Wednesday, August 18, 2010

நெல்லை கண்ணன் நெடும்புகழ் வாழ்க!



முப்பெரும் தமிழை முனைப்புடன் உலகில்
     முழங்கிடும்  அறிஞர் கூட்டத்தில்;
அப்பரும் மாணிக்க வாசகர் மற்றும்
     அவர்போல் பற்பல ஞானியரும்
செப்பிய பொருளைச் சிந்தனை செய்து
     செழித்திட வைக்கும் தமிழ்க் கடலே!
ஒப்பரும் உனது திசை வைத்தெனது
     உளமார் வணக்கம் சொல்கின்றேன்!

நெல்லை என்றால் தாமிரவருணி
     நெடும்புகழ் சேர்ந்த நதியும்
நெல்லையப்பர் காந்திமதியாள்
     நெகிழச் செய்யும் அருளும்
எல்லை என்றே இருந்தது மாறி
     இணைந்தது உனது பெயரும்;
நல்லவன் உனது நாமம் உலகில்
     நாளும் நிலைக்க வாழியவே!

             (வேறு)

கண்ணன் தமிழ் அமுதைக்
   கண்டு கொண்ட நாள் முதலாய்
எண்ணம் முழுதும் இவர்
   எழுந்து நிற் கின்றார்;
அண்ணன் இவரை நாம்
    அணு குவது எப்போது?
திண்ணமுடன் இதை எண்ணித் 
    தினந் தோறும் காத்திருந்தோம்.

காத்திருந்த நாள் இன்று
   கனிந்து வர,உணர்ச்சிகளை
வார்த்தெடுத்து என்றென்றும்
    வாடாத மாலை' எனப்
பூத்தொடுத்துப் போடுகின்றோம்
    பொய்யாத கவி மாலை;
நாத் திறத்தால் நாற்றிசையும்
    நலம் காணும் நாயகர்க்கு.
           
                       (வேறு)

அறிவில்,அன்பில்,ஆளுமை நோக்கில்
     அரசியல் அணுகுமுறையில்,
இறைநெறி போற்றும் இலக்கணத் தமிழில்
     இரண்டறக் கலந்த பண்பில்
உறைவிடமாகத் திகழும் சான்றோன்
     உண்மை:நெல்லை கண்ணன்;
அறவுரை செய்ய வந்தார்,இங்கு;
     அனைவரும் அவர்சொல் கேட்போம்! 
         .




       கிருஷ்ணன் பாலா


                                                                          
                                   .

No comments: