரமூட்டலாமே!


இதில் நீங்கள் உங்கள் கருத்துக்களை எழுதலாம்;விமர்சிக்கலாம்!


என்ன,நண்பரே...!
சம்மதம்தானே?
இருகரம் கூப்பி வரவேற்கிறேன்:


அடையா நெடுங்கதவாய்
இந்த 'உலகத் தமிழர் மையம்' என்ற 'பகிர்வலைத் தளம்'.


அதில்-
எந்த நேரமும் சிந்தனை விருந்து பரிமாறப்படும்.
நீங்கள் அறிவிற்கும் அன்பிற்கும் உரிய என் விருந்தினர்.
எப்போதும் நுழையலாம் இங்கே.....


சேர வாரும் செகத்தீரே!


நட்புடன்,
கிருஷ்ணன் பாலா

கைபேசி (Mobile):94440 69234


அலை பேசி: (00 91 ) 94440 69234
மின்னஞ்சல்: krishnanbalaa@gmail.com
http://ulagathamizharmaiyam.blogspot.com  (உலகத் தமிழர் மையம் -வலைத் தளம்)
மற்றும்
http://krishnanbalaa.blogspot.com (கிருஷ்ணன்பாலா-கவிதைத் தளம்)

வருக,எந்தன் முகநூலில்!

நண்பரே 'முக நூல்' முகவரி யாளரே!
நமக்கு முக நூல் "Facebook " என்பது:
அண்மையில் உங்கள்,அக நூல், பார்த்தேன்;
அகநூல்'என்றால் 'விவரக் குறிப்பு"


உங்களுக்கிந்த அழைப்பிதழ்,ஏற்பீர்!
ஒருவருக்கொருவர் உணர்ந்து கொள்வோம்;
எங்கிருந்தாலும் நட்பில் தளைப்போம்:
இணையதளத்தில் எண்ணத்தை உரைப்போம்!


முன்பின் நமக்கு அறிமுகம் எதற்கு?
முழுமை பெற்ற மனிதர்கள் என்றால்;
அன்பின் அளவு ஆழம் செறிந்தது:
அதில் நம் பயணம் கடல்போல் விரிந்தது!


மனிதர்கள் நாம் இதில் முத்துக் குளிப்போம்;
மகிழ்வுக்கும் நெகிழ்வுக்கும் உயிர் கொடுப்போம்:
இனி யொரு விதியை எழுதிடச் செய்வோம்:
எந்த நாளும் அதை நாம் காப்போம்!








என்னைப்பற்றிக் கொஞ்சம் உமக்கு
எழுதிச் சொல் கின்றேன்; இது
தன்னைப் பற்றிய தற் பெருமைதான்;
தாங்கிக் கொள் ளுங்கள்!


வியக்க வைக்கும் வார்த்தைகளாலே
வேள்விகள் செய்கின்றேன்;பிறர்
மயக்கம் போக்கி மதி நலம் கூட்டி
மனங்களை வெல்கின்றேன்!


தயக்கம் இன்றி எழுதுக்கள் மூலம்
தமிழைத் தருகின்றேன் ;நலம்
பயக்கும் நட்பில் என்றும் எந்தன்
பணியைச் செய் கின்றேன்!


புதிதாய் நல்ல எழுத்தைக் காணப்
புகுவீர் என் முக நூல்; அதில்
பதமாய்நல்ல படைப்புக்கள் கண்டு
பாராட் டுரைப் பீரே!


நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
7.8.2010 / 07:30 pm

அடடா,அந்த நிலை...?

சிந்தனை லயத்தில் சிக்கிய நிலையில்
சிலிர்த் தெழுகின்றது என்மனது:
எந்த நிலையினில் இருந்தது என்பதை
எண்ணிப் பார்த்ததைச் சொல்கின்றேன்:

புகைப்படம் போல முகப்படம் ஆகிப்
புதிதாய்ப் பதிக்கும் கவிதை;நல்ல
தொகுப்பெனத் தோன்றும் படித்துப் பாரும்;
தூண்டும் உங்களைத் தாண்டும்!

எழுத நினைத்தேன்;எழுதுகின்றேன்:
எழுதும் நிலையைத் தழுவுகின்றேன்;
தழுவும் நிலையில் நானிருக்கும்
தனிநிலை உணர்ந்து எழுதுகின்றேன்!

எழுதுதல் எனக்கு மிக இயல்பு:
எதையும் எழுதுதல் அதில் எளிது!
பழுதில்லாமல் வார்த்தைகளைப்
படைக்கும் ஆற்றல் தினம் புதிது!




பேனா, திறந்தால் பெருங்கடலின்
பேரலை போல்எழும் சிந்தனைகள்;
ஆனால் அவற்றை ஒரு நொடியில்
அடக்கிடத் துடிக்கும் கற்பனைகள்...

கண்ணை மூடிக் கண் திறந்தால்
கவிதைச் சந்தம் பல நூறு:
விண்ணில் இருந்து விழுகின்றன;
விரைந்து என்னுள் பலவாறு!

எதுகை,மோனை என்பதெல்லாம்
என்முன் தவமாய்த் தவமிருக்க
எதை நான் எடுத்துக் கையாள?
எனக்குள் பெரிய போராட்டம்!

விதையில்லாமல் முளைக்கின்றது;
வித்தில்லாமல் விளைகின்றது;
வதையில்லாமல் வதைக்கின்றது;
வரவேற்பின்றி நுழைகின்றது!'

சாதாரணமாய்க் கடிதம்' எனச்
சற்றே எழுத நினைத்தாலும்
தோதாய் எதுகை,மோனைகளைத்
துரத்தித் துரத்தித் தருகின்றது!

உரைநடை வேகம் எங்கெங்கோ
உயரப் பறந்து கவி வானில்
வரைமுறை இன்றி உவமைகளை
வாரிக் கொண்டு பொழிகின்றது!

இயைபுத் தொடருள் என் கையோ
எனைக் கேட்காமல் நுழைகின்றது;
சுய மரியாதை என்பதெல்லாம்
சூக்கும அறிவாய் விரிகின்றது!

எழுத முனைந்ததும் இவ்வுலகம்
ஏனோ என்முன் மறைகின்றது;
முழுமனம் எங்கோ செல்கின்றது:
மூடருக் கெங்கிது புரிகின்றது?

எழுதும் போதொரு ராஜ சபை
என்னுள் கூடி,என் எழுத்தைத்
தொழுது போற்றி வாழ்த்துவதை
தூர நின்றே ரசிக்கின்றேன்!

அடடா,இதுதான்: கவிதை நிலை;
அதற்குள் புகுவோர் அடையும்நிலை;
எடடா,ஏடு;எடுத் தெழுது!
என்னை ஜெயிப்பார் எவர் உண்டு?

-நட்புடன்,
கிருஷ்ணன்பாலா 
10.08.2010

தமிழா,தமிழா...!

அன்பிற்குரிய நண்பர்களே;
அறிவிற்சிறந்த தமிழர்களே!
ஒன்று உரைத்திட விழைகின்றேன்;
உண்மையைப் பகிர்ந்திட வாரீரே!


அன்றைய தமிழர் வாழ்வுச் சிறப்பினை,
அடுக்கடுக்காகச் சிந்தித் தால்,
இன்றைய நிலையில் நமக்குள் எழுவது,
இதயம் வெடிக்கும் பெருமூச்சே!


’தமிழர்நாம்' எனும் தனிப் பெருங் குணங்களில்
தரணியில் நிமிர்ந்து நின்றிருந்தோம்;
அமிழ்தினும் இனிய தமிழ் மொழி கொண்டு'
அரிமா' நாங்கள் என்றிருந்தோம்;


எல்லை விரித்து இமயம் வரைக்கும்
இணையறு வீரம் படைத் திருந்தோம்
இல்லை'என்பதை இல்லா தொழித்து
எல்லா வளமும் செழித்திருந்தோம்!


மானுட தர்மம் நிலைத்திடும் வகையில்
மண்ணில் ஆட்சியைப் பெற்றிருந்தோம்;
வான்மழை பொய்யா திருந்திடும் வண்ணம்,
வழுவா அறநெறி கற்றிருந்தோம்!


ஆழ்கடல் மூழ்கி முத்துக் குளித்து
அன்னியர் நத்திட வாழ்ந்திருந்தோம்:
ஏழ்கடல் யாவிலும் கப்பல் செலுத்தி
எங்கும் தமிழ்மணம் சூழ்ந்திருந்தோம்;


திரைகடல் ஓடியும் திரவியம் தேடி
தேசங்கள் எல்லாம் தெரிந்திருந்தோம்;
வருவதை உரைக்கும் வல்லமை திகழும்
வான சாத்திரம் அறிந்திருந்தோம்!


யாழும் முழவும் சூழும் இசையில்
யாவரும் மயங்கும் கலை படைத்தோம்;
ஊழும் ஒதுங்கும் ஆலயம் செய்து
உன்னத நுட்பச் சிலை வடித்தோம்!


"என்று பிறந்தது?' என் றுணராத
இலக் கண மரபு கொண்டிருந்தோம்;
தொன்று புகழ்நிறை தொல்காப் பியத்தால்
தூயதமிழ் நெறி கண்டிருந்தோம்!


எந்நாட்டவர்க்கும் எடுத்துரைக்கின்ற
இலக்கிய ஞானம் தெளிந்திருந்தோம்;
சன்மார்க்கத்தின் தனி ஒளி பரவிட
சமதரு மத்தில் கனிந் திருந்தோம்!


அன்று நிறைந்ததனைத்திலும் வலிமை
அடுக்கடுக்காக இழந்து விட்டோம்;
இன்று பழமையை எண்ணும் பெருமை
இருப்பதில் மட்டும் உயர்ந்து விட்டோம்!


இன்று நமக்கிது நல்வழியா?
இனி,நாம் தொடர்வதும் இதைத்தானா?
நன்று ,நற்றமிழ் நண்பர்களே...!
நாளை,நம்செயல் விதி வழியா?

என்று தொலைந்திடும்? என்று கலைந்திடும்?
எங்களின் இருட்டு வெறும் கனவு?
என்று புலர்ந்திடும்? என்று மலர்ந்திடும்?
எங்களின் உண்மைப் புத்துணர்வு?




--------கிருஷ்ணன் பாலா--------



(’தமிழர் பண்பாடு’ என்ற இதழில் 1984-ல் பிரசுரம் பெற்றது)

எரிவது,நெஞ்சில் நெருப்பு!

கல்லும் மண்ணும் தோன்றா முனமே,
கனிந்தது நம்மொழி;உண்மை!
அல்லும் பகலும் இதையே சொல்லி
அளப்பதிலே,என்ன நன்மை?


முன்னம் யாவும் முன்னிலை வகிக்க,
மூத்த குடிஎனத் திகழ்ந்தோம்;
பின்னர்அவற்றைப் பெருமை பேசியே
பேணும் சாதனை மறந்தோம்!


உள்ளுணர்வோடு உலகத் தமிழரின்
ஒற்றுமை வேண்டித் துடிப்போம்;
உள்ளூர்த் தமிழர்மட்டும் இங்கே
ஒருவருக்கொருவர் கெடுப்போம்!


'செய்யும் தொழிலே தெய்வம்' என்றொரு
சிந்தனை தனையும் அறி வோம்;
உய்யும் வழியை மறந்தவர் ஆகி,
உருப் படாமலேதிரி வோம்!


'எப்படி இருந்தோம்? எப்படி வாழ்ந்தோம்?'
என்கிற பெருமையை இன்று,
செப்படி வித்தை அரசியற் குழியில்
சேர்த்து விட்டோமே,கொன்று!


திறமையும் தெளிவும் கொண்டோர் நமது
தேசத்தை விட்டே ஓடுகின்றார்;
அறிவும் புகழும் செல்வமும்தேடி
அந்நிய நாட்டில் வாடுகின்றார்!


கூராய் எதையும் ஆரா யாமல்
கூட்டம் கூட்டமாய்ப் போனோம்;
யாரோ ஒருவன் பின்னால் செல்லும்
ஆட்டுமந்தை நாம் ஆனோம்!


அரியா சனங்களின் கீழே நம்மை
அடிமைகள் ஆக்கிக் கொண்டோம்:;
தெரியா சனங்கள் நாம்'என, நமக்கே;
'திலகம்' தீட்டிடு கின்றோம்!


பொய்யும் புரட்டும் புண்மொழிப் பேச்சும்
பூத்திடும் மேடைகள் முன்னே;
கையொலி செய்தே மெய்ம் மறப்பதில்நாம்,
கலங் காதிருப்பது, என்னே?


'தலைவனின் பின்னே 'தறுதலை'போலத்
தாழ்ந்துவிட்டோமே, இன்று!
உலகினில் இந்த அவலத்தை மாற்றி,
உயரும் நிலைதான்,என்று?


இன்றைய நிலையை எண்ணிப் பார்த்தால்
எரிவது நெஞ்சில் நெருப்பு;
'என்னது,நமக்கு,இப்படிக் கேடு?'
என்பதுதான் கை இருப்பு!


