Wednesday, August 18, 2010

சேர வாரும் செகத்தீரே!

மதிப்பிற்குரிய நண்பர்களே!


வணக்கம். 
இந்த ‘உலகத் தமிழர் மையம்’ என்ற வலைத் தளத்தில்,
எனது நண்பராய் உள்ளே புகுந்துள்ளமைக்கு நன்றி!
மிகுந்த மகிழ்வுடன் வரவேற்கின்றேன்.


அவ்வப்பொழுது நாம்,
நமது சிந்தனைகளை ஒருவருக்கொருவர்,
பகிர்ந்து கொள்வோம்;புரிந்து கொள்வோம்.!


இந்த-
'உலகத் தமிழர் மையம்' என்ற
வலைத் தளமானது-


ஒரு மின்னஞ்சல் இதழுக்கு
நிகரான விஷயங்களை, விவாதங்களைப் ...
பலதரப்பட்ட பார்வைகளோடு தரவும்,
அவற்றை-
பன்னாட்டுத் தமிழ் ஆர்வலர்களுடன்
பகிர்ந்து கொள்ளவும்
ஏற்ற் வகையில்
படிப்புக்களைத் தரும்;
பகிர்ந்து கொள்ளும்.


'பல்வேறு பத்திரிக்கைகளில் பணியாற்றியவன்'
என்ற தகுதியிலும்
ஏராளமான பத்திரிகை நண்பர்கள்,படைப்பாளர்கள்,
கலைஞர்கள், தொழில்துறையாளர்கள்,
சமூகச் சிந்தனையாளர்கள், சேவையாளர்கள்,
வெளிநாட்டு நண்பர்கள்,
அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள்,
முன்பின் அறிமுகமில்லாப் பயணிகள்....


என்று-


எனக்குக் கிடைத்திருக்கும் நட்பும் பழக்கமும்
அனுபவங்களும்
எனது எழுத்துக்களுக்கு ஆக்கமும் தேக்கமும்
வலுவான நோக்கமும் ஊக்கமும் தருபவை.....


படிக்கின்றவர்களின்-
நெஞ்சிலும் நினைவிலும்
பதிகின்றவாறு இருக்கும்;பயன் உள்ளவாறும் தழைக்கும்


என்பதற்கு நிச்சயம் உத்தரவாதம் உண்டு.


இந்த வலைத் தளம்-


பல்வேறு நாடுகளிலும் பரவி வாழ்கின்ற நம்தமிழருக்கு,
அவர்களின்-
நெஞ்சை நிரப்பி,நினைவுகளைப் பசுமையாக்கி
நேசத்தை வளர்க்கும்.


கம்பன்,வள்ளுவன்,கவி இளங்கோ, பாரதி,
கண்ணதாசன், அவ்வை,பட்டினத்தார்,திருமூலர் மற்றும்
தாயுமானவர்,வள்ளல் பெருமான்.......


முதலான சான்றோர்களின்-


சிந்தனைச் சாரல்கள்,இங்கே விழும்; அதில்
நனைவோரின் மனதில் செம்மார்ந்த அறிவின் முளைப்பாரி எழும்;


நம்முன்னோரான இப் பெரும் ஞானிகளின்
ஆன்மீகத் தத்துவ முத்துக்கள்
இத்தளம் முழுமையும் பரவிக் கிடக்கும்.


'அறியாமை இருள்' நீங்கி,
எல்லோர்மனமும் புத்தொளி பரவி
மகிழும்படி-
விவேகானந்தர்,ஸ்ரீ ராமகிருஷ்ணர், பரமஹம்ச யோகானந்தர்,
இயேசு கிறிஸ்து,நபிகள் நாயகம்,புத்தர்,மகாவீரர்
மற்றும் நம்-
பரம குருநாதர்கள் முதலான மகாபுருஷர்கள்
அவ்வப்போது நினைவில் தோன்றி
நம்மை நல்வழிப் படுததுவார்கள்.


இந்த வலைத் தளத்தின் மூலம்-


அவர்களுடைய தெய்வீக,ஞானச் சிந்தனைகள்
இங்கே-
புண்பட்டுப் புரையோடிப் போன உள்ளங்களுக்கு,
நல் மருந்தும் சொல்விருந்துமாக
நயம் பயக்கும்:செறிவூட்டும்.


'நம்மை-


வருத்தப்படுத்தும் நிலைமையை
வருத்தப் படுத்தும் விதமாக
செழுந்தமிழ்ச் சிந்தனைக் களமாய்....


இத் தளத்தை உருவாக்க
உறுதி பூண்டுள்ளேன்.


இதில்-


நீங்களும் பங்கு கொண்டு,
அறிவார்ந்த நண்பராய் இணைந்து,
எனது முயற்சிகளுக்கு உரமூட்டலாமே!


இதில் நீங்கள் உங்கள் கருத்துக்களை எழுதலாம்;விமர்சிக்கலாம்!


என்ன,நண்பரே...!
சம்மதம்தானே?
இருகரம் கூப்பி வரவேற்கிறேன்:


அடையா நெடுங்கதவாய்
இந்த 'உலகத் தமிழர் மையம்' என்ற 'பகிர்வலைத் தளம்'.


அதில்-
எந்த நேரமும் சிந்தனை விருந்து பரிமாறப்படும்.
நீங்கள் அறிவிற்கும் அன்பிற்கும் உரிய என் விருந்தினர்.
எப்போதும் நுழையலாம் இங்கே.....


சேர வாரும் செகத்தீரே!


நட்புடன்,
கிருஷ்ணன் பாலா

கைபேசி (Mobile):94440 69234


அலை பேசி: (00 91 ) 94440 69234
மின்னஞ்சல்: krishnanbalaa@gmail.com
http://ulagathamizharmaiyam.blogspot.com  (உலகத் தமிழர் மையம் -வலைத் தளம்)
மற்றும்
http://krishnanbalaa.blogspot.com (கிருஷ்ணன்பாலா-கவிதைத் தளம்)
Post a Comment