தமிழா,தமிழா,தலை நிமிர்வாயா?
தவறுகள் களைந் திடுவாயா?
நமைத் தாழ்த்திடும்இக் கொடுமைகள் சாக
நல்லறி வுணர்ந் திடுவாயா?

-கிருஷ்ணன் பாலா-

(இது வாழும் தமிழ் உலகம் மாத இடழில் 1984-ல் பிரசுரம் பெற்றது)

தமிழருக்கு விண்ணப்பம்!

உலகத் தமிழர்களே ஒன்று சேருங்கள்;
ஒன்று சேரும் காலமிதை நன்று தேருங்கள்;
கலகச் சிறுமையெல்லாம் வென்று கூடுங்கள்;
கனிந்தநமது உயர்நெறியில் நின்று வாழுங்கள்!

மனிதநாக ரீகத்துக்கே மூத்த தமிழ்இனம்;
மற்றவர்க்கு அடிமையாக ஆனதித் தினம்;
தனியரசில் ஓங்கியுரிமை காத்த நமதினம்;
தனித்துவத்தை மீண்டும்மண்ணில் கொள்வ தெத்தினம்?

அறிவியலும்,பொறியியலும் கற்றுத் தேறுங்கள்;
அகிலமெல்லாம் சென்றுபொருள் சேர்த்து வாருங்கள்;
திறமையான பேர்களுக்கே தலைமை காணுங்கள்;
தேசம்இதன் பெருமைகாக்க உறுதி பூணுங்கள்!

தமிழர் எங்கு துயர்படினும் தடுக்க ஓடுங்கள்;
'தமிழர்இனம் வாழ்க' எனும்சிந்து பாடுங்கள்!
அமிழ்தினிய தமிழ்மொழியின் சுவையை நாடுங்கள்;
அடுத்த மொழியில் சிறந்த போதும் தமிழைப் பேசுங்கள்!

தெய்வத் தமிழ்க் கவிதைகளைத் திளைத்து அள்ளுங்கள்;
தினம்அவற்றைப் பாடிப்பாடிப் பக்தி கொள்ளுங்கள்!
ஐயமின்றித் திருக்குறளைத் தெளிந்து சொல்லுங்கள்;
ஆத்திச்சூடி அவ்வை சொன்னாள்;அதிலும் நில்லுங்கள்!

கண்ணகியின் காவியத்தைக் கருதிப் போற்றுங்கள்;
கம்பனோடு பாரதியைக் கருத்தில் ஏற்றுங்கள்;
அண்ணல்ராம லிங்கவள்ளல் பாதை சாற்றுங்கள்;
ஆன்மநேய ஒருமைப் பாட்டுச் செயலை ஆற்றுங்கள்!

பெற்றெடுத்த பிள்ளைகட்குத் தமிழை ஊட்டுங்கள்;
பேணுகின்ற முறையில் தமிழ்மரபை நாட்டுங்கள்;
சுற்றியுள்ள அன்னியர்பால் அன்பைக் கூட்டுங்கள்;
'சொந்தம்' மட்டும் இந்தமண்ணில்' என்று நாட்டுங்கள்!

பிறந்த மண்ணை மறந்திடாது என்றும் நினையுங்கள்;
பேசுகின்ற கருத்தில் மொழி உணர்வை நனையுங்கள்!
சிறந்தநேசம் காட்டி வாழும்மண்ணில் உழையுங்கள்;
'செல்வமெல்லாம் தமிழைக் காக்க' என்று விழையுங்கள்!

உலகமெல்லாம் நீங்கள் பரவி, விரிந்து வாழினும்,
'உயிர் உடைமை' என்றுதமிழ் மண்ணை எண்ணுங்கள்;
பலவிதமும் வாழ்க்கை வசதி உம்மைச் சூழினும்,
பாரதத்தின் தென்னிலத்தைப் பார்வை கொள்ளுங்கள்!

'பெற்றநாட்டின் பெருமைஒன்றே பெரிது' என்பதாய்ப்
பேசிப் பேசிக் குழியில் வீழும் பழியில் மீளுங்கள்!
மற்ற நாட்டு மைந்தர்களின் சிறப்பு யாவையும்;
மனம்திறந்து பேசுகின்ற பண்பை ஆளுங்கள்!

'தமிழர்' என்றால் 'தரம் மிகுந்த மக்கள்' என்பதை;
தகுதியோடு நிலைநிறுத்தப் போட்டி போடுங்கள்;
அமைதியான அறிவுமிக்க தமிழர்நாம்' என'
அகிலமெல்லாம் உணர்த்துகின்ற வாழ்வு சூடுங்கள்!

-கிருஷ்ணன் பாலா-

(‘வாழும் தமிழ் உலகம்’என்ற மாத இதழில்1984-ல்பிரசுரமான கவிதை மடல் இது)

இதுவே நாம்!

எழுதத் தெரிந்த நண்பர்கள் யாரும்
எனது பொது உடைமை;பதில்
எழுதத் தெரியாதிருப்பது எல்லாம்
அவரவர் தனி உடைமை!

இங்கே எனது கருத்தில் பதியும்
எண்ணம் எது வெனினும்; ஒரு
தங்கு தயக்கம் இல்லாமல்தான்
தமிழில் எழுது கின்றேன்!

உருப்படியான கருத்துக்களோடு
உங்கள் பதிவிருந்தால்;நான்
விருப்பத்தோடு பதிவுரை செய்யும்
வேட்கை கொள்ளு கின்றேன்!


வெட்டித் தனமாய்  எழுதி இங்கு
வேடிக்கை செய்வதற்கும்;பொய்
நட்டுக் கொண்டு  நரகல் எழுத்தில்
நடவுகள் செய்வதற்கும்  

காமடி,சினிமா,காதல் பித்து,
கவிதை எனும் பெயரில்
யாம் இன்புற்று எழுதுவ தில்லை;
என்னைப் புரிந் திடுவீர்!

ஒருசில விஷயம் உருப்படியாக
உணர்ந்தால் ஏற்றிடுவேன்;
'கரு' இருந்தால் அது எது என்றாலும்
கரங்களை நீட்டிடு வேன்!

அவரவர் எண்ணம் அவரவர் சுமக்க
அதை நாம் வெறுப்பதில்லை;
'தவறென' எமது தமிழை எதிர்த்தால்
தான்நாம் பொறுப்ப தில்லை!

நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
12.08.2010

நெல்லை கண்ணன் நெடும்புகழ் வாழ்க!



முப்பெரும் தமிழை முனைப்புடன் உலகில்
     முழங்கிடும்  அறிஞர் கூட்டத்தில்;
அப்பரும் மாணிக்க வாசகர் மற்றும்
     அவர்போல் பற்பல ஞானியரும்
செப்பிய பொருளைச் சிந்தனை செய்து
     செழித்திட வைக்கும் தமிழ்க் கடலே!
ஒப்பரும் உனது திசை வைத்தெனது
     உளமார் வணக்கம் சொல்கின்றேன்!

நெல்லை என்றால் தாமிரவருணி
     நெடும்புகழ் சேர்ந்த நதியும்
நெல்லையப்பர் காந்திமதியாள்
     நெகிழச் செய்யும் அருளும்
எல்லை என்றே இருந்தது மாறி
     இணைந்தது உனது பெயரும்;
நல்லவன் உனது நாமம் உலகில்
     நாளும் நிலைக்க வாழியவே!

             (வேறு)

கண்ணன் தமிழ் அமுதைக்
   கண்டு கொண்ட நாள் முதலாய்
எண்ணம் முழுதும் இவர்
   எழுந்து நிற் கின்றார்;
அண்ணன் இவரை நாம்
    அணு குவது எப்போது?
திண்ணமுடன் இதை எண்ணித் 
    தினந் தோறும் காத்திருந்தோம்.

காத்திருந்த நாள் இன்று
   கனிந்து வர,உணர்ச்சிகளை
வார்த்தெடுத்து என்றென்றும்
    வாடாத மாலை' எனப்
பூத்தொடுத்துப் போடுகின்றோம்
    பொய்யாத கவி மாலை;
நாத் திறத்தால் நாற்றிசையும்
    நலம் காணும் நாயகர்க்கு.
           
                       (வேறு)

அறிவில்,அன்பில்,ஆளுமை நோக்கில்
     அரசியல் அணுகுமுறையில்,
இறைநெறி போற்றும் இலக்கணத் தமிழில்
     இரண்டறக் கலந்த பண்பில்
உறைவிடமாகத் திகழும் சான்றோன்
     உண்மை:நெல்லை கண்ணன்;
அறவுரை செய்ய வந்தார்,இங்கு;
     அனைவரும் அவர்சொல் கேட்போம்! 
         .




       கிருஷ்ணன் பாலா


                                                                          
                                   .